முகப்புவாழ்க்கைஅனுபவம்என் தோழி என்ன தவறு செய்தாள்? – சந்தனமுல்லை

என் தோழி என்ன தவறு செய்தாள்? – சந்தனமுல்லை

-

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 2

சந்திராவை தெரியுமா உங்களுக்கு…சத்தமாக்கூட பேசமாட்டா. பேசறதே அவ்வளவு மெலிதான குரலா இருக்கும். ‘கோவம் வந்தா கூட உன் குரல் இப்படித்தான் இருக்குமா சந்திரா’- ன்னுக்கூட கேட்டிருக்கேன்…அதுக்கும் ஒரு சின்ன புன்னகைதான். எங்க பேட்ச்லே எல்லோரும் வேலைக்குப் போகணும்ன்ற லட்சியத்தோடவெல்லாம் படிக்கலை. படிச்சுட்டு முதல்லே கல்யாணம், அப்புறம் சூழ்நிலை அனுமதிச்சா வேலைன்ற மாதிரி சில பேரு இருந்தாங்க. அந்த சில பேருலே சந்திராவும் ஒருத்தி. அவங்களோட அந்த மாதிரி மனநிலைக்கு நிறைய காரணங்கள் இருந்தது. சந்திராவுக்கு அப்பாவோட ரிடையர்மெண்ட் காரணமா இருந்துச்சு. ரிடயர்டு ஆகிறதுக்குள்ளே பொண்ணோட கல்யாணத்தை முடிச்சுடணும்னு எல்லா மத்திய தர பெற்றோருக்கும் இருக்கும் நெருக்குதல்தான்.

கடைசி செமஸ்டர் நெருங்கும்போதே சிலருக்கு ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை, அமெரிக்க மாப்பிள்ளை’ன்னு ஃபிக்ஸ் ஆகி இருந்தது. எல்லோரும் எல்லோருடைய கல்யாணத்துக்கும் கண்டிப்பா போகணும்-ன்ற ப்ராமிஸோட பிரிஞ்சோம். அதே மாதிரி ஆரம்பத்துலே நடந்த மூணு நாலு கல்யாணத்துக்கு ஒண்ணா போனோம். கல்யாணம் ஆனவங்கள்ளாம், அதுக்கு அப்புறம் நடந்த கல்யாணங்களுக்கு வரலை. ஒண்ணு கண்டம் தாண்டி போயிருப்பாங்க இல்லேன்னா உடல்நிலை இடம் கொடுக்காது. இதுலே ஒரு ஆச்சர்யம், யாருக்கெல்லாம் முதல்லே கல்யாணம் நடக்கும்னு கணக்கு பண்ணி வைச்சிருந்தாங்களோ அதுலே சிலருக்கு மாப்பிள்ளை அமையாம இருந்துச்சு. சந்திராவும் மாப்பிள்ளை அமையாத  லிஸ்ட்லே இருந்தா.

நானும் லதாவும் வேலை தேடி சென்னை வந்துட்டோம். எங்க ஆஃபிஸிலே ஏதாவது வேலை காலி ஆகற மாதிரி அல்லது புது வேலை வாய்ப்பு உருவாகற மாதிரி இருந்தா எல்லோருக்கும் ஃபோன் பண்ணி சொல்வோம். சந்திராவோட ஊர் உடுமலைபேட்டை. அவங்கப்பாவோட வேலைன்னாலே ஆழியார்ன்ற ஊரிலே இருந்தாங்க. நாங்க சந்திராவை கூப்பிடும்போதெல்லாம், ‘எங்க அம்மா அனுப்ப மாட்டேங்கறாங்கப்பா, யாராவது பார்க்கணும்னா உடனே ஊருக்கு வர முடியாது’ -ன்னு சொல்லி மறுத்துடுவா. கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சவால் விட்டிருந்த நானும் வீட்டுக்கு அடங்கி கல்யாணமாகி பெங்களூர் போயிருந்தேன்.

எங்கள் க்ரூப் மெயில்லே சந்திரா ஒரு மெயில் அனுப்பியிருந்தா. ‘நானும் பெங்களூரிலேதான் இருக்கேன், நீ எங்கே இருக்கே’ன்னு அவ தங்கியிருந்த முகவரி,மொபைல் நம்பர் எல்லாம் கொடுத்திருந்தா. ஏதோவொரு கம்ப்யூட்டர் பயிற்சி நிலையத்துலே டெஸ்டிங் கோர்ஸ் படிச்சுக்கிட்டிருக்கா. அவங்களே வேலைக்காக நேர்முகத்தேர்வு ஏற்பாடு செய்வாங்க. அதில் தேர்ச்சி அடைந்து வேலை பெறுவது நமது சாமர்த்தியம்.  ஒருநாள், வீட்டுக்கு வந்து கொஞ்சம் டாக்குமெண்ட்ஸ், நேர்முகத்தேர்வுக்கு தயார்படுத்திக்கற மாதிரி எல்லாம் பேசிட்டு போனா. அப்போ சந்திரா சொன்னது என்னன்னா, ஜாதகம் பொருந்தி வர்ற எல்லா மாப்பிள்ளைங்களும் பொண்ணு வேலைக்கு போகலைன்னு நிராகரிக்கறாங்க. ஒரு சிலர் நேரடியாகவே நிராகரிக்கறாங்க. அதனாலே அம்மாவே என்னை ஏதாவது வேலை தேட சொல்றாங்க. ஆனால், இவ்ளோ நாள் வேலை செய்யாமல் இரண்டு வருட இடைவெளிதான் ரொம்ப இடிக்குது.

இதைச் சொல்லும்போதும் சந்திராக்கிட்டே கோவத்தையோ இல்லே எரிச்சலையோ பார்க்கலை. அதே சமயம், நம்பிக்கை இல்லாமலும் இல்லை. இதை எல்லாம் அனுபவிக்கறதுதான் நம்ம வாழ்க்கைன்னு அவ அமைதியா ஏத்துக்கிட்ட மாதிரிதான் இருந்தது. நானா இருந்தா, அம்மாக்கிட்டே எரிஞ்சு விழுந்திருப்பேன். என் கல்யாணத்துக்கு வச்சிருக்கற காசை தாங்க, ஏதாவது பேங்க்லே போட்டுட்டு வட்டியை வச்சு ஜாலியா இருப்பேன்னு சண்டை போட்டிருப்பேன். சந்திராவுக்கு விதவிதமா ட்ரெஸ் செஞ்சுக்கறதுலே ஆர்வம், என்னை மாதிரியே. நாங்க ரெண்டு பேரும் அம்மா புடவையை ஹாஸ்டலுக்கு எடுத்துட்டு வந்து நாங்களே டிசைன் செஞ்சு தைக்க கொடுப்போம். பெங்களூர்லேயும் சந்திரா நல்ல டைலரை கண்டுபிடிச்சிருந்தா. வாரா வாரம் எங்கேயாவது போய் துணி வாங்கிட்டு வர்றதுதான் அவளுடைய பொழுதுபோக்கா இருந்துச்சு. அவளுக்கு ரொம்ப ஈடுபாடுன்னா – அந்த ட்ரெஸ் டிசைனிங்தான்.

