privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதமிழில் படித்தால் அரசு வேலை: காதுல பூ !!

தமிழில் படித்தால் அரசு வேலை: காதுல பூ !!

-

செம்மொழி மாநாடு நடத்தி முடித்தாயிற்று. அடுத்த கட்ட மோடி மஸ்தான் வேலைகள் ஜரூராக தொடங்கிவிட்டன. சென்னை கோட்டையில் செம்மொழி தமிழாய்வு நூலக அரங்கில், அதாவது பழைய அமைச்சரவைக்கூட்ட அரங்கில் கருணாநிதியின் தலைமையில் அமைச்சர், அதிகாரிகள் கூட்டம் செம்மொழி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முடிவுகளை அமலுக்கு கொண்டுவருவது குறித்து பேசினார்களாம். என்ன பேசினார்கள்? எதை முடிவு செய்தார்கள்?

முதல் விசயமே கருணாநிதிக்கு பாராட்டுத் தீர்மானம்தான். செம்மொழி மாநாடு நடத்தியமைக்காகவும், கோட்டையில் செம்மொழி நூலகத்தை ஆரம்பித்து வைத்ததற்காகவும் முதல்வருக்கு பாராட்டு தீர்மானத்தை நிதியமைச்சர் அன்பழகன் அறிவிக்க அனைவரும் கைதட்டி வரவேற்றனர். வெளியே குத்தாட்ட நிகழ்வுகளில் ஜால்ராக்கள் பாராட்டுவது போல உள்ளேயும் சகபாடிகள் பாராட்டி அதையும் ஒருவர் அலுக்காமல் அமர்ந்து இரசிக்கின்றாரென்றால் கண்டிப்பாக இது காக்காய் மேனியாதான். போகட்டும்.

முதலில் தமிழக அரசு சார்பில் ஐந்திணை நிலவகைகளில் பாரம்பரிய மரபணு பூங்காக்கள் அமைக்கப்படுவதை குறித்து வேளாண்மை செயலாளர் பேசுகிறார். ஐந்து திணையிலும் வாழவழியில்லையென்று தமிழன் ஊர் ஊராக நாடோடியாக அலையும் காலத்தில் இந்த திணைகள் எதை வழங்கப் போகின்றன? மரபணு கத்திரிக்காயை மான்சாண்டோ கூட இணைந்து ஆய்வு செய்து சந்தைப்படுத்த விரும்பிய தமிழக அரசு பாரம்பரிய மரபணு என்று எதைக் காட்டப் போகிறது? தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகைகளை ஒழித்து, பசுமைப்புரட்சி என்ற மாய்மாலத்தின் மூலம் விவசாயத்தை மெல்ல அழித்த சதிக்கு அந்தக் காலத்தில் உதவிய விஞ்ஞானி எம்.எஸ். சாமிநாதன்தான் இந்த ஐந்திணை அக்கப்போருக்கு உதவப் போகிறாராம். நல்ல பொருத்தம்தான்.

அடுத்து இலங்கைத் தமிழரின் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதப் போகிறாராம். இதுதான் செம்மொழி தந்த இரண்டாம் தீர்மானத்தின் இலட்சணம். சிங்களக் குடியேற்றம், இராணுவக் குடியேற்றம், போராளிகள் வதைத்து கொல்லப்படுதல், முகாம்கள் தொடருதல் என்று எல்லா எழவுகளும் அமோகமாக நடந்து வரும் நிலையில் கடிதமாம் கடிதம். இதைவிட சிங்கள அரசு ஈழத்தமிழரை சித்திரவதை செய்வது எவ்வளவோ மேலென்றுதான் சொல்ல வேண்டும்.

அடுத்து மத்தியில் தமிழ் ஆட்சி மொழி பற்றிய தீர்மானம். ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தமிழை பயன்பாட்டு மொழியாக கடைபிடிக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் தெளிவாக அறிவித்து விட்டன. இப்போது இது குறித்து மீண்டும் கடிதம் எழுதி வலியுறுத்தப் போகிறார்களாம். இதைத்தான் 2006இலும் செய்தார்கள். இப்போது 2010 லும் அதே கடிதத்தை தேதியை மட்டும் மாற்றி அனுப்புவார்கள். அடுத்து 2015, 2020 ஏன் கனிமொழி மகன் ஆதித்யன் முதல் அமைச்சராக வரும்போது கூட இந்தக்கடிதம் பயன்படும். வழக்காடும் மொழியாக தமிழ் வேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்களை கைது செய்து சிறையில் அடைத்த அதே கை இப்போது கடிதம் எழுதுகிறது என்றால் குதிரைக்கு கொம்பு முளைப்பதையும் நம்பித்தான் ஆகவேண்டும்.

