Sunday, April 18, 2021
முகப்பு உலகம் ஈழம் ஈழம்: தலைவர்களின் 'தியாகம்' - தமிழருவி மணியன் !

ஈழம்: தலைவர்களின் ‘தியாகம்’ – தமிழருவி மணியன் !

-

ஈழப் பிரச்சினையில் காங்கிரசுக் கட்சியின் எதிர்ப்பைக் கண்டு சினமடைந்து அக்கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான  தமிழருவி மணியன். தேர்தல் பிரச்சாரத்தில் எல்லாக் கட்சிகளும் ஈழத்தை மறந்தும் மறுத்தும் கூட்டணி அரசியிலை சில தொகுதிகளைப் பெறவேண்டுமென்பதற்காக பரப்புரை செய்துவருகின்றன.  இதை அம்பலப்படுத்தி ஜூனியர் விகடன் ஏப்ரல் 5 இதழில் தமிழருவி மணியன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இது அவரது ஒப்புதலோடும், ஜூனியர் விகடனுக்கு நன்றி தெரிவித்தும் இங்கு வெளியிடப்படுகிறது.

தமிழருவி-மணியன்
தமிழருவி மணியன்

நாற்காலி மனிதர்களின் நாடக மேடை தான் தமிழக அரசியல் என்பது மிண்டும் நிரூபணமாகியிருக்கிறது.  சமூகக் கூச்சம் என்பது எள்ளளவும் இல்லாத மலினமான மனிதர்கள், மக்களின் விதியை எழுதும் தலைவர்களாக வாய்த்தது தமிழினத்தின் சாபம்.  நம் சமகால அரசியல்வாதிகளின் பேச்சும் எழுத்தும், தங்கள் நேர்மைக் குறைவை நியாயப்படுத்தும் முயற்சிகளாகவே இருக்கின்றன.  இந்த நடிப்பு சுதேசிகளை இன்னும் எத்தனை காலம் தான் சகித்துக்கொள்வது?

‘வெற்றிக்கான வாய்ப்பிருந்தால், கோழைகூடக் களத்தில் நிற்பான்.  நிச்சயம் தோற்றுவிடுவோம் என்ற நிலையிலும் போராடத் துணியும் வீரர்களுக்குத் தலைமை தாங்கவே நான் விரும்புவேன். பல மோசமான வெற்றிகளைவிட ஒரு நேர்மையான தோல்வியே மேன்மையானது’ என்றார் ஜார்ஜ் எலியட்.  ஆனல், நம் அரசியல் தலைவர்களுக்கு வெற்றிதான் முக்கியம்.  இங்கே கொள்கைகளை பலியிடுவதுதான் கூட்டணி தர்மம்!

பாவம், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள்… பாசிச வெறி பிடித்த ராஜபக்சே ராணுவத்தால் கரிக்கட்டைகளாய் குவிக்கப்படும் தங்கள் சொந்த உறவுகளின் சோகம் தவிர்க்க உடனடியாகப் போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த ‘சொக்கத்தங்கம்’ சோனியா காந்தியிடம் கலைஞர் தன் செல்வாக்கைப் பயன்படுத்துவார் என்று ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் எதிர்பார்த்தனர். ஈழத்தமிழரின் பிரச்சினை குறித்துப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவா நாட்கள் என்று இரவு, பகல் கண்ணுறக்கமின்றிக் கண்ணீர் வடிக்கும் ‘தமிழ்க்குடி தாங்கி’ மருத்துவர் ராமதாஸ், இலங்கை அரசுக்குத் துணைநிற்கும் இந்திய அரசின் செயலைக் கண்டித்து, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து மகன் அன்புமணியை விலகச்செய்து, ஈழத்தமிழரின் இன்னலைத் தேர்தல் பிரச்சனையாக்கி மாநிலம் முழுவதும் இனவுணர்வைத் தூண்டுவார் என்று நாளும் நம்பிக்கை வளர்த்தனர். அவர்களுடைய அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப்போயின.

முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தில் கொழுந்துவிட்டெரிந்த ஈழ ஆதரவு நெருப்பு ஒவ்வொரு தமிழர் நெஞ்சிலும் தகித்தபோது, பிணங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் தமிழகத்து அரசியல் பாரம்பரியம் மறு உயிர்ப்பு அடைந்தது.  அதனால் உந்தப்பட்டு தீக்குளிக்கும் அப்பாவித் தியாகிகளின் பட்டியல் நீண்டது.  கருகிக் கிடந்த சடலம் தேடி ஓங்கிய குரலில் ஒப்பாரி வைக்கும் கூட்டம் ஓடியது.  எங்கும் உணர்ச்சி வெள்ளம்.  கலைஞரின் ஆட்சி அதைக் கண்டு அரண்டது.  ஒருபுறம் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை, மறுபுறம் இலங்கைத் தமிழர் நலவுரிமைப் பேரவை என்று வீதி நாடகங்கள் இனவுணர்வு ஒப்பனைகளுடன்  அரங்கேறின.  இரண்டு பக்க நாடகங்களிலும் அரிச்சந்திரன் – சந்திரமதி மயான காண்டப் புலம்பல்கள் நெஞ்சைப் பிளந்தன.  நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.  ஈழ நாடகத்தில் இரண்டு பக்கமும் அவரசம் அவசரமாய்த் திரை விழுந்தது.

