Thursday, December 5, 2024
முகப்புசெய்திபெண் ஏன் இப்படியானாள்? – தமிழச்சி

பெண் ஏன் இப்படியானாள்? – தமிழச்சி

-

இதோ வந்துவிட்டது. மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் [International Women’s Day]

வருடத்திற்கு ஒருமுறை ஏதேதோ தினங்களும், விழாக்களும் வருகின்றன.   அதுபோலத்தானே இந்த மகளிர் தினமும் என்று பெண்களாலேயே நினைக்கப்படும் அளவிற்கு மேட்டுக்குடியினராலும், விளம்பர நிறுவனங்களாலும்,  அரசாங்கத்தாலும் நடத்தப்படும் ‘ஃபேஷன் ஷோ’ போல் ”பெண்களின் குரல்” [Women’s veice] ஆக்கப்பட்டிருக்கிறது.

சாதாரண பெண்கள் ஒன்றுக்கூடி சாதனைப் பெண்களின் போராட்டங்களை ஒப்புவித்துவிட்டு பின்னர் அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களுக்கு பல் இளித்துவிட்டு மேடை அலங்காரிகளாக ஒவ்வொரு வருடமும் காட்சியளிக்கும் ‘ஷோ’க்களைக் கண்டு ஆற்றாமையே மிஞ்சுகிறது.

பெண்களுக்காக சர்வதேச அமைப்புகள் ஏற்படுத்தி அனைத்து நாட்டு பெண்ணியவாதிகளையும் ஒன்றிணைத்து பெண்ணுரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1857-இல் நியூயார்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி போராட்டங்களை முன்னெடுத்த அசாத்தியமும், அம்மாநாட்டில் பிரேரிக்கப்பட்ட புரட்சிகர தீர்மானங்களான சட்ட சீர்திருத்தங்கள் மூலம் சலுகைகள், திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை, தொழில், கல்வியில் அதிக வாய்ப்பு, வணிகத்துறையில் வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்தும், வேலை வாய்ப்புகள், கருச்சிதைவு உரிமை, குழந்தைப் பராமரிப்பில் ஆணுக்குரிய சலுகை, விவாகரத்து உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டு பெண்கள் வென்றெடுத்த உரிமைகள்தான் இன்று பல நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.

சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியில் [14.06.1789] போராடிய பெண்கள், “ஆண்களுக்கு நிகராக பெண்களும் நடத்தப்பட வேண்டும்” என்றும், “வேலைக்கேற்ற ஊதியமும், எட்டு மணிநேர வேலையும், வாக்குரிமை பெண்களுக்கும் வேண்டும்” என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பிரான்ஸ் மன்னனுக்கு எதிராக போராடி வென்றெடுத்த வெற்றி ஐரோப்பிய பெண்களுக்கும் நம்மாலும் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தைக் கொடுத்து அவர்களும், போராடி வென்ற பெண்ணிய உரிமைகளும்….

இன்றைய நம் தமிழச்சிகளுக்கு இல்லாமல் போய்விட்டதே ஏன்?

இன்றைய காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட போராட்டங்களுக்கான சூழல்கள் எதுவும் இல்லை என்று சமாதானம் சொல்லாதீர்கள்.

சென்ற மாதம் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘அஜ்மல்கான்’ என்பவர் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்ததையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் பர்தா அணிவதும், முகத்தை மறைக்க ஹிஜாப் அணிவதும் மத சம்பிரதாயம் என்றும், பெண்களை அவர்களின் கணவன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்கவேண்டும் என்பது அய்தீகம் என்றும், ஆனால் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியாமலும், ஹிஜாப் அணியாமலும் உள்ள ஒளிப்படங்கள் வாக்காளர் பட்டியலில் அச்சிடப்பட்டுள்ளது என்றும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சட்டப் பிரிவு 25-இன்படி மதப் பாதுகாப்புப் பிரிவுக்கு எதிரானது என்று வழக்கு.

வாக்காளர் உண்மையானவரா, போலியா என்று அறிந்து கொள்ளத்தான் புகைப்படங்கள். அதிலும் முகத்தையும், கண்களையும் மறைத்துள்ள படத்தை வெளியிட வேண்டும் என்றால் வாக்காளர் உண்மையானவரா என்று எப்படி அறிந்து கொள்வது?

இவ்வழக்கு தாக்கல் குறித்து தமிழ்நாட்டு மகளிர் சங்கங்கள் எந்த எதிர்வினையாவது செய்ததா? இல்லையே, ஏன்?

மதப் பிரச்சனைக்குள் நுழைய வேண்டுமா என்னும் யோசனை! இந்த சிந்தனை தடங்கள் பெண்ணியத்திற்கு ஆபத்தானது. உலகில் பெண்ணியத்திற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் மதங்களின் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்ததால்தான் பெண்கள் போராளிகளாக முடிந்தது. உரிமைகளை வென்றெடுக்கவும் முடிந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் [IDEOLOGY], வர்க்கம் [CLASS], உயிரியல் [BIOLOGY], சமூகவியல் [SOCIOLOGICAL], பொருளாதாரமும் கல்வியும் [ECONOMICS AND EDUCATION], சக்தி [FORCE], மானுடவியல் [ANTHOROPOLOGY], உளவியல் [PHYCHOLOGY] என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக ‘கேட் மில்லட்’ பெண்ணிலை குறித்து குறிப்பிட்டிருக்கிறார். அதனுடன் மார்க்சியப் பெண்ணியம், தேசியப் பெண்ணியம், மேலைப் பெண்ணியம், இஸ்லாமியப் பெண்ணியம், தலித் பெண்ணியம் என பன்முகத் தன்மையில் நம் சமுகத்தில் பெண்ணிய நோக்கு விரிகிறது.

தமிழ்நாட்டு பெண்ணியவாதிகள் இதுவரை எந்த கோணத்தில் பெண்ணியத்திற்காக போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்?

தமிழ்சூழலின் பெண்ணியம் குறித்து பேசுவதென்றால் ஓர் ஆஸ்திகவாதிகளால் நிச்சயம் முடியாது.

“இன்று பெண்ணுரிமையைப் பற்றி பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம்? இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா? நாம் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா? இது விஷயத்தில் நம்முடைய ஆராய்ச்சியோ, முடிவோ நமக்கு ஆதாரமா? அல்லது இது விஷயத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் முடிவே நமக்கு ஆதாரமா? என்பவனற்றை முதலில் நாம் யோசித்துப் பார்த்த பிறகே விஷயத்தைப் பற்றி பேசவேண்டும். ஏனென்றால் பெண்கள் விஷயத்தில் இன்று உலகில் உள்ள மதங்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு முடிவுகட்டி விட்டது. அம்முடிவுகள் வேதமுடிவு, கடவுள் வேதத்தின் மூலமாய்ச் சொன்ன முடிவு என்று சொல்லப்படுகிறது.

கிறிஸ்தவர்களுடைய வேதத்திலும், முகமதியர்களுடைய வேதத்திலும், இந்துக்கள் வேதத்திலும் பெண்களுக்குச் சம உரிமை இல்லை. சில உரிமைகள் இருந்தாலும் அவை வரையறுக்கப்பட்டு அதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது என்ற தீர்ப்பில் இருக்கிறோம். ஆகவே இப்போது நமது ஆராய்ச்சியின் பயனாய் ஒரு முடிவு வருவோமானால் அம்முடிவு நமது மத வேத கட்டளையை மீறி நாஸ்திகமாவதா? அல்லது ஆஸ்திகத்துக்கு பயந்து நமது முடிவுகளைக் கைவிட்டு விடுவதா? என்பதை முதல் தீர்மானித்துக் கொண்டு பிறகு இந்த வேலையில் இறங்க வேண்டும். இல்லாவிட்டால் நமது வேலைகள் எல்லாம் வீண் வேலையாகப் போய் விடாதா?” என்கிறார் பெரியார். [ஆதாரம்: பெரியார் களஞ்சியம். தொகுதி: 5, பக்கம்: 211]

எத்தனை பெண்கள் ‘நாத்திகம்’ பேசத் தயாராக இருக்கிறார்கள்?

