முகப்புவாழ்க்கைஅனுபவம்அழகு - சில குறிப்புக்கள் !

அழகு – சில குறிப்புக்கள் !

-

southern_beauty_preview_issue_coverநிலைக் கண்ணாடி முன் நின்று கொண்டு தனது முக அமைப்பின் ஒழுங்குகள் குறித்து கவலைப்படுவதும், அதை குறைந்த பட்சம் முடி, முகப்பூச்சு மூலம் செப்பனிடுவதற்காக மிகுந்த பிரயத்தனம் செய்வதும் விடலைப் பருவத்தின் தவிர்க்க இயலாத பழக்கம். பிறகு திருமணம், குழந்தைகள் என்று வாழ்க்கையில் நிலை பெற்ற பிறகு இவை மறந்து போனாலும் தனது அழகின் தரம் பற்றியும் தனக்கு, கிடைக்காத வாழ்க்கைத் துணையின் அழகு பற்றியும் எல்லோருக்கும் ஒரு ஏக்கமும், எதிர்பார்ப்பும் இருக்கும்.

எது அழகு? எதெல்லாம் அழகின்மையோ அவற்றைத் தவிர மற்றெதுவும் அழகுதான். எவையெல்லாம் அழகின்மைகள்? அவற்றை ஊடகங்களும், சினிமா உலகமும், அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும் வடிவமைத்து கற்றுத் தருகின்றன. இள வயதில் விழும் வழுக்கை, மாற்ற முடியாத கருப்புநிறம், சீரற்றிருக்கும் பல்வரிசை, உட்கார்ந்து வேலைசெய்பவருக்கு வரும் தொந்தி, பெண் மார்பகத்தின் சிறிய அளவு, குறைய மறுக்கும் பின்னழகு, படியாத முடி, சுருளாத கூந்தல், வளராத கேசம், இள நரை, விரியாத ஆண் மார்பு, சதையற்ற புஜங்கள், கருப்பு வளையத்தால் சூழப்பட்டிருக்கும் இமைகள், வயிற்றுப் பிரச்சினைகளால் வரும் வாய் நாற்றம், கட்டுப்படுத்த முடியாத வியர்வை மணம்,… இவையெல்லாம் வர்த்தக மயமாகும் கல்வி, வேலையின்மை போன்ற இளையோரின் முக்கியமான பிரச்சினைகளை முந்திச் செல்லும் அளவுக்கு செல்வாக்கு செலுத்துகின்றன.

சீர்வரிசையாக அணிவகுக்கும் இந்த அழகின்மைகள் இருந்தால் உங்கள் வாழ்க்கை விரும்பத்தக்கதாக இருக்காது என்பதை ஊடகங்கள் ஓயாமல் பயமுறுத்துகின்றன. தொடர்ந்து ஒதப்படும் அழகின்மையின் அபாயங்கள் மனதின் ஆழத்தில் உறுதியாக பதிந்து விடுகின்றன. தனக்கு கிடைக்காத நட்பு, காதல், திருமணம், தாம்பத்தியம் முதலானவற்றுக்கு தன்னிடம் இருக்கும் அழகின்மையே காரணமென்று ஒரு தாழ்வு மனப்பான்மை அச்சுறுத்தும் வண்ணம் தலை தூக்குகிறது. இந்த தாழ்ந்து போதல் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டிய வாழ்க்கையை சோர்வுடன் இயங்கவைக்கிறது. அழகின்மையின் இலக்கணங்கள் ஆளுமையின் உருவாக்கத்திற்குள் ஊடுறுவதிலும் தவறுவதில்லை. தன்னுடைய உருவத்தின் போதாமையால் இதற்குமேல் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்று சாதிக்க வேண்டிய வயதில் விடலைப்பருவம் சுருக்கிக் கொள்கிறது.

பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் தனித்துவம் இல்லாமல் வாழவேண்டிய ஒரு பெண்ணுக்கு அழகின் வாய்ப்பாடங்கள் அத்துப்படியாகும் அளவுக்கு அது ஒரு தவிர்க்க இயலாத பிரச்சினை. வயதுக்கு வந்தது முதல் வளைகாப்பு வரை அவள் தன்னழகை மிகச்சிறப்பாக  பேணிக் காக்கும் கட்டாயத்திற்கு ஆளாகிறாள். அவளது வாழ்வின் பெரும்பகுதியை அலங்காரத்திற்கு அர்ப்பணிப்பது நிர்ப்பந்தமாக இருக்கிறது. அழகின் இலக்கணத்தில் ஒன்று குறைந்தால் கூட பலவற்றை இழப்பதற்கு அவள் தயாராக இருக்க வேண்டும். அழகு குறித்த அச்சமே ஒரு பெண்ணின் வாழ்க்கை குறித்த அச்சமாக மாறுகிறது.