கூட்டணி முயற்சிகள் தொடங்கின.  ‘இனமே அழியினும், ஈழமே கருகினும், சோனியா காந்தியின் கருணையில் ஆட்சி நாற்காலியில் அசையாமல் இருப்பதே அடியேன் லட்சியம்’ என்று முடிவெடுத்த முதல்வர் கலைஞர், ராமதாஸூக்கும் விஜயகாந்துக்கும் திருமாவளவனுக்கும் வெவ்வேறு வலைகளை விரித்துவைத்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் சக்திமிக்க மாநிலக் கட்சிகளிடம் கையேந்தி நிற்கும் காங்கிரஸ், விஜயகாந்தையும் மருத்துவரையும் கட்டியணைத்துக் கூட்டணியமைக்கக்  கால்களில் விழுந்து கண்ணீர்விட்டது.  பேரம் படியாததால், விஜயகாந்த் லட்சிய வீரரானார்.  ஆசைப்பட்ட தொகுதிகள் அமையாததால், காங்கிரஸை ஈழத் தமிழரின் விரோதியாய் இனம் கண்டுகொண்டார் ராமதாஸ்.  இதுதான் பின்னணி உண்மை.

கலைஞரின் வலையில் விடுதலைச் சிறுத்தைகள் விரும்பி விழுந்தன.  இரண்டு தொகுதிகளுக்காக திருமாவளவனின் புறநானூற்றுப் போர்க்கோலத்தில் புழுதி படிந்தது.

ஈழத்தில் இன்றுவரை இனப்படுகொலை ஓயவில்லை. திசையெங்கும் வாழ்வாதாரங்களை முற்றாக இழந்து உணவின்றி, மருந்தின்றி நம் தொப்புள் கொடி உறவுகள் லட்சக்கணக்கில் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடக்கின்றனர்.  ஈழத் தமிழரின் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் இந்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கை.  பண்டாரநாயகா, சேனநாயகா, சிறிமாவோ, சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை விட ராஜபக்சே பெரிய ராஜதந்திரி இல்லை.  ஆனால், அவர் ஜெயவர்த்தனேவைவிட மோசமான இன அழிப்பு அரக்கனாக விசுவரூபம் எடுத்ததற்கு இந்திய அரசின் ஆதரவுதான் அடித்தளமானது.

தமிழகத்திலிருந்தும் புதுவையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப் பட்ட நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவுணர்வுடன் இயங்கியிருந்தால் மன்கோகன் அரசு ராஜபக்சேவுக்கு ஆயுதங்களையும், சிங்கள ராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சியையும், வட்டியில்லாமல் 2000 கோடி நிதியையும் வழங்கியிருக்க முடியாது.  மன்மோகன் அரசு சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் நடப்பது நாடறிந்த உண்மை.  காங்கிரஸ், தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விழாவில் மன்கோகன் சிங் மனம் நெகிழ்ந்து சோனியா காந்தியை ‘மத்திய அரசின் காவல் தெய்வம்’  என்று வர்ணித்திருக்கிறார்.  அந்தக் காவல் தெய்வம் இன்றுவரை ஈழத்தமிழர் அவலம் குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.  அதனால், அவருடைய தலைமையில் இயங்கும் காங்கிரஸூக்கு இனவுணர்வுள்ள எந்தத் தமிழரும் வாக்களித்தால் அது தகுமா?  இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவை மாநிலம் முழுவதும் மேடை போட்டு, ‘முதல்வர் கலைஞர் தமிழினத்துக்கு துரோகம் இழைத்துவிட்டார்’ என்று முழங்கியது. முத்துக்குமார் தொடங்கி வைத்த தீக்குளியல் தியாகம் வைகோவையும், ராமதாஸையும், தா.பாண்டியனையும், திருமாவளவனையும் ஈழத்தமிழர் இன்னல் தீர்க்க ‘எந்த தியாகத்தையும் செய்யும்’ சூளுரைக்குத் தூண்டியது.  உண்மையில் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தியாகத்தைச் செய்திருப்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.

விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக ஆண்டுக்கணக்கில் ‘பொடா’ சட்டத்தில் வைகோவை சிறையிலடைத்தார் ஜெயலலிதா. ‘பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து தண்டிக்க வேண்டும்’ என்று முதல்வராய் இருந்த போது சட்டப்பேரவையில் சங்கநாதம் செய்தார்.  ‘நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக அமையட்டும்’ என்று இயேசுவின் இரக்கவுணர்வோடு, புத்தரின் பாதையில் ஜெயலலிதாவுக்குப் பாவமன்னிப்பு வழங்கி, பகைமையுணர்வைத் தியாகம் செய்து, ஐந்து எம்.பி. தொகுதிகளுக்காக அன்று போயஸ் தோட்டத்தில் அடைக்கலமானார் புரட்சிப்புயல் வைகோ. நாளையே தொகுதி பேரங்கள் படியாமல் போனால், மறுபடியும், அவர் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போர்வாள் தூக்குவார்!

