Wednesday, November 29, 2023
முகப்புஉலகம்ஈழம்ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி !

ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி !

-

ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி

ஈழத்தின் நினைவுகள் பாகம் – 3

போர் என்றால் மனிதசிதைவு (Dehumanization) மிகமோசமாக நடக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞான ஆராய்ச்சி செய்பவர்கள் எழுதியதை படித்திருக்கிறேன். இலங்கையில் நாங்கள், சிறுபான்மைத்தமிழர்கள், மனிதர்களாக மதிக்கப்படாமல் வெறும் ஜடங்களாகவும்,மிருகங்கள் போலவும், கேலிப்பொருளாகவும்தான் பார்க்கப்படுகிறோம், நடத்தப்படுகிறோம். இன்று, மனிதர்களின் தேவைகள் என்னென்ன என்பதை விதம்விதமாக கண்டுபிடித்து ரகம்ரகமாக பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். அந்த பொருளுலகில் “மனிதம்” மறைமுகமாக சிதைக்கப்படுகிறது. இதைப்பற்றி தான் வினவு தன் பெரும்பானமையான கட்டுரைகளில் சொல்கிறது.

ஈழம் போன்ற போர்பூமியில் படுகொலைகள், பாலியல் வன்முறை, ஆட்கடத்தல், காணாமல்போதல், தாங்கொணா சித்திரவதை என்ற கொடுமைகள் மூலம் மனிதம் கேள்வி முறையின்றி சிதைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு ஏன் மனிதம் பற்றி யாரும் பாடம் எடுக்கவேண்டும்? அது இயல்பான மனிதப்பண்பு அல்லவா என எனக்கு நினைக்கத் தோன்றினாலும், ஈழத்தமிழர்கள் விடயத்தில் மனிதம், மனிதசிதைவு பற்றி உலகத்தோருக்கு செவிகளிலும் மனங்களிலும் அறைந்தாற்போல் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். எங்களுக்கு இலங்கையில் இழைக்கப்படும் குரூரமான கொடுமைகளை, அநீதிகளை வெளியில் நாங்களாவது சொன்னால்தான், எங்களுக்கு நியாயம் கிடைக்க ஏதாவது வழி பிறக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.

மனிதசிதைவு இலங்கையில் போர்க்காலங்களில் மட்டும் நிகழ்வதாக தெரியவில்லை. ஈழப்போர் தொடங்கியதே 1983 களுக்கு பிறகுதான் என்று சொல்கிறார்கள். ஆனால், இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதலே எங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு, எங்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறையும் வன்முறையும் 1958 இலிருந்தே தொடங்கிவிட்டது. அன்றுமுதல், எங்கள் மண்ணில் மனிதம் சிதைக்கப்பட்டு, நாங்கள் சிங்கள ராணுவம் தன் அடக்குமுறையை பிரயோகித்துப் பார்க்கும் ஜடப்பொருட்களாக ஆக்கப்பட்டோம். இந்த பதிவை நான் எழுத ஆரம்பிக்கும் போது முதலில் பொருளாதார தடை அதன் விளைவாக எழுந்த எங்கள் அன்றாட வாழ்க்கையின் அவலங்கள் அவற்றின் தாக்கங்கள் எப்படி என்னை/எங்களை போர்ச்சூழலில் பாத்தித்தது என்றுதான் சொல்லலாம் என்று நினைத்தேன்.