அந்த கோர்ஸ் முடியறப்போவே சந்திராவுக்கு கோயமுத்தூர்லேயே வேலையும் கிடைச்சது. ஊருக்குப் போன ஆறுமாசத்துலே அவளுக்கு நிச்சயமும் ஆயிடுச்சு. மாப்பிள்ளையும் உடுமலைப்பேட்டைதான். ஆனா, அவர் வேலை செய்றது சென்னையிலே தாம்பரத்துலே ஆஃபிஸ். குடியிருக்கிறது பெருங்களத்தூர். அதனாலே இப்போ சந்திரா சென்னையிலே வேலை தேட ஆரம்பிச்சா. ஆனா, எதுவும் அமையலை. இப்போ வேலை செய்யிற இடத்துலே, வீட்டுலே இருந்துக்கூட வேலை செய்யலாம்னு வசதி இருந்தது போல. அதனாலே கல்யாணமாகி பெருங்களத்தூர் வந்தப்பறம் சந்திரா வீட்டுலே இருந்து வேலை தொடர்ந்துக்கிட்டு இருந்தா. அப்புறம், எப்போவாவது ஒரு வாரம் மட்டும் கோயமுத்தூர் போய் ஆஃபிஸிலே வேலை செய்யணும். அந்த சமயங்கள்லே மட்டும் அம்மா வீட்டுக்கு போய்ட்டு அங்கிருந்து ஆஃபிஸ் போய்ட்டு வர ஏற்பாடு.

கல்யாணத்துக்கு போக முடியாததாலே, சென்னையிலே இருக்கற நண்பர்கள் எல்லோரும் ஒரு நாள் சந்திராவை நேரிலே போய் பார்த்துட்டு வரலாம்னு பேசிக்கிட்டோம். ‘நீ எந்த வாரம் இருப்பேன்னு சொல்லு சந்திரா, நாங்க வந்து பாக்கறோம்’- னு சொல்லியிருந்தோம். ஒரு ஆறு மாசம் போயிருக்கும். நடுவிலே பேசிக்கிட்டு இருந்தப்போ தெரிஞ்சது, சந்திரா கருவுற்றிருப்பது. இப்போ போலாம், அப்போ போலாம்னு கடைசிலே ஒரு சில வாரங்கள் கழிந்தன. கடைசியா ஒருநாள் போன் பண்ணினா மொபைல் ரீச் ஆகவே இல்லை. ஒரு சில வாரங்கள் கழிச்சு, விஷயம்  தெரிஞ்சது, சந்திரா ஒரேயடியா உடுமலைக்கே போயிட்டான்னு .

சந்திரா சொன்னதெல்லாம் இதுதான் – டைவோர்ஸுக்கு அப்ளை பண்ணியிருக்கா. அவ ஹஸ்பண்ட் ஒரு சந்தேகப்பேர்வழி, அவ சம்பாரிக்கிறதை அவங்க அம்மா வீட்டுக்கு கொடுக்கறதா சண்டை போட்டிருக்கான். ஏடிஎம் கார்டு, அதோட கடவு எண் எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு அவளுடைய அத்தியாவசிய தேவைக்குக் கூட அவன் கிட்டேதான் கேக்க வேண்டிய நிலை. வீட்டு வேலைக்கு உதவியா யாரையும் வேலைக்கு வைச்சுக்கக் கூடாது. அவ ப்ரெக்னெண்டா இருந்தாலும் மெட்ரோ வாட்டர் எல்லாம் சந்திராவே போய்தான் தெருமுனையிலிருந்து எடுத்துக்கிட்டு வரணும். யாருக்கிட்டேயும் மொபைல்லே பேசக்கூடாது. வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. ஒரு கட்டத்தில் இதையெல்லா தாங்க முடியாமல் சந்திரா திணறி போயிருக்கிறாள். மீறி கேட்டதற்கு சண்டை வந்திருக்கிறது. சண்டை வலுத்து, ‘என் வீட்டை விட்டு போ’ -ன்னு ராத்திரி 12 மணிக்கு வெளியே தள்ளி கதவை சாத்தியிருக்கிறான்.

கையில் மொபைலோ,காசோ எதுவும் இல்லாத நிலையில், சந்திரா அவளோட குடும்ப நண்பருக்கு ஃபோன் பண்ணியிருக்கா. அவர்,  கிண்டியிலிருக்கும் அவரது வீட்டுக்கு கூப்பிட்டுட்டு போயிருக்கார். உடனே ஊருக்குப் போகணும்னு சந்திரா அப்போவே பஸ் ஏத்திவிட சொல்லியிருக்கா. மறுநாள் மதியம் வீட்டுக்கு வந்து சேர்ந்த சந்திராவுக்கு இந்த உளைச்சல், அலைச்சல் காரணமா கருக்கலைந்து ஒரு வாரம் நர்சிங் ஹோம்லே இருந்துருக்கா. அவன்கிட்டே, சந்திராவோட அப்பா பேசினதுக்கு மரியாதை இல்லாமே சந்திராவைப் பத்தி தப்பா பேசியிருக்கான். அவங்க சீர்வரிசையா கொடுத்த எந்த பொருளையும் திருப்பி தர முடியாது, கோர்ட் கேஸுன்னு போனா எனக்கு சாதகமாத்தான் வரும், உனக்குத்தான் வீண் செலவு, எந்த நகையும் கொடுக்க முடியாது, என்ன பண்ணனுமோ பண்ணிக்கோன்னும் சொல்லியிருக்கான்.

இது எல்லாம் நடந்தது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி. இப்போ சந்திரா கோயமுத்தூர்லே வேலை செய்றா. அம்மா-அப்பா கூட உடுமலையிலே இருக்கா. அம்மா கவலையிலே உடம்பு அடிக்கடி சரியில்லாமே போகுதுன்னு கவலைப்பட்டா. கேட்டுக்கிட்டிருந்த எனக்கு ஒரு சுனாமி வந்து போன மாதிரி இருந்தது. அப்புறம் சொன்னாள், ‘நல்ல வேளை நீங்கெல்லாம் வராதது, வந்திருந்தா அதுக்கும் என்னை டார்ச்சர் பண்ணியிருப்பான், ஏன் வந்தாங்க எதுக்கு வந்தாங்கன்னு’. ஆனா, அதே ஊரிலே இருந்தும் சந்திராக்கு தேவைப்பட்டப்போ உதவ முடியலையேன்னு கஷ்டமா இருந்தாலும், எல்லார்மேலேயும் எனக்கு கோவமா வந்தது.

சந்திரா சொல்லும் வரை ‘யாரு இப்போல்லாம் வரதட்சிணை வாங்கறாங்க’ ன்னுதான் மேம்போக்கா நினைச்சுக்கிட்டிருந்தேன். போடறதை போடுங்கன்னு சொன்னாலும் வேலைக்கு போனா வர்ற காசும் (மறைமுகமான ) வரதட்சிணையாதானே கணக்காகுது.பொண்ணு வேலைக்குப் போகணுமா இல்லையான்னு மாப்பிள்ளைகள்தான் முடிவு செய்கிறார்கள், சந்திராவின் அனுபவப்படி. வரதட்சிணை வாங்கினா வர்ற காசை விட சம்பளமா நிறைய காசு வருதேன்னு கணக்கு பண்றதை நினைச்சு எரிச்சலா வந்தது. என்னதான் பொண்ணுங்க படிச்சு வேலைக்குப் போனாலும் சம்பாரிக்கிற காசை கணவன் கையிலே கொடுத்துட்டு வீட்டு வேலை செஞ்சுக்கிட்டு இருக்க வேண்டிய நிலைமை இருக்கத்தான் செய்யுது.