இந்தியாவில் பெண்களில் 70 சதவீதம் குடும்ப வன்முறைக்கு [Domestic Violence] உள்ளாக்கப்படுகின்றனர் என்று 2005-இல் எடுக்கப்பட்ட கணக்கு குறிப்பிடுகிறது. அதில் பெரும்பான்மை மதச்சார்பான வரதட்சணை பிரச்சனையும் முக்கியமானது.

குடும்ப வன்முறையில் [Domestic Violence] இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் ஐரோப்பாவில் எப்பொழுதோ வந்துவிட்டது. இந்தியாவில் 2005-இல் தான் சட்டங்கள் உருவாக்கப்பட்டன என்றால் பெண்ணுரிமையில் எந்தளவு பின்தங்கிய நிலையில் இந்தியா இருந்திருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். இருந்தும் பெண்கள் இச்சட்டங்கள் துணையை நாடுவதும் மிகக் குறைவு.

“உற்பத்தி சக்தி உள்ளவர்கள் ஏற்படுத்தும் உறவே சமுதாய நிர்வாகம்” என்கிறார் கார்ல் மார்க்ஸ்.

பொருளாதார ரீதியாக கணவனைச் சார்ந்திருக்கும் பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு அனுசரித்தே செல்கிறார்கள். கார்ல் மார்க்ஸ் கூறியது போல உற்பத்தி சக்தி உள்ள ஆண் பொருளாதாரத்தை ஈட்டுகிறான். வீட்டில் இருக்கும் பெண்ணின் உற்பத்தி சக்தி என்பது குடும்ப பொறுப்புக்கள் என்னும் பேரால் எந்த பலனும் அவளுக்கின்றி வீணடிக்கப்படுகிறாள். அதில் சோர்வு தட்டிவிடக்கூடாது என்பதற்காக ‘பெண்ணின் சகிப்புத் தன்மை என்பது குடும்பத்திற்கு நல்லது என்ற போதனையே அவளுக்கு படிப்பித்திருக்கிறது’ சமூகம்.

துணிந்து கணவன் மீது போலிசில் புகார் செய்யும் பெண்களை மிக மோசமானவர்களாகவே இந்த சமூகம் அடையாளப்படுத்துகிறது.

இப்படி பல சமூக அழுத்தங்களுடன் பெண் என்ன செய்கிறாள்? தன் பிரச்சனையை எப்படி எதிர்நோக்குகிறாள்?

பொருளாதார விடுதலைதான் பெண் விடுதலையின் முதல் படி.

அப்படிப் பார்த்தால் முன்னெப்போதைக் காட்டிலும் பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் அதிகரித்திருக்கிறது.

காலை 7 மணிக்கெல்லாம் தூக்கம் கலையாத தந்தைமார்களின் தோளைப்பற்றியபடி வந்து இறங்கி, பொறியியல் கல்லூரிப் பேருந்துகளில் அவசரம் அவசரமாக ஏறி, அமர்ந்த மறுகணமே படிக்கத் தொடங்கும் மாணவிகள்; சிறுவர் உழைப்பு தடை செய்யப்பட்டுவிட்டதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக ஓட்டல்களில் மேசை துடைத்துக் கொண்டிருக்கும் பெண் சிப்பந்திகள்; தினம் 5, 6 வீடுகளில் வேலை செய்யத் தோதாக சைக்கிளில் விரையும் வீட்டு வேலை செய்யும் பெண்கள்; டிபார்ட்மென்டல் ஸ்டோர் காமெராக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தமக்குள் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் விற்பனைப் பெண்கள்; மாலை நேரத்தில் ஆயத்த ஆடை நிறுவனங்களிலிருந்து களைத்துக் கசங்கி வெளியேறும் இளம் பெண்கள்  – இவர்களெல்லாம் கடந்த பத்து ஆண்டுகளில் உழைப்புச் சந்தையில் புதிதாக நுழைந்திருப்பவர்கள்.

இந்தப் பொருளாதார சுதந்திரம் ஒரு பெண் என்ற முறையில் கூடுதல் சுதந்திரத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளதா? அல்லது பெண்ணடிமைத்தனம் புதிய வடிவங்களில் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை கவனித்தீர்களானால் பெண்களின் சுமைகள் இன்னும் அதிகரித்திருக்கிறதே தவீர ஒரளவுக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறது என்றாலும் அச்சுதந்திரத்தை பெண் எப்படி உபயோகப்படுத்துகிறாள் என்பதையும் கவனித்தாக வேண்டும்.

புராணக்காலந்தொட்டே பெண்ணை உடலால் மதிப்பிடும் ஆண் பார்வை மாறவில்லை. இன்று அது நவீனமாக்கப்பட்டிருக்கிறது பெண் இதை உணரவில்லை. அல்லது உணரவும் விரும்புவதில்லை. சமூகம் அங்கீகாரத்திற்காக சமூகத்தோடு அனுசரித்துச் செல்வதே பாதுகாப்பானதாக பெரும்பான்மையான பெண்கள் நினைக்கிறார்கள். இது அடிமைத்தனத்தின் வெளிப்பாடே.

மாற்றம் என்பது இயற்கையாய் எல்லாத் துறையிலும் நடந்து வந்தாலும் நமக்கு அவசியம் வேண்டியதான மாற்றங்கள் நமக்கு நலமாக்கிக் கொள்ளும் மாற்றங்கள் பற்றி சிந்திக்க வேண்டியதும், அப்படிப்பட்ட மாற்றத்தில் ஈடுபட வேண்டியதும் அறிவுடைமையாகும்.

படித்த பெண்களில் இருந்து சாதாரண பெண்கள் வரை அரசியல் சமூகம் குறித்த விவாதங்களை பேசவிரும்புவதில்லை. அரசியல் சமூக விமர்சனங்கள் என்பது ஆண்களுக்கு உரியதாக நினைக்கிறார்கள். தங்கள் கருத்துக்களை முன்வைக்கும் போதுகூட தமக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாகவே  இருக்கிறார்கள். புரட்சிகரமான சிந்தனைகளை குறித்து விவாதிப்பதென்றால் தாங்கள் கேவலமாக விமர்சிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சுகிறார்கள்.

வேறு சில பெண்கள் தங்கள் சுதந்திரம் என்பது எவை என்பதற்கு தங்களுக்கு ஏற்ப எல்லை வகுத்திருக்கிறார்கள். ஜீன்ஸ் போடுவதும் இரவு கேளிகை விடுதிக்கு செல்வதும் ஆணைப்போல் புகைப்பிடிப்பதும் சுதந்திர பாலியல் உறவும் பல ஆண்களை நண்பர்களாக வைத்திருப்பதும் இரவு நெடுநேரம் வெளியில் சுற்றிவிட்டு வருவதும் பெண்கள் விடுதலைக்கு போதுமானதாக நினைத்துவிடுகிறார்கள்.

பெரியார் சொல்கிறார்:
“பெண்களால் வீட்டிற்கு, சமூதாயத்திற்குப் பலன் என்ன? என்று பாருங்கள். எங்கு கெட்டபேர் வந்துவிடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது. அது எதற்கு?ஆணின் நலத்துக்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஒரு உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? என்று சிந்தித்துப்பாருங்கள்.”