‘ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் புதிய அரசு நியமனங்களே கிடையாது.  சாலைப் பணியாளர்களை சாவின் விளிம்பில் நிறுத்திய ஜெயலலிதா, ஒரு துளி மையில் இரண்டரை லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கனுப்பிய தொழிலாளர் விரோதி’ என்று பாட்டாளிகளின் நலனுக்காகப் பாடுபடும் இடதுசாரிகள் கடுமையாக விமர்சித்தனர்.  கிரிமினல் குற்றவாளிகளைப் போல அரசு ஊழியர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த ஜெயலலிதாவைக் கோட்டையிலிருந்து வெளியேற்ற கலைஞருடன் கைகோர்த்தனர்.  இன்றோ, தலா மூன்று தொகுதிகளைக் கேட்டு வரதராஜனும் பாண்டியனும் போயஸ் தோட்டத்தில் மணிக்கணக்கில் காத்திருந்து வாதிட்ட காட்சிகளை நாடு பார்க்கிறது.  ஆம், தொகுதி ஆசையில் தங்கள் வர்க்கப் போராட்ட உனர்வையே தியாகம் செய்துவிட்டவர்கள் அவர்கள்.

பெரியார், அம்பேத்கர் இருவரின் வாரிசாக வலம்வர விரும்பும் திருமாவளவனிடம் பெரியாரின் நாற்காலிப் பற்றற்ற பண்பும் இல்லை; அம்பேத்காரின் போர்க்குணமும் இல்லை.  தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை அவர் கலைஞரிடமும் ஜெயலலிதாவிடமும் அடங்க மறுத்ததும் இல்லை; அத்துமீறியதும் இல்லை.  மாறி மாறி சரணடைவார். ‘காங்கிரஸை அழித்துவிட்டுத்தான் இனி அடுத்த வேலை’ என்று அவர் சூளுரைத்த வார்த்தை நெருப்பில் சாம்பல் பூப்பதற்கு முன்பே தன்மானத்தைத் அவர் தாரை வார்த்திருக்க வேண்டாம்.  டெல்லியிலிருந்து பறந்து வந்த காங்கிரஸின் குலாம் நபி ஆஸாத்துக்குப் பக்கத்தில் போய் நின்று கனிவுப் புன்னகை பூத்திருக்கவும் வேண்டாம். இப்போதும் கெட்டுவிடவில்லை… ‘எனக்குக்  கலைஞருடன் தான் கூட்டு. காங்கிரஸ்காரர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்று திருமா பகிரங்கமாக வாக்குமூலம் வழங்குவாரா?  கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளை இருக்கவிடமாட்டோம் என்று காங்கிரஸ் நண்பர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தாலும், கலைஞருக்காக அவர்களை அரவணைக்கத் துடிக்கும் திருமாவளவனின் சுயமரியாதைத் தியாகம் என்னவொரு சிலிர்ப்பைத் தருகிறது… பார்த்தீர்களா தோழர்களே! பொதுவாழ்வில் அடிக்கடி ஏதாவது தியாகம் செய்வதற்கென்றே பிறப்பெடுத்தவர் மருத்துவர் ராமதாஸ்.   சந்தர்ப்பவாத அரசியல் என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்ததை, ‘இதுதான் சாணக்கிய முத்திரை’ என்று கொண்டாட  வைத்த பெருமை அய்யாவுக்கே உண்டு.  ஒரே நேரத்தில் கலைஞரோடும் காங்கிரஸோடும் ஜெயலலிதாவோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும் சாகஸக் கலையை அவரன்றி இந்த அரசியலில் வேறு யாரறிவார்? அவருக்குத் தேவை அதிக தொகுதிகள். அவருடைய மகனுக்குத் தேவை மாநிலங்களவை உறுப்பினர் பதவி.  அடுத்த தேவை, மத்திய அமைச்சர் பதவி.  இதில் ஈழமாவது எள்ளுருண்டையாவது!  தேர்தலுக்குத் தேர்தல் மருத்துவர் செய்யும் கொள்கைத் தியாகம் பெரிதினும் பெரிதல்லவா!

