கறுப்பு நங்கையின் கண்ணீர்
மிகமிகத் துயரமான கண்ணீர்
ஒரு கறுப்பு நங்கையின் கண்ணீர்தான்.
ஏனெனில்
அவளை அழவைப்பது சுலபமல்ல.
அவள் மகனை அவளிடமிருந்து
எடுத்துச்செல்.
அவனை போதைப்பழக்கத்துக்கு ஆளாக்கு.
வயலில் அவனை உழைக்க வை.
கொரியாவில் அவனைக் கொன்றுபோடு.
ஒரு பிஎச்.டி பட்டத்துடன்
ஓட்டலில் உணவு பரிமாறச் செய்.
அவள் உதிர்ப்பாள் ஒரு புன்னகை –
தனக்கே உரித்தான
கசப்புப் புன்னகையை
கேடயமாகப் பயன்படும்
தன் கறுப்பு முகமூடியின் ஊடாக
அவள் உதிர்ப்பாள்.
கண்ணீர் பெருகும்
உள்ளுக்குள்
இரத்தச் சிவப்பாக.
அவள் கணவனை
அவளிடமிருந்து பிரித்துவை.
சமையல் அறையிலேயே
சாக வை.
பெரிய கடன் ஒன்றை உண்டாக்கி
ஆயிரம் நாளில் அதை
திருப்பிக் கொடுக்கச் செய்.
அவள் கொடுப்பாள்.
தண்டனை ஒன்று கொடுத்து
ஆயிரம் இரவுகளை கழிக்கவை.
அவள் கழிப்பாள்.
ஆயினும்
வெள்ளையனே,
நீ அவளிடமிருந்து
கண்ணீரை மட்டும் பெறமுடியாது.
ஏனெனில்,
அவள்
துயரங்களின் அரசி.
ரே டூரம், சீட்ஸ்
(அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், கவிதைத் தொகுப்பு. தமிழில் இந்திரன்.)
கென்யாவில் ஒபாமாவின் தந்தைவழிப் பாட்டி கண்ணீர் விட்டார். ஒபாமாவின் வெற்றி உரைக் கூட்டத்தில் அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம் ஒபரா வின்பிரே கண் கலங்கினார். கறுப்பினத் தலைவர் ஜெஸ்ஸி ஜாக்சன் கண்ணீர் விட்டார்.
இறுதியில்… அது நடந்து விட்டது.
ரே டூரம் தோற்றுவிட்டார்.
ஒபாமா அவரைத் தோற்கடித்து விட்டார்.
வெள்ளையனால் வரவழைக்க முடியாத
கறுப்பு நங்கையின் கண்ணீரை
வெள்ளையனின் மாளிகை வரவழைத்து விட்டது.
துயரம் வரவழைக்க முடியாத கண்ணீரை
ஆனந்தம் வரவழைத்து விட்டது.
இந்த மகிழ்ச்சியின் பொருளின்மையை எடுத்துக் காட்டும் கேள்விகளை நேற்றைய பதிவில் எழுதியிருந்தோம்.
எனினும் தொலைக்காட்சிகளில் காணும் பிம்பங்கள் நம்மை உலுக்கத்தான் செய்கின்றன. கறுப்பினக் கணவனின் அணைப்பில் கண்கலங்கும் வெள்ளையின மனைவியைப் பார்க்கும்போது, நமது தர்க்க அறிவு மழுங்கிச் செயலிழந்து விடுகிறது. நாமெல்லாம் கனவு காணும் “அந்த நாள்’ வந்தே விட்டதோ, ‘நிறவெறி ஒழிந்து சகோதரத்துவம் மலர்ந்து விட்டதோ’ என்றொரு மயக்கம் நம்மைத் தழுவவத்தான் செய்கிறது.
‘என் தந்தையின் கனவுகள்’ என்ற தன்னுடைய நூலில் ஒபாமா தன் பள்ளிப் பருவத்தை நினைவு கூர்கிறார். “உன் அப்பா நரமாமிசம் சாப்பிடுவாரா?” என்று சீண்டிய சக வெள்ளை மாணவன், “Barack என்ற பெயர் ஒருமாதிரியாக இருக்கிறது, உன்னை Barry என்று அழைக்கலாமா?” என்று கேட்ட ஆசிரியை.. இப்பேர்ப்பட்ட வெள்ளை அமெரிக்காவா மனம் மாறிவிட்டது?
நம்ப முடியவில்லை. எப்படி?
இரட்டைக் கோபுரம் எனும் அமெரிக்க ஆணவத்தை நொறுக்கிய ‘ஒசாமா’ என்ற சொல்லிலிருந்து ஒரு எழுத்து மட்டுமே வேறுபட்ட ஒரு மனிதனை, கிறித்தவனே ஆயினும் இசுலாமியப் பெயர் தாங்கியவனை, ஒரு கருப்பனை -வெள்ளை அமெரிக்கா தேர்தந்தெடுத்தது எப்படி?