-என்று 1946-இல் பெண்கள் நிலை குறித்து கேள்வி எழுப்புகிறார். 64-வருடங்களுக்கு பிறகும் பெண்களிடம் இதே கேள்வியை கேட்கும் நிலையில்தான் பெண்கள் இருக்கிறார்கள். கல்வி அறிவு இருந்தும் முற்போக்கு சிந்தனைகள் இல்லாமல் தனித்து இயங்கும் தன்மையற்றும் இருக்கிறார்கள்.

பெண்கள் இதுவரையில எந்த வாய்ப்புகளையும் பெண்ணியத்தின் முன்னேற்றத்திற்காக சரியான முறையில் பயன்படுத்தியது கிடையாது.

பதிவுலகில் கூட சிலவிதிவிலக்குகள் தவிர பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு, சமையல், அல்லது ஆண்களை பிரச்சினையில்லாமல் ஆசீர்வதிக்க முயலும் கொஞ்சல்களுமாகவே பதிவுகள் செல்கின்றன. பேஸ் புக் டிவிட்டரில் கூட நான்கு வரி கொஞ்சல்களுக்கு நாற்பது ஐம்பது ஆண்களின் பின்னுட்டங்களும் பெண்களுக்கு திருப்தியைத் தருகிறது.

சமீபத்தில் பேஸ்புக்கில் அண்ணா யுனிவர்சிட்டியில் ஆசிரியராக பணிபுரியும் ஆங்கிலக் கவிதாயினி எழுதியிருந்தார்:

“நான் பச்சை குத்தியிருப்பதைக் கண்டு என் அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அதனால் இன்னும் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் காமுறும் இடங்களில்” என்று 3 வரி வார்த்தைகளுக்கு ஐம்பது பின்னுட்டங்கள் எப்படி வந்திருக்கும்?

சமூகக் கிளர்ச்சிகளில் ஈடுபாடில்லாத பெண்கள் வார்த்தைக் கிளர்ச்சிகளில் ஆணோடு கொள்ளும் தொடர்பால் எந்த மாற்றம் வந்துவிடக்கூடும்?

ஒரு பெண்பதிவர் காத்திரமான ஒரு நிலைப்பாட்டை சாதி, மதம், ஆணாதிக்கம் குறித்து எழுதினால் அதனை ஆண்கள்  விரும்புவதில்லை. பெண் பதிவர்கள் அப்படி எழுதுவதற்கு சுதந்திரமான வெளியாக பதிவுலகம் மாறவில்லை. சில விதிவிலக்குகள் தவிர பெயர், படம், முகவரி போன்றவற்றை மறைக்க வேண்டிய நிலையே பதிவுலகில் உள்ளது.

ஆணாதிக்கத்தை, தனிப்பட்ட முறையில் பேசித் திருத்த முடியாது. ஏனென்றால் அது தனிப்பட்ட விவகாரம் அல்ல. கணவன், அண்ணன், தந்தை என்ற தனி மனிதர்களின் மூலம்தான் அது வெளிப்படுகிறது என்ற போதும் அது ஒரு சமூக ஒடுக்குமுறை. எனவே பொதுவெளியில்தான் அதன் அழுக்கைத் துவைத்து அலச வேண்டும்.

இதுதான் இன்றைய தமிழ்சமூகத்தில் பெண்கள் நிலை. பெண்கள் ஒடுக்குமுறையில் இருந்து மீளவேண்டுமானால் சமூகக் களப்போரில் நுழையாவிட்டாலும் இணையத்திலாவது பெண்களில் சகல இடங்களிலும் ஒடுக்க முற்படும் போக்கை விமர்சிக்கவும் தங்கள் செயல்பாடுகளை ஆராயவும் தொடங்க வேண்டும்.

மகளிர் தினத்தில் மட்டும் பெண்ணுரிமை பேசி வாழ்த்து பரிமாறிக் கொள்வதால் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதுடன் முடித்துக் கொள்கிறேன்.

–          தமிழச்சி

  • தோழர் தமிழச்சி பிரான்சு நாட்டில் வசிக்கிறார். இணையத்தில் பெரியாரின் படைப்புக்களை அறிமுகம் செய்து வருவதோடு காத்திரமான சமூகவிடயங்களையும் தொடர்ந்து எழுதிவருகிறார். மேலும் PERIYAR AWARENESS MOVEMENT – EUROPE  , பிரான்சு நாட்டில் பதிவு செய்யப்பட்ட ((பதிவு எண்: 0772014997)) பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின் அமைப்பாளராகவும் இருக்கிறார்.
  • அவரது இணைய முகவரி: http://tamizachi.com/

 

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

    • தோழர் தமிழச்சி கட்டுரை அருமைபெண்களை சில வரிகள் மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன்பொதுவாக பெண்கள் மென்மை என்ற மாயையில் இருந்து வெளியேறிஉறுதியானவர்களாக மாறவேண்டும் கடினமான உறுதியான உடலை உடையவர்களகவும் மாற்றமடையவேண்டும் அதற்கு உழைப்பே துணை.

      • அப்பறம் தோழர்பெரியாரின் பேச்சுக்களை தங்கள் தளத்தில் ஏற்றிவிட்டார்களா?

  1. சர்வதேச மகளிர் தினமா? சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமா? – இரண்டில் எது சரி?

  2. உழைக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.

    உழைக்கும் பெண்களின் உழைப்பை சக்கையாக பிழியும் இந்த சமுக அமைப்பை ஒழிக்க போராடுவோம்.

    உழைக்கும் பெண்கள் அரசியலில், பொருளாதாரத்தில், கலாசாரத்தில், என எல்லாவற்றிலும் முன்னேற வேண்டும்.

    .

  3. பெண்ணிய நோக்கில் எழுதப்பட்ட சிறப்பான பதிவு. இந்த நோக்கு உலகளாவிய சமூக நோக்காக மாறும் நாளே பெண் விடுதலைக்கான நாள். -ஆ.மீ. ஜவஹர் (nagaijawahar@gmail.கம)

  4. //சமீபத்தில் பேஸ்புக்கில் அண்ணா யுனிவர்சிட்டியில் ஆசிரியராக பணிபுரியும் ஆங்கிலக் கவிதாயினி எழுதியிருந்தார்:“நான் பச்சை குத்தியிருப்பதைக் கண்டு என் அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அதனால் இன்னும் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் காமுறும் இடங்களில்” என்று 3 வரி வார்த்தைகளுக்கு ஐம்பது பின்னுட்டங்கள் எப்படி வந்திருக்கும்?//
     பேஸ் புக்கில் மீனா கந்தசாமியின் விவாதங்களை நானும் கவனித்திருக்கிறேன். தலித் பெண்கள் பிரச்சனைகளை எழுதும் அவர் பத்திரிகை பேட்டிகளில் மட்டுமே சமுகப் பிரச்சனைகளை பேசுகிறார். மற்றபடி பேஸ்புக் விவாதங்களை பார்க்கும் போது மொக்கைத்தனமாகவே இருக்கிறது. எப்போதாவது வரும் பேட்டிகளில் சமுகத்தை மாற்றிவிட முடியாது. தமிழச்சியை போல் தொடர்ச்சியாக சமூக பிரச்சனைகளைக் குறித்து விவாதிக்க வேண்டும். பெண்கள் சிந்திப்பார்களா?

  5. இங்கு பெண்களின் விவாதங்களே முதன்மைபடுத்தப்பட வேண்டும். ஆண்களே சற்று ஒதுங்கியிருங்கள்.

      • கிடைக்கவில்லையே. உங்களின் பதிலை வாசித்ததும் திரும்பவும் எனது மின்னஞ்சல்கலைப் பார்த்தேன். இருக்கவில்லை. உங்களிற்கு நான் ஒரு மின்னஞ்சல் அனுப்பிப் பார்க்கின்றேன்.

