privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் !

ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் !

-

பதுங்குகுழிகளும் பாடசாலைகளும்

ஈழத்தின் நினைவுகள் பாகம் –2

ஈழவிடுதலைக்கான‌ போராட்டத்தோடு இணைந்ததுதான் எங்கள் வாழ்வியல் போராட்டங்களும். அதன் தாக்கங்கள், பாதிப்புகள் ஒவ்வொரு ஈழத்தமிழ‌ன் வாழ்விலும் நிறையவே காயங்களை உண்டாக்கியது. போர் ஓய்ந்த பின்னும் கூட எங்கள் வலிகள் இன்னும் ஆறவில்லை. அது சுலபமாக ஆறக்கூடியதுமல்ல. ஒரு சராசரி மனிதனின் வாழ்வியல் போராட்டங்களின் அடிப்படை அம்சங்களான கல்வி, பொருளாதாரம், சமூக மாற்றம் இன்னபிற விடயங்களில் போர் எவ்வளவு தாக்கங்களை உண்டாக்கியது என்பதுதான் நான் சொல்லவிளைவது. எல்லா சமூகங்களையும் போல் ஏன் எங்களால் ஓர் இயல்பு வாழ்வை வாழமுடியவில்லை என்ற கேள்வி என்னை வாட்டுவதுண்டு. ஆனாலும், எவ்வளவு வலிகளையும் தாங்கிக்கொண்டு ஈழத்தமிழர்கள் நிறையவே சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கல்வி, தனிமனிதன் ஆனாலும் சரி , சமூகமானாலும் சரி, முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைப்பது இதுதான். ஆனால், இந்த கல்வியை நான் மற்றும் ஈழத்தில் என்னைப்போன்றவர்கள் பெறுவதற்கு போர்ச்சூழலில் பட்ட அல்லது படுகிற சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. சிங்கள அரசு தமிழ்மாணவர்களின் கல்வியைசிதைக்கிறது என்றுதான் தோன்றுகிறது. கல்வி மறுக்கப்பட்டால் ஈழத்தமிழர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை, அவர்களின் விடுதலை உணர்வை தடுக்கலாம் என்பது சிங்கள பேரினவாதிகளின் குறிக்கோளாக இருக்கலாம்.

நான் வாழ்ந்த ஊரில் எல்லாமாக‌ மூன்று பெரிய பாடசாலைகள் இருந்தன. அவற்றில் இரண்டு உயர்தர பாடசாலை, மற்றது எட்டாம் வகுப்புவரை உள்ளது. அதில் இரண்டு பாடசாலைகள் ராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டிருந்தன.பாடசாலைகள் கூட ராணுவ முகாம்களாக ஆக்கப்பட்டு, குண்டு வீச்சில் பாடசாலைகள் சிதைக்கப்பட்டு,மாணவர்கள் கைதுசெய்யப்பட்டும், கொலைசெய்யப்பட்டும் எங்கள் கல்வி மற்றும் மாணவர் சமுதாயம் சத்தமில்லாமல் ஈழத்தில் அன்றுமுதல் இன்றுவரை சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.ஈழத்தில் நான் படித்தது பெண்கள் பாடசாலை. ராணுவமுகாமிலிருந்து கொஞ்சம் விலகி இருந்ததால் தப்பித்துவிட்டது.ஆனாலும் விமானக்குண்டு

வீச்சுக்கும் ஷெல் அடிக்கும் (முகாம் அல்லது நேவி) தப்பியதில்லை. இப்படி பாடசாலைகள் ராணுவமுகாம்கள் ஆனதால் எங்கள் ஊரிலுள்ள என் நண்பர்கள் அருகிலுள்ள வேறு ஊர்களுக்கு நிறையநேரம் சைக்கிளில் சென்று கல்வி கற்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானார்கள்.

