- என்ன செய்யப்போகிறோம்? – அனாமதேயன்
- பசியோடிருப்பவனின் அழைப்பு – சித்தாந்தன்
- பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள் – தீபச்செல்வன்
- வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி? – சி. சிவசேகரம்
- சான்றோர் கூற்று – பரதேசிப் பாவாணர்
- பிரிந்த தோழிக்கு… – முகிலன்
- நீங்களும் எழுதலாமே – விவரங்கள் இங்கே
……………………………………………………………………………….
விரிந்து கிடந்தது வானம்
வீசியது இளங் குளிர்காற்று
உதயனின் வெக்கை தணிக்க
வெண்குடை பிடித்தன மேகங்கள்
கூடிக் களித்து கலந்து கறைந்தன
கார்கொண்ட மேகத்திரள்கள்
பொழிந்த எள்ளு கொள்ளு… பேத்திகளை
மடியில் கிடத்தித் திளைத்தனள்
பூமித்தாய்.
அப்பா, என்னே வாசம் இதுவென்றாள்
என் மகள்
மகளின் ரசனை கண்டு மகிழ்ந்தேன்.. ஆனால்,
கேட்பாரற்றுக் கிடந்த கறந்த பசு
தன் வயிற்றெரிச்சலை
ஒரு வாரத்தில் வெளிப்படுத்தியபோது
அந்த நாற்றத்தை நுகர மரத்த என் மூக்கைப்
பெரிதுபடுத்தாத நான்
மகளொடு சேர்ந்து மண்மணத்தை
நுகர்ந்து மகிழ முடியாத மூக்கை
அறுத்தெரிந்தால் என்னவென்று
ஒருகணம் எண்ணினேன்..
வாழ்க ஐ.டி.சி
விரிந்து கிடந்தது வானம்
பரந்து கிடந்தது பூமி
வீசியது இளங் குளிர்காற்று
விரித்த பெரும் பச்சைக் கம்பளத்தில்
விருந்துண்டன ஆநிரைக் கூட்டம்.
அதில் அப்போதுதான் பிறந்திருந்த
பச்சிளங் கன்றொன்று
துள்ளிக் குதித்தாடிய அழகில்
கணம் எனை மறந்தேன்.
பட்டாம் பூச்சி என் முதத்தை
மொய்த்துப் பறந்தது
அறுகிவிட்ட சிட்டுகள் இரண்டு
சீழ்க்கையிட்டுப் பறந்தன
வானில் அம்பெனப் பறந்து வந்த
கொக்குக் கூட்டம்
ஆநிரையோடு பகிர்ந்துண்ண அமர்ந்தது
துள்ளிக் குதித்தது பச்சிளங்கன்று
என்னே சுதந்திர வாழ்க்கை இதுவென
இயற்கையில் கறைந்தேன்.
உலுக்கியது என்னை ஓங்கியதொரு குரல்
சனியன் கயித்த அறுத்துகிட்டு
பயித்த மேயப் போவுது
என்ற வசவு தொடர்ந்தது.
நடுகல்லில் பூட்டிய நீண்ட கயிறு தளர
விளை நிலத்தை நெருங்கிவிட்ட பசு
அடிபட்ட வேதனையில் அரற்றியது
நிலத்தில் விலக்கி நட்ட கருங்கற்கள்
விளையவில்லையே …
போட்டிக்கு நாணலும், தட்டையும்,
தருப்பைப் புல்லுமல்லவா மண்டுகிறது
தின்ன என் சுணை நாக்கே அறுபடுதே
பச்சையெல்லாம் பச்சையல்லடா முண்டமே
நிலமெங்கே, வரப்பெங்கே,
மேச்சத் தரைதான் எங்கே ..
உனக்கும் சோறில்லை
எனக்கும் உணவில்லை.. என
ஓ..வென்றழுதது.
