privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்இந்திய அரசியலின் இழிநிலை : ஆ.விகடனில் தோழர் மருதையன் !

இந்திய அரசியலின் இழிநிலை : ஆ.விகடனில் தோழர் மருதையன் !

-

னந்த விகடனுக்காக ம.க.இ.க பொதுச்செயலாளர் தோழர் மருதையனிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் இது.  உரையாடலின் போது நாங்கள் செய்த ஒலிப்பதிவிலிருந்து அதன் சுருக்கப்படாத முழுமையான வடிவத்தை இங்கு வெளியிடுகிறோம். இதில் இன்றைய இந்திய அரசியலின் உண்மை முகம், ம.க.இ.கவின் தேர்தல் புறக்கணிப்பு, மாற்று திட்டம், திராவிட அரசியலின் சீரழிவு, ஈழப்பிரச்சினையின் தற்போதைய நிலை,  ரசிய-சீன பின்னடைவு,  நேபாள மாவோயிஸ்டுகளின் வெற்றி… அனைத்தும் ஒரு பறவைப் பார்வையில் சுருக்கமாக இடம் பெறுகின்றன. தேர்தல் புறக்கணிப்பு குறித்த எமது அரசியல் நிலைப்பாட்டை இந்த நேர்காணல் எளிமையாக எடுத்துரைக்கிறது. வரும் நாட்களில் இது குறித்த விரிவான கட்டுரைகளை வெளியிடுவதற்கு இந்த நேர்காணல் ஒரு முன்னுரையாக இருக்கும்.
நட்புடன்
வினவு

ஓட்டுக்கட்சிகளை மக்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்?

”ஓட்டரசியல் என்பது வேறு ஒரு மாற்று தெரியாத காரணத்தினால், அது பழக்கப்பட்டுப்போன காரணத்தினால் மக்களால் பின்பற்றி வரப்படும் ஒரு நடைமுறை. 1950&லிருந்து இன்றுவரை இந்த தேர்தல் அரசியலில் மக்கள் பங்கேற்று வருவதால் ‘வாக்குச்சீட்டு அரசியலில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்’ என்று யாரும் சொல்ல முடியாது. ஒட்டுப்போடுகிற மக்களிடம் சென்று ‘தேர்தலில் ஓட்டுப்போடுவதால் என்ன நடக்கும்?’ என்று கேட்டால், ‘எதுவும் நடக்காது’ என்று மிகத் தெளிவாக பதில் சொல்வார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சாலைவசதி, குடி தண்ணீர் என தேர்தல் அரசியல் மூலம் எதுவும் கிடைக்காது என்பதை மக்கள் தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து வைத்திருக்கிறார்கள். பழநி கோயிலுக்குப் போகும் பக்தனுக்குக் கூட ‘முருகனுக்கு மொட்டைப்போட்டா ஏதாவது நல்லது நடக்கும்’ என்று நம்பிக்கை இருக்கிறது. ஓட்டுப் போடுகிறவர்களுக்கு அந்த நம்பிக்கைக்கூட கிடையாது.

இருந்தாலும் ஓட்டுப்போடுகிறார்கள் என்றால், அது வேறு வழியில்லாத கையறு நிலை. இரண்டாவது இது ஒரு ஆஸ்வாசம். கருணாநிதி மாற்றி, ஜெயலலிதா. அந்தம்மாவை மாற்றி கருணாநிதி என்று மக்கள் தங்களின் கோபத்தை தணித்துக்கொள்வதற்கான வாய்ப்பு. மூன்றாவது வாக்காளர்களில் கணிசமான பிரிவினர் ஊழல் படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஓட்டு வாங்கிட்டுப் போறவன் எப்படியும் எதையும் செய்ய மாட்டான்னு தெரியும். அதனால் உடனடியா ‘இப்ப என்ன தர்ற?’ என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அண்ணாச்சிக் கடையில் சோப்பு, ஷாம்பு வாங்கும் வாடிக்கையாளன் ‘என்ன ஆஃபர் இருக்கு?’ என்று கேட்பதுபோல ஓட்டுக்கேட்கும் அரசியல்வாதிகளிடம் மக்கள் ஆஃபர் கேட்கும் அளவுக்கு பக்குவப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். கீழ்மட்ட கிராமங்கள் வரை இந்த ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டிருக்கிறது. கிராமங்களில் இந்தப் பணத்தை வாங்கி விநியோகிப்பவர்களாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. ‘அந்த ஊர்ல அவ்வளவு கொடுத்தீங்க, எங்களுக்கு மட்டும் இவ்வளவுதான் கொடுத்திருக்கீங்க’ என்று ‘உரிமை’யை போராடிப் பெறும் குழுக்களாக அவை மாற்றப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்த ஜனநாயகத்தை ‘இது இப்படித்தானே இருக்க முடியும்?’ என்று அதன் சகல சாக்கடைத்தனங்களோடும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மக்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர். இது தேர்தலுக்கு மட்டுமில்லை. ‘போலீஸுன்னா அப்படித்தான் இருக்கும், கோர்ட்டுன்னா அப்படித்தான் இருக்கும்? வேறு எப்படி இருக்க முடியும்?’ என்பதுவரைக்கும் நீள்கிறது. வேறு எப்படி இருக்க முடியும் என்பதை சித்திரம் போட படம் வரைந்து காட்ட முடியாது. எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு மக்கள் போராடி அதை பெற வேண்டும். அதுதான் தீர்வு. அது வரைக்கும் நம் மக்கள் ஓட்டுப்போடுகிறார்களே… அதனால் இதற்கு ஒரு மாற்று கிடையாது என்று சிந்திக்க வேண்டியது இல்லை. ஓட்டுப்போடுவது என்ற நடவடிக்கை 1950&களில் நம்பிக்கையோடு ஆரம்பித்தது. இன்று அது ஒரு கொடுக்கல்&வாங்கள் வியாபாரமாக மாறிவிட்ட சூழலில் அவநம்பிக்கையின் எல்லையில் நின்றுகொண்டுதான் மக்கள் ஓட்டுப்போடுகிறார்கள். ‘இருந்தாலும் போடுறாங்கல்ல’ என்பது இந்த அமைப்பு முறையை நியாயப்படுத்துவதற்கும், இதனால் ஆதாயம் அடைபவர்களும் சொல்கிற ஒரு வாதம், அவ்வளவுதான்.

