privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்லாரி போக்குவரத்தை ஒழிக்கும் மோடி அரசு ! நேர்காணல்

லாரி போக்குவரத்தை ஒழிக்கும் மோடி அரசு ! நேர்காணல்

-

த்திய அரசை எதிர்த்து நாடு முழுவதும் இந்த வாரம் இரண்டு நாட்கள் நடந்த லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 327 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், ஆர்டிஓ -க்கள் லாரிகளை எந்தவித காரணமும் இன்றி நிறுத்தி அபராதம் வசூலிக்க கூடாது. டீசல் விலையை மாதத்திற்கு ஒரு முறையே நிர்ணயம் செய்ய வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும், லாரியை வாங்கும்போதும், விற்பனை செய்யும் போதும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரட்டை வரி விதிப்பை கைவிட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

சென்னை மாதவரம் சிஎம்டிஏ மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்

இந்தியா முழுவதும் 93 லட்சம் லாரிகளும், தமிழகத்தில்  4.50 லட்சம் சரக்கு லாரிகள், மணல் லாரிகள் என எதுவும் இயக்கப்படவில்லை. வெளிமாநில லாரிகள், தமிழகத்தை சேர்ந்த லாரிகள், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் வெளி மாநிலத்துக்கு லோடு புக்கிங் செய்வதும் நிறுத்தப்பட்டது. உணவுப்பொருட்கள், அரிசி-பருப்புகள், காய்கறி, பூக்கள், கட்டுமான பொருட்கள் என அனைத்தும்  முடங்கின. இவற்றின் விலைகளும் உயந்துள்ளது.

லாரிகள் ஸ்டிரைக்கின் மூலம் தமிழகத்தில் 2 நாட்களில்  3 ஆயிரம் கோடி சரக்குப் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், 10 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே விலைவாசி விண்ணை முட்டுவதால் மக்கள் மூச்சு திணறுகிறார்கள். இச்சூழலில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான அவசியம் என்ன?

லாரிகள் வேலை நிறுத்தத்துக்கான அவசியம் குறித்து சென்னை வால்டாக்ஸ் சாலை பார்சல் சர்விஸ் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் செயலர் ரமேஷ்குமார் கூறியது,

சென்னை வால்டாக்ஸ் சாலை பார்சல் சர்விஸ் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குணசேகரன்

மத்திய அரசு  மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டு வர உள்ள திருத்தங்கள் காரணமாக மோட்டார் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோர் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் மூலம் மோட்டார் வாகன தொழிலுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்பது,  “தற்போது ஆட்டோ மற்றும் டாக்சி சுயதொழில் என்ற அடிப்படையில் கோடிக்கணக்கானவர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. மத்திய அரசு மோட்டார் வாகன சட்டம் பிரிவு 2-ல் “அக்ரிகேட்டர்” என்ற வார்த்தையை புதிதாக உருவாக்கி உள்ளது. தற்போது சட்டப்பூர்வமாக அக்ரிகேட்டர் என்ற அங்கீகாரம் இல்லாத நிலையில் ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அக்ரிகேட்டர் என்பதன் அர்த்தம் பலரை இணைத்து கூட்டுத் தொழில் செய்வதாகும்.

சட்ட அங்கீகாரம் இல்லாமலேயே ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் தற்போது உள்ள சூழலை பயன்படுத்தி பலரை இணைத்து இத்தொழிலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.  கட்டணம் உட்பட அவர்களே நிர்ணயம் செய்கிறார்கள்.

சட்ட அங்கீகாரம் உள்ள நிலையில் தனி நபர்கள் மட்டுமின்றி சில நிறுவங்கள் 100, 200 வண்டிகளை வைத்துக் கொண்டு இத்தொழிலில் நுழைவதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் தனி நபர் ஆட்டோ, டாக்சி வைத்துக்கொள்ளும் சாத்தியம் இல்லாமல் ஆகிவிடும். ஆட்டோ மட்டுமின்றி சிறிய சரக்கு வாகனங்கள் அக்ரிகேட்டர் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட காரணங்களுக்காகவே அக்ரிகேட்டர் என்ற வார்த்தை புதிதாக  உருவாக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிலை கையகப்படுத்தும் சூழ்நிலைக்கு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ஆட்டோ டாக்சி மற்றும் சிறிய சரக்கு வாகனங்கள் தொழில் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும்.

