Sunday, November 10, 2024
முகப்புசெய்திநானோ கார் : மலிவின் பயங்கரம் !

நானோ கார் : மலிவின் பயங்கரம் !

-

சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனியர் அம்பானி மண்டையைப் போட்ட பிறகு பந்தாவாக அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் விளம்பரத்திற்கு எல்லா மொழி தினசரிகளிலும் ஒரு பக்க விளம்பரம், “ஒரு தபால் கார்டுக்கு ஆகும் செலவை விட இந்தியாவில் செல்பேசி கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என்ற திருபாய் அம்பானியின் கனவை நிறைவேற்றுகிறோம்” என்று பீற்றினார்கள். உண்மையில் ரிலையன்சு செல்பேசி மலிவு விலையில் கூறுகட்டி விற்கப்படும் காய்கறி போல அள்ளி இறைத்தார்கள். மக்களுக்கும் அப்படி அம்பானியின் கனவை ஜூனியர் அம்பானிகள் நிறைவேற்றி விட்டார்களோ என ஒரு மயக்கம் இருந்தது.

அப்புறம்தான் அம்பானி சகோதரர்களின் பிக்பாக்கட் இரகசியம் வெளிப்பட்டது. தொலைபேசித் துறையில் அவர்கள் செய்த ஊழல், வெளிநாடு அழைப்புக்களை உள்ளுர் அழைப்புக்களாக மாற்றி பொய் எண் கொடுத்து பல நூறு கோடி ரூபாயை ஏப்பம் விட்டது, அரசியல் செல்வாக்கினால் அந்த திருட்டுத்தனத்திற்கு ஜூஜூபி அபராதம் கட்டி ஆட்டையைப் போட்டது எல்லாம் வெளிவந்த பிறகு திருபாய் அம்பானியல்ல, செத்த பின்னும் திருடும் திருட்டுபாய் அம்பானி என்பது சந்திக்கு வந்தது. அம்பானியின் ஆதாரப்பூர்வமான வம்பு தும்புகளையெல்லாம் கிழக்கு பதிப்பகம் போட்டிருக்கும் அம்பானி பற்றிய பக்திப் பரவசமான வரலாற்று இலக்கியத்தில் இருக்காது என்பதை முன்னரே சொல்லிக் கொள்கிறோம். பின்னர் இதெல்லாம் கிழக்கு பதிப்பகத்தில் இல்லையே என்று அசடு போல அதிர்ச்சியடையக்கூடாது.

திருபாய் அம்பானியின் கனவைப் போல ரத்தன் டாடாவும் ஒரு கனவு கண்டார். மும்பையின் மழைக்கால நாள் ஒன்றில் காரில் பயணம செய்த ரத்தன் டாடா ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் மழையில் நனைந்து கொண்டு ஸ்கூட்டரில் செல்வதைப் பார்த்து பரிதவித்துப் போனாராம். உடனே ஸ்கூட்டர் விலையில் அல்லது சற்று அதிகமாக ஒரு இலட்சத்தில் கார் தயாரித்து நடுத்தர வர்க்கத்தை கடைத்தேற்றுவது என்று முடிவு செய்தாராம். இதைக் கேள்விப்பட்ட மக்களும், அவர்களுக்கு முன்னரே டாடாவின் அருளுள்ளத்தை ஊதி விட்ட ஊடகங்களும் இந்த ஒரு இலட்ச ரூபாய் மதிப்புள்ள கார் சாத்தியம்தானா என்று கொஞ்சம் சந்தேகத்துடனும், நிறைய சந்தோஷத்துடனும் காத்திருந்தார்கள்.

டாடாவின் கனவை நனவாக்குவதற்கு மேற்கு வங்கத்தின் டாடா கம்யூனிஸ்டுகள் ஓடோடி வந்தார்கள். சிங்கூரில் இருபோகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் சுமார் 950 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து வம்படியாக பிடுங்கி பேருக்கு நிவாரணத்தொகை கொடுத்துவிட்டு மலிவு விலைக்கு டாடவுக்கு விற்றார்கள். இதுபோக டாடாவுக்கு சில ஆயிரம் கோடி கடன், மற்ற சலுகைகள் என தீபாராதனை திவ்யமாக நடந்தது. என்ன ஏது என தெரியாமல் தமது நிலங்களை மார்க்சிஸ்டு அரசு பிடுங்கியதைக் கண்ட விவசாயிகள் அதை எதிர்த்து போர்க்குணத்துடன் போராடினார்கள். அதையைம் மீறி டாடா, தமது பங்காளி புத்ததேவுடன் இணைந்து ஆலையை நிறுவினார். இடையில் நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அடாவடியாக நிறுவிய மேற்கு வங்க அரசைக் கண்டித்து விவசாயிகள் போர்க்குணத்துடன் போராட, மார்க்சிஸ்டு அரசு போலீசு மூலம் பலரைச்சுட்டுக் கொன்றது. இதன் மூலம் சிங்கூருக்கும் இதுதான் பாடமென்று எச்சரிக்கையும் விடுத்தது.

ஆனால் சிங்கூர் விவசாயிகள், எதிர்க்கட்சிகள் உதவியுடன் எதிர்ப்பைத் தீவிரப்படுத்தி தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராடினார்கள். பலநாள் நீடித்த இந்தப் போராட்டத்தைப் பார்த்து டாடாவுக்கு பெருங்கோபம் வந்தது. உடனே தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதாகவும் அறிவிக்கப்பட்ட தேதியில் நானோ கார் வெளிவரும் எனவும் சபதம் செய்தார். அதுவரை உத்தரகண்டில் இருக்கும் டாடா மோட்டார் தொழிற்சாலையில் தற்காலிகமாக நானோ கார் தயாரிக்கப்படும் எனவும் அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலிக் கம்யூனிஸ்டு அரசு ரத்தன் டாடாவிடம் மண்டியிட்டு போகாதே என் கணவா என்று சென்டிமெண்டாகவும் புலம்பிப் பார்த்தது. விவசாயிகளை நந்திகிராம் போல அடக்குவதற்குத் துப்பில்லையென முறைத்துக் கொண்ட டாடா டூ விட்டுவிட்டு நடையைக் கட்டினார். அப்போதும் டாடாயிஸ்டு கம்யூனிஸ்டுகள் மேல் எந்தத் தவறுமில்லையென பாராட்டுப் பத்திரம் அளித்துவிட்டுத்தான் சென்றார்.