இன்றைய இளைஞர்களுக்கு திருமணத்தின் மூலமாக கிடைப்பது கூடுதலான ஒரு ஏடிஎம் கார்டு – அதை முன்வைத்தே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

சந்திராவின் கணவனது அருவருப்பான நடத்தையைப் பற்றி  சொல்வதற்கு என்ன இருக்கிறது….அதைப்பற்றிய கேள்விகளையும் பதில்களையும் உங்களிடமே விட்டு விடுகிறேன்.

என்னதான் பொண்ணை படிக்க வைச்சாலும், வேலைக்குப் போய் சுயமா இருக்கறதை விட கல்யாணம்தான் முக்கியம்னு நம் சமூகத்து பெற்றோர்கள்  நினைப்பது ஏன்?

பொண்ணை ஏன் தன்னோட கடமையா, குடும்பத்து மானமா, கௌரவமா இன்னொரு வீட்டுக்கு போக வேண்டியவளா, சுமையா, செலவா நினைக்கறாங்க? (என்னோட  ஃப்ரெண்ட் லஷ்மி சொன்னது இது, கசின்ஸ் எல்லாம் சேர்ந்தால்  லஷ்மிதேவி ஈக்வல் டூ செலவுன்னு சொல்லுவாங்க-ன்னு)

பெண்கள் வேலைக்கு போறாங்க, வெளியுலகத்தை பார்க்கறாங்க என்றதையெல்லாம் தாண்டி உண்மையான் பொருளாதார விடுதலை கிடைச்சிருக்கான்னா சந்தேகம்தான். வீட்டில் நிலைமை அப்படியேதான் இருக்கு. ஐடியில் வேலைப் பார்க்கும் பெண்களைத்தான் மணமகன் சமூகம் எதிர்பாக்குது. ‘உன்னோட  சம்பளத்தை என் கையிலே வர வைக்கறேனா இல்லையா பார்’-ன்னு மருமகள்கிட்டே சண்டை போட்டு மகனைப் பிரிச்சு வைச்ச மாமியாரை எனக்கு தெரியும். உண்மையில் பொருளாதார சுமைகளை சுமப்பதில் இருவருக்கும் சம உரிமை கிடைத்திருக்கிறதுன்னு வேணும்னா சொல்லிக்கலாம். மத்தபடி, பெண்கள் நிலை வீட்டில் இன்னும் மாறலை.

இது சந்திராவின் வாழ்க்கை மட்டுமல்ல. தேவிகாக்கள், அனுக்களின் கதையும் இதுதான். அவர்களின் வாழ்க்கை உணர்த்துவதெல்லாம் ‘இந்த பொருளாதார சந்தையில் பெண்ணும் ஒரு சரக்கு. அவளும் ஒரு நுகர்பொருள்’ என்ற எண்ணத்தைத்தான்.

இதற்காக குடும்பம் என்ற ஒன்றே தேவையில்லை என்றெல்லாம் சொல்ல வரவில்லை.  எந்த சராசரி மனிதருக்கும், பெண்ணுக்கும் சரி – ஆணுக்கும் சரி குடும்பம் இல்லாத வாழ்க்கை என்பது நடைமுறையில் சிக்கலானது. ஆணுக்கு குடும்பத்துக்குள் இருக்கும் அதே உரிமைகள் பெண்ணுக்கும் இருக்கட்டுமே. பெண்ணும் அதே சுதந்திர காற்றை சுவாசிக்கட்டுமே.

சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவைப் பாத்த்தேன். ஆணும் பெண்ணுக்கு சமையல் வேலைகளில் உதவ வேண்டுமென்பதாக. அதில் காணக்கிடைக்கும் சில பின்னூட்டங்கள் கொஞ்சம் சமையலறையிலிருந்து வெளியில் வந்திருக்கும் பெண்ணை  திரும்ப சமையலறைக்கு எடுத்துச் செல்வதாக இருந்தன.  ‘ஆண் சமையலில் உதவலாம், தப்பில்லை, எப்போதெனில்  மனைவிக்கு உடல்நலம் சரியில்லா வேளைகளில் உதவலாம், மற்ற நேரங்களில் மனைவியே சமையலுக்கு பொறுப்பு, என்ற ரீதியில்! இது வெளியிலே ஜான்நாயகம்..ஆனால் உள்ளுக்குள்ளே  சர்வாதிகாரம். ‘கொஞ்சம் உதவுவோம்’ என்ற சொல்லுவதில் வெளிக்காட்டிக்கொள்ளப்படும் ‘பெருந்தன்மை’!!

அதுக்காக ஆண்கள் சமையல் வேலைகளில் உதவுவதே இல்லையா என்று சண்டைக்கு வராதீர்கள்.

‘இது என் ஹஸ்பெண்ட் செஞ்ச சாம்பார் சாதம்’னு நண்பர்களுடன் ஒன்றாக லஞ்ச் சாப்பிடும்போது சொல்கிறேனென்று வைத்துக்கொள்ளுங்கள். ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? அடிபபாவி என்றோ அல்லது கிண்டல் தொனியோதான் பதிலாக கிடைக்கும். ஏதோ செய்யக்கூடத மகாபாவத்தை நாம் செய்ய வைத்துவிட்டது போல. கொஞ்சம் நஞ்சம் வரும் ஆண்களையும் இப்படிக் கிண்டல் செய்து ஓட்டிவிட்டால்…..ம்ம்…சில சமயங்களில் ஆண்களின் ரெப்-ஆக  பெண்களே  இருக்கிறார்கள்.

இன்று இவ்வளவு பேசிக்கொண்டிருக்குபோது NDTV-யில் நடந்துக் கொண்டிருப்பது என்ன?  ராகுல் மகாஜன் மூன்று பெண்களில் எந்த பெண்ணை தேர்ந்தெடுப்பார் என்றுதானே?

–          சந்தனமுல்லை.

_______________________________________

சந்தனமுல்லை – ”எம் சி ஏ பட்டதாரி. பள்ளி படிப்பை இந்து மேனிலைப் பள்ளி,ஆம்பூரிலும், கல்லூரி படிப்பை அன்னை தெரசா மகளிர் பல்கலை., கொடைக்கானலிலும் முடித்தேன். தற்போது,  ஒரு தனியார் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். மகள் மற்றும் கணவருடன் சென்னையில் வசித்து வருகிறேன். எனது சிறுவயது நினைவுகளை பதிவு செய்ய  தொடங்கிய வலைப்பூ, தற்போது  மகளுடனான தருணங்களையும், சமூகத்தில் என்னை பாதித்த  நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கிறேன். ”

சந்தனமுல்லையின் வலைப்பூ: http://sandanamullai.blogspot.com/

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. முல்லை, நல்ல பதிவு. எப்போதும் போல் எளிய அதே சமயம் அழுத்தமான எழுத்து.
  //‘கொஞ்சம் உதவுவோம்’ என்ற சொல்லுவதில் வெளிக்காட்டிக்கொள்ளப்படும் ‘பெருந்தன்மை’!!// இந்தப் “பெண்கள் தினம்” என்பதெல்லாம் கூட ஒரு வகையில் செய்த/செய்யும் தவறுகளுக்கான ஒரே நாள் விரதம் போல் தான் தோன்றுகிறது.
  வினவு, தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். இந்தத் தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி. இந்தப் பதிவுகளால் சிலர் சிந்திக்க ஆரம்பித்தால் சரி.

