Wednesday, October 16, 2024
முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!

முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!

-

Puja_December-09-1 துரோகம்! பதவி சுகத்துக்காக நடந்துள்ள அப்பட்டமான துரோகம்! தமிழகத்தின் ஐந்து தென் மாவட்ட  மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணை நீரில், தமிழகத்தின் நியாயவுரிமையைக் காவு கொடுத்து விட்டார், “தமிழினத் தலைவர்’கருணாநிதி.

முல்லைப் பெரியாறு அணையில் மெல்லிய அதிர்வு ஏற்பட்டதைப் பூதாகரமாக்கிப் பீதியூட்டி, 1979 முதல் கடந்த 30 ஆண்டுகளாக பெரியாறு நீரில், தமிழகத்தின் நியாயவுரிமையை கேரளம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பாக இரு மாநில அரசுகளும் தொடுத்த வழக்குகள் 1998- இல் எடுத்துக் கொள்ளப்பட்டு, எட்டாண்டு இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதி மன்றம் கடந்த 27.2.2006 அன்று தீர்ப்பளித்தது.

அத்தீர்ப்பை ஏற்க மறுத்து, முடக்கும் வகையில் 15.3.2006 அன்று கேரள அரசு புதிய சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்தது. இதை எதிர்த்து மார்ச் 2006- இல் உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்தது. அதன் பிறகு, உச்சநீதி மன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யவேண்டுமென்று கேரள அரசு மனுதாக்கல் செய்தது. இந்த வழக்குகளின் விசாரணை முடிவுக்கு வரும் நிலையில், இந்த வழக்குகளை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்ற,  உச்சநீதி மன்றம் கடந்த நவம்பர் 10-ஆம் தேதியன்று உத்தரவிட்டுள்ளது.

கேரள அரசின் சட்டத் திருத்தம் செல்லுமா என்ற வழக்கில், ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கையும் சேர்த்து, பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கும் உரிமைக்கு உச்சநீதி மன்றம் வேட்டு வைத்துவிட்டது. முப்பதாண்டு காலப் போராட்டத்தை, உச்சநீதி மன்ற உத்தரவு இப்போது மறுபடியும் ஆரம்ப நிலைக்கே கொண்டு வந்துவிட்டது. முல்லைப் பெரியாறு அணை வழக்கில் கேரள அரசு, மத்தியிலுள்ள காங்கிரசு அரசு, உச்சநீதி மன்றம் ஆகிய மூன்றும் ஓரணியில் நின்று தமிழகத்தின் நியாயவுரிமைக்கு அநீதியிழைத்து வருகின்றன. இத்தனைக்கும் பிறகும் அமைதி காக்கிறார், கருணாநிதி.

வழக்குகள் விசாரணையில் உள்ளபோதே, முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக ஆய்வு செய்ய, கேரள அரசுக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து மதுரையில் நவம்பர் முதல் நாளன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார் கருணாநிதி. உடனே, மைய தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவின் அலுவலகங்களில் “மையப் புலனாய்வுத் துறை சோதனை’என்ற நாடகத்தை காங்கிரசு எஜமானர்கள் ஏவி விட்டனர். அரண்டு போன கருணாநிதி, முல்லைப் பெரியாறு தொடர்பான மதுரை கூட்டத்தையே ரத்து செய்துவிட்டார். இதன் மூலம், தனது சரணாகதி சமிக்ஞையை டெல்லி எஜமானர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

கேரள அரசு புதிதாகச் சட்டம் போட்டதை எதிர்த்தும், மைய அரசின் வஞ்சகத்தை எதிர்த்தும் எதுவும் செய்யாத கருணாநிதி, பிரச்சினையை இப்போது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைக் கண்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இப்போது மீண்டும் இழுத்தடிப்புக்கான உத்தரவு வந்ததும், “உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படும் கேரள முதல்வர் அளவுக்கு எனக்குத் தைரியம் இல்லை”என்று அறிக்கை வெளியிடுகிறார்.

