privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்மலேரியாவில் இருந்து மக்களை காப்பாற்றிய ரொனால்ட் ரோஸ்

மலேரியாவில் இருந்து மக்களை காப்பாற்றிய ரொனால்ட் ரோஸ்

-

ருத்துவத்தின் சாதனைகள் மனிதனை பல கொள்ளை நோய்களில் இருந்து விடுதலையடைய வைத்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அறிவியலின் வளர்ச்சி, மருத்துவர்களின் உழைப்பு! என்னதான் அறிவியலின் முன்னேற்றம் அதிகரித்திருந்தாலும் சில நோய்களை தடுப்பது இன்றும் பெரும் போராட்டமாகவே உள்ளது.

அந்த வகையில் மலேரியா நோய் மனித குலத்தின் அச்சுறுத்தலாகவே உள்ளது. இக்கொடிய நோயை ஒழிக்க  இன்று வரை போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இருப்பினும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே, இந்நோயை ஒழிக்க தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் மருத்துவர் சர் ரொனால்டு ரோஸ்.

மலேரியா நோய் பெரும்பாலும் வெப்பமண்டல நாட்டில் தான் அதிகமாக தோன்றும். பலம் பொருந்திய படைகள்  கூட மலேரியா என்றால் நடுங்கும். அந்த அளவிற்கு கொடியது. ஒருகாலத்தில்  ஐரோப்பா  மற்றும் வட அமெரிக்காவில் மலேரியா நோய்த்தொற்று மிகவும் அதிகமாக காணப்பட்டது. பிறகு இந்தியாவையும் இந்நோய் ஆட்டிப்படைத்தது.

இந்நோய்க்கும், கொசுவிற்கும்  நிறையத் தொடர்புண்டு. கொசுக்கள் நிரம்பிய பகுதிகளில் இருந்து மலேரியா தோன்றும் என்பதை முதலில் கண்டுபிடித்தவர் டேவிட் லிவிங்க்ஸ்டன் .

அசுத்த நீரிலும், நீர் நிலைகளிலும், நதி முகத்துவாரத்திலும் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகும். பெரும்பாலும் சதுப்பு நிலங்களே கொசுக்களின் பிறப்பிடம் என்பதால் இந்நோயை “சதுப்பு நிலசுரம்” என்றும் கூறுவார்கள். இவை சதுப்பு நில விசக்காற்றின் மூலமும், ஈரக்காற்றின் மூலமும் தான் பரவுகிறது என்றும் கூறுகிறார்கள்.

இந்நோய் தாக்கப்பட்டவரின் உடல் நடுங்கிக் கொண்டிருக்கும், உடலில் சூடுபிடிக்க முடியாது, கொஞ்ச நேரத்தில் காய்ச்சல் தோன்றும், உடல் வெப்பநிலை அளவு அதிகமாக இருக்கும், காய்ச்சல் திடீரென்று மாறி வியர்வை அதிகமாக சுரக்கும், பிறகு காய்ச்சல் நின்றுவிடும், ஆனால் நோய் தணியாது, இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நோய் தோன்றும். இது போன்ற சமயங்களில் ஆள் இறந்து போகக்கூடும்.

இந்நோய் தீர்வது மிக அரிது, இந்நோய்க்குரிய மருந்து “கொய்னா” என்பதாகும். சின்கோனா மரப்பட்டையில் இருந்து இது தயாரிக்கப்படுகிறது. இந்நோய்க்குரிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் நோயின் மூலக்காரணம் முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் மர்மமாகவே இருந்தது. இந்த மர்மத் திரையை கிழித்து மனிதகுலத்தை பெரும் அபாயத்தில் இருந்து காப்பாற்றியவர். இந்நோய் கொடிய தன்மையும், விரைந்து பரவும் குணமும் கொண்டவை. இந்நோய் தோன்றினால் மனிதன் மறைந்து தான் ஆக வேண்டும் என்ற சரித்திரத்தை மாற்றியவர் ரோஸ்.