ரத்தன் டாடவுக்கும், புத்ததேவ் பட்டாசார்யாவுக்கும் எந்த அளவு தோழமை உறவு இருந்ததோ அதற்கு கடுகளவும் குறையாமல் டாடாவுக்கு மோடியுடனும் நட்பிருந்தது. மேற்கு வங்கம் கைவிட்டால் என்ன குஜராத் காத்திருக்கிறது என்று மோடி கம்பளம் விரித்தார். இமைப்பொழுதில் டாடா என்ற முதலாளிக்கும், மோடி எனும் பாசிஸ்டுக்கும் பேச்சுவார்த்தை நடந்து சடுதியில் ஒப்பந்தம் போடப்பட்டது. இனிமேல்தான் இலட்ச ரூபாய்க்கு விற்கப்படும் நானோ கார் மக்களுக்கு பட்டை நாமம் போட்ட கதை வருகிறது. நானோ காரின் மலிவு விலைக்கும், அதை சாத்தியமாக்கிய டாடாவின் அளப்பரிய ‘சமூக’ சேவைக்கும் மயங்கிப்போன நடுத்தர வர்க்கம் தங்களிடமிருந்து பிடுங்கப்ட்ட பணம் டாடாவின் மலிவு விலை காருக்கு எப்படி போய்ச் சேருகிறது என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

10.8.2008 அன்று குஜராத் அரசுக்கும் டாடா நிறுவனத்திற்கும் போடப்பட்ட இந்த இரகசிய ஒப்பந்தம் யார் யாருக்கு சேவை செய்கிறார்கள் என்பதை போட்டுடைக்கிறது.

குஜராத்தின் சதானந்த் இடத்தில் அமைய இருக்கும் டாடாவின் நானோ தொழிற்சாலைக்கு 1100 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விவசாய நிலங்களை விவசாயமற்ற நடவடிக்கைகளுக்கு விற்கக்கூடாது என்ற விதி மீறப்பட்டு அதுவும் மலிவான விலையில் 400 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணமும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு எட்டு தவணைகளில் டாடா நிறுவனம் கட்டினால் போதும். விவசாய நிலங்களை இப்படி தொழிற்சாலைக்கு கொடுக்கும் பட்சத்தில் அதற்கென தனியாக பணம் கட்ட வேண்டுமென்ற விதியும் டாடவுக்காக ரத்து செய்யப் பட்டது.

2000 முசூலீம் மக்களை கொன்ற கும்பலுக்கு தலைமை தாங்கியிருக்கும் மோடிக்கு அப்பாவி விவசாயிகளை மிரட்டத் தெரியாதா என்ன? மேலும் மேற்கு வங்கம் போல அரசியல் ரீதியாக அணி திரள இயலாத அந்த அப்பாவிகள் தமது நிலத்தை கொடுத்துவிட்டு இன்றும் புழுங்குகின்றனர். அடுத்து இந்த நில விற்பனைக்கான பத்திரப்பதிவுக்கான 20 கோடி ரூபாயை மாநில அரசு ரத்து செய்து இலவசமாக பதிவு செய்து கொடுத்திருக்கிறது.

டாடா நிறுவனம் தொழிற்சாலையை அமைப்பதற்கு 9570 கோடி ரூபாயை குஜராத் அரசு 0.1% வட்டிக்கு கொடுத்திருக்கிறது. இதில் சிங்கூரிலிருந்து, சதானந்த் பகுதிக்கு தொழிற்சாலையை மாற்றுவதற்கான செலவுப் பணம் 2330 கோடிரூபாயும் அடக்கம். இந்த 9570 கோடிப் பணம் இருபது வருடங்களுக்குப் பிறகு டாடா நிறுவனம் அதுவும் பல தவணைகளில் திருப்புமாம். தொழிற்சாலை அமைய இருக்கும் இடத்தில் தரமான சாலை, 14,000 கனமீட்டர் நீர், மின்வசதி இன்னபிற அடிப்படைக் கட்டுமான வசதிகளை 700 கோடி ரூபாயில் குஜராத் அரசே செய்து கொடுக்கும். மின் தீர்வை கட்டுவதற்கும் டாடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு குஜராத் அரசு செலவு செய்யப்போகும் அல்லது இழக்கப்போகும் பணத்தின் மதிப்பு 30,000 கோடி ரூபாய்.

ஆக ஊரைக் கொள்ளையடித்து ஆடம்பரத் திருமணத்தில் கிடா வெட்டி மக்களுக்கு இலவச விருந்து அளிக்கும் கதைதான் இங்கும் நடந்திருக்கிறது. இவ்வளவு சலுகைகள், கடன் தொகை, இலவசமான அடிப்படை வசதிகள் எல்லாம் இருந்தால் நானோ காரை ஒரு இலட்ச்திற்குப்பதில் இலவசமாகவே அளிக்கலாமே? ஆம் நானோ காருக்கு நாம் கொடுக்கும் ஒரு இலட்சத்திற்கும் பின்னால் நமது பணம் இரண்டு இலட்சம் ஏற்கனவே பிடுங்கப்பட்டிருக்கிறது.

இன்னும் எட்டு மாதங்களில் உற்பத்தியை ஆரம்பிக்கப் போகும் தொழிற்சாலையில் முதலில் ஆண்டுக்கு 2.50 இலட்சம் கார்களும், பின்னர் அது 5 இலட்சமாக உயர்த்தி உற்பத்தி செய்யப்படுமாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் திட்டமும் உண்டு.

