privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகடலில் இருந்து மீனவர்கள் மீட்கப் பட்டார்கள் ! குமரி மீனவர்கள் சாதனை !

கடலில் இருந்து மீனவர்கள் மீட்கப் பட்டார்கள் ! குமரி மீனவர்கள் சாதனை !

-

ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபுக் கடற்கரையைச் சேர்ந்த 8 மீனவ கிராமங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அரசின் அலட்சியத்தால் கடலில் மாட்டிக் கொண்ட மீனவர்கள் காப்பாற்றப்படவில்லை. அதனைக் கண்டித்துக் கடந்த வாரங்களில் மீனவ மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் போராடினர். மக்கள் அதிகாரம் அமைப்பினர் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

உறவுகளைப் பறி கொடுத்து நிற்கும் வல்லவிளை மீனவக் குடும்பங்கள்

எதற்கும் மசியாத அரசுகளை நம்பி இனி பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்த மீனவர்கள் தேடுதல் பணியில் தாங்களே இறங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன், வல்லவிளை மற்றும் சின்னத்துறை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், மொத்தம் 16 மீன்பிடிப் படகுகளில் மீனவர்களைத் தேடி கேரளாவின் அரபிக் கடலில் சென்றனர். வரும் கிறிஸ்துமஸ் வரை தேடுவதாக திட்டம். இதற்கென குறைந்தபட்சம் ஒரு படகுக்கு நான்கு இலட்சம் ரூபாயாவது தேவைப்படும். இவற்றை அவர்களே ஏற்பாடு செய்து கொண்டு கடலுக்கு சென்றனர்.

நேற்று கொச்சியிலிருந்து தோராயமாக 200 கடல் மைலுக்கு அப்பால் நடுக்கடலில் புயலில் சிக்கி எஞ்சின் சேதமடைந்த படகைக் கண்டுள்ளனர். அப்படகில் இருந்த வல்லவிளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களை உயிருடன் மீட்டுள்ளனர்.

கடலிலேயே புயலால் பாதிக்கப்பட்ட  அந்த மீன்பிடி படகின் என்ஜின் பழுதடைந்து மீனவர்கள் யாரும் வராத நிலையில் படகிலேயே நாட்களை கழித்து வந்தனர். இருக்கும் கொஞ்ச நஞ்ச மளிகை சாமான்களை வைத்து கால் வயிற்றுக் கஞ்சியுடன், போதுமான குடிநீரின்றியும் போராடியிருக்கின்றனர்.

தற்போது மீட்கச் சென்ற மீனவர்கள் அந்த படகின் என்ஜின் பழுதை சரிபார்த்து மீட்கப்பட்ட மீனவர்கள் அதே படகிலேயே தற்போது திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் நாளை மறுநாள் (20-12-2017) இலட்சத் தீவில் கரையேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை வல்லவிளையைச் சேர்ந்த மீனவ இளைஞர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

எதிர்பார்ப்பில் வல்லவிளை மீனவர்கள்

கொச்சியிலிருந்து வெறும் 200 கடல் மைல் தூரத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவப் படகுகளைக் கூட கடந்த 18 நாட்களாக அதிநவீன உபகரணங்களும், படைபலமும் கொண்ட இந்தியக் கடலோரக் காவல் படையாலும், இந்தியக் கப்பற்படையாலும் விமானப் படையாலும் கண்டுபிடிக்க முடியவில்லை! வல்லரசுப் படைகளின் சாதனை இதுதான்!

மீனவர்களைப் பற்றி கடுகளவிற்குக் கூட கவலையில்லாத இந்த அரசு இருந்து என்ன பலன்? இதற்கிடையில் இந்துமதவெறியர்கள் குமரி மாவட்டத்தில் மதவெறியைக் கிளப்பும் வேலையை செய்து வருகின்றனர். மீனவர்களுக்கு மட்டும் நிவாரணம், விவசாயிகளுக்கு இல்லையா என கிளப்பி விடுகின்றனர்.

குமரி மாவட்ட மக்களோ மீனவர்கள்,விவசாயிகள் இருவருக்கும் நிவாரணம் அளிக்கப்படுவதை ஆதரிக்கின்றனர். ஆனால் வாழை மரம் சரிந்ததும், கடலில் மனித உயிர்கள் பலியாவதும் ஒன்று என்று ஆர்.எஸ்.எஸ் கூட்டம் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்வது?

மீட்கப்பட்ட மீனவர்கள் மூலம் வல்லவிளையில் சில குடும்பங்களாவது நிம்மதிப் பெருமூச்சு விடும். இவர்கள் போன்று இன்னும் பலர் ஆழ்கடலில் மாட்டியிருக்க கூடும் என்று நம்மிடம் பேசிய மீனவர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.

மத்திய அரசும், படைகளும் நினைத்தால் இந்த மீனவர்களை காப்பாற்றிக் கொண்டு வருவது மிகவும் சுலபமான ஒன்று. ஆனால் சொந்த நாட்டு மக்களை பலி கொடுப்பதை மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்க்கும் இவர்களை எப்படி திருத்துவது?

–     வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க