லாரிகள் சரக்கு வாகனங்கள்:

அக்ரிகேட்டர் என்பது சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டதால் சரக்கு போக்குவரத்திலும் அக்ரிகேட்டர் வர வாய்ப்புள்ளது. அவ்வாறு வந்தால் கால் டாக்சிக்கு என்ன ஆபத்து நேர்ந்ததோ அதே ஆபத்து தான் லாரி தொழிலுக்கும் வரும். மேலும்,  வொர்க் ஷாப்களில் தற்போது வாகனங்களின் எப்.சி. வேலைகள் பார்க்கப்படுகிறது. எப்.சி, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  வழங்கப்படுகிறது. ஆனால் இச்சட்டத்தின் மூலம் எப்சி பணிகளை அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஏஜென்சிகள் மூலம் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக வாகன உற்பத்தியாளர்கள் நியமிக்கும் ஏஜென்சிகளே எப்.சி. பார்ப்பார்கள். வெளியில் வேலை பார்த்தல் அதனை நிராகரிக்கும் வாய்ப்பும் உண்டு. இதன் மூலம் பெரிய வேலைகள் பார்க்க முடியாது.

அதுமட்டுமில்லாமல் ஒரிஜினல் பாகம் தான் மாட்ட வேண்டும், ஷோ ரூமில் சென்று தான் எப்சி பார்க்க வேண்டும் போன்ற நிலைமை வந்தால் லாரி தொழிலில் சிறிய உரிமையாளர்கள் நிலைத்து நிற்க முடியாது.

அதேபோல் ஓவர் லோடு என்பதை காரணம் காட்டி மிகவும் கடினமான தண்டனை முன்மொழியப்பட்டுள்ளது. கூடுதலாக ஏற்றப்படும் ஒவ்வொரு டன்னிற்கும் தண்டனை தொகை விதிக்கப்படும். குறைந்தபட்சம் ரூ.2000 முதல் ரூ.20,000 வரை விதிக்கிறார்கள்.  மேலும் ஓவர் லோடு இன்றி அதிக உயரம், அகலம், அதிக நீட்டல் போன்றவைகளும் அபராததிற்குரிய குற்ற செயல். அதேபோல இன்சூரன்ஸ்  நஷ்ட ஈடு அதிகபட்சமாக மரணமடைந்தால் 5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு 2.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் நட்டஈட்டை அதன் உரிமையாளரே வழங்க வேண்டும் என்றும் திருத்தப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தில் ஏற்படும் விபத்துக்கான நட்ட ஈட்டை அரசும் பகிராமல் எங்கள் தலையில் சுமத்தினால் என்ன செய்வது? எனவே தான் இந்த போராட்டம் என்றார்.

லாரி தொழிலில் நடைமுறையில் உள்ள சிக்கல் மற்றும் ஜிஎஸ்டி ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு குறித்து சென்னை வால்டாக்ஸ் சாலை பார்சல் சர்விஸ் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குணசேகரன்  கூறியது,

கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நாங்கள் எப்பொழுதும் சந்தித்ததேயில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து நாகர்கோயில் செல்ல வேண்டுமானால் அனைத்து செலவுகளும் போக கணிசமாக ரூ.15,000 கிடைக்கும். ஆனால் இப்பொழுது மூன்றாயிரத்தில் இருந்து ஐந்தாயிரம் கிடைப்பதே பெரிய விஷயம் என்கிறார்.