1857 -ம் ஆண்டு மே மாதம் 13 -ம் தேதி “அல்மோரா” என்னும் ஊரில் பிறந்தார். இந்தியாவில் முதல் சுதந்திரப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். இவருடைய தந்தை இந்தியாவில் பிரபலமான படைத்தளபதியாக விளங்கியவர். ரோஸ் இங்கிலாந்தில் உள்ள ஆரம்ப பாடசாலையில் பள்ளிப்படிப்பை  முடித்தார். 1874 -ம் ஆண்டு இலண்டனில் உள்ள “செயின்ட் பர்தலோமியஸ்” கல்லூரியில்  இவருடைய தந்தையால் வலுக்கட்டாயமாக மருத்துவப்படிப்பில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவத்தின் மீது நாட்டம் கொண்டிராத ரோஸ் வேறு வழியின்றி தந்தையின் கண்டிப்புக்கு பயந்து மருத்துவ படிப்பில் தனது கவனத்தை செலுத்தினார்.  ஆர்வமும் உற்சாகமும் இல்லாமலேயே மருத்துவராக பட்டமும் பெற்றார்.

மீண்டும் தந்தையின் வற்புறுத்தலால் 1881 -ல் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த ரோஸ் மருத்துவராக பணியாற்றிட முனைந்தார். இருப்பினும் ரோசின் மனவோட்டம் எல்லாம் இசையிலும், புத்தகம் வாசிப்பதிலும் தான் இருந்தது. தன் மனம் போல் நடப்பதற்கு நேரம் ஒதுக்கி, இளவயது விருப்பமான  கவிதைகள் படிப்பதிலும், சங்கீதம் பயில்வதிலும் ஓய்வு  நேரத்தை பயன்படுத்தினார்.

பிரெஞ்ச், ரோமன், இத்தாலி, ஜெர்மன் என்று பல மொழிகளை கற்றுத்தேர்ந்தார்.  இசையிலும் வல்லவரானார். எங்கு சென்றாலும் தன்னுடைய பியானோவையும், நிறைய புத்தகங்களையும் கொண்டு செல்வது அவருக்கு பிடித்தமானது. உடற்பயிற்சி, உளப்பயிற்சி என்று அனைத்திலும் கவனம் செலுத்தினார். மீன் பிடித்தல், வேட்டையாடுதல் என்று பல வழிகளில் நாட்கள் கடந்தது.
ரோஸ் என்றுமே தன் மனசாட்சிக்கு விரோதமாக நடந்ததில்லை. மருத்துவ துறையில் மனமில்லாமல் இருந்தாலும் அதற்கு விரோதமாக நடந்து கொண்டதில்லை.

சிறிதுகாலம் கழித்து மருத்துவத் துறையில் இவரின் ஈடுபாடு அதிகரித்தது. மனித குலத்திற்கு தன்னால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும் என்று எண்ணினார். மனித இனத்திற்கு பெரும் எதிரியானது  நோய். இந்த நோய்களின் காரணத்தை அறிந்து தடை செய்து விட்டால் மனிதனுக்கு நோய் பரவாமல் தடுத்து விடலாம் என்று கருதி முதன் முதலாக மலேரியா நோயின் காரணங்களை அறிய முயற்சித்தார்.

மலேரியா நோய்க்கான ஆராய்ச்சி :

ரோஸின் பங்களாவை சுற்றி நிறைய பூந்தொட்டிகள் உள்ளன. இந்த தொட்டிகளில் நிறைய கொசுக்கள் உற்பத்தி ஆகி இருப்பதை கண்ட ரோஸ் அதனை அப்புறப்படுத்தினார். மனிதனுக்கு தொல்லை கொடுக்கும் கொசுக்கள், பூச்சிகள் அனைத்தையும்  அழித்துதான் தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
முதலில் தனது ஆராய்ச்சியை கொசுக்கள் மேல் திருப்பி அவற்றை ஆராய முயற்சித்தார். கொசுக்கள் எப்படி உருவாகின்றன, அதனால் மனிதனுக்கு என்னென்ன தீங்கு, எத்தனை வகை கொசுக்கள் உள்ளன என்பது குறித்து தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார்.