யாழ்ப்பாணத்தில் ராணுவம் முகாம்க‌ளிலிருந்து முன்னேற முயன்ற காலங்களில் எங்கள் தலைகள் மீது குண்டுகளை வகைதொகையில்லாமல் கொட்டியது. விமானக்குண்டு வீச்சு என்றால் சில சமயங்களில் காலை ஆறுமணிக்கெல்லாம் தொடங்கி விடும். அது ஒரு சிலமணிநேரங்களில் முடிந்ததும் உண்டு. பல மணிநேரம் நீடித்ததும் உண்டு. பல மணிநேரம் என்றால் இரண்டு அல்லது மூன்று விமானங்கள் மாற்றி மாற்றி வந்து குண்டுபோடுவார்கள். இடையிடையே ஹெலிகாப்டரிலிருந்தும் சுடுவார்கள். வெளியில் தலை காட்டமுடியாது. குண்டுவீச்சு முடியும்வரை பதுங்குகுழி தான். காலையிலேயே எங்கள் தலைமீது குண்டு வீசத் தொடங்கினால், அந்நாட்களில் எங்களுக்கு பாடசாலையும் கிடையாது; படிப்பும் கிடையாது.எனக்கு கல்வி ஒன்றுதான் என் வாழ்வில் வெளிச்சம் தரும் என்பதால் அதை என் உயிராக மதிக்கிறவள் நான். இப்படி போர்ச்சூழலில் என் கல்வி எங்கே பாதிக்கப்பட்டுவிடுமோ என்று நான் ஏங்கி அழுதநாட்களும் நிறையவே உண்டு. என் வீடு, உடமைகளை விட‌ பாடப்புத்தங்கள் குண்டுவீச்சில் தப்பவேண்டும் என்று மனம் பதறிக்கொண்டிருக்கும். அந்த குண்டுச்சத்தங்களிலும் அதன் நச்சுத்தன்மை மற்றும் வெடிமருந்தின் மணம் கலந்த காற்றிலும் என்மனம் மிகவும் சோர்வடைந்த வேளையிலும் சுதந்திரம் வேண்டும் என்ற அவா மட்டும் எனக்கு ஏனோ குறையவேயில்லை.

இப்படி நான் பலநாட்கள் பாடசாலை நடைபெறாமல் கல்வி கற்கும் சந்தர்ப்பங்களை நிறையவே இழந்திருக்கிறேன். இது எல்லோருக்கும் பொதுவானதுதான் என்றாலும் பரீட்சை காலங்களில் மிகவும் வேதனையாக இருக்கும். ஒன்று பாடத்திட்டம் முழுமையாக முடிந்திருக்காது மற்றது குண்டு வீச்சுக்களாலும் அதன் சத்தங்களாலும் மனம் மிகவும் சோர்ந்து போயிருக்கும். படிப்பில் கவனம் செலுத்துவது என்பது மிகவும் கடினமாகவும் வேதனையாகவும் இருந்தது. வேதனைகளில் மனம் சோரும் தருணங்களில் உடம்பில் வெறும் காற்று மட்டும்தான் இருப்பது போலவும் உடம்பு வெறும் கூடு போலவும் உண்ர்ந்திருக்கிறேன்.

பாடசாலையில் இருக்கும் நாட்களில் குண்டு வீச்சு என்றால், அது இன்னொரு நரகவேதனை. எங்கள் பாடசாலையில் ஏறக்குறைய ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றார்கள், முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை. இந்த குண்டு போடும் கிராதகன்களுக்கு பாடசாலைகள், கோயில்கள், தேவாலயங்கள், சந்தை என்று மக்கள் அதிகம் சேரும் இடங்களில்தான் குண்டுபோட பிடிக்கும். அந்ததெரியவராத நாட்கள். அதனால் இந்த இடங்களில் எல்லாம் ஆசைக்கு குண்டுபோட்டு எங்கள் மக்களை கொன்று குவித்தது சிங்கள அரசு. அதனால் அதற்கு சாட்சியும் இல்லாமல் போனது, தனிமனித சாட்சிகளைத்தவிர.

