‘தேசிய’அரசியலை ஆட்டிப் படைப்பதில் அம்பானி சகோதரர்கள் கில்லாடிகள் என்றால், கர்நாடகா அரசியலுக்கு ரெட்டி சகோதரர்கள் அல்லது பெல்லாரி சகோதரர்கள் என்றழைக்கப்படும் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகிய மூவரைக் குறிப்பிடலாம். 1999-ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா சுவராஜ் பெல்லாரி நாடாளுமன்றத் தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபொழுது, அவரது தேர்தல் வேலைகள், “தேவைகள்’அனைத்தையும் ரெட்டி சகோதரர்கள்தான் கவனித்துக் கொண்டனர்.

அன்று தொடங்கி அரசியலில் மட்டுமின்றி, பொருளாதாரத்திலும் அவர்கள் இந்தியாவின் “ஜி.டி.பி.’க்கு இணையாக வளரத் தொடங்கினர். தனி ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ஆடம்பரக் கார்கள் என இவர்களின் பகட்டு வாழ்க்கையைப் பார்த்து விக்கித்துப் போன மக்கள், “இவர்களின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கலாம்’ என இரகசியமாகப் பேசிக் கொண்டபொழுது, “எங்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தேறும்” எனச் சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்துத் தங்களின் பணத் திமிரை வெளிக்காட்டிக் கொண்டனர். சரி இப்போது இவர்களது குடும்பத் திருமணத்திற்கே 500 கோடி
செலவழிக்கிறார்கள் என்றால் சொத்து எப்படியும் ஒரு 50,000 கோடிகளைத் தாண்டலாம்.

சகோதர்களில் ஒருவரான ஜனார்தன் ரெட்டி பாரதிய ஜனதாவின் முன்னாள் அமைச்சர். இவரது மகள் பிராமணிக்கு 16-11-2016 அன்று திருமணம் நடைபெற்றது. உண்மையில் அதை திருமணம் என்று சொல்வது நமக்கு வேறு வார்த்தைகள் இல்லை என்பதால்தான். இயக்குநர் ஷங்கரின் சினிமா நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்குமோ அதையும் தாண்டுகிறது ரெட்டியின் விழா.

சுருங்கச் சொன்னால் இந்த மெகா திருமணத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா? 500 கோடி ரூபாய். தற்போது அந்த பட்ஜெட் 650 கோடி என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு சும்மா கண்துடைப்புக்காக ஏதோ விசாரணை, ஆய்வு, ஆகட்டும் பார்க்கிறோம் என்று சீன் போட்டார்கள். மோடி அரசின் கருப்பு பண நடவடிக்கையால் உழைத்து வாழும் பல குடும்பங்களில் திருமணங்கள் பிரச்சனைக்குள்ளாகியிருக்கின்றன. பல திருமணங்கள் நின்று போயிருக்கின்றன. செலவுக்கு புதிய பணமில்லாமல், பழைய பணத்தை மாற்ற முடியாமல் பல பெற்றோர் பித்துப்பிடித்த நிலையில் இருக்கின்றனர். இது போக செல்லாத நோட்டு அறிவிப்பால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்து போயிருக்கின்றனர்.ஆனால் ரெட்டி சகோதர்கள் மோடியின் நண்பர்கள் என்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

நான்கு நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண நிகழ்விற்கு பழைய விஜயநகர அரசு போன்று 150 கோடி செலவில் செட் அமைத்திருக்கிறார்கள். விஜயநகர அரசின் தலைநகரையே மறுநிர்மாணம் செய்திருக்கிறார்கள். ஹம்பி நகரத்தின் முக்கியமான சின்னங்களை கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். பாலிவுட்டின் தலை சிறந்த கலை இயக்குநர்கள் இதை வடிவமைத்துள்ளார்கள். விஜய நகர பேரரசு காலத்தல்தான் தென்னிந்தியாவில் பார்ப்பனியக் கொடுங்கோன்மை பல்வேறு நிலைகளில் உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த செட்டும், ரெட்டிகளும் அவர்களுக்கு சகல உதவிகளும் செய்யும் பா.ஜ.க-வும் நன்றாகவே பொருந்துகின்றனர்.

ஊரே சோகத்தில் துவண்டிருக்கும் போது இவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஆபாசத்தை ஒழிக்காமல் மக்களுக்கு அமைதி ஏது?

பாருங்கள் – பகிருங்கள்!