Tuesday, December 10, 2024

மனித நாகரிகமும் மண்புழு நாகரிகமும் !

-

சீரியலுக்கும், சினிமாவிற்கும், சந்தை இலக்கியத்திற்கும் எதிரானவர்களாக தங்களைச் சித்தரித்துக் கொள்ளுகிறார்கள், சிற்றிலக்கியவாதிகள். இவர்கள் இலக்கியத்தில் தேடும் புதுமைக்கும், ஜீன்ஸ் போட்ட சேட்டுப் பெண்கள் ஸ்பென்சர் பிளாசா செருப்புக் கடையில் தேடும் புதுமைக்கும் சாரத்தில் வேறுபாடு இல்லை. இலக்கிய மேட்டிமையின் நுகர்வுப் பசியும், மேட்டுக் குடியின் நுகர்வு வெறியும் தோற்றுவிக்கும் படைப்பு – கழிவு.

கம்யூனிசத்தின் தோல்வியை மிகக் குதூகலமாகக் கொண்டாடும் முதலாளித்துவ எழுத்தாளர்கள் கூட ரசியாவிலும் சீனாவிலும் மக்களுக்கு உணவு, உடை, வீடு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை என்றோ, அதனால்தான் மக்கள் சோசலிசத்தைக் கைகழுவி விட்டார்கள் என்றோ கூறுவதில்லை.

“வெறும் அடிப்படைத் தேவைகளைக் கொண்டு மட்டும் திருப்தியடைவதற்கு மனிதன் என்ன மிருகமா? அமெரிக்கா, ஐரோப்பாவைப் பாருங்கள்…! விதவிதமான உணவு வகைகள், அன்றாடம் மாறும் ரசனைக்கேற்ற உடைகள், புதுப்புது வடிவிலான கட்டிடங்கள், திரைப்படங்கள், கேளிக்கைகள், மதுபானங்கள், குளிர்பானங்கள், விதவிதமான நுகர் பொருட்கள்… என்று வாழ்க்கைத்தரம் பெரிதும் “முன்னேறி’ விட்டது. ரசியா, சீனாவில் இத்தகைய “முன்னேற்றம்’ இல்லை.”

“மனிதனின் விதவிதமான தேவைகளை எல்லாம் நிறைவு செய்கின்ற, அங்கீகரிக்கின்ற அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் பற்றி சீன, ரசிய மக்களுக்கு எதுவும் தெரியாது. அது அவர்களுக்குத் தெரியவரும்போது அங்கே சோசலிசம் தானே வீழ்ந்துவிடும்” என்பதுதான் முதலாளித்துவ எழுத்தாளர்களின் முக்கியமான பிரச்சாரமாக இருந்தது.

இன்று சீனாவிலும் ரசியாவிலும் எங்கு திரும்பினாலும் பெப்சி, கோக், சோனி, மிட்சுபிஷி, ஃபோர்டு, டொயோடா ஆகியவற்றுடன் புதிதாகக் கஞ்சித் தொட்டிகள், நடைபாதை வாசிகள், வேலையில்லாதவர்கள், விலைமாதர்கள், கொள்ளைக்காரர்கள், மஃபியா கும்பல்கள் ஆகியவையும் அமெரிக்காவைப் போன்றே உருவாகிவிட்டன.இந்தத் தற்காலிக வெற்றியின் காரணமாகவே முதலாளித்துவம் நியாயமானதாகிவிட முடியாது; ஒழுக்கமானதாகி விட முடியாது.

“உலக வாணிபம் அநேகமாக முழுமையாக உற்பத்தியின் தேவைகளைச் சுற்றித்தான் நடக்கிறதேயல்லாமல் தனிநபர் நுகர்வுக்குரிய தேவைகளைச் சுற்றியல்ல” என்று “தேவை’கள் உருவாக்கப்படும் ரகசியத்தை உடைத்த மார்க்ஸ், நுகர்பவனுடைய மதிப்பீடு அவனது செல்வத்தையும், தேவையையும் சார்ந்திருக்கிறது என்றார்.