குழந்தையாக இருக்கும்போது காது குத்துதல், பெயர் சூட்டும் வைபவம், வயதுக்கு வந்ததும் பூப்பெய்தும் சடங்கு, நிச்சயதார்த்தம், தாலிக்கு பொன்னுருக்கல், வளைகாப்பு , கணவன் இறந்தால் அலங்காரங்களைத் துறக்கும் விதவைச் சடங்கு, என கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெண்ணின் அடிமைத் தனத்தை அறிவிக்கும் விசேசங்கள் எல்லாவற்றிலும் அழகு நிழல் போல பின்தொடர்ந்து மிரட்டுகிறது. ஒரு ஆண் எத்தனை அழுக்காக இருந்தாலும் ஒரு பெண் குளித்து முடித்து பூச்சூடி சுத்தமாக இருக்க வேண்டும். அவள் தாலியும், நெற்றியின் உச்சியில் வைக்கப்படும் பொட்டும் அலங்காரத்திற்கு மட்டுமல்ல அவள் கன்னி கழிந்தவள் என்பதை ஆண்களுக்கு தெரிவிக்கவும் செய்கின்றன. அவளது காலழகை வெளிப்படுத்துவதற்காக என்று போடப்படும் கால் கொலுசு உண்மையில் அவளது நடமாட்டத்தை கண்காணிப்பதற்கென்றே பண்டைய காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. எத்தனை அழகாய் இருந்தாலும் ஊடுறுவும் ஆண்களின் கண்களைத் தடுப்பதற்காகவே அவள் முசுலீமாக இருந்தால் பர்தா அணியவேண்டும். இல்லத்து நிகழ்ச்சிகள் அனைத்திலும் கனக்கும் பட்டை ஜொலிக்கும் வண்ணம் அவள் உடுத்தியே ஆக வேண்டும்.

m7_bottle_adகல்லூரிக் காலங்களில் பெண்களைக் கவரும் அளவுக்கு அழகைக் கைப்பற்றுவது ஆணுக்கு அன்றாடக் கடமையாகிறது. அழகில்லாத ஆண்களை எந்தப் பெண்ணும் ஏறெடுத்து பார்க்கமாட்டாள் என்பதே அந்த இளைஞனை பயமுறுத்தும் யதார்த்தம். அவன் எதிர்காலத்தில் என்னவாக ஆகப்போகிறான் என்பதை திசை திருப்பும் மைல் கற்களும் இந்த அழகுக் கால அத்தியாத்தில் இடம் பெறுகின்றன. புதிய உடை முடி பாணிகளை உடமையாக்கிக் கொள்வதற்கு அவசரப்படும் இந்த இளைஞர்கள் அவை பொருளாதார ரீதியாக கைகூடாமல் போனால் கொலை வெறி கொள்ளுகிறார்கள். தன் அழகுக்கு செலவிட மறுக்கும் பெற்றோரை அவர்கள் ஒருபோதும் மன்னிப்பதில்லை. தந்தை தனயன் முரண்பாட்டில் அழகிற்கும் ஒரு பிராதான பாத்திரம் உண்டு.

அழகிற்காக செலவிடப்படும் தொகை வேண்டுமானால் வேறுபடலாமே ஒழிய அழகு குறித்த கவலைக்கும் ஒதுக்கீட்டிற்கும் வர்க்க் வேறுபாடு இல்லை. ஏற்றுமதி நிறுவனத்தில் ஒரிரு ஆயிரங்களுக்கு வேலை செய்யும் பெண்ணுக்கும், மென்பொருள் துறையில் பல ஆயிரங்களுக்கு வேலை செய்யும் பெண்ணுக்கும் அவர்களது வருமானத்தில் கணிசமான அளவை அழகின் வேலைப்பாடுகளுக்காக ஒதுக்குவது இயல்பானது. நடுத்தர் வர்க்க பெண்கள் அழகு நிலையம் செல்வது இப்போது முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள் நாளொன்றுக்கு ஒரு ஆடை வீதம் பல  ஜோடிகளை அடுக்கிவைப்பது கட்டாயம். ஆடைக்கேற்ற அலங்காரப் பொருட்கள், பை ,செருப்பு, … அவளது கைப்பையை நிரப்பும் முகப்பூச்சு பொருட்கள் … முடிவில்லாமல் நீளும் இந்தப் பட்டியலை அவர்கள் அன்றாடம் பராமரிக்கவேண்டும்.

