Thursday, June 8, 2023
முகப்புவாழ்க்கைஅனுபவம்மரணம் தொடரும் கொடூரம்! மருத்துவத்துறையில் தனியார்மயம்!!

மரணம் தொடரும் கொடூரம்! மருத்துவத்துறையில் தனியார்மயம்!!

-

 

 

சிவகங்கை நகருக்கு அருகிலுள்ள வல்லாங்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் நடுத்தர விவசாயி சிவலிங்கத்தின் மகன் முத்துராஜா. இவருக்கு வயது 19. இவர் சிவகங்கை அரசு மன்னர் கல்லூரியில் இளங்கலை கணிதவியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த 11.12.2009 அன்று இராமனாதபுரத்தில் நடந்த போலீஸ் தேர்வில் கலந்துகொண்டு விட்டுத் திரும்பிய போது  காய்ச்சல் அடித்ததால் சிவகங்கை அரசுப் பொது மருத்துவமனைக்கு மதியம் 2.30 மணிக்கு சிகிச்சைக்காக நண்பர்களோடு வந்துள்ளார். அவரை சோதித்த மருத்துவர் ரத்தப்பரிசோதனை செய்யச் சொல்லியிருக்கிறார். மானாமதுரை மாதா நர்சிங் பயிற்சிக் கல்லூரிப் பயிற்சி மாணவிகள் முத்துராஜாவை ரத்தப்பரிசோதனை செய்வதற்காக ரத்தம் எடுத்துள்ளனர். சரியான முறையில் ரத்தம் எடுக்கப்படாததால் முத்துராஜாவின் கை வீங்கியுள்ளது.  மறுநாள் கழுத்து, மார்பு என வீக்கம் பரவ ஆரம்பித்துள்ளது.

இதனால் அவரை மதுரையிலுள்ள ஜெ.கே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிக்கிறார்கள். அங்கு போதிய வசதிகள் இல்லையென சொல்லிவிட்டபடியால் 15.12.2009 அன்று மதுரை மீனாட்சி மிஸன் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றுள்ளனர். உடனடியாக அய்.சி.யூ பிரிவில் முத்துராஜா  அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறு நாட்களுக்குப் பிறகு கடந்த 21.12.2009 அன்று காலை 8.30 மணிக்கு முத்துராஜா இறந்துவிட்டதாகச் சொல்லி உடலை மருத்துவமனையினர் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டனர்.

தவறான முறையில் ரத்தம் எடுத்த மாதா நர்சிங் பயிற்சிக்கல்லூரி மாணவிகள் மீதும் அரசு மருத்துவமனையின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முத்துராஜாவின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அரசுக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினார்கள்.  உடலைப் பிரேதப்பரிசோதனை செய்வதற்கு முத்துராஜாவின் தந்தை சம்மதிக்காததால் பிரேதப்பரிசோதனை செய்யப்படாத முத்துராஜாவின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது. பிரச்னை எப்போதும் வெடிக்கலாம் என்பதால் கல்லூரியை பத்து நாட்களுக்கு மூடிவிட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்பாக பாம்பு கடித்துக் கொண்டுவரப்பட்ட பள்ளி மாணவியை மருத்துவர் பழனிக்குமார் பார்க்கவே வராமல் போனதால் சிவகங்கை அரசுப் பொது மருத்துவமனையிலேயே இறந்துபோய் பெரும் பிரச்னை ஏற்பட்டது.

பரிசோதனைக்காக ரத்தம் எடுக்கப்பட்டபோது ஸிரிஞ்சுக் குழாயில் காற்று இருந்துள்ளது. ரத்தம் எடுத்த பயிற்சி மாணவி காற்றை ரத்தக்குழாய்க்குள் அழுத்தி செலுத்திவிட்டபடியால் காற்று உட்புகுந்து ரத்தம் ஆங்காங்கே உறைய ஆரம்பித்துள்ளது. இந்த ரத்த உறைவுதான் மாணவர் முத்துராஜாவின் மரணத்திற்குக் காரணம் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

நர்சிங் பயிற்சிக்கல்லூரி மாணவியின் தவறுதான் இதற்குக் காரணம் என்றாலும் இதற்கும் மூலமாகச் சில காரணங்கள் உள்ளன.

பயிற்சிக் கட்டணமாக 50,000, ஒரு லட்சம் என வாங்கும் மருத்துவப் பயிற்சிக் கல்லூரி முதலாளிகள் தங்களது மாணவர்களை அப்போலோ, மீனாட்சி மிசன், விஜயா, மலர் போன்ற தனியார் நட்சத்திர மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்காக அனுப்புவதில்லை, மாறாக அரசுப் பொது மருத்துவமனைக்குத்தான் அனுப்புகிறார்கள். பயிற்சிபெறும் மாணாக்கர்களுக்கு பரிசோதனைக்கூடமாக அரசாங்க மருத்துவமனைகள் இருக்கின்றன, பரிசோதிக்கப்படும் எலிகளாக ஏழை, எளிய மக்கள் இருக்கிறார்கள்.