குண்டு வீச்சு விமானங்கள் குண்டு வீசும்போது அல்லது நேவி/ராணுவ முகாமிலிருந்து ஷெல் அடிக்கும் போது பாடசாலையில் சிறிய குழந்தைகள்தான் மிகவும் பயந்து போய் என்ன செயவதென்றுதெரியாமல் அழத்தொடங்கி விடுவார்கள். பெரும்பாலும் நாங்கள் தான் இப்படியான சந்தர்ப்பங்களில் ஆசிரியர்களுக்கு துணையாக அனுப்பி வைக்கப்பட்டதுண்டு. எங்களை கண்டவுடன் தாங்கள் பெற்றோரிடம் போகப்போகிறோம் என்று கேட்பார்கள். அழும் குழந்தைகளை எப்படி தேற்றுவது என்று தெரியாமல், ஏதோ ஒர் கோழைபோலவும், கையாலாகத ஜென்மம் போலவும் அச்சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். நாள் தொடக்கம் முதல் இந்தநாள்வரை இலங்கை அரசு, ஐக்கியநாடுகளினதும் சரி சர்வதேசத்தினதும் சரி, எந்தவொரு போர்விதிகளையும் மதித்து நடந்தது கிடையாது என்பதற்கு பாடசாலைகள், கோயில்கள், தேவாலயங்கள், சந்தை,பாதுகாப்பு வலயம் (No Fire Zone) என்று பொதுமக்கள் கூடும் இடங்களிலெல்லாம் குண்டு போட்டதே சான்று. ஆனால், அந்தக்காலங்களில் ஈழப்பிரச்சனை மற்றைய நாடுகளுக்கு

குண்டுகள் வெடிக்கும் சத்தங்களே மிகவும் அதிகமாய் எல்லோரையும் பயமுறுத்தும் என்று நினைக்கிறேன். விமானங்கள் குண்டு வீசும்போது யாரும் நடமாடாமல் குப்புற விழுந்து தரையில் படுக்க வேண்டும் (அது வீடானாலும் சரி, வீதியானாலும் சரி) என்பது பொதுவான எச்சரிக்கை என்றாலும், அதையெல்லாம் எந்த பெற்றோரும் தங்கள் குழந்தைகள் விடயத்தில் கடைப்பிடிப்பது கிடையாது. விமானம் சுற்றத்தொடங்கவே பாடசாலைக்கு அருகில் வசிக்கும் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துப்போக வந்துவிடுவார்கள். இப்படி குழந்தைகளை படிக்க அனுப்பிவிட்டு எப்போ ராணுவம் முகாமிலிருந்து வெளியேற முயற்சிக்குமோ, குண்டுவீச்சு நடக்குமோ என்று பயத்தில்தான் பெற்றோரின் பொழுதுகள் கழிந்ததுண்டு படிப்பதற்குரிய எந்தவொரு தகுந்த அமைதியான சூழ்நிலையும் அன்றும் சரி இன்றும் சரி ஈழத்தில் இருந்ததில்லை. அல்லது இருப்பதில்லை. எங்கள் விடுதலைக்கு அது அவசியம் கூட‌ என்பது என் கருத்து. என்வரையில் காற்றைப்போல சுதந்திரம், காட்டாற்றைப்போல சிந்தனை நிறைந்தது மாணவப்பருவம்.

