உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 9
இலைதழை அடைத்த வாசல்சந்துகளின் வழி
அவள் கவைகூட்டித் தணல் தள்ள
புகைசூழ்ந்து வேகும் சுண்ணாம்புச் சூளையில்
குருவியும் பறக்க அஞ்சிக் கூடிருக்கும் வெயிலில்
அவள் மடிகூட்டிச் சேர்த்தெடுத்து
மலையென்று குவிந்திருக்கும் பருத்தியில்
இருபது நிமிடப் பேருந்துக் காத்திருப்பால்
களைத்த முகங்கள் இளநீரில் இளைப்பாறும் சாலையொன்றில்
தீமீது தவம்புரிந்து அவள் உருக்கி ஊற்றும் தாரில்
தலையெல்லாம் மயிரும் மயிரெல்லாம் நூலும் சுமந்திருக்க
அக்குள் ரவிக்கையின் வியர்த்த வெள்ளை வரிபடிய
அவள் சுற்றித் தேய்ந்திருக்கும் கதர்க்கடை ராட்டையில்
பேசாத சாமிக்கு ஆச்சாரம் துலங்கவந்து
யாரெல்லாமோ சாத்த
முக்குக்கடை வாசலில் பாலுரிஞ்சும் குழந்தையுடன்
பத்துவிரல் உழைத்து அவள் கட்டித் தந்திருக்கும் மாலையில்
குருடர்கள் உணராத நிறங்களென விரவி ஒளிர்கிறது
அவள் கருப்பை முட்டை வெடித்துச் சிதறும் உதிரம்
______________________________________________
சமூகத் தளங்களில் பங்கெடுக்க ஆரம்பித்திருந்த பதின்மக் காலகட்டங்களில் இந்த மகளிர் தினம் சார்ந்த கொண்டாட்டங்களில் பெரிய ஈடுபாடு இருந்தது. காரணம்… இருந்த ஆர்வங்களுக்கேற்ற வாய்ப்புகளை அத்தகைய கொண்டாட்டங்களும் கொண்டுவந்து கைகளில் சேர்த்தன. அந்த அங்கீகார, புகழ்ப் போதைகளை விலக்கிய போதி மரங்களும் விரைவில் கிடைத்தன. சில வருடங்கள் இருக்கும். அப்போதுதான் அறிமுகமாகியிருந்த தமிழ்வலைப்பதிவுகளில் எண்ணிவிடக்கூடிய மிகச்சில பெண்பதிவர்களே இருந்தார்கள்.
அப்போதும் இப்படியொரு மகளிர் தினம் வந்தது. பெண்பதிவர்களில் சிலருக்கு அது அதீத ஆர்வம் தந்து கொண்டாட வைத்தது. பரபரவென்று பெண்பதிவர்களின் பட்டியலைத் தயாரிப்பதிலும், அந்த வெற்றிகளை அறிவித்துக்கொள்வதிலும் ஆர்வமாக இருந்தார்கள். இது குளிரூட்டிய அறைக்குள் விரைத்துவிடாதிருக்கக் கணினி வெப்பம் தேடி வந்திருக்கும் வசதியான சிறுகூட்டம்தானே? இந்தக்கூட்டத்தின் வெற்றிக்கும் மகளிர் தினத்துக்கும் எப்படி முடிச்சிட முடியும்? என நினைத்துக்கொண்ட மனம் விலகியே இருந்தது.
இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கையில் அசுரன் தன் பதிவில் அடித்தட்டுப் பெண்களின் படம் ஒன்றைப் போட்டு “மகளிர் தினம் யாருக்கு?” என்று ஒற்றைவரியை மட்டும் பொட்டிலடித்தாற் போல் போட்டிருந்தார். அது பிடித்திருந்தது. எனவே நன்றி சொல்லிப் பின்னூட்டம் இட்டேன். அவரின் அமைப்போ அரசியலோ அல்லது வேறு எதுவுமோ தெரியாது. ஆனால் அந்தக் கேள்வியின் நியாயம் அங்கே பிடித்து வைத்தது.
இப்போது தங்கள் அமைப்பை, அரசியலை முன்வைத்து இந்தத் தளத்தை வினவு நண்பர்கள் நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து வாசித்தாலும் கருத்தெழுதுவது எப்போதாவதுதான். அப்படி எழுதுகிற சமயத்திலும், சில தனிமடல் உரையாடல்களிலும் அவர்களோடு நான் அதிகம் காட்டியது சண்டைக்கோழி பாவனைதான். வேறுமாதிரி சொன்னால் விமரிசனங்கள்.
விமர்சனங்களை முன்வைப்பவர்களில் பலவகை இருக்கலாம். விரும்புபவர்கள் சறுக்கல்களைச் சுட்டிக்காட்டவும் விமர்சிக்கலாம், அதையே எதிர்மறையாக, ஒழிக்க விரும்புவர்கள் சறுக்கல்களையே கொண்டாட்டமாகவும் விமர்சிக்கலாம். இதில் வினவுக்கு நான் விமரிசனங்களாக வைப்பவை எந்த வகையைச் சேரும் என வாசிப்பவர்களோ, வினவு நண்பர்களோ அறிந்துகொள்ள முடியும் என்றுதான் கருதுகிறேன். அப்படிப் புரிந்துகொண்டவர்கள் அதை எனக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் புரிதலின் புள்ளியில்தான் இப்போது வினவுக்காக இந்த இடுகையை எழுத ஆரம்பித்தேன். ஏற்கனவே வேறு ஒரு தொடர் எழுத மடல்வழி உடன்பாடு நிகழ்ந்து பிறகு அதற்கான தயாரிப்புகளும், வாசிப்பும் தடைபட்டதால் எழுத இயலவில்லை. அந்தச் சோம்பேறியிடம்தான் இப்போது மகளிர் தினம் சார்ந்து கட்டுரை கேட்டார்கள். இதையும் தாமதமாகவே இப்போதுதான் தர முடிந்தது. அதற்காக மன்னிக்கவும்.