திரைப்பட நடிகர்களை, தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமரவைத்துப் பார்ப்பதில் காங்கிரஸூக்கு அளவற்ற ஆசை.  எம்.ஜி.ஆர். இருக்கும்வரை அவருக்கு வெண்கொற்றக்குடை பிடித்த காங்கிரஸ், அவருடைய மறைவுக்குப் பின் ஜெயலலிதாவின் பக்கத்தில் நின்று கவரி வீசியது.  இன்று விஜய்காந்த்துக்குப் பட்டுக்கம்பளம் விரித்து, ‘கோடி அர்ச்சனை’ நடத்தப் பெட்டியைத் திறந்துவைத்தும் பயனற்றுப்போனது.  பேரம் படியவில்லை… விஜயகாந்த் கூட்டணி காணா தனிப்பெரும் வீரராகிவிட்டார்.  போகட்டும்… காரணம் எதுவாயினும்… விஜயகாந்தின்  ‘மக்கள் கூட்டணி அமைக்கும்  மனோதிடம்’ ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகளுக்கு ஏன் வரவில்லை?  இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை அமைத்து இனவுணர்வை வெளிப்படுத்திய இந்த கட்சிகள் ஏன் தேர்தல் கூட்டணியாக ஒன்றுபட்டுத் தொடர்ந்திருக்க கூடாது?  தங்கள் கொள்கைகளின் வெற்றி மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லையா…?  அல்லது, மக்கள் தங்களை நம்பவில்லை…  அதனால் தோற்றுவிடுவோம் என்ற அச்சமா? தேர்தலில் வென்றால், வை.கோ. பிரதமரா?  தா. பாண்டியன் உள்துறை அமைச்சரா? பா.ம.க. தலைமையில் மத்திய அரசா? தன்மானம் துறந்து தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் வென்றால் நிதி மந்திரியா?

எதற்காக இவ்வளவு சகிக்கவொண்ணாத சமரசங்கள்?

ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வை ராஜபக்சே அரசு விரைவில் வழங்கும் என்று கலைஞருக்கு பிரதமர் கடிதம் வரைந்திருக்கிறார். இது தமிழரின் வாக்குகளைப் பெற காங்கிரஸும் கலைஞரும் நடத்தும் தேர்தல் திருவிளையாடல்.  சிங்களர் – தமிழர் சம உரிமையுடன் வாழ வழிவகுக்கும் கூட்டாட்சிமுறை, தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து, எல்லா மதங்களையும் பராமரிக்கும் மதச்சார்பற்ற மத்திய அரசு, தமிழரின் பாரம்பரிய வாழ்விடங்கள் இணைந்த தமிழ் மாநிலம், ராணுவத்திலும்  காவல்துறையிலும் தமிழருக்கு உரிய இடம் என்ற அரசியல் தீர்வை பெளத்த சிங்களப் பேரினவாத அரசு அங்கீகரிக்க இந்திய அரசு வழிவகுக்குமா? இலங்கை சிங்கள நாடு. ஆட்சிமொழி சிங்களம் மட்டும்.  அரசு மதம் பெளத்தம்.  ஆளப்பிறந்தவர் சிங்களர் என்று அடம்பிடித்தால் தமிழீழத்தை அங்கீகரிக்க மத்திய அரசு முன்வருமா?

இரண்டில் ஒன்றையும் செய்யாமல் கடைசித்தமிழனும் செத்து மடிந்து அநாகரிக தர்மபாலன் என்ற சிங்களத் தலைவன் என்ற சிங்களத் தலைவன் கண்ட கனவின்படி இலங்கை முழுவதும் சிங்களர் நாடாய் மாறுவதற்கு, மத்திய அரசு மறைமுகமாக உதவி செய்கிறதா?

இந்தக் கேள்விகளோடு வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்தால், யாருக்குத்தான் வாக்களிக்க முடியும்?  நான் யாருக்கும் வாக்களிப்பதாக இல்லை.

ஈழத்தில் உயிரிழந்தவர்கள் ஒரு பக்கம்; உறவிழந்தவர் மறுபக்கம்; உறுப்பிழந்தவர் இன்னொரு பக்கம். பார்க்குமிடமெங்கும் பிணக்குவியல்.  கேட்பதெல்லாம் நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம்.  இன்று தமிழக அரசியல்வாதிகளின் கவனம் தேர்தல் திருவிழாவில்.  மக்கள் நலனில் மருந்துக்கும் நாட்டமில்லாத இவர்கள் அமர்ந்து ஆடும் நாற்காலிகள், சுயநல கீதம் இசைத்தப்படி இடையறாமல் ஆடிக்கொண்டிருக்கின்றன.

‘என் நம்பிக்கையின் பாடை அலங்கரிக்கப்பட்டுள்ளது.  தோல்வியின் பூக்களால் உடைந்த  என் இதயத்தில், யாரோ துயருற்ற நண்பன்  ஒருவன் அதை வைத்திருக்கிறான்’ என்று ஈழத்திலிருந்து  ஈனஸ்வரத்தில் வரும் சோகராகம் இன்று யார் காதிலும் விழவில்லை.  நாற்காலி மனிதர்கள் செவிடாகிவிட்டனர்!

 1. என்னாடா ஈழப் பிரச்சினையில் உருப்படியாக செயல்பட்டு வரும் தமிழுருவி மணியனை கண்டுகொள்ள ஆள் இல்லையே என்று நினைத்திருந்தேன். வலையுலகில் கூட யாருமே அவரைப் பற்றி எழுதவில்லை. இன்று காலை கூட இது குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் போது உங்களது கட்டுரை. மிக்க நன்றி…

 2. ஈட்டியில் கூர் போல் வரிகளுக்குச் சொந்தக்காரர் – சொல்
  எட்டுமா செவிடன் காதுகளில்…

 3. சில நாட்களுக்கு முன்பு, ஈழ விசயத்தை முன்வைத்து, காங்கிரஸிருந்து தமிழருவி மணியன் வெளிவந்துவிட்டார் என்பதை கேள்விப்பட்ட பொழுது, சந்தோசப்பட்டேன்.