இத்தகைய செயற்கை அழகு சாதனப் பொருட்களால் உலகின் நுகர்வு பொருள் சந்தை பல டிரில்லியன் வருமானத்தை பெற்றுத் தருகிறது என்றால் இதன் மதிப்பை யாரும் அறியலாம். இதற்காக மந்திரம் போல தினசரி ஓதப்படும் விளம்பரங்களின் மதிப்பும் பல மில்லியன்களைத் தாண்டும். அழகு சாதனப் பொருட்களுக்கு மட்டுமல்ல வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் குடும்பத்தோடு செல்லும் சுற்றுலா வரை எல்லா விளம்பரங்களுக்கும் அழகான மனிதர்கள் குறிப்பாக பெண்கள் பயன்படுகிறார்கள். அழகின்மையைச் சொல்லி அச்சுறுத்தும் விளம்பரங்கள் அழகான மாந்தரை முன்னிறுருத்துவதற்கும் தவறுவதில்லை. உலக அழகி ஐஸ்வர்யா ராய் முதல் உள்ளூர் அழகி திரிஷா வரை பாலிவுட்டின் சல்மான்கான் முதல் கோலிவுட்டின் சூர்யா வரை  எது அழகு என்பதை நொடிதோறும் மாயத்திரையின் பிம்பங்களாக வந்து நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராயை ஆராய்ந்தால் சாமுத்ரிகா இலட்சணத்தை தனியாக படிக்க வேண்டியதில்லை. முகம், கன்னம், கண்கள், காது, உதடு, உடலழகு அனைத்தும் மிகச்சரியான விதத்தில் அச்சில் வார்த்தது போல இருக்கும். உண்மையிலேயே இப்படி அச்சில் வார்க்கப்பட்ட பெண் சிறுமி பொம்மைதான் அமெரிக்காவின் பார்பி டால். குழந்தைகளுக்குக்கூட அழகான பெண்ணின் இலக்கணம் இந்த பார்பி டாலின் மூலமாக பசுமரத்தாணி போல பதிந்து விடுகிறது. குழந்தைகள் விளையாடுவதற்காக இலட்சக்கணக்கான பார்பிக்களை உற்பத்தி செய்யமுடியும். ஆனால் எல்லோரும் ஐஸ்வர்யா ராய், சல்மான் கான் போல மாறுவதோ இல்லை அவர்களைப் போல உள்ளவர்களே வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று விரும்புவதோ சாத்தியாமா என்ன?

கானகத்தின் பசும்புல் தரையில் பாய்ந்தோடும் ஒரு வரிக்குதிரையின் வரிவடிவம் மற்றொரு குதிரையைப் போல இருக்காது என்பதுதானே எல்லா உயிர்களுக்கும் பொருந்தும் உண்மை. ஒருவனுக்கு இருக்கும் கைரேகை போல மற்றொருவனுக்கு இருக்காது என்பது உண்மையாகும் பட்சத்தில் மனிதர்கள் எல்லோரும் உடலளில் வேறுபட்டுத்தானே இருப்பார்கள்? வேறுபடுவதுதான் மனிதனின் உயிரியல் சார்ந்த உண்மையான அழகே அன்றி ஒரே மாதிரியான வார்ப்பு அல்ல. ஆனால் அழகின் வியாபாரிகள் இந்த உயிரியல் உண்மையை புனைவுகளின் மூலம் பொய்யாக்கி விளம்பரங்களின் மூலம் சிந்தையில் ஏற்றுகிறார்கள்.

ஏல்லோரையும் ஓரே மாதிரி போல மாற்றும் தொழில் நுட்பத்தை வழங்கும் குளோனிங் எதிர்காலத்தில் நிறைவேறி விடுமென்றாலும் உலக அழகிகளைப் போல குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது ஒன்றும் மலிவாகிவிடப் போவதில்லை. அப்படியே மலிவாகிப் போனாலும் அது மட்டும் அழகின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுமா என்ன? உயிரியல் ஜீன்களால் கருவில் பதிக்கப்படும் ஒரு மனித உயிரின் உடல் வடிவை மட்டும் வைத்தா அந்த மனிதனை மதிக்கிறோம்?

வயிற்றுப் போக்கால் அவதிப்படும் கணவனின் வாய் நாறுகிறது என்பதாலும், இரத்தப் போக்கால் பலமிழக்கும் மனைவியிடம் உடல் மணக்கவில்லை என்றால் அவர்களை வெறுக்க முடியுமா? முடக்கு வாதத்தால் முடங்கிப் போகும் தந்தை காலைக்கடன் முடிப்பதற்கு உதுவுவதில் அறுவறுப்பு கொள்ள முடியுமா? இளநரையும், வழுக்கையும் கொண்டவர் என்பதால் ஒரு நல்ல உள்ளம் கொண்ட இளைஞனின் திருமணம் தள்ளிப் போவது நியாயம்தானா?