வாக்குரிமை என்பது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று.  கல்வி, வேலை, உணவு, விவசாய விளை பொருளுக்கான விலை, பேச்சுரிமை என மற்ற உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பெயர்தான் ஜனநாயகமா..?

சரி, அப்படியானால் என்னதான் மாற்று?

” ‘தேர்தலே கூடாது என்கிறீர்களா, ஜனநாயகமே கூடாது என்கிறீர்களா, சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறீர்களா?’ என்று அவ்வப்போது கேட்கப்படுகிறது. தேர்தலே தப்பு என்று சொல்லவில்லை. இது ஒரு போலி ஜனநாயகம் என்கிறோம். ஓட்டுப்போடும் உரிமை இருப்பதினால் மட்டுமே இது ஜனநாயக நாடாகிவிடாது. வாக்குரிமை என்பது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத் தவிர வேறு எந்த உரிமையையும் கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை தருவதும் இல்லை, விரும்புவதும் இல்லை. கல்வி, வேலை, உணவு, விவசாய விளை பொருளுக்கான விலை என இவை எல்லாம் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். பேச்சுரிமைக் கூட அடிப்படை உரிமைதான். இந்த உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பெயர்தான் ஜனநாயகமா..?

வேறு ஒரு உதாரணத்தின் வழிக்கூட இதை பேசலாம். இப்போது ஈழப் பிரச்னையில் சிங்கள பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் மக்கள், அந்த ஒடுக்குமுறையின் கீழ் வாழ சம்மதிக்கவில்லை. ராஜபக்ஷே என்ன சொல்கிறார்? ‘பெரும்பான்மை தமிழர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள், ஈழம் கேட்பவர்கள் சிறுபான்மையினர்’ என்கிறார். இப்போது இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கான சிறந்த ஜனநாயக வழி என்ன? தமிழர்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை தமிழர்கள் இலங்கையுடன் சேர்ந்திருக்க விரும்புகிறார்களா, தனித்திருக்க விரும்புகிறார்களா என்பதை தெரிந்துகொள்ளலாம். ஆனால் அந்த கருத்துரிமையின் மீது குண்டு வீசப்படுகிறது. இதை ஆதரிப்பவர்கள்தான், சுப்பிரமணியன் சாமியின் மீது முட்டை வீசியதை கருத்துரிமையின் மீதான தாக்குதல் என்கிறார்கள். இதில் நான் சொல்ல வந்த விஷயம், வாக்குரிமைதான் ஜனநாயகம் என்ற சித்திரம் ஒரு மோசடி. அது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று. மற்ற ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வழங்கப்பட்டால் அதனால் எந்த பயனும் இல்லை. அது ஈராக்கில் வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமை மாதிரி. ஜனநாயகம் பற்றிய இந்த புரிதலின்மையுடன் மக்கள் வைக்கப்பட்டிருப்பது அவர்கள் இந்த மோசடிக்கு இரைவாதற்கு ஒரு முக்கியமான காரணம்.

இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி போராடுவதன் வழியாகத்தான் மாற்றை நாம் கண்டறிய முடியும். ம.க.இ.க&வைப் பொருத்தவரைக்கும் ‘புதிய ஜனநாயகம்’ என்று ஒரு மாற்றை சொல்கிறோம். அதில் தேர்தல் உண்டு. ஆனால் அந்த தேர்தல் இப்படி ‘வாக்காள பெருமக்களே’ என்று அழைக்கிற தேர்தலாக இருக்காது. டாடாவையும், அவரால் துப்பாக்கி சூடுபெற்ற சிங்கூர் விவசாயியையும் சமப்படுத்தி வாக்காளப் பெருமக்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவரும் மோசடியை அது செய்யாது. அது, விவசாயிகள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு பிரிவினரும் அவர்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலாக இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்கள், வர்க்கங்கள், சாதிகள் தங்களை பிரதிநிதித்துவப் படுத்தும்போது மட்டும்தான் அங்கு ஜனநாயகம் உத்தரவாதப்படுத்தப்படும். அதில் ஆலைகள் அனைத்தும் சமூகத்தின் அங்கமாக இருக்க வேண்டும், தொழிலாளர்களாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அதற்குள்ளே தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தாங்கள் போடும் சட்டங்களை தாங்களே அமுல்படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

இப்போது உள்ளது இரட்டை ஆட்சிமுறை. சட்டம் இயற்றுவது சட்டமன்றம், சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம். இப்படி ஒரு இரட்டை ஆட்சிமுறை இல்லாத, இந்த அதிகார வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும்.