பல வகையான கொசுக்களை “லார்வா” கொடுத்து வளர்க்கவும் தொடங்கினார். தனது நீண்ட நாள் ஆராய்ச்சியின் பயனாக “கிரேசிலர்” மற்றும் “கடிவாளம்” ஆகிய இரண்டு வகை கொசுக்களை கண்டுபிடித்தார்.

கொல்கத்தா ஆய்வகத்தில் தனது மனைவி மற்றும் உதவியாளர்களுடன் மருத்துவர் சர் ரொனால்டு ரோஸ்.

இந்த ஆராய்ச்சியினூடே மலேரியா நோயின் மர்மத்தையும் ஆராய்ச்சி செய்தார். 1878 -ம் ஆண்டு பிரெஞ்ச் ராணுவ மருத்துவர் “அல்போன் சேலாவன்” என்பவர் மலேரியா தாக்கப்பட்ட மனிதனின் ரத்தத்தில் சில கரும்புள்ளிகள் தென்படுகின்றன என்றும், அக்கரும்புள்ளிகளே மலேரியா நோய்க்கு காரணமென கண்டறிந்து, இந்த கரும்புள்ளிகள் உற்பத்தியாகி உடல் முழுவதும் பரவி மலேரியா என்ற நோயை உருவாக்குகிறது என்பதை கூறினார்.

இந்த கரும்புள்ளிகள் உடலில் எவ்வாறு உருவாகிறது? உணவில், தண்ணீரில், மலேரியா பாதிக்கப்பட்டவரின் சுவாசத்தை சுவாசிப்பதால் உருவாகிறதா, ஏதேனும் பூச்சிக்கடியினால் ரத்தத்தில் உருவாகிறதா என்று தேட ஆரம்பித்தார். இதற்காக ரோஸ் பட்ட சிரமங்கள் அளப்பரியது.

ஒரு நாள் தன் நண்பருடன் ஒரே வீட்டில் உறங்கினார். நண்பர் கொசு வலையின்றியும், ரோஸ் கொசு வலையிலும் தூங்கினார். ஆனால் நண்பருக்கு மட்டும் மலேரியா தாக்கப்பட்டது.  இது ரோஸிற்கு வியப்பை ஏற்படுத்தியது. ஒரே உணவு, ஒரே தண்ணீர் அருந்தினோம். ஆனால் நண்பனுக்கு மட்டும் நோய் எப்படி வந்தது என்று சிந்தித்தார். நண்பர் பாதிக்கப்பட்டதற்கு காரணம் கொசு தான் என்ற முடிவிற்கு வந்தார்.

இதன் பிறகு தனது ஆராய்ச்சியில் தீவிர கவனம் செலுத்தினார். தனது பொழுதுபோக்கு, நண்பர்களிடம் உரையாடுவது  உள்ளிட்ட எல்லாவற்றையும் துறந்து முழு ஆராய்ச்சியில் இறங்கினார்.

1894 -ல் “பாட்ரிக் மான்சன்” என்ற மருத்துவர் ஒருவரின் தொடர்பு கிடைத்தது. அவர் மலேரியா நோய் கொசுவின் மூலம் தான் பரவுகிறது. கொசு உணவுப்பொருளில் தன் நச்சுத் தன்மையை செலுத்துவதால் அது உடலில் சென்றவருக்கு நோய் உண்டாக்கும் என்றார். அதனை அதனை ரோஸ் முழுமையாக நம்பவில்லை.

தொடர்ந்து மலேரியா நோய் தாக்கப்பட்ட ஒருவரை ஆராய்ந்தார். என்ன ஆராய்ந்தாலும் கொசுவினால் பரவுகிறது என்பதை தவிர அவரால் வேறு எதையும் அறிய முடியவில்லை.

