privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்நீதியரசர்களா? ஊழல் பெருச்சாளிகளா??

நீதியரசர்களா? ஊழல் பெருச்சாளிகளா??

-

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் எவ்வளவுதான் புரட்சி செய்தாலும், கலகம் புரிந்தாலும் இறுதியில் நீதிபதியின் தீர்ப்பால் நன்மையைக் கொண்டு வருவார்கள். சமூகத்தின் மற்ற பிரிவினரான போலீசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கூட சமயத்தில் வில்லனாக காட்டினாலும், நீதிபதிகளை மட்டும் அப்படி சித்தரிக்க மாட்டார்கள். அவர்களது மதிப்பு மட்டும் கேள்விக்கு அப்பாற்பட்டது.

ஊடகங்களும் நீதிமன்றங்களை இப்படித்தான் பயபக்தியுடன் அணுகுகின்றன. யாராவது அப்படி தப்பித் தவறி பேசிவிட்டால் பிடித்தது சனி! உலகமறிந்த அருந்ததிராயையே ஒருநாள் நீதிமன்றக் காவலில் வைத்தார்களே! ஆக, இவ்வளவு பாதுகாப்பு வசதிகளையும், புனிதத் திருவுருவங்களையும் கை வரப் பெற்றிருக்கும் நீதிபதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யார் கேட்கப் போகிறார்கள்? நீதித்துறையில் மட்டும் எத்தனை கோடிகள் ஊழல் நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. தப்பித் தவறி ஒரு சிலர் பிடிபட்டாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டதாக வரலாறில்லை. இதுவும் அப்படிப்பட்ட ஒரு வரலாறுதான்.

1990களில் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் பிரபலமான வழக்கறிஞராக பணியாற்றியவர் சௌமித்ரா சென். இவரை அங்கிருக்கும் உயர்நீதி மன்றம் நீதிமன்ற ரிசீவராக நியமிக்கிறது. நீதிமன்ற ரிசீவர்களின் வேலை என்னவென்றால், இரு தரப்புக்கும் இடையே நடக்கும் வழக்குகளின் போது நடக்கும் வர்த்தகப் பணத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பாய் பராமரிக்க வேண்டும். அந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டுமென நீதி மன்றம் உத்தரவிடும் வரையிலும் அதன் பாதுகாப்பாளராக இருக்க வேண்டும். ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செயில்குஅஐஃ) விற்கும், ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனத்திற்கும் நடக்கும் வழக்கொன்றில் சரக்குகளின் கொள்முதலுக்காகக் கிடைத்த ரூபாய் 33 இலட்சத்தை நீதிமன்றம், ரிசீவராக இருக்கும் சௌமித்ரா சென்னிடம் ஒப்படைக்கிறது.

இந்தப் பணத்தை நீதிமன்ற ரிசீவர் கணக்கில் போட்டு பராமரிக்க வேண்டிய சென், தனது சொந்தக் கணக்கில் போட்டு குஜாலாய் பயன்படுத்துகிறார். இது போன்று எத்தனை வழக்குப் பணத்தை அவர் பயன்படுத்தினார் என்பதற்கும், அந்தப் பணத்தை வைத்து எதில் முதலீடு செய்து இலாபம் சம்பாதித்தார் என்பதற்கும் விவரங்களில்லை. இடையில், 2003ஆம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணி அரசு ஆட்சியிலிருக்கம் போது சௌமித்ரா சென் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்கிறார். இந்த ஊழல் மன்னனை தெரிவு செய்தவர் பா.ஜ.க.வின் சட்டத்துறை அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி. நீதிபதிகளின் நியமனம் எவ்வளவு கர்ம சிரத்தையோடு நடைபெறுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

நீதிபதியான பிறகும் அந்தப் பணத்தை சென் அனுபவித்து வந்தார். ஆனால், “செயில்” நிறுவனம் தொடுத்த வழக்கின் விளைவாக, அந்தப் பணத்தை வட்டியுடன் திருப்புமாறு சக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி 2006இல் 58 இலட்சத்தை சென் ஒப்படைத்தார். மற்றபடி, இந்த ஊழல் நீதிபதிக்கு தண்டனைகள் ஏதும் தரப்படவில்லை. இலைமறைவு காய்மறைவில்லாமல் பச்சையாக இந்த மோசடி நடந்திருப்பதால், ஒரு ஊழல் பேர்வழி நீதிபதியாக இருக்கலாமா என்ற கேள்வி எழுந்தது. வேறு வழியின்றி, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், மூன்று உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிகளைக் கொண்டு இந்தப் பிரச்சினையை விசாரிக்குமாறு உத்தரவிட்டார். அவர்களும் விசாரித்து, ஊழல் மறைக்க முடியாதபடி இருப்பதால், முறைகேடு நடந்திருப்பதாக தீர்ப்பளித்தார்கள்.