  பிறகு வருத்தப்பட்டேன். காங்கிரசில் சுயமரியாதை இருக்கிற ஒரு மனுசனும் இப்படி வெளியே வந்துவிட்டாரே என!

  இந்த கட்டுரைக்கான துவக்க அறிமுக உரையை இறுதியில் கொடுத்திருந்தால்…வழக்கம் போல இவங்க திட்ட ஆரம்பிச்சுட்டங்கப்பா! என அங்கலாய்ப்பவர்களுக்கு, இறுதியில் காங்கிரஸில் இருந்து, தமிழருவி மணியன் என அறிய வரும்பொழுது, கன்னத்தில் படீரென்று அறைந்தாற்போல இருந்திருக்கும்.

 4. இந்த கட்டுரை படிக்கும் பொழுது, சில கேள்விகள் வருகின்றன.

  தமிழருவி மணியன் வாக்கரசியலை/கூட்டணியரசியல் பார்த்து நொந்து வாக்களிக்க மாட்டேன் என்கிறார்.
  பொதுமக்களையும் கூட ஒருவகையில் விட்டுவிடலாம். அரசியல் ரீதியாக, அலசி ஆராய்ந்தெல்லாம் பார்த்து வாக்களிப்பதில்லை.

  ஈழம் சம்பந்தமாக நடக்கும் கூட்டங்களுக்கெல்லாம் வருகை தருகிற அமைப்பு சாராத, ஆனால், அரசியல் புரிந்த பலர் ஈழத்துக்காக நீலிக்கண்ணீர் வடித்த ராமதாசு, திருமாவளவன், கருணாநிதி, வை.கோ. என இவர்கள் பேசும்பொழுது, கரகோசம் எழுப்பியவர்கள், இன்றைக்கு துரோகம் செய்கிற தலைவர்களை எப்படி பார்க்கிறார்கள். இவர்கள் எல்லாம் வாக்களிப்பார்களா? என்ன செய்வார்கள்?

 5. வினவு மற்ற விஷயங்களை ஏற்கனவே அசை போட்டு அசை போட்டும், பல இடங்களில் படித்தும் எழுதியும் கோபப்பட்டாயிற்று.

  உண்மயில் சொல்லப்போனால் தமிழருவி மணியனை பற்றி இந்த பதிவில் இன்னும் ரொம்பவே அதிகமாய் எதிர்பார்த்தேன். ஆனால் ப்ச்…

  எது எப்படியோ தமிழருவி மணியன் என்னைப் போன்ற பலரின் மனதில் உயர்ந்த இடம் பெற்றிருக்கிறார்.

 6. / /திருமாவளவன் – காங்கிரஸின் குலாம் நபி ஆஸாத்துக்குப் பக்கத்தில் போய் நின்று கனிவுப் புன்னகை பூத்திருக்கவும் வேண்டாம்//

  அண்ணன் ராமதாஸை பூச்செண்டு கொடுத்து வரவேற்கும் சகோதரி ஜெயலலிதா!

  இந்த மாதிரி படங்களை கொஞ்சம் தேடிப்பிடித்து போடுங்கள்! நன்றாக இருக்கும்.

 7. //இந்தக் கேள்விகளோடு வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்தால், யாருக்குத்தான் வாக்களிக்க முடியும்? நான் யாருக்கும் வாக்களிப்பதாக இல்லை.

  ஈழத்தில் உயிரிழந்தவர்கள் ஒரு பக்கம்; உறவிழந்தவர் மறுபக்கம்; உறுப்பிழந்தவர் இன்னொரு பக்கம். பார்க்குமிடமெங்கும் பிணக்குவியல். கேட்பதெல்லாம் நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம். இன்று தமிழக அரசியல்வாதிகளின் கவனம் தேர்தல் திருவிழாவில். மக்கள் நலனில் மருந்துக்கும் நாட்டமில்லாத இவர்கள் அமர்ந்து ஆடும் நாற்காலிகள், சுயநல கீதம் இசைத்தப்படி இடையறாமல் ஆடிக்கொண்டிருக்கின்றன.

  ‘என் நம்பிக்கையின் பாடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. தோல்வியின் பூக்களால் உடைந்த என் இதயத்தில், யாரோ துயருற்ற நண்பன் ஒருவன் அதை வைத்திருக்கிறான்’ என்று ஈழத்திலிருந்து ஈனஸ்வரத்தில் வரும் சோகராகம் இன்று யார் காதிலும் விழவில்லை. நாற்காலி மனிதர்கள் செவிடாகிவிட்டனர்!///

 8. இங்கு தமிழருவி மணியின் ஒன்றை சொல்லாமல் விட்டு விட்டார்..