இந்த யூலை மாதம் ஈழத்தமிழர்கள் சரித்திரத்தில் ஒரு மறக்கமுடியாத வலி தரும் வடுவாக பதிவாகியிருப்பதால், அதனோடு இணைந்த மனிதசிதைவுகள் அதன் வடுக்கள் பற்றி எழுதலாம் என்று முடிவெடுத்தேன். இதை எழுதலாம் என்று முடிவெடுத்த பின்னும் எங்கிருந்து தொடங்குவது என யோசித்தால் மனம் வலிக்கிறது. காரணம், எங்கிருந்து தொடங்கினாலும் அங்கெலாம் நிறைந்திருப்பது ஈழத்தமிழர்களின் மனித‌ அவலம், அவலம்…… எங்களின் அவலங்கள் மட்டுமே.
பொதுவாகவே மனிதர்கள் அவர்கள் வாழ்வில் ஏற்படும் சில கசப்பான அனுபவங்களை மறக்க நினைப்பார்கள். அது மனித இயல்பு என்று நினைக்கிறேன். அது போல் தான் நானும். வினவு என்னை எனது ஈழம் பற்றிய நினைவுகளை எழுதுகிறீர்களா என்று கேட்டபோது, என் வலிகள் நிறைந்த வாழ்நாட்களை எவ்வளவுதூரம் மீட்டமுடியும் என்று எனக்கு தோன்றவில்லை. காரணம், அவற்றை நான் வலுக்கட்டாயமாக மறக்க நினைப்பவள். என்னதான் மறக்க நினைத்தாலும் அவற்றை மீட்டிப்பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. ஒருவேளை என் வலிகளை இப்படி எழுதினால் குறைத்துக்கொள்ளலாம் என்றும் தோன்றியது. நான் மட்டுமல்ல போர்ச்சூழலில் வாழ்ந்த, வாழுகின்ற ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் போர் தந்த வலியும் வடுவும் அவன்/அவள் மரணிக்கும் தருணம்வரை ஆறப்போவதில்லை.

1983 கறுப்பு யூலைக்கு முன்பே எங்கள் மீது சிங்கள் ஆட்சியாளர்களால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டாலும், ஒரு அதிபயங்கரமான உயிரை நடுங்க வைக்கும் சம்பவம் கறுப்பு யூலை. கொழும்பில் “இனக்கலவரம்” என்ற பெயரில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிட்ட வன்முறை. ஏறக்குறைய மூவாயிரம் உயிர்களை பலி கொண்டதாக வரலாறு சொல்கிறது. இன்று, கால்நூற்றாண்டு கடந்தபின்னும் வன்னியில் முள்ளிவாய்க்காலில் அது முப்பதாயிரமாக……. நாங்கள் என்ன வெறும் எண்களா? இறந்து போன உடல்கள் மட்டுமா? இப்படி எங்கள் உயிர்கள் மதிப்பின்றி ஏன் அழிக்கப்படுகிறது, சிதைக்கப்படுகிறது? என் மிக நெருங்கிய உறவினர்களும் கொழும்பிலிருந்து 1983 யூலை தமிழின அழிப்பிலிருந்து தப்பிவந்தவர்கள்தான். அவர்கள் அங்கு நடந்த இரக்கமற்ற கொலைகள்,கற்பழிப்புகள், கொள்ளைகள் பற்றி நிறையவே சொன்னார்கள். தமிழர்கள் ஈவிரக்கமின்றி வெட்டியும், குத்தியும், சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிருடன் நெருப்பில் எரிக்கப்பட்டும், கை,கால்கள் வெட்டப்பட்டு அங்கவீனர்களாக ஆக்கப்பட்டும், கொழும்பில் தமிழர்களின் வாழ்விடங்கள், வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டும் சொல்லமுடியாத, சொல்லில் அடங்காத வேதனைகள் அன்றுமுதல் இன்றுவரை தொடர்கிறது.

இது எல்லாவற்றின் உச்சம்தான் வன்னியில் நடந்த மனிதப்பேரவலம். வன்னியில் எங்கள் உறவுகளுக்கு நடந்த கொடுமைகள் அரசியல் தாண்டி, மனித அவலமாக மட்டுமே நான் இங்கே பேசிக்கொண்டிருக்கிறேன். இலங்கை அரசு எப்போது பயங்கரவாதத்திற்கு எதிரான‌ போர் என்று தமிழின அழிப்பில் இறங்கியதோ அன்றிலிருந்து செய்திகளை தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளம் என்று ஒரு இடம் விடாமல் தேடித்தேடி பார்த்தேன், கேட்டேன், படித்தேன். என் உறவுகளை தாங்கொணா கொடுமைகளிலிருந்தும் இன அழிப்பிலிருந்தும் யாராவது காப்பாற்ற ஏதாவது முயற்சி செய்யமாட்டார்களா என்ற ஓர் தவிப்பாகவே இருந்தது.