நவம்பர் 10- ஆம் நாளன்று உச்சநீதி மன்றத்தில் இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக, தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் பராசரணிடம் “”இந்த உத்தரவை ஏற்றுக் கொள்கிறீர்களா?” என்று நீதிபதிகள் கேட்டபோது, அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். பின்னர், மதியம் மீண்டும் நீதிமன்றம் கூடியபோது, உத்தரவை ஏற்பதாக அறிவித்திருக்கிறார். இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன? அவர் தன்னிச்சையாக இப்படி முடிவை மாற்றிக் கொள்ள முடியுமா? அல்லது, கருணாநிதியின் ஒப்புதல் இல்லாமல் இப்படி நடந்திருக்கத்தான் முடியுமா? இப்போது ஒப்பாரி வைத்து அறிக்கை வெளியிடும் கருணாநிதி, அன்று இந்த உத்தரவை நாங்கள் ஏற்கவில்லை என்று அறிவிக்க வேண்டியதுதானே! அதைவிட்டு இப்போது கண்ணீர் அறிக்கை வெளியிடுவது யாரை ஏமாற்ற?

இந்தத் துரோகம் கருணாநிதியோடு முடிந்துவிடவில்லை. 1980- இல் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக போலீசிடம் இருந்த முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புப் பொறுப்பை கேரளப் போலீசுக்குத் தாரை வார்த்தார். 1980 -லிருந்தே முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்கள் – பொறியாளர்களைத் தாக்கியும், கைது செய்தும், வாகனங்களைப் பறிமுதல் செய்தும் வழக்கு போட்டும் கேரள அரசு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தது. இருப்பினும் எம்.ஜி.ஆரும் அதன் பிறகு ஜெயலலிதா, கருணாநிதியும் இவற்றுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், குறைந்தபட்சம் கேரள அரசுக்குக் கண்டனம்கூடத் தெரிவிக்காமல், தொடர்ந்து தமிழகத்துக்குத் துரோகமிழைத்தே வந்துள்ளனர். பெரியாறு அணையைப் பராமரித்து இயக்குவது, படகு விடுவது, அணைக்கான பாதைகளைப் பயன்படுத்துவது –எனப் பல உரிமைகளை கேரளத்துக்குத் தாரை வார்த்திருக்கின்றனர். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றத்தில் கேரள அரசின் வழக்குரைஞர் 31 முறை வாய்தா கேட்டு இழுத்தடித்த போதிலும், தமிழக ஆட்சியாளர்கள் அதை எதிர்த்து வாயே திறக்கவில்லை.

இப்போது கருணாநிதியின் துரோகம் அம்பலமானதும், ஏதோ அவரால்தான் தமிழகத்தின் உரிமை பறிபோய் விட்டது போலக் கூப்பாடு போடுகிறார் ஜெயலலிதா. கேரள தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளில் “முல்லைப் பெரியாறில் நீரைத் தேக்கவிட மாட்டோம்!” என்று வாக்குறுதி அளித்து ஓட்டுப் பொறுக்கிவிட்டு, இப்போது தமிழகத்தின் உரிமைக்காகப் போராடுவதாகப் பாசாங்கு செய்கிறார். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கலாம் என்று உச்சநீதி மன்றம் 27.2.2006 -இல் தீர்ப்பளித்தபோது ஆட்சியிலிருந்தவர் ஜெயலலிதாதான். “அப்போது கோடைகாலமாக இருந்ததால் தீர்ப்பை செயல்படுத்த முடியவில்லை”என்று இப்போது தனது துரோகத்துக்குப் புதுவிளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்.

“பதவி பேரத்தில் பாழான தமிழக உரிமைகள்” என்று கருணாநிதியை மட்டும் குறிவைத்து தாக்கி, தினமணியில் கட்டுரை எழுதுகிறார், பழ.நெடுமாறன். “தி.மு.க. அரசு தேவையில்லாமல் மைய அரசிடம் பிரச்சினையை எழுப்புகிறது. அண்டை மாநிலங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் தோற்றுவிப்பதை தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்த வேண்டும்” என்று கருணாநிதியைக் குறிவைத்துத் தாக்குகிறார், வலது கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளரான பரதன். “கருணாநிதியின் துரோகத்தால் தமிழகம் பாலைவனமாக மாறும்” என்று ஜெயலலிதாவின் பின்னே நின்று கொண்டு சீறுகிறார், வைகோ.