குற்ற உணர்ச்சி என் நெஞ்சைப் பிளந்தது
துள்ளிய என் மனம் துவண்டு படுத்தது
மாட்டுக்கு மூக்கணாங்கயிறு
நாய்க்கு சங்கிலி குதிரைக்குக் கடிவாளம்
குருவிக்குக் கூண்டு
இல்லை இல்லை
இவற்றுக்குச் சுதந்திரம் இல்லை
இயற்கையில் பிறந்து இயற்கையில் வளர்ந்து
செயற்கையால் இயற்கையை
ஆள்பவனாய்ப் பரிணமித்த
மனிதன்தான் சுதந்திரமானவனோ..
எனத் தொடர்ந்த என் எண்ண ஓட்டத்தை
மறித்தது ஒரு மனக்குரல்.
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்
என்றது அந்த செயற்கையின் சூத்திரம்.
இல்லையா..?!
மனதில் விசாரம் குடிகொண்ட வேளையில்
என்காதில் மோகனமாய்த் தொடங்கிய இசை
மூர்க்கமாய்த் தொடர்ந்தபோது
முத்தாய்ப்பாய்ச் சொன்ன இரு சொற்கள்
என் செவிப்பறை கிழித்தன ..
துமீ வித்யா துமீ தர்மா.
புரிந்தது.. எல்லாம் புரிந்தது.
குதிரைக்குக் கடிவாளம் குதிரை பூட்டுவதில்லையே
மனிதனே கூட
துள்ளித் திரியும் கன்றுக்கு
மூக்கணாங்கயிறு பூட்டுவதில்லையே
ஆனால்.. ‘குழவி‘ ஒன்று ‘கல்லில்‘ இறங்குமுன்பே
சுடுகோலால் குறியிட்டுக் கருத்திருக்கும்
தொப்புள் கொடியாய் கழுத்தை சுற்றிய
சுறுக்குக் கயிறு கண்ணில் தோன்றி மறைந்தது
பெற்றெடுத்து .. கிருஷ்ணன் என்றும்
கண்ணன் என்றும் கருப்பன் என்றும் பெயர்சூட்டுமுன்பே
அதற்குப் பெயர் சூட்டப் பட்டுவிட்டது
இன்ன சாதி இன்ன மதமென்று.
இதை மீறிய ஆய்ந்தறிதல் இல்லை
இதை மீறிய வாழ்நெறியும் இல்லை
இட்டபடி நட என
காலித் தராசை கையில் பிடித்து
சமன் காட்டித் திரிகிறது இந்திய நீதி
அடுத்தவன் மூக்கைத் தொடாத வரைதான்
உனக்குச் சுதந்திரம் என
மெத்தப் படித்தவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.
இந்த மூக்கு இந்தியாவின் குறுக்கு நெடுக்காய்
நீண்டுகிடக்கிறதே .. கட்டிய கையைப் பிரிக்கமுடியாமல்
இதை என்ன செய்ய?
– அனாமதேயன்.
குறிப்பு: எனக்குக் கவிதை எழுதத் தெரியவில்லை.. ஆனால் இதுபற்றி எழுதவேண்டும்போல் இருந்தது. எனவே என் சமீபத்திய மனப் பதிவுகளைத் திரட்டி, என்னை வதைத்த ‘வந்தே மாதரம்‘ மற்றும் ‘லவ் ஜிகாத்‘ விசயத்தைக் கருவாக்கி ஒரு பெரும் சித்திரம் வரைந்துவிட்டேன். அதில் அவுட் ஆஃப் போக்கசில் வைக்க வேண்டியதையும், ஃபோக்கஸ் பண்ணவேண்டியதையும் படிப்பவரின் பார்வைக்கு விடுகிறேன்.