கொசுக்கள் எவ்வாறு மலேரியா நோயினைப் பரப்புகிறது என்பதைப் பற்றிய ஆய்வுக் குறிப்பு

மலேரியா பாதித்த ஒருவரின் உடலில் கடித்த கொசுவினை பிடித்து உருப்பெருக்கி கண்ணாடி வழியே ஆராயத் தொடங்கினார். மலேரியா நோய்க்கிருமிகள் அந்த கொசுவின் வயிற்றில் இருப்பதை கண்டறிந்தார். ஆனால்,  நோய் பாதிக்கப்பட்டவரிடமிருந்து இந்நோய் கிருமிகள், நல்ல ஆரோக்கியம் உள்ளவருக்கு எப்படி கொண்டு செல்லப்படுகின்றன என்பது புதிராகவே இருந்தது. இந்த உண்மையை கண்டறிய பல வகையான கொசுக்களை பிடித்து ஆராய்ச்சி செய்தார். இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகினார். இந்த ஆராய்ச்சிக்காக தன் வாழ்வை இந்தியாவிலுள்ள “பேகம் பேட்” என்னும் இடத்தில் இருந்த ஆராய்ச்சி மையத்திலேயே கழித்தார்.

இந்த ஆராய்ச்சி மையத்தில் கொசுக்கள் பறந்து செல்லுகின்ற அழகை ரசிப்பார். கொசுக்கள் பறந்து விடும் என்பதற்காக தன் ஆராய்ச்சி மையத்தில் இருந்த மின் விசிறிகளைப் போடுவதைக்கூட நிறுத்தி விட்டார். கடும் வெயிலில் கூட அதனை போடுவதில்லை. வியர்வை சொட்ட சொட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அனைத்து சிரமங்களையும் பொருட்படுத்தாமல் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

ஒருமுறை ஆழ்ந்த சிந்தையில் இருக்கும் போது புதிய வகை கொசு ஒன்று ஆய்வகத்தில் உட்கார்ந்திருப்பதை கண்ட ரோஸ், அதனை பிடித்து ஆய்வு செய்தார். அதைப்போன்று பல கொசுக்களை ஆய்வு செய்தார்.  இந்த கொசுக்களின் தோற்றம் புது மாதிரியாக இருந்தது. இதன் வால் உயர்ந்து மேல்நோக்கி இருந்தது. இறகில் மூன்று கருப்புக்கோடுகள் இருந்தன. இந்த கொசுக்களுக்கு “அநோபில்ஸ் “ என்றும் பெயர் சூட்டினார்.

மலேரியா நோய் பாதிக்கப்பட்டவரை இக்கொசுக்களை கொண்டு கடிக்க செய்து ஆய்வு செய்தார். இந்த ஆராய்ச்சி தோல்வியே தந்தது. இதனால் நம்பிக்கையிழந்த ரோஸ் ஆராய்ச்சி செய்வதையே கைவிட்டு விட்டார்.

என்ன செய்வது, எப்பொழுதும் ஆராய்ச்சியில் காலம் கழித்த அவருக்கு பொழுது போகவே கஷ்டமாயிருந்தது. மீண்டும் தனது ஆராய்ச்சியின் மூலம் பல கொசுக்களை பிடித்து அதன் வயிற்றினை அறுத்து நுன்பெருக்கி மூலம் ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சியில் கொசுவின் வயிற்றில் பல நுண்ணிய கரும்புள்ளிகள் இருப்பதை கண்டறிந்தார்.  இந்த புள்ளிகள் தான் “மலேரியா நோய்க்கிருமிகள்” என்பதை மருத்துவர் அல்போன் சேலாவன் கூறியிருந்தார்.

இவ்வாராய்ச்சியில் நோயுள்ளவரின் உடலில் இருந்து நோயுற்றவருக்கு “அநேபில்ஸ்” கொசுக்கள் வழி பரவுகிறது என்பதை கண்டறிந்தார். நோயுற்றவரின் உடலில் இருந்து எவ்வாறு அவ்வணுக்கள் செலுத்தப்படுகிறது என்பது மர்மமாகவே இருந்தது. இடைவிடாத தனது ஆராய்ச்சியின் மூலம் இம்மர்மத்தை கிழித்தெறிந்து, கொசு ஒருவரின் இரத்தத்தை உறிஞ்சும் போது தன் உடலில் இருந்து ஒரு வகை திரவத்தை வெளியேற்றுகிறது. பின் இரத்தம் உறிஞ்சப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் தன் உடலில் உள்ள கிருமிகள் அவர் உடலில் செல்லவும் அவர் உடம்பில் உள்ள நோய்க்கிருமிகள் ரத்தத்துடன் கலந்து கொசுவின் உடலில் செல்லவும் செய்கிறது என்ற உண்மையை கண்டறிந்து 1898 -ம் ஆண்டில் மலேரியாவை கொசுக்கள் தான் பரப்புகின்றன என்று இறுதியாக நிரூபித்தார்.