சனநாயகமும், விடுதலையும் சட்டப்படி வந்து அறுபத்திச் சொச்சம் ஆண்டுகள் கழித்து மகளிர் மசோதா ஒரு அவையில் நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடும், அதை இன்னொரு சபையில் என் பிணத்து மீதுதான் நிறைவேற்ற முடியும் என சவாலிட்டு நிற்கும், உள் ஒதுக்கீடு ஏன் தேவை, ஏன் தேவையில்லை என விவாதித்து நிற்கும் நம் அரசியலை எழுதலாம். நாளொன்று பெண் ஒருத்தியின் மீதான பாலியல் வன்முறையின்றிக் கழிகிறதா என ஐ.நா வின் புள்ளி விவரம் வரை குறிப்பிட்டு எழுதலாம். அவளின் மீது ஏற்றிவைக்கப்பட்ட கற்பு இறக்க முடியாத சுமையாக பேரழிவு புரிவதையும், எங்கே இறங்கிவிடுமோ எனப்பதறிப் பண்பாட்டுத் தட்டிகளோடு அலையும் பெண் கற்பின் காவலர்களையும் எழுதலாம்.
பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் எனப் பேசிக் கொண்டிருக்கும்போதே மேலே வந்தவர்கள் சந்திரிகாக்களாய், செயலலிதாக்களாய், சோனியாக்களாய் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று எழுதலாம். போகிற போக்கில் “பெண் உடல் நுகர்வுப் பொருள் அல்ல” என்பதும் விளம்பரமாகி அதைப் பொதுசனத்திற்குச் சொல்வதற்காய் ஒரு முக்கால் நிர்வாணப்பெண் தன் உடல்மொழி கொண்டு நிற்பாளோ என்றும் தோன்ற ஆரம்பித்திருக்கும் கணினி யுக அழகிப் போட்டிகளை எழுதலாம். கொஞ்சம் எழுத்தும், வாசிப்பும் இருந்துவிட்டால் “மகளிர் தின” த்துக்கு எழுத விடயங்கள் அதிகம்தான்.
எனக்கு இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றியது வேறுவிதமானது. அவை சில பெண்களைப் பற்றியது. அவர்கள் மகளிர் தினத்துக்கு எந்த மேடையிலும் வராதவர்கள், எந்த ஊடகத்திலும் எழுதாதவர்கள், புரட்சியை அறியாதவர்கள்; ஆனால் தன்னளவில் வாழ்வை வைராக்கியத்தோடு ஒரு போராட்டமாக நடத்தியவர்கள். வறட்டுக்கரை மணலில் நான் ஆடோட்டித் திரிந்த காலத்திலிருந்து என்னால் கவனிக்கப்பட்டவர்கள்; என் தோல்விகளின் விரக்தியில், கனவுகளில் வந்து கைபிடித்துத் தூக்கிவிட்டவர்கள்; வாழ்வு என்பது துணிச்சலிலும், நேர்மையிலும் உள்ளதென்று உணரவைத்தவர்கள் அந்தப் பெண்கள்.
_____________________________________________________
தாயா…. தாயா பண்ணைகளின் ஏவலில் கூலி வேலைக்காரி. கணவன் இறக்க ஒரே மகன். மழையோ, வெயிலோ கூலிக்குப் போனால் சோறு அல்லாவிட்டால் பட்டினி. குடிசைக்குக் கூரையும், கட்டிக்கொள்ளத் துணியும், கால்வயிற்றுக் கஞ்சியும் போதுமென்ற நிறைவை நெஞ்சில் நிறுத்தியிருந்தால் தாயாவின் பின் அவர் மகனும் அதே பண்ணைகளுக்கு ஒரு அடிமையாய் வந்திருப்பார். எதோ ஒரு தீயும், சமூகம் தந்த ஆறாத காயங்களும் கனன்று கனன்று கனவை விதைத்திருந்தது. எப்பாடு பட்டேனும் மகனைப் படிக்க வைத்துப் பட்டணம் அனுப்பி விடுவது. கிராமங்கள் தேசத்தின் முதுகெலும்போ, கலாச்சாரத்தின் தொல்லியல்போ மட்டுமல்ல. கிராமங்களின் வேர்கள் சாதிப் புற்றுநோய்க் கிருமிகளின் வெகுநல்ல தங்குமிடங்களும் கூட. தயா இதை அறிந்திருந்ததே கூடத் தன் மகனை அதன் முடிச்சுகளிலிருந்து விடுவித்து அனுப்பிவிடும் கனவினை விதைத்திருக்கலாம். எத்தனையோ போராட்டங்களைத் தாண்டி ஒற்றை மனுசியாய் அந்த நினைப்பை நிறைவேற்றினார்.