இப்போது உள்ளது இரட்டை ஆட்சிமுறை. சட்டம் இயற்றுவது சட்டமன்றம், சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம். இப்படி ஒரு இரட்டை ஆட்சிமுறை இல்லாத, இந்த அதிகார வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும். accountable and answerable to the people and representative.  கோர்ட் உள்பட அனைத்துமே தேர்ந்தெடுக்கப்பட்டதாக, மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பட்டதாக, அவர்களுக்கு பதில் அளிக்க கடமைப் பட்டதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும். ஒரு தொழிற்சங்க தேர்தலைப்போல அது எளிமையானதாக இருக்கும். செயலாளர் சரியில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து எடுத்துவிடலாம். இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை. இந்த உத்தரவாதங்கள் இருக்கும்போதுதான் ஜனநாயகம் என்பது உண்மையிலேயே இயங்கும். உண்மையிலேயே அது பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக இருக்கும். அப்படி ஒரு மாற்றைதான் நாங்கள் முன் வைக்கிறோம். அப்படி ஒரு மாற்றுதான் ஏற்கெனவே கம்யூனிச நாடுகள் என பொதுவாக அழைக்கப்படும் ரஷ்யாவிலும், சீனாவிலும் அமுலில் இருந்தது.

சோவியத் யூனியன்தான் உடைந்துவிட்டதே, சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதானே..?

அப்படிப் பார்த்தா கடந்த 300, 400 ஆண்டுகளாக அமுலில் இருக்கும் ஜனநாயகம் வெற்றியடைந்ததாக சொல்ல முடியுமா..? ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவு மிகச் சாதாரண விஷயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். அது மோடி மஸ்தான் வித்தை கிடையாது. ‘அது தோற்றுவிட்டதே’ என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சி அடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்யனுமோ அதை செய்ய வேண்டும். ‘அதான் தோத்துடுச்சே, தோத்துடுச்சே’ன்னா நேபாளத்தில் எப்படி வென்றது?

நேபாளத்திலும் அவர்கள் தேர்தல் பாதைக்குதானே வந்திருக்காங்க?

”தேர்தல் பாதைதான். ஆனால் ஒரு புரட்சிக்குப் பிறகு முடியாட்சியை அகற்றி வந்த குடியாட்சி. ஒரு தீவிரமான மக்கள் போராட்டத்துக்குப் பிறகு வந்த குடியாட்சி. இதற்கு அடுத்ததா அடுத்தக் கட்டத்துக்குப் போகனும். நம்ம நாட்டுல இருக்குற பாராளுமன்றம் மக்கள் போராட்டத்தினால் வந்தது அல்ல. இது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக வெள்ளைக்காரனால் போடப்பட்ட எலும்புத்துண்டு. நம்மை நிறுவனமயப் படுத்துவதற்காக செய்யப்பட்ட ஓர் ஏற்பாடு. அதனுடைய உச்சத்தை இன்று எட்டிவிட்டது. அன்று பெரிய முதலாளிகளும், செல்வந்தர்களும் அந்த சபையை அலங்கரித்தார்கள். 60 ஆண்டுகள் கடந்து ஒரு சுற்று வந்த பிறகு இன்றைக்கும் கோடீஸ்வரர்கள்தான் அந்த சபையை அலங்கரிக்கிறார்கள். இந்த ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதற்கு இதெல்லாம்தான் ஆதாரம்.”

நல்லவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? ஒரு கட்சியில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும்? ‘உன் சாதி என்ன, நீ எவ்வளவு செலவு செய்வே?’ கட்சியிலேர்ந்து சுயேச்சை வரைக்கும் இதுதான் தீர்மானிக்குது. நீ நல்லவனா, கெட்டவனா என்ற கேள்வியா… அது இல்லை. அப்புறம் எப்படி நல்லவனை தேர்ந்தெடுப்பது?

ஊழல் மட்டுமே பிரச்னை என்று சொல்ல முடியுமா..?

”ஊழல் மட்டுமல்ல. உண்மையான மக்கள் அதிகாரம் இல்லை என்பதுதான் இதன் மையமான பிரச்னை. ஊழல் என்பது ஒரு நோயின் வெளிப்பாடு. ‘ஊழல் மட்டுமே பிரச்னை. ஆகையால் நல்லவர்களைத் தேர்தெடுங்கள்’ என்றுதான் அதை நியாயப்படுத்துகிறவர்கள் சொல்கிறார்கள். நல்லவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? நான் ரொம்ப எதார்த்தமா கேட்கிறேன். ஒரு கட்சியில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும்? ‘உன் சாதி என்ன, நீ எவ்வளவு செலவு செய்வே?’ இந்த ரெண்டு கேள்விகள்தானே இன்னைக்கு டிக்கெட் கிடைக்க அடிப்படையா இருக்கு? கட்சியிலேர்ந்து சுயேச்சை வரைக்கும் இதுதான் தீர்மானிக்குது. நீ நல்லவனா, கெட்டவனா என்ற கேள்வியா… அது இல்லை. அப்புறம் எப்படி நல்லவனை தேர்ந்தெடுப்பது? அதனால் ஊழல்தான் பிரச்னை என்பது அடிப்படைப் பிரச்னையிலிருந்து திசை திருப்பக்கூடிய ஒரு வாதம். இந்த அமைப்பை சீர்திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிற வாதம்.”