கருணாநிதி மட்டுமல்ல; அவருக்கு முன்பிருந்தே, எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆட்சிகளில் கேரள அரசுக்கும் மைய அரசுக்கும் துணைநின்று தமிழகத்தின் நியாயவுரிமை பறிகொடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை இவர்கள் திட்டமிட்டே மறைக்கின்றனர். பெரியாறு அணை பற்றி செய்திகள் அடிபடும்போது, பரபரப்பாக அறிக்கை வெளியிடுவதும், அடையாள எதிர்ப்புப் போராட்டம் நடத்துவதும், அதன் பிறகு வாய்மூடிக் கிடப்பதுமாக வைகோ வகையறாக்கள் சூரத்தனம் காட்டுகின்றன.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதியின் துரோகம் ஒரு பங்கு என்றால் ஒன்பது பங்கு துரோகத்தை புரட்சி பேசும் சி.பி.எம். கட்சி செய்து கொண்டிருக்கிறது. “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!” என்று சர்வதேசியம் பேசி சவடால் அடிக்கும் இக்கட்சி, ஓட்டுக்காக முதலாளித்துவ இனவெறியைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது. கேரள மக்களுக்காக, தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்து அனுப்பும் உணவு தானியங்கள்-காய்கறிகள் முதலானவற்றுக்குத் தேவையான நீரின் அளவு 511 டி.எம்.சி.யாகும். அந்த அளவுக்கான நீரையாவது தமிழகத்துக்குத் தரவேண்டும் என்ற நியாய உணர்வு கூட அக்கட்சியிடம் இல்லை. நிபுணர்கள் ஆய்வு செய்து அணை வலுவாக உள்ளது என்று அறிவித்துள்ள போதிலும், பெரியாறு அணையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக திரித்துச் சொல்லி பயபீதியூட்டியும், குறுகிய தேசிய இனவெறியைக் கிளப்பிவிட்டும், புதிய அணை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தி இடுக்கி அணைக்கு நீரைக் கொண்டு செல்ல கேரள “இடதுசாரி’அரசு விழைகிறது. இதன்மூலம் அணையைத் தனது பொறுப்பில் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் ஐந்து தென்மாவட்டங்களைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது.

இவ்வளவுக்குப் பின்னரும், இரு மாநில அரசுகளும் இணக்கமாகப் பேசித் தீர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் மையத் தலைமை உபதேசம் செய்து, தமிழகத்தின் நியாயவுரிமையை மறுக்கிறது. “”முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் தேட தமிழக அரசியல்வாதிகள் கீழ்த்தரமாக முயற்சிக்கிறார்கள்” என்று  சாமியாடுகிறார் கேரள போலி கம்யூனிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். தமிழகத்தின் நியாயவுரிமையைக் கோருவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாம்! கேரள “இடதுசாரி’அரசின் அடாவடித்தனத்தை எதிர்க்க முன்வராத சி.பி.எம்.கட்சி,  தமிழகத்தில் விவசாயிகளின் உரிமைக்காக விவசாய சங்கம் கட்டவும், போராடவும் ஏதாவது அருகதை இருக்கிறதா? தமிழகத்தின் நியாயவுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து சி.பி.எம்.கட்சியின் தமிழ் மாநிலக்குழு எந்தப் போராட்டத்தையும் நடத்தியதில்லை. கேரள “இடதுசாரி’அரசின் அடாவடித்தனத்தை எதிர்த்து கட்சியின் மத்தியக் கமிட்டியில் வாதிட்டதுமில்லை. இத்துரோகக் கூட்டத்தை அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்தாமல், பெரியாறு நீரில் தமிழகத்தின் நியாயவுரிமையைச் சாதிக்க முடியுமா? ஆனால், கருணாநிதி, ஜெயலலிதா மட்டுமல்ல; எல்லா ஓட்டுக் கட்சிகளும் தேர்தல் கூட்டணிக்காக சி.பி.எம். துரோகக் கூட்டத்தை எதிர்த்து வாயே திறப்பதில்லை. கருணாநிதியின் துரோகத்தைச் சாடும் பழ.நெடுமாறன் வகையறாக்கள், ஜெயலலிதாவையோ சி.பி.எம். துரோகத்தையோ சாடுவதுமில்லை.

நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த ஒரு மாநில அரசு மறுக்கும் போது, மைய அரசு அம்மாநில அரசு மீது இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதை மைய அரசு செய்யாத போது, மைய அரசின் எல்லா அதிகாரங்களையும் ஏற்க மறுப்பதற்கு தமிழகத்துக்கு எல்லாவித நியாயமும் உரிமையும் உண்டு. இந்த நியாயத்தையும் உரிமையையும் உறுதி செய்வதுதான் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையாகும். இதுவொன்றுதான், இரு வேறு தேசிய இனங்களைக் கொண்ட அண்டை மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சரியான வழியுமாகும்.

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது, நிரந்தர நீண்டகாலத் தீர்வாக அமையும் ஒரு ஆயுதம். அதேசமயம், தற்போதைய உடனடிப் பணியாக கேரள மாநிலத்துக்கு எதிரான பொருளாதார முற்றுகை, பரம்பிகுளம் — ஆழியாறு – மண்ணாறு போன்ற ஆறுகள் வழியே கேரளத்துக்குச் செல்லும் தண்ணீரை மறுப்பது, சபரிமலை மற்றும் கேரளத்துக்குச் செல்லும் சாலை மற்றும் இரயில் போக்குவரத்தை மறிப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக மக்கள் மேற்கொள்ள வேண்டும். கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதைப்போல தமிழகத்திலிருந்து கேரளம் அடையும் பொருளாதார உதவியும் முக்கியம் என்பதை அம்மாநில மக்களுக்கு உணர்த்தியே தீர வேண்டும். இது இனவெறியூட்டும் செயல் அல்ல. மாறாக, தமிழகத்தின் நியாயவுரிமையை மறுக்கும் இனவெறி அடாவடித்தனத்துக்குப் பாடம் புகட்டும் செயல்தான்.

நாற்காலி சுகத்திற்காக “தேசிய ஒருமைப்பாடு’ நீரோட்டத்தில் சங்கமித்துவிட்ட தமிழக ஓட்டுக்கட்சி துரோகிகளும், அவற்றின் பின்னே வால்பிடித்துச் செல்லும் தமிழினப் பிழைப்புவாத அமைப்புகளும் இத்தகைய போராட்டங்களை முன்னெடுக்காது. இத்துரோகக் கும்பலைப் புறக்கணித்துவிட்டு, தமிழகத்தின் நியாயவுரிமையை மீட்க, புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் தலைமையில் அணிதிரண்டு போராட தமிழக மக்கள் முன்வர வேண்டும்.

______________________________________________

புதிய ஜனநாயகம், டிசம்பர்’ 2009
______________________________________________

  1. இடுக்கி கேரள குட்டி. பெரியாரு தழிழ் கிழவி.குட்டிக்கு தண்ணீர் வேண்டும்.கிழவியை காவு கொடுதரை உனக்கு, தண்ணீர் எனக்கு என்கிற கண்க்கில் கதை நடக்கிறதுஎன்ன அரசியல் துறோகம்? அனை உடைந்தால் ஆட்சி கவிழுமா? பத்து எம்.எல்.எ /பத்து எம்.பிஇழப்பு வருமா? கூட்டணியில் சரி கட்டலாம்!சுனாமி மாதிரி பேரிடர் வரும். நிவாரணம்,உதவி,திட்டம்,பணம் ஆகாமக்களீன் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்

  2. நடுநிலையான கருத்துக்கள் நெடுமாறன் போன்றோர் அறிவுக்கு
    எட்டுமா என்பது சந்தேகமே?
    கட்டுரை மிக அருமை.