 2. அழுத்தமான கேள்விகளை முன் வைக்கும் இடுகை. எழுதிய நண்பர் சந்தனமுல்லைக்கும், பதிவுலக நண்பர்களை ஊக்குப்படுத்தி அழுத்தமான உரையாடல்களை முன்வைக்கும் இடுகைகளை எழுத வைக்கும் வினவுத் தோழர்களுக்கும் நன்றி. தோழமையுடன் பைத்தியக்காரன்

 3. /விதவிதமா ட்ரஸ் செஞ்சுக்கறதுல ஆர்வம் என்னைமாதிரியே/ இப்போதும் அதேமாதிரிதானா? இது நுகர்வு கலாச்சாரம் இல்லையா?

 4. சந்தனமுல்லையின் எழுத்தை வினவில் பார்ப்பதற்கு மகிழ்ச்சி.

  இந்தக்கட்டுரை அல்லது கதையில் சந்திராவின் அவல நிலையோடு அப்போது அவரது எண்ணங்களை அழுத்தமாக வடித்து அப்படியே முடித்திருந்தால் பின்பகுதி கேள்விகளை படிப்பவர்கள் தாங்களே எழுப்பிக் கொள்வார்கள் என்றும் தோன்றுகிறது.

  எனினும் ஒரு எளிய கதை கூறலில் ஒரு பெண்ணின் சோகத்தையும் ஆணின் ஆதிக்கத்தையும் புரியவைத்த சந்தனமுல்லைக்கு நன்றி

 5. சம்பள பணம் என்பது மறைமுக வரதட்சிணை என்பது இதுபோல மிரட்டும்போது மாத்திரமா அல்லது பொதுவில் வைக்கும்போதும் அப்படித்தான் கருதுகிறீர்களா.. மாறிவரும் பொருளாதார சூழலில் தங்களை விட குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் ஆண்களைத்தான் திருமணம் செய்வேன் என பெண்கள் சொல்ல இயலுமா ….

  • Even if we agree to marry a person with salary less than us, can you men, tolerate that. I am a victim of husband’s ego, as I got more salary than him, he made my life a hell.

  • முகில் நாங்கள்தான் நன்றி சொல்லவேண்டும். முல்லையின் எழுத்துப் பணிக்கு நீங்கள் காட்டும் தோழமையும், நிறைய கவிதைகள் வெளிவருவதற்கு காரணமாக இருக்கும் பப்புவுக்கும் எங்கள் சார்பில் நன்றிகள்

 6. // என்னதான் பொண்ணை படிக்க வைச்சாலும், வேலைக்குப் போய் சுயமா இருக்கறதை விட கல்யாணம்தான் முக்கியம்னு நம் சமூகத்து பெற்றோர்கள் நினைப்பது ஏன்? //

  என் மனதில் பல வருடங்களாக தேங்கி நிற்கும் கேள்வி.

  விருப்பப்பட்டு தற்செயலாக அமையவது தான் கல்யாணம்.
  “காலைல எழுந்தோம், குளிச்சோம், படிச்சோம், சம்பாதிச்சோம்” -என்பது போன்ற ஒரு செயலாகத்தான் கல்யாணமும் இந்த காலத்துல நடந்து கிட்டுருக்கு.

  • இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள் ஒவியா அவர்களே பெண்கள் தெய்வமாக பார்க்கப்பட வேண்டியவர்கள் என்பதும், வேலை புருஷ லக்ஷணம் என்பதும் பெண்களை பெருமை படுத்தவோ அல்லது ஆண்களின் பொறுப்பை சுட்டிகாட்டும் நோக்கத்தோடு சொலபட்டவை அல்ல. பெண்ணை maraimugamaaga அடிமை படுத்தும் sootchamam தான் அதில் நிறைந்துள்ளது.

 7. உண்மையை வெளிக் கொணரும் அருமையான பதிவு !
  எங்கள் வீட்டிலும் இரு சகோதரிகள் இருந்து எவ்வளவு வேலை செய்தாலும் ஆண்களாகிய நாங்கள் வீட்டு வேலைகளில் ஈடுபட்டதில்லை ! இப்போது முற்போக்கு அரசியலுக்கு வந்த பிறகு மாற்றங்கள் வந்துள்ளன ! பெற்றோர்களே பெண்களை வீட்டு வேலைகளுக்கும் சிறுவர்களை கடைக்கு செல்வது, தந்தையுடன் தொழிலில் உதவி புரியவும் பழகி கொடுக்கின்றனர். அதனால் வளரும் ஆண்களிடம் பெண் மட்டுமே வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என்ற போக்கு உருவாகிறது.
  உலகின் முதல் அடிமைகளாக இன்னும் பெண்களே உள்ளனர் !

 8. முல்லை, எனக்கு தெரிஞ்சவரை பெண்கள் வேலைக்கு போகணும்ன்னு எதிர்பார்க்கறது வரதட்சணை எல்லாம் கிடையாது. ஆண்கள் வேலைக்கு போகணும்ன்னு தான ஒவ்வொரு பெண்ணும் அவங்க குடும்பமும் எதிர்ப்பார்க்கறாங்க. அதே மாதிரி IT ல தான் பெண்கள் வேலை பாக்கனம்ன்னு எதிர்ப்பார்ப்பு இருக்கா ? எனக்கு என்னவோ ஒரு பொறுக்கியிடம் மாட்டிக்கொண்ட உங்கள் தோழியை பார்த்து பல generalization செய்து இருப்பதாகவே தெரிகிறது. சந்தேகம் என்ற வியாதி ஆண் / பெண் என்று பார்த்து எல்லாம் வருவதில்லை. மகளிர் தினத்தன்று எழுதப்பட்ட பதிவு என்பதால் நீங்கள் செய்து இருக்கும் stress மற்றும் generalization ஒகே.

  • மணிகண்டன் ஐயா நீங்க எந்தக்காலத்துல இருக்கீக? ஆம்பளைங்க வேலைக்கு போகணுங்குறது பெண்களோட பொருளாதாராத்துல சுதந்திரமில்லேங்குறதக் காட்டுது. ஆனா அதே ஆம்பளங்க தம்ம மனைவிமாரை வேலைக்கு அனுப்புனாலும் சம்பளத்த வாங்கி வச்சுக்குடுதாக. ஆம்பள சந்தேகப்பட்டா அது ஆணாதிக்கம், பொம்பள சந்தேகப்பட்டா அது அடிமைத்தனம். இரண்டுமே ஒண்ணுன்னு எப்படி சொல்லுதீக? 