நேபாளத்தில் வந்திருப்பதும் முதலாளித்துவ ஆட்சிதானே..?

”அங்கு முடியாட்சி வீழ்த்தப்பட்டு ஜனநாயகம் வந்திருக்கிறது. இன்னும் முதலாளித்துவம் முற்றிலுமாக அகற்றப்படவில்லை என்றாலும் கீழிருந்து மேல் நோக்கி வந்திருக்கும் புரட்சி அது. ஆனால் இந்தியாவில் கீழிருந்து மேல் வரை எல்லா வகையான முதலாளித்துவக் கூறுகளையும் வைத்துக்கொண்டே ஜனநாயகத்தை ஒரு குல்லா மாதிரி போட்டார்கள். இது ஒரு கோமாளித் தொப்பி மாதிரி. ஜனநாயகமும் இருக்குது, தீண்டாமையும் இருக்குது. ஜனநாயகமும் இருக்குது, சாதியும் இருக்குது. ஜனநாயகமும் இருக்குது, ஊர் கட்டுப்பாடும் இருக்குது. கோவை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு முடி திருத்தும் தொழிலாளி இன்னைக்கும்  ஊர் உத்தரவு வாங்காமல் கடை வெச்சிட முடியுமா..?”

 

தேர்தல் அரசியலை நீங்க எதிர்க்குறீங்க. ஆனால் தேர்தல் அரசியலில் வந்த கருணாநிதியே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்என்று சட்டம் கொண்டு வந்தார். ஆனால் நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தபின்னர் அங்குள்ள கோயில்களில் தென்னிந்திய பார்ப்பனர்களை பூசாரிகளாக தொடர்ந்து வைத்துக்கொள்வதா, நேபாளப் பார்ப்பனர்களை நியமிப்பதா?என்றுதான் சர்ச்சை வந்தது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

”இதையெல்லாம் தாண்டி அவர்கள் போக வேண்டும். அதுதான் அடுத்த கட்டமாகவும் இருக்கலாம். ‘கருணாநிதியே’ என்றால், இங்கு நமக்கு திராவிட இயக்கம், பெரியார், சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் என்று ஒரு மரபு இருக்கிறது. அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நேபாளத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடுகளினால் கீழ்மட்ட அளவில் சாதி ஒழிக்கப்பட்டிருக்கலாம். கருத்தியல் தளத்தில் சாதி, மதம் ஒழிக்கப்பட்டிருக்கிறதா என்றால் என்னால் உடனே சொல்ல முடியவில்லை. அதற்கு ஒரு தொடர்ச்சியான போராட்டம் தேவைப்படலாம். அதேநேரம் இங்கே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம்தான் போடலாம். ஆனால் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் கோயிலுக்குள் போக முடியாது என்ற உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும்.”

நேபாளத்தில் சாதியக் கட்டுமானம் எப்படி இருக்கிறது?

”கிராமப்புறங்களைப் பொருத்தவரை ஓரளவுக்குத் தகர்க்கப்பட்டிருக்கிறது. முற்றிலுமாக தகர்க்கப்பட்டிருந்தால் நேபாள காங்கிரஸ் போன்ற கட்சிகள் இருக்கக்கூடாது. இப்போது என்ன நிலைமை என்று சொல்லக்கூடிய அளவுக்கு என்னிடம் விவரங்கள் இல்லை.”

ஈழப் பிரச்னையில் இங்கே ரெண்டு அணிதான் இருக்கு. ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி, இன்னொன்னு துரோகிகள் அணி. ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள். இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள்.

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழப் பிரச்னை எப்படி எதிரொலிக்கும் என நினைக்கிறீர்கள்?

”ஈழப் பிரச்னை சம்பிராதாயமான முறையில் பேசப்படும். ‘ஆரம்பத்துலேர்ந்து குரல் கொடுத்தேன். முதல் தீர்மானம் நான்தான் போட்டேன்’ என்று கருணாநிதி சொல்வார். ‘போர் என்றால் அப்பாவிகளும் சாகத்தான் செய்வார்கள்’ என்று சொன்ன அம்மையார் பிறகு உண்ணாவிரதம் நடத்தினார். ஈழப் பிரச்னையை இதைவிட யாரும் கேவலப்படுத்திவிட முடியாது. இங்கே ரெண்டு அணிதான் இருக்கு. ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி, இன்னொன்னு துரோகிகள் அணி. ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள். இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள். இவர்களும் மிச்சமிருக்கும் அணிகளும் ஈழப் பிரச்னையை ஒரு ஊறுகாய்போல் பயன்படுத்துவார்கள். இதற்கு மேல் இதற்குப் பெரிய முக்கியத்துவம் இருக்கும் என்று நான் கருதவில்லை.