  இந்த ஓட்டு பொறுக்கி அரசியல் தலைவர்களுக்கு ஓட்டு போடாமல் விடுவதால் மட்டும் பயன் இல்லை.. இவர்களின் கட்சி வேட்பாளர்கள் வரும்பொழுது.. பொது மக்களே உங்களின் பழைய செருப்பு, சீமாரு, அழுகிய தக்காளி, அழுகிய முட்டை, இவைகளால் அடித்து ஓட ஓட விரட்ட வேண்டும்..
  ஈழத்தில் மருத்துவமனை என்றும் பாராமல் குண்டு மழை பொழியும் சிங்கள இனவெறி அரசுக்கும், அதற்கு துணை நிற்கும் இந்திய அரசின் மேலாதிக்கத்துக்கும், தமிழக பிணந்தின்னி ஓட்டு கட்சிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கையாய் இருக்கட்டும்…

 9. People who have real concern for the Tamils in Elam either leaving the Congress party or sacrificing their lives as in the case of Seerkali Ravi. The indifference and the insensitivity of the congress leadership on the Tamils question in Elam is far enough to understand what these people are doing in Kashmir or in the norh-east.

 10. இலங்கையில் நடைபெறும் இந்தப் போரினால் தூண்டப்பட்ட உணர்வெழுச்சிகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தங்களைத் தீயில் மாய்த்துக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த கோபமும் துயரும் இன்று ஒரு தேர்தல் பிரச்சினை ஆக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபம், துயர் ஆகியவற்றில் பெரும்பகுதி உண்மையில் தன்னிச்சையாக உருவானவை என்றபோதிலும் ஒருபகுதி தந்திரமான அரசியல் நோக்கங்களுக்காகத் தூண்டப்பட்டதாகும்.

  – arundhathiroy, Writter

 11. தமிழருவி மணியனின் கோபமும், உணர்வும் தக்க சமயத்தில் வெளி வந்திருக்கிறது. தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தில் பங்கேற்க முன் வருவாரா?

 12. காங்கிரஸ்காரனுக்கு இருக்கும் சுரணையும் தன்மானமும் கூட சிபிஎம் காரனுக்கு இல்லை, ஜெ வைத்த ஆப்பில் அல்லாடிப்போய் மாநில குழுவை கூட்டி பிசைந்து கொண்டிருக்கின்றனர் என்ற வரலாற்று உண்மையை இங்கு பதிவு செய்கிறேன்.

 13. காங்கிரசை இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போக செய்யவேண்டும் என வீரவசனம் பேசிய… திருமா பற்றி இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது.

  காங்கிரசு தலைவர் தங்கபாலு (இவர் காலத்தில் தான் கோஷ்டி பூசலே இல்லையாம்! காமெடி! கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று போராட்டம் நடத்தி, தங்கபாலுவை சிறை வைத்து விட்டார்களாம். இப்பொழுது, சத்தியமூர்த்தி பவனுக்கு காவல் போடப்பட்டிருக்கிறதாம்!) திருமா தன்னிடம் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டதாகவும், “கசப்பான நினைவுகளை மறக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டாராம். தங்கப்பாலு நிலை பரவாயில்லை.

  மக்கள் நிலை தான் பாவம்! ஒவ்வொரு தேர்தலுக்கும், எவ்வளவு கசப்பு மருந்துதான் குடிப்பார்கள்!

 14. i am a tamil man…continue to be tamil…till death….if it is the case, i will not vote for any political parties in TN:these parties has spoiled the eelam struggle in so many ways…be it “script” writer r cabara dancer..every one is accountable:
  I WILL NOT FORGET& FORGIVE THESE SELFISH WORMS

 15. சொந்தமாய் யோசிக்காதவரை, 21 சீட்டு என்ன? 40 சீட்டும் கிடைக்கும்…..
  எப்போது தமிழனுக்கு டெல்லி மதிப்பு கொடுக்கவில்லையோ…இந்த நாடு இருந்தால் என்னா?நாசமாய் போனால் என்ன?

 16. ராணுவ மந்திரி திருமாகாந்தியுடன்…ஒரு சந்திப்பு….
  17.05.2009 மாலை மணி 5…
  உள்ளே நுழைந்ததும்,சுமார் 9 அடி உயர சோனியாவின் படத்துக்கு முன்புறம் கம்பீரமாக அமர்ந்து தனது மீசையை முறுக்கியபடியே…வாங்க! வாங்க என்று என்னை அழைத்தபோது,திருப்பனந்தால் சைவ மடம் சாமியார் மாதிரியே காட்சியளித்தார்.
  வணக்கம்,திருமாவளவன் அவர்களே…(நான் முடிப்பதற்குள்,சீறினார்)-என்னை திருமா காந்தி என்று அழையுங்கள்
  எனது திகைப்பு,அடங்குவதற்குள்,முதலில்,உபசரிப்பு,பிறகுதான் பேட்டி என்றார்..
  தனது உதவியாளரை அழைத்து,இடாலி நூடுல்ஷ்,இடாலி சூப் தயார் பண்ண கட்டளை இட்டார்!இடாலி சூப்பை பறுகும்போது,மறக்காமல்,இத்தாலி தாயே உனக்கு நன்றி என்று 3 முறை கூறினார்!

 17. Every1 is after money. here I feel karunanithi is the worst. others are still somehow didnt do bad to eelam tamils.(PMK, MDMK, Thiruma.) vaiko sacrifised a lot. but he must have some seat. vaiko or thiruma never said a single word against eelam tamils even their political alliaane is agaist. somehow they are for us.