அடுத்த தீர்மானத்தின்படி பலகோடி வருவாயை ஈட்டி தமிழைக் கொலை செய்யும் கலைஞர் டி.வி, சன். டி.வியின் குடும்ப ஆட்சி தமிழின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடன் நிதி ஒதுக்குமாறு கோரப் போகிறதாம். பெற்று தமிழுக்கு கருமாதி செய்யலாம், செய்வார்கள்.

இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் படி கலைஞர் ஏற்கனவே எழுதிய கடிதத்தை மீண்டும் வலியுறுத்தி எழுதுவாராம். சரி, அப்படியே கல்வெட்டியல் நிறுவனம் வந்தாலும் தமிழகத்தில் இருக்கும் வரலாற்று கல்வெட்டுக்களை விட செம்மொழி கண்ட கலைஞர் என்ற கல்வெட்டுத்தான் அதிகம் இருக்கப் போகிறது. இதைவேறு ஆய்வு செய்து என்னத்தை சாதிக்கப் போகிறார்கள்?

பூம்புகாரிலும், குமரியிலும் ஆழ்கடல் அகழ்வராய்ச்சி செய்வதற்கு கடிதம் எழுதுவது அடுத்த தீர்மானம் வந்தடைந்த முடிவு. ஆக இந்த இமாலாய சாதனைகளை அதாவது கடிதங்கள் எழுதுவதற்குத்தான் 500 கோடி செலவழித்து மாநாடு நடத்தியிருக்கிறார்கள் போலும். உயிருடன் வாழும் தமிழனுக்கே நாதியில்லாத போது அகழ்வாராய்ச்சி செய்து தமிழனின் புராதான பெருமைகளை கண்டறிந்து என்ன ஆகிவிடப் போகிறது? ராமர் பாலம் என்ற புராணாப் புரட்டைக்கூட எதிர்க்கத் துப்பில்லாத தி.மு.க அரசின் யோக்கியதை சேது சமுத்திரத் திட்டத்திலேயே பல்லிளிக்கும் போது குமரிக் கண்டம் என்ன சாதிக்கப் போகிறது?

இப்படி ஒப்புக்கு சப்பாத்தி தீர்மானங்கள் இன்னும் சில இருக்கின்றன என்றாலும் அதில் முத்தாய்ப்பாக இருக்கும் “ தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளித்திட, உரிய சட்டம் இயற்றப்படும் ” என்ற தீர்மானத்தை மட்டும் பார்ப்போம். இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து இன்னும் பத்து நாட்களுக்குள் சட்ட மசோதா தயாரிக்கப் போகிறார்களாம். அதாவது தமிழில் படித்தால் அரசு வேலை!

ஏற்கனவே அனைத்து சாதியனரும் அர்ச்சகராகலாமென்ற சட்டம் உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று முடக்கப்பட்டதும், தி.மு.க அரசு ஜகா வாங்கிவிட்டது. வழக்காடுமன்றத்தில் தமிழ் என்பதற்கும் அதே கதிதான். இதில் அரசு வேலை என்பது மட்டும் எப்படி சாத்தியம்? தமிழக அரசின் முக்கிய அதிகாரப் பொறுப்புக்களை ஏற்றிருக்கும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப். எஸ் முதலான அதிகாரிகளின் பொறுப்பை மத்திய அரசு ஏற்றிருக்கிறது. இவர்களெல்லாம் தமிழில் படித்தால்தான் தமிழக அரசில் வேலை என்பது சாத்தியமே இல்லாதது. இவர்களுக்கு அடுத்த கட்ட அதிகாரிகளை தமிழக அரசே தேர்வு செய்கிறது என்றாலும் நிர்வாக மொழி தமிழில் மாறாத வரை இவர்களும் ஆங்கிலத்தின் துணை கொண்டுதான் செயல்பட முடியும்.

ஆக தமிழில் படித்தால் வேலை என்பதை விட அது அரசு வேலைக்கே இடையூறாக இருக்கிறது என்றாகிறது. அடுத்து தமிழில் படித்தால் அரசு வேலை மட்டுமல்ல, தனியார் வேலை கூட கிடைக்காது என்ற நிலையில் அடிமட்டத் தமிழன் கூட தனது பிள்ளைகளை ஆங்கிலவழியில்தான் படிக்க வைக்கிறான். அவ்வளவு ஏன் சென்னை மாநாகராட்சியின் அரசு தொடக்கப் பள்ளிகளில் சுமார் முப்பது பள்ளிகளில் இந்த ஆண்டிலிருந்து ஆங்கில வழி கல்வியை ஆரம்பிக்கிறார்களாம். இதற்கு பெற்றோரின் அமோக ஆதரவு இருப்பதாக மேயர் மா. சுப்பிரமணியமே குறிப்பிட்டுள்ளார். இது போக தனியார் பள்ளிகள் என்றாலே ஆங்கிலவழிதான் என்பதை விளக்கத் தேவையில்லை.

தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஆங்கிலத்தையே வலியுறுத்துகின்றன எனும்போது முட்டாள் தமிழன் கூட தமிழில் படித்து கரையேறுவதை விரும்பமாட்டான். மாத சம்பள வேலைகளுக்கு வழியற்று உடலுழைப்பு செய்து வாழும் தமிழனுக்கு எந்த வழிக் கல்வியும் கிடைப்பதில்லை. அந்த கூலி வேலை செய்து வாழும் தமிழன் கூட சிரமப்பட்டாவது தனது குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து ஏதாவது வழி பிறக்குமா என்றுதான் முயல்கிறான்.

இனி அரசு வேலைகளுக்கான பணியிடங்கள் குறைக்கப்பட்டு வரும் நிலையில், பல அரசு வேலைகள் அவுட் சோர்சிங் மூலம் நடக்கும் வேளையில் அரசு வேலை வாய்ப்பு என்பதே அருகிவருகிறது என்றால் கருணாநிதியின் உறுதி மொழியைக் கேட்டு தமிழில் படித்தாலும் வேலை என்பது நிச்சயம் இல்லை என்றாகிறது. இப்படி தமிழில் படிப்பது நல்லதில்லை, படித்தாலும் அரசு வேலை கிடைக்காது என்ற சூழ்நிலையை உருவாக்கிய உத்தமர்கள் தமிழில் படித்தால் வேலை என்று ஆசை காட்டுகிறார்கள்.

கருணாநிதியின் வாக்குறுதி எதையும் அறியாமல் வேறுவழியின்றி 9, 10 படித்தோ, படிக்காமலோ பள்ளியை விட்டு விலகும் உழைப்பாளித் தமிழன்தான் தமிழில் படிக்கிறான். அவன்தான் விவசாயி, நெசவாளி, மீனவன்,  சிறுவணிகம், கூலிவேலை முதலான வேலைகளை செய்கிறான். இத்தகைய தமிழனது தொழில் சார்ந்த வாழ்க்கையே வாழ முடியாது அல்லல்படும் வேளையில் தமிழ்வழிக் கல்வியும், அரசு பணியும் என்ன கிழித்துவிடப் போகிறது?

செம்மொழி மாநாடு முடிந்த கையோடு பேசப்பட்ட தீர்மானங்களின் கதி இதுதான். இந்தக் கதையை கேட்ட கையோடு அண்ணன் அஞ்சா நெஞ்சன் அமெரிக்காவிற்கு விமானமேறிவிட்டார். கனிமொழிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் சொந்தமான சாராய ஆலைகளைப் பற்றி ஜெயலலிதா பேசியிருக்கிறார். அதற்கு ஆதாரம் காட்ட முடியுமா என்று கருணாநிதி சவால் விட்டிருக்கிறார். ஆதாரம் காட்ட முடியாத வகையிலும் அவை இருக்கலாம்தான். ஆனாலும் தமிழில் படித்தால் வேலை என்பதற்கு ஆதாரத்தையும் காட்ட முடியாது, அது ஏன் என்பதை ஆராயவும் முடியாது. முடியுமென்பவர்கள் நடுவண் அரசின் குப்பைக்கூடையில் கருணாநிதியின் கடிதங்களை தேடலாம். டிஜிட்டல் ஃபார்மட்டில் தேடவிரும்பவர்கள், சன் நியூசின் செய்தி ஆவணங்களில் கேட்டுப் பார்க்கலாம்.

ஆக தமிழில் படித்தால் அரசு வேலை என்பது காதுல பூ இல்லை, பூசணிக்காய்!!

______________________________________________