காலம் காலமாக எங்கள் மீது திணிக்கப்பட்ட உளவியல் மற்றும் உடல்ரீதியான வன்முறைகள் சொல்லில் அடங்கா. தமிழினப்படுகொலைகள் என்பது நித்தம் நித்தம் ஈழத்தில் அரங்கேறினாலும், அதிகளவில் அப்பாவித்தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுவதுதான் என்னை அதிகம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. செம்மணி படுகொலைகள் முதல் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வரை. செம்மணி படுகொலைகள், யாழ்ப்பாணம் ராணுவக்கட்டுப்பாட்டில் வீழ்ந்தபின் கொல்லப்பட்ட அறுநூறு பேருக்கு மேல் செம்மணி வெளியில் குழிதோண்டி புதைக்கப்பட்டவர்கள். செம்மணி படுகொலைகளுக்கே இன்னும் எந்த நியாயமும் கிடைக்கவில்லை. அதற்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதைவிட அந்த வழக்கை எடுத்து, அந்த கொலைகளுக்கு நியாயம் கேட்ட வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டது தான் அதைவிட கொடுமை என்று தோன்றுகிறது.

தசாப்தங்களாக படுகொலைகளும் காணாமற்போவதும் ஈழத்தில் ஓர் அன்றாட நிகழ்வாகவே நடந்து வந்து கொண்டிருக்கிறது. எங்கள் ஊரிலிருந்தே நிறைய இளைஞர்கள் ராணுவத்தால் அழைத்துச் செல்லப்படுவதும் பிறகு அவர்கள் ஒன்றில் பிணங்களாக வீதியில் விழுந்து கிடப்பதும் அல்லது காணாமல் போனவர்களாக‌வும் ஆனதுதான் மிச்சம். சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட மீனவர்களின் உடல்களும் சிலசமயங்களில் கரை ஒதுங்கியதும் உண்டு. அவற்றை நான் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்ததும் உண்டு. மனித உடல்கள் கடல் தண்ணீரில் உப்பி, பார்க்கவே மிகக்கோரமாக இருந்தது. ராணுவத்திடம‌ போய் ஏன் கொன்றார்கள் என்று கேள்வியெல்லாம் கேட்க முடியாது. கேள்வி கேட்டால், கேள்வி கேட்பவரும் அடுத்த கணமே கொலைசெய்யப்படுவார்.

வடக்கில் நான் அறிந்த காலம் தொட்டு காவல்துறையும் கிடையாது. ஒருவேளை காவல்துறை இருந்தாலும் தமிழனுக்கு நியாயம் கிடைத்திருக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. வடக்கில் மிக நீண்டகாலமாகவே ராணுவ அடக்குமுறைதான். தமிழர்கள் நாம் ஊமைகளாய், செவிடர்களாய், நாதியற்றவர்களாய் இவர்கள் நடத்தும் ஊழிக்கூத்தை பார்த்து……இதற்கு மேல் என்ன எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் தமிழர்கள், எங்களை  கொன்று குவித்துப்போட்டாலும் ஏனென்று கேட்க நாதியற்றவர்கள். அதனால் எங்களை கொல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு போலிருக்கிறது. இப்படித்தான் என் மனதில் பதிந்து போனது. பெற்ற பிள்ளைகளை, கணவனை, தந்தையை, சகோதரனை ராணுவம் பலிகொண்டபின் பெற்றோர்கள்,மனைவி, பிள்ளைகள் பித்துப்பிடித்தவர்கள் போல் ஆகிவிட்டவர்கள் நிறையப்பேர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.

