Monday, November 4, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஆரவாரத்தில் ஒபாமா ! அவலத்தில் அமெரிக்க மக்கள் !!

ஆரவாரத்தில் ஒபாமா ! அவலத்தில் அமெரிக்க மக்கள் !!

-

அமெரிக்க நிறுவனங்கள் திவாலாகி புஷ்ஷின் நிர்வாகத்தால் காப்பாற்றப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். மற்றொரு புறம் இந்த நிறுவனங்கள் சூதாடியதால் ஏற்பட்ட சுமையினை அமெரிக்க மக்கள் ஏற்கனவே அனுவித்து வருகிறார்கள். அதாவது இந்த முதலாளிகளின் தாக்குதலால் நிலை குலைந்து வேலையையும், வாழ்க்கையையும் பறிகொடுத்திருக்கிறார்கள். பாரக் ஒபாமா வெள்ளை நிறவெறியை மீறி வெற்றி பெற்றிருப்பதற்கு கடந்த சில மாதங்களாக அமெரிக்க மக்கள் பட்ட துன்பங்களும், துயரங்களுமே காரணம். ஆனால் அதிபரின் மாற்றம் அமெரிக்க மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விடாது. கடந்த ஒரு வருடங்களாக அமெரிக்காவில் நடந்த தற்கொலைகளும், கொலைகளும் அமெரிக்க முதலாளிகளின் பொருளாதாரக் கொள்ளையினால் நடந்திருக்கின்றன. நெஞ்சை உருக்கும் இந்தக் கதைகளை தெரிந்த கொண்ட பிறகாவது அமெரிக்க மாயையிலிருந்து இந்திய நடுத்தர வர்க்கம் விடுபடுமா, என்பதே நமது கேள்வி.

“இந்த பூமியிலிருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் சுதந்திரம் எனும் உயரிய பரிசினை கடவுள் அளித்திருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். நமது மக்களின் தொழில் முனைவுத் திறனைத் தூண்டிவிடும் வல்லமையினை சந்தை கொண்டிருக்கிறது என்றும் நம்புகிறோம். ஆகையால் சுதந்திரத்திற்கு தியாகம் தேவைப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.

ஜார்ஜ்  டபிள்யூ. புஷ்.

அமெரிக்க மக்கள் படும் துன்பத்திற்கு அமெரிக்க அதிபர் புஷ் அளித்துள்ள வியாக்கியானம் இது. இதுவரை அமெரிக்கா கண்டிராத கோமாளி அதிபரான புஷ்ஷின் வாயிலிருந்து உதிர்ந்திருக்கும் சுதந்திரம், சந்தை, தியாகம் மூன்றும் அமெரிக்காவின் முரண்படும் சமூக இயக்கத்தினை தெளிவாக விளக்குகின்றன. சந்தையில் சூதாடுவதற்கு முதலாளிகளுக்கு சுதந்திரம்; அந்தச் சூதாட்டச் சுமையினை ஏற்பதற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்யவேண்டியது மக்களின் கடமை! சந்தையின் சுதந்திரத்தில் கொள்ளை இலாபம் அள்ள முயன்று திவாலான அமெரிக்க நிறுவனங்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசு 35 இலட்சம் கோடி ரூபாயை அள்ளி வழங்கியிருக்கிறது. ஆனால் இந்தப் பேரழிவில் சிக்கிய மக்களைக் காப்பாற்றுவதற்கு நிவாரணம் எதுவுமில்லை.