   • வர்க்க வித்தியாசங்கள் இருக்கின்றன. இருந்தாலும் தமிழ்நாட்டில் அதிக குடும்பங்களில் பணத்தை பரமாரிப்பது பெண்கள் தான். ஆண்கள் சம்பளத்தை புடுங்கி வச்சிக்கிடுவாங்கன்னு சொல்றது ஒரு சில இடங்களில் உண்மையாக இருக்கும். அவ்வளவே.

  • மணிகண்டன் நீங்கள் கருதுவது போல ஆண் பெண் பிரச்சினைகளில் வடிவத்தில் ஒன்றாக இருந்தாலும் காரணங்கள் வேறாகத்தான் இருக்கின்றன. மணவாழ்க்கையில் இருவருக்கும் சந்தேகம் வரலாம். பெண்ணைப் பொறுத்தவரை தன்னுடைய பாதுகாப்பான வாழ்க்கைக்கு குந்தகம் வந்து விடுமோ அப்படி நேர்ந்தால் தனக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தின் காரணாமாக சந்தேகப்படுகிறாள். ஆணைப் பொறுத்தவரை தனக்கு சொந்தமான சொத்து, தனக்கு அடிபணிந்து கிடக்க வேண்டிய மனைவி மற்ற ஆண்களிடம் சகஜமாகப் பேசினாலே பொறுத்தக்கொள்ள மாட்டார்கள். மனைவியின் எல்லா நடவடிக்கைகளும் ஆணின் அனுமதி பெற்றே நடக்க வேண்டுமென்பதிலிருந்தும் இந்தப் பிரச்சினைகள் வருகின்றன. இரண்டையும் நீங்கள் பொதுமைப்படுத்துவது சரியல்ல.

   • வினவு, நீங்கள் தான் காரணங்களை பொதுமைப்படுத்துகிறீர்கள். எனது பின்னூட்டத்தை எழுதும்போது இவ்வளவு சிந்தித்து எல்லாம் எழுதவில்லை. ஆனால் jealous/சந்தேகம் என்பது ஒரு மனவியல் வியாதி. அதற்கான காரணங்களை ஆராயும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை.

    • மணிகண்டன் அண்ணா, விடுங்கள்.
     தொழிலாளியையும் முதலாளியையும் தமக்குள் வெறுத்துக்கொள்ளும் ஒட்டாத இருவேறுபட்ட வர்க்கங்களாக கண்டே பழக்கப்பட்டவர்கள், கணவனையும் மனைவியையும் தம்மிடையே வெறுத்துக்கொண்டு அடித்துக்கொள்ளும் ஒட்டாத இருதுருவ வர்க்கங்களாய் சித்தரிக்க ஒருசில தவறான ‘exception cases’ – மூலம் அதையே அனைவருக்குமாக பொதுமைப்படுத்தி முயற்சிக்கிறார்கள். ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதை வேறெங்கும் முடியாவிட்டாலும், தமக்குள் சமநீதி நிறுவி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விட்டுக்கொடுப்பதன் மூலம் atleast குடும்ப கணவன்-மனைவி உறவிலாவது நிலைநாட்டுவோம்.

  • ////பெண்கள் வேலைக்கு போகணும்ன்னு எதிர்பார்க்கறது வரதட்சணை எல்லாம் கிடையாது. ஆண்கள் வேலைக்கு போகணும்ன்னு தான ஒவ்வொரு பெண்ணும் அவங்க குடும்பமும் எதிர்ப்பார்க்கறாங்க/////உன்மை தான்….

 9. ///////இந்த பொருளாதார சந்தையில் பெண்ணும் ஒரு சரக்கு. அவளும் ஒரு நுகர்பொருள்’ //// நச்.

  மற்றபடி முயற்சிக்கு வாழ்த்துக்கள்…

 10. சந்தனமுல்லையோட பிரெண்டு கதை மாதிரி ஒரு பாடு கதங்கள நானும் பாத்துருக்கேன். எத்தன பொம்பளமாரு இந்தக்கதையில வரமாதிரியான ஆம்பளங்க கிட்ட மாட்டிக்கிட்டு அவதிப்படுதாகன்னு பாத்தாத்தான் அந்தப்பாடு புரியும். முல்லையம்மாவுக்கு என்னோட நன்றி

 11. இந்த கதையை படித்தவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது. இது அப்படியே என் நண்பனின் வாழ்வில் நடத்தது. பாதிக்க பட்டது எனது நண்பன் அவனின் மனைவியால்.

 12. அக்கா மீண்டும் ஒரு நெத்தியடி பதிவு உங்களிடமிருந்து

  இதில் அவல நிலை என்னவென்றால் சந்திரா போன்ற விழித்தெழுந்த பெண்கள் நிலையாவது பரவாயில்லை. தன நிலை உணராத பெண்கள் இந்த காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்த தோழி ஒருத்தி தன சம்பளப்பணம் (பேங்க் கிரெடிட் ஆவதற்கு முன்பெல்லாம் தன கணவரின் காலில் விழுந்து கொடுப்பாராம் அவரின் அம்மாவின் அறிவுரைப்படி.

  இது எப்படி இருக்கு?

 13. இது ஒரு நல்ல கற்பனை கதை இதை நங்கள் நம்பனுமா ? இது உண்மை என்ற பச்சத்தில் வினவு இதை கோர்ட்டில் சந்திக்க வேண்டும் . நானும் இதுபோல் நெறைய கதை எழுதுவேன் அனுமதி கெடைக்குமா பாசிஸ்ட் பெண்களை pathii ?

 14. ethanai kudumba thalaivan than uyirai koduthu kudumpathai kapathuran en ivanga ATM carda thara mattangala !? nanga sampathi ungalaukku jewels vanki potta pen urimai — nenga sampathitha panathai nanga sappitta athu PEN ADIMAI !??? weldon akkooooo\

  Ennai keetal family equal right for every one ….

 15. //இது சந்திராவின் வாழ்க்கை மட்டுமல்ல. தேவிகாக்கள், அனுக்களின் கதையும் இதுதான். அவர்களின் வாழ்க்கை உணர்த்துவதெல்லாம் ‘இந்த பொருளாதார சந்தையில் பெண்ணும் ஒரு சரக்கு. அவளும் ஒரு நுகர்பொருள்’ என்ற எண்ணத்தைத்தான்//
  அச‌த்த‌லான‌ உங்க‌ள் பாணியில் மீண்டும் ஒரு அற்புத‌மான‌ இடுகை. ந‌ன்றி முல்லை.

 16. நன்பர் ?????? என்பவர் இதே போல் பாதிக்கப்பட்டுள்ளார். மனைவியின் சந்தேகத்தால் அவரின் நிம்மதியான வாழ்க்கை பறிபோயுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நபருக்கு நேர்ந்தது என்ற அளவில் ஏற்றுக்கொள்ளலாம். பொதுமைப்படுத்துதலை ஏற்க முடியாது. இன்றைக்கு பல நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் உடைந்துபோய்விடுவதை கண்கூடாக பார்க்கிறேன்..

  • செந்தழல் ரவி,

   சந்தனமுல்லை எழுதிய ஒரு கணவன் போலவே ஏற்ற இறக்கத்தோடு சமூகம் முழுக்க பரவி கிடக்கிறார்கள். உடனே பொதுமைப்படுத்தலை ஏற்கமுடியாது என கருத்து சொல்கிறீர்கள். இந்த தோழியின் கதைக்கு அப்பாற்பட்டு சந்தனமுல்லை அவர்கள் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. அவைகள் விவாதிக்கப்பட்டால் ஆரோக்கியம்.