மலையேறி விறகு வெட்டிப் பொழுது விடியச் சந்தையில் விற்று வீடு திரும்பும் வாழ்க்கை பழனிக்கு. நெடுநெடுவென்ற உயரமும் கன்னத்தில் சிறுபந்தாய் அடக்கிய வெற்றிலைக் குதப்பலும் வாயில் சீலையும் வேத்து வரி விழுந்த ரவிக்கையும் அவர் உருவம். கூடவே கையில் வெட்டிக் கொண்டு போய் விற்ற கட்டிலிருந்து உருவிய ஒரு நீள விறகுக் கட்டையும். பொழுது விடியும் முன்பு பொம்பளை ஒருத்திதானே தனியாகப் போகிறாள் என்று காதுத் தோட்டுக்கோ, வேறெந்தக் கருமத்துக்கோ பின்னால் வந்த ஆம்பளை ஒருவனைக் கையிலிருந்த விறகுக்கட்டையாலேயே ரத்தம் வர மொத்தி அனுப்பியபின் வீரப் பழனியாக வெளித்தெரிந்தவர். அதற்குப் பிறகு ஊரில் ஆம்பிளைகள் சிலர் பழனி எதிர்க்க வந்தால் வெளிக்குப் போவது போல் வேலியோரமாய் உட்கார்ந்து கொண்டது பெண்களுக்கு நகைச்சுவைக் கதைகளாயின. பானை உடைந்ததுக்கும் பதறி அழுத பெண்களுக்குப் பழனி முன்னுதாரணமும் ஆனார்.
ஒரு சிறுநகரத்தின் கல்யாண மண்டபம். வந்த சனம் தின்றது செரிக்க வழி தேடிக்கொண்டிருக்கையில்தான் அங்கே மாப்பிள்ளையைத் தேடும்படி ஆனது. பொண்ணு பார்க்க வந்தபோது நல்லாப் பார்க்கவில்லையென்றும், இன்றுதான் பெண்ணுக்கு ஒருகண் மட்டுமே உண்டென்றென்று தெரிந்ததென்றும் சொல்லி தாலிகட்ட முடியாதென்று ஓடிப்போனார் மாப்பிள்ளை. ஊரும், உறவுகளும் ஏளனப்படுத்தி நிற்க அதே மண்டபத்தின் ஒரு மூலையிலிருந்த தன் கணவனை அழைத்து வந்து “என் தங்கைக்கு நீயே தாலிகட்டு எவன் என்ன சொல்வான்னு பாக்கறேன்” என நடத்தித் தன் நான்கு குழந்தைகளோடு தங்கைக்குப் பிறந்த ஒரு குழந்தையையும் வளர்த்தெடுத்து அத்தனை பேரையும் நல்ல வேலைகளுக்கனுப்பிய லட்சுமி டீச்சர், வாழ்வின் அத்தியாயங்களில் இன்னொரு பெண்.
மூன்று குழந்தைகளும், பால் வியாபாரமும் விக்கித்து நிற்க விபத்தொன்றில் இறந்துபோன பால்காரரின் மனைவி மாரம்மாள். பொட்டையும், பூவையும் அழித்துத் தாலி பிடுங்க வந்த உறவுகளிடம் முடியாதெனத் திருப்பியனுப்பி மூன்றுமாதம் கழித்துத் திருமணமாகாதிருந்த உறவினர் ஒருவரிடம் தானே சென்று “என் வாழ்வுக்கு ஒரு ஆண் தேவை, நீ என்னைக் கல்யாணம் செய்துகொள்ள விருப்பமா?” எனக் கேட்டு மணமும் முடித்து, இருந்த குழந்தைகளோடு தலைநிமிர்ந்த வாழ்வும் சூடி வாழ்ந்தது அவர் கதை.
தாயாவும், பழனியும், லட்சுமியும், மாரம்மாளும் நம்மோடுதான் பயணிக்கிறார்கள் ஆனால் வேறு வேறு பெண்களாக. அவர்கள் சீதையும், கண்ணகியும், ஐஸ்வர்யாராயும், ரஞ்சிதாவும் அல்ல, அவர்கள் வேறு பெண்கள்.
______________________________________
இந்தப் பெண்களின் பிரச்சினைகள் பற்றிய அக்கறை பெண்ணியம் போற்றும் பெரும்பாலான அமைப்புகளுக்கும் கூட இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் நமது சமூகங்களில் கடந்த காலங்களில் பங்குபெற்ற, கவனித்து வந்த மகளிர் தினக் கொண்டாட்டங்கள் பலவற்றிலும் இவர்களுக்கான குரல்களும், இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேவையான முகங்களும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்றே உணர்கின்றேன். வெள்ளைக்காலர் வேலைகளை எட்டிப்பிடித்திருக்கிற பெண்களுக்கு அவரவர் பணிபுரிகின்ற வேலைசார்ந்த சங்கங்களேனும் அவர்கள் பணியிடங்களில் பெண் என்ற ரீதியில் பாதிக்கப்படுகிறபோது கொஞ்சமேனும் குரல்கொடுக்க முன்வருகின்றன. இயன்றால் நீதிமன்றங்களுக்கும், ஊடகங்களுக்கும் கூட எடுத்துச்செல்ல முடிகின்றன.
ஆனால் உடல் உழைப்பை மட்டுமே நம்பி, பொருளாதாரத்தின் ஆகக் குறைந்த அடுக்குகளில் வாழும் பெண்களுக்கு அவர்களின் பணி சார்ந்து நடக்கிற எத்தகைய வன்முறைகளாயினும் அவை வெளியுலகுக்குத் தெரியவராமலே முடிந்து விடுகின்றன. புகார் கொடுக்கக் காவல் நிலையம் போனால் அங்கே இன்னொரு முறை அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. பாதிப்பை ஏற்படுத்தியவர்கள், சட்டப்படி மரணதண்டனை வரை பெற வேண்டிய குற்றவாளிகள் என்றாலும் கூட ஒரு வட்டச் செயலாளர் பெயரையோ, எம். எல். ஏவின், எம். பி யின், மந்திரியின் பெயரைச் சொல்லி சமூகத்தில் சகல செல்வாக்கோடும் உலவ முடிகிற கொடுமை நமக்கே உரித்தான “சட்டத்தின் ஆட்சியின்” லட்சணம்.