2001இல் உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு மீண்டுமொருமுறை பயங்கரவாதிகளின் தாக்குதல் நிகழலாம் என்றே அமெரிக்க அரசு மக்களை அச்சுறுத்தி வந்தது. அதற்கான புதிய சட்டங்கள், கெடுபிடிகள், சோதனைகள், கைதுகள், விசாரணைகள் எல்லாம் ஜரூராக நடந்து வந்தன. ஆனால் எதிர்பார்த்த தாக்குதல் பயங்கரவாதிகளிடமிருந்து வரவில்லை. நெருக்கடி என்ற பெயரில் தப்பித்துக்கொள்ளும் முதலாளித்துவ பயங்கரவாதத்திடமிருந்தே அந்த சுனாமி தாக்குதல் வந்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த சுனாமியின் அறிகு றிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் தெரிய ஆரம்பித்தன. ஐந்து சதவீதமாக இருந்த வேலையின்மையின் சதவீதம் பின்பு ஆறைத் தொட்டு தற்போது எட்டை நோக்கி அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் மட்டும் 1,59,000 அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். ரியல் எஸ்டேட், கட்டிடம் கட்டுதல் தொடர்பான தொழில்கள், சேவைத் துறை  போன்றவை இந்த வேலையிழப்பில் பங்களித்துள்ளன. பல அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்குறைப்புக்கான ஆண்டிலக்கை அமல்படுத்தி வந்தன.

american-dream-overஇப்படி வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். 28% அமெரிக்க மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வதாகப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதன்படி ஏறக்குறைய ஒரு கோடி குடும்பங்கள் வறியவர்களாக வாழ்வைக் கழிக்கின்றனர். பொதுவாக எல்லா அமெரிக்கர்களும் தங்கள் மாத வருமானத்தில் மூன்றிலொரு பங்கினை வீட்டு வாடகைக்கோ அல்லது கடனுக்கு வாங்கிய வீட்டிற்கு மாதத் தவணை கட்டுவதற்கோ செலவழிக்கின்றனர். இது போக நாற்பது சதவீதம் மருத்துவ காப்பீட்டிற்குச் செலவழிக்கின்றனர். அமெரிக்காவில் காப்பீடு இல்லாமல் இருந்தால் சிகிச்சையின்றி சாகவேண்டியதுதான்.

அமெரிக்க மக்களின் வருமானம் அத்தனையும் முன்கூட்டியே திட்டமிட்ட இலக்குகளில் முதலாளிகளின் கைக ளுக்கு போய்ச் சேருகிறது. சராசரியாகப் பத்து கடன் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு அமெரிக்கனும் தனது நிகழ்கால வருமானத்தை மட்டுமல்ல எதிர்கால வருமானத்தையும் முன்கூட்டியே செலவழிப்பதற்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். கடனுக்கு மேல் கடன், கடனை வைத்துக் கடன், வீடு, வாகனங்களை வைத்துக் கடன், பத்திரங்களை வைத்துக் கடன், எதிர்காலத்தில் வீட்டின் மதிப்பு உயரும் என்ற மதிப்பீட்டில் பெறப்படும் கடன், மொத்தத்தில் முழு அமெரிக்காவுமே கடனில்தான் உயிர் வாழ்கிறது. ஒரு வயது வந்த அமெரிக்க மாணவன் உயர் கல்வி முடிப்பதற்குக்கூட குறைந்த பட்சம் பத்து இலட்சம் ரூபாய் கடன் தேவைப்படும்.