 17. நல்ல பதிவு. தமிழச்சி, சந்தனமுல்லை அவர்களை தொடர்ந்து.. மற்ற பெண் பதிவர்களும், பெண் தோழர்களும் கொஞ்சம் மெனகெட்டு எழுதவேண்டும்

 18. இக்கதையில் வரும் சந்திரா பத்தி முன்பே நீங்கள் சின்னதாக் குறிப்பிட்டிருக்கிறீர்கள் உங்கள் பதிவுகளில்..  முதலில் டிகிரி முடிச்சிருக்கான்னு கேக்கராங்கன்னு படிக்கவச்சாங்க.. அப்பறம் வேலைக்குப் போனா தான் ந்னு கேக்கறாங்கன்னு வேலைக்கு அனுப்புனாங்க.. இப்ப ப்ரச்சனைன்னு வந்தா  காசுல்லாம இருக்கமுடியாதுன்னு படிக்க வைக்கிறாங்க.. காரணங்கள் மாறிட்டே இருந்தாலும் ப்ரச்சனை என்னவோ அதே தான்.  இது தொடர்கதையாக நடந்து வருகிறது.

  பொதுமைப்படுத்தமுடியாது என்றாலும் .. இது போன்ற மனப்பான்மை முற்றிலும் ஒழிந்து விட்டது என்று சொல்ல இயலாததால் தான் இப்படிப்பட்ட பெண்களைப்பற்றிய கதைகளை இன்றும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.. 

 19. பதிவிற்காக சந்தனமுல்லைக்கும் இது போன்ற ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழிவகுப்பதிற்கு வினவு தளத்திற்கும் வாழ்த்துக்கள்..

 20. நண்பர்கள் எல்லாரும் பொதுமை படுத்தகூடாது என்று சொல்வது ஒரு குறித்த அளவில் மட்டுமே சரி. உண்மையிலேயே விதி இருந்தால் அது வேறு விஷய்ம் அனல் நமது சமுதாயத்தின் அவலம் சட்ட்நேறு நமக்கு புரிவதில்லை. உதாரணமாக அம்மாவோ அல்லது மனைவியோ பக்கத்தில் நின்று உணவு பரிமாற்ற வேண்டும் என்று நினைக்கிறோம்?கேட்டல் அன்பு காதல் என்று சவடால். என்றாவது கணவன் அருகில் இருந்து பரிமாறியது உண்டா?இருவரும் சரி சமமாக வேலைக்கு பூகும்பூது எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளுதல் தானே நலம்?/ஞாஞயம்?நான் ௭ வருடத்திற்கு முன் மனநல மருத்துவராக ,பெந்களூரில் பணிசெய்த பொது எங்கள் மறுத்து கலூரிக்கு வரும் தற்கொலை முயர்ச்சி செய்த மனிதர்களை என்ங்கல் departmetntukku அனுப்புவார்கள். பலசமையங்களில் எங்களுக்கு burns வார்டில் இருந்து அழைப்பு வரும் .நான் பார்த்ததில் கிட்டத்தட்ட ௯௦%பெண்கள் தான்.
  இன்னுரோமுறை ஒரு இளம் நர்ஸ் மாத்திரைகளை முழுங்கிவிட்டார். ஐசியுவிளிருந்து அழைத்து வந்தார்கள்.அவருடைய, குறை, மாமனார் , மாமியார், கணவன் அனைவருமே அவரை அவர் பெர்ரோகளை சந்திக்க விடவில்லை.இவர்களுகுல்லாம் தெரியாமல்
  phone
  பெயசினார் என்று கடுமையாக திட்டியதால் அந்தப்பெண் மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டார். அவரிடம், நான் அவருடை குசந்தைகளை குறித்து பேசும்போது, அவர் சொன்னார்ர்”குழந்தைகளிக்கூட அவங்கதானே டாக்டர் வச்சுக்கறாங்க,அப்புறம் நான் இறந்த என்ன இருந்தா என்ன?”

  எங்கள் சோஷியல் work தேபர்த்மேண்டில் இறந்து குட அவருடை குடிம்பதாரித்ம பேச முயர்ச்சி செய்தோம்.அவர் கணவருக்கு என் நாங்கள் இப்படி பேசுகிறோம் என்று புரியவே illai.”அவளை பேச KUdathunnu சொன்ன எங்க பேசுற?”நான் குட்டை முடிவைத்த ,காழ்ச்காட்டை அணிந்த இந்திய பெண், அந்த நர்ஸ் சுக்கும் எனக்கும் பல நுறு வருடங்களின் கலாசார வித்யாசம் இருந்தது.அதற்காக நான் அந்த பெண்ணிடம் உன் கணவரை விட்டு வா என்று சொல்ல முடியாது. she has to deal with her reality .Unlike me many women are conditioned in our society ,so to break it is not easy.

 21. உண்மையான் பொருளாதார விடுதலை கிடைச்சிருக்கான்னா சந்தேகம்தான்

  உண்மை தான் சந்தனமுல்லை .
  என்னுடன் பணிபுரியும் பெண்களில் பலரின் ஏ டி எம் கார்டு அவர்களின் கணவரிடம் தான் இருக்கிறது .சிலருக்கு அதன் பின் நம்பர் கூட தெரியாது .கொடுக்க மறுத்த சிலருக்கு “என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லை” அல்லது “எதற்காக உனக்கு பணம் வேண்டும் ,எனக்கு சந்தேகமாக இருக்கிறது “, என்று பல எமோஷனல் பிளாக்மெயில்கள் .
  எளிமையான சொற்களில் நன்றாக அழுந்தச் சொல்லியிருக்கிறீர்கள்

 22. கொஞ்சம் கொஞ்சமா சமுதாயம் மாறிக்கொண்டுதான் வருகிறது.
  //இதை எல்லாம் அனுபவிக்கறதுதான் நம்ம வாழ்க்கைன்னு அவ அமைதியா ஏத்துக்கிட்ட மாதிரிதான் இருந்தது. //

  சந்திரா மாதிரி பலர் வாழ்க்கையை மத்தவங்க கிட்ட தான் ஒப்படைத்து வாழ்கிறார்கள்.

 23. பெண்களை பற்றி பேசுவதற்கே பெண்கள் தினம் என்ற ஒன்று தேவைப்படுகின்றது இது தான் சமூகத்தில் பெண்களின் நிலை …

 24. மிகவும் சிறப்பான பதிவு. உங்களின் எழுத்து நடை சிறப்பாகவே இருக்கிறது. ஒரு பெண்ணின் உணர்வுகளை ஒர் பெண்ணைத்தவிர யாரால் சிறப்பாக விளக்க முடியும்?

  தோழமையுடன்
  கலகம்

  • //ஒரு பெண்ணின் உணர்வுகளை ஒர் பெண்ணைத்தவிர //
   அப்படியா! இந்த வாதம் கொஞ்சம் சிக்கலாக தெரியவில்லை. ஒரு தாழ்த்தப்பட்டவரின் வலியை அவரால் தான் விளக்க முடியும். இப்படி நீட்டிக்கலாமா?