சராசரி மாணவர்களைப்போல் எங்களுக்கும் சுதந்திரமான, கவலைகளற்ற மாணவப்பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்றுதான் ஆசை. நண்பிகளோடு/நண்பர்களோடு அரட்டை அடிக்க ஒரு பொது இடம், கூட்டாக சென்று சினிமா பார்க்க, அல்லது ஒன்றாயிருந்து பரீட்சைக்கு படிக்க என்று சின்னச்சின்ன, ஆனால் நியாயமான‌ ஆசைகள் நிறையவே இருந்தன. ஆனால், நான் உயர்தரப்பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களில் போர்ச்சூழல் (1980 களின் நடுப்பகுதிப் பிறகு) மிகவும் மோசமடைந்திருந்தது. குறைந்தபட்சம் பாடசாலைக்கு போய் படித்துவிட்டு உயிரோடு திரும்பி வந்தாலே போதும் என்ற மனோநிலைதான் பெரும்பாலும் எல்லா மாணவர்களிடமும் இருந்தது. தவிரவும் குண்டுவீச்சில் பாதி ஊர் சிதிலமடைந்தே இருந்தது. இதில் பொது இடமேது? சினிமா கூடம் ஏது? குண்டுவீச்சில் அதன் அனர்த்தங்களில்,போர்ச்சூழலில் இருந்த இறுக்கமான சூழ்நிலையிலும் எங்கள் நியாயமான சின்னச்சின்ன ஆசைகள் கூட அடங்கிபோயின.

வடபகுதியில் ராணுவம் முகாம்களில் முடக்கப்பட்ட காலங்களில் விமானம் மற்றும் ஷெல் குண்டுவீச்சுகளால் பெரும்பாலும் நாங்கள் பாடசாலை தவிர்த்த நேரங்களில் எங்கள் வீடுகளில் முடக்கப்பட்டோம்.ராணுவம் முகாமிலிருந்து வெளியேற முயற்சிக்கும். ஆனால், விடுதலைப்புலிகள் அதை முறியடிக்க முனைவார்கள். பிறகு வேட்டுச்சத்தங்கள் கேட்கும். விமானங்கள் வந்து கண்மண் தெரியாமல் எங்களை தாக்கும். இதுவே பலநாட்கள் தொடர்ந்தது. நாங்கள் வீடுகளில் பெரும்பாலும் இருக்க விரும்பிய காரணம், ஒரு வேளை சாவது என்றாலும் குடும்பத்தோடு சாகலாம் என்ற சின்ன ஆசைதான். இப்படியான காரணங்களாலேயே கூட்டாக நண்பிகளோடு படிப்பதை கூட தவிர்த்தேன். பல சமயங்களில் நான் பதுங்குகுழியில் மெழுகுவர்த்தி வெளிச்சதில் கூட படித்திருக்கிறேன். அப்படி படித்து பல்கலைக்கழக அனுமதியும் வாங்கியிருக்கிறேன். இதெல்லாம் ஈழத்தில் வடபகுதியில் அந்தக்காலத்தில் சர்வ சாதாரணமாக எல்லா மாணவர்களுக்கும் நடந்ததுதான். ஆனாலும், நான் தொடர்ந்து என் மண்ணில், என் உறவுகளோடு தொடர்ந்து படிக்க முடியாமல் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயரவேண்டியதாகிவிட்டது.

பரீட்சை எழுதிய சில நாட்களிலேயே நான் இந்தியாவுக்கு அகதியாய் சென்றுவிட்டேன். எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது என் நண்பி மூலம் இந்தியாவில் இருக்கும் போதுதான் தெரியவந்தது.ஈழத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் திரும்பி ஈழத்துக்கு போக என்னை வீட்டில் அனுமதிக்காததால் படிப்பை தொடரும் அந்த பொன்னான சந்தர்ப்பத்தை இழந்தேன். ஈழத்தில் நான் எவ்வளவையோ இழந்தாலும், இது என்னை அதிகம் பாதிக்கும் விடயங்களில் ஒன்று. இப்படி ஈழப்போர்ச்சூழலின் காரணமாக தங்கள் படிப்பை தொடரமுடியாமல் போன சகோதர சகோதரிகள் நிறைய‌ப்பேர். தவிரவும், போர்ச்சூழலில் வாழ்வியல் போராட்டங்களுக்கு மத்தியில் கல்வியை

