அன்பார்ந்த நண்பர்களே !
வினவுத் தளத்தில் சமூக விமரிசனங்கள், பண்பாட்டுப் பார்வை சார்ந்த கட்டுரைகள் புதிய கலாச்சாரம் சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. நூலில் வந்த முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.
முன்னுரை:
ஒரு குக்கிராமத்தில் நடக்கும் சம்பவம் கூட செய்தியாக உடனுக்குடன் ஊடகங்களில் இடம் பெறும் வண்ணம் தொழில் நுட்பமும், செய்திகளுக்கான வலைப் பின்னலும் அபாரமாக வளர்ந்துள்ளது. ஆனால் தமக்கு வெளியே உள்ள வாழ்க்கையைப் பற்றி மக்கள் தெரிந்து கொண்டு சமூக மனிதனாக பரிணமிப்பதற்கு இந்த வளர்ச்சியே உதவிவிடுவதில்லை. காதல், தற்கொலை, கொலை குறித்த செய்திகள் எல்லாம் மலிவான ரசனையைக் கருத்தில் கொண்டு பரபரப்பிற்காகவே வெளியிடப்படுகின்றன. நவீன வாழ்க்கையின் சீரழிவுகள் மற்றும் தோற்றுப் போன உறவுகளின் சாட்சியங்களாக வெளிப்படும் இத்தகைய சம்பவங்கள் எதுவும் அதற்குரிய கவலையுடனோ அக்கறையுடனோ ஊடகங்களால் வெளியிடப்படுவதில்லை. இதன் விளைவாக, ஒரு கள்ளக்காதல் கொலை கூட அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, தானும் அத்தகையதொரு முயற்சியில் இரகசியமாய் இறங்கலாமென்ற திருட்டுத்தனமான ஆசையை வாசகனின் மனதில் ஏற்படுத்துகின்றது. அதிர்ச்சியின் இடத்தை ஆசை நிரப்புகிறது. விளைவு என்னவென்றால் ஏற்கனவே போலியான உறவுகளால் நீர்த்துப் போயிருக்கும் வாழ்க்கை உறவுகள் தம்மைப் பற்றிய சுய விமரிசனமின்றி காரியவாதத்தையும், பிழைப்பு வாதத்தையும் மாற்றாகத் தேடிக் கொள்கின்றன.
அடுத்த வீட்டில் நடக்கும் சங்கதிகளை இரசனையோடு பார்த்து கிசுகிசுவாய் அசைபோடும் எவரும் அதே சம்பவம் நமது வீட்டிலும் நடக்கலாம் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. நடந்த பிறகே அதன் துயரத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு புறம் நுகர்வுக் கலாச்சாரத்தையும், மறுபுறம் நாட்டையே சுரண்டுவதையும் ஒருங்கே கட்டவிழ்த்து விடும் மறுகாலனியாதிக்க கொள்கையின் பண்பாட்டு சீர்குலைவுகள்தான் பத்திரிகைகளில் நாம் காணும் கொலைகளாய், தற்கொலைகளாய் வடிவெடுக்கின்றன. இங்கே அத்தகைய சம்பவங்களும் தினசரியின் பரபரப்பில் அடித்து செல்லப்படும் செய்திகளும் ஒருகண்ணோட்டத்தை எற்படுத்தும் வண்ணம் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் எமது தோழர்கள் நடத்தும் வினவு இணையத் தளத்தில் சமீப மாதங்களில் எழுதப்பட்டு ஆயிரக்கணக்கான வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றவை. இக்கட்டுரைகளை ஒருங்கே படிக்கும் போது அன்றாடம் நாம் கடந்து செல்லும் பல்வேறு சமூக பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த சரியான பார்வையையும் விழுமியங்களையும் கற்றுக்கொள்ள முடியும் என்பதால் இக்கட்டுரைகளை உங்களை பார்வைக்குத் தருகிறோம்.
தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
புதிய கலாச்சாரம்.
ஜனவரி, 2009
பக்கம் – 48, விலை ரூ.25
இந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 – 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும், புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் பெற முடியும். முகவரிகள்,
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,
( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி: 044 – 2371 8706 செல்பேசி : 99411 75876
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
தொலைபேசி: 044 – 28412367
வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் vinavu@gmail.com , pukatn@gmail.com முகவரிகளில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அருமையான கட்டுரைகள்…
அற்புதமான முயற்சி
பதிவுலகிலிருந்து எழுத்தாளர்…, வாழ்த்துக்கள்
அருமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்
உண்மை கட்டுரை , முதலான முதன்மை கட்டுரை
வளர்க உங்கள் மன தைரியம்
vanakkam