முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்!!

உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்!!

-


vote-012திருவண்ணாமலையை சேர்ந்த 108 ஆம்புலன்ஸில் ஓட்டுனராக பணிபுரியும் ஏழுமலை, தனது வேலையிலிருந்து நீக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் கருணைக்காக படி ஏறி இறங்கி அலைந்துகொண்டிருக்கிறார். இவர் செய்த குற்றம்தான் என்ன? முதலாளிகளுக்கே பிடிக்காத சம்பள உயர்வு கேட்டதுதான்.

வேலைக்கு சேர்ந்தபோது ஒவ்வொரு ஆண்டுக்கும் சம்பள உயர்வு உண்டு என்று நிர்வாகம் கூறியதை நம்பி ஒன்றரை ஆண்டாகியும் சம்பள உயர்வு தரவில்லையே என்று தலைமை அலுவலகத்தில் கேட்க “அதெல்லாம் கிடையாது. இஷ்டம் இருந்தா இருங்க. இல்லைன்னா வேலையைவிட்டு போங்க” என்ற பதிலால் விரக்கதியடைந்தார்.

கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் இது எனபதால் இந்த மாவட்டத்திலுள்ள ஓட்டுனர்களை திமுகவின் அடிப்படை உறுப்பினராக ஒன்று சேர்த்து  முதல்வரிடம் மனுக்கொடுப்போம் என்று திட்டமிட்டார். அவ்வாறு 22 ஓட்டுனர்களையும் திமுகவில் இணைத்தும்விட்டார்.

“நாம் காசைக்கொட்டி முதல்போட்டு தொழில் தொடங்கி இவனுங்களுக்கு வேலை கொடுத்தால் நம்மையே கேள்வி கேட்குறானுங்க” என்று முதலாளிகள் கோபப்படும் படும்போது, சங்கம் கட்டுறோம், மனுக் கொடுக்கிறோம்னு கிளம்பினால் முதல் போட்டவன் சும்மா இருக்க முடியமா?

திருவண்ணாமலைக்கு துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தபோது அவரிடம் மனுக்கொடுத்த குற்றத்திற்காக ஏழுமலைக்கு வேலை போய்விட்டது.

மற்ற ஓட்டுனர்களெல்லாம் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்ததால் அம்மாவட்டத்தின் நிர்வாக அதிகாரி EO( Executive Officer)  அறிவுக்கரசு அனைவரையும் தனித்தனியாக “வேலையைவிட்டு தூக்கிடுவோம்” என்று மிரட்டியிருக்கிறார்.

_____________________________________________

இந்த ஓட்டுனர்களது கோரிக்கையையின் நியாயத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவர்களின் தொழிலைப் பற்றியும் சம்பளம் பறறியும் நாம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும்.

“குட்மார்னிங். திருவாடானை EMT – ங்களா?

குட்மார்னிங். ஆமாம்.

கேஸ் (case) –ல இருக்குறீங்களா?

இல்லை. Free –யா இருக்கிறோம்.

ஓகே! திருவாடானை தாலுகா.

ஓகே.

வலசைப்பட்டினம்

ஓகே

கிழக்குத்தெரு

ஓகே

அரசு தொடக்கப் பள்ளிக்கு அருகில்

ஓகே

Caller name (அழைத்துள்ளவர் பெயர்) அறிவழகன்

ஓகே

Phone number (தொலைபேசி எண்) 9487985126

ஓகே

ID number ( case ID number) 8745674

ஓகே. புறப்பட்டுடோம்.”

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள கஸதூரிபாய் காந்தி பிரசவ மற்றும் குழந்தைகள் மருத்துவமனை  கட்டிடவளாகத்தின் ஒரு பகுதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் GVK EMRI ( GVK Emergency management Research institute) செயலகத்தின் செய்தி அனுப்பும் பிரிவிலிருந்து (dispatch section) வரும் செய்தியை செல்பேசியில் பேசிக்கொண்டே தகவல் வந்த நேரத்தையும் சேர்த்து மளமளவென்று குறிப்பேட்டில் குறித்துக்கொள்கின்றனர் இந்த EMT (Emergency Medical Technician) எனப்படும்  ஆம்புலன்ஸ் வண்டியின் மருத்துவ உதவியாளர்கள்.