——————————–
மலைகளைப் பகிர்ந்துண்ண
அழைத்தாய்
ஆயிரமாயிரம் வெள்ளிகளைச் சூடிய வானம்
கடல் அலைகளில் தத்தளித்துக் கொண்டிருந்தது
மீண்டும் மீண்டும் அழைத்தாய்
காற்று மர இலைகளில் ஒளித்துக்கிடந்தது
இரவு பனித்துளியாய்
புல்நுனிகளில் தேங்கி வழிந்தது
முதலில்
மலைகளை உண்ணும் நுட்பங்களைப் போதித்தாய்
பிறகு
மலைகளின் சுவை பற்றிய பாடல்களை
இசைத்துக் காட்டினாய்
மழைப் பொழிவுகளுக்குள்
மலைகள் வளரும் அதிசயங்களை
வசியச் சொற்களில் சொன்னாய்
மலைகள் தீர்ந்து போகும் ஒருநாள் வருமெனில்
அப்போது
மலைகளைத் தின்று மலைகளாகிய நாம்
நம்மையே பகிர்ந்துண்டு
பசியாறலாம் என்றாய்
-சித்தாந்தன்
——————————————————–
பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்
(இன்னுமின்னும் அறியாத சேதிகள்
அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன)
நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து
எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சகோதரியே! உன்னை உரித்து
சிதைத்தவர்களின் கைளிலிருந்து
எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது.
கண்டெடுக்கப்படாதவர்களின் சடலங்களுக்கு
என்ன நேர்ந்திருக்குமென்று
தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு
இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு
உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம்
எண்ணிக்கையற்ற முனைகளில்
நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது.
உன்னை சிதைந்து எங்கு எறிந்திருக்கிறார்கள் என்பதையும்
யார் உன்னை தின்றார்கள் என்பதையும்
உனது தொலைக்காட்சியில்
நீயே செய்தியாக வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
நீ நடித்த பாடல்களும் படங்களும்
ஒளிபரப்பபட்டுக்கொண்டிருக்கிற அலைவரிசையில்
உனது பாதிப்படம் ஒரு மூலையில்
பார்க்கப் பொறுக்க முடியாத கோலமாக தொங்குகிறது.
அதே படைகளினால் கவலிடப்பட்ட
நிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உனது
தாயைப்போலவே ஒருத்தி
தன் மகளைத் தேடி துடித்துக்கொண்டிருக்கிறாள்.
ஆண்குறிகளை வளர்த்து
இரத்தத்தை படையலிட்டிருக்கிற
படைகளின் யுத்த முனைகளில்
உன் சீருடைகளை
கழற்றி எறிந்திருக்கிறார்கள்.
உன் வீரத்தை கரைத்துவிட்டார்கள்
தொலைந்துபோன உன் துப்பாக்கி படைகளின் கையிலிருக்கிறது
முன்னர் வெற்றியடைந்த களமொன்றிலேயே
நீ சரணடைந்திருக்கிறாய்.
துப்பாக்கிகளும் ஆண்குறிகளும்
ஒரே மாதிரியாய்
வாயைப் பிளந்து உன்னை தின்று போட்டிருக்கிறது.
முற்றத்தில் தெருவில் வயல்களில்
கண்ணிவெடிகளுக்கு கீழாகவும் மண் பிரளும் இடங்களிலெல்லாம்
சீருடைகள் முதலான உடைகளும்
இரத்தமும் சைனைட் குப்பிகளும் புகைப்படங்களும்
மற்றும் சில குறிப்புகளும் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றன.
என்னிடம் வாங்கிச் சென்ற
கவிதையை எங்கு போட்டிருப்பாய்?
__________________________________
(இசைப்பிரியாவுக்கு) 25.12.2009
– தீபச்செல்வன்
————————————-
வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி?
அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்தினாலும்
எதுவுமே மாறாது என்று
அவர்கள் எல்லாருக்கும் தெரியும்.
என்றாலும்
அந்தக் கடதாசி பெறுமதி மிக்கது என்பதால்
அதை வீணாக்கக் கூடாது என்று
அவர்கள் சொல்லுகிறார்கள்.
அதை எப்படிப் பயன்படுத்துவது என்று
சொல்ல மாட்டார்கள்.
பயன்படுத்தத் தெரியவில்லை என்று
உங்கள் பாட்டில் வீட்டில் இருந்து விடாதீர்கள் என்றும்
எப்படியாவது சரியாகப் பயன்படுத்தும்படியுமே
அவர்கள் சொல்லுகிறார்கள்.
அதை விடவும்,
எவரேன் பயன்படுத்த மாட்டார;
என்று அறியும் எவரும்
அதை எடுத்துப் பயன்படுத்தவும் இயலும் என்பதால்
அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்துவது என்று
ஆராயத் தொடங்கினேன்.