பயிற்சிக்கு வரும் மாணவ, மாணவியரை நோயாளிகளுக்கு நேரடியாகப் பரிசோதனையும், சிகிச்சையும் செய்யும் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு தங்களது கிளினிக்குகளுக்கு ஆள் பிடிக்கும் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள். இது போன்ற தவறு, அலட்சியங்களால் உயிரிழந்த சிறார்கள், கர்ப்பிணிகள், சிசுக்கள் ஏராளம். இவ்வாறான தவறுகளெல்லாம் மிகப் பெரும்பாலும் மூடிமறைக்கப்படுகின்றன. தனியார் கல்லூரி முதலாளிகள், கல்லூரி துவங்கியது முதற்கொண்டு தான் செய்து வருகிற லஞ்சம் கொடுக்கிற வேலையின் மூலமாக  அரசு மருத்துவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், போலீசு, பத்திரிகைகள் வரை வாயடைக்கின்றன. இடையில் விசயம் கசிந்தவுடன் உடனே ஓடிவருகிற ஓட்டுக்கட்சிக் குட்டி அல்லக்கைகளிலிருந்து நகர்மன்ற,  சட்டமன்ற, நாடாளுமன்ற பெரிய அல்லக்கைகள் வரையிலும், கவனித்துவிடுகிறது.

அதிலும் மரணமடைவது முத்துராஜா போன்ற மாணவர்களாக இருந்தால் கல்லூரி நிர்வாகத்தையும், மாணவர்களின் பிரதிநிதிகளையும் கூட நைச்சியமாக வளைத்துவிடுகிறது.

முத்துராஜாவின் சிகிச்சைக்காக மீனாட்சி மிசன் மருத்துவமனை கேட்டது 5 லட்சம் வரை என மாணவர்கள் சொல்கிறார்கள். கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முடிந்தவரை வசூலித்துவிடலாம் என தைரியமாகப் பில்லைப் போடுகின்றன தனியார் மருத்துவமனைகள். சாதாரணத் தலைவலி என்றாலும் கூட ஸ்கேன், டெஸ்ட், மருந்துகள் எனப் பல ஆயிரங்களை வெகுவிரைவாக சுருட்டுகின்றன. கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது, அரசுப்பணத்தை தனியார் மருத்துவத்துறை முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டமே தவிர வேறொன்றுமல்ல. இது கலைஞர்-முதலாளிகள் மருத்துவச் சுருட்டீட்டுத்திட்டம்.

அரசு மருத்துவமனைக்குள் மாணவராக நுழைபவரை ஒரு மருத்துவராக உருவாக்குவதற்கு அரசானது 5 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கிறது. இது மக்களின் வரிப்பணம். ஆனால் மருத்துவப்படிப்பிற்குள் நுழைவதற்கே 5 லட்சம் நன்கொடை வாங்கும் முதலாளிகள் இங்கு இருக்கிறார்கள். இவர்கள் ஏன் பயிற்சிக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள்? கூடுதலான பயிற்சி பெறுவதற்காகவா? இல்லை. அவர்களது கல்லூரிகளில் இந்த வசதிகள் இல்லையென்பதால்தான் அனுப்பி வைக்கிறார்கள். மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வேண்டுமானால் அவர்களிடம் இருக்கலாம், ஆனால், விதவிதமான நோயாளிகளுக்கு எங்கே போவார்கள்? எந்த மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரிகள் பொது மருத்துவமனைகளை நடத்துகின்றன?

ஒரு வகுப்பிற்கு 60, 70 மாணவர்களைச் சேர்க்கும் கல்லூரிகள் பத்துப்பேரை மட்டும் பகுதி பகுதியாகப் பிரித்து பயிற்சிக்கு சீருடை, கழுத்தில் தொங்கும் அடையாள அட்டைகளோடு அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் தனக்கு ஒரு பெருமை இருப்பதாகக் காட்டிக்கொள்ள முனைகிறது. ஆனால் அவ்வளவும் மோசடியே!

இன்றைய முதலாளித்துவ உலகமயமாக்கப் பண்பாட்டுச்சூழலானது, மருத்துவத்தை மட்டுமல்ல, மருத்துவம் செய்யவேண்டும் என்கிற லட்சியத்தையும் வியாபாரச்சிந்தனையாக மாற்றியிருக்கிறது. மருத்துவப்பணி என்கிற அர்ப்பணிப்பான சேவை மனப்பான்மையை காசு பறிக்கும் கலையாக தனியார் மருத்துவத்துறை முதலாளிகள் மாற்றியிருக்கிறார்கள்.

காசுள்ளவனுக்கே கல்வி என்றாக்கியுள்ள மருத்துவக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடி முறியடிக்கவேண்டும். தனியார் மருத்துவக்கல்லூரிகளை அரசே எற்று நடத்த வேண்டும். அலோபதி தவிர ஹோமியோபதி மற்றும் சித்த வைத்தியக் கல்விக்கும் கூட மாவட்டந்தோரும் கல்லூரிகள் அமைக்கவேண்டும். இவர்களாக இதைச் செய்ய மாட்டார்கள் என்பது தெரிந்ததுதான். நாம்தான் அவர்களைச் செய்ய வைக்கவேண்டும்.