விவசாயிகளுக்கும், சிறு தொழில் செய்யும் முதலாளிகளுக்கும், கல்விக்காக மாணவர்களும் கடனுக்காக வங்கி சென்றால் ஆயிரம் கேள்விகளையும், அலைக்கழிப்புக்களையும் சந்திக்கும் மக்கள் இருக்கும் நாட்டில் ஒரு முதலாளிக்கு மின்னல் வேகத்தில் எவ்வளவு பெரிய சலுகைகள், கடன்கள்?

மற்றபடி டாடாவுக்கும், குஜராத் அரசுக்கும் போடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் இரகசியமாகும். இதை எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசு தனது அரசியலுக்காக வெளிக் கொணர்ந்திருக்கிறது. இப்படி அரசு இரகசியம் எப்படி வெளியே போனது என மோடியின் அரசு விசாரிக்கிறதாம். இந்த விவரங்கள் அனைத்தும் 12.11.2008 தேதியிட்ட இந்து பேப்பரில் வந்திருக்கிறது.

நானோவின் பின்னே இப்படி அப்பட்டமான கொள்ளையும், சுரண்டலும் இருப்பதுதான் அதன் மலிவு விலைக்கு காரணம். பொதுத் துறைகளை தனியார் முதலாளிகளுக்காக நசிய விட்டு பின்னர் தவிட்டு ரேட்டில் விற்பனை செய்யும் நாட்டில் ஒரு முதலாளிக்கு முப்பதாயிரம் கோடி இனாமென்றால் இந்த நாட்டை ஆள்வது யார்? தரகு முதலாளிகளா, இல்லை ‘ மக்களால்’ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா?

தனது விளம்பரத்தில் பல வசதிகள் இருப்பதாக புனைந்துரைக்கும் டாடாவின் நானோ கார் crash test எனப்படும் விபத்து சோதனையை மட்டும் செய்து சான்றிதழ் வாங்கவில்லையாம். இதன் பல உறுப்புக்கள், இணைப்புக் கருவிகள் மலிவான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டிருப்பதால் டாடா இந்த சோதனைக்கு தயாராக இல்லை. அதாவது இந்தக் காரை ஒரு டூ வீலர் கூட மோதி பொடிப்படியாக நொறுக்கி விடலாம். நடுத்தர வர்க்கம் சுலபமான வழியில் பரலோகம் செல்லும் வசதியை நானோ ஏற்படுத்தித் தருகிறது.

உலகமெங்கும் பொருளாதார வீழ்ச்சிக்காக ஆட்டோமொபைல் தொழில் நசிந்து வரும வேளையில் டாடவின் நானோ கார் அறிமுகம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். மேலும் இந்தக் காரை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் டாடவிற்கு இருக்கிறதாம். 2011 ஆம் ஆண்டு விபத்து சோதனை உட்பட எல்லா சோதனைகளிலும் வென்று ஐரோப்பாவின் மலிவான கார் என நானோ விற்கப்பட இருக்கிறதாம். வெள்ளைக்காரனது உயிருக்கு மட்டும் அவ்வளவு எச்சரிக்கைகள்! அதை பரிசோதிப்பற்கு இந்தியனின் உயிர்! பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களது சோதனைகளுக்கு இந்திய மக்களை எலிகளைப் போலப் பயன்படுத்துவது போல டாடவும செய்கிறது.

இந்தியாவின் பொதுப்போக்குவரத்திற்கு பயன்படும் வாகனங்கள் மொத்த வாகனங்களில் ஐந்து சதவீதமென்றால் இதைப் பயன்படுத்தும் மக்களின் சதவீதம் 70. ஆனால் மொத்த வாகனங்களில் 70 சதவீதததைப் பிடித்திருக்கும் தனியார் வாகனங்கள் அல்லது கார்கள் மக்களில் 5 சதவீதம் பேருக்குத்தான் பயன்படுகிறது. எனில் நானோவால் ஏமாறப்போவது பெரும்பான்மை மக்கள்தான்.

அமெரிக்காவின் போர்டு முதலாளிக்காக அங்கே பொதுப் போக்குவரத்து திட்டமிட்டே ஒழிக்கப்பட்டு கார் என்பது அத்தியாவசியப் பொருளாக மாற்றப்பட்டது. அப்போதும் திவால் நிலைக்கு வந்திருக்கும் போர்டு கம்பெனிக்கு அமெரிக்க அரசு நிவாரணத் தொகை வழங்கி காப்பாற்றுகிறது. இந்தியாவில் தொழிலை ஆரம்பிப்பதற்கே அரசு போட்டி போட்டுக்கொண்டு பணத்தை வழங்குகிறது. இரண்டிற்கும் பெரிய வேறுபாடில்லை.

இறுதியாக நானோ கார் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்ட24.3.08 திங்கட்கிழமை மேற்கு வங்கத்திற்கு ஒரு சோகமான நாளென்று சி.பி.எம்.டாடயிஸ்டு அரசின் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் நிருபம் சென் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். மேற்கு வங்கம் சிங்கூரில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய நானோ கார் மோடியின் மண்ணிற்கு சென்றது குறித்துத்தான் இந்த வருத்தம். குஜராத் அரசு செலவிடப்போகும் முப்பதாயிரம் கோடி ரூபாயை டாடா என்ற முதலாளிக்காக மேற்கு வங்கம் செலவிட முடியவில்லையே என பாட்டாளிகளின் தோழன் இல்லையில்லை டாட்டாக்களின் தோழன் வருத்தப்படுகிறார். ஆனால் டாட்டாக்களை கைவிடாமல் இந்துக்களின் தோழன் உதவியிருப்பதால், டாட்டாக்களின் தோழன் அடுத்த தேர்தலில் இந்துக்களின் தோழனோடு கூட்டணி வைத்துக்கொண்டால் யாரும் வருத்தப்படத் தேவையில்லை.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் நானோ காரின் மலிவும், அரசியலும், திரைமறைவுச்சதிகளும், ஒன்றை வெளிப்படையாக தெரிவிக்கின்றன. அது இந்திய மக்களை அவர்களுக்கே தெரியாமல் சுரண்டுவதில் வலதும் இடதும் சேர்ந்து தரும் ஆதரவில் முதலாளிகளின் ஆட்சிதான் இங்கு நடக்கிறதென உணர்த்துகின்றது.