“நம்பமுடியவில்லை”. இந்தச் சொல்லின் துணை கொண்டுதான் வெள்ளை உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் ஒபாமா. ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க செனட்டின் உறுப்பினராகப் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் மாநாட்டு மேடையில் ஏறிய ஒபாமா தனது உரையை இப்படித் துவங்கினார்: “இந்த மேடையில் நான் நிற்பது உண்மையில் நம்பமுடியாததாகத் தான் இருக்கிறது”
தற்போது அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட பின் “ஆம். இது அமெரிக்காவில் மட்டும்தான் சாத்தியம்” என்று கூறித் தனது உரையை நிறைவு செய்திருக்கிறார் ஒபாமா.
வெள்ளை உள்ளங்களை அவர் எப்படிக் கொள்ளை கொண்டார்? தனது தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும் “வெள்ளை அமெரிக்கா, கறுப்பு அமெரிக்கா என்று இரண்டு அமெரிக்காக்கள் இல்லை; பழமைவாத அமெரிக்கா, தாராளவாத அமெரிக்கா என்று இரண்டு அமெரிக்காக்கள் இல்லை; ஒரே ஒரு ஐக்கிய அமெரிக்கா மட்டும்தான் இருக்கிறது” என்று கூறி வெள்ளை உள்ளங்களை நிறவெறிக் குற்றத்திலிருந்து அவர் விடுதலை செய்தார்.
அதன் பயனாக இப்போது “வெள்ளை அமெரிக்கர்கள் தங்களது நம்பிக்கைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் பொறுப்பை ஒரு கறுப்பினத்தவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்” (வாஷிங்டன் போஸ்ட் நவம்பர் 4) கறுப்பினத்தவரின் கனவு? அது காத்திருக்கத்தான் வேண்டும்.
“இது அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம்!” – இந்த சொற்றொடர் ஒரே நேரத்தில் வெள்ளையினத்தின் பெருந்தன்மையையும், அமெரிக்க தேசியத்தின் ஆதிக்க உணர்வையும் இதமாகச் சொறிந்து கொடுக்கிறது.
“சுதந்திரத்தைப் பறித்தெடுப்போம்” என்று அடிமைகள் முழங்குவதை ஆண்டைகள் எப்போதுமே விரும்புவதில்லை. வேறு வழியில்லாத நிலையில்கூட சுதந்திரம் என்பது தனது பெருந்தன்மையால் போடப்பட்ட பிச்சையாக அமைவதே அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.
செப்டம்பர் மாத திவால்கள் அமெரிக்காவைப் பாதாளத்தை நோக்கித் தள்ளும் வரை, ஒபாமாவுக்கும் மெக்கெய்னுக்கும் வாக்கு வித்தியாசத்தில் பெருத்த இடைவெளி இருப்பதாக கணிப்புகள் கூறவில்லை.
குடியரசுக் கட்சியின் தனியார்மயக் கொள்கைகளால் திவாலாக்கப்பட்ட அமெரிக்காவின் பொதுப்புத்தியில், முதலாளித்துவ இலாப வெறியின் மூர்க்கத்தனத்தால் இரக்கமின்றி நடுத்தெருவுக்கு துரத்தப்பட்ட அமெரிக்காவின் மனச்சாட்சியில், வேறு வழியின்றி “சகோதரத்துவம்” துளிர்த்துவிட்டது போலும்!
மனிதனின் சிந்தனையை மாற்றுவதில் பொருளாயதக் காரணிகளின் பாத்திரம் குறித்துப் பேசும் கம்யூனிசம், அமெரிக்காவுக்குப் பிடிக்காத சித்தாந்தம். மெக்கார்த்தியின் மொழியில் சொன்னால் அது “அமெரிக்கத் தன்மைக்கு விரோதமானது”.
வெள்ளை முதலாளிகளின் கொள்ளை இலாப வெறியால் செருப்படி பட்டதன் விளைவாகத்தான், வெள்ளை மனங்களில் படிந்திருந்த நிறவெறி லேசாக உதிர்ந்திருக்கிறது என்று நாம் கூறினால் அது வெள்ளை அமெரிக்க மனதுக்கு அவ்வளவு பிடித்தமானதாக இராது.
அதனால்தான் “இது அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம்” என்று ஒபாமா நெஞ்சறிந்து கூறும் பொய் அமெரிக்காவுக்குப் பிடித்திருக்கிறது. தோற்றுப்போன மெக்கெய்னுக்கும் சாரா பாலினுக்கும் கூட இந்த “அமெரிக்கப் பெருமை” பிடிக்கத்தான் செய்கிறது.
ஐயா கனவான்களே, உங்கள் ஓபாமா “வெள்ளை கருப்பு பேதமில்லாத ஒரே அமெரிக்காவை” கண்டுபிடிப்பதற்கு 60 ஆண்டுகள் முன்னதாகவே ‘எங்கள் அண்ணா’ “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கொள்கையைக் கண்டுபிடித்து பார்ப்பன உயர் சாதியினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுவிட்டார் என்று நாம் கத்தலாம். ஆனால் அது அமெரிக்காவுக்குக் கேட்குமா?