  6. வினவுவில் எத்தனையோ கட்டுரை படிதிருகிறேன் ஆனால் இந்த பெண்ணியம் பற்றிய கருத்து புரியவில்லை ,இவர்கள் பெண் சுதந்திரம் என்றால் பெண் எப்படி இருக்கவேண்டும் என்று இவர்கள் நேனைகிரர்கள்

  7. வினவின் இந்த முயற்சிக்கும், தமிழச்சிக்கும் வாழ்த்துக்கள்.

  8. மிகவும் நல்ல பதிவு, தேவையானதும் கூட! குடும்ப வன்முறை பற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் அறவே இல்லை. எல்லாம் நம்ம நல்லதுக்குத்தானே, இன்னைக்கு அடிப்பார்,நாளைக்கு அரவணைப்பார் அல்லது அடிக்கிற கைதானே அணைக்கும் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்தி ஏற்றுக்கொள்ளும் பெண்களே அதிகம்! வன்முறைக்குட்படுத்துவது ஆணோ அல்லது அன்னியனோ – சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

  9. தமிழச்சி எழுதிய இந்த கட்டுரையை, சில மாற்றங்களுடன் புன்னமீன் என்பவர் தனது பெயர் இட்டு தேசம் நெற் இல் பிரசுரித்துள்ளார். இது இது நியாயம் அல்ல . http://thesamnet.co.uk/?p=19403

  10. தமிழச்சி உங்கள் கட்டுரையை இங்கு வாசிப்பதில் மகிழ்ச்சி.தொடர்ந்து உங்கள் கட்டுரைகளையும் கருத்துகளையும் இங்கு எதிர்பார்கிறேன்.நன்றி 

  11. Communist society has this to say to the working woman and working man: “You are young, you love each other. Everyone has the right to happiness. Therefore live your life. Do not flee happiness. Do not fear marriage, even though under capitalism marriage was truly a chain of sorrow. Do not be afraid of having children. Society needs more workers and rejoices at the birth of every child. You do not have to worry about the future of your child; your child will know neither hunger nor cold.” Communist society takes care of every child and guarantees both him and his mother material and moral support.–

    The workers’ state needs new relations between the sexes, just as the narrow and exclusive affection of the mother for her own children must expand until it extends to all the children of the great, proletarian family, the indissoluble marriage based on the servitude of women is replaced by a free union of two equal members of the workers’ state who are united by love and mutual respect. In place of the individual and egoistic family, a great universal family of workers will develop, in which all the workers, men and women, will above all be comrades. This is what relations between men and women, in the communist society will be like. These new relations will ensure for humanity all the joys of a love unknown in the commercial society of a love that is free and based on the true social equality of the partners.

    Alexandra Kollontai

  12. ////பெண்கள் இதுவரையில எந்த வாய்ப்புகளையும் பெண்ணியத்தின் முன்னேற்றத்திற்காக சரியான முறையில் பயன்படுத்தியது கிடையாது.
    ///// Sweeping statements and not true.

  13. ” சமூகக் கிளர்ச்சிகளில் ஈடுபாடில்லாத பெண்கள் வார்த்தைக் கிளர்ச்சிகளில் ஆணோடு கொள்ளும் தொடர்பால் எந்த மாற்றம் வந்துவிடக்கூடும்? ”

    பக்காவா சொல்லீட்டீங்க!

    ” பெண்கள் ஒடுக்குமுறையில் இருந்து மீளவேண்டுமானால் சமூகக் களப்போரில் நுழையாவிட்டாலும் இணையத்திலாவது பெண்களில் சகல இடங்களிலும் ஒடுக்க முற்படும் போக்கை விமர்சிக்கவும் தங்கள் செயல்பாடுகளை ஆராயவும் தொடங்க வேண்டும். ”

    உங்களை நீங்களே சமாதானப் படுத்திக்கிற மாதிரி தெரியுது !

  14. நான் எதுர்பார்த்த பெண்ணியம் குறித்த கட்டுரை மிகவும் அருமை வாழ்த்துக்கள் அன்புடன் ப.செல்வராஜ் நீலாங்கரை,சென்னை

  15. பெண்கள் சமூகத்தில் முன்னேற்றம் அடையவேண்டுமென்றால் அவர்கள் மத நம்பிக்கையிலிருந்து வெளி வரவேண்டும். மதங்களே மகளீரைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. மதத்தின் பெயரிலே அடிமை விலங்கு இடப்படுகிறது. ——புதியவன்—–

  16. தமிழச்சி, 

    அருமையான பதிவு. வரலாற்றில் தொடங்கி அரசியல், மதம், குடும்பம், சமூகம் என்ற நிலைகளில் பெண்கள் பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறீர்கள். மகளிர் தினத்தன்று வேலைத்தளத்தில் சீனதேசத்து நண்பி ஒருவர் சொன்னார், “இன்று மகளிர் தினத்திற்கு எங்கள் நாட்டில் விடுமுறை நாள்” என்று. இங்கு கனடாவிலும் பெண்கள் யாரும் மகளிர் தினம் பற்றி யாரும் அதிகம் அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. காரணம், அவர்களின் உரிமைகளுக்கு சட்டங்கள் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதோடு அவை நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுவதும் தான். ஈழப்பெண்கள் பற்றி யோசித்தால் வார்த்தைகள் கூட வரவில்லை. அவர்கள் வாழ்விலும் எங்கள் மனங்களிலும் வலி மட்டுமே நிறைந்திருக்கிறது.   

  17. //இந்தப் பொருளாதார சுதந்திரம் ஒரு பெண் என்ற முறையில் கூடுதல் சுதந்திரத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளதா? அல்லது பெண்ணடிமைத்தனம் புதிய வடிவங்களில் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதா?// 
    அருமையான கேள்வி, தந்தை பெரியாரின் கொள்கைக்காக தன்னை அர்பணித்திருக்கும் தோழர் தமிழச்சி பெண்களுக்கு முன்மாதிரி,பெண் என்று ஆணாதிக்கம் வைத்திருக்கும் அடையாளத்தில் இருந்து பெண்கள் வெளியேற வேண்டும், முதலில் பெண்களின் நெத்தி சுத்தமாக இருக்கோணும்,புடவை எனும் பைத்தியக்காரத்தனமான, காட்டுமிராண்டி ஆடையை முழுமையாக புறக்கணிக்க வேண்டும், புரட்சிகர அமைப்புகளில் கூட தோழர்கள் புடவை கட்டுவது விமர்சனத்துக்குரியதே, பிறகு அரசியல் ரீதியான சிந்தனையும் தனக்கான் உரிமைகளை போராடிதான் பெற முடியும் என்ற நம்பிக்கையும் வரவேண்டும்
    கோடிக்கணக்காண பெண்களுக்கு மத்தியில் தனக்கும் தன் இனத்திற்காகவும் எழுதும் தமிழச்சி போன்ற சிலர் மட்டும் முன்வருவது ஒருவகையில் அவமானமே,

  18. @ தமிழச்சி

    வேறொரு பதிவில் எழுந்த விவாதத்தில், இக்கட்டுரையை நான் மீண்டும் வாசிக்கக் கோரியிருந்தீர்கள். மீண்டும் முழுமையாக வாசித்துப் பார்த்து எனது கருத்துக்களை முன்வைக்கிறேன்.

    1. இக்கட்டுரையில் சாராம்சமாக தாங்கள் முன்வைக்கும் கருத்துக்களில் முழுமையாக உடன்படுகிறேன். பெண்ணியவாதிகள் மற்றும் படிப்பும், வாசிப்பும் வாய்க்கப் பெற்ற பெண்கள், பெண் விடுதலைக்குப் போராடுவதில், அரசியல் ரீதியிலான விவாதங்களில் முழுமையான அக்கறையோ, தொடர்ச்சியோ காட்டுவதில்லை என்ற கருத்தை தாங்கள் அழுத்தமாக முன்வைத்திருக்கிறீர்கள். அது மிகச் சரியானது என்று கருதுகிறேன்.