இத்தனை கண்ணிகளும் தங்களைச் சுற்றி வேடன் விரித்திருக்கும் வலைகளாகப் பரவிக்கிடக்கிற ஒரு சூழலில்தான் தாயாவும், பழனியும், மாரம்மாக்களும் வாழ்ந்து வருகிறார்கள். வெயிலிலும், காற்றிலும், மழையிலும் உழைத்துக் காப்புக் காய்த்துக் கன்னிப்போன தோல்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் அவர்களின் உயிரை ஒட்ட வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது அவர்களிடம் இருக்கும் நெஞ்சுரம் மட்டும்தான். வாழ்வு தொண்டை வரளும் அவர்களின் தாகத்துக்கான நீரை ஒரு உச்சி மலையில் வைத்திருக்கிறது. ஒரு நைந்துபோன தொங்கும் கயிறு கொண்டே அவர்கள் மலையேற வேண்டும், அதுவும் எந்த நேரத்திலும் அறுந்து சாகடிக்கலாம்.
அப்படியொரு நிலையிலும் தளராது சுமந்திருக்கும் அவர்களின் உறுதி எனக்கு நிறையக் கற்றுத் தந்திருக்கிறது. அந்த அவர்களின் வலிகளையோ வாழ்வையோ நாம் இலக்கியத்தில் எழுத வேண்டும். கலைகளில் காட்சிப்படுத்த வேண்டும், ஆவணங்களாகப் பதிவு செய்யவேண்டும். அது நமது வாழ்வின் சாட்சியாய், வரலாற்றின் படித் தடங்களாய் தலைமுறை தாண்டியும் சிந்திக்க வைக்க வேண்டும். எழுதவும், பேசவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிற பெண்களுக்கு இந்தக் கடமை நிச்சயம் இருக்கிறது என்பதை உணர்கிறேன்.
அரை நூற்றாண்டுக்கும் மேலான பெண்ணுரிமைப் போராட்டங்களின் பயன் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பெண்கள் தங்களின் உரிமைகளை உணர்ந்திருக்கிறார்கள். அரசாங்கங்கள் பெண் மீதான பாலியல் வன்முறையைக் கடுமையான சட்டங்கள் கொண்டு ஒடுக்கி வருகின்றன. ஆனால் நமக்கு இன்னும் அவை சாத்தியமாகவில்லை. இங்கே தன்னந்தனியாக ஒரு பெண்ணாகச் செய்ய முடிகிற பயணங்களை, வேலைகளை நாம் நம் அமைப்பில் ஒரு ஆண் துணையில்லாமல் செய்வது பகீரதப் பிரயத்தனமாக இருக்கிறது.
ஒரு வெளியூருக்குப் போய் விட்டுத் தனியாக ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்குவதற்கான சுதந்திரத்தையோ, பாதுகாப்பையோ கூட நாம் இன்னும் எட்டிப் பிடிக்காமல் இருக்கிறோம் என்பதையெல்லாம்தான் மகளிர் தினத்தில் நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் செய்தித் தாள்களில் பார்த்த மகளிர் தினக் கொண்டாட்டப் புகைப்படங்களில் கனிமொழியும், சுதா ரகுநாதனும் சிரிப்பதைத் தாண்டி நமது நிதர்சனங்கள் குறித்த கவலைகள் பேசப்படுவதில்லை. பல பத்திரிக்கைகள் செய்யாத, கவனிக்காத பக்கத்தைக் கையிலெடுத்து வித்தியாசமான மகளிர் தினத்தைத் தன் வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக “வினவு” க்கு நன்றி.
நமது பெண் விடுதலையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நமது சமூக அமைப்பை உள்வாங்கவேண்டும். பெண்களே என்றாலும் எல்லோரின் பிரச்சினைகளும் ஒன்றல்ல. அது பொருளாதாரம் சார்ந்த மேல்தட்டு, நடுத்தரவர்க்கம், கீழ்த்தட்டு என்றுகூடப் பிரித்துவிட எளிதானது அல்ல. படித்த, படிக்காத பெண்கள் என்று வகைப்படுத்திவிட முடியக்கூடியதும் அல்ல.
சாதி………ஆமாம், சாதி சார்ந்தும் பெண்களின் பிரச்சினைகள் வேறுபட்டுக் கிடக்கின்றன நம் சமூகத்தில். உயர்சாதிப் பெண்களின் விடுதலை ஆணாதிக்கத்தின் பிடிகளில் இருந்து விடுபடுவதாக இருக்கிறது. ஒரு தலித் பெண்ணின் விடுதலை என்பது ஆணாதிக்கத்தின் பிடிகளில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல, இன்னொரு பெண்ணிடமிருந்தே சாதி அடக்குமுறைக்கெதிராக விடுதலை அடைவதாகவும் அது இருக்கிறது. தலைநோவு, கைகால் குடைச்சல் வியாதியும், மூச்சுவிடவே ஆக்சிஜன் வேண்டியிருப்பதும் ஒரே பிரச்சினை அல்ல. எனவே பெண்கள் சமத்துவம் பற்றிப் பேசினால் அதில் தாயாவும், பழனியும், மாரம்மாளும் கூடப் பேசப்படவேண்டும். ஏனென்றால் அவர்கள் வேறு பெண்கள்.
___________________________________________
– செல்வநாயகி.