 18. இங்கு தமிழருவி மணியின் ஒன்றை சொல்லாமல் விட்டு விட்டார்..

  இந்த ஓட்டு பொறுக்கி அரசியல் தலைவர்களுக்கு ஓட்டு போடாமல் விடுவதால் மட்டும் பயன் இல்லை.. இவர்களின் கட்சி வேட்பாளர்கள் வரும்பொழுது.. பொது மக்களே உங்களின் பழைய செருப்பு, சீமாரு, அழுகிய தக்காளி, அழுகிய முட்டை, இவைகளால் அடித்து ஓட ஓட விரட்ட வேண்டும்..
  ஈழத்தில் மருத்துவமனை என்றும் பாராமல் குண்டு மழை பொழியும் சிங்கள இனவெறி அரசுக்கும், அதற்கு துணை நிற்கும் இந்திய அரசின் மேலாதிக்கத்துக்கும், தமிழக பிணந்தின்னி ஓட்டு கட்சிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கையாய் இருக்கட்டும்…

  thank u maniyan sir!

  keetha from swiss

 19. //
  பிரஸ்மீட்டில் ப.சிதம்பரம் மீது ஷூ வீசிய நிருபர்!-அகாலிதளம் ரூ. 2 லட்சம் பரிசு
  செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2009, 12:59 [IST]

  Read In English
  RSS Twitter இலவச நியூஸ் லெட்டர் பெற thatsTamil Bookmarks மக்களவைத் தேர்தல்-2009

  Scribe throws shoe at P.Chidambaram in press meet
  GA_googleFillSlot(“tamil-160×600”);
  டெல்லி:மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூவை வீசினார்.

  1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையானபோது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

  இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம் http://cache2.hover.in/hi_link.gif. அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார்.

  அவருக்கு பதிலளித்த சிதம்பரம் http://cache2.hover.in/hi_link.gif, இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார்.

  ஆனாலும் டைட்லரை விடுவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆவேசமாக ஜர்னைல் சிங் பேசிக் கொண்டே போகவே, போதும்…போதும் நிறுத்துங்கள்.. விவாதம் செய்யாதீர்கள்.. விவாதம் செய்யாதீர்கள்.. இது குறித்து சிபிஐயை எதிர்த்து சட்டரீதியாக அணுகலாம். சிபிஐயின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்கலாம், ஏற்க மறுக்கலாம் அல்லது மேலும் விசாரிக்க உத்தரவிடலாம். அதுவரை பொறுமையாக இருப்போம் என்றார் சிதம்பரம்.

  ஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம்.

  இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்த ஷூ சிதம்பரம் http://cache2.hover.in/hi_link.gifமீது படவில்லை.

  இருப்பினும் நிதானமாக அமர்ந்திருந்த சிதம்பரம் http://cache2.hover.in/hi_link.gif, யாரும் பதற்றப்பட வேண்டாம், பிரஸ்மீட்டை தொடர்வோம். ஒரு தனி நபரின் உணர்ச்சிவசப்பட்ட செயலால் பிரஸ்மீட் தடைபட வேண்டாம் என்றார் வழக்கமான தனது நிதானத்துடன்.

  மேலும் ஜர்னைல் சிங் நமக்கெல்லாம் மிக நன்றாக தெரிந்த நிருபர் தான். அவரை நான் மன்னித்துவிட்டேன். இதை இத்தோடு விடலாம் என்றார்.

  ஆனாலும் சிதம்பரத்தின் பாதுகாப்புப் படையினர் அந்த நிருபரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி இழுத்துச் சென்றனர். அப்போது அவர்களிடம் ஜர்னைல் சிங்கை ‘ஜென்டிலாக’ நடத்துங்கள்… இப்படி இழுத்துச் செல்லாதீர்கள் என்ற சிதம்பரம் http://cache2.hover.in/hi_link.gif.. ஒரு தனி மனிதரால் இந்த பிரஸ் மீட் தடைபட வேண்டாம். நாம் நமது பிரஸ் மீட்டை தொடரலாம் என்றார்.

  உடனடியாக விடுவிப்பு:

  ஜர்னைல் சிங்கை சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

  பாக்தாதில் முன்னாள் அமெரிக்க அதிபர் மீது நிருபர் ஷூ வீசியது பரபரப்பானது. இப்போது அதே பாணியில் ப.சிதம்பரம் http://cache2.hover.in/hi_link.gifமீது ஷூ வீசப்பட்டுள்ளது.

  ஜர்னைல் சிங் பல காலமாக டெல்லி காங்கிரஸ் அலுவலக செய்திகளை வழங்கி வருபவர் ஆவார். இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர் ஆவார்.

  பிரஸ்மீட்டிலிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்ட ஜர்னைல் சிங் கூறுகையில், நான் செய்தது தவறில்லை. எனது செயலுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். எனது அணுகுமுறை தவறாக ‌இருந்திருக்கலாம். இதை எந்தப் பத்திரிக்கையாளரும் செய்யக் கூடாது. ஆனால் நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். டைட்லரை விடுவித்தது சீக்கியர்களை மிகவும் புண்படுத்தியுள்ளது. இது ஒரு எரியும் பிரச்சனை. எங்கள் சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றார்.