    2. இக்கட்டுரையில் தாங்கள் முன்வைத்த பல்வேறு கருத்துக்களுக்கு உதாரணங்கள் தேவையென நீங்கள் கருதவில்லை. உதாரணம், “பதிவுலகில் கூட சிலவிதிவிலக்குகள் தவிர பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு, சமையல், அல்லது ஆண்களை பிரச்சினையில்லாமல் ஆசீர்வதிக்க முயலும் கொஞ்சல்களுமாகவே பதிவுகள் செல்கின்றன.” என்ற கருத்துக்கு எந்த பதிவுலக உதாரணத்தையும் தாங்கள் முன்வைக்கவில்லை. ஆனால், பேஸ்புக் பி்ன்னூட்டங்களுக்கு மட்டும் மீனா கந்தசாமியின் உதாரணம் மிக அவசியமானதாக தங்களுக்குப் பட்டிருக்கிறது.

    3. “அதில் யார் பேரையும் குறிப்பிட்டு எழுதவில்லை.” எனத் தற்பொழுது வேறொரு பதிவில், குறிப்பிட்ட சர்ச்சை குறித்து எழுதியுள்ளீர்கள். இந்தப் பதில் உங்களுக்கே ஏற்புடையதா என சற்று யோசித்துப் பாருங்கள். ஒன்று நேரடியாக மீனா கந்தசாமி எனப் பெயர் குறிப்பிட்டு எழுதியிருக்கலாம் அல்லது அவரது அடையாளம் முக்கியமில்லை என்றால் அதனை குறிப்பிடாமல் பொதுவாகக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், நீங்கள் செய்தது என்ன? “அண்ணா யுனிவர்சிட்டியில் ஆசிரியராக பணிபுரியும் ஆங்கிலக் கவிதாயினி”! அதாவது ஊரைச் சொல்வேன், ஆனா பெயரைச் சொல்ல மாட்டேன் என்கிற இந்தப் போலித்தனம் எதற்காக? இப்பொழுது வீராவேசமாக, “இப்பிரச்சனை குறித்து மீனா எம்மிடம் நேரடியாக பேசினாலும் இதையே வலியுறுத்துவோம்….” என்று கூறுகிறீர்களே, இதனை அப்பொழுதே சொல்வதற்கு எது உங்களை தடை செய்தது? மேலும், இந்த ஜாடைப் பேச்சு பெரியாரிய சிந்தனைமுறையின் பாற்பட்டதா? இது பெண் விடுதலைக்கு பயன்படக் கூடியதா?

    4. மீனா கந்தசாமியின் அரசியல் கருத்துக்களில் எமக்கு முழு உடன்பாடு கிடையாது. அதே வேளையில் பேஸ்புக் மட்டுமல்ல, அவரது பதிவுத் தளங்களில் உள்ள அவரது கருத்துக்கள் அல்லது பின்னூட்டங்கள் குறித்து சரி, தவறு என தீர்ப்புகள் வழங்குவதோ, அவர் பெண்ணியவாதியா, முற்போக்கு பெண்ணியவாதியா, போலிப் பெண்ணியவாதியா என சர்டிபிகேட் வழங்குவதோ என்பதெல்லாம் ம.க.இ.க தோழர்களின் வேலையும் இல்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை.

    தங்களுக்கும் இதுவரை நாங்கள் அவ்வாறு எந்த சர்டிபிகேட்டும் வழங்கவில்லை. தங்களது முரண்பாடுகள் என நாங்கள் கருதுவனவற்றை அனாவசியமாக எழுதிக் கொண்டிருக்கவுமில்லை. ஒரு வேளை தமிழச்சி தளத்தில் நீங்கள் இவ்வாறு எழுதியிருந்தால், இவ்வாறு வந்து விவாதித்திருப்பேனா என்பது சந்தேகமே. ஆனால் தங்கள் இருவருக்கும் பொதுவான வினவு எனும் பொதுத் தளத்தில், நீங்கள் ஒருவரை இவ்வாறு எந்த அவசியமுமின்றி இழிவுபடுத்தும் பொழுது, அதனை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது முறையானதல்ல என்று கருதுகிறேன்.

    லீனா மணிமேகலை போன்ற போலிப் பெண்ணியவாதிகள் அல்லாமல், பெண் விடுதலை குறித்துப் பேசும் மீனா கந்தசாமியோ, தாங்களோ அல்லது வேறு எந்த ஒரு பெண் விடுதலை செயற்பாட்டாளரோ, எம்மைப் பொருத்தவரையில், உங்கள் அனைவரையும் ஆதரவு சக்திகளாக சமமாக மட்டுமே பாவிக்க முடியும். உங்களுக்குள் ஒவ்வொருவரும் வெவ்வேறு தளங்களில் இயங்கலாம். செயல்பாட்டு வீச்சும், களங்களும் மாறுபடலாம். பெரியாரியப் பெண்ணியம், தலித் பெண்ணியம் என வேறுபடலாம். ஒவ்வொருவரிடமும் வகை வகையான முரண்பாடுகள் வெளிப்படலாம். தங்கள் சொற்களில் சொல்வதானால், பல சமயங்களில், பல இடங்களில் மொக்கை போடலாம் அல்லது சில சமயங்களில், சில இடங்களில் மொக்கை போடலாம். ஆனால், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஏற்படும் காழ்ப்புணர்ச்சியையோ, அனாவசியமாக ஒருவர் மற்றொருவரை தாக்கிக் கொள்வதையோ, அவசியமோ, தேவையோ இன்றி, நாங்கள் அங்கீகரிக்க முடியாது. வினவில் நீங்கள் அத்தகைய தாக்குதலை தொடுக்கும் பொழுது, அத்தகைய அங்கீகாரம் உருவாகித்தான் விடுகிறது.

    5. மேற்குறிப்பிட்ட விவாத நடைமுறைப் பிரச்சினைக்கு அப்பால், நீங்கள் விவாதத்திற்கு இழுத்து விட்டதால் கூடுதலாகக் கேட்கிறேன். மீனா கந்தசாமி பேஸ்புக்கில் குறிப்பிட்ட கருத்து எந்த வகையில் தவறு என நீங்கள் விளக்க வேண்டும்.”இன்னும் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் காமுறும் இடங்களில்” என எழுதுவது தவறா? இவ்வாறு பெண்கள் எழுதக் கூடாதோ? அல்லது ஐம்பது பின்னூட்டங்கள் வந்தது தவறா? அல்லது ஐம்பது பின்னூட்டங்களுக்கு ‘தூண்டிய’ குற்றத்தைச் செய்தது தவறா? அதனை விட, “சமூகக் கிளர்ச்சிகளில் ஈடுபாடில்லாத பெண்கள் வார்த்தைக் கிளர்ச்சிகளில் ஆணோடு கொள்ளும் தொடர்பால் எந்த மாற்றம் வந்துவிடக்கூடும்?” என்று ஒரு மாபெரும் வினாவை பொருத்தமற்று எழுப்பியிருக்கிறீர்கள். இந்த வினாவை நீங்கள் சற்று விளக்க வேண்டும். இப்படி ஒரு STATUS MESSAGE வைத்ததனால், மீனா கந்தசாமி சமூகக் கிளர்ச்சிகளில் ஈடுபாடில்லதாவராகி விடுகிறார். வார்த்தைக் கிளர்ச்சிகளில் ஆணோடு தொடர்பு கொள்பவராகி விடுகிறார். வேடிக்கைதான்.