அடுத்த கணம் வண்டியை நகர்த்திக்கொண்டே ஆம்புலன்ஸ் உதவி கேட்டவரின் தொலைபேசிக்கு தொடர்புகொண்டு “108 புறப்பட்டு வந்துகொண்டு இருக்கிறது. இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவோம். (பெரும்பாலும் அரை மணி நேரத்தில் சென்றடையக்கூடிய வகையிலேயே 108ன் வாகனங்கள் 30கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒன்று என நிறுத்தப்பட்டுள்ளன) உங்கள் தொலைபேசியை ஸ்விட்ச்ஆஃப் (switch-off) செய்துவிடாதீர்கள். பிஸியாக வைத்திருக்காதீர்கள்” என்ற தகவலை சொல்லிவிட்டு ‘சைரன் ஒலிக்க’ செயலில் சுறுசுறுப்பையும் மனதில் நிதானத்தையும் கொண்டு விரைந்திடும் இவர்களின் சேவை வெறுமனே சொற்களால் மட்டும் பாராட்டக் கூடியதாக இல்லை.

விபத்து அல்லது நோயாளியின் இடத்தை அடைந்ததும் மளமளவென்று இறங்கி ஸ்ட்ரெச்சரை எடுத்து பாதிக்கப்பட்டவர்களை வண்டியில் ஏற்றி புறப்படும்வரை  அவர்கள் அங்கிருப்போரின் மனநிலையை சமாளிப்பது ஒரு நெருக்கடியாகவே உள்ளது. நோயாளிக்குத் தகுந்தவாறான அமைப்பில் ஸ்ட்ரெச்சர் அல்லது தள்ளு வண்டியைப் பயன்படுத்தி மேலும் பாதிப்பு உண்டாகாத நிலையில் நோயாளியை ஏற்றுவதற்குள் அங்கிருப்போரின் ‘எப்படியாவது சீக்கிரம் வண்டியில் ஏற்றுப்பா’ என்ற அவசர மனநிலையை சமாளித்து பின் வரும் உயிர்நிலைச் சோதனையை (Vital Test) செய்யவேண்டும். இதனடிப்படையிலேயே முதலுதவியைச் செய்ய வேண்டும் எனபதால் இது அவசியமாகும். முதலுதவி என்பதைவிட, செயலகத்திலிருந்து  தொடர்புக்கு வந்துவிடும் மருத்துவருடைய வழிகாட்டுதல்படி நோய்க்கான சிகிச்சையையே தொடங்கிவிடுகின்றனர். அதற்கான சிறப்பு பயிற்சியும் பெற்றவர்கள் இந்த EMT எனப்படுபவர்கள்.

உயிர்நிலைச் சோதனைகள்;

1. கண்விழிச் சோதனை. (Pupil Test): மயக்கமாகவோ, மூச்சு பேச்சற்றோ இருப்பவர்களின்  இமையை நீக்கி கண்ணில் டார்ச் ஒளியைசை செலுத்தி கண்விழிப் பாப்பா (Pupil) விரிந்து சுருங்குகிறதா என்று சோதிக்கவேண்டும். விரிந்து சுருங்கினால்தான் உயிர் இருப்பதாகப் பொருள்.

2. விலக்கப்படும் இரத்தம் மீளும் சோதனை (Capillary Test): விரல்நுனியில் இரத்தம் விலக அழுத்தி மீண்டும் இரத்தம் நிரம்பும் நேரத்தைக் கணக்கிடல். 2 வினாடிகளுக்குள் நிரம்பவேண்டும்.

3. நாடித்துடிப்புச் சோதனை. (Pulse rating test)

4. இரத்த அழுத்தம்  (Blood pressure) சோதனை.

5. உடலின் நீர்ச்சத்து நிலை (SpO2 saturation status)

கடைசி மூன்று சோதனைகளும் பாதிக்கப்பட்டவரை இசிஜி (ECG) எந்திரத்துடன் இணைப்பதன் மூலம் அறிந்து குறிப்பேட்டில் குறித்துக்கொள்கின்றனர்.