சில கேள்விகளுக்குச்
சரியான ஒரு மறுமொழி மட்டுமே உண்டு.
சில கேள்விகளுக்குச் சரியான மறுமொழி ஒன்றுமேயில்லை.
சில கேள்விகட்குச் சரியான மறுமொழிகள் பல உள்ளன.
வாக்குச் சீட்டைச் சரிவரப் பயன்படுத்துவது
எப்படி என்ற கேள்விக்குப் பல மறுமொழிகள் உள்ளன.
அந்தக் கடதாசியில் உள்ள
சதுரமான சிறிய பெட்டிகளில் ஒன்றிற்குள்
பெருக்கல் அடையாளம் இடுவதோ
இலக்கம் எதையாவது எழுதுவதோதான்
சரியான மறுமொழி என்று சொல்கிற பலர்
எந்தப் பெட்டி என்று சொல்லுவதில்லை.
சொல்லுகிறவர்கள் ஆளுக்காள்
வேறு விதமாகச் சொல்லுகிறார்கள்.
எனவே
அவற்றை விடச் சரியான
வேறு மறுமொழிகளும் உள்ளன என்று
உறுதியாக நம்புகிறேன்.
வரிசையில் நின்று
உங்கள் கைவிரலை அசிங்கப்படுத்தி வாங்குகிற
அந்த வாக்குக் கடதாசியை வீணாக்கலாமோ?
எனவே தான்
வேறு நல்ல பயன்பாடுகளைச் சொல்லுகிறேன்.
தெரிவு உங்களுடையது.
தாள் சதுரமாக இருந்தால்
அதை மடித்துக்
காகிதக் கப்பல், பறவை, தவளை, கடகம், குதிரை
என்று பலவுஞ் செய்யலாம்.
சற்று நீள் சதுரமாக இருந்தால்
ராக்கெட் செய்து வீசி விளையாடலாம்.
இன்னும் நீளம் என்றால்
நீளத் தோணி ஒன்று செய்து தண்ணீரில் விடலாம்.
தாளைக் கசக்கிப் பந்தாக்கி வீசி விளையாடலாம்.
கெட்டியான பற்களும்
வாயில் உமிழ்நீரும் இருந்தால்
வாயிற் போட்டுச் சப்பி உருண்டையாக்கி
ஒரு தேர்தல் சுவரொட்டி மீது எறியலாம்.
தெருவிற் கிடக்கும்
கோழி மலத்தையோ நாய் மலத்தையோ எடுத்து
ஓரமாகப் போடப் பாவிக்கலாம்.
ஆனால் தேர்தல் அதிகாரிகள்
அதற்கெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள்.
வீட்டுக்குக் கொண்டு செல்லவும் முடியாது.
கிழித்துக் குப்பைத் தொட்டியில் இடலாம்.
கிழிக்க விடமாட்டார்களென்றால் கிழிக்காமலே இடலாம்.
ஆனாற் குப்பைத் தொட்டியெதுவும் அயலில் இராது.
கோவில் உண்டியல் மாதிரி ஒரு பெட்டி.
அதிலுள்ள நீண்ட துவாரத்தின் வழியே தான் போடலாம்.
நேரமிருந்தால்
எல்லாச் சதுரங்களிலும் பெருக்கல் அடையாளமிடலாம்.
அல்லது தாளுக்குக் குறுக்காகப்
பெருக்கல், வகுத்தல், கூட்டல், கழித்தல்
அடையாளம் ஒன்றை இடலாம்.
ஒரு அரிவாளும் சம்மட்டியும் வரையலாம்.
நீளமாக ஒரு கவிதை எழுதலாம்.
வாக்குகளை எண்ணுவோர் தேநீர் பருகும்போது
படிக்கும் வாய்ப்புண்டு.
பட்டியலில் உள்ள எதுவுமே
உங்கள் விருப்பிற்குரியதல்ல என்று சொல்ல
அக் கடதாசியைப் பயன்படுத்த
எத்தனையோ வழிகள் உள்ளன.
வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்தும்
தெரிவு நிச்சயமாக உங்களுடையது.
– சி. சிவசேகரம் –
—————————————
பெரிய நீதிவான் சொன்னார்
பிறகு பெரிய பாதிரியார் சொன்னார்,
பிறகு பேராசிரியரும் அல்லவா சொல்லுகிறார்,
“பழைய பிழையைச் செய்யாதீர்
புறக்கணித்து உங்கள் வாக்குக்களை வீணாக்காதீர்”
என்று
பழைய பிழை எது?
வஞ்சகர் என்று தெரிந்தும் வாக்களித்ததா?
தெரிந்தால் எவருக்கும் அளிக்காமல் விட்டதா?
குறுக்குக் கேள்வி கேட்காதீர்
பேராசிரியரும் பெரிய பாதிரியும் நீதவானும்
தெரியாமலா சொல்கிறார்கள். தகைமைசால்
பேரறிஞர்மாரெல்லாம் ‘பேசாப் பொருளைப்
பேசவுந் துணிவதற்கு’
நீங்கள் யார்?
படிப்புண்டா? பட்டமுண்டா?
பதவியெதுந் தானுண்டா? – இல்லை
பத்திரிகை எசமானர் ஆசிகளேன் உமக்குண்டா?
போடென்று சொல்லுகிற பெரியோர்கள் எல்லோரும்
யாருக்குப் போடென்றோ
எதை நம்பிப் போடென்றோ
ஏன் சொல்ல மாட்டார்கள்?
இருட்டு அறைகளுக்குள் இரகசியமாய் முடிவெடுத்து
அஞ்சுங் கெட்டு அறிவுந்தான் கெட்டொழிந்தோர்
ஆலோசனையெல்லாம் அம்பலத்தில் சொல்லி வைத்து
ஊர் சிரிக்கத் தங்களது
பேர் கெட்டுப் போவதற்குப்
பெரியோர் விரும்புவரோ?
பெரிய நீதவான் சொன்னார்,
பெரிய பாதிரியார் சொன்னார்,
பேராசிரியருஞ் சொன்னார். போதாதா?
எனவே,
குறுக்குக் கேள்விகளை உரக்கவே கேட்காதீர்
பதில் கிடைக்கப் போவதில்லை
உரிய பதிலை நீங்களே உணருங்கள்.
– பரதேசிப் பாவாணர்
———————————–
கையசைத்து கணவனை
வழியனுப்பிய பிறகு
கதவுகள் தாழிட்டால்,
நீயும் நானும்
வண்ணத்துப்பூச்சிகளாய்
விளையாண்ட பொழுதுகள்
மனதுக்குள் வந்தமரும்.
குடைகள் நம்மிடம்
இருந்த போதும்
நனைந்து கொண்டே
வீட்டுக்கு சென்ற நாட்கள்,
ஜன்னல் வழியாக
மழை பார்க்கும் போதெல்லாம்,
கிழிந்த குடைக்குள்
இறங்கும் நீர்த்துளியாய்
நினைவுகளிள் வழிந்திடும்.
உன் பிறந்த நாளொன்றுக்கு
அழகிய தோடுகள் இரண்டு
அணிந்து வந்தாய்,
அதுபற்றி நான் கேட்க
அப்பா பட்ட கஷ்டம் பற்றி
அழுதே தீர்த்து விட்டாய்,
நிறைய நகையணிந்து,
மணக்கோலத்தில் ஒருநாள்
நான் நின்ற போது
நீ அழுத நிமிடங்கள்தான்
நினைவில் வந்தது.
நம் கனவு இல்லம் பற்றி
விளையாட்டாய்
நீ வரைந்த கோடுகள்தான்
நிஜத்தில் இப்பொழுது
என் வீடாய் நீண்டுகிடக்கிறது.
ஆனால்,
சமையலறை ஒன்றை தவிர
மற்ற அறைகளில்
அதிகம் எனக்கு வேலையில்லை.