    மீனா கந்தசாமியின் பேஸ்புக் மெசேஜ்களெல்லாம் பெரிய பெண் விடுதலை முத்துக்கள் என்பதல்ல எனது வாதம். ஒரு உப்புப் பெறாத விசயத்தை நீங்கள் எப்படி உலகப் பிரச்சினையாக்க முயல்கிறீர்கள் என்பதுதான் ஆச்சர்யமாகவும், ஒருங்கே வருத்தமளிப்பதாகவும் உள்ளது.

    தமிழச்சி.காம் எனத் தட்டியவுடன், இடதுபுறத்தில் தங்கள் புகைப்படங்கள் விதவிதமான போஸ்களில் வலம் வந்து கொண்டே இருக்கின்றனவே, இத்தகைய (NARCISSISM) சுயமோகம்தான் பெண் விடுதலைக்குப் பெருந்தடை என வினவில், போகிற போக்கில் ஒரு கட்டுரையில் எழுதினால் எப்படியிருக்கும்? ஆனால் அது ஒரு பிரச்சினையல்ல என்றுதான் தோழர்கள் ignore செய்து விடுகிறோம். அது போல மீனா கந்தசாமியோ அல்லது வேறு எவருமோ, அவர்களது ignore செய்ய வேண்டிய பிரச்சினைகளை ஊதிப் பெருக்குவது அனாவசியமானது மட்டுமல்ல, அது ஒரு கருத்தியல் வன்முறை(HARASSMENT) ஆகும். ஆதரவு சக்திகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதுமாகும்.

  19. /////லீனா மணிமேகலை போன்ற போலிப் பெண்ணியவாதிகள் அல்லாமல், பெண் விடுதலை குறித்துப் பேசும் மீனா கந்தசாமியோ, தாங்களோ அல்லது வேறு எந்த ஒரு பெண் விடுதலை செயற்பாட்டாளரோ, எம்மைப் பொருத்தவரையில், உங்கள் அனைவரையும் ஆதரவு சக்திகளாக சமமாக மட்டுமே பாவிக்க முடியும். உங்களுக்குள் ஒவ்வொருவரும் வெவ்வேறு தளங்களில் இயங்கலாம். செயல்பாட்டு வீச்சும், களங்களும் மாறுபடலாம். பெரியாரியப் பெண்ணியம், தலித் பெண்ணியம் என வேறுபடலாம். ஒவ்வொருவரிடமும் வகை வகையான முரண்பாடுகள் வெளிப்படலாம். தங்கள் சொற்களில் சொல்வதானால், பல சமயங்களில், பல இடங்களில் மொக்கை போடலாம் அல்லது சில சமயங்களில், சில இடங்களில் மொக்கை போடலாம். ஆனால், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஏற்படும் காழ்ப்புணர்ச்சியையோ, அனாவசியமாக ஒருவர் மற்றொருவரை தாக்கிக் கொள்வதையோ, அவசியமோ, தேவையோ இன்றி, நாங்கள் அங்கீகரிக்க முடியாது. வினவில் நீங்கள் அத்தகைய தாக்குதலை தொடுக்கும் பொழுது, அத்தகைய அங்கீகாரம் உருவாகித்தான் விடுகிறது.///

    உங்கள் விவாதத்தில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என நினைக்கின்றேன்.

    நீங்கள் விவாதிக்க வேண்டுமானால் நேரடியாகவே விவாதிக்கலாம். நீங்கள் அங்கீக ரிக்க முடியாது என்கிறீர்கள்.
    நான் அங்கீக ரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

    விவாதியுங்கள்…

    என் முரண்பாடுகளை கட்டுரையாக எழுதுங்கள். என் அரசியலை கேள்விக்குட்படுத்துங்கள்.

    ஆனால் காழ்ப்புணர்ச்சி போன்ற இட்டுக்கட்டு காரணங்களை என் முன் வைக்கும் போது என் மீது உங்களுக்கு என்ன காழ்ப்புணர்ச்சி என்றொரு கேள்வி என்னிடமும் எழக்கூடும் அல்லவா? அதேப் போல் வேறு தோழருக்கு எழுமானால் அவரும் உங்களைப் போல் தான் கேள்வி முன்வைப்பார் உங்களிடம்…

    தமிழச்சியின் மீது என்ன காழ்ப்புணர்ச்சி என்று….

    ///மீனா கந்தசாமியின் பேஸ்புக் மெசேஜ்களெல்லாம் பெரிய பெண் விடுதலை முத்துக்கள் என்பதல்ல எனது வாதம். ஒரு உப்புப் பெறாத விசயத்தை நீங்கள் எப்படி உலகப் பிரச்சினையாக்க முயல்கிறீர்கள் என்பதுதான் ஆச்சர்யமாகவும், ஒருங்கே வருத்தமளிப்பதாகவும் உள்ளது.///

    ///இப்படி ஒரு STATUS MESSAGE வைத்ததனால், மீனா கந்தசாமி சமூகக் கிளர்ச்சிகளில் ஈடுபாடில்லதாவராகி விடுகிறார். வார்த்தைக் கிளர்ச்சிகளில் ஆணோடு தொடர்பு கொள்பவராகி விடுகிறார். வேடிக்கைதான்./////

    உலக மகா பிரச்சனையாக பார்ப்பது நீங்கள் தான் தோழர்.
    நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள் வார்த்தை கிளர்ச்சி குறித்து…. அதைத்தான் நான் கேட்டிருக்கிறேன்.

    வேண்டுமானால் இதே வார்த்தைகளை என் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்கிறேன். என் மீது என்ன விமர்சனம் வைக்கப்படும் என்று கவனிக்கிறீர்களா?

    ஏனெனில் என் செயல்பாடுகளை என் ‘பேஸ்புக்’ நண்பர்களான 10 . 074
    பேர்களும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை போன்ற வார்த்தை கிளர்ச்சிகள் என்னிடம் இருந்து வெளிப்படுமானால் நான் சொல்ல வரும் கொள்கைச் சார்ந்த தத்துவங்களும், சமூக விமர்சனங்களும் அடிப்பட்டு போகும் என்பதற்கான பேஸ்புக், டிவிட்ட ரில் கூட மிக கவனமான வார்த்தைகளைத் தான் தேர்ந்தெடுத்து பயன்படுத்துகிறேன்.

    அப்பறம் சுயமோகிகள் குறித்து கருத்து சொல்கிறீர்கள். அதாவது சொந்த அடையாளத்துடன் என் உருவத்துடன் சமூகத்தில் தொடர்பு கொள்வது சுயமோகியின் அடையாளமா? நீங்கள் இணையத்தில் உலவும் போது புகைப்படம் போடாத காரணத்தினால் சுயமோகியாக இல்லாமல் இருக்கலாம். இணையத்தில் இருந்து வெளியேறினால் உங்கள் உருவத்துடன் தானே உலா வரவேண்டும். அப்படியானால் நீங்கள் சுயமோகியா?

    சரி புகைப்படத்திற்கே வருவோம்…

    தில் இருக்கிறவன்(ள்) இணையத்தில் படம் போட்டு எழுதுவதாக நான் நினைக்கிறேன். அப்படியானால் படம் போடும் அனைவரும் சுயமோகிகளா?

    போஸ் கொடுப்பது எப்படி என்று தெரியுமா?

    உங்கள் தோழர்கள் நான் புகைப்படம் போடுவதைக் குறித்து கட்டுரை எழுதி பிரச்சனை ஊதி பெரிசாக்கினால் என் செயல்பாடு எப்படி இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? முடிந்தால் அப்படியொரு கட்டுரையை போடுங்கள்….

    என் செயல்பாட்டை நான் காட்டுகிறேன்.