நாகர்கோயில் to சென்னை சென்று வர நான்கு நாட்கள் ஆகும். இதற்கு டோல்கேட் கட்டணமாக ரூ.6000 ஆகிறது.  ஒரு மாதத்திற்கு 8 ட்ரிப் எங்கள் வண்டி செல்கிறது. இதற்கே மாதம் ரூ.32,000 செலவாகிவிடும். எங்களிடம் பதினைந்து லாரிகள் இருக்கின்றன. மொத்தத்திற்கும் கணக்கு போட்டுப்பாருங்கள். டோல்கேட்டால் மாதம் ரூ.5 லட்சம் இழப்பு.

அடுத்தது, டீசல். ஒரு முறை சென்று வர 120 லிட்டர்  போட வேண்டும். டீசல் விலையை பொறுத்து தான் விலையை தீர்மானிப்போம்.  திடீரென்று எதிர்பாராத விதமாக டீசலை ஏற்றி விடுகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் ஏற்படும் இழப்பு அனைத்தும் நாங்கள் சமாளிக்க வேண்டும். அந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும். எங்கள் வருமானத்தில் 70 சதவீதம் வரை டீசலுக்காக  ஒதுக்க வேண்டும்.

ஆண்டிற்கு ஒருமுறை எப்சி எடுக்க வேண்டும். அதற்கு பெயிண்டிங் மற்றும் டிங்கரிங் உட்பட ரூ.35000, ஸ்பீடு கவர் ரூ.7000,  ஆர்.டி.ஓ. -விற்கு ரூ.2500 என்று ரூ.50,000 வரை செலவாகிவிடும். இதற்காக வருமானத்தில் மாதம் ஐந்தாயிரம் ஒதுக்க வேண்டும்.

லாரியின் டயர்கள். முன்பக்க டயர் விலை ஒரு ஜோடி ஜிஎஸ்டி -க்கு முன்பு ரூ.28,000 முதல் ரூ.30,000 வரை இருந்தது, தற்போது ரூ.35,000 வரை உயர்ந்துள்ளது. லாரியின் பின்புறம் பொருத்தப்படும் நைலான் ஃபைபர் டயர் ஒரு ஜோடி ரூ.35,000 லிருந்து இருந்து ரூ.40,000 ஆகவும், பெரிய நைலான் பைபர் டயர் ரூ.38,000 இருந்து ரூ.45,000 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை பத்து மாதத்திற்கு ஒருமுறை மாற்றியாக வேண்டும்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை சாலை வரி ரூ.3000, மாதம் தோறும் வருமான வரி ரூ.7,500 கட்ட வேண்டும். மேலும் டீசலுக்கான வாட் வரியும் 25 சதவீதம் கட்ட வேண்டும்.

அதேபோல் நாகர்கோயில்- சென்னை சென்று வர ஒருமுறைக்கு  போலிசு மாமூல் ரூ.300. மாதம் எட்டு ட்ரிப் ரூ.2400 வரை ஆகிவிடும். இது போக மாதவரத்தில் இருந்து வால்டாக்ஸ் சாலைக்கு வருவதற்குள் தினமும் ரூ.200 பிடுங்கி விடுவார்கள்.

லாரி ஓட்டுனருக்கு ரூ.2500, கிளீனருக்கு ரூ.1500 மேலும் ஆட்கள் ஏற்று கூலி, இறக்கும் கூலி என்று ஒரு ஆளுக்கு தினமும் ரூ. 500 வரை வழங்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி வந்த பிறகு சரக்கு புக்கிங் குறைந்து விட்டதால் ஆட்கூலி கூட வழங்க முடிவதில்லை.

அதே போன்று சாலைகளில் நடக்கும் திருட்டு சம்பவங்கள், ஓட்டுனர்கள் தாக்கப்படுவது போன்றவை எப்பொழுதும் அச்சத்திலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு போலிசே உடந்தையாக இருக்கின்றது.