உன் கண்ணில் ஒருநாள்
தூசு விழுந்த போது
உதடு குவித்து
ஊதி எடுத்த நிமிடங்கள்,
வீடு முழுவதும்
படிந்திருக்கும் தூசியை – நான்
கூட்டிப் பெருக்கும் போது,
உடன் வந்து ஒரு
உண்மை சொல்லும்,
இவை எளிதில் அகற்ற கூடிய
தூசியல்ல என்று.
பிரிந்த
தோழியே..
பிறகு,
நீயொரு நாள்
வயதுக்கு வந்துவிட்டாய்
அதுபோலவே
நானும் ஒருநாள்.
அத்தோடு
நம் பள்ளிப் பயணங்களும்
பாதியில் நின்றன…
கழட்டி விடப்பட்ட
இரயில் பெட்டிகளாய்.
எல்லாம் இருக்கட்டும்,
நாம் இருவரும்
கைகோர்த்து நெடுந்தூரம்
நடந்த நாட்கள்
எவ்வளவு சுகமானவை
சுதந்திரம் கொண்டவை.
இப்பொழுது – நீ
எங்கே
எப்படி இருக்கிறாய் என்று
எனக்கு தெரியாது.
ஆனால்.
நானும் இருக்கிறேன்
என் குழந்தைகளுக்கு
நல்ல தாயாக…
என் மாமனார் – மாமியாருக்கு
நல்ல மருமகளாக…
என் கொளுந்தனாருக்கு
நல்ல அண்ணியாக…
என் கணவருக்கு
நல்ல மனைவியாக…
மொத்தத்தில்
என் சுயம் தொலைத்த
வாழ்க்கையொன்றில் ஒட்டியபடி.
என்ன விழிக்கிறாய்,
அதற்கான நிகழ்வுகள்
என்னிடம் நிறைய உண்டு.
இதோ
இன்று கூட,
தெலுங்கானா பிரச்சனை முதல்
ருச்சிகா வழக்கு வரை
சுடும் வார்த்தைகளால் விளக்கிய,
முகம் தெரியா
சகோதரனொருவன்,
“சமூக மாற்றத்திற்கானது
இந்த இதழ்
வாய்ப்பு இருந்தால்
வாங்கி படியுங்கள்” என்று
என்னை பார்க்க,
மௌனமாய் நின்ற நான்…
‘வீட்டில் ஆள் இல்லையென்றே’
அனுப்பி வைத்தேன்.
– முகிலன்
குறிப்பு : சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் “புதிய ஜனநாயகம்” இதழ் விற்க சென்ற போது, ஒரு வீதியில் குறைந்தபட்சம் நான்கைந்து பெண்களிடமாவது இயல்பாய் இப்பதில் வரும். அப்பதில்களின் விளைவே இக்கவிதை.
தொடர்புடைய பதிவுகள்
Excellent powerful wordings by Mr.Anamatheyan. complex words yet direct touch to the reader.
Greetings to the author.
என்னனென்னவோ பேச தோன்றுகிறது அத்தோடு இதுவரை பேசியவர்களின் பேச்சும் கேட்கிறது என்ன செய்யலாம் என்னென்ன செய்யலாம் என்னவெல்லாம் செய்தேன் என்னென்ன செய்தார்கள் என்ன செய்ய போகிறேன் என்ன செய்ய போகிறோம்.சகோதரிகளே உங்களின் இந்த நிலையை காணும் போது இங்கு யாருக்கும் பேச அருகதை இல்லை .
புதிய சனநாயகம் விற்க போனால்
புதிய சனநாயகம் கண்டார்
என்னுடைய வாக்குரிமையை பயன்படுத்தாமல் நாற்பது ஆண்டுகளாய் பத்திரமாக வைத்திருக்கிறேன் .அதனை பயன் படுத்தும் நாள் ஒன்று விரைவில் வரும் என்று எதிர்பார்த்து .அதற்காக நானும் உழைக்கிறேன் .நீங்களும் உழையுங்கள்!
இப்போதுதான் படித்தேன்.
இயல்பான பெண்மையும், பொதுவுடமையும் இன்னும் தீட்டாகவே நினைக்கப்படுவதை என்ன சொல்ல