    • Clearly, I am not going into Tamizhachi’s earlier accusation against women in general. If women are writing about food, or raising children, it is not because that is the only thing we can write about. Both the kitchen and the kids are burdened on us, and naturally we can only write about what we experience. Women are unable to escape this patriarchal division of labour, and as long as we are entangled within its strictures we will be writing about it. On the other hand, I am also sure that there are perfectly feminist-and-liberatory ways of writing about food and children, as well.  🙂
      I am very sure that I m the English poet from Anna University who is mentioned in this blogpost. Not only because of the qualifiers, but also because the said status update was posted on my facebook page. I believe that it is painful to see something that is private on my facebook page (visible only to my friends and family) being shared on an extremely popular blog. 
      Secondly, my status has been twisted out of context. The original message spoke about the fact that my mom liked my tattoo, but she felt tht it could be visible. (her own reasoning being, her mother-in-law was a big tattoo fan..  அதுதான் நம்ம ஊரு பச்ச குத்துவது) I had merely added that I could get in colour and in “lusty locations” — certainly, I had not attributed the lusty with  such an explicit sexual connotation as the translation makes it out to be (and even in that case, I am sure you will agree that it is a person’s liberty to say such a thing). 
      Besides, what seems to worry the author of that article is the fact that there was 50 feedbacks. I am sure that’s just a lot of people clicking like (which FB counts as feedback), and quite a few comments. But tht has nothing to do with this post. I have 4000+ friends on FB, and it is natural for at least 1% of that circle to react to any post. As the woman who wrote the post, I know that several responses were from other girls who simply praised my mom for being so lenient with me. They shared their own stories of aunts and grandmothers with tattoos. They saw in this an instance of female bonding and certainly none of them accused me of titillation..

      I don’t know what makes Tamizhchi say that I belong to a generic class of women who are not bothered about social revolution. What is the supporting evidence? 

      //நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள் வார்த்தை கிளர்ச்சி குறித்து…. அதைத்தான் நான் கேட்டிருக்கிறேன்.//

      Why should anyone make it a taboo for a woman to have a relationship on the text level with men (such as feedback on facebook for instance)? Or, do these lines have other connotations that I am unaware of? I follow Toni Cade Bambara who said that the duty of the radical artist is to make the revolution irresistible. I believe that writing about my body is a freedom that has been afforded to me because of the struggles of our mothers and our sisters. I think that in a society that treats merely indulges in the commodification of the women’s body, a women’s way of celebrating it through her writing, is a welcome change. I am actively engaging in my right to write about my body, come what may!  

      //வேண்டுமானால் இதே வார்த்தைகளை என் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்கிறேன். என் மீது என்ன விமர்சனம் வைக்கப்படும் என்று கவனிக்கிறீர்களா?//ஏனெனில் என் செயல்பாடுகளை என் ‘பேஸ்புக்’ நண்பர்களான 10 . 074பேர்களும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை போன்ற வார்த்தை கிளர்ச்சிகள் என்னிடம் இருந்து வெளிப்படுமானால் நான் சொல்ல வரும் கொள்கைச் சார்ந்த தத்துவங்களும், சமூக விமர்சனங்களும் அடிப்பட்டு போகும் என்பதற்கான பேஸ்புக், டிவிட்ட ரில் கூட மிக கவனமான வார்த்தைகளைத் தான் தேர்ந்தெடுத்து பயன்படுத்துகிறேன்.//
      You are indeed welcome to do that. But you have to understand that we are two very different people, and naturally, different friends/followers/fans on facebook. I am a poet, and I work with words and voice and meanings and images. So, as far as I am concerned I too spend a lot of my time carefully choosing my words. Besides, I am extremely sorry that you take objection to this single facebook post. My poetry has been widely published, and a lot of it celebrates my woman body–and I am sure if you read that, you would not find it up to your puritan tastes. I don’t understand how one can divorce the revolutionary struggle from ones freedom of expression. Or how anybody can claim that the revolutionary struggle cannot find a loci in sexuality, in body politics? My poems deal with love-bites, my poems deal with my line of down, my poems deal with naked bodies making love, my poems deal with how love can transcend social barriers. Sometimes, one thing leads to another. This does not make me any less of a feminist.     

      I believe that to demand of others to function exactly in the manner in which you do is certainly oppressive, and hegemonistic. Feminism does not have a standard definition, template, or mode of operation. There’s nothing in any rulebook which says that a young woman ceases to be a revolutionary if she speaks about lusty locations on her body. It possibly makes her more endearing, in my opinion.

      The fact that I write such facebook updates, or poems or tweets, does NOT in any manner affect my feminist outlook. On the other hand, it is a essential, incredible part of my feminist existence. I am a woman, I am aware of that. To forget my body, my beauty, or my sexuality, and to exist in an emptiness would be troublesome for me. Any of this does not make me anti-revolutionary. 

      Besides, in between all this provoking/seducing-men-on-facebook (as you claim that I am doing), I have also done my readings of Periyar, translated his book “Penn Yaen Adimai Aanaal?” as early as in 2007 (which was published by the DK), and I have more than 1000 pages of his speeches on the women’s condition that’s presently pending with a Delhi-based publisher and hasn’t seen the light of day because of copyright wrangles. I am saying this because I stopped by your site, remembered that you were a Periyarist on top of all this, and I thought that I should let you know. There’s no part of my life that I would like to negate, or disown, or even censor because it is going to suit the tastes/dictates of other people. 

  20. என்ன செந்தழல் இணையத்தில் புகைப்படங்கள் போடுவதற்கு பெண்களுக்கு மிகுந்த துணிச்சல் வேண்டும் என்பதை நீங்கள் அறியாதவரா? மாற்றுக் கருத்தோடு சமூகத்திற்கு கலாச்சாரத்திற்கு எதிரான கருத்தாடல்களை முன் வைக்கும் பெண்களை ஆண்கள் எவ்வளவு வக்கீரத்தோடு அணுகுவார்கள் என்பதை நீங்கள் அறியாதவரா? புகைப்படத்தை நிர்வாணப்படுத்துவது, வாய்க்குள் ஆண்குறி வைத்து இணையத்தில் உலா விடுவடுவது, முகத்துடன் வேறு நிர்வாண உடலை பொறுத்திப்பார்ப்பது, “பாருங்கடா இவதாண்டா தமிழச்சி” என்று சுயமைனதும் செய்யும் யோக்கியவான்களுக்கு மத்தியில் என் புகைப்படங்கள் போஸ் கொடுப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படிப்பட்ட நாய்களுக்காகத்தான் இந்தப் படம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்கிறேன்….

    அது தவறா? அது சுயமோகிதனமா?

    • வாவ் உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது உடனடியாக ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

      வினவு நீங்கள் இதை பிருசிரிக்க மாட்டிர்கள் என தெரியும் அனாலும் உங்கள் தோழர்களை தெரிவு செய்வதில் சிறிது கவனம் காட்டுங்கள்.

      இந்தப்பெண் தன்னை தவிர நெட்டில் எழுதும் எல்லோரும் சுயமோகிகள் என்கிறார்கள். நீங்கள் லீனா மீது வைத்த அதே புகைப்பட விமர்சனத்தை இவர் மீது யாரோ வைத்ததால் அதற்க்கு தமிழச்சி

      //பெண்களை ஆண்கள் எவ்வளவு வக்கீரத்தோடு அணுகுவார்கள் என்பதை நீங்கள் அறியாதவரா? புகைப்படத்தை நிர்வாணப்படுத்துவது, வாய்க்குள் ஆண்குறி வைத்து இணையத்தில் உலா விடுவடுவது, முகத்துடன் வேறு நிர்வாண உடலை பொறுத்திப்பார்ப்பது, “பாருங்கடா இவதாண்டா தமிழச்சி” என்று சுயமைனதும் செய்யும் யோக்கியவான்களுக்கு மத்தியில் என் புகைப்படங்கள் போஸ் கொடுப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படிப்பட்ட நாய்களுக்காகத்தான் இந்தப் படம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்கிறேன்// என்கிறார்கள்.