ஒரு இலட்ச ரூபாய்க்கு காரா என வாய் பிளப்பவர்களின் மூளைக்கு இந்த விளம்பரத்தையும் , கட்டுரையையும கொண்டு செல்லுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

டாடாவின் நானோ காருக்கு வினவின் இலவச ‘விளம்பரம்’ !

nano-tamil-ad1(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

 

  1. சரியான நேரத்தில் வந்த சிறப்பான பதிவு.
    கண்ணன்! நேற்று இந்து செய்தித்தாளில் கிராஷ் டெஸ்ட் சோதனையை அவர்கள் செய்யவில்லை என்றல்லவா எழுதியிருந்தனர்?

  2. ஏழைகளை ஏழைகளாக வைத்திருந்தால் தான் கம்யூனிசம், சோசியலிசம் போன்ற கொள்கைகள் உயிருடன் இருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் உங்களைப்போன்ற ஏழைகளின் “தோழர்கள்” நானோ காருக்குக் காட்டும் எதிர்ப்பு.

  3. ஏழைகளை ஏழைகளாக வைத்திருந்தால் தான் கம்யூனிசம், சோசியலிசம் போன்ற கொள்கைகள் உயிருடன் இருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் உங்களைப்போன்ற ஏழைகளின் “தோழர்கள்” நானோ காருக்குக் காட்டும் எதிர்ப்பு.

  4. “ஏழைகளை ஏழைகளாக வைத்திருந்தால் தான் கம்யூனிசம், …”
    லட்ச ரூபாய் கொடுத்து விட்டு ஏழைகள் காத்திருந்தால், நாடு நலம் பெறும் என்று நம்புவோர்க்கு, என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது..சங்கு ஊதுவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை

  5. //ஒரு பக்கப் பார்வை என்பது தெளிவாக விளங்குகிறது.//

    மன்னிக்கவும் ராஜாநடராஜன், இது எப்படி ஒரு பக்கப்பார்வையாகும்… 1லடச ரூபாய் கார்..ஆஹா ஓஹோ என புகழ்வது ஒரு பக்கம்…அதன் பின்ன்னியை விளக்கும் இந்த பதிவு மறுபக்க பார்வையல்லவா? இதில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களை மறுக்க முடியுமா? இத்தனைக்கும் மேற்கு வங்கத்தில் நடந்த அக்கிரமங்களை முழுவதுமாக கூறவில்லை இந்த பதிவு….! அப்படியே ஒரு தலைபட்சம் என நீங்கள் கருதினால் அது எது என எழுதுங்கள் அல்லது நடுநிலையாக நீங்கள் கருதுவதை எழுதுங்கள். உங்களிடமிருந்து இது போன்ற ஆக்கங்களைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

  6. //ஏழைகளை ஏழைகளாக வைத்திருந்தால் தான் கம்யூனிசம், சோசியலிசம் போன்ற கொள்கைகள் உயிருடன் இருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் உங்களைப்போன்ற ஏழைகளின் “தோழர்கள்” நானோ காருக்குக் காட்டும் எதிர்ப்பு.//

    யோவ் அனானி என்னையா தமாசு இது? எந்த ஏழைய்யா லட்ச ரூவா குடுத்து காரு வாங்கரான்? இல்ல லட்ச ரூவா இருந்தா காருதான் வாங்குவானா? இல்ல லட்ச ருவா காரு வாங்குனா அவன் ஏழ்மை போயி பணக்காரன் ஆயிடுவானா? உங்களுக்கு சோசலிசம் மேல காண்டா இருக்கலாம் அதுக்காக இப்படி வந்து உளரக்கூடாது. போய் பதிவ படிச்சிட்டு விவரங்கள சேலஞ்சு பண்ணு…ம் டைம் ஆவுது!

  7. நல்ல பதிவு. அம்பானி குழுமத்தை பற்றீ அதிகார வட்டத்தில் இருக்கும் என் நண்பர் ஒன்றூ சொல்வார்.
    இந்த நாட்டிற்கு யார் பிரதம மந்திரியாக வந்தாலும், தேர்தெடுக்கப்படும் finance minister R+ அல்லது R- என்பதைதான் விசாரிப்பாராம். அதாவது, அந்த RELIANCE குழுமத்திற்கு ஆதரவாகவா( R+) அல்லது எதிராகவா(R-) . R+ மட்டும்தான் finance minister ஆக முடியும். ( நகைச்சுவைக்காக, நான் O+ Blood பிரிவை சேர்ந்தவன்). நீனைத்து பாருங்கள், CORPORATE COMPANY செல்வாக்கை. corporate company களூக்கு கம்யூனிச கட்சி, மதவாத கட்சி என்ற வேறூபாடெல்லாம் கிடையாது. அவர்களூக்கு வேண்டியது Healthy Bottom Line. அதாவது, லாபம் மட்டுமே. அதற்காக பல கொலைகளீயும், பலர் வேலைக்கும் கல்தாவும் கொடுப்பார்கள்.

  8. சற்றுமுன் கிடைத்த தட்ஸ் தமிழ் செய்தி. டமுக்குடப்பா நடுநிலை அங்கி (கோவணம்னா சில பேருக்கு கோவம் வருது) தரித்தவர்களுக்கு

    http://thatstamil.oneindia.in/lifestyle/automobiles/2009/0325-nano-bookings-to-reduce-tata-motors-funding.html
    ……………………………………………………………………………
    மும்பை: நானோ கார் மூலம் கிடைக்கும் தொகையை பயன்படுத்தி கடந்த ஆண்டு டாடா நிறுவனம் வாங்கிய ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனஙகளுக்கான பணத்தை செலுத்தும் என்று தெரிகிறது. இதன்மூலம் டாடா தனது நிதி பிரச்சினைகளை சமாளிக்கவுள்ளது.

