முகப்புஉலகம்ஈழம்ஈழம்: போலீசின் அடுத்த குறி மாணவர்கள்!

ஈழம்: போலீசின் அடுத்த குறி மாணவர்கள்!

-

உயர்நீதி மன்றத்தில் புகுந்து வழக்குரைஞர்கள் மீதும் நீதிபதிகள் மீதும் ஒரு கொலைவெறித் தாக்குதலை நடத்திய சென்னை போலீசு, அடுத்ததாக மாணவர்கள் மேல் பாய்ந்திருக்கிறது. 3.3.09 அன்று காலை 9.30 மணி அளவில் சென்னை மாநிலக்கல்லூரியில் புகுந்து தடியடி நடத்தி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 5மாணவர்களை கல்லூரி வாசலிலேயே கைது செய்து, அவர்களைக் கொடூரமாகத் தாக்கி, பல குற்றப்பிரிவுகளில் பொய் வழக்கும் போட்டு, சிறையில் தள்ளியிருக்கிறது.

கடந்த செவ்வாயன்று காலை 8.45 மணி அளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசு நடத்திய கொலைவெறியாட்டத்துக்கு எதிராகவும் சென்னை மாநிலக்கல்லூரியின் வாயிலில்  அமைதியான முறையில் வாயிற்கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். சுமார் 9.30 க்கு அண்ணா சதுக்கம் ஈ-6 காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன்  ஒரு போலீசு படையுடன் அங்கே வந்து இறங்கினார்.

” தேவ்டியாப் பசங்களா.. என்னடா மயிறு ஈழம்…! நீங்கள்லாம் ஈழத்திலயா பொறந்தீங்க? அங்க என்ன உங்க ஆயியையும் அக்க்காளையுமா …….. பண்றாங்க? அங்க என்னா நடந்தா உங்களுக்கு என்னடா? ” என்று கத்தியபடியே, பேசிக்கொண்டிருந்த தோழர் கணேசனின் பிடறியில் கை வைத்து தள்ளினார் இன்ஸ்பெக்டர் கண்ணன். போலீசு அராஜகத்துக்கு எதிராக முழக்கமிடத் தொடங்கினர் மாணவர்கள்.

பு.மா.இ.மு வின் சென்னை மாவட்ட இணைச் செயலர் தோழர் கணேசனையும், மாநிலக்கல்லூரி மாணவர் அருண் கோபி, சென்னை கிறித்தவக் கல்லூரி மாணவர்கள், வினோத்குமார் மதிவாணன், பள்ளி மாணவர் முத்துக்குமார் ஆகிய 5 பேரைச் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர். இதைக்கண்டு கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே நின்றிருந்த மாணவர்கள் வாயிலை நோக்கி ஓடிவரத் தொடங்கினர். உடனே கல்லூரியின் வாயிற்கதவை இழுத்து மூடிவிட்டு, 5 பேரையும் இரண்டு வண்டிகளில் தூக்கிப் போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் வண்டியைக் கிளப்பினர்.

போகும் வழி முழுவதும் 5 பேரையும் நிறுத்தாமல் அடித்தனர். “அன்னக்கி ஐகோர்ட்டுல வக்கீல்களை அடிச்சா மாதிரி எங்களையும் அடிச்சா பயந்துடுவோம்னு நெனச்சீங்களா?” என்று ஒரு மாணவர் கேட்டவுடனே அவரை கழுத்திலேயே லத்தியால் குத்தினார் இன்ஸ்பெக்டர் கண்ணன். “ஆமாண்டா.. கோர்ட்டுல பூந்து அடிச்சா மாதிரிதான். எல்லா எடத்திலயும் அடிப்போம். நடு ரோட்ல ஓடவிட்டு நாயை அடிக்கிற மாதிரி அடிப்போம். எவனும் எங்கள ஒண்ணும் புடுங்க முடியாது” என்று கொக்கரித்தார் கண்ணன்.

அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் வண்டி நின்றது. ஏட்டு சேகர் வண்டியின் சன்னல் கண்ணாடியை உடைத்தார். தன் சட்டையைத் தானே கிழித்துக் கொண்டார் எஸ்.ஐ சதானந்தம். மாணவர்கள் திருவல்லிக்கேணி ஈ-1 காவல் நிலையத்தில் இறக்கப்பபட்டனர். வாசலில் நின்றிருந்த ஏ.சி சோமசுந்தரமும், 20 போலீசாரும் அங்கேயே மாபணவர்களைச் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர். “ஈழத்துல உங்க அக்காளயா …. புடுங்குறாங்க? அங்க என்னா நடந்தா உங்களுக்கு என்னடா?” என்று கேவலமாக ஏசிக் கொண்டே பெண் போலீசாரும் சேர்ந்து அடித்தனர்.  அடிக்கும்போது தங்கள் பாட்ஜை கவனமாக மறைத்துக் கொண்டனர். மாணவர்கள் எதிர்த்து முழக்கமிட்டனர். கணேசனே கீழே தள்ளி அவர் வயிற்றிலேயே பூட்ஸ் காலால் மிதித்துத் துவைத்து விட்டு, முகத்தில் காறி உமிழ்ந்தார் இன்ஸ்பெக்டர் கண்ணன்.

பிறகு,  போகிற வருகிற போலீசுக்காரனெல்லாம் நாலு அடி அடித்துவிட்டுச் சென்றனர்.

“ஈழம்.. ஈழம்… என்னடா மயிறு ஈழம்?” “நீயெல்லாம் வக்கீலுக்கு சப்போர்ட்டா? அவனுங்க வாங்குனத பாத்தீல்ல” “தாயோளி,  எல்லாருக்கும் குண்டாஸ் தான். வெளியவே வரமுடியாது”  சுமார் 11.30 வரை இந்த வசவும் அடியும் தொடர்ந்தன. பிறகு வந்தார் ஏ.சி.முத்துவேல் பாண்டி. எதுவுமே நடக்காதது போல நைச்சியமாகப் பேசத்தொடங்கினார். “நீங்க எதுவும் பிரச்சினையக் கிளப்பலன்னா செக்சன் 151 இல ஒரு கேஸ போட்டுட்டு விட்டுடறோம்” என்று பேரம் பேசினார். மாணவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பல குற்றப்பிரிவுகளில் பொய் வழக்கு போடப்பட்டது.

செய்தி கேள்விப்பட்ட உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக உடனே  திரண்டு வந்தனர். ” இது பொய் வழக்கு. மாணவர்களை ரிமாண்டு செய்யக்கூடாது. அவர்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வாதாடினர். பிறகு, மாஜிஸ்டிரேட்டின் உத்தரவுப்படி 5 பேரையும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், மருத்துவர்களிடம் தனியே பேசி, “மாணவர்களை அட்மிட் செய்யத் தேவையில்லை” என்று எழுதி வாங்கிக் கொண்டு எல்லோரையும் சிறைக்கு அனுப்பிவிட்டனர்.

ஈழத்தில் சிங்கள இனவெறியர்கள் நடத்தும் தாக்குதலையும், உயர்நீதி மன்றத்தில் போலீசு நடத்திய தாக்குதலையும் கண்டித்துப் பேசியதுதான் மாணவர்கள் செய்த ஒரே குற்றம். பிப்ரவரி 19 ம் தேதியன்று சுப்பிரமணியசாமி என்கிற ‘மாமா’வுக்கு முட்டையடி பட்டதற்காக உயர்நீதிமன்றத்தையே ரத்தக்களறியாக்கிய காவல்துறை, “ஈழத்தில் குண்டடி படுபவன் உன் மாமனா மச்சானா?” என்று மாணவர்களக் கேட்கிறது.

உயர்நீதி மன்றத்தைத் தாக்கிய போலீசுக்கு ஆதரவாக வரிந்து கட்டுகின்றன பத்திரிகைகள். தங்கள் குடும்பத்தினரை வைத்து உண்ணாவிரதம் நடத்தி மிரட்டுகிறது காவல்துறை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளோ போலீசுக்கு ஆதரவாக பகிரங்கமாக அறிக்கை விடுகிறார்கள். ஆனால் வழக்குரைஞர்களை ஆதரித்து மாணவர்கள் பேசினால் தடியடி, பொய்வழக்கு, சிறை.