கடந்த ஓராண்டாக வழக்குகளை விசாரிக்காமல் நீதிபதியாகத் தொடரும் சென்ஐ என்ன செய்வதென்று நீதித்துறைக்கு குழப்பம்! கடைசியில் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மூன்று நீதிபதிகள் சென்ஐ அழைத்து பஞ்சாயத்து பேசினர். மூவரும் சென்னிடம் தெரிவித்த ஆலோசனை என்னவென்றால், அவர் தானாக பதவி விலகவேண்டும் அல்லது விருப்ப ஓய்வு பெறவேண்டும்! கவனியுங்கள், ஊழல் செய்த நீதிபதியை உள்ளே தள்ள வக்கில்லாத நீதிபதிகள் தனது இனத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சென்னுக்கு அவர்கள் அளித்த தண்டனை விருப்ப ஓய்வு!

சௌமித்ரா சென்னோ இந்த ஆலோசனைகளைப் புறந்தள்ளி நீதிபதி நாற்காலியை விட்டு இறங்கமாட்டேன் என்று கூறிவிட்டார். நீதித்துறையின் “இமேஜை”க் காப்பாற்றுவதற்காக வேறு சுமூக வழிகளின்றி, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சென்ஐ நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதிவிட்டார். பிரதமரின் அலுவலகம் அந்தக் கடிதத்தைச் சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜுக்கு அனுப்பி விட்டதாம்.

உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகளை பாராளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் மூலம்தான் பதவி நீக்கம் செய்ய முடியும். கண்ணியமிக்க நீதிபதிகளை சுலபமாக தண்டிக்கக் கூடாது என்பதால் இந்த ஏற்பாடு. அதிலும் பல்வேறு தடைக்கற்களை வைத்திருக்கிறார்கள். முதலில் குற்றம் புரிந்த நீதிபதியை நீக்கச் சொல்லி 100 லோக்சபா உறுப்பினர்கள் அல்லது 50 ராஜ்ஜிய சபா உறுப்பினர்கள் கையெழுத்திட்டு தீர்மானம் கொண்டு வரவேண்டும். அதன்பின், பாராளுமன்றம் நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு கமிட்டி போட்டு விசாரிக்கும். அந்த விசாரணையில் குற்றம் இருப்பது உறுதியானால், இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தி மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவிருக்கும் பட்சத்தில், குற்றம் புரிந்த நீதிபதி பதவி நீக்கம் செய்யப்படுவார்.

இதுவரை இந்தியாவில் இப்படி நீதிபதிகளை நீக்கும் முயற்சி ஒரு முறைதான் நடந்திருக்கிறது. 1991இல் ஹரியானா உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த ராமசாமி, ஊழல் பணத்தின்மூலம் தனது வீட்டில் ஆடம்பர மரச்சாமான்களை இறக்குமதி செய்தார் என்பதற்காக அப்போதைய பாராளுமன்றத்தில் மது தண்டவதே பதவி நீக்கம் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அந்த வாக்கெடுப்பைக் காங்கிரசு கட்சி புறக்கணித்ததால் ராமசாமி தப்பித்தார்.

இப்போது இரண்டாவது முறையாக வரப்போகும் தீர்மானத்தில் சென்னுக்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. காங்கிரசு, பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் தீர்மானத்தை ஆதரித்தால் சென் பதவி நீக்கம் செய்யப்படலாம். அப்படி நீக்கப்படுவதாகவே வைத்துக் கொள்வோம். மக்களின் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடித்து நீதியாக காலத்தை ஓட்டிய ஒரு பகிரங்கக் கொள்ளைக்காரனுக்கு வெறும் பதவி நீக்கம் மட்டும்தான் தண்டனையா? சிறு குற்றம் புரிந்ததற்காக விசாரணைக் கைதிகளாக பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவின் பல்வேறு சிறைகளில் இருக்கிறார்களே? அவர்களை விட அளவிலும் தன்மையிலும் பெரிய குற்றத்தைப் புரிந்திருக்கும் இந்தக் கருப்புச் சாத்தானுக்கு குறைந்தபட்சம் ஒரு பத்தாண்டு சிறையாவது தண்டனையாக கொடுக்கப்பட வேண்டாமா? ஊழல் பணத்தினால் கோடிசுவரராகியிருக்கும் இவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டாமா? இந்த யோக்கிய சிகாமணி நீதிபதியாக இருக்கும்போது வழங்கிய தீர்ப்புகளில் நீதி இருந்திருக்குமா?