ஈழத்தில் என் அயலில் வாழ்ந்த இரு தமிழ் சகோதரர்கள் இப்படி காணாமல் போனவர்கள் தான். முதலில் காணாமல் போனவர் என் பாடசாலை தோழியின் அண்ணனும் கூட. அந்த சகோதரர் நிறையவே கல்வித்தகமைகள் கொண்டவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடியவர். கொழும்பில் வேலை பார்த்துகொண்டிருந்தார். விடுமுறை நாட்களில் எப்போதாவது ஊருக்கு வருவார், ஊரில் ராணுவ கெடுபிடிகள் காரணமாக தாயார் அவரை வரவேண்டாம் என்று தடுத்தாலும் கூட. அவருக்கு நான்கு சகோதரிகள். ராணுவம் அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு சோதனை போடுகிறோம் பேர்வழி என்று அவர்களுக்கு கஸ்டங்களை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். ஒரு நாள் அந்த சகோதரர் வீட்டில் இருந்த நேரத்தில் ராணுவம் அவர்கள் வீட்டிற்கு சோதனை போட  சென்றிருக்கிறார்கள். அந்த சகோதரர் ராணுவத்தோடு சிங்கள மொழியில் அவர்களின் அக்கிரமங்களை சொல்லி வாதாடியிருக்கிறார். ராணுவம் அவரை அழைத்துக்கொண்டு போனது. போனவர் போனதுதான். அதன் பின் எத்தனையோ வருடங்களாகியும் இன்றுவரை அவர் திரும்பி வரவில்லை. அவரின் குடும்பத்திற்கு இது ஒரு பெரும் இடியாகவே தலையில் இறங்கியது. அவரின் தாயார் சித்தப்பிரமை பிடித்தவர் போலாகிவிட்டார். இன்னுமொருவர், ஒருநாள் ராணுவம் ரோந்து வரும் போது கூட்டிச்செல்லப்பட்டவர். இன்றுவரை வீடு திரும்பவில்லை.

இதில் வேதனையான விடயம் என்னவென்றால், இந்த இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஒன்றாக சேர்ந்து தங்கள் பிள்ளைகளை தேடியதுதான். கொழும்பு சென்று யார் யாரிடமோ முறையிட்டார்கள். தமிழ்நாடு சென்று ஏதோ மை போட்டுப்பார்த்தார்கள், காண்டம் வாசித்து (அப்படியென்றால் என்னவென்று எனக்கு சரியாக தெரியாது) தேடினார்கள் என்று கேள்விப்பட்டேன். என்ன பயன்? அந்த இரு சகோதரர்களும் காணாமல் போனவர்கள் தான். இதெல்லாம் சின்ன உதாரணங்கள் மட்டுமே.

இப்படி எங்கள் ஊரிலும், ஒவ்வொரு ஊரிலும் பாடசாலை மாணவமாணவிகள், குடும்பத்தலைவன், அன்றாடம் பிழைப்பதற்கு ஏதாவது கூலி வேலை கிடைக்காதா என்று தேடிய எழைகள், குழந்தைக்கு பால் வாங்கப்போனவர்கள், கோயில் பூசாரி என்று ஏதுமறியாத அப்பாவிகள் காணாமல் போனவர்கள் அல்லது ராணுவத்தால் கடத்திச்செல்லப்பட்டவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பாடசாலை மாணவிகளின் பிணங்கள் ராணுவமுகாம்களுக்கு அருகிலுள்ள கிணறுகளிலிருந்தும் புதர்களுக்குள்ளும் கண்டெடுக்கப்படுகிற கொடுமைகளும் இன்றுவரை நடந்துகொண்டுதானிருக்கின்றன. இப்போதெல்லாம் இதுவே தமிழனின் அன்றாட வாழ்க்கையின் ஓர் தவிர்க்க முடியாத தலைவிதி என்று, செத்து செத்து பிழைப்பதை தவிர வேறெதுவும் செய்யமுடியாத சூழ்நிலைதான் ஈழத்தில் வடக்கிலும் கிழக்கிலும் நிலவுகிறது என்று கேள்விப்படுகிறேன்.

ராணுவம் தமிழர்களை கொண்டுசெல்கிறார்கள். யாரிடம் முறையிட? காணாமல் போனவர்கள் ஏதாவது ஒரு புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்டால், இறந்துவிட்டார்கள் என்றாவது உறுதிசெய்து கொள்ளலாம். ஆனால், உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாமல் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனவர்களாக கருதப்படுகிறார்கள். கொழும்பில் வெள்ளை வான் (White Van) கடத்தல்கள் சர்வதேச பிரசித்தம். இதில் கடத்தப்படுபவர்கள் மிகப்பெரும்பான்மையினர் தமிழர்களே. தமிழன் இலங்கையின் எந்த பகுதியில் இருந்தாலும் பாதுகாப்பு இல்லை. இது தான் நான் சொல்ல வருவது. ஆட்கள் காணாமல் போவதில் கடத்தப்படுவதில் ஈராக் நாட்டிற்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாம் இடத்தில் இருப்பதாக மனித உரிமைகள் காப்பகம் இன்றுவரை அறிக்கை விட்டுக்கொண்டுதானிருக்கிறது.