    டாடா நிறுவனம் கடந்தாண்டு பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னதாக இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் தயாரிப்பு நிறுவனங்களை ரூ. 9,200 கோடிக்கு கையகப்படுத்தியது. வரும் ஜூன் மாதம் இந்நிறுவனங்களை வாங்கியதற்கான ஒப்பந்தத்த தொகையின் ஒரு பகுதியை டாடா கொடுக்க வேண்டியுள்ளது.

    ஆனால், 2008ம் ஆண்டு கணக்கின்படி டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தில் கைவசம் ரொக்கமாக ரூ. 500 கோடி மட்டுமே இருந்தது. இதை நானோ விற்பனையின் மூலம் சரிகட்ட டாடா முயற்சி மேற்கொண்டுள்ளது.

    நானே கார் வாங்க விரும்புபவர்களுக்கு ரூ. 300 என்ற விலையில் விண்ணப்பங்களை வினியோகித்து வருகிறது டாடா மோட்டர்ஸ் நிறுவனம். மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பால் லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவியும் என்று தெரிகிறது.

    இவர்களில் குலுக்கல் முறையில் முதலில் ஒரு லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதலில் கார் வழங்கப்பட இருக்கிறது. கார் வாங்க விரும்புபவர்களை ஏப்ரல் 9ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் ரூ. 95,000 வைப்பு தொகையை செலுத்த வேண்டும்.

    இவர்களுக்கு கார்கள் வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா இந்தாண்டு 50,000 முதல் 60,000 நானோ கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. எப்படியும் 5 லட்சம் பேராவது விண்ணப்பிப்பார்கள் என இந்நிறுவனம் எதிர்பார்ப்பதால் அடுத்த ஆண்டு கார் உற்பத்தியை 2.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.

    5 லட்சம் கார்கள் விற்பனை செய்வதென்றால் டாடாவுக்கு முன்கூட்டியே வைப்பு தொகையாக ரூ. 5,000 கோடி கிடைக்கும். இதை வைத்து டாடா தனது நிதி பிரச்சினைகளை எளிதாக சமாளித்துவிடும் என தெரிகிறது.

    இது குறித்து அமெரிக்காவின் மெரிலிஞ்ச் வங்கியை சேர்ந்த நிபுணர்கள் அருண் மற்றும் குணால் தயாள் கூறுகையில், டாடா நிறுவனத்துக்கு விண்ணப்ப கட்டணமே பெரிய லாபமாக இருக்கும். அவர்கள் கார் கொடுக்க தாமதமானால் 1 ஆண்டு வைப்பு தொகைக்கு 8.5 சதவீதமும், 2 ஆண்டு வைப்பு தொகைக்கு 8.75 சதவீதமும் வட்டி தருவதாக கூறியுள்ளார்கள். இதனால் பணத்தை போட்டவர்கள் திரும்பப் பெற எண்ண மாட்டார்கள். இதனால் அவர்களிடம் பணபுழக்கம் தாராளமாக இருக்கும் என்கிறார்.
    ………………………………………………………..
    ஆக டாடா காரு செய்யறது மட்டும் ஓசியில்ல அவன் பட்ட கடனை(!) கூட ‘ஏழைகளின்’ காசை கொன்டு அடைக்கிறான்.. நல்லா இருங்கடே!

  9. அருமையான பதிவு… மோடி, டாடாவுக்கு 30,000 கோடி மொய் எழுதியதை போல்.. அலைக்கற்றை (spectrum) விற்பனையில் நமது கலைஞர் & கோ எழுதிய 60,000 கோடி மொய் வாங்கியது நினைவுக்கு வருகிறது…

  10. மன்னிக்கவும்,

    இது கட்டுரைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத செய்தி,

    தற்போது சிதம்பரத்தில் பார்ப்பன பண்டாரங்களின் ஊர்வலம் நடைபெற்று வருகிறது,இல .கணேசன்,ராம.கோபாலன் தலைமையில் இந்து அறநிலையத்துறை கோயிலை கையகப்படுத்தியதை கண்டித்து ஊர்வலம் நடைபெறுகிறது.தற்போது ஆர்.எஸ்.எஸ் மையமிட்டு கலவரச்சூழலை ஏற்படுத்திவருகின்றன.

  11. அட்டகாசமான பதிவு… ஒரு ரூபாய்க்கு புளுத்த அரிசி திங்குற மக்கள் இருக்குற நாட்டுல என்ன **ருக்குடா லட்ச ரூபா காரு? வயிறு எரியுது…இதவிட நம்மள கேவலப்படுத்த முடியாது!

  12. அம்பானி சும்மா தொழில் செய்து திறமையால் வந்தார். அதனால் எல்லோரும் அப்படி வரலாம்.. என்பது போன்ற தன்னம்பிக்கை புத்தக் குப்பைகளைப் படிப்பத்துடன் அவரின் மாறுபட்ட தெறமைகளை (எழுத்துப் பிழை அல்ல) அறிந்து அனைவரும் அவர்போல முன்னேற இந்தப்புத்தகத்தையும் படிக்க வேண்டும்.

    Polyester Prince-The Real Story of Dhirubhai Ambani
    by Hamish McDonald

    பக்கவாட்டு குறிப்பு:
    இந்த புத்தகம் இந்தியாவில் தடைசெய்யப்பட ஒன்று.

    http://www.iht.com/articles/1999/01/16/booksam.t_0.php

    /……But this book is as much about power as about business. In India, Ambani has for nearly two decades been an immensely powerful and controversial figure whose business ambitions have been intertwined with political and bureaucratic power in Delhi. This is a city where suitcases of cash are often an ingredient of decision making, but where press, political opponents and business rivals are always at hand with exposés, plots and rumors…..