ஈழத் தமிழர் பிரச்னை என்பது சிங்கள பேரினவாதத்தால் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற நிலையைத் தாண்டி இந்திய அரசு, சிங்கள அடக்குமுறையின் அங்கமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறது. இந்தியா ஈழத் தமிழர்களை ஒடுக்கிக்கொண்டிருக்கிறது என்பது மிக நேரடியாக வெளிவந்துவிட்டது. இந்திய நாட்டின் மக்கள் என்ற அடிப்படையில் நாம் கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கிற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக, ஒரு இனப்படுகொலைக்கு ஆதரவாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு இவர்கள் அத்தனை பேரும் உடந்தையாக இருக்கிறார்கள். இதைப்பற்றி ஒரு வாக்காளன் கேள்வி கேட்டால் அவனுக்குத் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை. இன்னொன்று, ஏதோ காங்கிரஸ் அரசுதான் ஈழத் தமிழனுக்கு துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இதற்கு முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் யாழ் கோட்டையை புலிகள் சுற்றி வளைத்தபோது அதற்குள் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கியிருந்தனர். அப்போது ‘உடனே முற்றுகையை விலக்கிகொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்திய விமானங்கள் வரும்’ என்று வாஜ்பேயி அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. அதற்கு வைகோ முதல் நெடுமாறன் வரைக்கும் அனைவரும் உடந்தை. ‘இந்தியாவை பகைத்துக்கொள்ளக்கூடாது. அனுசரித்துப் போனால்தான் ஈழ விடுதலை சாத்தியம்’ என்ற கண்ணோட்டத்தில் இதை செய்தார்கள். ஆக இந்த தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னை பேசுபொருளாக இருக்கும்பட்சத்தில் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தியாவின்  தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை. பிரணாப் முகர்ஜி போர் நிறுத்தத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பாக,  யுத்தத்தால் சீரழிந்தப் பகுதிகளை புணரமைக்க இந்தியா உதவும் என்று முந்திக்கொண்டு அறிவித்தார். இதுதான் இந்திய ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.

ஈழப்போரில் இந்தியாவின் தலையீட்டுக்குப் பின்னால் இருக்கும் பொருளாதார நலன்கள் பற்றி?

இந்தியாவில் இருக்கும் பெரும் தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை. டாடாவுக்கு அங்கே டீ எஸ்டேட் இருக்கிறது, மஹிந்திரா கார் கம்பெனிக்கும், டி.வி.எஸ்ஸுக்கு இலங்கை என்பது மிகப்பெரிய வாகன மார்க்கெட், அம்பானிக்கு வரிசையா பெட்ரோல் பங்க் இருக்குது, திரிகோணமலையில் ஓ.என்.ஜி.சி&க்கு எண்ணெய் கிணறுகள் இருக்குது, போர் நடந்துகொண்டிருக்கிற இந்த சூழலில் ஏர்டெல் மிட்டல் கடந்த மாதம் இலங்கை முழுவதற்குமான சேவையை அங்கு ஆரம்பித்திருக்கிறார். கடந்தமுறை பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போய்விட்டு வந்த பின்னர் போர் நிறுத்தத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பாக, இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்தப் பகுதிகளை புணரமைக்க இந்தியா உதவும் என்று முந்திக்கொண்டு அறிவித்தார். நாளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் இதேபோன்று பெருமுதலாளிகளின் நலனுக்காகத்தான் பேசும். இதுதான் இந்திய ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.

இன்னொன்று ஈழ மக்களின் போராட்டத்தை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு இதுவரைக்கும் இங்கு சொல்லப்படும் ஒரே ஒரு காரணம், ‘அவர்கள் நம் ரத்த உறவுகள்’ என்பது. இது ரொம்ப அபத்தமானது. எந்த ஒரு இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத பட்சத்தில் அவர்களை அந்த நாட்டு ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. இதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை. இந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு தன்னுரிமை வழங்கப்பட வேண்டும். சேர்ந்திருப்பதா, பிரிந்துப் போவதா என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்குதான் உண்டு. இந்த நியாயம் காஷ்மீருக்கும் பொருந்தும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும். இதை யாரும் பேசலை. தீவிரமான ஈழ ஆதரவாளர்கள் கூட, ‘இந்தியாவில் பிரச்னை இல்லை. அங்குதான் பிரச்னை’ என்கிறார்கள். என்ன அயோக்கியத்தனம் இது? காஷ்மீரில் இதுவரைக்கும் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ இந்திய ராணுவத்தின் பாதி பேர் அங்கு நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. இந்தியா ஏன் சிங்கள அரசை ஆதரிக்கிறது என்பதை ஈழ ஆதரவாளர்களும் கூட விளக்குவதில்லை. ‘ஏதோ முட்டாள்தனமா நடக்குது, சில அதிகாரிகள் இந்த மாதிரி பண்ணிட்டாங்க’ என்கிறார்கள். ‘ஜி.பார்த்தசாரதி இருந்தார். அவர் அருமையா பண்ணினார்’ என்று பழ.நெடுமாறன் சொல்லிக்கிட்டிருக்கார். இப்போ பார்த்தசாரதி ‘தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் புலி ஆதரவு சக்திகளை ஒடுக்கனும்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கார்.