பணம் வாங்கிக் கொண்டு நீதியை திருப்பியிருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? ஆனால் சட்டப்படியும், நீதிப்படியும் இப்படியெல்லாம் புலனாய்வு செய்து “போஸ்ட் மார்ட்டம்” செய்வதெல்லாம் சாத்தியமில்லை. நீதிபதிகளை மட்டும் சட்டமும், நடைமுறையும் மொத்தத்தில் ஆளும் வர்க்கங்களும் கடுமையாகப் பாதுகாக்கின்றன. கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவியேற்கும் போது கூட நீதிபதிகள் சொத்துக் கணக்கை காட்டுமாறு சட்டம் கொண்டு வரவேண்டும் என வாதம் எழுந்தபோது, அவர் அதை கடுமையாக எதிர்த்தார். அது நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கி விடுமாம்.

கோத்ரா வழக்கில் சிறையில் வாடும் அப்பாவிகளை விடுதலை செய்வதில் நீதிமன்றம் நியாயமாக நடக்கவில்லை என்று தீஸ்தா சேதல்வாத் ஒரு பத்திரிக்கையில் எழுதியதும், இதே பாலகிருஷ்ணன் சீறி எழுந்தார். தற்போது வருங்கால வைப்பு நிதி மோசடி வழக்கிலும் உச்சநீதிபதி அகர்வால் சீறியிருக்கிறார். தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி 23 கோடி ரூபாய், உத்திரப்பிரதேசம் காஜியாபாத் கருவூலத்திலிருந்து அதிகாரிகள் உதவியோடு சுருட்டப்பட்டது. இந்த மோசடியில் உச்சநீதி மன்றத்தின் ஒரு நீதிபதி, அலகாபாத், உத்தரகாண்ட் உயர்நீதி மன்ற நீதிபதிகள், மற்றும் உத்திரப் பிரதேச மாவட்ட நீதிபதிகளுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து காஜியாபாத் வழக்கறிஞர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த ஊழல் நீதிபதிகளை போலீசார் விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று மனுதாரர் சார்பாக மூத்த வழக்குரைஞர் சாந்தி பூஷன் வாதிட்டதும், நீதிபதி அகர்வாலுக்கு கோபம் பொங்கி எழுந்தது. ஊழல் செய்த நீதிபதிகளை உச்சநீதி மன்றம் பாதுகாக்கிறது என்று சாந்தி பூஷன் சொன்னதுமே, இந்த வழக்கை தாம் விசாரிக்கப் போவதில்லை என்று அகர்வால் விலகி விட்டார். இவ்வளவு ரோசமிருக்கும் அகர்வாலுக்கு, வியர்வை சிந்தி உழைத்த தொழிலாளர்களின் வைப்புநிதியை உண்டு செரித்த கொழுப்பெடுத்த நீதிபதிகள் மேல் ஆத்திரமோ அதிர்ச்சியோ வரவில்லை. அந்த அளவுக்கு இனப் பாசம் அறிவை மறைக்கிறது.

இதே காலத்தில் பஞ்சாபிலும் உயர்நீதி மன்ற நீதிபதிகள் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கிறார்கள். அட்வகேட் ஜெனரலாக இருக்கும் சஞ்சீவ் பன்சாலி என்பவரின் உதவியாளர், நீதிபதி நிர்மல்ஜித் கவுரிடம் பதினைந்து இலட்ச ரூபாய் லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார். அந்த நீதிபதி உடனே போலீசுக்கு தெரிவித்து விட்டார். நடந்த கூத்து என்னவென்றால் அந்தப் பணம் நிர்மல் யாதவ் என்ற நீதிபதிக்குத் தரப்பட வேண்டிய பணம். ஒரே பெயரிலிருப்பதால் ஆள்மாறாட்டம் நடந்திருக்கிறது. தற்போது இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதிலும் ஊழல் நீதிபதி தண்டிக்கப்படப் போவதில்லை. அதிகபட்சம் பதவி நீக்கம் மட்டுமே செய்வார்கள்.

கேள்விக்கிடமற்ற மதநம்பிக்கை போல, ஐயத்திற்கிடமற்ற நீதிபதி பக்திதான் நடப்பில் கோலோச்சுகிறது. ஜெயா ஆட்சியில் கொள்ளையடித்த தளபதிகளும், வீராங்கனைகளும் தி.மு.க.வில் சேர்ந்து தமது வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். ஏன், கருணாநிதி ஆட்சி கூட நீதித்துறையின் மூலம் ஜெயலலிதாவை இதுவரை தண்டிக்க முடியவில்லையே!