    He describes a series of high-profile incidents in which corruption allegations are legion, and fraud and even murder charges come close to Ambani associates. This is not new to Indian readers, having been exhaustively covered in the local press. But McDonald, a correspondent who was based in Delhi for several years and is now foreign editor of the Sydney Morning Herald, retells some long and complex tales in a concise dispassionate manner ……..//

  13. Ada nasama pora natharingala!!

    Do you know the benefits of such effort:
    – Many low and middle class will get employment. they need not go as slave labor elsewhere
    – GDP will increase and inflation will be under control
    – export will bring in foriegn exchange and will help indian balancesheet
    – this will give tough competition to imported cars and monopoly of companies like maruti
    – will be an inspiration to millions of indians to do something good to the country

    As we expected, Modi understood the benefits to indians and put in a sum as investment for good cause. He did not squander the money like the likes of karunanithi private limited. this is one more certificate to modi about why indians want him as prime minister

    on tata group, i am a proud director in one tata company. this is only group in india in which there are no labor unions. because
    – they treat their employees fairly
    – this group does several pilanthropic activities
    – their charity to india is innumerous starting with tata airlines, tata institute of science, tata admin services, and more
    – they never bribe anybody nor do they accept

    Articles like yours captilize on ignorance of crowds and you resort to cheep advertisemnet.
    SHAME ON YOU VINAVU. YOU COULD BETTER DO PROS..ION. INSTEAD OF SUCH FALSE PROPAGANDA

    PARAMS

  14. டாக்டர் ருத்ரன்,
    சிறப்பான பதிவு! இந்த மாதிரி சங்கை ஊதுவதில் களைப்படையாதீர்கள்!

    எனக்கு நில விவரங்கள் தெரியாது. ஆனால் 400 ஏக்கர் நிலத்துக்கு 1100 கோடி என்றால் ஒரு ஏக்கருக்கு 27 லட்சத்து சொச்சம் விலை என்றாகிறது. இது மார்க்கெட் விலையை விட குறைவு என்றால் மார்கெட் விலை என்ன? பெரிய பணக்கார விவசாயிகள் இருக்கும் இடமா, இல்லை ஈசிஆர் ரோடு மாதிரி டாடா வருகிறேன் என்று சொன்னதும் விலை ஏறிவிட்டதா?

    குஜராத் அரசின் ரகசிய உடன்படிக்கை என்று எழுதி இருந்தீர்கள், குஜராத் அரசு 30000 கோடி வரிப் பணத்தை டாடா தொழிற்சாலைக்கு செலவழிக்கப் போவதாகவும் எழுதி இருந்தீர்கள். இரண்டுமே அதிர்ச்சி தரும் விஷயங்கள். இன்சென்டிவ் என்ற பேரில் தொழிசாலைகள் தொடங்க நேரடியாகவும் மறைமுகமாகவும் பணம் செலவழிப்பது நடப்பத்துதான், ஆனால் 30000 கோடி பணம் செலவு என்றால் என்னத்தை சொல்வது?

    ரகசிய உடன்படிக்கை, அதுவும் போன வருஷம் நடந்த உடன்படிக்கை எப்படி வெளியில் வந்தது? தேர்தலில் ஒருவர் மீது ஒருவர் மண்ணை வீசிக் கொள்ள! கேவலம்! இந்துவில் வந்த சுட்டிகளையும் தர முடியுமா?

    30000 கோடி! வயிறு எரிகிறது. 30000 கோடியில் கடனாக கொடுக்கப்பட்டிருக்கும் நில மதிப்புக்கான 400 கோடி ப்ளஸ் 0.1% வட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் 9750 கோடி ஆகியவற்றுக்கு “நியாயமாக” 5% வட்டி என்று வைத்துக் கொண்டாலும் வர வேண்டிய கிட்டத்தட்ட 10000 கோடி அடங்குமா? இல்லை அது தனியா? 30000 கோடி என்பது infrastructure வேலைகளுக்கு மட்டும் ஆகும் செலவா? குத்துமதிப்பாக கணக்கு சொன்னீர்கள் என்றால் கூட உதவியாக இருக்கும்.

  15. எது புதிதாக வந்தாலும் ஒரு ஓட்டை, ஒரு உடைசல். நமக்கு கிடைக்கிற நன்மையை பாருங்க, எழுதுங்க. உங்கள் பார்வையில் உலகம் இருந்தால், நீங்கள் ஒருவர்தான் நல்லவர், வல்லவர். திருந்தங்கப்பா!

  16. //ஏழைகளை ஏழைகளாக வைத்திருந்தால் தான் கம்யூனிசம், சோசியலிசம் போன்ற கொள்கைகள் உயிருடன் இருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் உங்களைப்போன்ற ஏழைகளின் “தோழர்கள்”//

    100% True.

  17. When General Motors decided to close down its plant in Canada, Canadian govt agreed to pay 7 billion dollar to bail out the company but GM threatnen to get more bail out money. now there is talk going on between them. So all the countries spend taxpayers money to protect the industries and giving subsidies bail outs etc. Govt. alone can not bring overall development in the country. Business and Govt should go together, that to Indian companies like Tata, Relaince should be encouraged. But at what level is the big question in India. The problem in India is corrupted politicians Modi for Tata, Karunandhi for Spectrum Etc., will be ready to sell our country. Ithu namma nattu Thalavidiya? ithai Matave Mudiyatha?

  18. வினவு –

    இந்த கட்டுரை மேலும் வலு சேர்க்க வேண்டும். மலிவினை சுற்றியுள்ள செலவினைக் காட்டியது போல் சுற்றுச் சூழல் மாசு மற்றும் சாலை நெரிசல் ஆகியவற்றையும் எடுத்துரைக்கலாம் – உதாரணமாக இந்த கார் 2 சிலிண்டர் என்ஞின் கொண்டு ஓடுகிறது. 2 சிலிண்டர் என்ஜின் 4 சிலிண்டரை விட அதிகம் புகைக் கக்கக் கூடியது என்று அதனை தலை முழுகி பல ஆண்டுகள் பின் அதனை மீண்டும் கொண்டு வந்துள்ளனர் !

    டாடா சூமோ தயாரான முதல் சில ஆண்டுகள் அவை பல சாலை விபத்துகளில் சிக்கி அப்பளமானது நினைவிருக்கிறது, சூமோவின் நிலையே அப்படி என்றால் நானோவை நினைத்தால் பயமாகவே இருக்கிறது.