மலேரியாவை ஒழிக்க வேண்டுமென்றால் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்பதையும் நிறுவினார். அவர் கண்டறிந்த மலேரியா கொசுவின் பெயர் தான் “அநோபில்ஸ்”.  இவருடைய இந்த ஆராய்ச்சிக்காக 1902 -ம் ஆண்டு மருத்துவத்தில் ரோஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ரோஸ் :

தனது கண்டுபிடிப்பிற்கு பிறகு இந்திய மருத்துவத்துறையை விட்டு விலகி இங்கிலாந்து சென்றார். லிவர் பூலில் அப்பொழுது தான் “ ஸ்கூல் டிரோபிக்கல் மெடிசன்ஸ்” என்னும் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அக்கல்லூரியின் முதல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். இக்கல்லூரியில் உள்ள ஆராய்ச்சி கூடத்தில் மலேரியாவை சுலபமான முறையில் குணப்படுத்தும் தடுப்பு முறைகளை கண்டுபிடிக்க முயன்றார். இவருடைய கண்டுபிடிப்பின் மூலம்  வெப்ப நாடுகள் பலவற்றில் மலேரியா தடுத்து நிறுத்தப்பட்டது.

மலேரியா ஒழிப்பை தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக் கொண்ட ரோஸ் பல நாடுகளுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வெள்ளைக்காரர்களின் சுடுகாடு என்று பெயர் பெற்ற “சீய்ராவியோன்” என்ற நகரத்திற்கு சென்று மலேரியாவால் ஏற்படும்  மரணத்தை தடுத்தார். வெள்ளைக்காரர்களின் சுடுகாடு என்ற பெயர் இவரால் மாற்றப்பட்டது. அந்த மக்களின் அன்பையும் பெற்றார் ரோஸ்.

1900-ல் இஸ்மைலியா என்ற நகரத்தில் வசிக்கும் மக்கள் மூன்றில் ஒரு சதவீதம் பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டனர். அப்பகுதிக்கு விரைந்து சென்ற ரோஸ் கொசு ஒழிப்பின் மூலம் அம்மக்களை மலேரியா நோயிலிருந்து மீட்டெடுத்தார். இதனை தன் கண்டுபிடிப்பிற்கு ஓர் ஆணித்தரமான சான்று என்றும் வருணித்தார் ரோஸ். பின்னாளில் இந்நோய் ஆண்டு முழுவதும் நீடிக்கும் நோய் இல்லை என்ற நிலை இருந்தாலும் நாடு முழுவதும் இன்று வரை ரோஸின் மலேரியா ஒழிப்பு முறையை தான் பின்பற்றி வருகிறார்கள்.

மக்களுக்கு ஆற்றிய தொண்டின் காரணமாக இவருடைய  பெயரில் மக்களால் “ ரோஸ் இன்ஸ்டிடியூட் அன்ட் ஹாஸ்பிட்டல் பார் டிராபிக்கல் டிஸீஸ்” என்ற கல்லூரி 1926 -ல் நிறுவப்பட்டது.  பின்னாளில் இக்கல்லூரி வளர்ந்து “லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜின் அன்ட் டிராபிக்கல் மெடிசன்” என்று மாறியது. மக்களை மலேரியா எனும் கொடிய நோயிலிருந்து விடுவிக்க தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த ரோஸ் 1932  செப்டம்பர் 16 அன்று இறந்தார். அவர் மறைந்தாலும் தனது அறிய கண்டுபிடிப்பால் மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறார் மருத்துவர் ரோஸ்.

-காவிரிநாடன் எழுதிய “மருத்துவ மன்னர்கள்” என்ற நூலில் இருந்து…

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி