Tuesday, June 6, 2023
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்வெள்ளத்தில் தமிழகம்: நகரமயமாக்கத்தின் பயங்கரவாதம் !

வெள்ளத்தில் தமிழகம்: நகரமயமாக்கத்தின் பயங்கரவாதம் !

-

நவம்பர் 25 இல் “ ஆனந்த விகடனின் சாதி வெறி ” கட்டுரையை வலையேற்றம் செய்தோம். அடுத்த இரண்டு நாட்கள் ஏராளமானவர்கள் பார்வையிட்டதோடு ஆதரித்தும், எதிர்த்தும் நிறைய மறுமொழிகள் வந்திருந்தன. இந்த விவாதத்தைத் தொடரலாமென்றும், இல்லை ஒரு இடைவெளி விட்டு வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாமென்றும் இருமனதாய் இருந்த போது  பிடித்தது மழை.

நிஷா என்று பெயர் சூட்டப்பட்ட புயல் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தபோது, தொடர்ச்சியாகப் பெய்த மழையால் வடக்கு, வடமேற்கு, மத்திய தமிழகம் மற்றும் சென்னையும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை விரித்த வலையில் நாங்களும் சிக்கிக் கொண்டோம்.புயல் தாக்கிய நேரத்தில் மும்பையில் புகுந்த தீவிரவாதிகளும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள். இருப்பினும் இதை தெரிந்து கொள்ளும் சூழ்நிலைமை இல்லை. தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி என எல்லாச் சேவைகளும் எங்கள் இடத்தில் துண்டிக்கப்பட்டிருந்தன. அவ்வப்போது அதிர்ஷடவசமாக செயல்பட்ட செல்பேசி மூலம் மும்பைச்செய்திகளை அறிந்தோம். தினசரிகளும் நான்கு நாட்களாக வரவில்லை. வந்திருந்தாலும் அவற்றை வினியோகம் செய்ய முடியாதவாறு எங்கும் வெள்ளம். தெருவில் காலளவில் இருந்த நீர் பின்பு முழங்காலளவும், இறுதியில் இடுப்புக்கு மேலும் சென்றுவிட்டது. வீட்டிற்குள்ளும் நீர் புகத்துவங்கிவிட்டது.

கழிப்பறைக் குழாய் வலைப்பின்னலை வெள்ளம் முழுங்கியிருந்ததால் கழிப்பறையில் அசுத்தநீர் ஏறத் தொடங்கியது. மூன்று நாட்களாக இயற்கை உபாதைகளை அளவாக கழித்து ஓட்டினோம். மின்சாரம் முற்றிலும் தடைபட்டுவிட்டது. இருக்கும் சொற்ப குடிநீர், மளிகைகளை வைத்து ஒரளவுக்கு உணவுத் தேவைகளை சமாளித்தோம். இனியும் அங்கே இருந்து பயனில்லை, நிலமைகள் உடனடியாக சீரடைய வாய்ப்பில்லை என்று முடிவெடுத்து விட்டு சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு வெள்ளம் இல்லாத பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு குளித்துக் ,கழித்து கையடக்க கணினியில் இதை அடித்துக் கொண்டிருக்கிறோம். வேறு சில நண்பர்களின் உதவியோடு இதை வலையேற்றம் செய்யவேண்டும். செய்து விடுவோம். எல்லாம் “எதிர்பார்ப்புடன்” இருக்கும் வினவின் நண்பர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக.

இதற்குள் மும்பையில் நிறைய விசயங்கள் நடந்துவிட்டன. அவற்றை இன்றுதான் தினசரிகள் மூலம் முழுமையாக அறிய முடிந்தது. மற்றபடி இது குறித்து தொலைக்காட்சியில் பார்க்கவில்லை என்பதால் எதையும் இழக்கவில்லை என்று பார்த்த நண்பர்கள் கூறினார்கள். விறுவிறுப்பான சண்டைக்காட்சியை பரபரப்பாக காட்டுவதற்காக 24 மணிநேரமும் செய்தி அலைவரிசைகள் இடைவிடாமல் பேசிக் கொண்டிருந்தன. இதைப் பார்க்கும் போது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் டிரான்ஸ்சிஸ்டரில் கேட்ட ஆல் இந்தியா ரேடியோவின் செய்தி ஒலிபரப்பு தரமாக இருந்தது. பயனுள்ள விசயங்களை  அறிய வாய்ப்பளித்தது. மழையில்லை என்றால் வானொலி பக்கம் ஒதுங்கியிருக்கமாட்டோம் என்பதையும் இங்கே சுயவிமரிசனத்துடன் பதிவு செய்கிறோம்.

டிசம்பர் 1 அல்லது 2 தேதியில் மும்பை குறித்த எமது கருத்துக்களை வலையேற்றம் செய்ய முடியும் என நம்புகிறோம். அதற்குள் அது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று பின்னூட்டமிட்டால் விவாதிப்பதற்கு உதவியாக இருக்கும். நடப்பு விசயங்கள் குறித்து வினவு என்ன கூறுகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் பல நண்பர்கள் இருப்பார்கள். இந்தக் குறுகிய காலத்தில் நீங்கள் காட்டியிருக்கும் உற்சாகமான ஆதரவும், எதிர்வினையும் எங்களுக்கு புதிய கடமையையும், பொறுப்பையும் கற்றுக் கொடுத்திருக்கிறது. நிற்க, இங்கே வெள்ளம் குறித்த சில கருத்துக்களை மட்டும் பதிவு செய்ய விருப்பம்.

வன்னிக் காடுகளில் போரின் துயரத்தால் பிறந்த மண்ணிலேயே அகதிகளாக சுற்றிக் கொண்டிருக்கும் ஈழத்து மக்களின் அவலத்தை குறைந்தது ஒரு மாதமாவாவது அனுபவிக்குமாறு தமிழத்து மக்களை இயற்கை பணித்திருக்கிறது. இந்த ஒரு வாரத்தில் நாங்கள் அடைந்த துன்பமெல்லாம் மிகச்சாதாரணம் எனுமளவுக்கு ஏனைய மக்களின் வாழ்க்கை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கடலூர், புதுச்சேரி, சிதம்பரம், டெல்டா மாவட்டங்கள், சென்னையின் புறநகர்ப் பகுதிகள் அனைத்தும் மழை நீரில் தவிக்கின்றன. சில பகுதிகள் எல்லா வழிகளிலும் துண்டிக்கப்பட்டு தனித் தீவுகளாக மாறியிருக்கின்றன. பல இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர். உறவினர், நண்பர் வீடுகளுக்கு செல்லும் வாய்ப்பை நகரம் வழங்கியிருக்கிறது என்றாலும் கிராமங்களில் அந்த நிலைமை இல்லை. அவர்களின் வாழ்க்கை எல்லா விதத்திலும் அங்கேயே சிக்குண்டிருக்கிறது என்பதால் எதையும் விட்டுவிட்டு நினைத்த மாத்திரத்தில் வெளியேறுவது சாத்தியமில்லை.

பல்லாயிரக்கணக்கான  ஏக்கரில் பயிரிடப்படட சம்பாப் பயிர் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. சில இடங்களில் கால்நடைகளையும் கூட மழை நீர் அடித்துச் சென்றுவிட்டது. வீடுகளையும், தெருக்களையும், முழுக் கிராமத்தையும் வெள்ளநீர் சூழ்ந்து எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த மக்கள் குறிப்பாக பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அழுகிறார்கள். இத்தகைய காட்சிகளை நீங்களும் தொலைக்காட்சியில் பார்த்திருக்கக் கூடும்.

சாலைகள் வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டதால் பல இடங்களுக்கு அத்தியாவசப் பொருட்கள் சப்ளை இல்லை. உணவில்லாமல் பெரியவர்கள் வேண்டுமானால் சில நாட்கள் சமாளித்துக் கொள்ளலாம். பாலின்றி அழும் குழந்தைக்கு என்ன செய்வது? சுற்றிலும் மழைநீர் கடல்போல தேங்கியிருந்தாலும் குடிநீர் இல்லை, எங்கே சேகரிப்பது? கையில் பணமிருந்தாலும் வாங்குவதற்கு கடைகள் இல்லை என்றால் யாரிடம் முறையிடுவது? வீட்டில் எல்லா வசதிகளையும் அளிக்கும் எந்திரங்களும் இருந்தாலும் அவற்றை எப்படிக் காப்பாற்றுவது? இவ்வளவு இன்னல் இருந்தாலும் வேலைக்குச் செல்லவில்லையென்றால் சம்பளத்திலிருந்து பல தனியார் நிறுவனங்கள் பிடித்துக் கொள்கின்றன. வேலைக்குச் செல்லவேண்டுமென்றாலும் பேருந்துகள் இல்லை. ஆம், மழை தோற்றுவித்திருக்கும் பிரச்சினைகள் அளவில்லாதவை.

இதுவரை மழையினால் மட்டும் 130க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கின்றனர். மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களைப் போலன்றி இங்கே இயற்கையான மழையின் தாக்குதலுக்காகப் பலி கொடுத்திருக்கிறோம். மேலை நாடுகளில் இந்த எண்ணிக்கையில் மக்கள் இறந்திருந்தால் அது உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்தி! ஏழை நாடு என்பதால் இங்கே பலியாகும் கணக்கிற்கு மதிப்பில்லை.

சாதாரண நாட்களிலேயே முடங்கிக்கிடக்கும் அரசு நிர்வாகம் இந்த பேரிடர் காலத்தில் மட்டும் தீவிரமாக செயல்பட்டு பிரச்சினைகளை தீர்த்துவிடாது என்பதை மக்களும் அறிந்திருக்கிறார்கள். அதனால் இந்தச் சோகங்களுடன் பல்லைக் கடித்துக்கொண்டு மழைக்காலத்தை தள்ளிவிடவேண்டும் என்று அவர்கள் இயல்பாகவே பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வளவு துயரத்திற்கும் காரணம் புயலையும், பேய்மழையையும் பொதிந்து வைத்திருக்கும் இயற்கைதான் என்று சுலபத்தில் தீர்மானித்து விடலாம்தான். ஆனால் இந்த துயரத்திற்கு இயற்கை காரணமல்ல. வருடா வருடம் பெய்யவேண்டிய மழை சற்றுக்கூடியோ, குறைந்தோ காலத்திற்கேற்றபடி பெய்துகொண்டுதான் இருக்கிறது. புவி வெப்பமாகும் பிரச்சினையால் இந்த அளவில் சில குளறுபடிகள் நடக்கலாம். பல நூற்றாண்டுகளாக தமிழக விவசாயிகள்  அந்த மழை நீரை தேக்கிவைத்து, நீர் இல்லாத பகுதிகளுக்கு கொண்டுசெல்வதற்காக உருவாக்கிய வலைப்பின்னல்கள் கடந்த முப்பதாண்டுகளாக நகரமயமாக்கம் என்ற பெயரில் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டிருக்கின்றன.

இயல்பாகப் பெய்யும் மழை மண்ணில் நிரம்பி, தேவையான இடத்திற்கு செல்ல முடியாமல், கடலிலும் சேர வழியின்றி தாழ்வான மக்கள் குடியிருப்புக்களை வேறுவழியின்றி சூழ்ந்து கொள்கின்றது. தற்போது தமிழகத்தின் நகரமயமாக்கம் ஏறக்குறைய 50 சதவீதத்தை எட்டிவிட்டது. இந்த தீடீர் வளர்ச்சி விவசாயம் மற்றும் அதன் நீர்ப்பாசன வசதியைப் பலிகொடுத்து உருவாக்கப்பட்ட செயற்கையான வளர்ச்சி. விவசாயத்தை அழித்து உப்பவைக்கப்பட்ட அடிப்படையற்ற அலங்காரமான வளர்ச்சி.

மேலை நாடுகளில் தொழிற்துறையின் தேவைகாரணமாக நகரங்கள் தோன்றி வளர்ந்தன. அதனால் அவை ஒரவளவிற்கு திட்டமிடப்பட்ட வகையில் மாநகரங்களாக வளர்நதன. விவசாயமும் நவீன முறை உற்பத்தியாக மாற்றப்பட்டு வளர்ச்சியடைந்ததால் அங்கே இந்தப் பிரச்சினை இந்தியாவின் அளவுக்கு இல்லை. இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகமான இருபது ஆண்டுகளில் விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. அதனால் வாழவழியின்றி கோடிக்கணக்கான மக்கள் நகரங்களை பிழைப்பிற்காக தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டது. அதே சமயம் நகரங்களும் தொழிற்துறை உற்பத்தியால் வளரவில்லை. சொல்லப்போனால் உலகமயமாக்கம் அரங்கேறிய இந்த ஆண்டுகளில் பல சிறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவிற்கு எது தேவையோ அதை செய்து முடிப்பது என்ற அளவில் பொருளாதாரம் வடிவமைகக்ப்பட்டது. இதனால் இந்தியாவின் தேசிய பொருளாதாரம் திட்டமிட்ட வகையில் நசுக்கப்பட்டு கிராமங்களிலிருந்து வரும் மக்களை குறைந்த ஊதியத்தில் தமது தேவைக்கேற்ற வேலைகளுக்காக முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தமிழகத்தில் அப்படி ஒன்றும் தொழில் வளர்ச்சி சமீபத்திய ஆண்டுகளில் இல்லை. சென்னை, கோவை என இரண்டு மண்டலங்களை நீக்கிவிட்டால் இங்கே பெரிய தொழிற்துறை வளர்ச்சி கிடையாதென அறுதியிடலாம். இந்த இரண்டு மண்டலங்களிலும் உற்பத்தி துறை நசிந்து, தகவல் தொழில் நுட்பத் துறை மட்டும் வளர்ந்திருப்பதுதான் யதார்த்த நிலவரம். ஆண்டுக்கு 7000 கோடிக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூரை எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவின் பிரபலமான தொடர் கடைகளுக்காக ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் இந்நகரம் வாழ வழியற்ற தென்மாவட்ட மக்களுக்கு குறைந்த பட்ச வாழ்க்கையை உத்திரவாதம் செய்கிறது. 12 மணிநேர வேலை, தீப்பெட்டி குடியிருப்பு, ஆஸ்மா பிரச்சினை, குடிநீருக்கான நள்ளிரவு யுத்தம், நொய்யல் ஆறு ரசாயன கழிவால் நிரம்பியது, சுற்று வட்டார கிராமங்களில் விவசாயமும், குடிநீரும் மாசுபட்டது, என பல பிரச்சினைகள் திருப்பூரை கவ்வியிருக்கின்றன.

ஆக வால்மார்ட் அமெரிக்காவில் சம்பாதிப்பதற்காக இங்கே நமது மண்ணையும், நீரையும், விவசாயத்தையும் பாழ்படுத்தி நமது தொழிலாளிகளையும் கசக்கி பிழிகிறார்கள் என்றால் இதுதான் ஏகாதிபத்தியங்கள் தமது சுரண்டலுக்காக இந்தியாவில் உருவாக்கியிருக்கும் நகரமயமாக்கம். இத்தனைக்கும் திருப்பூரில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தாலும் இவர்களில் 90 சதவீதத்தினர் தினசரிக் கூலிகளாகத்தன் நடத்தப்படுகின்றனர். இவர்கள் திருப்பூரில் கழிக்கும் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மழை தரும் துன்பமெல்லாம் சாதாரணம். ஏதோ சில கோவை கவுண்டர்கள் சில கோடிகள் சம்பாதிப்பதற்கும், அமெரிக்க முதலாளிகள் பல நூறு கோடிகள் சம்பாதிப்பதற்கும் உருவாக்கப்பட்ட மாபெரும் நரகம்தான் திருப்பூர் நகரம். இதை தற்போது தமிழக அரசு மாநகரமாக அறிவித்திருக்கிறது. இந்தப் பெருமையை அறிந்து கொள்ள திருப்பூரில் ஒரு வருடம் தங்கினால் போதும், அதன் பிறகு உலகின் எவ்வளவு மோசமான நகர்ப்புறச் சேரிகளிலும் தங்குவதற்கான பயிற்சியை பெற்றுக் கொள்ளலாம். இதைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறோம்.

சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் தகவல் தொழில் நுட்பத்துறையில் வளர்ச்சியால் மாநகரம் மா….நகரமாக பெருத்து வருகிறது. இதற்குத் தேவைப்படும் கட்டிடங்கள், அதைக் கட்டுவதற்கு இந்தியாவெங்கிலிருந்தும் வரும் தொழிலாளர்கள், மேட்டுக் குடியனருக்கு தேவைப்படும் கேளிக்கை வசதிகள், இப்படி சில பிரிவனருக்காக சேவை செய்கின்ற அளவில் பெரும்பான்மை மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்பபணிக்கும் வகையில் நகரம் பெருத்து வருகிறது. சென்னையில் மாதம் சில பல ஆயிரங்களை வருமானமாக ஈட்டும் பிரிவினர் சில இலட்சமென்றால் இவர்களுக்காக ஆட்டோ ஓட்டுநராக, கட்டடம் கட்டும் தொழிலாளியாக, சத்யம் திரையரங்கு செக்யூரிட்டியாக, பேருந்து ஒட்டுநராக, கடைச் சிப்பந்தியாக வாழும் மக்கள் பல இலட்சம்பேர் இருக்கிறார்கள். ஐ.டி துறை புண்யவான்களின் தயாவால் ஏற்றிவிடப்ட்ட வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட் விலைகள் காரணமாக இந்த மக்கள் புறநகரங்களுக்கு செல்வதும், முன்னாள் ஏரிகள் இந்நாள் குடியிருப்புக்களாக மாற்றப்படுவதும் ராக்கெட் வேகத்தில் நடக்கிறது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் சென்னையில் பெய்த பேய் மழை இப்போதைய அளவை விட அதிகமென்றாலும் அப்போதைய பாதிப்பைவிட இப்போதைய பாதிப்பு அதிகம். காரணம் இடைக்காலத்தில் பல தாழ்வுப் பிரதேசங்கள் பெருங் குடியிருப்புக்களாக மாறிவிட்டதுதான். ஏரிகளின் மாவட்டம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தை வானில் விமானத்திலிருந்து பார்த்தால் மாபெரும் பூசணிக்காய் தோட்டம் போல தோன்றுமாம். ஏரிகள் பூசணிக்காய் போலவும் அவற்றை இணைக்கும் கால்வாய்கள் கொடிபோலவும் தெரியுமாம். இப்போது காயையும் காணவில்லை, கொடிகள் அழிந்த தடயமும் தெரியவில்லை, எல்லாம் காங்கீரீட் காடுகளாக மாற்றப்பட்டுவிட்டன.

தற்போது சென்னைக்கு குடிநீர் அளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி நீர்த்தேக்கம், மற்றும் அம்பத்தூர் ஏரி, போரூர் ஏரி, மதுரவாயல் ஏரி என பல ஏரிகளுக்கும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து மழையால் வரும் வெள்ளத்தை தேக்கிவைக்க முடியாமல் திறந்துவிடுகிறார்கள். முன்பு இந்த ஏரிகள் நிறைந்தால் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு ஏல்லா நீரையும் வீணாக்காமல் பகிர்நது கொள்ளும். இப்போது அந்த தொடர்பு சிங்காரச் சென்னையால் அறுக்கப்பட்டிருப்பதால் கடலிலும் சேர முடியால் வெள்ளம் தாழ்வான குடியிருப்புக்களை குறிவைத்துத் தாக்குகிறது.

இந்த மழையால் மட்டும் தமிழகத்தில் 130க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைபட்டிருக்கின்றன. சென்னைக்கு நடந்ததுதான் ஏனைய மாவட்டங்களுக்கும் பரவியிருக்கின்றது. நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புக்களையும், மேம்பாலங்களையும், வழுக்கிச் செல்லும் அகலமான சாலைகளையும் பல ஆயிரம் கோடி செலவில் உருவாக்கும் அரசு விவசாய நீர்ப்பாசன வசதிகளுக்காக சில கோடிகளைக்கூட ஒதுக்கவில்லை. பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் தேவையான நகரத்தை உருவாக்குவதில் முனைந்திருக்கும் அரசு கிரமாப்புறங்களையும், விவசாயத்தையும், நகரத்து சேரிகளையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. எனவேதான் மீண்டும் வலியுறுத்துகிறோம், விவசாயத்தை அழித்து உருவாக்கப்படும் இந்த நகரங்கள் போர்களைவிட பேரழிவுகளைத்தான் கொண்டுவரும். இதற்கான முன்னோட்டம்தான் சமீக ஆண்டுகளாக வரும் மழைக்காலத் துயரங்கள். இன்னமும் கிராமங்களின் வாழ்க்கையால் பெரும்பான்மை மக்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது அந்த கிராமங்களின் பாதுகாப்புதான் இந்தியாவிற்கு உண்மையான வளர்ச்சியைக் கொண்டு வரும். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சில இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது இந்த அரசு ஏகாதிபத்திய சேவைக்காக மட்டும் இருக்கிறது என்பதை உரக்க அறிவிக்கிறது.

இந்தியாவின் மாநகரங்கள் அனைத்தும் கிராமங்களை அழித்துத்தான் மிளிர்கின்றன. அப்படி மிளிரும் நகரங்களிலும் ஏழைகள் ஒதுக்குப்புறமான சேரிகளில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்தே ஆகவேண்டுமென்ற கட்டாயத்திற்காக சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர். டெல்லயில் காமன்வெல்த் விளையாட்டிற்காக சில ஆயிரம் கோடிகளை செலவழித்து வரும் அரசு பல சேரிகளை கொத்துக் கொத்தாக நகரைவிட்டு வெளியே தூக்கி எறிந்திருக்கிறது. மும்பையில்தான் நகரமயமாக்கம் நிகழ்த்தியிருக்கும் அநீதி உச்சத்தில் இருக்கிறது. அங்கே பெருமழை பெய்தால் தற்போதைய தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்திருப்பவர்களைவிட அதிகமானபேர் பலியாவார்கள். போதிய இடமின்றி குவித்துவைக்கப்பட்ட தீப்பட்டிகளைப் போல இருக்கும் சேரிகளில் மழை பெய்தால் அது தோற்றுவிக்கும் அலத்தை இலக்கியம் கூடப் படம் பிடிக்க முடியாது. பம்பாயின் சேரிகளில் வாழ்வதற்கு மிகுந்த மனத்திடம் வேண்டும். இத்தகைய சேரிகளில்தான் மாநகரங்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் உழைக்கும் மக்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவின் சுய பொருளாதாரத்திற்கும் அதன் வளர்ச்சிக்குமெதிராக செயற்கையான முறையில் முதலாளிகளின் நலனுக்காக மட்டும் உருவாக்கப்படும் இந்த நகர்ப்புற வளர்ச்சி பெரும்பான்மை மக்களை அன்றாடம் வதைக்கும் மாபெரும் காங்கீரிட் எந்திரமாக மட்டுமே இயங்குகிறது.

இந்த அநீதியை அரசியல் அரங்கில் நாம் எதிர்த்துப் போராடுவதில்தான் தீர்வு மறைந்திருக்கிறது. நகர்ப்புற பயங்கரவாதம் நகரத்து ஏழைகளையும், நடுத்தர மக்களையும், கிராமப்புற மக்களையும் மொத்தமாக சித்திரவதை செய்து கொல்லும் கிருமிநாசினி. இதை இயற்கைப் பிரச்சினையாக எளிமைப்படுத்தி சுருக்கித் திரிக்காமல், அரசியல் பிரச்சினையாக உணர்ந்து கொள்வதுதான் தற்போதைய தேவை. அப்போதுதான் மழையின் துயரத்தை மனித சமூகம் வெற்றி கொள்ளும் நிலையை நாம் அடைய முடியும்.

__________________

 1. அருமையான கட்டரை எங்கள் பகுதியில் இதற்கு முன்ன்ன்னர் ஒரு ஆறு ஓடியது…பாடர் கட்டி பிளாட்டு போட்டு விற்றுவிட்டனர்..இப்போது எப்ப மழை பெய்தாலும் இடுப்பளவு தண்ணீர்…நாங்க பரவாயில்ல குடிசை மக்கள் நிலைமை இன்னும் கொடுமை!

 2. உங்கள் கட்டுரை அருமை..
  4 ஆண்டுகளுக்கு முன்னர் பேய்த் மழையை விட இப்போது பெய்த மழையின் அளவு குறைவாக இருந்தாலும், பாதிப்பு அதிகம் என்று கூறி இருந்தீர்கள்.. மிக சரி..
  கூடுதலாக அடியேனின் கருத்து என்னவென்றால்..
  இப்போது உள்ள அரசு மெத்தன போக்காக இருக்கிறது..
  அனேக இடங்களில் பாதாள சாகடைகள் தூர் வாராமல் இருந்ததால், பல இடங்களில் மழை நீர் கலந்த, கழிவு நீர் தேங்கி நிற்கிறது.. தேங்கிய நீரை வெளியேற்றவும் எந்த முயற்சியும் அரசு அதிகாரிகள் எடுக்கவில்லை..
  மழை நின்ற பின்பு சுவாசிக்க முடியவில்லை..

 3. தமிழகத்துல எல்லா நகரத்திலும் தொழில் வளர்ச்சி பெருகியிருந்தா இந்த மாதிரி நடந்திருக்காது. ஆனா என்ன செய்ய உலகமய சூறாவளியில இருக்கும் எல்லா தொழில்களும் அழிஞ்சு போயிட்டுதே!

 4. அருமையான கட்டுரை.

  மும்பை குறித்த உமது பதிவிற்காக காத்திருக்கிறேன்.

  நட்புடன் நித்தில்

 5. //ஏரிகளின் மாவட்டம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தை//

  காஞ்சிபுரமா (அ) செங்கல்பட்டா

 6. //நகர்ப்புற பயங்கரவாதம் நகரத்து ஏழைகளையும், நடுத்தர மக்களையும், கிராமப்புற மக்களையும் மொத்தமாக சித்திரவதை செய்து கொல்லும் கிருமிநாசினி.//

  அது கிருமிநாசினி அல்ல, கிருமி.

 7. தமிழகம் முழுக்க மக்கள் நீரில் மூழ்கி கொண்டிருக்கின்றார்கள்.அரசு பல இடங்களிலும் சீன் காட்டிக்கொண்டிருகின்றது.மழையினால் செத்த மக்களின் எண்ணிக்கை நூறைத்தாண்டிபோய்க்கொண்டிருக்கின்றது.சிறி ஐயப்ப பக்தர் களுக்கு அன்னதானம் போட்டு தன் பாவஙளை போக்கிகொண்டிருகின்றார்கள் புண்ணியவாண்கள்.சாமியே சரணம் ஐயப்பா என விண்ணதிர பிளக்கும் சத்ததில் மழையினால் செத்துப்போனவர்களின் குடும்ப ஒப்பாரி மறைக்கப்படுகின்றது. ஊடகங்கள் நாடு திரும்பிய இங்கிலாந்து அணிக்காக கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றன.மாநகரம் என பீற்றிக்கொள்ளும் சென்னை எப்போதும் இரு பிரிவாகவே உள்ளது
  1.சேரிகள்2.மற்றவர்கள்
  தீ,மழை என எது வந்தாலும் சேரிகள் தான் மூழ்கும்,எரியும்
  தீயும், மழையும் இயற்கையாக இருந்தாலும் அது எப்பொதும் பணமுள்ளவர்களை தொடுவதில்லை.இதுவும் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதலே.

  இது தான் உலகமயத்தின் பயங்கரவாதம்.அதை அமுல் படுத்தும் அரசை கெஞ்சிக்கொண்டிருந்தால்
  இனியும் தீர்வு கிடைக்காது

  http://kalagam.wordpress.com/

 8. உங்க கட்டுரையுடன் நான் முரண் படுகிறேன்.

  சென்னை மற்றும் புற நகரில் அரசின் செயல்பாடுகள் சரி இல்லை, அதுதான் தநீர் தேக்கத்திற்கு காரணம். சரியான வடிகால் கட்ட வில்லை, ஏறி குளங்கள், கால்வாய்களை தூர் வாருவதில்லை. சாலைகள் சரியாக செப்பனிடப் பட வில்லை.

  அரசின் பணம் அனைத்தும் மாவட்ட, ஒன்றிய கழாக (இரு கழஅக்க ஆட்சியிலும்) கொள்ளை அடிக்கப் பட்டன. அரசு அலுவலர்களும் லஞ்சம் வாங்கி கொண்டு பில்லை பாஸ் செய்தனர். ஐ எ எஸ் அதிகாரிகளும் இதில் உடந்தை. பொது மக்களாகிய நாமும் பணம் வாங்கி கொண்டு ஒட்டு அளித்தோம்.

  அதை விடுத்து நகரமயமாக்கல் , எல்லாம் சும்மா.,

  தி நகர், மாம்பலம், , நுங்கம்பாக்கம் என்ன விவசாயா நிலமா . அங்கும் தணீர் இடுப்பளவு தேங்கி உள்ளதே.

  குப்பன்_யாஹூ

 9. mr kuppan saying is 100% correct. these prob is not due to urbanisation. am residing at chengalpet, previously i was in tambaram for one year as we faced these kind of prob we came here. we ve to decentralise the population. here in front of my home very huge vacant land is there. my house owner said thats a housing board area ,proposal is there soon they will build houses. due to NISHA rains that area become a very big lake. if they built house na our home would ve been flooded. so govt should take necessary steps.

 10. குப்பன்னா இஞ்ச பாருங்கோ…
  http://valaignar.blogspot.com/2008/11/blog-post_30.html
  மாம்பலம், தி.நகர், நுங்கம்பாக்கம் ஏரியாவோட ஏரிய குடிச்சது நகரமயமாக்கமா இல்ல அயோத்தியா மண்டபமா 🙂

  கடைசியாக கிடைத்த தகவலின்படி மாம்பலம் வலைப்பதிவர் சங்கத்தின் சார்பா ஏரியை காணுன்னு போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்ளெயின்ட் குடுத்திருக்காங்கலாம் 🙂

 11. அருமையான சுட்டி அர டிக்கெட்டு. அநியாயம்தான்
  எவ்வ்வ்வளவு பெரிய ஏரியை முழுங்கிட்டாங்க..

 12. எங்க ஊர் பிரச்சனை பற்றி உங்களின் கருத்தை அறிய இன்னும் எத்தனை நாள் காத்திருக்க வேணும்? அதற்குள் அடுத்த பிரச்சனை வந்து விட போகுது

 13. மழை நகரத்து ஏழை மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி
  போட்டுவிட்டது. ஏற்கனவே பல இன்னல்களோடு தான் வாழ்க்கையை தள்ளிவிடுகிறார்கள். இப்பொழுது இன்னும் சிரமம்.

  மழையில் காப்பாத்த வராத அரசு, போஸ்ட்மார்ட்டம் செய்ய வரும். நமது நாட்டில் மனித உயிர்கள் மலிவானவை.

  இனி, மழை செய்த அநியாயத்தை விட, இப்பொழுது அரசு அறிவித்திருக்கிற இழப்பீடு பணம் ரூ.. 2000 த்தை கொடுப்பதில் அநியாயம் பண்ணப் போகிறார்கள்.

 14. //இனி, மழை செய்த அநியாயத்தை விட, இப்பொழுது அரசு அறிவித்திருக்கிற இழப்பீடு பணம் ரூ.. 2000 த்தை கொடுப்பதில் அநியாயம் பண்ணப் போகிறார்கள்.//

  2005 எம்.ஜி.ஆர் நகர் போல ஆகாமல் இருந்தால் சரி

 15. காலத்தின் கட்டாயமாக மாறிவிட்ட கட்டுரை. பல ஆறுகளின் பாலங்களைக் கடக்கும் போது பாதி வழியில் முளைத்திருக்கும் கட்டிடங்கள் பெருமழையில் வெள்ளத்தில் மூழ்கும் போது ஆறுகள் நமக்குச்சுட்டுவது போல் இருக்கும் அடேய் எங்கள் எல்கைக்குள் ஏனடா வந்தாய் என்று.

  இப்படியேச் சென்றுகொண்டிருந்தால் கண்டிப்பாக உணவுக்காக இந்தியா கையேந்த வேண்டிய நிலை வரத்தான் போகிறது (இப்போ மட்டும் என்ன வாழுதாம்னு எதிர்க்கேள்வி கேக்காதீங்க).

  விவசாயத்தை முன்னிறுத்தி தனது உணவுத்தேவையில் தன்னிறைவு அடையவில்லை என்றால் மிகப்பெரிய உள்நாட்டுக் கலவரத்தை நோக்கி இந்தியாத் தள்ளப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் எனது எண்ணம்.

  ஒரு பக்கம் நகர வாசிகள் இன்னும் வசதி பெற்றுக்கொண்டே போக…. மறுபக்கம் கிராமங்கள் வளர்வதாகத் தெரிந்தாலும் விளைநிலங்களின் நெருக்கடிகள் விவசாயமின்மை இவற்றால் விளையும் உணவுப்பற்றாக்குறைக்கு… சரியானத் திட்டம் இல்லை என்றால்….
  எண்ணிப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

  இந்தியாவுக்குத் தேவை 2020ல் வல்லரசாக்கும் ஆட்சியல்ல. உணவு உடை உறைவிடம் இவற்றில் தன்னிறைவைக் கொடுக்கும் தொலைதூரப் பார்வையுடைய மக்கள் நலனில் அக்கறை கொண்ட சாதாரண மக்களாட்சி போதும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க