  3. அது மட்டும் போதாது இங்குள்ள மலையாளிகளை உடனடியாக கேரளத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

  4. நன்றி தோழர் வினவு தங்கள் கருத்துகளுக்கு.. கம்னியுச்டுகள் ஆளும் மாநிலங்களை கூட தாங்கள் தவறுகளை சுட்டிகாட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.. இனி நாம் இவர்களிடம் கெஞ்ச கூடாது.. வேறு ஒரு நாடு நமக்காக குரல் கொடுத்து இந்தி அரசினை கண்டிக்க வேண்டும்..அதற்கான ஏற்பாட்டை தோழர்கள் செய்யவேண்டும் ..வெறுமனே தெருமுக்கில் கத்திவிட்டு போவதாலோ அல்லது இப்படி இணையத்தில் கட்டுரை தீட்டுவதாலோ எந்த பயனும் இல்லை.. நமக்காகவும் குரல் கொடுக்க நாலு பேர் உலக்த்தில் இருக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்கவேண்டும்..அப் போதுதான் சிறிது பயம் உண்டாகும்..இங்கே டில்லிகாரனுக்கு 4ம் தமிழர்களுக்கு 1ம் தான் இருக்கிறதா? அல்லது அவர்களுக்கு தங்கத்திலும் நமக்கு தகரத்திலும் செய்யபட்டுள்ளதா?.. இப்போது நம் முன்னுள்ள பணி ஒடுக்கப்டும் ஏனைய இனத்தவரையும் வர்க்கத்தினரையும் நமக்கு சார்பாக உலக அளவில்..இந்திய அளவில் திரட்ட வேண்டும்..

  5. //தற்போதைய உடனடிப் பணியாக கேரள மாநிலத்துக்கு எதிரான பொருளாதார முற்றுகை, பரம்பிகுளம் — ஆழியாறு – மண்ணாறு போன்ற ஆறுகள் வழியே கேரளத்துக்குச் செல்லும் தண்ணீரை மறுப்பது, சபரிமலை மற்றும் கேரளத்துக்குச் செல்லும் சாலை மற்றும் இரயில் போக்குவரத்தை மறிப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக மக்கள் மேற்கொள்ள வேண்டும். கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதைப்போல தமிழகத்திலிருந்து கேரளம் அடையும் பொருளாதார உதவியும் முக்கியம் என்பதை அம்மாநில மக்களுக்கு உணர்த்தியே தீர வேண்டும்//

    இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை

        • என்ன கார்க்கி! இப்பிரச்சினையில் தமிழக, கேரள, மத்திய அரசுகளின் செயலுக்கு ஏற்கனவே தமிழக மக்கள் பொறுப்பாகி அவதிப்படவில்லையா? மேலும் கேரள மக்களை நாம் என்ன பழியா வாங்கப்போகிறோம். என்னைப்பொருத்தவரை இவ்வகை போராட்டம் புரிதலுக்கும் உதவும் என்பதே!

  6. இதெல்லாம் ராஜாஜி,காமராஜ் போன்ற தமிழ் துரோகிகள் பண்ணிய வேலை. தமிழ் நாட்டை பிரித்து தெலுங்கு பிராமணன் கையிலும் மலையாள பரதேசிகள் கையிலும் கொடுத்துட்டாங்க.
    இப்போ நாம நாய் மாதிரி தொங்க விட்டுட்டு அலையுறோம்.
    தண்ணி நல்லா இருக்கிற எடம் எல்லாம் அங்க போயிடுச்சு. இவங்கள பத்தின எல்லாத்தையும் வரலாறு பாடத்துல இருந்தே நீக்கணும்

    • Please read the history.Rajaji was the only leader who opposed the linguistic division despite support from EVR,CNA,Nehru and Kamaraj.Potti sriramulu died during Rajaji’s rule.the betrayers of tamil nadu were only CNA,EvR and their tribes

  7. தமிழர் உரிமைகளை காப்பாற்ற தனிதமிழகமே ஒரே வழி .பன்னாட்டு நீதி மன்றத்தில் கேரளத்தை சந்திப்போம் .அப்பு

  8. கருணாநிதி மட்டுமல்ல திராவிட இயக்கமே தமிழர்களுக்கு செய்துள்ள துரோகங்களைப் பிட்டுப் பிட்டு வைத்துள்ளார் பத்திரிக்கையாளர் சுப்பு. அவருடைய புத்தகம் `திராவிட மாயை` சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. அதைப் பத்தியும் எழுதுங்க அய்யா.

  9. சுப்புவின் திராவிட மாயைக்கும் இந்தக் கட்டுரைக்கும் ஸ்நானப்ப்ராப்தி கூட இல்லை.