‘yes we can’ என்ற உங்கள் முழக்கத்தை “உன்னால் முடியும் தம்பி” என்று மொழிபெயர்த்து எம்.எஸ். உதயமூர்த்தி முன்னரே எங்களுக்கு எங்களுக்கு வழங்கிவிட்டார் என்ற வரலாற்று உண்மையைச் சொன்னால் அவர்கள் நம்புவார்களா?
அந்த எம்.எஸ். உதயமூர்த்திதான் அமெரிக்காவின் ஏல் பல்கலக் கழகத்தில் “ஒன்றே குலம்” அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வாங்கிக் கொடுத்தார் என்ற விவரத்தையாவது கேட்டுத் தெரிந்து கொள்வார்களா?
அமெரிக்கப் பெருங்குடி மக்களே, ஜனநாயக நாடகத்துக்கு உங்களைக் காட்டிலும் இந்தியா மிகமிக லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்! இன்று அமெரிக்காவில் மட்டுமே சாத்தியமாகியிருப்பதாக நீங்கள் நம்பிக் கொண்டிருப்பது அன்றே தமிழகத்தில் சாத்தியமாகி, அதன்பிறகு இந்தியா முழுவதிலும் சாத்தியமாகிவிட்டது. கே.ஆர்.நாராயண், மாயாவதி, அப்துல் கலாம்.. இன்னும் எத்தனை இந்திய ஒபாமாக்கள் வேண்டும்?
அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் குஜராத் எரிந்தது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாப்ரியும் எரிந்தார்.
தன்னுடைய கணவன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவருடைய மனைவி கூடக் கண் கலங்கியிருக்கக் கூடும் – ஓபரா வின்பிரேயை போல.
இன்று அந்தப் பெண்மணியின் கண்ணீர் வரண்டு விட்டது.
மீண்டும் அவரை அழ வைப்பது சுலபமல்ல. ‘இந்து’ இந்தியாவால் அது முடியாது.
ஒபாமாவின் வெற்றியைக் கண்டு கண் கலங்கும் கறுப்பு நங்கையின் கண்களிலிருந்து மீண்டும் ஒரு முறை கண்ணீரை வரவழைப்பதும் கூட அத்தனை சுலபமாயிராது. ‘வெள்ளை’ அமெரிக்காவால் அது முடியாது.
_________________________________________________
நல்ல பதிவு.
கவனம் சிதறாமல் படிக்கும் அளவுக்கு அருமையாக எழுதபட்டுள்ளது.
நிறவெறியைத் தாண்டி வெள்ளையினம் ஓட்டளித்துள்ளது உலக சமுதாயம் நல்ல நிலைக்கு மாற்றம் பெறும் என்ற நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது.
வாழ்க!
வினவு,
ஒபாமாவும் சரி இங்குள்ள வேறு கறுபீனத் தலைவர்களும் சரி ஒபாமாவின் வெற்றியின் மூலம் அமெரிக்காவில் நிறவெறி தீர்ந்து விட்டதாக எண்ணவுமில்லை சொல்லவுமில்லை. ஆனால் இந்த மைல் கல் மிக முக்கியமானது. ஒபாமாவின் வெற்றி தரும் inspiration கறுப்பினத்தவர்களுக்கு மிக முக்கியம். எல்லா கறுப்பினத் தலைவர்களும் சொல்லுவது இதுதான் ‘இனி என் பிள்ளையிடம் அமெரிக்காவில் நீ யாராக வேண்டுமானாலும் ஆகலாம் எனச் சொல்வதில் முழு அர்த்தம் இருக்கிறது.’
ஒடுக்கப்பட்ட இனங்கள் தங்கள் முன்னாள் முதலாளிகளின் தலையைக் கொய்துதான் வெற்றி காண வேண்டுமென்றால் அது எத்தகைய கொடுமை.
இந்தத் தேர்தலில் மிக முக்கியமாக நான் காண்பது வெள்ளை இளைஞர்கள் பலரும் குறிப்பாக அடிப்படைவாதிகளாய் கருதப்படும் Evangelical Christian இளைஞர்கள் பலரும் ஒபாமாவுக்கு வாக்களித்திருப்பது. (கூடவே கருக்கலைப்பை தடை செய்யும் சட்டங்களை மக்கள் நிராகரித்திருப்பது.)
தங்கள் வாழ்நாளில் இதைக் காணவே முடியாது என நினைத்திருந்த பல கறுப்பினத்தவர்களுக்கும் ஒரு புதிய வரலாறு கிடைத்துள்ளது. அமெரிக்கா நம் நாடு. அமெரிக்க கனவே நம் கனவும் என எண்ணுபவர்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதுவே ஒபாமாவின் வெற்றி தரும் அடிப்படை பாடம்.
well written