மத்திய அமைச்சர்கள் பலரும் ஊழல் வழக்குகளை சுலபமாக எதிர் கொண்டு தமது ஊழியத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அம்பானியும், டாடாவும், பிர்லாவும் நம்மை சட்டப்படியே கொள்ளையடிப்பதற்குரிய லைசன்ஸை நீதிமன்றங்கள்தான் வழங்குகின்றன. மேட்டுக்குடி சீமான்கள் பொழுதுபோக்கிற்காக சண்டையிட்டு மற்றவர்களைக் கொன்றுவிட்டு நீதிமன்றத்தின் ஆசியோடு பிணையில் இயல்பாக வாழ்வதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது? அப்பாவி இசுலாமிய மக்கள் சிறையில் வாடும்போது, கலவரம் நடத்தி பல உயிர்களைக் காவு வாங்கிய சங்கப் பரிவாரத் தலைவர்களெல்லாம் பகிரங்கமாக அரசியல் செய்வதற்கு என்ன காரணம்?

சாதாரண மக்களுக்கு கிடைக்காத நீதிதான் அவர்களது வாழ்வைப் பறிக்கும் ஒவ்வொரு பொருளாதார, அரசியல் நடவடிக்கைக்கும் பின்புலமாக தார்மீக நியாயத்தை சட்டத்தின் பெயரில் வழங்குகிறது. ஆகையால் ஒடுக்கும் இந்த நீதியிலிருந்து நமக்கான நீதி கிடைக்காது. அது இந்த நீதிக்கு வெளியே நாம் நடத்தும் போராட்டத்திலிருந்தே பெறமுடியும்.

__________________________________________

புதிய ஜனநாயகம், அக்-08
__________________________________________

 

 

 

 1. ‘இடையில், 2003ஆம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணி அரசு ஆட்சியிலிருக்கம் போது சௌமித்ரா சென் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்கிறார். இந்த ஊழல் மன்னனை தெரிவு செய்தவர் பா.ஜ.க.வின் சட்டத்துறை அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி’

  நீதிபதிகளை தெரிவு செய்வது அமைச்சர் அல்ல.அதில் அமைச்சரோ, அதிகாரிகளோ தலையிட முடியாது. நீதிபதிகளாக நியமிக்கலாம் என்ற பட்டியலிலிருந்து நீதிபதிகள் கொண்ட குழு செய்யும்
  தெரிவு அது. பு.ஜாவிற்கு பாஜக மேல் கோபம் என்பதற்காக புளுகக் கூடாது.அந்தப் பட்டியலை
  மத்திய அரசு தயாரிக்காது.

 2. நீதித்துறையில் ஊழல் என்று இப்போது அலறுவதில் புண்ணியமில்லை. ஜட்ஜ் இருக்கையை விட்டு எழுந்திருக்கு முன்பே டைப்பிஸ்ட்,டவாலிக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கப்பட்டுவருகிறதே இதை அப்போது வினவியிருந்தால் தினவு சொறியாகியிராதல்லவா

 3. உயர் நீதி மன்ற நீதிபதியை நியமிப்பது, குடியரசு தலைவர் … அவர் உச்ச நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி ( Chief Justice of India) மற்றும் அந்த மாநிலத்தின் கவர்னரை கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்..
  யார் தேர்ந்து எடுக்கிறார்கள் என்பது இருக்கட்டும்… தேர்ந்து எடுப்பவர்களின் நீதியை நேர்மையை உறுதி செய்யும் அரசியல் சாசனம் உள்ளதா..?
  எப்போதோ வெள்ளைக்காரன் நிறுவிய அரசியல் சட்டத்தில் பெரும்பகுதியை அப்படியே ஒரு பள்ளி மாணவன் போல் காப்பி அடித்து எழுதியதை… இனி மேலும் நம்பலாமா?

 4. //அது. பு.ஜாவிற்கு பாஜக மேல் கோபம் என்பதற்காக புளுகக் கூடாது.அந்தப் பட்டியலை
  மத்திய அரசு தயாரிக்காது//
  சரி வினவு ஏதோ தவறாக குறிப்பிட்டு உள்ளார் என்று வைத்துக்கொள்வோம்.. எந்த காலத்தில் குடியரசு தலைவர் தன்னிச்சையாக பிரதமரை எதிர்த்து முடிவு எடுத்து உள்ளார்.. ஒரு மாநில ஆளுநரின் நியமனமே அந்த மாநில முதல்வருக்கு தகுந்தபடிதானே நடக்கிறது.. இதில் நீங்கள் கோபப் படுவதை பார்த்தல்… சிரிப்புத்தான் வருகிறது…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க