ரே கழுவி கழுவி ஊத்தினாலும் கொஞ்சம்கூட கலங்காம நீங்க களமாடுறதப்  பார்க்கும்போது எனக்கு கண்ணுல ரத்தமா வடியுதுக்கா!. கட்சிய வளர்க்க நீங்க படுற பாட்டை மத்தவங்க உணர்ந்த மாதிரி தெரியலக்கா. ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னே ராமர், அயோத்தி, கிருஷ்ணர், பாபர்மசூதி, இந்து ஒற்றுமை அப்படீன்னு பேசிக்கிட்டு இருந்தோம். அப்பப்போ நாலு கலவரம், ரெண்டு குண்டு வெடிப்பு, சில தீ வைப்புன்னு…. நல்லா போயிட்டு இருந்ததுச்சு! ஆனா மத்தியில ஆட்சிக்கு வந்ததும் இதையெல்லாம் விட்டுட்டு, “நாங்களும் நல்லவங்கதான்”னு காட்டுறதுக்காக ‘வளர்ச்சி கிளர்ச்சினு’ பேசி நமக்கு நாமே சூனியம் வச்சுக்கிட்ட மாதிரி இருக்கு!

வரவர நம்ம ஆளுங்களுக்கும் பேசவே தெரியலக்கா. ஹைட்ரோகார்பன், ஓ.என்.ஜி.சி., ஜி.எஸ்.டி. நீட் இப்படி எந்தத் திட்டத்தை மோடி கொண்டு வந்தாலும் “எல்லாம் காங்கிரசு ஆட்சியில போட்ட திட்டம்தான்னு” சொல்லி போராடுற சனங்கள சமாளிக்கிறோம்! அதுக்கு, “காங்கிரசுக்கு நாங்கதான் மாற்றுன்னு இதுவரைக்கும் பேசிப்புட்டு இப்போ, அவன் போட்ட திட்டத்தைத்தான் நாங்க செய்யிறோம்னு சொல்றீங்களே….உங்களுக்கு சொந்தப் புத்தியே இல்லையாடா?”னு சின்னப்பயகூட நம்மள கலாய்க்கிறானுக!

நாம தமிழ்நாட்டுல இருக்குறோம் அப்படீங்கிற நினைப்பே இல்லாம, “198 கட்-ஆஃப் வாங்குன அனிதா ஏன் நீட் தேர்வுல பாஸ் பண்ண முடியல?”னு பொன்னாரு கேட்கிறாரு.

அதுக்கு ஒருத்தன், “ஒரு வார்டு கவுன்சிலரா கூட இல்லாத நிர்மலா சீத்தாராமன் ஸ்ட்ரெய்ட்டா கேபினெட் அமைச்சரா ஆயிட்டா. நீ இன்னமும் இணை அமைச்சராவே குப்பை கொட்டுறயே…ஏன்னு யோசிச்சுப்பாரு தெரியும்னு” ஸ்டேட்டஸ் போடுறான்! நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் போல இருக்குக்கா!

இந்த லட்சணத்துல திருச்சியில ஆளேயில்லாத வாடகைச் சேர்களை  வச்சுக்கிட்டு வீரவசனம் வேற பேசுறாரு!

நீங்களும் நேரங்காலம் தெரியாமல்தான் பேசுறீங்க. ‘ஆளில்லாத காட்டுல அறுக்குற வரைக்கும் லாபம்’னு ஏதோ ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ்.-ஐ வச்சு தமிழ்நாட்டுல ரெண்டு ஆளையாவது பிடிக்கலாம்னு மோடி மூவ் பண்றாரு. இந்த நேரத்துல போயி, “ஊழல்னு விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாதவர் எங்க மோடி”னு வைகோ ரேஞ்சுல கையை முறுக்கிக்கிட்டுப் பேசுறீங்க!

“ரெண்டு களவாணிகள் கூட்டம் ஒன்னு சேருறதுக்கு பஞ்சாயத்து பண்றவன் எப்படிடா யோக்கியமா இருப்பான்?”னு பக்கத்து வீட்டுக்காரன் செருப்பால அடிக்கிற மாதிரி கேக்குறான்!