தற்போதைய திவாலுக்குக் காரணமாகக் கூறப்படும் வீட்டுக் கடன்தான் அமெரிக்க மக்களின் முக்கியமான வாழ்க்கைப் பிரச்சினையாக சமீப ஆண்டுகளில் மாறியிருக்கிறது. சொந்த வீடு வேண்டும் என்ற கனவு தவிர்க்க முடியாத போதையாக ஏற்றப்பட்டு, சராசரி அமெரிக்க நடுத்தர வர்க்கம் இந்த வலையில் சிக்கிக் கொள்கிறது. கடன் கட்ட முடியாமல் போகும் போது வீட்டை, கடன் கொடுத்த அடமான வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். நமது ஊரில் சேட்டிடம் வாகனக்கடன் வாங்கி தவணை கட்டமுடியாத போது வண்டியை சேட்டு எடுத்துக் கொள்வது போலத்தான் இதுவும். இப்படி வீட்டை இழந்தவர்கள் ஐம்பது இலட்சம் பேர் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. 500 வீட்டுக்கொரு வீடு இந்த ஜப்தி நடவடிக்கையில் வருகிறது என்றால் இதன் சமூக பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியும். செங்கலும், மரமும், சிமெண்ட்டும் கொண்ட இந்த அஃறிணைப் பொருளுக்காக பல அமெரிக்கர்கள் தங்களது வாழ்க்கையை முடித்துக்  கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இப்படி வாழ்வின் எல்லாத்துறைகளிலும், நேரங்களிலும் மக்களின் பணத்தை ஒட்டுமொத்தமாய் சுரண்டும் அளவுக்கு முதலாளிகளின் இலாப வெறி தலைவிரித்தாடுகிறது. தற்போதைய திவாலில் கூட மக்கள் அபரிமிதமாய் வட்டி கட்டிய பணம் ஒரு பிரிவு முதலாளிகளின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. அதை வைத்துச் சூதாடிய நிறுவனங்களுள் சில தோற்றதால் திவாலாகியிருக்கின்றன. ஆனால், இந்தச் சூதாட்டத்தில் எத்தனை மக்கள் வாழ்விழந்து, வீடிழந்து, திவாலாகியிருக்கின்றனர் என்ற விவரங்களைப் பற்றிப் பேசுவதற்கு மட்டும் யாரும் தயாராயில்லை. மற்ற சமூகங்களில் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகள் அந்த சமூகத்தின் மனநிலையைத் தீர்மானிக்கும் போது அமெரிக்க சமூகத்தில் மட்டும் பணமும், பணம் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே மக்களின் உளவியல் சீர்கேடுகளை வடிவமைக்கின்றன. காதலும், விவாகரத்தும், உறவும், பிரிவும்,  மகிழ்ச்சியும், வேதனையும், கொலைகளும், தற்கொலைகளும் அங்கே பணத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.

b-karthik-rajaram-465586d1e819அமெரிக்க நிறுவனங்கள் திவாலான மறுநாளே அதற்கான முதல் பலி லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்தேறியது. அக்டோபர் 4, அமெரிக்க வாழ் இந்தியரான 45 வயது கார்த்திக் ராஜாராம் தனது மனைவி, மாமியார், மூன்று மகன்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். சோனி நிறுவனத்திலும், பின்னர் சொந்தமாகத் தொழில் தொடங்கியும் அதன் பிறகு பல மாதங்கள் வேலையின்றியும் இருந்த ராஜாராம் தனது சேமிப்பு அனைத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். பல நிறுவனங்கள் திவாலாகி பங்குச் சந்தை தலை குப்புற கவிழ்ந்ததும் ராஜாராமும் நிலை குலைந்து போனார். மரணத்துக்கு முந்தைய அவரது கடிதங்களில் தான் உடைந்து போனதாகவும், உருகும் பொருளாதாரத்தில் தான் ஏராளமான நிதியை இழந்துபோனதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

திவாலாகிய அமெரிக்காவில் மக்களின் இந்தத் தற்கொலைகள் பல தீவிர வெளிப்பாடுகளில் ஒன்றுதானே தவிர, பல மாதங்களாகவே குறிப்பாக வீடு ஜப்தி செய்யும் நடவடிக்கைகளை எதிர்த்து கலவரங்கள், கைதுகள்,  கொலைகள், தற்கொலைகள் நடந்திருக்கின்றன. வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து வெளியேற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பல வன்முறையுடன்தான் நடந்திருக்கின்றன. இவற்றில் பல ஊடகங்களில் செய்தியாக வருவதில்லை என்பதிலிருந்து அமெரிக்க சமூகம் பல மாதங்களாகவே இந்த பொருளாதார பயங்கரவாதத்துடன்தான் வாழ்ந்திருக்கிறது என்பதை  அறிய முடியும்.

பிப்ரவரி மாதத்தில் கொலார்டோ பகுதியில் ஒரு வீட்டு உரிமையாளர் தனது வீட்டை காலிசெய்யும் நோட்டீசைக் கண்டு தனது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு  முயன்றார்.  நோட்டீசை ஒட்டச் சென்ற போலீசால் அவர் காப்பாற்றப்பட்டாலும், அவரால் வீட்டைக் காப்பாற்ற முடியவில்லை. மார்ச் மாதம் புளோரிடா மாநிலத்தின் ஒசாலா பகுதியைச் சேர்ந்த ரோலண்ட் கோர் தனது வீட்டை அடமான வங்கிக்கு ஒப்படைக்கும் நிர்ப்பந்தத்தால் மனமுடைந்து மனைவியையும், வீட்டு நாயையும் கொன்று விட்டு வீட்டுக்கும் தீ வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஏப்ரல் மாதத்தில் புளோரிடாவின் மரியன் கவுன்டி பகுதியில் ஒரு வீட்டைக் காலி செய்வதற்கு அறிவிப்புடன் சென்ற ரோபர்ட்டை அந்த வீட்டில் வசித்து வந்த பிராங்க் கொனார்டு துப்பாக்கியைக் காட்டி “எனது சொத்தை விட்டு நீ அகலுவதற்கு இரண்டு விநாடிகள் தருகிறேன், இல்லையென்றால் நீ மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கும்” என்று மிரட்டினார். பின்னர் பிராங்க் போலீசால் கைது செய்யப்பட்டார். ஜூன் மாதம் 3ஆம் தேதி நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் காட்ரீனா தற்காலிக வசிப்பிடத்தில் வசித்து வந்த மின்ஷெவ்வை  வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு அதிரடிப்படை வந்து கண்ணீர் புகைக் குண்டு வீசிப் பல மணிநேர நடவடிக்கைக்குப் பிறகு அவர் துப்பாக்கி வைத்திருந்தார் என்பதற்காக சுட்டுக் கொன்றது. ஏதோ அமெரிக்கப் படை ஈராக்கிலும், ஆப்கானிலும்தான்  மக்களைச் சுட்டுக் கொல்கிறது என்பதல்ல, சொந்தநாட்டு மக்களிடமும் அப்படித்தான் நடந்து கொள்கிறது. இதே தேதியில் ஒரேகான் மாநிலத்தின் முல்ட்னோமா கவுன்டி பகுதியில் வசித்து வந்த ஒருவரை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்குச் சென்ற போலீசின் முன் அந்த நபர் துப்பாக்கியால் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரது துப்பாக்கியை பிடுங்கிய போலீசு பின்னர் அவரைக் கைது செய்தது.

இந்த ஆண்டு முழுவதும் வீட்டைக் காலி செய்யும் இந்தப் பயங்கரவாதமே அமெரிக்க மக்களின் மனச்சிதைவுக்கு காரணமாக இருந்தன என்று பல புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கலிபோர்னியாவில் இந்த மன அழுத்தங்களுக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் அளிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று இத்தகைய பணநெருக்கடிகளால் வரும் அழைப்புகள் 200 சதம் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது. சான்பிரான்சிஸ்கோ நகரின் மருத்துவமனை ஒன்றின் உளவியல் மருத்துவர் கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் பொருளாதார நெருக்கடிகளினால் மனநிம்மதியிழந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 69% அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார். இவற்றிலிருந்து முழு அமெரிக்காவுமே இந்தக் கொதி நிலையில் உழன்று கொண்டிருப்பதை அறிய முடியும். அமெரிக்காவை அச்சுறுத்துவதற்கு பின்லாடன் தேவையில்லை என்பதையும் இந்தச் செய்திகள் ஆணித்தரமாகக் கூறுகின்றன.