    இந்தியாவில் கிராஷ் டெஸ்ட் தேவையில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இருப்பினும் மக்கள் அதனை கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

    உண்மையில் இந்த கார் யாருக்கு இலாபம் என்று இக்கட்டுரை தெளிவாக்குகிறது !

  19. //விவசாயத்த அழிச்சபின்னாடி என்னயா தின்னுவீங்க , நீங்க போடச்சொல்லுறீங்களே அந்த காட்டாமணக்க கரைச்சுதான் உங்க வாயில ஊத்தணும்/

    விவசாயம் குறைந்தால் அரிசி விலையை ஏத்து. விவசாயிக்கு லாபம்தானே.

    ஒரு குடும்பம் விவசாயம் செய்கிற‌ நிலத்தை பல குடும்பங்களின் வேலைக்காக எடுப்பதில் தவறேயில்லை(சரியான விலையில்). அப்புற‌ம் சும்மா இந்த‌ ப‌ழைய‌ ப‌ல்ல‌வியே பாடாதீங்க‌ப்பு. அர‌பு நாடுகளில் என்ன‌ முப்போக‌ம் விளைகிற‌தோ? அவ‌ன் எப்ப‌டி சாப்பிடுகிறான்?. ம‌க்க‌ளின் வாங்கும் ச‌க்தி பெருகுமேயானால் விவசாய பொருட்களை எந்த‌ நாட்டிலிருந்தும் இற‌க்கும‌தி செய்ய‌லாம். பிச்சைகார‌ன் இல்லாவிட்டால் இந்த‌ புண்ணாக்கு க‌ம்யூனிச‌ம் இல்லை. செய‌ல‌லிதா சொன்ன‌ மாதிரி உண்டி குலுக்க‌த்தான் க‌ம்யுனிஸ்ட்டுக‌ள் லாய‌க்கு.

  20. வெளிநாட்டுக்காரன் முதலீடு செய்தால் காலனியாக்குகிறார்கள் என்று கூப்பாடு.

    உள்நாட்டுக்காரன் முதலீடு செய்தால் முதலாளித்துவம் என்று கூப்பாடு.

    இதற்குப் பெயர்தான் கம்யூனிசமோ??

  21. நானோ கார் – மத்திய தர மக்கள் நா நோ கார் என சொல்லும் நாள் விரைவில் வரும். கெட்டிகாரன் புளுகு எட்டுநாளைக்கு என்பார்கள். பார்ப்போம்.தங்கள் கட்டுரையும் விளக்கமும் சூப்பர்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

  22. after reading this article i feel ..some one who against to moodi,,,,,,and he say more about anti hindus….dont mix politics and business together……realy it bad…..u have put lot off effort to publish this article,,,,but it went vain when u mix politic with this

  23. அருமையானப் பதிவுக்கு நன்றி தோழரே

    /*2 சிலிண்டர் என்ஜின் 4 சிலிண்டரை விட அதிகம் புகைக் கக்கக் கூடியது என்று அதனை தலை முழுகி பல ஆண்டுகள் பின் அதனை மீண்டும் கொண்டு வந்துள்ளனர் !*/

    நண்பர் bmurali80,

    சுற்றோக் என்பதை தவறாக சிலிண்டர் என்று குறிபிட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன் .

    2 சுற்றோக் என்ஜின் 4 சுற்றோக் விட அதிகம் புகைக் கக்கக் கூடியது, என்பது சரி என்று நினைக்கிறேன்

    நன்றி

  24. எது புதிதாக வந்தாலும் ஒரு ஓட்டை, ஒரு உடைசல். நமக்கு கிடைக்கிற நன்மையை பாருங்க, எழுதுங்க. உங்கள் பார்வையில் உலகம் இருந்தால், நீங்கள் ஒருவர்தான் நல்லவர், வல்லவர். திருந்தங்கப்பா!

  25. பொதுப்போக்குவரத்தை அதிகப்படுத்தாமல், முதலாளிகள் லாபம் சம்பாதிக்க இப்படி நானோ, நீனோ என அறிமுகப்படுத்துவது நல்லது அல்ல என்பதை நன்றாக விளக்கியுள்ளீர்கள்.,

    ஏற்கனவே சென்னை மாதிரி மெட்ரோ சிட்டிகளில், காலையிலும், மாலையிலும் ஒரு கி.மீட்டரை கடப்பதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆகிறது. மண்டை காய்கிறது.

    இங்கு ஓடுகிற எல்லா கார்களிலும் கீறல்கள் உண்டு. அடிக்கடி சாலைகளில் திட்டி, கட்டிபுரண்டு சண்டையெல்லாம் போடுகிறார்கள்.

    மக்கள் எப்படி போனால் என்ன? முதலாளிகளுக்கு ஆதரவான அரசு, முதலாளிகளை தான் ஆதரிக்கும். பிறகு, தொழிலாளர்களையா பார்க்கும்.

  26. ஏப்பா ஒரு லட்ச ரூப காரு நம்ம கைக்கு வரப்ப ஒரு லட்சத்துக்கே வருமா?
    இதப்பத்தி யாராவது யோசிசீங்களா?

  27. TO
    The Board Member
    TATA Group of Companies.

    Dear sir,

    Sub: Status of India

    With reference to the above subject and subsequent your opinion about the concern of “Corporate World”, we wish to bring to your notice the following points for your kind perusal.

    The Indian elite keep ranting about the economy’s growth rate while the corporate people all excited about the stock market and foreign exchange earning by displacing thousands of people/farmers to construct a factory.
    Can we see what is the status of Indian ordinary people and farmers? See below all the reports of how ordinary people grinding under poverty, malnutrition and the status of agriculture.

    The Washington-based International Food Policy Research Institute released its report “The World’s Most Deprived: Characteristics and Causes of Extreme Poverty and Hunger” on 6th Nov 07. The Institute devised the global hunger index (GHI) as a measure of poverty & hunger in a country.( http://www.ifpri.org )

    1) India ranks way down at 96 among 119 developing countries included in the report. Even Nepal is four notches higher at 92, Pakistan 88, Myanmar 68, Sri Lanka 69, China 47.
    In contrast, Mauritius is among the top 20 of least hungry countries.