   • அனானி அவர்களே,

    என்னுடைய புரிதலில் எழுதியிருக்கிறேன்.. அதாவது ஒரு பெண்ணாய் இருக்கும் பெண்ணாய் உணர்ந்து அவர்களின் நிலையில் இருந்து எழுதும் போது அது மிகவும் சிறப்பாக இருக்கிறது.

    பெண்ணியம் குறித்து சில பதிவுகள் கலகத்தில் எழுதியிருந்தாலும் அவை எழுத்து நடை என்பதைதாண்டி இன்னும் போய்ச்சேருவதில் தடை இருப்பதாக உணர்ந்தேன். அவரால் மட்டும் என்று சொல்லவில்லை நண்பரே!! சிறப்பாக என்றுதான் சொன்னேன்.

    நான் குறித்தது பெண்ணின் பிரச்சினைகளை பெண்ணுக்குரிய மொழியில் எழுதியதைதான். தவறாக இருந்தால் சொல்லுங்கள்.

 25. வினவு இனி வரும் உழைக்கும் மகளிர் தினத்திலாவது உருப்புடியான கட்டுரை இடம்பெற முயற்சி செய்யுங்கள் தீபா.சந்தனமுல்லை.உமாருத்ரன்.தமிழச்சி இதுபோன்ற டேபிள் எழுத்தாளர்களை பதிவு போட வாங்க என்று கூவி கூவி அழைப்பதை நிறுத்துங்க காரு கடன் அட்டை கனினி சொந்த வாழ்க்கை இத தவிர வேற ஒன்னும் தெரியாது போல கொஞ்சம் ரோட்டுல இறங்கி நடந்து பாருங்க கட்டிடம் கட்டும் வேலையிலும் பாலம் கட்டும் வேலையிலும் கொத்தடிமைகளாக குறைந்த கூலிக்கி வேலை பார்க்கிற என்னுடைய கிராமத்து சகோதரிகளை பற்றியும் வேலை செய்த களைப்பில் குத்தும் ஜல்லிக்கல்லின் மீது மராப்பு விலகியது கூட தெரியாமல் புல்லாங்கூழலுக்கு பதில் கோமரா மொபைலொடு திரியும் தெருப்பொருக்கி கிருஷ்ணன்களின் சூழ்ச்சி தெரியாமல் உறங்கிக்கொன்டிருக்கின்ற அந்த சகோதரியை எழுப்பிவிட்டு அந்த தெருப்பொருக்கி நாய்களை செருப்ப கழட்டி அடிக்க சொல்லுங்கள் வயிற்று பசிக்காக ஒவ்வோரு வீடா பாத்திரம் கழுவி வீட்டு வேலை செய்யும் சகோதரிகளை கொச்சைப்படுத்தி பலான ஜோக் எழுதிப்பிழைக்கும் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற கவாலி நாய்களை உங்கள் பதிவுகள் மூலம் செருப்ப கழட்டி அடியுங்கள் அப்படியே பஸ்ஸ புடிச்சு மானமதுரை பரமக்குடி போன்ற ஊர்களை வந்து பாருங்க வேறும் பத்தாயிரம் பணத்துக்காக செங்க சூழையில் வ்ருடக்கனக்கில் அவர்களுடைய உழைப்பும் கற்பும் சுரன்டப்படுவதை கன்டால் இன்னும் எவ்வளவு வீரியமாக செயல்படவேண்டும் என்பதை உணர்ந்துக்கொள்விர்கள் அல்லது எனது பயண அனுபவங்கள் என்று ஒரு கட்டுரையாவது எழுதலாம் அல்லவா

  • ஹைதர்,இங்கே இந்த டேபிஐஎல் எழுத்தாளர்கள் எழுதுவதை டேபிள் வாசகர்கள் படிப்பார்கள். ஏழைப் பெண்களுக்கு கணினிமூலம் சொல்ல இப்போது சாத்தியமில்லை. இங்கே இவர்களைப் பார்த்து இதே போன்றவர்கள், (உங்களையும் என்னையும் போல் கணினியில் மறுமொழிகூறுபவர்கள்) பெண்களைப் பற்றி யோசிக்க வைக்க இவை உதவுவதே ஆரம்பக் கட்டம்.

  • ஹைதர் அலி,

   நீங்கள் குறிப்பிடும் அடித்தட்டு உழைக்கும் பெண்களைப் பற்றிய கட்டுரைகளையும் இம்மாதம் வெளியிடுவதாகவத்தான் உள்ளோம். இத்தகைய பெண்கள் வறுமை என்ற சுரண்டலால் அதிகம் பாதிக்கப்படுவதை யாரும் உணர்ந்து கொள்ள முடியும் அல்லது புரியவைக்க முடியும். ஆனால் பெண் என்ற முறையில் பாதிக்கப்படும் பெண்களின் கதைகளை, வலிகளை எத்தனை பேர் அறிவார்கள்? வினவில் கட்டுரை எழுதிய பெண்களை ஒரே அடியில் டேபிள் எழுத்தாளர்கள் என்று நீங்கள் முத்திரை குத்துவது என்ன விதத்தில் சரி? அந்தக் கட்டுரைகளில் பல வகைப்பெண்களின் பிரச்சினைகளும், அனுபவங்களும் உங்களைப் போன்ற ஆண்களுக்கு மட்டுமல்ல, தனது பிரச்சினையை பேசத்தெரியாத பெண்களுக்கும் அவசியமில்லையா? வறுமை என்பது பிரச்சினையாக இல்லையென்றாலும் பல நடுத்தரவர்க்க பெண்கள் மணவாழ்க்கையிலும், குடும்பவாழ்க்கையிலும் ஆயுள் கைதிகளைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெண்களின் பிரச்சினைகளெல்லாம் ஒரு பிரச்சினையா நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது போல நீங்கள் சமாதானம் செய்கிறீர்கள். நீங்கள் நினைக்கும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வை அடையவேண்டுமென்றால் கூட அதற்கு பெண்கள் அணிதிரளுவது அவசியம். குடும்பத்தின் கடமை என்ற வகையில் முடக்கப்பட்டுள்ள பெண்களை சமூக நடவடிக்கைகளுக்கு அணிதிரட்டுவது எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் அறிவீர்களா? வேறு வார்த்தையில் சொன்னால் கரண்டி பிடிப்பவளுக்கு ரோட்டுல என்ன வேலை என்பதுதான் இன்றைய சமூகத்தின் கட்டுப்பாடு. இவற்றையெல்லாம் நாம் மாற்றவேண்டுமென்றால் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும். அதற்கு முதலில் பெண்களின் வாழ்வை உள்ளது உள்ளபடி உணர வேண்டும். நீங்கள் சொல்லும் செங்கல் சூளையில் கஸ்டப்படும் பெண்களை அணிதிரட்ட வேண்டுமென்றால் கூட இந்த ‘டேபிள் எழுத்தாளர்கள்’ பிரிவிலிருக்கும் பெண்கள்தான் செய்ய முடியும். நடுத்தர வர்க்க பெண்களுக்கு கிடைக்கும் கல்வி, வேலை போன்ற சமூக அங்கீகாரங்கள் ஏழைப் பெண்களுக்கு கிடையாது என்பது உண்மைதான். இதை நாம் சரி செய்ய வேண்டுமென்றால் நமக்கு இரு தரப்பும் வேண்டும். ஒன்றைப் புறக்கணித்து விட்டு மட்டும் அதை செய்ய முடியாது. முடிவாக உங்கள் குடும்பத்தில் இருக்கும் தாய், மனைவி, சகோதரிகள் என்ற உங்களுக்குத் தெரிந்த பெண்களைக்கூட நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. அதையும் பரிசீலனை செய்யுங்கள்.