      எதையுமே குதர்க்கமாக யோசிக்கிறார்கள். Anyway the issues are getting distracted . மீனா கந்தசாமியின் பதில் அவர்மீது மதிப்பை வரவழிக்கிறது.

  21. தோழர் தமிழச்சி அவர்களின் நீண்டகால வாசகன் என்பதால் இணையத்தில் தோழர் தமிழச்சி மீது பாலியல் தாக்குதல்கள் எப்படி நடத்தப்பட்டது என்பது  எங்களைப் போன்ற பழைய வாசகர்களுக்கு தெரியும். அவருடைய புகைப்படங்களை அருவருப்பு கொடுக்கத்தக்க முறையில் வெளியிட்டிருந்தார்கள் பொறுக்கிகள். 
    ‘தமிழச்சியின் நிர்வாணப் புகைப்படத்தை வெளியிடுவோம் – இணையப் பொறுக்கிகள் பகீரங்க மிரட்டல்!
    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=464:2008-04-17-06-10-46&catid=73:2007&Itemid=76
    இந்துமதத்தை தாக்கி எழுதுதாதே என்று அதில் மிரட்டல் வேறு கொடுத்திருந்தார்கள் என்பதாக நினைவு. அதற்குத்தான் தமிழச்சி, “இந்தப்படம் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா” என்ற தலைப்பில் எழுதியிருந்தார். அதையே இங்கு சுட்டிக்காட்டுகிறார். 
    நீங்கள் வேறு கோணத்தில் புரிந்து கொண்டு தோழர் தமிழச்சியை தாக்குவதும் மீனாவை உயர்த்தி பேசுவதும் தேவையில்லை என நினைக்கிறேன். பெண்கள் இணையத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு முன்மாதிரியானவர் தோழர் தமிழச்சி.

  22. தவிர்க்கவியலாத வேலைகள் காரணமாக மிகவும் தாமதமாகவே இந்த விவாதத்தில் பின்னூட்டமிட நேர்ந்திருக்கிறது. மன்னிக்கவும்.

    @ தமிழச்சி

    தாங்கள் எனது விமர்சனத்தை ஒரு தாக்குதலாக மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள், கோபம் கண்களை மறைக்கிற பொழுதில் ஒரு சரியான விமர்சனத்தையும் கூட ஒருவரால் பரிசீலிக்க இயலாது என்பது தங்கள் பதிலின் ஒவ்வொரு சொல்லிலும் புலப்படுகிறது. இது வருத்தமளிப்பதாக இருப்பினும் ஆச்சர்யமளிப்பதாக இல்லை. ஏனெனில், தம்மை கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொள்ளும் பலருக்கே (நான் உட்பட) பல சமயங்களில் விமர்சனங்களை தாங்கும் பண்பு எனும் அம்சத்தில் குறைபாடுகள் நிலவும் போது, தங்களிடம் அவ்வாறு வெளிப்படுவது இயல்பானதே. எனவே, தாங்கள் நான் ஐந்து அம்சங்களாக முன்வைத்த விமர்சனத்தின் எந்தக் குறிப்பான கேள்விக்கும் பதிலளிக்காமல், எனது விமர்சனத்திற்கு உள்நோக்கம் இருப்பதாகவும், எனக்கு தங்கள் மீது காழ்ப்புணர்ச்சி இருப்பதாகவும் எழுதியிருப்பது உண்மையில் சினமூட்டவில்லை. மாறாக, இத்துணை காலம் பெரியாரிய சிந்தனைக்காக போராடி வரக் கூடிய நீங்கள் கூட இத்துணை மலினமாகப் பதிலளிக்கிறீர்களே என வருத்தமளிப்பதாக மட்டுமே உள்ளது. ஒரு வேளை எனக்கு உள்நோக்கம் இருப்பதாகவோ, காழ்ப்புணர்ச்சி இருப்பதாகவோ தாங்கள் கருதினால், அதனைத் தாங்கள் குறிப்பாக அம்பலப்படுத்த வேண்டும் எனக் கோருகிறேன். இதனைத் தாண்டி சவால் அல்லது மிரட்டல் விடும் தொனியில் தாங்கள் எழுதியுள்ள கருத்துக்களுக்கும், சுயமோகம் குறித்து மட்டும் அழுத்தம் தொனிக்கும் தங்கள் கருத்துக்களுக்கும் நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஏனெனில் இன்னமும் தங்களை தோழமை சக்தியாகவே நான் கருதுகிறேன். எனவே, மனம் திறந்த பரிசீலனைக்கோ, விவாதத்திற்கோ தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரியாத நிலையில், தங்களது ‘பதிலுக்கு பதில்’ முறையில் நானும் விவாதிப்பது முறையானதெனக் கருத முடியவில்லை. தாங்கள் நம்புகிறீர்களோ, இல்லையோ, எனது விமர்சனத்தின் நோக்கம் ‘தவறை சுட்டிக் காட்டுவதும், அதே வேளையில் சரியானதை ஆதரிப்பதும்’ என்பதுதான். அந்த நோக்கத்தை புரிந்து கொள்ள விடாமல் தங்கள் கோபம் தங்களை தடுக்கிறது. எனவே, ஆத்திரத்தில் தங்களது மதிப்பை தாங்களே குலைத்துக் கொள்ள நான் வழிவகுக்க விரும்பவில்லை. நன்றி.

    @kamakedi

    இந்த நபருடைய பின்னூட்டம் ஒத்து வராத மறுமொழிகள் பக்கத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என வினவிடம் கோருகிறேன். தமிழச்சியின் கோபத்தை பயன்படுத்திக் கொண்டு அவரை இழிவுபடுத்தும் முறையில் இவர் எழுதியுள்ளார்.

    @ வன்னி மைந்தன்

    தோழர் தமிழச்சி மீது நிகழ்த்தப்பட்ட இணையரீதியிலான பாலியல் தாக்குதல்கள், அவதூறுகள் அனைத்தையும் நான் அறிவேன். அத்தகைய சமயங்களில் அவருக்கு ஆதரவாகவே நான் நின்றிருக்கிறேன். அவரது எழுத்துக்களை அவ்வப்பொழுது இடைவெளி விட்டாலும் கூட தொடர்ந்து படித்தும், பலவற்றை ஆதரித்தும் வந்திருக்கிறேன். அவர் தமிழ்மணத்தில் இருந்த பொழுதிலும் சரி, வெளியேறிய பிறகும் சரி, வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவரது எழுத்துக்களைப் படித்துக் கொண்டுதானிருக்கிறேன். எனவே, தாங்கள் மையமான விவாதத்தில் எந்தக் கருத்தும் சொல்லாமல் புகைப்படங்கள் குறித்து விளக்கம் அளிப்பதும், மீனாவை நான் உயர்த்திப் பேசுவதாக பொருத்தமற்று பேசுவதும் தமிழச்சியிடம் தங்களுக்கு உள்ள விசுவாசத்தை வெளிக்காட்டிக் கொள்ளப் பயன்படலாம். மற்றபடி தமிழச்சிக்கோ, குறிப்பிட்ட மைய விவாதத்திற்கோ அதனால் எந்த உண்மையான பலனுமில்லை.

    “நீங்கள் வேறு கோணத்தில் புரிந்து கொண்டு தோழர் தமிழச்சியை தாக்குவதும்” என்று நீங்கள் புரிந்து கொண்டிருப்பதுதான் தங்கள் கருத்துக்களின் அடிநாதமாக இருக்கிறது. விமர்சனத்தை தாக்குதலாக கருதுவது ஜனநாயகத் தன்மையல்ல. அது பாசிசக் கூறுடைய குட்டி முதலாளித்துவ செருக்காகும். எனவே தங்கள் கோபதாபங்களை குறைத்துக் கொண்டு சற்று நிதானமாக இந்த விவாதத்தை பரிசீலித்துப் பாருங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க