‘இந்தியாவின் தயவில்தான் ஈழத் தமிழன் உயிர்வாழ முடியும்’ என்பது ஒடுக்குபவனின் கருத்து மட்டுமல்ல, ஈழ ஆதரவாளர்களின் நிலையும் அதுதாவாகத்தான் இருக்கிறது. தமிழக மக்கள் மனங்களில் மனிதாபிமான அடிப்படையிலான இரக்க உணர்ச்சியைத் தாண்டி, ‘நீயும் தமிழன், நானும் தமிழன்’ என்ற உணர்ச்சியைத் தாண்டி அரசியல் ரீதியாக இதனுடைய நியாயம் விளக்கப்படவில்லை. அது பாரதூரமான அளவு அரசியல் பிரச்னையாகும் அளவுக்கு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை. அப்படி சொல்லப்படாதபோது நாம் அதில் அதிகமாக எதிர்பார்ப்பது கூடாது. தவிரவும் ஈழத்தை தனிநாடாக அங்கீகரிக்க இந்தியா முனையுமானால் இங்கு காஷ்மீருக்கும், வட கிழக்கு மாநிலங்களுக்கும் அதே தீர்வை கொடுக்க வேண்டியிருக்கும். பொதுவா ‘தமிழகம் முழுவதும் ஒரு எழுட்சி நிலவுகிறது’ என்று சொல்லலாம். அது யதார்த்தமா இருக்கனும். நம்ம மனசுல ஆசைப்படுறதுனால அது எழுட்சியா ஆகிடாது.

இந்த தேர்தலில் எவை பேசப்பட வேண்டிய பிரச்னைகளாக இருக்க வேண்டும்?

எவை பேசப்பட வேண்டியவையோ அவைப்பற்றி இவர்கள் யாரும் பேசப்போவதில்லை. கடந்த 15 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்படும் தனியார்மய, தாராளமய கொள்கை ஒரு உச்சத்தை எட்டி, இப்போது அமெரிக்காவின் வீழ்ச்சிக்குப் பிறகு முட்டாள்களும் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 18 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த கொள்கைகள் இனியும் இந்தியாவுக்குத் தேவையா, இது கொண்டு வந்து சேர்த்த நன்மை, தீமைகள் என்ன என்பதுபற்றி வலது, இடது கம்யூனிஸ்டுகள் உள்பட எந்தக் கட்சியும் பேசாது. இந்த கொள்கைகள்தான் நாட்டின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணங்களா இருந்திருக்கு. இந்தக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராகத்தான் இந்தியா முழுவதும் பல மக்கள் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இதைப்பற்றி யாரும் பேசப்போவதில்லை. நகர்மயமாதலில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது. சமீபத்தியக் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 50:50 என்ற விகிதத்திற்கு தமிழ்நாட்டின் நகர&கிராம விகிதாச்சாரம் வந்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக விவசாயம் சுருங்கிவிட்டது. அதனால்தான் வட மாநிலங்களைப்போல சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு தமிழகத்தில் அதிக எதிர்ப்பு இல்லை. இந்தப் பிரச்னைப்பற்றி பேசப்போவதில்லை. இவர்கள் ஏற்படுத்தியிருக்கும் தொழிற்வளர்ச்சியின் காரணமாக சென்னையை சுற்றி வந்திருக்கும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் எவற்றிலும் தொழிற்சங்க உரிமை கிடையாது. தொழிற்சங்கம் ஆரம்பித்த குற்றத்துக்காக 250 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வேலை நேரம் என்பது இல்லாமல் போய்விட்டது. இந்தப் பிரச்னைகள் பற்றி யாரும் பேசப்போவதில்லை. அமெரிக்காவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பல நிறுவனங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதை எதிர்த்துக் கேட்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எதிர்ப்பு என்ற உணர்வே தெரியாத அடிமைகளைப்போல பழக்கப்பட்டிருக்கிறார்கள். இதைப்பற்றியும் பேசப்போவதில்லை.

எது பேசப்படும் என்றால், ஜெயலலிதாவுக்கு ஒரு பாய்ண்ட் போதும். குடும்ப ஆட்சி. அந்தம்மாவுக்கு அது போதும். அது சட்டமன்ற தேர்தலா, நாடாளுமன்ற தேர்தலா, உள்ளாட்சித் தேர்தலா… அதெல்லாம் தேவையில்லை. அத்தோட சேர்த்து ‘ஹைகோர்ட்ல அடிக்கிறாங்க, லா காலேஜ்ல அடிக்கிறாங்க, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, தீவிரவாத சக்திகள் தலைதூக்கி விட்டன’ இவ்வளவுதான் அந்தம்மாவுக்கு பாய்ண்ட். கலைஞரைப் பொருத்தவரைக்கும் நல்லாட்சி, சாதனைகள். அதைத்தவிர தளபதி அழகிரி இருப்பதால் அவர்களுக்கு வேறு திட்டங்கள் இருக்கலாம்.

கொள்கை என்பது இப்போது கிடையாது. பா.ம.க&வுக்கு ஒரு கொள்கை, கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கொள்கை. ‘இப்படி ஆளுக்கு ஒரு கொள்கை வெச்சுக்கிட்டு அ.தி.மு.க&வோடப் போய் சேர்றீங்களே?’ன்னு கேட்டா, ‘கொள்கைக்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை’ன்னு பதில் வருது.