ஆனால், சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை மனித உரிமைகள் காப்பகம் விடும் அறிக்கைகள் எல்லாம் ஜோக் தான் அவர்க்ளுக்கு. இப்படி சிங்கள ஆட்சியாளர்களை நினைக்க வைப்பது எது என்று எனக்கு தெரிந்த அரசியல் அறிவின் அளவைக்கொண்டு விளக்க முடியும். ஆனால், அரசியல் தவிர்த்தே எங்கள் அவலங்களை சொல்ல விரும்புவதால் அதை தவிர்க்கிறேன். ஆனாலும், இப்போதெல்லாம் தமிழில் அடிக்கடி சொல்வார்களே “ஆப்பு” என்றொரு வார்த்தை, அது இலங்கை அரசுக்கு இந்த மனித உரிமைகள் காப்பக அறிக்கைகள் மூலம் தான் வரவேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் இப்படியெல்லாம் நடக்குமா என்று எனக்குள் நானே கேட்டுகொள்வதுண்டு. ஆனால், ஈழத்தில் தமிழனுக்கு நடக்கிறதே என்ற யதார்த்தம் என்னைப்போன்ற ஈழத்தமிழர்களை நிறைவே பாதிக்கிறது. இதை தடுக்க என்னவழி, எங்கள் உறவுகளை காப்பது எப்படி?

கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு போன்ற ஒரு பெரிய ஒரு நகரிலும் மிக அதிகளவில் தமிழர்கள் மட்டும் எப்படி அடையாளம் வைத்து கடத்தப்படுகிறார்கள்,

காணாமற்போகிறார்கள், சித்திரவதைப்படுத்தப்படுகிறார்கள் அல்லது வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்று யோசித்தபோது ஒரு விடயம் என் சிந்தனையில் இடறியது. அதுதான் “தேசிய அடையாள அட்டை” (National Identity Card). சரி, அதை சிங்கள அரசு எங்கிருந்து கண்டுபிடித்தது என்று தேடியபொழுது ஓர் விடயம் என் கண்ணில் பட்டது. ருவாண்டா (Rwanda) பெல்ஜியத்தின் ஓர் காலனி நாடாக இருந்த காலத்தில் அந்த நாட்டு மக்களை (Hutu or Tutsi) யார் யார் என்று அடையாளம் காண இந்த அடையாள அட்டைகள் உபயோகிக்கப்பட்டன என்று தெரிந்துகொண்டேன். பின்நாடகளில், இனப்படுகொலைகள் நடந்த காலங்களில் அப்படிப்பட்ட அடையாள அட்டைகளே சிறுபான்மையான துட்சிகளை அடையாளம் கண்டு, அவர்களை கொல்வதற்கான அனுமதிப்பத்திரம் போலானது. பொதுமக்களே பொதுமக்களை கொன்றுகுவித்த கொடுமை நடந்தது. இது வரலாறு.