foreclosureவீட்டை இழக்கப் போகும் இந்த ஜப்தி நடவடிக்கைகளுக்காக மனச்சிதைவு அடையும் எல்லோரும் மருத்துவமனைக்கு வருவதில்லை. ஸ்கேர்மென்டோ கவுன்டியின் காவல்துறை ஷெரிஃபீன் உதவியாளர் மார்க் ஹெபெக்கர் பத்திரிகை ஒன்றில் பேட்டியளித்தபோது இந்த ஆண்டு  வீடு காலி செய்யும் நடவடிக்கைகளுக்குச் செல்லும் போது இரண்டு உரிமையாளர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இவரது சக அலுவலர் ஒருவரின் அனுபவத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒருவர் தனது உடல் வீட்டில் எந்த இடத்தில் இருக்கிறது என்ற குறிப்பை எழுதியிருந்தாராம் என்றால் இதன் கொடூரத்தை யாரும் உணர முடியும். ஹாலிவுட் படங்களில் விதவிதமான வேற்றுக் கிரக “ஏலியன்ஸ்”கள் அமெரிக்கர்களை அச்சுறுத்துவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், எந்தத் திரைப்படமும் மக்களை உண்மையில் வதைக்கும் இந்த முதலாளித்துவ ஏலியன்ஸைப் பற்றி பேசுவதில்லை.

ஜூலை மாதம் புளோரிடாவின் மிடில்பர்க் பகுதியில் ஜார்ஜ் என்பவரின் வீட்டிற்கு ஜப்தி அறிவிப்பை ஒட்டச் சென்றது போலீசு. இதைக் கண்டவுடன் வீட்டின் தலைவர் ஜார்ஜூம் அவரது மனைவி போனி மேக்னமும் கதவை அடைத்துக் கொண்டு நோட்டீசை வாங்க மறுத்தார்கள். எப்படியாவது வீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த  ஜார்ஜ் தனது கையில் துப்பாக்கியிருப்பதாக மிரட்டினார். உண்மையில் அவரது கையில் ஆயுதமில்லை என்பதை அறிந்த போலீசு தங்களை மிரட்டியதாக அவரைக் கைது செய்தது.  அந்த தம்பதியினரின் மகள் ராபின் சொல்கிறார், “இது எங்கள் வீடு, இது மட்டும்தான் எங்கள் வீடு, எனது தந்தை இராணுவத்தில் பணியாற்றியவர், தற்போது உடல்நலமில்லாதவர், அவரைப் போய் உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றுவேன் என்று சொன்னால் அது நியாயமா?”

சந்தைக்கு இலாபம் மட்டும்தான் நியாயம், மற்றெதுவும் அநியாயம்தான். ஈராக்கிலும், ஆப்கானிலும் போரில் ஈடுபட்டுத் திரும்பும் அமெரிக்க வீரர்கள் இரண்டு விதமான மனச்சிதைவை அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒன்று போரினால் வரும் விரக்தியும் இரண்டாவது பொருளாதாரப் பிரச்சினையால் வரும் நிம்மதியின்மையும் காரணமாம். குறைந்த பட்ச அமெரிக்க வாழ்க்கைத் தரத்திற்குத் தேவையான சம்பளம் கூட இல்லாமல்  பல அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர்கள் கடனில் சிக்கி வீடுகளை இழந்து நிர்க்கதியாக வாழ்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது ஆக்கிரமிப்புக்கு உதவும் இராணுவ வீரர்களைக்கூட அமெரிக்கா கைவிடுகிறது என்றால், மற்ற மக்களின் கதி என்ன என்பதைக் கேள்வியின்றி புரிந்து கொள்ளலாம்.

புளோரிடாவின் பெனெல்லா பார்க்கில் வாழும் 44 வயது டல்லாஸ் கார்ட்டர் மனைவியைப் பிரிந்து குழந்தைகளோடு  வாழும் ஒரு ஊனமுற்றவராவார். பார்த்துக் கொண்டிருந்த வேலையை இழந்து, கடனில் மூழ்கி இறுதியில் தனது வீட்டையும் பறிகொடுக்கும் நிலையில் போலீசுக்கு தொலைபேசி மூலம் பேசிய கார்ட்டர் தான் துப்பாக்கி வைத்திருப்பதாகவும், மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். உடன் விரைந்த போலீசு அவரைச் சரணடையுமாறு கேட்டது.  பூட்டிய வீட்டில் துப்பாக்கியுடன் இருந்த கார்ட்டர் அதை மறுத்ததால் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். நமது ஊரில் போராடும் மக்களை போலீசு சுட்டுக் கொல்கிறது. இதுவே  அமெரிக்காவில்  தனித்தனி வீடுகளில் நடக்கிறது.  கடனை அடைக்க முடியாத அமெரிக்க மக்கள் இப்படித்தான் தமது உயிரைக் கொடுத்து விடுதலை அடைகின்றனர். அமெரிக்க வாழ்க்கையில் ஒரு தனிமனிதனது விடுதலை இப்படித்தான் இருக்க முடியும் போல.

foreclosuresஜூலை 23ஆம் தேதி மாசூசெட்ஸ் மாநிலத்தின் டான்டன் பகுதியைச் சேர்ந்த காரலீன் என்ற பெண்மணியின் வீடு ஜப்தி செய்யப்பட்டு ஏலமிட இருக்கிறது. அதற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முன்னர் அந்த அடமான நிறுவனத்திற்கு பேக்ஸ் அனுப்பிய காரலீன் அதில் தனது வீடு ஜப்தி செய்யப்படும் முன்பு தான் இறந்து விடுவேனென குறிப்பிடுகிறார். தனது மறைவுக்கு பிறகு தனது கணவன் மற்றும் மகனுடன் அந்த நிறுவனம் இணக்கமான உறவு வைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடுகிறார் காரலீன்.  காரணம் அவர் மறைவுக்குப் பின் கிடைக்கும் ஆயுள் காப்பீட்டுப் பணத்தை வைத்து தனது கணவன் வீட்டை மீட்கலாம் என்றும் அந்தக் கடிதத்தில் நெஞ்சை உருக்கும் வண்ணம் எழுதும் காரலீன் சொன்னபடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அந்தப் பெண்மணியின் கணவரான ஜான் “எங்களது நிதி விவகாரத்தை எனது மனைவிதான் கவனித்து வந்தாள், வீடு ஜப்தி செய்யப்படப்போவது கூட எனக்குத் தெரியாது, அதற்கான எந்த அடையாளத்தையும் அவள் காட்டிக் கொண்டதில்லை” என்று  கதறி அழுகிறார். இரக்கமற்ற முதலாளித்து சமூகத்தின் முன் ஒரு பேதைப் பெண் வேறு எப்படிப் போராடியிருக்கமுடியும்? வீட்டிற்கு விலையாக தனது உயிரைக் கொடுத்த காரலீன் அமெரிக்காவின் விதிவிலக்கல்ல, இப்படித்தான் பலர் தங்களது கடனுக்கு வழி தேடுகிறார்கள்.

மிக்சிகனின் பே சிட்டியில் வாழும் 56 வயது டேவிட்டும் அவரது மனைவி ஷெரானும் வீட்டை இழந்து தாங்கள் திவாலானவர்கள் என்பதற்காக மனு செய்திருக்கிறார்கள். அந்த மனுவில் அவர்கள் முறைப்படிச் செய்யவேண்டிய நடைமுறைகளை செய்யவில்லை என்பதால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இதனால் மனமுடைந்த டேவிட் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதி விட்டு தனது மனைவியை சமையல் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, வீட்டிற்கு தீவைத்து எரித்த பிறகு  மனைவியின் அருகில் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்கிறார். தங்களைத் திவாலானவர்கள் என்று அறிவித்துக் கொண்டதால் அமெரிக்க நிறுவனங்கள் அடைந்த ஆதாயங்களுக்கு மத்தியில் தன்னை திவாலானவன் என்று அறிவிக்க முடியாத அமெரிக்க குடிமகனின் கோரமான முடிவு இது.

மின்னசோட்டாவின் ரோஸ்விலி பகுதியில் வாழும் சில்வியா சிஃபர்மேன் எனும் பெண்மணி இரண்டு சீனப்பெண் குழந்தைகளை தத்து எடுத்துவளர்க்கிறார். அவர்களுக்கு இப்போது வயது 11. தனது மகள்களின் வளர்ச்சியில் பூரிப்படையும் அந்தத் தாய் அதை இணையத்தில் அவரது வலைப்பூவில் பதிவு செய்கிறார். ஆனால் அமெரிக்காவில் எல்லோரையும் தாக்கிய அந்தச் சுனாமியில் தனது வேலையை இழந்து கடனில் மூழ்கிய சில்வியா தான் பாசமாக வளர்த்த இருமகள்களையும் வேறுவழியின்றி கத்தியால் குத்துகிறார். ஒருமகள் ஆபத்திலிருந்து தப்பித்துவிட மற்றொரு மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்க சித்த பிரமையடைந்த சில்வியா போலீசு காவலில் இருக்கிறார். இனிமேல் தனது மகள்கள் வாழ்வதற்குத் தேவையான எவற்றையும் அளிக்கமுடியாது என்று பரிதவித்த ஒரு தாயின் கதையிது.

லாஸ் ஏஞ்செல்சில் கார்த்திக் ராஜாராம் தனது குடும்பத்தையும் தன்னையும் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு ஒருநாள் முன்னால் அடி போல்க் எனும் 90 வயது மூதாட்டி ஜப்தி செய்யப்பட்ட தனது வீட்டிலிருந்து தன்னை தூக்கி எறிவதை எப்படி நிறுத்துவது என்று யோசித்தார். அவருக்கு இருந்த ஒரே வழி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வதுதான். ஆனாலும் முதுமை காரணமாக சரியாக சுடமுடியாததால் காயமடைந்த அந்தப் பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாடு முழுவதும் இச்சம்பவம் ஊடகங்களால் பேசப்பட்டதால் இந்த வீட்டை அடமானத்திற்கு எடுத்திருந்த பென்னி மா நிறுவனம் ‘பெரிய மனதுடன்’ அந்த வீட்டை அந்த மூதாட்டிக்கே திரும்ப ஒப்படைத்து விட்டது. பலவருடங்களாக வாழ்ந்த வீட்டை விட்டு ஒரு 90 வயது மூதாட்டி தூக்கி எறியப்பட இருக்கிறாள் என்றால் அமெரிக்க சமூகத்தின் இரக்கத்தை என்னவென்று அழைப்பது?

friends_black_white_1090160_lவேலையின்மையும், கடனும், வீட்டை இழப்பதும் அமெரிக்க சமூகத்தைக் கரையான் போல அரித்து வருகின்றன. மற்ற துன்பங்களையெல்லாம் வேறு வழியின்றி சகித்துக் கொள்ளும் அமெரிக்க மக்கள் வீட்டை விட்டுத் துரத்தப்படுவதை மட்டும் பாரதூரமாக நிவாரணமற்ற வலியாக உணருகிறார்கள். இந்தக் கதைகள் அமெரிக்க வாழ்க்கையின் குறுக்குவெட்டுச் சித்திரம் மட்டுமே. மேலும் அமெரிக்க ஊடகங்களால்கூட பேசப்படாத கதைகளும் கூட. ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு அப்புறப்படுத்தும் இந்த அநீதியை எதிர்த்துக் கொலைகளும் தற்கொலைகளும் சடங்காய் நடந்து வருகின்றன. பல இடங்களில் மக்கள் சிறு அமைப்புகளாக அணிதிரண்டு இந்த ஜப்தி நடவடிக்கையை தடுக்க நினைத்தாலும் அவை வெற்றிபெறவில்லை. முதலாளிகளின் உரிமையை நிலை நாட்ட வரும் போலீசு அவர்களைக் கைது செய்து சொத்துடைமையின் அதிகாரத்தை நிலை நாட்டுகிறது.