கொள்கை என்பது இப்போது கிடையாது. இது நாங்கள் சொல்கிற விமர்சனம் இல்லை. அவர்களே சொல்வதுதான். பா.ம.க&வுக்கு ஒரு கொள்கை, கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கொள்கை. ‘இப்படி ஆளுக்கு ஒரு கொள்கை வெச்சுக்கிட்டு அ.தி.மு.க&வோடப் போய் சேர்றீங்களே?’ன்னு கேட்டா, ‘கொள்கைக்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை’ன்னு பதில் வருது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கும், ஆட்சி அமைப்பதற்கான கூட்டணிக்கும் தொடர்பில்லை. ஆனால் இவர்களுக்குள் ஆழமான வேறொரு கொள்கை ஒற்றுமை இருக்கிறது. தனியார்மய, தாராளமய கொள்கைகளில் கம்யூனிஸ்டுகள் உள்பட எல்லோருக்கும் ரொம்ப தீர்க்கமான ஒற்றுமை இருக்கிறது. அதுதான் இவர்களை ஒன்றிணைந்திருக்கிறது. இவர்களுக்கு இப்போது உள்ள பிரச்னை எல்லாம் தங்களுடைய வேற்றுமையை மக்களிடம் நிரூபிப்பதுதான். ‘நாங்க வேற’ன்னு காட்டனும். ஹமாம், லக்ஸ், ரெக்சோனா சோப்பு வியாபாரிகள் எப்படி தங்களது சோப்பு மற்றதைவிட வேறுபட்டது என்று காட்டிக்கொள்கிறார்களோ அதுபோல ‘நாங்க வேற கட்சி’ என்று நிரூபிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு வேற்றுமை தேவைப்படுகிறது. அதன் வழியா அதிகாரத்தை சுவைப்பதற்கு. மற்றபடி கொள்கை வேறுபாடு என்பது இல்லை. இந்த வேறுபாடு பொய்யாக இருக்கின்ற காரணத்தினால்தான் தேர்தலின் விவாதப் பொருள்களும் பொய்யாகவே இருக்கின்றன. நம்ம நாட்டுல எதுடா எலெக்ஷன் பிரச்னைன்னா, ராஜீவ்காந்தி செத்துப்போனா அதுதான் பிரச்னை, ஜெயலலிதா முடியைப் பிடிச்சு இழுத்தா அதுதான் அந்த எலெக்ஷன் பிரச்னை. கருணாநிதி ‘ஐயோ கொல்றாங்க’ன்னு கத்துனா அந்த தேர்தலின் பிரதான பிரச்னை அதுதான். காங்கிரஸ் மீது இப்போது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு தேர்தலில் பிரதிபலிக்கும் என்றாலும் அது ரொம்ப வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும். ஜெயலலிதா ரொம்பத் தாமதமா ஈழப் பிரச்னையைப்பத்தி பேச ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களும் ஒரு எல்லைக்கு மேல் பேசமாட்டாங்க. சரியா சொல்லனும்னா இதுக்கு மேல பேசத் தேவையில்லைன்னு நினைக்கிறாங்க.

இறையாண்மை என்ற சொல் இப்போது அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

”இறையாண்மை என்ற சொல்லுக்கு அர்த்தமாவது யாருக்கும் தெரியுமான்னு தெரியலை. அரசுகளுக்கு இடையேயான உறவைப் பொருத்தவரை ஒரு நாடு தன்னைத்தானே நிர்வகித்துக்கொள்ளும் உரிமை அல்லது அதிகாரம்தான் இறையாண்மை என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவோட இறையாண்மையை ஏற்கெனவே வித்தாச்சு. அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங்தான் இன்று இந்தியாவின் பிரதமர். அவர் படத்தைக் கொழுத்தினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று முதல்வர் சொல்கிறார். ஒரு கருத்தைப் பேசக்கூட உரிமையில்லாத ஒரு நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதைப்போல கேலிக்கூத்து வேறெதுவும் இல்லை. இலங்கையில்தான் பிரச்னை என்றில்லை. இங்கேயே சகல அடக்குமுறைகளும் நடக்குகின்றன. துப்பாக்கிகள் தேவைப்படவில்லை, அவ்வளவுதான்.

ஜனநாயகத்தின் பொய்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கேட்கலாம். உயர்நீதிமன்றம் என்பது என்ன? அரசியல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான ஒரு கட்டடம். அங்கு ஒரு போலீஸ் அத்துமீறல் நடக்கிறது. வழக்கறிஞர்கள் தாக்கப்படுகிறார்கள். போலீஸ் அடிச்சா வாங்கிட்டு மட்டும் போயிருந்தாங்கன்னா அவங்க உண்மையான ஜனநாயகத்துக்குக் கட்டுப்பட்ட குடிமக்கள். திருப்பி அடிச்சதுதான் பிரச்னை. ‘இப்படி கல்லால எல்லாம் அடிக்கக்கூடாது. எங்கக்கிட்ட ஒரு பெட்டிஷன் போடுங்க. நாங்க ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்துறோம்’னு சொல்ற ஜட்ஜே உள்ளே உட்கார்ந்திருக்கிறார். சுப்ரீம் கோர்ட், ‘நீங்க கோர்ட்டுக்குப் போங்க, நாங்க பார்த்துக்குறோம்’ என்று சொன்னாலும் அதில் நம்பிக்கை இல்லாததினால்தான் வக்கீல்கள் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் தொடர்கிறார்கள். ஜனநாயகத்தின் மீது படிக்காத பாமர மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது இருக்கட்டும். படித்த வழக்கறிஞர்கள், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவே இருக்கும் நீதிபதிகள் அத்தனை பேரும் இன்று ரோட்டில் நிற்கிறார்கள். காரணம், அவர்கள் யாருக்கும் நடப்பில் உள்ள இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை.”