farmer_ploughsஒரு மனிதனின் அழகு அவனுடைய தோற்றத்தில் இல்லை. அவனுடைய நடத்தைதான் அவனுடைய அழகின் வெளிப்புலமாக இருக்கிறது. தோற்றத்திற்கும், நடத்தைக்குமான முரண்பாட்டில் நாம் ஒருவரின் அழகை வைத்தா மதிப்பிடுகிறோம்? ஒரு நாவலோ, திரைப்படமோ முதலில் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவது அதன் உள்ளடக்கம்தான். வடிவம் என்ற அலங்காரம் இரண்டாம் பட்சமானதுதான். இலக்கியத்திற்கு பொருந்தும் இந்த நியாயம் வாழ்க்கைக்கும் பொருந்துமல்லவா? ஆனால் நடப்பு உலகம் பெரும்பாலும் அப்படி இயங்குவது இல்லை. கருப்புத் தமிழச்சி என்னதான் அழகாக ஆங்கிலம் பேசினாலும் அவள் ஒரு போதும் விமானப் பணிப்பெண்ணாக வரமுடியாது. ஹீரோக்களின் எதிர்மறைத் தோற்றத்தில் இருப்பவர்களே காமடியன்களாக வர முடியும்.  வேட்டி சட்டையோடு யதாதர்த்தமாக வரும் ஒரு தமிழனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் இடம் கிடையாது. நவீன அழகியல் கோரும் அம்சங்கள் இல்லாத பெண்கள் என்னதான் அழகாக தமிழீசில் பேசினாலும் தொகுப்பாளினியாக பணியாற்ற முடியாது. கிராமத்துத் தோற்றம், நடத்தையுடன் வரும் நாட்டுப்புறத்து மனிதர்களை அதிகார வர்க்கம் அலட்சியமாக நடத்தும்.

இப்படி சமூகம் அழகை வைத்துத்தான் பாகுபாடு காட்டி நடத்துகிறது என்றாலும் சமூக வாழ்க்கையில் இதை தமது ஆளுமையால் வென்றவர்களும் இருக்கிறார்கள். சுயநலமின்றி மற்றவருக்காக கவலைப்படுவதும்,  அதற்காக தமது வாழ்க்கையை செலவிடுவதற்கேற்ப ஒரு மனிதனின் அழகு அவனது தோற்றத்தை மீறி ஒளிர்கிறது. மக்கள் நிபந்தனையில்லாமல் நேசிக்கும் ஒரு மனிதன் மற்றவர்களால் விரும்பப்படக்கூடியவனாகவும் இருப்பான். தான் செய்யும் தொழிலை இன்முகத்துடன், மற்றவர்களுக்கு பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு என்ற மரியாதையுடன் செய்பவனை நாடி மக்கள் கூட்டம் நிச்சயம் மொய்க்கும். இவர்களெல்லாம் தலைவர்களாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை.

மாநகரப் பேருந்தின் அந்த நடத்துநர் எப்போதும் தூய தமழில்தான் பேசுவார். அவரது அலுவல் நிமித்தமாக பயணிகளிடன் பேசுவதையும், நிறுத்தங்களை அறிவிப்பதிலும், மாணவர்களின் சேட்டையை நல்ல தமழில் நாசுக்காக கட்டுப்படுத்துவதும் அவரது பேருந்தில்தான் பயணிக்க வேண்டுமென்று விரும்பி பலரும் செல்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன். பயணம் முழுவதும் அவரது வருணணை கேட்டுக்கொண்டே இருக்கும். கூட்டத்தில் பிதுங்கிச் செல்லும் நகரப்பேருந்தின் நரகமான அனுவத்தைக் கூட ஒரு நடத்துநர் தனது நடத்தையால் இனிமையாக மாற்றுகிறார் என்றால் அவர் அழகனாவரில்லையா?

_42646319_india2_afp4161அரசு மருத்துவராக பணியாற்றும் அவரது வீட்டு கிளினிக்கில் எப்போதும் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். நடுத்தர வர்க்கமும், ஏழைகளும் என எல்லாப்பிரிவினரும் அவரிடம் வருவார்கள். நோயைப் பற்றி தமிழில் விளக்கி, மருந்துகளின் ஆங்கிலப் பெயருக்கு மத்தியில் அதன் பயன்பாட்டை தமிழில் எழுதி, என்ன சந்தேகம் கேட்டாலும் பொறுமையுடன் விளக்கி எத்தனை பேர் வந்தாலும் சலிக்காமல் பணியாற்றுவார். அறுவை சிகிச்சை செய்யவேண்டி வந்தால், பணமில்லாத மக்களை அரசு மருத்துவமனைகளுக்கு வருமாறு கூறுவதோடு மட்டுமின்றி வருபவர்களக்கு உதவவும் செய்வார். பல ஏழைகளுக்கு ஒரு முறை மட்டும் கட்டணம் வாங்கிக் கொண்டோ இல்லை இலவசமாகவோ மருத்துவம் பார்ப்பார். வார இறுதி நாட்களில் மட்டும் தனது சொந்த கிராமத்திற்குச் சென்று இன்றுவரை விடுபடாமல் வைத்தியம் பார்க்கிறார். இல்லாமையினால் அரசு மருத்துவ மனைக்கு வரும் மக்களை தனது தனியார் மருத்துவமனைக்கு வரவழைத்து கொள்ளையடிக்கும் மருத்துவர்கள் மத்தியில் இந்த மருத்துவரின் அழகுகிற்கு ஈடு இணையேது?

