மக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், பொது வினியோகம் இவையெல்லாம் அரசின் கடமையாக இருந்தது அந்தக் காலம். காட் ஒப்பந்தத்திற்கு பிறகு இந்தக் கடமைகளை தலை முழுகி முதலாளிகளுக்கு மட்டும் சேவை செய்யும் தரகனாகி விட்டது அரசாங்கம். காட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்த காலத்தில் வெளியிடப்பட்ட பாடல் இன்றைக்கும் பொருந்துகிறது. முன்னுரையுடன் பாடலை கேட்டுப்பாருங்கள்!
கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – நாட்ட
கொண்டு போய் வித்துப்புட்டு என்னடா பார்லிமெண்டு
ஓட்டெதுக்கு…. சீட்டெதுக்கு…..
ஓடுங்கடா நாட்டை விட்டு..
இந்த ஒருசாண் வயித்துக்குத்தான் இம்புட்டு பாடு
வயித்துல நெருப்ப கொட்டிப்புட்டான் பாரு – நாங்க
உக்காரவச்சு சோறு போடச்சொல்லி கேட்டமா
ஓசியில உப்புபுளி மொளகாதான் கேட்டமா – ஏண்டா
சிக்காத புதிராடா விலைவாசி உயர்வு – நீ
உக்காந்து திங்குறவன் உனக்கென்ன நோவு
(கஞ்சி ஊத்த…)
கருவக்காடெல்லாம் கட்டிடமா போச்சு
வெளிய போறதே பெரும்பாடா ஆச்சு
ஒண்ணுக்கு போகக்கூட இருட்டணும் பொழுது
பொம்பளங்க பாடு பொறந்ததே தவறு
கட்டணக் கழிப்பிடம்னு பஸ் ஸ்டாண்டில் இருக்கு
காலு கழுவ ஒரு கல்லுதாண்டா கிடக்கு
நகராட்சி வளந்து மாநகராட்சி
நாலணா வளந்து ஒரு ரூபா ஆச்சு – அட
கக்கூசுக்கு கூடவா விலைவாசி உயர்வு – அதுக்கும்
காட் ஒப்பந்தத்தில கண்டிசனா இருக்கு
(கஞ்சி ஊத்த…)
எம்ப்ளாய்மெண்டு ஆபிசுன்னு ஊருக்கூரு இருக்கு – அத
நம்பினவன் கழுத்துக்கு நிச்சயமா சுருக்கு
சுவரெல்லாம் தொங்குதடா சுயவேல வாய்ப்பு
கெவர்மெண்டு வேலைக்கு வச்சுப்புட்டான் ஆப்பு
ஆட்டமாட்ட வித்துத்தானே காலேஜூ படித்தோம்
வாத்து வளக்கவாடா எம்பிளாய்மெண்டில் பதிஞ்சோம் – அட
பன்னிக்கு எதுக்கடா தங்கத்தில மூக்குத்தி – வெறும்
பம்மாத்து எதுக்கடா தள்ளுங்கடா இடிச்சு
(கஞ்சி ஊத்த…)
ரேசன் கடையின்னு வச்சிருக்கான் பேரு – இந்த
தேசத்தின் பெருமைய அங்க வந்து பாரு – இப்ப
கெவர்மெண்டு சீமெண்ணைக்கு அடிச்சுட்டான் கலரு
கருப்பு மார்கெட்டுக்கு கொடுத்துட்டான் பவரு
புழுங்கலு குருணை பச்சரிசி நொய்யி – உங்க
புழுத்த அரிசி வாங்க ஏழெட்டு பைய்யி
ரேசன் கடையின்னு சொல்லாதடா பொய்யி – கோதுமை
பாமாயில கொண்டு வந்து வைய்யி
பாதிய முழுங்குற படிக்கல்லு தொங்குது – செஞ்ச
பாவத்துக்கு தண்டனையா தராசு தொங்குது – அட
மீதியையும் மூடுடான்னு அமெரிக்கா நோண்டுது – நம்ம
புரட்சித் தலைவி ஆட்சி பூட்டக் காட்டுது
(கஞ்சி ஊத்த…)
சோறுபோட வக்கில்லாத ராசா மவராசா – இத
சொர்க்கமுன்னு சொல்லுறானே கேக்குறவன் லூசா
வேலதர வக்கில்லாத ராசா மவராசா – ஊர
மேய்க்க ஆசப்பட்டா அது என்ன லேசா
நடக்க படிக்க தண்ணி குடிக்கவும் காசா
நாயி கணக்கா வரி புடுங்கத்தான் அரசா
சொடக்கு போடுறான் அமெரிக்கா லேசா –சும்மா
சொழண்டு ஆடுறான் இவன் சுதந்திர அரசா – நம்ம
குனிய குனிய இவன் குட்டுறது புதுசா – மக்கள்
இணைய இணைய திரைவிலகிடும் முழுசா
(கஞ்சி ஊத்த…)
நேயர் விருப்பப் பாடலை பதிப்பித்தமைக்கு நன்றிகள். போன பதிவில் இருந்த பாடலை சிலருக்கு அறிமுகப்படுத்தினேன். உணர்வூட்டுவதாக பாராட்டினார்கள்.
எனக்கு சில சந்தேகம். ஆட்சியாளர்களை சாடி, மாற்றத்துக்கான புரட்சியை தூண்டி நீங்கள் ஆட்சியை பிடித்தால் என்ன செய்வீர்கள் ?
இப்போ நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் என்ன செய்கிறார்கள் ?
செந்தழல் ரவி அய்யா! உங்களுக்கு நடப்பு விசயங்களில் அந்தளவு பரிச்சையம் இல்லை என நினைக்கிறேன்… நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சியில் இல்லை, இந்தியா அநியாயமாக தலையிட்டு வம்பு செய்ததால் தனது ஆட்சியை துக்கியெறிந்துவிட்டு வெளியேறிவிட்டனர். இப்போ அங்கே இருப்பது இந்தியாவின் ஆசி பெற்ற ஒரு பொம்மையாட்சி
https://www.vinavu.com/wp-content/uploads/2009/10/Puthiya_Jananayagam_Oct_091.pdf இந்த சுட்டியிலுள்ள மென்நூலில் “குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவுவதே எமது முக்கிய கடமை” நேபாள் மாவோயிஸ்ட் தோழர் பசந்தாவின் நேர்காணல்’ இருக்கிறது
தளத்தின் பின்னணியில் செய்யப்பட்டுள்ள மாற்றம் அருமை. இது நிரந்த்ரமா அல்லது நவ 7க்கு மட்டுமா?
தளத்தின் வடிவமைப்பு மாற்றம் நவம்பர் 7க்கு மட்டும்தான்.
பாட்டு ஜெ. ஆட்சி காலத்தில் எழுதப்பட்டது. ஆண்டுகள் பல ஆகினும், பாடல் இன்னும் உயிருள்ளதாய் இருக்கிறது. முன்பை விட இன்னும் மக்களின் நெருக்கடி பல மடங்கு கூடியிருக்கிறது.
இப்படி ஒரு அநாகரிக காலம் இருந்ததா? என யோசிக்கும் அளவுக்கு சமூக மாற்றம் வரவேண்டும். நிச்சயமாய் வரும்.
[…] கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்… […]