அவரது வலைப்பூ முகவரி: http://selvanayaki.blogspot.com/
________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
உயர்சாதிப் பெண்களின் விடுதலை ஆணாதிக்கத்தின் பிடிகளில் இருந்து விடுபடுவதாக இருக்கிறது. ஒரு தலித் பெண்ணின் விடுதலை என்பது ஆணாதிக்கத்தின் பிடிகளில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல, இன்னொரு பெண்ணிடமிருந்தே சாதி அடக்குமுறைக்கெதிராக விடுதலை அடைவதாகவும் அது இருக்கிறது
நேர்த்தியான வரிகள். வாழ்த்துகள்.
மிகவும் அருமை செல்வநாயகி, எவ்வளவு அழகா தீர்க்கமா அழுத்தமா எழுதியிருக்கீங்க.!!.இரண்டு மூன்று முறை வாசித்துவிட்டேன். அந்த வேறு வகை பெண்களை சந்தித்திருந்தாலும் அவர்களைப் பற்றி பெரிதாக என்ன சிந்தித்திருக்கிறேன் என்ற எண்ணம் என்னை குற்றவுணர்ச்சிக்கு தள்ளுகிறது.
”ஒரு தலித் பெண்ணின் விடுதலை என்பது ஆணாதிக்கத்தின் பிடிகளில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல, இன்னொரு பெண்ணிடமிருந்தே சாதி அடக்குமுறைக்கெதிராக விடுதலை அடைவதாகவும் அது இருக்கிறது.”
அவசியம் கவனிக்கப்பட வேண்டிய கட்டுரை. வாழ்த்துக்கள்
//இத்தனை கண்ணிகளும் தங்களைச் சுற்றி வேடன் விரித்திருக்கும் வலைகளாகப் பரவிக்கிடக்கிற ஒரு சூழலில்தான் தாயாவும், பழனியும், மாரம்மாக்களும் வாழ்ந்து வருகிறார்கள்//
நெஞ்சில் அறையும் வரிகள்.
செல்வநாயகியின் கட்டுரைகளுக்கென்றே இடுக்கின்ற நேர்த்தி இதிலும் தொடர்கின்றது.
மிக அருமையான பதிவு. உண்மையில் ஒவ்வொருவரும் உணர வேண்டியது.
அற்புதம் செல்வவாயகி. பார்வைகளை அகலப்படுத்தி இருக்கிறீர்கள். //அவர்கள் மகளிர் தினத்துக்கு எந்த மேடையிலும் வராதவர்கள், எந்த ஊடகத்திலும் எழுதாதவர்கள், புரட்சியை அறியாதவர்கள்; ஆனால் தன்னளவில் வாழ்வை வைராக்கியத்தோடு ஒரு போராட்டமாக நடத்தியவர்கள். வறட்டுக்கரை மணலில் நான் ஆடோட்டித் திரிந்த காலத்திலிருந்து என்னால் கவனிக்கப்பட்டவர்கள்; என் தோல்விகளின் விரக்தியில், கனவுகளில் வந்து கைபிடித்துத் தூக்கிவிட்டவர்கள்; வாழ்வு என்பது துணிச்சலிலும், நேர்மையிலும் உள்ளதென்று உணரவைத்தவர்கள் அந்தப் பெண்கள்.// மகளிர் தினம் இவர்களுக்காகத் தான். வெட்கப்பட வைத்து விட்டீர்கள். கவிதை என்னவோ செய்கிறது.
நான் கவனிக்க தவறியவற்றை கவனிக்க வைத்த தோழமைக்கு வெட்கத்துடன் நன்றிகள்.
///இலைதழை அடைத்த வாசல்சந்துகளின் வழி,…………..
………………
அவள் கருப்பை முட்டை வெடித்துச் சிதறும் உதிரம்
///
ரத்த வியர்வையின் வரிகள்.
//இந்தப் பெண்களின் பிரச்சினைகள் பற்றிய அக்கறை பெண்ணியம் போற்றும் பெரும்பாலான அமைப்புகளுக்கும் கூட இருக்கிறதா என்பது சந்தேகம்தான்//
செல்வா
அக்கறை அப்புறம் தானே..முதல்ல இந்தப் பிரச்சனைகளைப் பற்றி அவர்களுக்கு தெரிந்து கூட இருக்காது…
எப்போதும் போல சலிப்பு தட்டாத வரிகள்..
எழுதவும் பேசவும் வாய்ப்பு கிடைத்த பெண்கள் தன் குடும்ப பெருமையும், தற்பெருமையும் மட்டுமே பேசாமல் அதற்கப்பால் சமகால பெண்டிரின் நிலையை பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்….