    In India share of agriculture in GDP in 1975 is 41% but whereas agriculture contribution to GDP has come down to 18% in 2005 see the report in the link. (http://www.ifpri.org/2020/focus/focus15/focus15.pdf )

    2) Regarding child malnutrition, , a separate study (www.indiatogether.org)
    finds that 1 in 2 Indian rural children under 3 is hungry.

    3) And nearly 150,000 Indian farmers committed suicide in the period 1997- 2005, official data show. While farm suicides have occurred in many States, nearly two thirds of these deaths are concentrated in five States where just a third of the country’s population lives. (See P Sainath, http://www.zmag.org 12 nov 07)

    4) INDIA also leads the world in the number of women dying in childbirth – 117,000 in 2005.
    This means a maternal mortality ratio of 450 deaths per 100,000 live births. The Pakistan figure is 320, Sri Lanka 58 and China 45 (one tenth of India’s) [R Hensman, 19 Nov 07 http://www.countercurrents.org

    5) Times of India, 20 Nov 07 reported that India has the largest number of illiterates in the world.
    It ranks 126th out of 177 countries in the Human Development Index (UNDP 2006)

    Having read all the above reports, still you wanted to continue as director of a corporate company?

  28. காரு வாங்கி ஊர சுத்தற வெறியில் இருக்க்றவங்களுக்கு உண்மையை சொன்னா
    உறுத்துது……

  29. இங்கே சிலர் ஒரு தொழில் வளர இன்சென்டிவ் கொடுப்பது சரிதானே, மற்ற நாடுகளில் நடப்பதுதானே, நன்மையை பாருங்கள் என்றெல்லாம் எழுதி இருக்கிறார்கள். இவற்றில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால்:

    1. Incentives are more appropriate for strategically important ventures that cannot be profitable in the short run. மின்சாரம், alternate energy போன்றவை நல்ல உதாரணனகள். மேலும் கார்கள் வருவது strategically important இல்லை.

    2. இன்சென்டிவ் கொடுப்பதற்கு முன்னாள் ஒரு cost-benefit analysis நடத்தப்பட வேண்டாமா? டாடா தொழிசாலை அமைவதால் பொருளாதாரம் எவ்வளவு தூரம் பெருகும், அரசு கொடுக்கும் சலுகைகளுக்கு ஏற்ற பலனை மக்கள் பெறுவார்களா என்றெல்லாம் ஆராய வேண்டாமா? அப்படி கண் துடைப்புக்காவாவது ஆராய்ந்து பார்த்து இந்த தொழில் குஜராத்துக்கு வருவது நல்ல விஷயம் என்று நிர்ணயித்திருந்தால் ரகசிய ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் இல்லையே? இது என்ன மோடியின் பணமா அவர் இஷ்டத்துக்கு வாரி இறைக்க? நம் பணம்!

    3. அமெரிக்காவில் சாலைகளை பெருக்கினார்கள், கார் தொழில் வளர்ந்தது etc. எல்லாம் சரிதான். ஆனால் அங்கே கார் தொழில் பல லட்சம் குடும்பங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பு கொடுத்திருக்கிறது. சாலைகளில் கார்கள் மட்டும் அல்ல, சரக்கு லாரிகள், ட்ரக்குகள் ஆகியவையும் போகின்றன – அதனால் வியாபாரம் பெருகுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். இங்கேயோ ஒரு 5000 குடும்பங்கள் நேரடியாகவும், டீலர்கள், மெக்கானிக்கள் என்று ஒரு பத்து பதினைத்தாயிரம் குடும்பங்கள் மறைமுகமாகவும் பயன் பெறலாம். சரி ஒரு லட்சம் குடும்பங்கள் என்று வைத்துக் கொள்வோமே! 30000 கோடி செலவு, ஒரு லட்சம் குடும்பம் பயன் பெறுகிறது என்றால், ஒரு குடும்பத்த்துக்கு ஆகும் செலவு 30 லட்சம். Enough said.

  30. லட்ச ரூபாய் கார் என்பது விளம்பரத்துக்குத்தான் மெய்யான விலை 1.3 லட்சம்/2.3 லட்சம். இங்கு உள்ளவர்கள் சௌதி அரேபியா மாதிரி நம்ம நாடும் முன்னேருதுன்னு சொல்லும் போது வயிறு பத்திக்கிட்டு எரியுது

    தோழமையுடன்
    செங்கொடி

  31. //ஒரு இலட்ச ரூபாய்க்கு காரா என வாய் பிளப்பவர்களின் மூளைக்கு இந்த விளம்பரத்தையும் , கட்டுரையையும கொண்டு செல்லுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.//
    இக்கட்டுரையை “தமிழ்குறிஞ்சியில்” வெளியிட்டுள்ளோம்.

  32. In Indian corporate circle often we come across that Gujarat CM Modi has done lot of welfare activities in his homeland. But actually what is the real situation in “VIBRANT” Gujarat as it is being claimed by MODI government.

    V— VIOLENT
    I— INTOLERANT
    B—BLUFFING
    R—REVENGEFUL
    A—ARROGANT
    N—NEGLIGENT
    T—TERROR FILLED

    See the report in the link http://www.khabrein.info/index2.php?option=com_content&do_pdf=1&id=19363

    This report was written by Cedric Prakash Director of “Prashant”, the Ahmedabad-based Jesuit Centre for Human Rights, Justice and Peace

  33. but one thing is sure, no one can save india from these politicians and the coporates. God has to give the strength to the civilians to survive in this kind of circumstances.

  34. விவசாயிகளுக்கும், சிறு தொழில் செய்யும் முதலாளிகளுக்கும், கல்விக்காக மாணவர்களும் கடனுக்காக வங்கி சென்றால் ஆயிரம் கேள்விகளையும், அலைக்கழிப்புக்களையும் சந்திக்கும் மக்கள் இருக்கும் நாட்டில் ஒரு முதலாளிக்கு மின்னல் வேகத்தில் எவ்வளவு பெரிய சலுகைகள், கடன்கள்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க