அடுத்து, “இனி தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே மோடிதான் அம்மா”னு பெருமையா பேட்டி கொடுக்குறீங்க! அதுக்கு, அம்மா மோடினா அப்பா யாரு?…அமித்ஷாவானு கேட்டாகூட பரவாயில்லக்கா. “அப்போ உங்க ஆளும் கேடிதானா?”னு கேக்குறானுக! எத்தனைப் பேரை சமாளிக்கிறது… சொல்லுங்க!

அரசியல்ல மானம் ரோசம் எல்லாம் பார்க்கக் கூடாதுன்னு எனக்கு ஆறுதல் சொல்லலாம். அதுக்காக உங்கள மாதிரி சொரணையே இல்லாம என்னால இருக்க முடியலக்கா! இந்த அசிங்கத்துக்குப் பயந்துதான் குருமூர்த்தி, இல.கணேசன் மாதிரி பெரிய ‘தல’-கள் எல்லாம் பின்னால நின்னுகிட்டு உங்கள முன்னாடி தள்ளி விட்டுட்டாங்களோ!

‘கழகங்கள் இல்லா தமிழகம்னு’ நாம சொல்றோமே….அவங்க செய்யாததை நாம புதுசா என்ன செஞ்சுட்டோம்? யோசிச்சுப் பாருங்க! தனக்குப் பிடிக்காத ஆட்களை அடக்குறதுக்கு ஜெயா கஞ்சா கேஸ் போடும்! நாம வருமான வரி ரெய்டு அடிக்கிறோம்! அம்மாகிட்ட பேரு வாங்க, மண் சோறு திம்பானுக! தன் வீட்டுல தானே குண்டுவீசுறான் நம்ம ஆளு! மாநிலக் கட்சிகள்ல இருக்குற கோஷ்டிகளை மோதவிட்டு தனக்கு சாதகமா வளைக்கிற தெல்லாம் பழைய காலத்து  காங்கிரசு டெக்னிக்! டிடிவி ஃபார்முலா, அழகிரி ஃபார்முலா மாதிரி, நமக்கு மோடி ஃபார்முலானு புதுசா ஒண்ணுகூட இல்லையேக்கா! நம்ம வேலை எல்லாமே ஈயடிச்சான் காப்பியாத்தான் இருக்கு!

எங்க மோடி, பொண்டாட்டியையே விலக்கி வச்சவருன்னு நாம கெத்து காட்டுனா, எங்க அம்மா கல்யாணமே முடிக்கல-ங்குறான் அதிமுக-காரன்! மோடி டீ வித்தாருனு நாம சொன்னா, எங்க காந்தி அரை நிர்வாண பக்கிரியா திரிஞ்சாரு-ங்குறான் காங்கிரசுக்காரன்! வளர்ச்சித் திட்டங்கள்னு நாம சொல்லப்போனா அதுக்கு ஒப்பந்தம் போட்டதே நாங்கதாண்டானு காங்கிரசுக்காரன் அடிக்க வர்றான்! நாம “தீவிரவாதம்- காஷ்மீர்- தேசபக்தி” அப்படின்னு வாயத் தொறந்தா…வரலாற்றை நல்லா புரட்டிப் பாருங்கடா…காங்கிரசும் இந்தக் கருமத்தைச் சொல்லித்தானே காலத்தை ஓட்டுச்சுங்குறான் எதிர்கட்சிக்காரன்!

இவனுகள பேசி ஜெயிக்கிறமாதிரி ஒரு சரக்கும் நம்ம கிட்ட இல்லையேங்குறத நினைச்சா எனக்கு அழுகையா வருதுக்கா! கடைசியில இந்து-இந்தி, ராமர்-பாபர், துலுக்கன்-கிறிஸ்தவன் அப்படீங்குற பழைய சரக்கை விட்டா நமக்கு வேற நாதியே இல்லையேக்கா!

எனக்கு புரியுதுக்கா….நம்ம ‘இந்துராஷ்டிர’ லட்சியத்தை வெளிப்படையா பேசினா தமிழ்நாட்டுல மட்டுமில்ல இந்தியாவுல ஒருபய கூட ஓட்டுப்போட மாட்டான். அதுனாலதான் ‘வளர்ச்சி’, ‘தேசபக்தி’-னு ரூட்டை மாத்தி கோலம் போடுறோம்! ஆனா, போக்கிரி படத்துல வர்ற வடிவேலு மாதிரி, நாம எந்த   கெட்டப்புல வந்தாலும் கரெக்டா நம்மள அடையாளம் கண்டுபிடிச்சுறானுகளே! தமிழ்நாட்டுல இருக்குற பெரிய தொல்லையே இதுதான். அந்த ஈரோட்டுக் கிழவன்தான் இந்தப்பயல்கள எல்லாம் கெடுத்து வச்சிட்டுப் போயிட்டான்!