“சல்லாத்துணி வாங்குகிற வைப்பாட்டியும் சரி, (அதே அளவு காசில்) உருளைக்கிழங்கு வாங்குகிற தொழிலாளியும் சரி இருவரும் தத்தம் மதிப்பீட்டைப் பின்பற்றுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களது மதிப்பீடுகளில் உள்ள வேறுபாட்டை அவர்கள் உலகத்தில் வகிக்கும் நிலைகளில் உள்ள வேறுபாடு விளக்குகிறது; இந்த நிலைகளும் சமுதாய அமைப்பின் விளைபொருளே ஆகும்” (மார்க்ஸ் மெய்யறிவின் வறுமை)

“சல்லாத்துணியே முன்னேற்றத்தின் சின்னம்” என்று கருதும் மேற்குலகைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் 1960களின் துவக்கத்தில் மாவோவின் சீனத்திற்கு சென்றார். ஆல்பர்டோ மொராவியா என்ற அந்த எழுத்தாளர் மார்க்சியவாதியோ கம்யூனிச ஆதரவாளரோ அல்ல. “சிவப்பு நூலும் சீனப் பெருஞ்சுவரும்” என்ற அவரது நூலின் முன்னுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே மொழிபெயர்த்துத் தருகிறோம்.
சமுதாயப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியைத் தீர்மானிக்கும் பொதுவுடைமைச் சமூகம்; ஒரு பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் ஊடாக அத்தகையதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கம்யூனிஸ்டு அரசியல்; தேவைசுதந்திரம் இவற்றுக்கிடையிலான உறவு பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் இவை அவரது முன்னுரையில் இல்லை.

ஆனால், மேற்குலக மேட்டுக் குடியின் வாழ்க்கையும் வசதிகளும்தான் முன்னேற்றத்தின் அளவுகோல் என்று கருதும் மாயையை இந்த முன்னுரை கிழித்தெறிகிறது. நுகர்வியம் (consumerism) எனும் பண்பாட்டின் விகாரமான முகத்தை அச்சுறுத்தும் விதத்தில் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது. இந்த அறிமுகம் புதிய சமூகத்தின் “தேவை’ குறித்து நிச்சயமாக நம்மைச் சிந்திக்கத் தூண்டும்.

ஒரு உரையாடல் வடிவில் அமைந்துள்ளது இந்த முன்னுரை.
***
“ஆ: அப்போ சீனாவுக்குப் போயிருந்தீர்களோ?

அ: ஆமாம், சீனாவுக்குச் சென்றிருந்தேன்.

ஆ. சீனாவில் உங்களைப் பெரிதும் கவர்ந்த விஷயம் எது?

அ: வறுமை.

ஆ: என்னது, வறுமையா?

அ: ஆமாம், வறுமைதான்.

ஆ: சீனமக்கள் அவ்வளவு ஏழைகளோ?

அ: மேற்கத்திய நாடுகளின் அளவுகோலில் பார்த்தால், ரொம்பவும் ஏழைதான்.

ஆ: அந்த வறுமையைப் பார்த்தபோது உங்களுக்கு என்ன தோன்றியது?

அ: ஒருவித நிம்மதி.

ஆ: நிம்மதியா? அடக்கடவுளே. எனக்குத் தெரிந்தவரை வறுமை, ஏழ்மை என்று சொன்னால் சீரழிவும், விரக்தியும் தான். அதெப்படி உங்களுக்கு மட்டும் நிம்மதியாக இருந்தது?

அ: ஆமாம், நிம்மதியாகத்தான் இருந்தது. நான் அப்படித்தான் உணர்ந்தேன். தனது சொந்த மன உணர்வுகளைக் கூட ஒரு மனிதனால் புரிந்து கொள்ள முடியாதா என்ன? சீனாவில் இருந்த வரை எனக்கு அப்படித்தான் இருந்தது. அதெப்படி என்று நீங்கள் கேட்கலாம். அதைப் பற்றி அப்போது நான் யோசிக்கவில்லை. இப்போது வேண்டுமானால் கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்.

ஆ: மேற்கத்திய நாடுகளில் வறுமை நிம்மதி உணர்வைத் தோற்றுவிப்பதில்லை. மாறாக, அடக்கப்படும் உணர்வையும் அதற்கு எதிராகக் கலக உணர்வையும்தான், தோற்றுவிக்கிறது. உதாரணத்திற்கு அமெரிக்க நீக்ரோக்களைப் பாருங்கள். கோபம் வந்தால் அவர்களின் சேரியையே எரித்து விடுவார்கள்.

அ: அய்யா, அமெரிக்காவிலே ஏழைகளும் இருக்கிறார்கள், பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருக்கக் காரணம், பணக்காரர்கள். பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கக் காரணம், ஏழைகள். ஆனால் சீனாவிலோ ஏழைகள் மட்டுமே இருக்கிறார்கள்.

ஆ: ஓ, சீனாவில் எல்லோருமே ஏழைகளா? அப்படி நான் யோசிக்கவில்லை.

அ: ஆமாம், சீனாவில் எல்லோருமே ஏழைகள்தான். அவர்களை ஏழைகள் என்று பெயரிட்டு அழைப்பது பொருத்தமாகவும் இல்லை. வேறு ஏதாவது தான் பெயரிட வேண்டும்.

ஆ: எடுத்துக்காட்டாக, ஏதாவது வார்த்தை சொல்லுங்களேன்.

அ: என்னால் உதாரணமெல்லாம் சொல்ல முடியவில்லை. பணக்காரனோடு ஒப்பிடாமல் ஒரு ஏழையை அவனது சொந்த நிலைமையை வைத்துக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு இதுவரை வார்த்தை எதுவும் உருவாகவில்லை.

ஆ: அப்படியானால் என்னதான் அந்த சீனத்து வறுமை?

அ: அது செல்வமில்லாத வறுமை, சரியாகச் சொன்னால், மனிதனின் இயல்பான நிலை அதுதான்.

ஆ: ஆக உங்களைப் பொறுத்தவரை பணக்காரனாக இருப்பது என்பது மனிதனின் இயல்பான நிலை அல்ல; அசாதாரணமான நிலைமை என்கிறீர்கள்.

அ: அசாதாரணமாக இருப்பதாலேயே அது மனிதத் தன்மை அற்றதாகவும் இருக்கிறது.

ஆ: மனிதத் தன்மையற்ற குணம் என்றால்… என்னதான் அது?

அ: தேவையற்றவைகளுக்கெல்லாம் அவசியத்தன்மையும், செயல்பாடும் கற்பிப்பதுதான் இந்த மனிதத் தன்மையற்ற குணம். புதிதாக ஒன்றை, தேவையில்லாத ஒரு பொருளைக் கண்டுபிடித்து, உருவாக்கி அதன் மூலம் பணக்காரனாகிவிட விரும்பும் ஒரு நபர் இருக்கிறான். “நடக்கும் போதே இசை மீட்டும் செருப்பு” என்று ஒரு பொருளை அவன் புதிதாக உருவாக்குகிறான். இதையே பெரும் அளவில் உற்பத்தி செய்து மக்களிடம் தள்ளிவிட விரும்புகிறான். இதற்கு அவன் என்ன செய்வான் சொல்லுங்கள்!

ஆ: தெரியவில்லை, விளம்பரம் செய்வான்.

அ: அதேதான். விளம்பரம் செய்வான்; கிராக்கியை உருவாக்குவான். அதாவது “இசை மீட்டும் செருப்பு’ என்ற இந்தப் பொருள் விற்பனைக்கு வருவதற்கு முன்னால் இருந்தேயிராத ஒரு கிராக்கியைச் செயற்கையாக உருவாக்குவான். “உனக்குத் தேவையில்லாத பொருளை நான் உனக்கு விற்கிறேன்” என்று எந்த உற்பத்தியாளனுமே சொல்ல மாட்டான். “நான் விற்கிற இந்தப் பொருள் இல்லாமல் நீங்கள் வாழவே முடியாது” என்றுதான் எப்போதுமே சொல்வான்.”தேவையற்ற’ ஒரு பொருள் “தேவையாக’ மாறுகிறதே, இந்த உருமாற்றம்தான் நுகர்பவன் என்பவனை உருவாக்குகிறது.

ஆ: நுகர்பவன் எங்குதான் இல்லை? சீனர்களையே எடுத்துக் கொள்வோமே, அங்கே ஒரு சோடி கால்சட்டை வாங்கும் சீனன் நுகர்பவன் இல்லையா?

அ: இல்லை. அவன் நுகர்பவன் அல்ல. தனக்குத் தேவையான உடையை மட்டுமே அவன் வாங்குகிறான். உடலை மறைக்க ஒரு உடை அணிபவன்தான் மனிதன் என்று ஒரு பொதுக் கருத்து அவனிடம் இருக்கிறதல்லவா, அந்த அளவுக்குத் தேவையான ஒரு உடை. ஆனால் நுகர்பவன் என்பவனோ ஒரு சாக்கடை.

ஆ: என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?

அ: நுகர்வோன் எனப்படுபவன் ஒரு சாக்கடை என்கிறேன். வாயும், குடலும், மலத்துவாரமும் மட்டுமே கொண்ட ஒரு உயிரினம் என்கிறேன். இத்தகைய உயிரினங்கள் வேறொன்றும் செய்வதில்லை; தின்னும், செரிக்கும், கழிக்கும்.

ஆ: அப்படிப் பார்த்தால் கால்சட்டை வாங்கும் சீன நுகர்வோனும் ஒரு சாக்கடைதானே?

அ: இல்லை. ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. பொருளை நுகர்வதனால் மட்டுமே நுகர்வோனை நான் சாக்கடை என்று அழைக்கவில்லை; நுகர்வதுதான் தன்னுடைய பணி என்று சில உயிரினங்களைப் போல் அவனும் கருதுகிறான். அதனால்தான் அவன் சாக்கடை. ஆனால், பாவம் ஒரு சீனன் அப்படியில்லை. தான் அம்மணமாக இருக்கக் கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமே அவன் உடை அணிகிறான். சுருக்கமாகச் சொன்னால் நுகர்பவன் என்பவனோ எதை வேண்டுமானாலும் நுகரத் தயாராக இருக்கிறான் – ஒரு மண்புழுவைப் போல. அது தன் குடல் வழியாக எப்படிப்பட்ட மண்ணையும் அனுப்பத் தயாராக இருக்கிறது.

ஆ: சே, நுகர்பவன் புழுவைப் போன்றவன் என்றா சொல்கிறீர்கள்?

அ: சாக்கடைக் குழாய், புழு என்றெல்லாம் நான் சொல்வது உங்களுக்குச் சங்கடமாக இருந்தால், வேறுவிதமாகச் சொல்கிறேன். உற்பத்திக்கும் நுகர்தலுக்கும் இடையே விடுபட்ட ஓர் இணைப்பே நுகர்பவன். அது மனித இணைப்பு – இருந்தாலும் அது வெறும் இணைப்புதான். அதற்கு மேல் ஒன்றுமில்லை. அதேபோல, நுகர்தலுக்கும் உற்பத்திக்கும் உள்ள இணைப்புதான் உற்பத்தியாளன். உற்பத்தியாளனும் நுகர்பவனும் ஒரே மண்புழுவின் முன் பகுதியும், பின்பகுதியுமாக அமைகிறார்கள்.

ஆ: உற்பத்தியாளனும், நுகர்பவனும் தவிர வேறு ஒன்றுமே இல்லையா? ஒரு மருத்துவன், ஒரு கலைஞன், ஒரு தொழிலாளி, ஒரு விவசாயி என்று சொல்ல எதுவுமேயில்லையா அவர்கள் வெறுமனே உற்பத்தியாளனும், நுகர்பவனும் மட்டும்தானா?

அ: “உற்பத்தி’, “நுகர்தல்’ என்ற சொற்கள் எல்லாவிதமான பொருள்களின் உற்பத்தியையும் அவற்றின் விற்பனையையும் சம்பந்தப்படுத்தியதுதான் – அது மிகமிக உன்னதமானதாக, அதி அற்புதமானதாக இருந்தாலும் சரி.

ஆ: அப்படியென்றால் மேற்கத்திய மனிதன், உற்பத்தி செய்வதையும், நுகர்தலையும் தவிர வேறெதையும் சிந்திக்காதவன் என்கிறீர்களோ?

அ: ஆமாம், அப்படித்தான்.

ஆ: அவன் தன்னைப் பற்றிக் கூடச் சிந்திப்பதில்லையோ?

அ: “தான்’ என்று சொல்கிறீர்களே, அப்படி ஒன்று இல்லை. உற்பத்தி செய்யும் அல்லது நுகரும் வேலைகளில் மட்டும் அந்த “தான்’ இருப்பதாகச் சொல்லலாம். ஆனால் அடிப்படையில் நுகர்தல் என்பதே நுகர்பவனின் தன்மையைத் தீர்மானிப்பதால், நவீன நாகரிகத்தின் முடிவே நுகர்தல் தான்; அதாவது – கழிவுதான்.

ஆ: அய்யோ, என்ன சொல்கிறீர்கள், கழிவா?

அ: ஆமாம், கழிவுதான். வேறுவிதமாகச் சொல்வதென்றால், செரிமானம் ஆனபிறகு உடலிலிருந்து வெளியேற்றப்படும் மலம். ஒருவன் தன்னால் இயன்ற அளவுக்கு நுகர்கின்றான்; விதவிதமாக நுகர்கின்றான். நுகர்வோர் என அழைக்கப்படுவோரின் வாழ்க்கை லட்சியம் என்ன? நுகர்தல் தான். இந்த லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான் அவன் போராடுகிறான்.
ஆனால் இதன் இறுதி விளைவு என்ன? கழிவு. நுகர்பொருள் நாகரீகம் என்பதே கழிவுக் கலாச்சாரம்தான். ஒரு நுகர்வோன் எவ்வளவு கழிவுகளை வெளியேற்றுகிறான் என்பதுதான் அவன் எவ்வளவு பொருட்களை நுகர்ந்தான் என்பதற்கான சிறந்த நிரூபணம்.

ஆ: சரி. அதை ஒரு உருவகம் என்று வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கேட்க நன்றாக இல்லை. கழிவு என்ற சொல்லை அதன் நேரடியான பொருளுக்கு மேல் விரித்து அனைத்துக்கும் பொருத்தமுடியுமா? இந்த உலகில் சாப்பிடுகிற பொருள் தவிர வேறு எத்தனையோ இருக்கிறதே.

அ: எது எதையெல்லாம் ஒருவன் நுகர்கிறானோ, அத்தனைக்கும் இது பொருந்தும். எல்லாவற்றுக்கும் மேலாக, தொழில்துறை உற்பத்திக்கு இது பொதுவில் பொருந்தும்.

ஆ: அது எப்படி?

அ: நவீன நகரங்களில் உற்பத்தியும், நுகர்வும், அதாவது, தொழில்துறை இடுபொருளும் ஆலைக் கழிவும் அருகருகே வைக்கப்படுகின்றன – நவீன வீடுகளில் சமையலறையும் கழிப்பறையும் அருகருகே வைக்கப்படுவது போல. நகரங்களின் மையத்தை விட்டு வெளியே செல்லுங்கள் – பெரிய ஆலைகள்… மிகப் பெரிய கூரைகள்… வரிசையாக உலைகள்… ஓயாது பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த ஆலைகளுக்கு வெகு அருகாமையிலேயே வெட்டவெளியில் அவற்றின் கழிவுகள், இரும்புச் சில்லுகள், துருவல்கள், இழைகள் கொட்டிக் கிடக்கின்றன. நகரம் உற்பத்திப் பொருளை நுகர்ந்துவிட்டது. சீரணித்து விட்டது. மீதத்தைக் கழிவாக வெளியே தள்ளியும் விட்டது.

ஆ: பெரிய நவீன நகரத்தில் வெறும் ஆலை உற்பத்தி மட்டுமா நடக்கிறது? எடுத்துக்காட்டாக – கலாச்சாரம் மற்றும் பல விசயமும் இருக்கிறதே?

அ: நிச்சயமாக, கலாச்சாரம் இருக்கிறது. புத்தகக்கடைகள், செய்திப் பத்திரிக்கை விற்பனை மையங்கள், திரைப்படங்கள், டிவி செட்டுகள், ரேடியோ, புத்தகங்களின் சுருக்கமான பதிப்புகள், படங்கள் நிறைந்த ஏடுகள், பாக்கெட் புத்தகங்கள், கலைக் களஞ்சியங்கள், தொகுப்புகள், மலிவுப் பதிப்புகள், மொழி பெயர்ப்புக்கள்… இருப்பினும் இந்தக் கலாச்சாரமும் ஆலைப் பொருள்களைப் போலத்தான் நுகரப்படுகின்றது. ஏராளமாக உட்கொள்ளப்பட்டு, சீரணிக்கப்பட்டு, வதவதவென்று கழித்தும் தள்ளப்படுகின்றது. எல்லாவற்றையும் அள்ளிக் கொள்கிற கலாச்சார நுகர்வோர் அதிலிருந்து எந்தச் சத்தையும் பெறுவதில்லை. அவற்றை விடாமல் நுகர்ந்தாலும், கலாச்சார ரீதியாகச் சொன்னால் நிரந்தரமாகச் சோகை பிடித்தவர்களாகவே இருக்கிறார்கள்.
கலாச்சார நுகர்வு எதையும் விளைவிப்பதில்லை; கலாச்சாரக் கழிவை மட்டுமே அது உற்பத்தி செய்கிறது; வேறொன்றுமில்லை.

ஆ: சரி, உற்பத்தி செய்வது, நுகர்வது… இந்த இரு நடவடிக்கைகளின் வாயிலாக மட்டுமே ஒரு மனிதன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலுமா?

அ: தொழில்துறை நாகரீகம் என்பதே கழிவுத்தன்மை கொண்டதுதான் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதன் முடிவு கழிவுதான். தனது கழிவை வெளியேற்றும் ஒரு மனிதனின் நடவடிக்கையை நாம் என்னவென்று அழைக்கலாம்? தன்னை வெளிப்படுத்திக் கொள்வதாகச் சொல்லலாமா?

ஆ: இல்லை. அப்படிச் சொல்ல முடியாது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அ: சரி. அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான். அதாவது மறுபடியும் நுகர்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறான். இங்கே ஆசுவாசம் என்பதே கழிவை வெளியேற்றும் நடவடிக்கைதான். இன்னொருபுறம் அதீதமாக உற்பத்தி செய்கின்ற, அதீதமாக நுகர்கின்ற மனிதனும் இருக்கிறான் – அவனுக்கு அஜீரணம் ஏற்படுகிறது. அதற்கோ நம்மிடம் பேதி மாத்திரை தயாராக இருக்கிறது – வேறு வார்த்தையில் சொன்னால் போர்.

இந்த உற்பத்தி நுகர்வு எனும் சுழலில் அவ்வப்போது ஏற்படுகின்ற மலச்சிக்கலிலிருந்து விடுபடுவதற்கு யுத்தம் தவிர்க்க முடியாததாகவும் தடுக்க முடியாததாகவும் ஆகிவிடுகிறது எனத் தோன்றுகிறது. அமைதிக் காலத்து நுகர்வோனின் பணியை யுத்த காலத்தில் சிப்பாய் மாற்றீடு செய்கிறான். சிப்பாயின் நுகர்வோ அதிதீவிரமாக இருக்கிறது. அதிவேகமானதாக, விதவிதமானதாக, பரந்ததாக இருக்கிறது. அமைதிக் காலத்தில் ஒரு ஆண்டில் நுகரப்படுவதைக் காட்டிலும் அதிகமாக யுத்த காலத்தில் ஒரே நாளில் நுகரப்படுகிறது. ஏராளமான பொருட்களையும் செல்வத்தையும் நுகர்ந்த பின்னும் திருப்தியடையாத சிப்பாய் மனித உயிர்களை நுகரத் தொடங்குகிறான். முதலில் எதிரிகளின் உயிரை, பிறகு தன்னுடையதை.”

____________________________________________

புதிய கலாச்சாரம் – ஆகஸ்டு 99
_______________________________________

 


  1. சோசலிச ரசியாவில்,சீனாவில் அடிப்படை உரிமைகள் இல்லை. தேசமே ஒரு சிறைச்சாலையாக இருந்தது.இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்று இருந்தது. ராஜதுரையின்
    ரஷ்ய புரட்சி: ஒரு இலக்கிய சாட்சியம்
    ரஷ்ய புரட்சிக்கும் பிந்தைய சமூகம்,அரசின்
    முகங்களை காட்டுகிறது.

  2. அதெல்லாம் சரித்தான் அய்யா..
    அப்புறம் ஏன் ரஷ்யாவிலும் சீனாவிலும்
    கம்யூனிசம் புட்டுக்கிட்டுப் போயிருச்சு.
    அத கரக்டா சொல்லத்தேவல..
    உலகம் முச்சூடும் எங்க கம்யூனிசம் இருக்கு சொல்லுங்க
    பாப்போம்.. இந்த ஜனம் மாறுனாத்தான் நடக்கும்..
    அது எப்போன்னுதான் பிரச்சனை.. ம்ம்…

  3. ஆம்,
    நுகர்வு தான்
    முதலாளித்துவத்தின்
    மூலதனம்

    மூலதனத்தை தகர்க்கும்
    போது தான்
    நுகர்வும் சரியும்.

  4. //பணக்காரனோடு ஒப்பிடாமல் ஒரு ஏழையை அவனது சொந்த நிலைமையை வைத்துக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு இதுவரை வார்த்தை எதுவும் உருவாகவில்லை.//

    இப்படி சீனாவில் உள்ள அனைத்து மக்களையும் ஏழை என்று கூறி அங்கு உள்ள சமூகத்தின் நுகர்வை பற்றி விளக்கமாக , தெளிவாக பேசும் இந்த நூலின் ஆசிரியர்.. அங்கு மனிதனை மனிதனாக நடத்தும் “அநியாயத்தை” பற்றி ஒன்றும் அவரது முன்னுரையில் குறிப்பிடாதது.. மிகவும் கண்டிக்க தக்கது..

    ஒரு சில மறு மொழி நண்பர்களின் கண்டனத்திற்கு அவர் உள்ளாகி உள்ளார்.. மேலும் அவர்கள் சொல்லாமல் விட்ட ஆதங்கத்தை இங்கு சொல்ல விரும்புகிறேன்…
    எங்களின் முதலாளித்துவம் ஒவ்வொரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை விழுந்து, அடிபட்டு , நசுங்கி.. பல மக்களை ஆண்டியாக்கி பின் அவர்களை தற்கொலையும் செய்ய வைத்து கடைசியாக் மக்கள் வரிப்பணத்தை குடித்து மீண்டும் எழுந்து நிற்கிறதே… அது எங்களுக்கு பெருமை…. கீழே வீழ்வது பெரிதல்ல.. வீழ்த்த பின்னும் எழுந்து நிற்பதுதான் சாதனை (மக்களின் ரத்தத்தை குடித்து.. ) அதை எங்கள் முதலாளித்துவம் பல முறை செய்து உள்ளது என்று மார் தட்டி அறிவித்து கொள்கிறோம்..

    இதோ இப்பொழுது உலகை உலுக்கும் பொருளாதார சரிவுக்கு காரணம், ஏழை மக்கள் தான்.. அவர்கள் கடன் வாங்கி செலுத்த முடியாததால் தான் இன்று இந்த நிலைமை..
    அது எப்படி அய்யா இந்த ஏழை மக்கள் ஒரே வாரத்தில் அமெரிக்காவின் எல்லா முக்கிய நிதி நிறுவனங்களையும் திவாலாக்கினார்கள்… ஏழைகளை ஒழித்தால்தான் இந்த பிரச்சினை தீரும்.. எனவே முதலாளிகளை உற்பத்தி செய்யும் முதலாளித்துவத்தை நாம் ஆதரிப்போம்.. எல்லோரும் முதலாளிகளாக இருப்போம்.. !!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க