ஜிஎஸ்டி எண் இல்லாத சிறு தொழில் நிறுவனங்கள் லாரிகளில் சரக்கு அனுப்புவதில் சிரமம் உள்ளது. லாரி புக்கிங் அலுவலகத்திலும் புக்கிங் செய்து அனுப்ப முடியாததால் கிட்டத்தட்ட 75 சதவீதம் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடங்களில் இருந்து கொள்முதல் பகுதிக்கும், கொள்முதல் இடத்தில் இருந்து பிற சில்லறை வியாபாரிகளுக்கும் கொண்டு செல்லும் பதிவு பெற்ற சரக்கு லாரிகளுக்கு ஜிஎஸ்டி -யில் 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை சரக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லும் போது ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் எடுத்துச் செல்ல முடியாது. இதை மீறினால் சம்பந்தப்பட்ட பொருட்களுக்குரிய ஜிஎஸ்டி -யுடன் கூடுதலாக 100 சதவீதம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

இதனால் லாரிகளில் சரக்குகளை ஏற்றிச் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களிலும் சரக்குகள் பதிவு செய்வது தடைப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து சரக்கு லாரி வர்த்தகம் பாதிக்கிறது. இது எங்கள் தொழிலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பாதிப்பு. வழக்கமாக ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு நாளொன்றுக்கு எட்டு லோடுகள் வரை ஏற்றினோம். இப்பொழுது இரண்டிற்கே பெரும்பாடாக உள்ளது.  ஒரு கிராம் எடுப்பதற்கு கூட சிரமாக உள்ளது.

லாரிகள் பழுது ஏற்படும் நிலையில் அதற்கான செலவு தனி. ஜிஎஸ்டி -க்கு பிறகு உதிரி பாகங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் எப்பொழுதும் கையில் பணம் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த தொழிலில் நிலைத்திருக்க முடியாது.

இந்த பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் ஜிஎஸ்டிக்கு பிறகு மூன்று லாரிகளை விற்பனை செய்து விட்டேன். விற்கும் போது ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்றார்கள். அதன் நடைமுறை சரியாக தெரியாததால் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை.

நாங்கள் கூட பரவாயில்லை. பார்சல் சர்விஸ் வைத்துள்ளதால் குறைந்த பட்சம் சமாளிக்க முடிகிறது. ஆனால் மார்கெட்டில் ஓடும் லாரிகள் மிகக் கடுமையாக பாதிப்படைவார்கள். அவர்களுடைய நிலை தான் மோசம் என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் மயக்கமே வந்து விட்டது.

என்ன இருந்தாலும் பண்டிகை காலத்தில் வேலை நிறுத்தம் செய்வது பொது மக்களை தானே பாதிக்கும்?

 உண்மை தான். ஆனால் மக்கள் பாதிப்படைவார்கள் என்பது குறித்து இந்த அரசு கவலைப் பட்டிருந்தால் எங்கள் கோரிக்கையை ஏற்று மக்களை பாதிப்பிலிருந்து காப்பற்றி இருக்கும். ஆனால் அரசு கவலை கொள்ளவில்லை. அதை விட முக்கியம் அரசு என்ற ஒன்றே இல்லை என்பதைத் தான் எங்களுக்கு உணர்த்துகிறது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டம் நடத்துவோம்!

கூட்டிக் கழித்துப் பார்த்தால் லாரி தொழிலை ஒழிப்பதே மோடி அரசின் திட்டம் என்பது தெரிகிறது. புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க வக்கற்ற மோடி அரசு இருக்கும் தொழில்களை அழிப்பதில் எப்படி உறுதியாக இருக்கிறது என்பதற்கு லாரி உ ரிமையாளர்களின் அவல நிலை ஒரு சான்று! இது ஏதோ அவர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சினை அல்ல! லாரி தொழிலின் பாதிப்பு விலைவாசி உயர்வாக நம் மீதும் விழும். விழித்தெழுவோம். இல்லையேல் நமது வாழ்க்கை நம்மிடம் இல்லை!

செய்தி, படங்கள் : – வினவு செய்தியாளர்

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க