தொடர்வதன் பயன் என்னவென்று மனம் சலித்தவர்களும் உண்டு. ஒருமுறை என் நண்பியின் தாயார் சொன்னது என் நினைவில் இன்றும் உள்ளது. நீங்கள் எல்லாரும் என்னதான் படிச்சாலும் சிங்களவன் என்ன உங்களுக்கு வேலையை தூக்கியோ தரப்போறான்”. அவர் சொன்னதில் அதிகம் உண்மை இருந்தாலும், இதையெல்லாம் காரணம் காட்டி யாராவது படிப்பை பாதியில் நிறுத்துவது என்பது ஏனோ எனக்கு உடன்பாடாக இருந்ததில்லை. கல்வி ஒரு மனிதனுக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுக்கும். ஒரு ஒடுக்கப்பட்ட இனமாய் எங்கள் விடுதலைக்கு அது அவசியம் கூட‌ என்பது என் கருத்து.

நானும் என் நண்பிகளும் பாடசாலை நாட்களில் ஈழப்போராட்டம் பற்றி பேசும் போது என் நண்பிகளில் சிலர் சொல்வார்கள் தாங்கள் விடுதலை இயக்கத்தோடு சேரப்போவதாக. ஒருத்தி சொன்னார் எல்லாரும் போராடப்போனால், பிறகு ஊரில் பொடியன்களுக்கு யார் வாழ்வு குடுக்கிறதுஎன்று. எல்லோரும் சிரித்து விட்டோம். உண்மையில்ஈழத்தில் பெரும்பாலும் ஆண்கள் தங்களை விடுதலைப்போராட்டதில் இணைத்துக்கொண்டதால் ஆண் பெண் விகிதாசாரம் சம அளவில் இருந்ததில்லை. அதுவல்ல நான் சொல்ல வருவது.

இப்படி எங்களோடு ஒன்றாய் பழகி, சண்டைபோட்டு,சமாதானமாகி ஒர் நட்பின் இணைப்பில் இருந்த என் நண்பிகளில் சிலர் தங்களை விடுதலைப்போராட்டதில் இணைத்தும் கொண்டார்கள். திடீரென்று ஓர் நாள் பாடசாலைக்கு வராமல் விட்டார்கள். சில நாட்கள் கழித்து தான் தெரிந்தது அவர்கள் எங்கே போனார்கள் என்று. அதோடு அவர்களின் தொடர்பு எனக்கு அறுந்து போனது. என் வாழ்நாளில் நான் இனி அவர்களை பார்க்கப்போவதில்லை.இதுவும் கசப்பான, ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும் ஓர் யதார்த்தம்.

கடந்த ஞாயிறு என் ஊர்க்காரர் ஒருவர் சொன்னார் என் பாடசாலை நாட்களின் நண்பி ஒருவர் வன்னி களமுனையில் வீரகாவியம் ஆகிவிட்டதாக. என் நண்பி கொழும்பிலிருந்து 1983 தமிழின அழிப்பில் தந்தையை பறிகொடுத்துவிட்டு பின் ஊரோடு வந்து கல்வியைதொடர்ந்தார். ஈழத்தில் நாங்கள் நிம்மதியாக எங்கள் கல்வியை கற்கவேண்டுமானால் எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று பாடசாலைநாட்களில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். ஈழத்து மாணவர்களின் சுதந்திரத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் போலும். இன்று என் நண்பி இல்லை. ஆனால், என் நண்பியின் சுதந்திரக்கனவு நிறைவேற வேண்டும். ஈழத்தில் ஒவ்வொரு தமிழ்மாணவனுக்கும் கல்வியும், அதை பெறுவதற்கு ஓர் அமைதியான சூழலும் வேண்டும். இது தான் என் நீண்டநாள் விருப்பம், ஆசை எல்லாமே. முடிந்தால், ஈழத்து வாசகர்கள் போர்ச்சூழலில் உங்கள் பள்ளிக்கூட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடரும்

ரதி