உலகமயமாக்கத்தால் விவசாயம் சீர்குலைந்து வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் இந்திய விவசாயிகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்கிறார்கள். வாங்கிய கடனைக் கட்ட முடியவில்லை என்ற மான உணர்ச்சியுடன் வாழும் இந்த விவசாயிகளின் பண்பு அமெரிக்க ஏழைகளுக்கும் இருக்கிறது. அங்கே துப்பாக்கிகள் மலிவாகக் கிடைப்பதால் பூச்சி மருந்துக்கு தேவையில்லை. அப்படித்தான் பலரது வாழ்வை வெடிமருந்துகள் தீர்த்து வைக்கின்றன. வீட்டின் மேல் பெற்ற கடனை அடைத்தும், அடைக்கமுடியாத போது வீட்டை விட்டு வெளியேறி அல்லது தனது உயிரைக் கொடுத்தாவது ஆயுள் காப்பீடு மூலம் வாங்கிய கடனை கட்ட நினைக்கும் இந்த மக்களின் நாட்டில்தான் முதலாளிகளின் சூதாட்ட நட்டத்திற்கு அமெரிக்க அரசு அள்ளிக் கொடுக்கிறது. நெஞ்சை உருக்கும் இந்தக் கதைகளை கேள்விப் படும்போது அமெரிக்கா சொர்க்கபுரி அல்ல என்பது எல்லோருக்கும் புரியவரும். ஏழை நாடுகளை சுரண்டிக்கொழுக்கும் அமெரிக்க முதலாளிகள் சொந்த நாட்டு மக்களையும் விட்டு வைப்பதில்லை என்பதிலிருந்து உலகமயக் கொள்கை என்பது மூன்றாம் உலக நாடுகளை மட்டுமல்ல அமெரிக்காவையும் அரித்துத் தின்னும் விஷ ஜந்து என்பதை ஏற்றுக் கொள்வதில் இன்னும் சந்தேகம் இருக்கிறதா?

_____________________________________________

ுதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

_____________________________________________

  1. முதலாளித்துவத்தின் பலவீனமான கண்ணிகள் முதலில் அறுபடும்
    — பேராசான்.

  2. அதனால இப்போ நீங்க என்ன சொல்லவாறிங்கென்னா மைக்கேல்சாக்சன் ரேன்ஞ்க்கு பிரபுதேவால ஆடமுடியாது.அப்படின்னுசொல்றிங்களா?உலகத்திலே இல்லாத அளவுக்கு எப்பிஐ,சிஐஏ,பிபிஐ,மபிஐ,வெவ்சிஐ,போன்ற கண்காணிப்பு அளவீடுகள் உலகப்பெரிய குடியாட்சியில் மக்களுக்கும்,உற்பத்திப்பொருளுக்கும் ந்ம்மூரைப்போன்று ஐஎசை முத்திரைவைத்துள்ளார்கள் அப்படித்தானே?வெளங்கும் சனநாயகம்.மேலும் நம்மூரைப்போன்று லட்சுமிட்டாய்,கும்பானி,பர்லா,சேட்,லால்,டாட்டா,போன்றகோட்டிக்காரன் போல கேட்சு,செனெட்,செனட்டர்சு,புஜ்,புஜ்ஜர்ச்,கில்,கில்லர்சு,வாள்ச் போன்றபெருங்கோட்டிகாரர்களை அரசு வளர்த்துள்ளது?அதானே? மே1இல்-18பேரைக்கொன்று அதைபதப்படுத்தி வேலையாள் விழாவாக நடத்திய நாடகநயவஞசகன்???யார்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க