ஊர்விட்டு ஊர் போய் தனியாக இருந்து பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஒரு பெண்ணாக சொல்கிறேன்…படித்தவளாய் இருந்தும்..பேச வாய்ப்புகள் இருந்தும் பல விஷயங்களை எதனாலயோ நான் சொல்லாமல் இருந்திருக்கிறேன்…எந்த உணர்வு என்னை தடுத்தது….யாரை கண்டு அஞ்சி நான் வாய் மூடி இருந்தேன்…பணி புரிந்த கல்லூரியில் மகளிர் தினத்தன்று உடல்நிலை சரியில்லாத போதும், மேலதிகாரிகளின் (ஆண்/ பெண் இரு பாலாரும்) கண்டிப்புக்கு ஆளாகி முன்னிருந்து நடத்த வேண்டிய சூழ்நிலையில் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் பெண் சுதந்திரத்தை பற்றி பேசிய அதிகாரிகளுக்கு மாலை போட்டு வரவேற்று வாழ்த்துச் சொன்னேன்….விழாவில் நடந்த ஒரு சிறு குழப்பத்தால் கோபமடைந்த ஒரு பெண் மேலதிகாரி, உங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கனும் என்று சொன்ன போது…ஒன்றும் பேச முடியாமல் துறையை மாற்றி வேறு துறைக்குத் தான் செல்ல முடிந்தே ஒழிய, பேசிய பெண் தெய்வம் செய்த, செய்து கொண்டிருக்கிற தவறை உணரச்செய்ய முடியவில்லை…
உங்கள் எழுத்தை படித்தால் எழுத வேண்டும் என்ற ஆசை வருவதை தடுக்க முடியாது… நன்றி செல்வா
//இத்தனை கண்ணிகளும் தங்களைச் சுற்றி வேடன் விரித்திருக்கும் வலைகளாகப் பரவிக்கிடக்கிற ஒரு சூழலில்தான் தாயாவும், பழனியும், மாரம்மாக்களும் வாழ்ந்து வருகிறார்கள். வெயிலிலும், காற்றிலும், மழையிலும் உழைத்துக் காப்புக் காய்த்துக் கன்னிப்போன தோல்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் அவர்களின் உயிரை ஒட்ட வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது அவர்களிடம் இருக்கும் நெஞ்சுரம் மட்டும்தான். வாழ்வு தொண்டை வரளும் அவர்களின் தாகத்துக்கான நீரை ஒரு உச்சி மலையில் வைத்திருக்கிறது. ஒரு நைந்துபோன தொங்கும் கயிறு கொண்டே அவர்கள் மலையேற வேண்டும், அதுவும் எந்த நேரத்திலும் அறுந்து சாகடிக்கலாம்.//
மார்ச் 8 கட்டுரைகள் அனைத்தையும் தொடர் கட்டுரைகளாக பலருக்கும் மின் கடிதத்தில் அனுப்பி வருகிறேன். இந்தக் கட்டுரை அவர்களது சமூகக் கண்ணோட்டத்தை தலைகீழாக புரட்டி போடும் வகையில் உள்ளது.
இந்தக் கட்டுரை குறிப்பிடும் பெண்களைப் போல சிலரை சந்தித்திருக்கிறேன். அவர்களை ஒருமுறை மீண்டும் என் மனதில் ஓட விட்டுக் கொண்டேன்.
சொல்ல மறந்துவிட்டேன், அத்தகைய பெண்களில் ஒருத்தியாக, எனது சமூகச் செயல்பாடுகளுக்கும், சுயமரியாதைக்கும் முன்னுதாரமாக எனது தாயும் இருந்திருக்கிறாள்/இருக்கிறாள்.
அவளுக்கும் புரட்சி, முற்போக்கு என்பதெல்லாம் தெரியாது. ஆனால், நான் அவற்றை தெரிந்து கொள்வதற்கு அவள்தான் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாள்.
நாயிலும் கேடாக நமது பெண்கள் வதை பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் ,அதைப்பற்றி கொஞ்சமும்யோசிக்காமல் வேறு ஏதோ எழுதிக்கொண்டும்,பேசிக்கொண்டும் இருக்கிறோம்.வெட்கமாக இருக்கிறது.
Approached in a very different angle … so long i was away from not only these womens day celebrations ..but also the blogs culture.. changed my idea about blogs. tears in eyes when we read (live) the life of all the women mentioned in this blogs.. very happy selva nayaki
நீங்கள் குறிப்பிட்ட அந்த வேறு வகைப்பெண்களை நானும் அதிகம் சந்தித்ததும், அவர்கள் வாழ்க்கை முறை
அதிகம் பாதித்ததன் காரணமோ என்னமோ, எனக்கு இந்தப் பெண்கள் தினம் கொண்டாட்டம் போதெல்லாம் அவர்கள்
வாழ்க்கை முறைமைதான் ஞாபகத்திற்கு வந்துவிட்டுப் போகும்.அதிகபட்சம் இவர்களுக்கு இன்று இன்னதற்கான தினம் என்று கூட தெரியாமல் போயிருக்கலாம்.
இந்த வருடம் மகளிர் தினமன்று ட்ரெயினில் ஒரு சம்பவம், இரு பெண்களுக்கிடையே.. வாழைப்பழம் விற்கும் பெண்ணிக்கும், அதை வாங்கும் பெண்ணுக்கும்.
பேரம் படியாததால் கடைசியாய் வாங்கும் பெண் சொன்னது, உங்களையெல்லாம் ரயில்வே போலீஸ் கிட்ட மாட்டிவிடனும் என்பதாக இருந்தது. அதற்கு வியாபார
பெண்ணின் கூற்று, ஏண்டியம்மா, சொல்லமாட்ட, என்ன மாதிரி நாலு ட்ரெயின் ஏறி வேர்த்து விறுவிறுத்தவ கிட்ட தான் இந்த ரூல்ஸ் பேசுவ, இதே வேற எங்கயாவது
உன்ன பேச சொல்லு பார்ப்போம்., பார்த்தும் பாக்காதது மாதிரி போவ …. என்பதாக இருந்தது.
அந்த வியாபார பெண்மணி சொன்னதில் எத்தனை சதவீதம் உண்மை என்பது அங்கிருந்த அத்தனை பேருக்கும் தெரியும். அதிகபட்ச வாயடிகள் காய்கறி பேரத்தோடு நின்றுவிடுகிறது 🙁
உங்களின் இந்த இடுகை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சொல்லப்போனால் உங்களின் கருத்துகளோடு என் கருத்துக்கள் நிறைய ஒருமித்ததாக இருக்கிறது.
//இந்த வருடம் மகளிர் தினமன்று ட்ரெயினில் ஒரு சம்பவம், இரு பெண்களுக்கிடையே.. வாழைப்பழம் விற்கும் பெண்ணிக்கும், அதை வாங்கும் பெண்ணுக்கும்.