  10. திராவிட மாயை என்ற புத்தகத்தில் சுப்பு சொல்வது `அவாள் எப்போதும் மேலே இருக்கவேண்டும்.நம்மவர்கள் பல்லக்குத் தூக்கிகளாகப் பணியாற்றவேண்டும்` என்பதுதான். இந்தக் கூத்துக்கு இங்கே விளம்பரம் அவசியமா என்பதைத் தோழர்கள் சிந்திக்கவேண்டும்.

  11. தோழர் தியாகுவை மேற்கோளாகக் காட்டி `திராவிட மாயை`யில் கிருத்தவ பிரசாரர்களை தோலுரித்துக் காட்டியுள்ளார் சுப்பு. தியாகு, ஹிந்து மதவாதத்திற்குத் துணை போகிறாரா என்ற கேள்விக்கு அவர் விடை அளிக்க வேண்டும்.

  12. சுப்புவின் `திராவிட மாயை` கூட்டணியில் தோழர் தியாகு மட்டுமல்ல.ஹிந்துதுவ எழுத்தாளர் ஜெயமோஹனும் இருக்கிராருன்னா. ஜெயமோகன் ப்ளாக்கில் சுப்புவைப் பாராட்டி எழுதியிருப்பதைப் பாருங்கண்ணா.

  13. மேதை அவர்களுக்கு
    `திராவிட மாயை` பிராமணர்களின் தவறுகளைக் கண்டிக்கிறது. தயவு செய்து புத்தகத்தை இரவல் வாங்கியாவது படிக்கவும்.தமிழர்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து ஒடுக்கப் படுவதற்கு திராவிடக் கடசிகளே காரணம் என்பதை சுப்பு ஆவணப் படுத்தியுள்ளார். திண்ணியத்தில் மலம் தின்ன வைத்தது எந்தக் கட்சி என்பது நமக்குத் தெரியாதா?அந்த ஊரில் பிராமணர்களே கிடையாது.

  14. தமில்ஹிந்து இணைய இதழைப் பார்த்தாலே அங்கெ பிராமண எதிர்ப்பு பலமாக இருப்பது தெரிந்துவிடும். தமிழ் ஓவியா போன்ற தோழர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அங்கெ சுப்பு தினரிக்கொண்டிருக்கிறான்.

  15. தோழர்களுக்கு இனஉணர்வு கிடையாது என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது.நாடறிந்த கலைஞ்சரின் தமிழைக் கேலி செய்திருக்கிறான் சுப்பு. அவனுக்கும் தோழர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. தமிழன் என்று சொல்லிக்கொள்வதே தவறு என்று நான் நினைக்கிறேன்.

  16. திராவிட மாயை புத்தகம் உண்மையான சரித்திரத்தை என் போன்ற இந்த தலைமுறையினருக்கு போதிக்கிறது. சுப்பு, ம.வெங்கடேசன், மலர்மன்னன் போன்றோர் இல்லையெனில் ஒரு தலைமுறையே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும்.. தமிழகம் கண்ட மாயைகளில் கருணாநிதியின் தமிழறிவும் ஒன்று..

  17. முல்லைப் பெரியாறு விவகாரம்: பிரதமரைச் சந்திக்கிறார் கருணாநிதி
    பகுத்தறிவு தமிழர்களின் தலைவரே!
    தெலுங்கருக்கு – நைனா, அம்மா;
    மலையாலத்தவருக்கு -அச்சன், அம்மா;
    கன்னடத்தவருக்கு – தந்தே, தாயி;
    தமிழருக்கு – பொது அப்பா, அம்மா;
    என்ன ஞாயம் இது???? திராவிடம், திராவிடம் என்று ஏமாத்தியதை சொல்லுகிறோம்.
    கேரள எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இருக்கட்டும். கச்ச தீவை இழந்தது போதும். தமிழகத்தில் கையாலாகதவனாக தமிழர்களை ஆக்கியதற்கு மக்கள் தான் தண்டனை கொடுத்துவிட்டார்களே என்று சும்மா இருந்து விடாதீர்கள் ; பாவ மன்னிப்பு பெற உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்-அல்லது கடையை மூடுங்கள் ; தானே நல்ல வழி பிறக்கும் . தர்மம் வெல்லும். —பாமரத் தமிழன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க