 26. ருத்ரன் மற்றும் வினவு என்னுடைய தவறான புரிதலுக்காக மன்னிக்கவும்

 27. வினவில் இப்படி பெண்கள் எழுதுவதைப் படித்து விட்டு பொறுக்க முடியாமல் இந்த்துவ
  பின்நவீனத்துவ ஜெகத்குரு தன் வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்

  ‘தாலி அடிமைச்சின்னம்,மதம் பெண்களை ஒடுக்கும்,சோசலிச சமூகமே பெண் விடுதலைக்கான ஒரே தீர்வு போன்ற தட்டையான புரிதல்களுக்கு அப்பாற்பட்டு யோசிக்கும் போதுதான் சிலவற்றைப் புரிந்து கொள்ள முடியும் ……………குறியீடுகள் மூலமே எல்லாவற்றையும் புரிந்து கொண்டுவிட முடியுமா.பெரியாரிய,மார்க்சிய பெண்ணியம் என்ற பெயர்களில் எழுதப்படுபவைகளில் காணப்படும் தட்டையான புரிதல்களின் அடிப்படை பலவீனமே அவை ஒரு குறிப்பிட்ட சிந்தனைச் சட்டகத்தின் மூலமே புரிந்து கொள்ள முயல்வதுதான்.’

  நமக்கு தெரிந்து அவருடைய
  உருண்டையான புரிதல் சிந்தனை கோளம் ஐ மீன் கணணோட்டம் இதுதான் இந்து மதம் ஒ.கே, இந்தியா ஒ.கே, உலகம்யம் ஒகே இவற்றின் பெயரால்
  சுரண்டல் டபுள் ஒகே, பெண்களை சுரண்டல் டிரிபிள் ஒ.கே.

 28. my daughter’s case also almost same .
  first she was asked to leave her job as her husband insisted she should be in home at eveninhg five o clock which was not possible. she had to give all the amount she earned before her marriage also.

  she is in my house now with her three years old daughter.

  now she got a job.

  may be 5 percent gents suffering because of their wives. 95 percent ladies are suffering due to their in laws and husband. some only are coming out from husbands.

 29. ஒரு சகோதரியின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்ச்சியை பதிவு செய்திருக்கிறார் சந்தனமுல்லை.இதில் வழிகாட்டுதலும் இல்லை.மற்ற பெண்கள் எப்படி இதை எதிர்கொள்ளலாம் என்ற ஆலோசனையும் இல்லை.ஆண்கள் எல்லாம் மோசம் இல்லை.பெண்கள் எல்லாம் அடக்க ஒடுக்கமானவர்களும் இல்லை.இரு பாலர்களிலும் துன்பப்படுபவர்கள் உண்டு.இரு பாலர்களிலும் சுக வாசிகளும் உண்டு.ஒரு சம்பவத்தை பற்றி சொன்னாலோ எழுதினாலோ, ஆமாம் இதே போல் எங்க அக்காவுக்கு நடந்தது,அம்மாவிற்கு நடந்தது என்று பதிவு போட்டுவிட்டு போவதா இந்த இணைய தளத்தின் நோக்கம்? எந்த செய்தியாக இருந்தாலும்,கட்டுரையாக இருந்தாலும் அதன் முடிவில் தீர்வு இருக்கவேண்டும்.நான் தான் வாழ்க்கையை தொலைத்துவிட்டேன்.நீங்கள் உஷாராக இருங்கள். என்பதுபோல இருந்தால் படிப்பவர்களுக்கு பயன் உண்டு. அருமை.சூப்பர்.பாராட்டுக்கள் என்று பதிவு போட ஒரு கூட்டம்.போலி ஐ.டி.யில் ஒரு கும்பல்.
  கடந்த ஐந்து ஆண்டுகளில் என்னை சேர்ந்த குடும்பங்களில் 28 திருமணங்கள் நடந்துள்ளன.இப்போதைய திருமண மார்க்கட்டில் ஆண்கள் அதிகம்,பெண்கள் குறைவு.
  பெண்கள் அதிக ஊதியம் பெருகிறார்கள்.
  படிப்பிலும் பெண்கள் அதிகமாக படித்திருக்கிறார்கள்.
  பெண்களுக்கு வீட்டு வேலை செய்ய நேரம் காலையில் இருப்பதில்லை.இரவில் களைத்துபோய் வருவதால் சமையல் செய்வதில்லை.
  குடும்பத்தில் இதனால் சண்டை,சச்சரவு.முடிந்தவரை சமாதானம் பேசியும் ஐந்து ஜோடிகள் விவாகரத்து வேண்டி நிற்கின்றனர்.மற்றவர்கள் இந்த முறைக்கு தங்களை தயாராக மாற்றி கொண்டிருக்கிறார்கள்.படித்த பெண்கள் அதிகம் வேலைக்கு போகும் காலம் ஆகையால் வாழும் முறை மாறிக்கொண்டு வருகிறதை இது உணர்த்துகிறது.அவரவர் வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ளுவது அவரவர் கையில்தான் உள்ளது என்பதே உண்மை.

 30. மாசறு பொன்னே
  வலம்புரி முத்தே…

  கொஞ்சிய கோவலன்..

  கொஞ்சமும் ஈரமின்றி ,

  மனைவி கண்ணகி மறந்து..

  காதலி தேடிச் சென்றான்..

  தென்றல் நடையாள்

  தேன்மலர்க் குழலாள்..

  பேசியவாய் உலருமுன்னே..

  கானல் வரிபாடி ,

  மாதவியை மறந்துசென்றான்..

  முள்ளுக்கு மனமிலையோ..

  என்னவளின் மெல்லடியைத் தைத்திற்றே..

  சிறுமுள் தைத்ததை பொறுக்காத இராமனோ..

  சீதையவளை சிதைபுகச் செய்தான்..

  என் கண்ணின் பாவையன்றோ..

  கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ..

  கண்ணம்மாவைக் காதலித்த பாரதி..

  கைப்பிடித்தது செல்லம்மாவை..!!

  தோழி இன்னும் எத்தனை நாட்கள் தான் இருப்பாய் அலங்காரப் பதுமையாய் ??

  வரலாற்றுக் காலந்தொட்டு இன்றுவரை எதுவும் மாறவில்லை..

  வரலாற்றிலிருந்து நாம் தெரிந்துகொண்ட உண்மை என்னவெனில்…நாம் எதுவுமே தெரிந்துகொள்வதில்லை என்பதுதான்.

  மாற்றங்களின் துவக்கம் நம்முன்னுல்லிருந்து எழட்டும்.

  ரௌத்திரம் பழகு

  …யாழினி…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க