பேரம் படியாததால் கடைசியாய் வாங்கும் பெண் சொன்னது, உங்களையெல்லாம் ரயில்வே போலீஸ் கிட்ட மாட்டிவிடனும் என்பதாக இருந்தது. அதற்கு வியாபார
பெண்ணின் கூற்று, ஏண்டியம்மா, சொல்லமாட்ட, என்ன மாதிரி நாலு ட்ரெயின் ஏறி வேர்த்து விறுவிறுத்தவ கிட்ட தான் இந்த ரூல்ஸ் பேசுவ, இதே வேற எங்கயாவது
உன்ன பேச சொல்லு பார்ப்போம்., பார்த்தும் பாக்காதது மாதிரி போவ …. என்பதாக இருந்தது.//
சர்தா,
உஙக்ளது மொழி நடை வெகு இயல்பாக உள்ளதே. ரயிலில் கேட்ட உரையாடலை நேரில் கேட்டது போல உணர வைக்கும் வகையில் இங்கு எழுதியுள்ளீர்கள். வினவுக்கு நீங்களும் கட்டுரை எழுதலாமே?
பல உண்மைகளை முகத்திலறைகின்றது இந்தக் கட்டுரை. நீங்கள் குறிப்பிட்டது போல, ஆடோட்டிக் கொண்டிருந்த காலத்திலிருந்து இன்று வரை மனம் துவளும் போதெல்லாம கை கொடுக்க வருபவர்கள் பெரும்பான்மையினரால் கவனிக்கப்படாத இந்த “வேறு பெண்கள்” தான்.
சிறப்பான கட்டுரைக்கு செல்வநாயகிக்கும் அதற்கு தளம் அமைத்துக் கொடுத்த வினவிற்கும் வாழ்த்துக்கள்..
//கிராமங்கள் தேசத்தின் முதுகெலும்போ, கலாச்சாரத்தின் தொல்லியல்போ மட்டுமல்ல. கிராமங்களின் வேர்கள் சாதிப் புற்றுநோய்க் கிருமிகளின் வெகுநல்ல தங்குமிடங்களும் கூட//
கிராமங்களை தமிழ் சினிமாவில் மட்டுமோ அல்லது எப்பொழுதாவது உறவினர் வீடுகளுக்கு சென்று தங்கிவிட்டோ வரும் “காமன்மேன்”கள், கிராமத்து சூழ்நிலையை சிலாகிக்கும் பொழுது நான் மேற்குறிப்பிட்ட வாசகங்களை தவறாமல் குறிப்பிடுவது உண்டு.
என் உறவுகளும் சம்பதபட்டதலோ என்னவோ என்னை மிகவும் பாதித்த கட்டுரை.நீங்கள் ஏன் இந்த அவசியமான பெண்கள் பற்றி தொடறகூடாது? எனக்கு என்னவோ நீங்கள் தொடரவேண்டியது மிக மிக அவசியமானது என்றே தோன்றுகிறது..சிறப்பான கட்டுரை வாழ்த்துக்கள் .
அருமை செல்வநாயகி!
அன்பின் செல்வநாயகி, உங்களது கட்டுரை சரியான சேதி தாங்கி வந்துள்ளது. நன்றிகள். இந்த மகளிர் குறித்த விவரமான, சொல் கதையாடல்களுக்கு அப்பால் இருக்கும் இவர்களது வாழ்வை உங்களால் பதிவு செய்து பொது பார்வைக்கு வைக்க இயலும் என்று தோன்றுகின்றது. தயவு செய்து இத்தகைய கட்டுரைகளை தொடர்ந்து எழுதுமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்.
மீண்டும் நன்றிகள்.
ஆனால் உடல் உழைப்பை மட்டுமே நம்பி, பொருளாதாரத்தின் ஆகக் குறைந்த அடுக்குகளில் வாழும் பெண்களுக்கு அவர்களின் பணி சார்ந்து நடக்கிற எத்தகைய வன்முறைகளாயினும் அவை வெளியுலகுக்குத் தெரியவராமலே முடிந்து விடுகின்றன.” நந்தினி வாழ்த்துக்கள் நல்லக் கட்டுரை.
செல்வநாயகி , இந்த வேற பெண்கள் சொல்லும் செய்திகளை முன்னிறுத்தி அருமையான கட்டுரை த்ந்திருக்கீங்க..முடிவுகளை அவர்களூக்காக யாரோ எடுக்காமல் அவர்களே எடுக்கத்துணிந்த விதம் அவர்களை வேற பெண்களாக தனியா காண்பித்திருக்கிறது.
முடிவில் அழகாகச் சொன்னீங்க..
செல்வநாயகி,
தெளிவான கருத்துக்களை பதிந்திருக்கிறீர்கள் –
‘எனவே பெண்கள் சமத்துவம் பற்றிப் பேசினால் அதில் தாயாவும், பழனியும், மாரம்மாளும் கூடப் பேசப்படவேண்டும். ஏனென்றால் அவர்கள் வேறு பெண்கள்.’
நிச்சயம் பேசப்பட வேண்டியவர்கள் இவர்கள், அது மட்டுமல்ல மற்றவர்களுக்கு பாடமாகவும் இருப்பவர்கள்!
அழுத்தமான பதிவுக்கு நன்றி!
வாசித்த, மறுமொழியிட்டிருக்கிற நண்பர்களுக்கு நன்றி. மேலும் இத்தகு தளங்களில் செயல்படுவதற்கான தூண்டுதல்களாக உங்களின் கருத்துக்களை எடுத்துக்கொள்கிறேன்.
தங்கள் கவிதையே எழுத்தின் தனித்துவத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. ஒரு கூர்மையான அவதானிப்பிலிருந்து உருவான கவிதை என்பது தெளிவாகப் புலப்படுகிறது… தங்கள் கட்டுரை ஆழமானதும், நேர்மையானதுமான ஒரு சுய விசாரணையாகவும், சமூக விசாரணையாகவும் உள்ளது. நீங்கள் அறிமுகப்படுத்திய ஒவ்வொரு பெண்ணும் மனக்கண்ணில் நிமிர்ந்து நிற்கிறார்கள்… இந்த வேறு பெண்கள் யாரும் ‘மாபெரும் பெண்ணியப் போராளிகள்’ எனத் தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக் கொள்வதில்லை.. ஆனால், இவர்களிடமிருந்து தான் பெண் விடுதலைக்கான யதார்த்தமான போராட்ட வழிமுறைகளை நாம் கற்றுக் கொள்ள முடியும். ஆழமான எழுத்துக்கு நன்றி.
அருமை, எப்படி சாதியை அழிப்பது . அது பற்றி உங்களின் பார்வை என்ன ?
கல்வி ஒன்றுதான் சிறந்த வழி. ஒருகாலத்தில் தாழ்த்தப்பட்டோர் இன்று தலைநிமிர்ந்து நிற்பதும், தாழ்த்தியோன் அவர்கள் முன் பணிந்து நிற்பதும் இந்த கல்வியும் கல்வியின் ஊடான தொழில் தகமைகளுமே ஆகும்.
உங்க எழுத்துக்கு என்ன சொல்லமுடியும் செல்வநாயகி, மறுபடியும் படிக்கணும். அருமை
கட்டுரை அருமை….,
சுயவிமர்சனத்துடன் தொடங்கிய கட்டுரை, இதுவரை யாரும் பேசாத…. யாரும் காட்டாத…. சேற்றுக்கடியில் புதைந்துக் கிடக்கும் – முகவரிகளற்ற அந்த முகங்களுக்கு ஒரு முகவுரை தருகிறது. அடித்தட்டு மக்களை – உழைக்கும் பெண்களைத் தொடாமல் பெண்ணியம் பேச முடியாது.
வினவில் பெண்ணியம் பேசியக் கட்டுரைகளிலேயே நெஞ்சை வருடிய பதிவாக இக்கட்டுரை விளங்குகிறது.
இது ஏதோ உணர்ச்சிபூர்வமானது மட்டுமல்ல…. உண்மை யதார்த்தமும் கூட.
செல்வநாயகிக்கு வாழ்த்துக்கள்.
/////உறவினர் ஒருவரிடம் தானே சென்று “என் வாழ்வுக்கு ஒரு ஆண் தேவை, நீ என்னைக் கல்யாணம் செய்துகொள்ள விருப்பமா?” எனக் கேட்டு மணமும் முடித்து, இருந்த குழந்தைகளோடு தலைநிமிர்ந்த வாழ்வும் சூடி வாழ்ந்தது அவர் கதை.தாயாவும், பழனியும், லட்சுமியும், மாரம்மாளும் நம்மோடுதான் பயணிக்கிறார்கள் ஆனால் வேறு வேறு பெண்களாக. அவர்கள் சீதையும், கண்ணகியும், ஐஸ்வர்யாராயும், ரஞ்சிதாவும் அல்ல, அவர்கள் வேறு பெண்கள்////////
கட்டுரை அருமை.
சீதையும், கண்ணகியும், ஐஸ்வர்யாராயும், ரஞ்சிதாவும் கூட இந்த கேடுகெட்ட சமூகத்தின் விளைவுகள் இல்லையா?
விடியட்டும் என்று விழித்திருக்கும் போதே விடிந்திரும் ஆனால் விடியாத வாழ்க்கையில் போராடும் பறைச்சி மனித இனமாகவே பார்க்கபடுவதில்லை.சின்னமடுப் பறையர் நினைவில் வந்து போகும் நிமிடம் நன் விரித்துப் போகிறேன்.
நளவர் வீட்டுப் பெண்களும் முக்குவர் வீட்டுப் பெண்களும் பார்க்க நல்லாக் இருப்பர் என நண்பன்
சொன்னான் நான் நடுங்கிப் போனேன்.இப்போதுதான் பெண்ணகளை மதிக்கும் புதிய நண்பனை பார்க்கிறேன்.
உழைக்கும் பெண்கள் தங்கள் கலகக் குரலை ஓங்கி எழுப்ப வேண்டிய நாளில், வாழ்வை அதன் உயர்வடிவங்களில் நுகரும் பெண்கள் அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றியிருப்பது நாம் செல்லவிருக்கும் தூரத்தை உணர்த்தும் குறியீடாகவே கருதுகிறேன்.
உழைக்கும் பெண்களைப்பற்றி அவர்களின் தீரம் பற்றி அனைவரும் எழுதவேண்டும்.
செங்கொடி
‘இந்த எழுத்துக்கள்’ இன்னும் அதிக வெளிச்சத்துக்கு வரணுமே என்ற ஆவல் ஒவ்வொரு முறை உங்கள் எழுத்தை வாசிக்கும்போதும ஏற்படுவதைத் தடுக்க முடியவிலையே …
beautiful!
அருமையான பதிவு, உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்.
அருமையான பதிவு, உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்
மிக அருமையான பதிவு
உங்கள் எழுத்திற்கு எனது வழக்கமான வணக்கங்கள்.
அதன்பின் உள்ள ஆழத்திற்கு என் பாராட்டுகள்.
அத்தி பூத்திருக்கிறது.
திடீரென்று பூத்த குறிஞ்சிப் பூ.