பிரபலமான அந்த உளவியல் மருத்துவர்  ஒரு மக்கள் மருத்துவர். இத்தகைய சிறப்பு மருத்துவர்களை சந்திப்பதற்கான நேரத்தை தொலைபேசியில் பதிவு செய்யும் இந்நாளில் அப்படி ஒரு வசதியை பணக்காரர்களுக்கு அளிக்காமல் நேரில் வருபவர்கள் எல்லோரையும் எத்தனை நேரமானாலும் இவர் சந்திப்பார். வசதியில்லாவர்களுக்கு குறைந்த கட்டணோமோ அல்லது இலவசமாகவோ சிகிச்சை அளிக்கும் இவர், பல ஏழைகளுக்கு தனக்கு விற்பனைப் பிரதிநிதி மூலம் வரும் மருந்துகளைக் கொடுப்பதையும் பார்த்திருக்கிறேன். நாளொன்றுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளின் சோகக் கதைகளைக் கேட்டு இன்முகத்துடன் பணியாற்றும் இவரிடம் சிகிச்சை பெறுவதற்கென்றே வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பலர் வருவதைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். இந்தப் பின்புலத்தில், பார்த்தவுடன் உள்ளத்தை அள்ளிக் கொள்ளும் இவரும் அழகானவரில்லையா?

ஏன் நமது பதிவுலகம் அறிந்த புரூனோவையும் எடுத்துக் கொள்வோம். மற்ற மருத்துவர்களெல்லாம் தமது நேரத்தை ரூபாய்களில் அள்ளிக் கொண்டிருக்கும் போது இவர் மட்டும் தனது ஓய்வு நேரத்தை மருத்துவம் பற்றிய அறியாமையைப் போக்குவதற்காக வலைப்பூவில் ஒதுக்குகிறார் என்றால் இவரைப் பார்க்காமலேயே நாம் நேசிக்கவில்லையா? சொல்லப்போனால் இதற்குப் பிறகுதான் அவரை நேரில் சந்திக்க வேண்டுமென ஆர்வம் கூடுவது உண்மையில்லையா?

கேரளாவிலிருந்து வந்திருக்கும் அந்த இளமையான டீ மாஸ்டரும் எனது அழகுப் பட்டியலில் உண்டு. நாளோன்றுக்கு பனிரெண்டு மணிநேரத்திற்கு மேலாக நின்றவாரே நூற்றுக் கணக்கான தேநீர் போடும் அவர் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் என்னைப் போன்ற தேநீர்ப் பிரியர்களைப் பார்த்ததும் தூள் மாற்றி, பாலை ஆற்றிவிட்டு மணத்துடன் எரிச்சல் காட்டாத சிரித்த முகத்துடன் தேநீர் கொடுப்பார். நுரை பொங்கும் பாலுக்குப் போட்டியாக வியர்வை பொங்கும் இந்த மனிதர்கள் குறைவான சம்பளத்திலும் தனது தொழிலை அப்படி ஒரு ஈடுபாட்டுடன் செய்யும் அழகை நீங்களும் பல இடத்தில் கண்டிருப்பீர்கள்தானே?

ரசியப் புரட்சி கண்ட லெனினை வழுக்கையாக பார்ப்பதுதானே அழகு? மரணப் படுக்கையில் இருக்கும் போதும் சோவியத் யூனியனின் விவசாயிகள் பிரச்சினைக்காக கட்டுரை எழுத முனையும் லெனினை நோய் காரணமாக பணியாற்றக் கூடாது என்று மருத்தவர்கள் தடை செய்கின்றனர். அப்போது ஒரு மருத்துவர் கூறுகிறார் ” வேலை செய்வதுதான் தோழர் லெனினை பிழைக்க வைப்பதற்கான மருந்து. அதை தடை செய்தால் அவர் இறந்து விடுவார்”. தனது பள்ளி இறுதி நாட்களில் எழுதிய கட்டுரையொன்றில் தனது எதிர்காலத்தை மனித குலத்திற்கு பணியாற்றும் வேலையில் கழிப்பதுதான் விருப்பமென்கிறார் காரல் மார்க்ஸ். ஏழ்மையின் காரணமாக குழந்தைகளுக்கு தேவையான பாலைச் சுரப்பதற்குக் கூட தனது மார்பகம் மறுக்கும் நிலையிலும் பாரிஸ் கம்யூனின் வெற்றியைத் தங்கள் குடும்பம் கொண்டாடியதை நண்பர் ஒருவருக்கு கடிதத்தின் மூலம் தெரிவிக்கிறார் ஜென்னி மார்க்ஸ். இந்த தம்பதியினரிடம் வெளிப்படும் காதலும் அழகும் நமக்கு பொறாமையை ஏற்படுத்தவில்லையா?

மார்க்சின் மறைவுக்குப் பிறகு சர்வதேச கம்யூனிச இயக்க வேலைகளை தனியாக பார்க்கும் ஏங்கெல்ஸ் தனது முதுமையின் காரணமாக மார்க்சின் மூலதனம் நூலை செப்பனிட்டு வெளியிடும் பணி தள்ளிப் போவது குறித்து வருத்தப்படுகிறார். இதற்காக தனது ஆய்வுப்பணிகளைக் கைவிடுகிறார். இந்த வெண்தாடிக் கிழவனது அழகை தரிசப்பதற்கு உண்மையில் நாம் அருகதை உள்ளவர்கள்தானா? விதிக்கப்பட்டிருக்கும் தூக்குத்தண்டனையால் தான் தனது பலவீனங்களைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பில்லாமல் மரித்துப்போகும் பாக்கியம் பெற்றவன் என்று மரணத்தின் அருகிலும் தன்னைப் பற்றிய விமரிசனத்துடன் எழுதும் 23 வயது பகத்சிங்கின் புகைப்படத்தைப் பார்க்கும் போது நாம் பெறும் உற்சாகத்திற்கு அளவேது? கியூபாவின் வெளியுறவு அமைச்சராக இருந்தாலும் தென்னமெரிக்கா முழுவதும் புரட்சி நடைபெற வேண்டுமென பொலியாவின் காடுகளில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சே குவேராவின் புகைப்படம்  எத்தனை இளைஞர்களுக்கு புரட்சியின் துடிப்பை அள்ளித் தந்தவாறு இருக்கிறது? 90வயதிலும் தமிழனுக்கு சொரணை பற்றிய விழப்புணர்வை எழுப்புவதற்காக மூத்திரப் பையுடன் ஊர் ஊராக அலைந்தாரே பெரியார், அந்தத் தொண்டுக்கிழவனின் அழகிற்கு முன்னால் நாம் எல்லாம் எம்மாத்திரம்?

ஆம். அழகு என்பது நிலைக்கண்ணாடியில் பிரதிபலிப்பதல்ல. மற்றவர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்ளும் மனிதர்கள்தான் இதுவரை மனித சமூகம் கண்ட பேரழகு மனிதர்கள். நீங்கள் அழகுள்ளவரா என்பதை அறிந்து கொள்ள உங்கள் உருவத்தை சமூகக் கண்ணாடியில் பார்ப்பதற்கு முயலுங்கள். நம் அழகைத் தெரிந்து கொள்வதற்கு இதுதான் சிறந்த வழி !

 

 1. அருமையான கட்டுரை. மனித வாழ்கையை அழகாகக் கற்றுக்கொள்ள மறுக்கும் போலித்தனத்தின் மேல் சாட்டை அடி. சக மனிதனை அருவெறுப்பாக பார்ப்பதே அழகு, என்ற போலி உள்ளடகத்தை இது தோல் உரிக்கின்றது. வாழ்த்துகள் தோழரே.

  தோழமையுடன்
  பி.இரயாகரன்

 2. இன்று தான் படிப்பவர் அனைவரும் மறுப்பேதும் இல்லாமல் ஒத்துக்கொள்ளும் பதிவை தந்துள்ளார் வினவு.

 3. \\ஏன் நமது பதிவுலகம் அறிந்த புரூனோவையும் எடுத்துக் கொள்வோம். மற்ற மருத்துவர்களெல்லாம் தமது நேரத்தை ரூபாய்களில் அள்ளிக் கொண்டிருக்கும் போது இவர் மட்டும் தனது ஓய்வு நேரத்தை மருத்துவம் பற்றிய அறியாமையைப் போக்குவதற்காக வலைப்பூவில் ஒதுக்குகிறார் என்றால் இவரைப் பார்க்காமலேயே நாம் நேசிக்கவில்லையா? \\

  100% உண்மை.

 4. மிகச் சிறப்பான பதிவு.