உயிர் இல்லை என்பது நிச்சயமாகிவிட்டால், இருதயம் நின்று 5 நிமிடத்திற்குள் இருக்கும் என்று யூகித்திருந்தால் இருதயத்தை மீண்டும் இயங்கவைக்கும் எந்திரமான De-fibrillation வசதியுள்ள ஆம்புலன்ஸ் வண்டியிலுள்ள EMT -கள்  அதனைப் பயன்படுத்தி உயிர்பிழைக்கவைக்க முயற்சிப்பர்.

அடுத்து நிறையபேர் உடன் வருகிறோம் என்று வண்டியில் ஏறுவதை சமாளிக்கவேண்டும். அதிகபட்சம் 2 பேர்களுக்கு மட்டுமே அனுமதியாம். அப்பொழுதுதான் வண்டிக்குள் வைத்து தேவையான மருத்துவ வசதிகளை செய்ய முடியும் எனகின்றனர். ஆனால் நோயாளிகளின் உறவினர்கள் பெரும்பாலும் அதற்கு ஒப்புக்கொளள்ளாமல் நான்கைந்து பேராக உடன் செல்லவே முயற்சிப்பார்களாம். அவர்களின் மனநிலையில் அது சரியாகப் பட்டாலும் நோயாளிக்கு அது பாதகமாகவே முடியும் என்பதால் இரு துணை நபர்களை மட்டும் ஏற்றிச் செல்வதற்கு சற்று சிரமப்படுகின்றனர்.

அடுத்ததாக மருத்துவமனையை தேர்ந்தெடுப்பதில் மூன்று விதிமுறை உள்ளன.

 1. நோயாளியின் விருப்பம்  அல்லது துணைக்கு வருபவர்களின் விருப்பம் (Attender”s Choice)
 2. அருகில் வசதியுள்ள மருத்துவமனை. EMT-ன் பரிந்துரை
 3. கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனை போதிய வசதியில்லாதபோது வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது. இதற்கு அம்மருத்துவமனை மருத்துவர் தக்க காரணத்துடன் செயலகத்திலுள்ள மருத்துவருக்கு பரிந்துரைத்து எழுதிக்கொடுக்க வேண்டும்.

நோயாளியோ, துணைக்கு வருபவர்களோ தேர்ந்தெடுக்கும் மருத்துவமனை தகுந்த வசதியில்லாததாக இருந்தால் நோய்க்கு தகுந்தவாறான மருத்துவமனைகளை EMT பரிந்துரைக்கிறார். முற்றிலும் பொருத்தமில்லாத மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்துவிடுகின்றனர்.

இதற்கிடையில் செயலகத்தின் மருத்துவரின் வழிகாட்டல் செல்லிடைபேசியில் தொடர அவருடன் தமது குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டு மருத்துவர் கூறும் சிகிச்சையை ஆரம்பித்து விடுகின்றனர்.

இவர்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமான மக்கள் பிரச்சனையை நேரில் சந்திக்கும் சற்று ஆபத்தான தொழிலில் உள்ளவர்கள். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பாதிப்புக்குள்ளானவர்களின் இடத்திற்குச் செல்லாவிட்டால் கடுமையான விளைவுகளையும் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

அதுவும் ஆளுங்கட்சிக்காரர்களின் அழைப்பு என்றால் ஆபத்து கூடுதலாகவே உள்ளது. காலதாமதத்திற்கு சாலை அமைப்பு, போக்குவரத்து இடையூறு, வண்டியில் எற்படும் பழுது போன்று ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் என்ற ஊரில் திருமணவீட்டில் லாரி ஒன்று புகுந்து பலபேர் காயமுற்றும் நான்கைந்துபேர் உயிர் கவலைக்கிடமாக இருந்தபோது அவ்வூருக்கு அருகிலுள்ள திருவாடானையின் 108,  மற்றும் தேவிபட்டினம் 108ம் வேறுநோயாளிகளுக்காக சென்றுவிட்டதால் சற்று கூடுதல் தொலைவிலுள்ள நைனார்கோவில் 108, தங்களின் வரம்புக்கு உட்படாத ஊராக இருந்தும் விபத்தினை ஏற்றுகொண்டு சென்றுள்ளனர். கூடுதல் தொலைவாக இருந்தும் அரைமணி நேரத்தில் சென்றுள்ளனர். ஆனாலும் காலதாமதமாக வந்ததாக அந்த 108 கல்லெறி தாக்குதலுக்கு உள்ளானது. திருமண விருந்தில் மப்பு கூடுதலாக இருந்த கருப்பு-சிவப்பு வேட்டிக்கரை அல்லக்கைகள் தங்கள் வீரத்தைக்காட்ட உயிர் காக்கப் போனவர்கள் உயிர்பிழைக்க தப்பி ஓடவேண்டியதாகிவிட்டது. (18-02-2010 தினகரன் நாளிதழின் மதுரைப் பதிப்பை பார்க்க)

நாளொன்றுக்கு இருமுறை வண்டியை சுத்தம் செய்வது, வண்டியிலேயே பிரசவமானால் பிரசவம் பார்த்து குழந்தையைப் பராமரிப்பது, அதனால் எற்படும் கழிவுகளை சுத்தம் செய்வது, மலம் சிறுநீர் கழித்துவிட்டால் சுத்தம் செய்வது போன்ற வேலைகளையும் இவர்களே செய்ய வேண்டும்.

எய்ட்ஸ் நோயாளியா எனபது தெரியாமல் அந்நோயாளிகள் இரத்தக் காயமுற்றிருந்தாலும் பராமரிக்க வேண்டிய அபாயமும் இவர்களுக்கு உண்டு. ஒரு நோயாளியை இவர்கள் ஏற்றுக்கொண்டால் 17 பதிவுக் குறிப்பேடுகளில் விவரங்களை இவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

தங்களின் உயிரைப் பணயம் வைத்து உணர்ச்சிபூர்வமான மனநிலையில் உள்ள மக்களுக்கு சேவைசெய்யும் இவர்களின் வாழ்க்கை அத்துக்கூலிக்கு அல்லல்படும் கொத்தடிமையாக உள்ளது.

__________________________________________________

சத்யம் EMRI ஆக இருந்து அதன் முதலாளி ராமலிங்க ராஜு மொத்தமாக சுருட்டிக்கொண்டு திவாலக்கிய பிறகு, GVK-EMRI ஆன இந்த நிறுவனம் தமிழக அரசுடன் செய்துக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் “இலாப- நட்டமற்ற சேவைக்கான ஒப்பந்தம்” (No Loss – No Profit) என்று கூறுகிறது. இப்படி கருணை உள்ளம் கொண்ட GVK- விற்கு தமிழகஅரசு ஆண்டுக்கு வழங்கும் தொகை 4200 கோடி ரூபாய்கள். அது மட்டுமல்லாது ஒரு பிரசவ சேவைக்கு 2000 ரூபாயும், பிற வகையின சேவை ஒன்றுக்கு 1500 ரூபாயும் தனி.

ஏற்கனவே தமிழக அரசு 1056 என்று இயக்கிய ஆம்புலன்ஸ் வண்டிகளை 108க்கு வழங்கப்பட்டே தமிழகத்தில் இச்சேவை தொடங்கப்பட்டது. மொத்தம் இயங்கும் வண்டிகள் 385. இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் (Portable), Nebulizer, ECG போன்ற அனைத்து வகை கருவிகளுடனான ஒரு ஆம்புலன்ஸ் வண்டியின் மதிப்பு ஏற்குறைய 15 இலட்சங்களாம். இதில் ALS  என்று அழைக்கப்படும் வண்டிகளில் இதயம் நின்ற 5 நிமிடத்திற்குள் மீண்டும் உயிரூட்டும் Automate External Defibrillator (AED) என்ற கருவியும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வகை வண்டிகள் மாவட்டத்திற்கு ஒன்று அல்லது இரண்டு, மாநகராட்சிக்கு 4 என சுமார் 50 உள்ளன.

இப்படி அனைத்து வசதிகளுடனான ஆம்புலன்ஸ் வண்டிகளையும், ஆண்டுக்கு 4200 கோடிகளையும், ஒரு கேஸ் அழைத்துச் சென்றால் அதற்கான செலவுத் தொகையையும் பெற்றுக்கொண்டு சல்லிக்காசு இலாபமில்லை என்று சத்தியம் செய்து நம்மை நம்பச்சொல்லும் GVK EMRI, 8 மணி நேரம் வேலை 16 மணிநேரம் ஓய்வு, வாரம் ஒருநாள் விடுப்பு என்று வேலைக்கு சேர்ததுவிட்டு  12மணிநேர வேலை, 12 மணிநேர ஓய்வு, வாரம் 12 மணிநேரம் மட்டுமே விடுப்பு என்று வேலைவாங்கிக்கொண்டு,  EMT (Emergency Medical Technician) கொடுக்கும் ஊதியம் பிடித்தம் போக ரூ 5571, வண்டி ஓட்டுனர்களுக்கு (Pilot)  4716.

இந்த சம்பளத்திற்குள்ளேயே போக்குவரத்துச் செலவு, மூன்றுவேளை உணவு, தங்குமிடம் இன்னும் பிறவற்றையும் செலவு செய்தது போக குடும்பத்திற்கு 2000த்திலிருந்து 2500 ரூபாய்வரை கொடுப்பதே பெரும்பாடாக உள்ளது என்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு என்று கூறிய நிர்வாகம் ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளதால் 12 மணிநேர வேலையையும் பொறுட்படுத்தாது, நிர்வாகம் வாக்களித்த சம்பள உயர்வாவது கிடைக்காதா என்று துணைமுதல்வரிடம் மனுக்கொடுக்கப்போய் ஏழுமலை இன்று வேலையை இழந்து நிற்கிறார்.

அடுத்து இலட்சக்கணக்காணோர் இந்தவேலைக்கு வரிசையில் (ரிசர்வ் பட்டாளம்) உள்ளதால் GVK-EMRI தனது எடுபிடிகளான அதிகாரிகளை வைத்து அனைவரையும்.மிரட்டுகிறது. 5500 சம்பளத்தில் கொத்தடிமைகளாக இவர்கள் பணியாற்ற, மாண்புமிகு துணைமுதல்வரோ 108 எங்கள் ஆட்சியின் சாதனை என்று பொன்னகரம் இடைத்தேர்தலில் உச்சிமோந்து வாக்காளர்களை ஏமாற்றி ஓட்டு கேட்கிறார்.

இதுதான் நவீன முதலாளித்துவக் கொத்தடிமைத்தனத்தின் தனிச்’சிறப்பு’. மக்கள் நலத்திற்காக உருவான அரசுகள் இன்று தமது சேவைகளைக்கூட முதலாளிகளுக்கு ஆதாயம் அடையும் வண்ணம் மாற்றிவிட்டனர். இத்தகையச் சுரண்டலிலிருந்து மீள்வதற்கு தி.மு.கவில் சேருவதும், மனுக் கொடுப்பதும் பலனளிக்காது என்பதை தொழிலாளிகள் இப்போது உணர்ந்திருப்பார்கள்.

முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை அதன் சமூகம் தழுவிய அளவில் புரிந்து கொண்டு வேலை செய்யும் புரட்சிகர அமைப்புக்களில் அவர்கள் அணிதிரண்டால் இந்த உயிர்காக்கும் சேவையின் முக்கியத்துவத்தை, எவருக்கும் எந்த ‘மொழி’ தேவைப்படுகிறதோ அதில் புரியவைக்கலாம்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. அருமையான படைப்பு தோழர்.சாகித், தொழிற்சங்கம் என்றாலே வெறுக்கும் வர்க்கத்தினரின் பதிவுலக சங்கம் எனும் ஒரு கூழ்முட்டை தொடர்பான பதிவுகளால் நிரம்பி வழிந்த தமிழ்மணத்தில் , இரண்டுநாளாய் வினவில் யாருக்கெல்லாம் தொழிற்சங்கம்  தேவை, அது ஏன் என்பதை விளக்கும் பதிவுகள் வந்துகொண்டிருப்பது கண்கள் பனிந்து இதயம் இனிக்கின்றது 😉

  • ஹ.. இதை கவனிக்கலையே நான்..
   அது என்ன பதிவுலக சங்கம்?
   பதிவு மிக நேர்த்தியாக இருக்கிறது.. சமீபமாக கலைஞர் அறிவித்துள்ள திட்டங்களில் ( உம் – 108 , காப்பிடு ) தனியார்கள் நலம் பெரும் வகையில் தான் உள்ளது.

 2. சிறந்த பதிவு. எதிர்காலத்தில் “தனக்காக எதையும் கெடுப்பான் கருணாநிதி” என்ற பழமொழி தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருக்கும்.

 3. /// மக்கள் நலத்திற்காக உருவான அரசுகள் இன்று தமது சேவைகளைக்கூட முதலாளிகளுக்கு ஆதாயம் அடையும் வண்ணம் மாற்றிவிட்டனர்///

  இதுதான் மேட்டர்! அரசு தேவையில்லை டைரக்டா முதலாளிகளிடமே ஆட்சியை ஒப்படைத்துவிட்டால் நமக்கு வேலை மிச்சம், என்னங்க அதியமான் சார் நீங்க என்ன நினைக்கிறீங்க?

 4. அரசு/அரசு சார்பு துறைகளில் சீருடை/வெள்ளை காலர் பணிகளுக்கு சம்பளம்/சலுகைகள் வித்தியாசப்படுகிறது. 108/டாச்மேக்/காவலர்/தீயணைப்பு போன்ற கடும் உழைப்பு ஊழியர்களின் வருவாய் ஆசிரிய/அலுவலக ஊழியர்களை விட குறைவு.ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் ஆகும்வரை சம்பள உயர்வை போராடிப் பெற வாய்ப்பு குறைவு.தகுதிக்கு தான் இங்கு சம்பளம்.செய்யும் பணிக்கு இல்லை.தகுதி திறன் பெரும் வரை காத்திருந்து எங்கு வேலை கிடைத்தாலும் சென்று வருவாயை பெருக்கிக் கொள்ள வேண்டும்.

 5. கலைஞர் கருப்பு திட்டதில் இதுவும் ஒன்று. இந்த தொழிலாளர்களின் நிலையை விளக்கியதற்கு நன்றி.

    

 6. இந்த பதிவில் குறிப்பிட பட்டுள்ள தொகை தவறு. தமிழக அரசு வருடத்திற்கு 74 கோடி ருபாய் தான் ஒதுக்கி உள்ளது…4200 கோடி ருபாய் என்று பதிவாளர் எங்கு இருந்து எடுத்தார் என்று தெரியவில்லை.
  கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழக அரசு வலை பதிவில் நீங்கள் பார்க்கலாம்

  http://www.tn.gov.in/budget/budsp_2010_11_1.htm ஊழியர்களின் பிரேச்சனைகளை புரிந்து கொள்ள முடிகிறது அதற்காக செயற்கையாக இந்த வசதியை செம்மையாக நடத்தும் நிறுவனத்தை குறை கூற வேண்டாம். முழு ஆதாரத்தோடு பதியும் மறு கேட்டு கொள்கிறேன்… இதற்கு முன் அரசாங்க ஆம்புலன்ஸ் சேவை நடந்து கொண்டு தான் இருந்தது…அவர்களுக்கு அரசாங்கம் எல்லா வசதியும் செய்து கொடுத்து கொண்டு தான் இருந்தார்கள்… ஆனால் நாம் கூபிட்டு பல மணி நேரம் களைத்து தான் வருவார்கள் சில நேரம் வர கூட மாட்டார்கள்…தனியார் வசம் சென்ற பிறகு தான் நல்ல சேவை கிடைகிறது…அதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்..

 7. தனியார் துறையின் சிறப்பாக எல்லோரும் சிலாகிப்பது இந்த ‘சேவை’ பற்றிய ஒப்பீடு. இதில் பகுதி உண்மை ஒன்று இருக்கத்தான் செய்கிறது.அது அரசு ஊழியர்களாகி விட்டாலே யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்லை என்கிற மனோபாவம் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் நிலவுகிறது. உயிர் காக்கும் மருத்துவதுறையிலும் இதுவே கசப்பான உண்மை. சமூகம் இப்படிப்பட்ட வெறுப்புணர்வோடு அரசு ஊழியர்களை பார்ப்பதாலேயே ஜெயா அரசு ஊழியர்களை கடுமையாக ஒடுக்கிய பொது அவர்கள் ஜெயாவின் நடவடிக்கைகளில் வன்மமாக திருப்தியுடன் நிறைவு கண்டனர் .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க