இலங்கையிலும் இந்த தேசிய அடையாள அட்டை தான் ஈழத்தமிழன் காணாமல் போவதற்கும், கொல்லப்படுவதற்கும், மனிதசிதைவுக்கும் அனுமதிப்பத்திரம். இலங்கையில் ஓர் தமிழன் அடையாள அட்டையை தொலைத்தால், அது அவன் இறப்பதற்கு சமம். அதாவது அடையாள அட்டை இல்லாதவர் பயங்கரவாதி. அது இருந்தாலும், அவன் தமிழன் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவன் காணாமற்போவான். இன்று வரை காணாமற் போய்க்கொண்டிருக்கிறான். ஈழத்தில் யாராவது வெளியில் வேலையாக போகும் போது வீட்டிலுள்ளவர்கள் மறக்காமல் கேட்பது “ஐடென்டி காட்டை மறக்காமல் எடுத்துக்கொண்டு போறியோ”? ஈழத்தில் தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த ஓரிரு ஆங்கிலவார்த்தைகளில் இதுவும் ஒன்று. பாடசாலை மாணவர்கள் முதல் கடலில் மீன்பிடிக்கச் செல்லுபவர்கள் (மிகக்குறுகிய கடற்பரப்பில்) வரை அடையாள அட்          டையை தங்களோடு எந்த நேரமும் வைத்திருக்க வேண்டும். நானும் ஈழத்தில் இருந்த காலத்தில் இந்த தேசிய அடையாள அட்டையை என் “உயிரின் உயில்” ஆக பாதுகாத்து என்னோடு கொண்டு திரிந்திருக்கிறேன். நான் எனது அடையாள அட்டையை பத்தாம் வகுப்பு படிக்கும் போது பெற்றுக்கொண்டேன். அது இல்லாவிட்டால் பத்தாம் வகுப்பு பரீட்சையே எழுத முடியாது என்றார்கள் ஆசிரியர்கள் அதனால் அடித்து பிடித்து எடுத்து வைத்திருந்தேன். இந்த அடையாள அட்டை சொல்லும் எங்களின் சோகக்கதைகள் ஏராளம். அதை என்னால் வெறுக்கவும் முடிவதில்லை. விரும்பவும் முடிவதில்லை. இப்படி தேசிய அடையாள அட்டை என்ற முறையின் அடிப்படையில் எங்கள் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படாததோடு, நாங்கள் இனம் என்ற ரீதியில் பாகுபடுத்தப்பட்டு வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறோம்.

ஒவ்வொரு இனமும் தேசமும் அதன் நிலம் மற்றும் மொழியை ஒர் பெண்ணின் அடைமொழியை கொடுத்தே பெருமைப்படுத்துகின்றன, “தாய் மண்”, “தாய் மொழி” என்று. அவ்வாறான சிறப்புகள் கொண்ட பெண்ணினம் என் மண்ணில் மனிதஜென்மங்களாக கூட மதிக்கப்படுவதில்லை. ஈழத்தில் பெண்களின் நிலைமைகள் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவுக்கு மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. இது தான் இலங்கையில் நடைபெறும் மனிதசிதைவுகளின் உச்சக்கட்டம். தன் கூந்தலின் நுனி கூட பிறிதோர் ஆண்மகனின் விரல் நுனி கூட தீண்டக்கூடாது என்று நினைப்பவள் தான் ஈழத்தமிழச்சியும். ஆனால், என் சகோதரிகளின் மானமும், கற்பும் சிங்கள ராணுவத்தால் அனுதினமும் சித்திரவதை செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதைப்பற்றி எல்லாம் அதிகம் நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. காரணம் நீங்களே ஓரளவுக்கு இதைப்பற்றி அறிந்திருப்பீர்கள். ஈழத்தில் நான் இருந்த காலத்திலும் “ஆமிக்காரன் அந்த பிள்ளையிட்ட சேட்டை விட்டிட்டானாம்” இப்படித்தான் பெரும்பாலும் பேசிக்கொண்டார்களே தவிர, உண்மையில் இதைப்பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. பேசுவதில்லை என்பதற்காக அதில் அக்கறை இல்லை, அது நடக்கவில்லை என்பதல்ல. எங்கள் சகோதரிகளின் வலிகளை புரிந்து கொண்டாலும், அதை பேசி யாரும் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டாம் என்ற நோக்கம் தான்.

தவிரவும், பாலியல் வன்முறைகள் பற்றி வெளியே பேசமுடியாத அளவுக்கு ஓர் சமூகநிர்ப்பந்தத்தையும், ஓர் இறுக்கமான மனநிலையையும் எங்கள் பண்பாடும் கலாச்சாரமும் தமிழ்ப்பெண்களுக்கு கற்றுத்தந்துவிட்டது என்றுதான் நான் நினைக்கிறேன். அதனாலேயே பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ்ப்பெண்கள் யாரும் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்வதில்லை என்று நினைக்கத்தோன்றுகிறது. தங்களுக்கு நடந்த கொடுமைகளை ஈழத்தமிழ்ப்பெண்கள் எவ்வளவு தூரம் வெளியில் சொல்ல துணிவார்களோ எனக்கு தெரியாது. ஆனால், அவர்களுக்கு இழைக்கப்படுகிற‌ கொடுமைகளுக்கு நியாயம் கிடைக்குமளவுக்கு ஓர் பாதுகாப்பான சூழ்நிலையும் சமூக அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்பது ஓர் பெண்ணாக என் அவா.

அண்மையில் கூட வன்னி களமுனையில் இறந்துவிட்ட ஈழப்பெண்போராளிகளின் பிணங்களை சிங்கள ராணுவம் புணர்ந்த மானிடப்பண்பிற்கு புறம்பான செயலை சில தனியார் தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்டிருந்தன. பிறகு அதை வேறு தளங்களுக்கு சென்று அதற்கு இணைப்பு வேறு….. பார்க்க நேரிட்டது. எனக்கு வேதனையாகவும் எரிச்சலாகவும் இருந்தது. அந்த‌ படங்களை வெளியிட்டவர்களிடம் நான் கேட்பது, பாதிக்கப்பட்ட பெண்கள் உங்கள் வீட்டுப்பெண்களாக இருந்தால் அந்த படங்களை தளங்களில் இணைத்திருப்பீர்களா?  இதையெல்லாம் பார்க்கும் ஓர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எப்படி தனக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்ல தோன்றும்? தனது சமூக அங்கீகாரம் பற்றிய பயம் பாதிக்கப்படுகிற பெண்ணுக்கு வராதா? இப்படி புகைப்படங்களை போட்டு எங்களின் நெஞ்சங்களில் நெருப்பை அள்ளி கொட்டாதீர்கள். அறிவார்ந்த தமிழ் இணையத்தளங்களின் உரிமையாளர்களிடம் நான் இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்வது இதுதான். என் சகோதரிகளுக்கு நியாயம் கிடைக்க அறிவை பயன்படுத்துங்கள். எத்தனையோ சகோதரிகள் தங்கள் தாய், தந்தை, சகோதரர்கள் என்ற உறவுகளின் கண்களின் முன்னாலேயே சிங்கள ராணுவத்தால் நாசமாக்கப்பட்டுள்ளார்கள். அந்த கொடுமையே அவர்களை ஆயுள் உள்ளவரை கொல்லுமே. ஐக்கிய நாடுகள் சபையின் ராதிகா குமாரசுவாமி ஈழத்தமிழ்ப்பெண்களின் அவலங்களை எத்தனையோ அறிக்கைகளாக அனுப்பிக்கொண்டிருந்தாலும், ஈழத்தில் தமிழ்ப்பெண்களின் அவலங்கள் ஏனோ இன்னும் தீரவில்லை.

ராணுவம், சோதனை போடுகிறோம் என்று தமிழ் பெண்களின் அவயங்களை ……வதும், நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் சுற்றிவர இருந்து கொண்டு என் சகோதரிகளை ஆடைகளை களையச்சொல்லி அம்மணமாய் நிற்கவைப்பது, பாலியல் வல்லுறவு கொள்வது, அவர்களை கேலிப்பொருளாக்கி மிருகங்களாய் இளிப்பதும், பதின்மூன்று வயது தமிழ் சிறுமியுடன் கூட‌ பாலியல் வல்லுறவு கொள்வதும்….. ஏன் என் சகோதரிகளுக்கு நடக்கும் கொடுமைகளை யாருமே தட்டிக்கேட்க மாட்டவே மாட்டார்களா? உண்மையில் இந்த ஒரு காரணத்திற்காகவே எத்தனையோ சகோதர, சகோதரிகள் தங்களை போராளிகளாக மாற்றிக்கொண்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், அவர்களின் வாழ்வும் இன்று வேதனையின் விளிம்பில்.

எனக்கு பொதுப்புத்தி மட்டுமே உண்டு. அதனால் ஈழத்தில் மானிடம் பிழைக்க என்ன வழி என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால், மனிதம் காப்பாற்றப்பட்டால் மட்டுமே மனிதசிதைவு தடுக்கப்படும். மனிதசிதைவு தடுக்கப்பட வேண்டுமானால் ஈழத்தில் தமிழனுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினத்தவரின் மனித உரிமைகளுக்கும் அரசியல் அபிலாஷைகளுக்கும் உரிய சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று என் அறிவுக்கு தோன்றுகிறது.

தொடரும்

ரதி