  இவர் பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை கவர் செய்யும் ரிப்போர்டராகவும் உள்ளார்.

  அகாலிதளம் ரூ. 2 லட்சம் பரிசு:

  ஷூ வீசிய நிருபருக்கு அகாலிதளம் கட்சியின் இளைஞரணி ரூ. 2 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

  காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த ஜர்னைல் சிங் கூறுகையில, நடந்த சம்பவத்துக்காக வருந்துகிறேன். ஆனால், சிபிஐ அறிக்கை குறித்து மத்திய அரசும் சிதம்பரமும் யோசித்துப் பார்க்க வேண்டும் என்றார்.

  இந்தப் பிரச்சனை தொடர்பாக வேறு வழியில் போராடியிருக்கலாமே என்று நிருபர்கள் கேட்டதற்கு, எந்த வகையில் போராடச் சொல்கிறீர்கள். இந்தப் பிரச்சனையில் 25 வருடமாக இதே தானே நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

  தொடர்பான செய்திகள் :

  //

  சுப்பிரமணிய சுவாமி மீது ஈழப் பிரச்சினைக்காக முட்டை வீசியதுடன் இதனை ஒப்பிட வேண்டும்.
  ஒரு சமூகத்தின் சுதந்திரத்தின் மீதும், உரிமைகள் மீதும் மூத்திரம் பேயும் இது போன்ற தறுதலைகள் மீது அந்த சமூகம் தனது சுதந்திரத்தை பூட்ஸுக்கள் மூலமும், முட்டைகள் மூலமும்தான் வெளிப்படுத்தும். கருத்துச் சுதந்திர காவாளிகள்(காவலாளிகள்) கவனதுக்கு….

 20. எங்களுக்காக குரல் கொடுக்க 40 போ; வேண்டாம் 4 பேரை அனுப்புங்கள்.

  தமிழ் மொழி யின் பெயரால் நாசமாய்ப் போன பாpதாபத்திற்குhpய இனம் இன்று கருணா(இல்லா)நிதி, இன்னும் எத்தனை எத்தனை

  கதிரைப்பிhpயா;கள்.உண்ணாவிரதமிருந்து சாகத் துணிந்த திருமா இரண்டு கதிரையுடனே அல்லாடிப்

  போய்விட்டாரே. தமிழ் மக்கள் ஆடாமலிருந்தால் சாp. தமிழருவி மணியனுக்கு எங்கள் நன்றிகள்.

 21. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி விருது வழங்கும் விழா மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று இரவு நடந்தது.

  கவிஞர் அறிவுநிதி, சுப.வீரபாண்டியன், தமிழருவி மணியன், குணங்குடி அனிபா, தாமரை பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் சமுதாய பணிகளை பாராட்டி அவர்களுக்கு திருமாவளவன் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

 22. தேர்தல்

  தினந்தோறும்
  ப‌ல‌ குறுஞ்செய்திகள்
  “காங்கிர‌ஸ் கூட்ட‌ணியை
  தோற்க‌டிப்போம்” என‌.

  தோற்க‌டித்துவிட்டு..
  ‘புர‌ட்சித்த‌லைவியை
  ஜெயிக்க‌வைப்ப‌தா!
  ஜெ.ஜெ.
  ஹிட்ல‌ரின் ஒண்ணுவிட்ட‌ ச‌கோத‌ரி!

  ‘க‌ருப்பு எம்.ஜி.ஆர்‍‍‍ _ ஐ
  ஜெயிக்க‌வைப்பதா!
  “பேர‌ம் ப‌டியாத‌தால்
  ஆண்ட‌வ‌னோடும்
  ம‌க்க‌ளோடும் கூட்ட‌ணி!”

  அட போங்கய்யா!

  இப்படித்தான்
  பல தேர்தல்கள்
  கடந்துவிட்டன!
  யாருக்கும் விடிவில்லை!

  தேர்த‌லை புற‌க்க‌ணிக்க‌லாம்.
  அதுதான்
  எல்லோருக்கும் ந‌ல்ல‌து!

 23. இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் எண்ணற்ற தலைவர்களும் பொதுமக்களும் ஆற்றிய தன்னலமற்ற செயல்பாடுகளைப் பார்க்கையில் இப்போதைய நிலை மிகவும் வெட்கக் கேடானது.

  அன்றைய நெருக்கடிகளுக்கு சற்றும் குறைவில்லாததுதான் தற்போதைய அரசியல் சூழலும்கூட. ஆனால் நமக்கு வாய்த்த தலைவர்களும் நாமும்(தமிழக மக்கள்) வரலாற்றின் முன் மனிதகுல விரோதிகள்தான். தமிழருவி மணியன் போன்ற ஒருசிலராவது இருப்பது ஆறுதல்.

  உங்களை வரலாறு வாழ்த்தும் மணியன் அய்யா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க