நம்ம தந்திரமும் இவனுககிட்ட எடுபட மாட்டேங்குது. 500, 1000 கொடுத்தாத்தான் ஒட்டு போடுவோம்னு சனங்களயும் பழக்கி வச்சிருக்காங்க. மத்திய அரசுன்னு நாம கெத்து காட்டினாலும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். மாதிரி ஊரறிஞ்ச களவாணிகளும், பீஸ் போன கிருஸ்ணசாமி மாதிரி சில ஆளுகதான் நம்மள திரும்பிப் பாக்குறான். இதை வச்சு தமிழ்நாட்டுல நாம குப்பைகூட கொட்ட முடியாதே…என்னக்கா செய்யப் போறோம்?

எப்படிக்கா ஆட்சிய பிடிக்கப்போறோம்?

அக்கா… எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! . இந்துராஷ்டிரம் தான் நம்ம லட்சியம்னு சொல்றோமே அப்படினா என்னக்கா?

ஹைட்ரோகார்பன், ஓ.என்.ஜி.சி., பெட்ரோலிய மண்டலம், ஜி.எஸ்.டி, இப்படி வெளிநாட்டு-உள்நாட்டு முதலாளிகளுக்கு தேவையானதெல்லாம் செஞ்சு கொடுக்கிறோமே அது இந்துராஷ்டிரமா? அல்லது, மாட்டுக்கறி தின்றவன கொல்றது, மாடு வாங்கிட்டுப் போறவன வெட்டுறது, கல்புர்கி, கௌரி லங்கேஷ் மாதிரி ஆட்கள ரகசியமா கொல்றது, நம்ம கட்சிக்காரன ஜனாதிபதி- கவர்னர் ஆக்குறது, நவோதயா பள்ளியில இந்தி படிக்கச் சொல்றது… இதுதான் இந்து இந்துராஷ்டிரமுன்னு இந்த மர மண்டைக்கு இப்பத்தான் வெளங்குது.

அப்புறம் முக்கியமான ஒரு விஷயத்தை மறந்துட்டேன். பாரத மாதாவின் தலைமகனா நம்ம மோடியை வச்சிருக்கோம். சொந்தமா உழைச்சு பெத்த தாயை காப்பாத்துறதுதான் மகனுக்குப் பெருமை! ஆனா இவரு உலக நாடெல்லாம் போயி “எங்க நாட்டுல வந்து முதல்போட்டு தொழில் பண்ணுங்க. உங்களுக்கு எல்லாவசதியும் பண்ணித் தர்றோம். அப்பத்தான் எங்க நாடு வளரும்”னு பேசிக்கிட்டு திரியிறாரு! இப்படி கேட்டு மடக்குறான் ஊருல நல்லது கெட்டதுக்கு ஒத்தாசை செய்யறவன்.

இது எப்படி இருக்குன்னா, “எங்க அம்மாவுக்கு சேலை இல்ல. நீங்க ஒரு சேலை வாங்கிக் கொடுங்க சார்! எங்க அம்மாவுக்கு கண்ணு தெரியல. நீங்க ஒரு கண்ணாடி வாங்கிக் கொடுங்க சார்! எங்க அம்மாவால நடக்க முடியல. நீங்க ஒரு தள்ளுவண்டி வாங்கிக் கொடுங்க சார்!” அப்படீன்னு அம்மாவை வச்சு தெருவுல பிச்சை எடுக்குற மாதிரியே இருக்குக்கா! முடிஞ்சா தலைவருகிட்ட இதை எடுத்துச் சொல்லுங்க!

ஓய்வே இல்லாம மீடியாவுக்கு பேட்டி கொடுக்குறதுல பிசியா இருக்குற நீங்க… கிடைக்கிற கேப்புல இதையும் படிப்பீங்கன்ற நம்பிக்கையில எழுதித் தொலைச்சிட்டேன்! வெளியே சொன்னா இதெல்லாம் நமக்குத்தான் அசிங்கம். அதனாலதான் உங்களுக்கு மட்டும் ரகசியமா இதை எழுதியிருக்கேன்!

– மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி