செம்மொழி மாநாடு நடத்தி முடித்தாயிற்று. அடுத்த கட்ட மோடி மஸ்தான் வேலைகள் ஜரூராக தொடங்கிவிட்டன. சென்னை கோட்டையில் செம்மொழி தமிழாய்வு நூலக அரங்கில், அதாவது பழைய அமைச்சரவைக்கூட்ட அரங்கில் கருணாநிதியின் தலைமையில் அமைச்சர், அதிகாரிகள் கூட்டம் செம்மொழி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முடிவுகளை அமலுக்கு கொண்டுவருவது குறித்து பேசினார்களாம். என்ன பேசினார்கள்? எதை முடிவு செய்தார்கள்?
முதல் விசயமே கருணாநிதிக்கு பாராட்டுத் தீர்மானம்தான். செம்மொழி மாநாடு நடத்தியமைக்காகவும், கோட்டையில் செம்மொழி நூலகத்தை ஆரம்பித்து வைத்ததற்காகவும் முதல்வருக்கு பாராட்டு தீர்மானத்தை நிதியமைச்சர் அன்பழகன் அறிவிக்க அனைவரும் கைதட்டி வரவேற்றனர். வெளியே குத்தாட்ட நிகழ்வுகளில் ஜால்ராக்கள் பாராட்டுவது போல உள்ளேயும் சகபாடிகள் பாராட்டி அதையும் ஒருவர் அலுக்காமல் அமர்ந்து இரசிக்கின்றாரென்றால் கண்டிப்பாக இது காக்காய் மேனியாதான். போகட்டும்.
முதலில் தமிழக அரசு சார்பில் ஐந்திணை நிலவகைகளில் பாரம்பரிய மரபணு பூங்காக்கள் அமைக்கப்படுவதை குறித்து வேளாண்மை செயலாளர் பேசுகிறார். ஐந்து திணையிலும் வாழவழியில்லையென்று தமிழன் ஊர் ஊராக நாடோடியாக அலையும் காலத்தில் இந்த திணைகள் எதை வழங்கப் போகின்றன? மரபணு கத்திரிக்காயை மான்சாண்டோ கூட இணைந்து ஆய்வு செய்து சந்தைப்படுத்த விரும்பிய தமிழக அரசு பாரம்பரிய மரபணு என்று எதைக் காட்டப் போகிறது? தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகைகளை ஒழித்து, பசுமைப்புரட்சி என்ற மாய்மாலத்தின் மூலம் விவசாயத்தை மெல்ல அழித்த சதிக்கு அந்தக் காலத்தில் உதவிய விஞ்ஞானி எம்.எஸ். சாமிநாதன்தான் இந்த ஐந்திணை அக்கப்போருக்கு உதவப் போகிறாராம். நல்ல பொருத்தம்தான்.
அடுத்து இலங்கைத் தமிழரின் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதப் போகிறாராம். இதுதான் செம்மொழி தந்த இரண்டாம் தீர்மானத்தின் இலட்சணம். சிங்களக் குடியேற்றம், இராணுவக் குடியேற்றம், போராளிகள் வதைத்து கொல்லப்படுதல், முகாம்கள் தொடருதல் என்று எல்லா எழவுகளும் அமோகமாக நடந்து வரும் நிலையில் கடிதமாம் கடிதம். இதைவிட சிங்கள அரசு ஈழத்தமிழரை சித்திரவதை செய்வது எவ்வளவோ மேலென்றுதான் சொல்ல வேண்டும்.
அடுத்து மத்தியில் தமிழ் ஆட்சி மொழி பற்றிய தீர்மானம். ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தமிழை பயன்பாட்டு மொழியாக கடைபிடிக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் தெளிவாக அறிவித்து விட்டன. இப்போது இது குறித்து மீண்டும் கடிதம் எழுதி வலியுறுத்தப் போகிறார்களாம். இதைத்தான் 2006இலும் செய்தார்கள். இப்போது 2010 லும் அதே கடிதத்தை தேதியை மட்டும் மாற்றி அனுப்புவார்கள். அடுத்து 2015, 2020 ஏன் கனிமொழி மகன் ஆதித்யன் முதல் அமைச்சராக வரும்போது கூட இந்தக்கடிதம் பயன்படும். வழக்காடும் மொழியாக தமிழ் வேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்களை கைது செய்து சிறையில் அடைத்த அதே கை இப்போது கடிதம் எழுதுகிறது என்றால் குதிரைக்கு கொம்பு முளைப்பதையும் நம்பித்தான் ஆகவேண்டும்.
அடுத்த தீர்மானத்தின்படி பலகோடி வருவாயை ஈட்டி தமிழைக் கொலை செய்யும் கலைஞர் டி.வி, சன். டி.வியின் குடும்ப ஆட்சி தமிழின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடன் நிதி ஒதுக்குமாறு கோரப் போகிறதாம். பெற்று தமிழுக்கு கருமாதி செய்யலாம், செய்வார்கள்.
இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் படி கலைஞர் ஏற்கனவே எழுதிய கடிதத்தை மீண்டும் வலியுறுத்தி எழுதுவாராம். சரி, அப்படியே கல்வெட்டியல் நிறுவனம் வந்தாலும் தமிழகத்தில் இருக்கும் வரலாற்று கல்வெட்டுக்களை விட செம்மொழி கண்ட கலைஞர் என்ற கல்வெட்டுத்தான் அதிகம் இருக்கப் போகிறது. இதைவேறு ஆய்வு செய்து என்னத்தை சாதிக்கப் போகிறார்கள்?
பூம்புகாரிலும், குமரியிலும் ஆழ்கடல் அகழ்வராய்ச்சி செய்வதற்கு கடிதம் எழுதுவது அடுத்த தீர்மானம் வந்தடைந்த முடிவு. ஆக இந்த இமாலாய சாதனைகளை அதாவது கடிதங்கள் எழுதுவதற்குத்தான் 500 கோடி செலவழித்து மாநாடு நடத்தியிருக்கிறார்கள் போலும். உயிருடன் வாழும் தமிழனுக்கே நாதியில்லாத போது அகழ்வாராய்ச்சி செய்து தமிழனின் புராதான பெருமைகளை கண்டறிந்து என்ன ஆகிவிடப் போகிறது? ராமர் பாலம் என்ற புராணாப் புரட்டைக்கூட எதிர்க்கத் துப்பில்லாத தி.மு.க அரசின் யோக்கியதை சேது சமுத்திரத் திட்டத்திலேயே பல்லிளிக்கும் போது குமரிக் கண்டம் என்ன சாதிக்கப் போகிறது?
இப்படி ஒப்புக்கு சப்பாத்தி தீர்மானங்கள் இன்னும் சில இருக்கின்றன என்றாலும் அதில் முத்தாய்ப்பாக இருக்கும் “ தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளித்திட, உரிய சட்டம் இயற்றப்படும் ” என்ற தீர்மானத்தை மட்டும் பார்ப்போம். இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து இன்னும் பத்து நாட்களுக்குள் சட்ட மசோதா தயாரிக்கப் போகிறார்களாம். அதாவது தமிழில் படித்தால் அரசு வேலை!
ஏற்கனவே அனைத்து சாதியனரும் அர்ச்சகராகலாமென்ற சட்டம் உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று முடக்கப்பட்டதும், தி.மு.க அரசு ஜகா வாங்கிவிட்டது. வழக்காடுமன்றத்தில் தமிழ் என்பதற்கும் அதே கதிதான். இதில் அரசு வேலை என்பது மட்டும் எப்படி சாத்தியம்? தமிழக அரசின் முக்கிய அதிகாரப் பொறுப்புக்களை ஏற்றிருக்கும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப். எஸ் முதலான அதிகாரிகளின் பொறுப்பை மத்திய அரசு ஏற்றிருக்கிறது. இவர்களெல்லாம் தமிழில் படித்தால்தான் தமிழக அரசில் வேலை என்பது சாத்தியமே இல்லாதது. இவர்களுக்கு அடுத்த கட்ட அதிகாரிகளை தமிழக அரசே தேர்வு செய்கிறது என்றாலும் நிர்வாக மொழி தமிழில் மாறாத வரை இவர்களும் ஆங்கிலத்தின் துணை கொண்டுதான் செயல்பட முடியும்.
ஆக தமிழில் படித்தால் வேலை என்பதை விட அது அரசு வேலைக்கே இடையூறாக இருக்கிறது என்றாகிறது. அடுத்து தமிழில் படித்தால் அரசு வேலை மட்டுமல்ல, தனியார் வேலை கூட கிடைக்காது என்ற நிலையில் அடிமட்டத் தமிழன் கூட தனது பிள்ளைகளை ஆங்கிலவழியில்தான் படிக்க வைக்கிறான். அவ்வளவு ஏன் சென்னை மாநாகராட்சியின் அரசு தொடக்கப் பள்ளிகளில் சுமார் முப்பது பள்ளிகளில் இந்த ஆண்டிலிருந்து ஆங்கில வழி கல்வியை ஆரம்பிக்கிறார்களாம். இதற்கு பெற்றோரின் அமோக ஆதரவு இருப்பதாக மேயர் மா. சுப்பிரமணியமே குறிப்பிட்டுள்ளார். இது போக தனியார் பள்ளிகள் என்றாலே ஆங்கிலவழிதான் என்பதை விளக்கத் தேவையில்லை.
தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஆங்கிலத்தையே வலியுறுத்துகின்றன எனும்போது முட்டாள் தமிழன் கூட தமிழில் படித்து கரையேறுவதை விரும்பமாட்டான். மாத சம்பள வேலைகளுக்கு வழியற்று உடலுழைப்பு செய்து வாழும் தமிழனுக்கு எந்த வழிக் கல்வியும் கிடைப்பதில்லை. அந்த கூலி வேலை செய்து வாழும் தமிழன் கூட சிரமப்பட்டாவது தனது குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து ஏதாவது வழி பிறக்குமா என்றுதான் முயல்கிறான்.
இனி அரசு வேலைகளுக்கான பணியிடங்கள் குறைக்கப்பட்டு வரும் நிலையில், பல அரசு வேலைகள் அவுட் சோர்சிங் மூலம் நடக்கும் வேளையில் அரசு வேலை வாய்ப்பு என்பதே அருகிவருகிறது என்றால் கருணாநிதியின் உறுதி மொழியைக் கேட்டு தமிழில் படித்தாலும் வேலை என்பது நிச்சயம் இல்லை என்றாகிறது. இப்படி தமிழில் படிப்பது நல்லதில்லை, படித்தாலும் அரசு வேலை கிடைக்காது என்ற சூழ்நிலையை உருவாக்கிய உத்தமர்கள் தமிழில் படித்தால் வேலை என்று ஆசை காட்டுகிறார்கள்.
கருணாநிதியின் வாக்குறுதி எதையும் அறியாமல் வேறுவழியின்றி 9, 10 படித்தோ, படிக்காமலோ பள்ளியை விட்டு விலகும் உழைப்பாளித் தமிழன்தான் தமிழில் படிக்கிறான். அவன்தான் விவசாயி, நெசவாளி, மீனவன், சிறுவணிகம், கூலிவேலை முதலான வேலைகளை செய்கிறான். இத்தகைய தமிழனது தொழில் சார்ந்த வாழ்க்கையே வாழ முடியாது அல்லல்படும் வேளையில் தமிழ்வழிக் கல்வியும், அரசு பணியும் என்ன கிழித்துவிடப் போகிறது?
செம்மொழி மாநாடு முடிந்த கையோடு பேசப்பட்ட தீர்மானங்களின் கதி இதுதான். இந்தக் கதையை கேட்ட கையோடு அண்ணன் அஞ்சா நெஞ்சன் அமெரிக்காவிற்கு விமானமேறிவிட்டார். கனிமொழிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் சொந்தமான சாராய ஆலைகளைப் பற்றி ஜெயலலிதா பேசியிருக்கிறார். அதற்கு ஆதாரம் காட்ட முடியுமா என்று கருணாநிதி சவால் விட்டிருக்கிறார். ஆதாரம் காட்ட முடியாத வகையிலும் அவை இருக்கலாம்தான். ஆனாலும் தமிழில் படித்தால் வேலை என்பதற்கு ஆதாரத்தையும் காட்ட முடியாது, அது ஏன் என்பதை ஆராயவும் முடியாது. முடியுமென்பவர்கள் நடுவண் அரசின் குப்பைக்கூடையில் கருணாநிதியின் கடிதங்களை தேடலாம். டிஜிட்டல் ஃபார்மட்டில் தேடவிரும்பவர்கள், சன் நியூசின் செய்தி ஆவணங்களில் கேட்டுப் பார்க்கலாம்.
ஆக தமிழில் படித்தால் அரசு வேலை என்பது காதுல பூ இல்லை, பூசணிக்காய்!!
______________________________________________
அருமை 🙂
//ஏற்கனவே அனைத்து சாதியனரும் அர்ச்சகராகலாமென்ற சட்டம் உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று முடக்கப்பட்டதும், தி.மு.க அரசு ஜகா வாங்கிவிட்டது. வழக்காடுமன்றத்தில் தமிழ் என்பதற்கும் அதே கதிதான்//
இவ்வாறான கைவிடப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் செய்தி ஊடகங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் சூடான விடயங்களை மட்டும் மக்களுக்கு தர வேண்டும் என்ற சிந்தனைப்போக்கு தவறானது. ஒரு விடயம் தொடர்பில் சமூக நோக்கு இருக்குமாயின் அதற்கு தீர்வு வரும்வரை தொடர்ந்து செயற்படுவதே உண்மையான ஊடகப்பணியாக இருக்கும். அப்போதுதான் அதற்கு தீர்வு காணவேண்டும் என்ற அழுத்தம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும்.
தமிழில் படித்தால் என்ன பாடுபட வேண்டும் என்பதற்கு அனுபவித்து பார்த்தால்தான் தெரியும். ஐடியில் பணியாற்றி வரும் நான், ஐடியில் நுழைய பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. ஆனாலும், சென்னையில் ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்டு, ஆங்கில வழியில் 12 வகுப்பு வரை படித்து விட்டு வந்து சேரும் மாணவர்கள் பயமுறுத்துவது மாதிரி இது அவ்வளவு சிரமம் அல்ல என்பது பின்பு புரிந்தது.
இந்த ஆங்கிலவழி மாணவர்கள், நான் ஆங்கிலத்தில் பேசும் போது ஊக்கப்படுத்துவதை விட மட்டம்தட்டி பரிகசித்தவர்களே அதிகம்.
ஆனால், தமிழில் படித்து வரும் ஒரு பட்டதாரிக்கு ஆங்கிலவழி கற்பதை விட, மற்றவர்கள் பயமுறுத்துவதால் ஏற்படும் உளவியல் பயமே மிகப் பெரிய தடையாக இருக்கின்றது.
இப்போது ஐடியில் இருக்கும் ஒரு 50 சதவீதமானவர்கள் (தமிழ்நாட்டில்) தமிழில் படித்துவிட்டு வந்த மாணவர்கள். அவர்கள் வெளிநாட்டினருடன் நன்றாகவே பேசுகின்றோம், உரையாடி வேலை செய்கின்றோம். வெளிநாட்டினர் நமது ஆங்கிலத்தில் தவறு இருந்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் – ஏனெனில் ஆங்கிலம் நமது தாய்மொழி கிடையாது.
ஆனால் கூட பணியாற்றும் அல்லது நமது மேலதிகாரிகளாக இருக்கின்ற (இவர்களிலும் பெரும்பான்மை) தமிழர்கள் இருக்கின்றார்களே, கிளையண்ட் நமது பணி நன்றாக இருக்கின்றது என்று பாராட்டினாலும், நமது ஆங்கில அறிவினை குத்திக் காட்டி நம்முடைய அப்ரைசலில் நமக்கு குறைவான புள்ளிகள் கிடைக்குமாறு பார்ப்பார்கள். இதனால் நமக்கு ஒதுக்கப்படும் ஊதிய உயர்வு முதலான நிதிகள் குறைக்கப்பட்டு இவர்களுக்கு மேலதிகமாகக் கொடுக்கப்படும்.
இவையெல்லாம் தமிழில் படிப்பதால் வருகின்ற வினைகள். புதிய ஜனநாயகத்தினை ஒருவருக்கு அறிமுகம் செய்தேன். நன்றாக தமிழ் பேசக் கூடிய அவர், தனக்கு தமிழில் படிக்க தெரியாது என்று சொன்னது பயங்கரமான அதிர்ச்சியாக இருந்தது.
தமிழில் படித்தால் வேலை இல்லை – அல்லது கிடைப்பது கஷ்டம். கிடைத்தாலும் பதவி உயர்வு முதலானவற்றில் இடைஞ்சல்கள் உண்டு என்னும்போது யார்தான் தமிழில் படிப்பார்கள் ?
தமிழ் திட்டமிட்டு கொல்லப்பட்டு விட்டது. இதில் கணிசமான பங்கு அண்ணாவில் தொடங்கிய பிழைப்பு வாதிகளுக்கு உண்டு. தமிழ் தமிழ் என்று தாங்கள் வளர்ந்தார்களே தவிர, தமிழுக்கு ஒரு மயிரும் பிடுங்கவில்லை.
ஆனால், தமிழில் படித்த என்னைப் போன்றவர்கள், சென்னையில் உள்ள ஆங்கில உரையாடல் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி எடுத்து கொண்டு, எங்களை முன்னேற்றிக் கொள்கிறோம். அப்போதுதான் , பீட்டர் விட்ட ஆங்கிலவழி பணியாளர்கள், மேலாளர்களின் யோக்கியதை தெரிந்தது. இவர்கள் பேசுவதெல்லாம் உரையாடல் ஆங்கிலம் அல்ல – எழுத்து ஆங்கிலம் – news ஆங்கிலம். வெளிநாட்டுக்காரர்கள் இவர்கள் ஆங்கிலத்தையும் ஒன்றும் ஆகோ ஓகோ என்றெல்லாம் புகழ்வதில்லை என்பதை தெரிந்து கொண்டோம்.
கட்டுரையில் சொல்லப்பட்டது போல, வேறு வழியின்றி தமிழில் படிக்கும் ஏழைமாணவர்கள், கல்விக்கே வழியில்லாதபோது, இந்த வகுப்புகளுக்கு எங்கே போவார்கள் ?
கஷ்டமாகத்தான் இருக்கின்றது ஆனால் உண்மை நிலவரம் இதுதான்.
இதனை மாற்ற முடியாதா ?. ஜப்பான், சீன மொழிகளிளைப் போன்று உடனடி (on fly) தொழில்நுட்பங்களை தமிழில் மொழிபெயர்த்தல், சிறந்த உடையாடல் மொழிபெயர்ப்பு கருவிகளை நிறுவுதல் – ஆங்கிலத்தின் முக்கியத்துவமே வெளிநாட்டுனருடன் தொடர்பு கொள்வது மட்டும்தான். எல்லாவற்றிற்கும் மேலாக ஆங்கில உரையாடல் பயிற்சியை எளிதாக அனைவருக்கும் கிடைக்கும் வழியில் வழங்குதல் போன்றவையே நல்ல பலனை தரும்.
இதெல்லாவறையும் விட, தமிழ் நாட்டில் வேலைவாய்ப்புகள் – தேசிய வேலைகள் – ஜப்பானில் செய்வதை போல எல்லாப் பணிகளும் ஜப்பானிய மொழியில் செய்து ஏற்றுமதி செய்வதை போல – தமிழ்நாட்டிலும் வளர்ச்சி ஏற்பட்டால் ஒழிய இந்த பிரச்சனை தீர வழியில்லை. உலகமயத்தால் இதற்கு வழியே இல்லை.
ஆதவன் சொல்வதை அப்படியே வழிமொழிகிறேன், இந்த மெக்காலே கல்வித்திட்டம் இருக்கும் வரையிலும் ஆங்கில வழியில் பயில்வதுதான் சொந்த வாழ்க்கையில் முன்னேர்பவர்களுக்கு மட்டுமல்ல சமூகமாற்றத்திற்கான வேலைகளை செய்பவர்களுக்கு கூட சரியான வழி என்பதுதான் நிலை. தோழர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது இதை கருத்தில் கொள்ள வேண்டும்
ஆக தமிழில் படித்தால் அரசு வேலை என்பது காதுல பூ இல்லை, பூசணிக்காய்!!______________________________________________athu poosanikai illai.
poomalai.
வணக்கம் இங்கிலீசுக்கார தொரைகளே, தமிழ் மக்களை ஏமாற்றும் கருணாநிதியின் பல்வேறு வேலைகளில் இதுவும் ஒன்று என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் தமிழ் படித்தால் வீண் என்று விவாதப் பொருள் திரும்புவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆங்கில வழிக்கல்வியில் படித்துக்கொண்டிருக்கும் தமிழ் குடும்பக் குழந்தைகள் ஆங்கிலமும் சரியாகப் படிக்காமல், தமிழும் சரியாகப் படிக்காமல் குழம்பிப்போன குட்டைகளாக இருக்கும் நிலையை நாம் மறந்து விடக்கூடாது. நன்றி முரசு வருத்தத்துடன்.
திரு. வினவு,
நீங்கள் சொல்வதை முழுமையாக ஏற்று கொள்ள முடியாது. அந்த சட்ட மசோதா வரும் முன்னரே அதை வீண் என்று சொல்வதால் என்ன பயன்? அந்த மசோதா, தமிழ்-ஐ ஒரு பாடமாக படித்துள்ள வருக்கு வேலை வைப்பை முன்னுரிமையாக கொண்டு வரலாம். அல்லது, தமிழ் வழி கல்வி பயின்றோருக்கு அறுபது சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க படலாம். இந்த மசோதா வை கொண்டு வராமலே இருக்கலாம் அல்லவவா ? இந்த முயற்சிக்காக நாம் பொறுத்திருக்கலாம்.
இந்த மசோதா எப்படி நிறைவேறினாலும், பாதிப்பு யாருக்கும் இல்லை. ஆங்கில வழியில் படித்தவர்கள் எப்படியும் தனியார் துறையில் வேலை வாங்க முடியும். நீங்கள் சொல்வது போல, அரசு காலி இடங்கள் குறைவாக இருந்தால், அந்த தமிழ் வழி கல்வி பயின்றோர் பயன் பெற்று விட்டு போகட்டுமே. நிர்வாக மொழி தமிழ் இல்ல விட்டாலும் , தமிழ் படித்தார்கள் , தமிழ் சில பேருக்கு தெரியும் என்ற விளைவு ஏற்படும்.
நீங்கள் நிஜமாகவே அக்கறை கொண்டிருந்தால், இந்த சட்ட மசோதா எப்படி இருக்க வேண்டும் என ஆராயுங்கள். அதை விடுத்தது, எல்லா முயற்சியையும் எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்?
கவனிக்க, திருந்த வேண்டியது ஆட்சியாளர்கள் மட்டும் அல்ல. நாமும்.
normally i am always against the நடுநிலை. because they are useless for all maters.
And as you told at least some persons will get knowledge about the tamil language. but here you tell me the particular persons should wanted to loss their career for the shake of knowing the tamil, is it? and will you be the first one?. and already the govt tamil nadu has announced the temple priest act. but now it is in vein. still the students are fighting to get their course complete certificate and the job. even after this will you be the one to advice others it is right one to select.
அப்படியா?
பல தொழிற்கல்வி தமிழில் வர முடியாத நிலையில் தமிழ் வழி பயின்றோருக்கு அரசு வேலை என்ற பகட்டு வேஷத்தை வெளிச்சமக்கியதற்கு நன்றி,
முதல்ல இது என்னோட ஐடியா. இதை எனக்கே தெரியாமல் காபியடிச்ச கருணாநிதிக்கு என்னுடைய கண்டங்கள்.
இதுபற்றி சில வருடங்களுக்கு முன்பு நான் திண்ணையில் எழுதிய பதிவை இங்கே பார்க்கவும்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20601137&edition_id=20060113&format=html
புதிய டிசைன் அருமை தோழர்களே என்னோட ஒன்றையனா பிரவுசர் இன்டர்னெட் எக்ஸ்பிளோரர் ஆறாம் நம்பருலேயே நல்லா தெரியுது…
அவரவருடைய குழந்தைகள் மற்றும் முழு சந்ததியனர் ஆங்கிலம் மட்டுமே பயின்றாலும் பரவாயில்லை மற்றவர்கள் எல்லாம் தமிழ் வழிக்கல்வி தான் படிக்கவேண்டும் .இப்படி எத்தனை காலம் ஏமாற்றுவார்கள்?anbumaNi ராமதாஸ் படித்ததே ஊட்டி/ஏற்க்காடில் உள்ள கான்வென்ட்டு பள்ளியில் தான் .ஆனால் நம் மக்களுக்கு இவர்கள் எல்லாம் ஆளப்பிறந்தவர்கள் என்பதால் அவர்கள் மட்டும் ஆங்கிலம் படித்தால் தவறு என்ன என்று தோன்றுகிறது போலும்.
தமிழ் குற்றுயிரும் குலையுயிருமாய் இனறளவும் பிழைத்திருப்பது உழைப்பாளி வர்க்கத்தால்தான். அதுவும் அவர்களுன் வக்கற்ற நிலைமையால்தான். தமிழ் ஆட்சிமொழியாகவோ, கல்வி மொழியாகவோ அல்லது வழக்காடு மொழியாகவோ ஆகவேண்டுமென்றால் அது உழைப்பாளி வர்க்கத்தின் ஆட்சி வரும்போதுதான் சாத்தியம் (அதுவும்கூட 100% உத்தரவாதமில்லை).
இப்போது தள வடிவமைப்பு மிக சிறப்பாக இருக்கிறது. ஆனால் எழுத்து வடிவத்தை ஏன் இத்தனை சிறிதாக மாற்றி விட்டீர்கள். சற்று பெரியதாக படிக்க எளிதான வகையில் மாற்றவும். கண்கள் கெஞ்சுகிறது.
நன்றி தோழரே, இப்போது சரியாக இருக்கிறதா என்று பார்த்து சொல்லவும்
நன்றி. மிகச் சரி.
தமிழ் வழிக்கான அனைத்து வழிகளையும் அடைத்தாகி விட்டது. உயர் கல்வியில் தமிழை கொண்டு வந்தாலே வேலை வாய்ப்பு கிடைக்குமே. ஆங்கிலம் என்பது அறிவல்ல. அஃது ஓர் மொழியே. அரபு நாடுகளுக்கும், வட இந்தியாவிற்கும் செல்லும் தொழிலாளர்களுக்கு ஆரம்பத்தில் அரபி, உருது, இந்தி போன்ற எந்த மொழியும் தெரிவதில்லை. அங்கு போய் மொழியை கற்கிறார்கள். மொழி என்றுமே பிரச்சனை இல்லை. வேலை வாய்ப்பு உள்ளதா என்பது தான் பிரச்சனை.