திராவிட இயக்கம் என்பது அண்ணா காலத்திலேயே முடிந்துபோய்விட்டது. அதை அறிவிக்க வந்தவர்தான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின், வருகையும், வெற்றியும் திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி குறித்த அதிகாரப் பூர்வ பிரகடனம்.

திராவிடக் கட்சிகள்பற்றிய உங்கள் பார்வை என்ன?

”திராவிட இயக்கத்துக்கு ஒரு வரலாற்றுப் பாத்திரம் உண்டு. அதை மறுக்க முடியாது. இதை நான் பெரியார் என்ற பார்வையிலிருந்து சொல்கிறேன். அதற்குப் பிறகு திராவிட இயக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்டது. அவர்கள் அறிவித்துக்கொண்ட கொள்கைகளான சாதி ஒழிப்பு முக்கியமானது. ‘திராவிடம்’ என்பதெல்லாம் பொதுவான வார்த்தை. அதை வைத்துக்கொண்டு அவர்கள் எக்காலத்திலும் ‘நாங்கள் கம்யூனிஸ்ட்’ என்று உரிமை கொண்டாட முடியாது. பெரியாரைப் பொருத்தவரைக்கூட கருத்தியல் ரீதியா கம்யூனிஸத்தின் மீது அனுதாபம் கொண்டவராக இருந்தார்.

சாதி ஒழிப்பு என்ற நிலையைத் தாண்டி அவர்கள் ஏன் போகலை என்றால் இந்த நிறுவனத்துக்குள் அவர்கள் வந்தது ஒரு முக்கியக் காரணம். அப்படி இந்த நிறுவனத்துக்குள் திராவிட இயக்கம் வரும்போது பார்ப்பனர் அல்லாத உயர்சாதி, உயர் வர்க்கத்தின் பிரதிநிதியாக மாறுகிறது. அவர்களுடைய நலனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உடனேயே பார்ப்பனர்கள் உடனான சமரசம் தொடங்குகிறது. பிறகு வட இந்திய தரகு முதலாளிகளும் தேவைப்படுகிறார்கள். திராவிட இயக்கம் என்பது அண்ணா காலத்திலேயே முடிந்துபோய்விட்டது. அதை அறிவிக்க வந்தவர்தான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின், வருகையும், வெற்றியும் திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி குறித்த அதிகாரப் பூர்வ பிரகடனம். திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பவர்கள் வெவ்வேறு கோணத்தில் இருந்து மறுக்கிறார்கள். காங்கிரஸ் தேசியவாதிகள், பார்ப்பன சக்திகள் திராவிட இயக்கத்தின் பாத்திரத்தை மறுப்பது என்பது வேறு. நாங்கள் மறுப்பது என்பது வேறு.”

ம.க.இ.க. மற்ற இயக்கங்களை, அமைப்புகளை, கட்சிகளை யாரையுமே ஏற்றுக்கொள்வதில்லை என்ற விமர்சனம் பற்றி?

”ஒருத்தர் இன்னொருவரை நிராகரிப்பதால்தான் இத்தனை கட்சிகளே இருக்கின்றன. ம.க.இ.க. தெளிவாக அறிவிக்கப்பட்ட கொள்கைகளுக்காக ஒரு இயக்கமாக இருக்கிறது. தனது கொள்கைகளின் அடிப்படையில் அது மற்றவர்களை நிராகரிக்கிறது. நான் ஒரு தனிக்கட்சி வைத்திருப்பதே மற்றவர்களை நிராகரிக்கத்தான் என்றால், ஒவ்வொரு கட்சியும் மற்றவர்களை நிராகரிக்கிறது என்றுதான் போகும். எங்கள் மீது பொதுவாக சொல்லப்படுவது ‘எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள்’ என்பது. ‘நீங்க சொல்லியிருக்கும் விமர்சனம் தவறு’ என்று சொல்லலாமேத் தவிர, ‘நீங்கள் எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள்’ என்பதையே ஒரு விமர்சனமாக வைப்பது எப்படி சரியாகும்?  ம.க.இ.க. ஒத்தக் கருத்துடன் இருக்கக்கூடிய அமைப்புகளுடன் இணைந்து அவ்வப்போது போராடுகிறது. ஆனால் ஒவ்வொரு பிரச்னைக்கும் 40, 50 அமைப்புகள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துவது, அது அத்துடன் காணாமல் போய்விடுவது என்ற கசப்பான அனுபவங்கள் இருப்பதால் அத்தகைய கூட்டமைப்புகளில் நாங்கள் இணைவதில்லை. அதுவும் கூட இப்படி கருதுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.”