“நீதிமன்றம் மூடிக் கிடந்தால் மக்களுக்கு கஷ்டம். புறக்கணிப்பை கைவிட்டு கோர்ட்டுக்கு திரும்புங்கள்” என இன்று வக்கீல்களுக்குக வேண்டுகோள் விடும் இதே அரசுதான், ஈழப் போராட்டங்களை முடக்குவதற்காக மாணவர்களுக்கு காலவரையின்றி விடுமுறை விட்டது. இப்போது கல்லூரி திறந்தவுடன் ஈழம் குறித்து மாணவர்கள் பேசினால் அதனை முளையிலேயே கிள்ளுவதற்காக மூர்க்கமாகத் தாக்குகிறது.

இன்று மாணவர்கள் பட்ட அடியைக் காட்டிலும் முக்கியமானது அவர்களிடம் போலீசு பேசிய பேச்சு. “வக்கீலையும் நீதிபதியையுமேயே அடிச்சோம். நீ என்னடா சுண்டைக்காய்?” என்று பகிரங்கமாகக் கொக்கரித்திருக்கிறது காவல்துறை. “சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் போலீசு எப்படிப்பட்ட அட்டூழியமும் செய்யலாம். போலீசு சொல்வதுதான் சட்டம். அவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள்” என்ற கருத்தை அரசும் பத்திரிகைகளும் உருவாக்கியிருக்கிறார்கள். இதனால்  போலீசின் கொட்டம் ஆதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு நாம் முடிவு கட்டியாக வேண்டும்.

பிப்ரவரி 19 ம் தேதியன்று உயர்நீதி மன்றத்தில் போலீசு நடத்திய ரவுடித்தனத்தை நாம் அனைவரும் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். போலீசார் நீதிபதிகளையே தாக்கியபோதும், ஒரு போலீசு அதிகாரி கூட இதுவரை தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படவில்லை. ஆனால் ஈழ மக்களுக்காக அமைதி வழியில் போராடிய நம் மாணவர்கள் திருச்சியில் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்கள். இன்று மாநிலக்கல்லூரி, கிறித்தவக் கல்லூரி மாணவர்களை அடித்து, சிறையிலும் தள்ளியிருக்கிறார்கள். இதை நாம் அனுமதித்தால் நாளை ஒவ்வொரு கல்லூரிக்குள்ளும் காவல்நிலையம் வைப்பார்கள்.

மாணவர்களுடைய கோரிக்கையும் வழக்குரைஞர்களின் கோரிக்கையும் ஒன்றுதான். “அராஜகம் செய்த போலீசார் பணிநீக்கம் செய்யப்படவேண்டும். இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்.ஐ  சதானந்தம், ஏட்டு சேகர் ஆகிய மூவர் மீதும் கிரிமினல் வழக்கு போட்டு, பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.” இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவோம்.

ஈழத்துக்கும் வழக்குரைஞர்களுக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பது நம் உரிமை. நேற்று

மாணவர்களுக்காகக் குரல் கொடுக்க  வக்கீல்கள் வந்தவுடனே, “இவர்கள் வக்கீல் பிரச்சினையைப் பேசவில்லை. ஈழப் பிரச்சினையைப் பேசியதற்காகத்தான் கைது செய்திருக்கிறோம்” என்று பொய் சொல்லி அவர்களைத் திருப்பியனுப்ப முயன்றிருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

வழக்குரைஞர்கள் ஏமாறவில்லை.

ஈழப்பிரச்சினையில் வக்கீல்களும் மாணவர்களும்தான் தொடர்ந்து உறுதியாகப் போராடியிருக்கிறோம். எனவே, இரண்டு பிரிவினரும் சேர்ந்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறது போலீசு. அவர்களுடைய அச்சத்தை உண்மையாக்குவோம்! தமிழகம் முழுவதும் வழக்குரைஞர்களின் போராட்டத்துடன் மாணவர்களும் இணைந்து கொள்வோம்!

-புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னைக் கிளை வெளியிட்ட பிரசுரம்.