  இதற்கு வேறொரு கோணமும் இருக்கலாமென்று தோன்றுகிறது.. அழகைத் தேடி ஓடுவதில் ஆண்/பெண் இருவரும் முனைப்பாயிருப்பது உண்மைதான். அழகு/தோற்றம் குறித்த என்னம் எல்லாக் காலத்திலும் பிரதானமாகவே இருந்திருக்கும். ஆனால் வெளிப்படும் விதம் இப்போது மாறியிருக்கிறது. முன்பு ஆரோக்கியமே அழகு என்பதாயிருந்த நிலை இப்போது வெளித்தோற்றமே பிரதானம் என்கிற நிலைக்கு இறங்கியிருக்கிறது. ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சிகள் செய்தது போய் 6 பேக் ஆப்ஸுக்காகவே உடற்பயிற்சி என்பதாகவும் மாறியிருக்கிறது. முந்தைய காலமாகட்டும் இப்போதைய காலமாகட்டும் தோற்றத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மட்டும் மாற வில்லை. எப்படிப்பட்ட தோற்றம் என்பதில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம்.

  மிருகங்களில் கூடுவதற்காக பெண் ஆணைத் தேர்ந்தெடுப்பதில் பிரதான பாத்திரம் வகிப்பது ஆண் மிருகத்தின் உடல் வலு. ஆண் பெண் மிருகத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் இதே காரணி தான். இதற்கு தமது சந்ததியை கடத்திச் செல்வது.. போன்ற பல காரணங்கள் இருக்கிறது.. பரிணாம வளர்ச்சியில் இதே உள்ளுணர்வைத்தான் மனிதனும் தன்னொடு எடுத்து வந்திருக்க வேண்டும். எனவே அழகு / தோற்றம் குறித்த கவலைகள் ஒரு எல்லையை கடந்து செல்லாத வரையில் ஒன்றும் பிரச்சினையில்லை என்றே நினைக்கிறேன்.

  ஆனால் அந்த எல்லை எது? அழகு என்று தீர்மானிக்கும் காரணி என்ன? தீர்மானிப்பது யார்? என்பது தான் பிரச்சினை. அதனை கட்டுரை மிகச் சிறப்பாக சுட்டிக் காட்டுகிறது.

 5. அருமையான பதிவு வினவு!!

  மனித வாழ்க்கையில் உள்ள போலித்தனத்தை சுட்டிக்காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!!!

 6. அழகு அழகு
  ஆயிரமழகு புரட்சியழகு
  அதனினும் அழகு
  மக்கட்படை….

  அன்று புரியவைப்போம்
  நீங்கள் அழகுகள் அல்ல
  இன்னாட்டின் அசிங்கங்கள் என்று.

  மிகச்சிறப்பான
  பதிவு.

  அதிகாரங்கள்
  ஒழிக்கப்படும்
  போது நிச்சயம்
  அழகுகளும்
  அழிக்கப்பட்டிருக்கும்.

  http://kalagam-therebellion.blogspot.com/

 7. //நீங்கள் அழகுள்ளவரா என்பதை அறிந்து கொள்ள உங்கள் உருவத்தை சமூகக் கண்ணாடியில் பார்ப்பதற்கு முயலுங்கள். நம் அழகைத் தெரிந்து கொள்வதற்கு இதுதான் சிறந்த வழி !//

  முழுப்பதிவும் சாறாக இங்கே!

  வினவு, நம் வாசிப்பின் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறது. நன்றி.

 8. நட்சத்திர வார வாழ்த்துக்கள்…. அழகு குறித்த பதிவு அருமை… வாழ்த்துக்கள்

 9. தெளிவாக எழுதப்பட்டு உள்ள கட்டுரை… உங்களுக்கு நன்றிகள் பல தோழர்.

  வெள்ளை தோலும், முகப்பரு அற்ற முகமும் இன்னும் இதை போன்ற பலதும் இந்த சமூகத்தால் திணிக்கப்பட்ட அழகியல் கோட்பாடுகள் என்பது மிக தெளிவாய் விளங்குகிறது.. அதே வேளையில் ஒரு சில கருத்துக்களை இங்கு முன் வைக்க விரும்புகிறேன்..

  நண்பர் குமார் தனது மறுமொழியில் குறிப்பிட்டது போல், அடுத்த பாலினத்தை கவர்வதற்காக ஆணோ / பெண்ணோ தன்னை அடுத்தவர் பார்வைக்கு அழகாக காட்டுவது என்பது நம்முடைய மரபணுவின் ஒரு அங்கமாகக் கூட இருக்கலாம்..
  ஒரு சில பழங்குடி மக்களிடம் நீளமான கழுத்து என்பது அழகு எனவும் மற்றும் வேறு சில பழங்குடியினரிடம் சிறிய கால் பாதங்கள் அழகு எனவும் கருதப்படுகின்றது.. அதற்காக அவர்கள் தனது உடலை வருத்திக் கொள்வதும் நடக்கிறது. ஆனால் மேற்கூறிய இவைகள் அந்த சமூகத்தில் பெண்களுக்கு மட்டுமே உரிய அழகு சின்னங்களாக உள்ளது..

  ஆனால் நவீன நாகரீகத்தின் தாக்கம் படியாத ஆதிவாசி மக்கள் இந்த அழகியல் மயக்கங்கள் இல்லாமல் வாழ்வதும், அந்த சமூகத்தில் பெண் அடிமைத்தனம் இல்லாமல் இருப்பதையும்.. நான் கேள்விப்பட்டு உள்ளேன்..

  எனவே இந்த அழகியல் மயக்கங்களை பரிமாண வளர்ச்சியின் உள்ளடக்கம் என்றும் அதன் எல்லை தற்பொழுது அளவுக்கு அதிகமாக நீண்டு விட்டதுதான் பிரச்சினை என்றும் நாம் முற்றிலும் ஒதுக்கி விட முடியாது..

  இதைப் பற்றி சமூக, மருத்துவ, உளவியல் நிபுணர்கள் கருத்து சொன்னால் உதவியாக இருக்கும்..

 10. ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் குடும்பப் பெண்கள் திருமண விழாவுக்கு செல்வதற்கென்று விலை உயர்ந்த புதிய ஆடை வாங்கி அணிந்து செல்வார்கள். ஆனால் அந்த ஆடை வாழ்க்கையில் ஒரு தடவை மட்டுமே பாவிக்கப்படும், அதாவது அன்றைய விழாவுக்கு மட்டுமே அணிவார்கள். வேறொரு விழாவுக்கு செல்வதற்கு புதிதாக வாங்கிக் கொள்வர். விழாவுக்கு வரும் பிற பெண்கள் யார், எந்த கலர் ஆடை அணிந்திருந்தனர் என்பதை நினைவு வைத்திருப்பார்கள். அதனால் யாரும் ஒருமுறை அணிந்ததையே திரும்ப அணிந்து அவமானப்பட விரும்ப மாட்டார்கள். அழகு, ஆடம்பரம், அந்தஸ்து, எல்லாமே நுகர்பொருள் கலாச்சாரத்துடன் தொடர்பு பட்டிருந்தாலும், இதெல்லாம் சாதாரணம் என்று அவர்கள் கூறிக்கொள்கின்றனர்.

 11. தோழர்களுக்கு வணக்கம்,

  மிக தெளிவான துல்லியமாக இலக்கை தாக்கும் கட்டுரை. இன்றைய மனிதர்கள் அனைவரையும் (இளைஞர்களை மட்டும் என்று குறிப்பிடமுடியவில்லை)ஏதோ ஒரு விதத்தில் அழகு என்பது ஆட்டுவிப்பதாகவே உள்ளது. வசதி என்பது பணத்தால் அளவிடப்படுவது போல், திறமை என்பது அழகால் தோற்றத்தால் மதிப்பிடப்படுகிறது. இதை புரிவதற்கு, மீள்வதற்கு அழகு என்பது முழுமையாக அறியப்பட்டாக வேண்டும். அதனை இக்கட்டுரை நன்றாகவேசெய்கிறது. ஆனாலும் இன்னொரு தகவலையும் இணைத்திருந்தால் முழுமையாய் இருந்திருக்கும் என கருதுகிறேன். பாலியல் ரீதியான குறைபாடுகள் இந்த அழகு என்ற சொல்லிருந்தே உருவாக்கம் பெறுகின்றன. ஆண் பெண் உடலியல் திருப்தி அழகு என்ற சொல்லைக்கொண்டே திரிவாக்கம் அடைகிறது. வயாக்ராக்களின் விற்பனையில் அழகு முக்கியப்பங்கு வகிக்கிறது.

  தோழமையுடன்,
  செங்கொடி

 12. அழகு பற்றிய தன்னம்பிக்கையூட்டும் கட்டுரை அருமை. அழகு என்ற ஒரு விஷயம் எத்தனை மனித உள்ளங்களின் மனதை காயப்படுத்தி வாழ்க்கையை வீனடிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தும் ஏன் மனிதர்கள் அதைப்பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அதிலும் அழகு என்பது பெண்களை அதிகம் பாதிக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்பதற்காகவே அவள் மேல் காதல் கொள்ளும் ஆண்கள் அதிகம் உள்ளனர். இங்கு மனதிற்கு யாரும் மதிப்பு அளிப்பதில்லை.காதல் என்பது கூட அழகானவர்களுக்கு மட்டுமே உரியது என்பது போல ஊடகங்களும், சினிமாக்களும் சித்தரிப்பது இன்னும் கொடுமை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க