உமாசங்கர் ஐ.ஏ.எஸ்: கருணாநிதி குடும்ப ஆட்சிக்குப் பலிகடா!

43
19

மாசங்கர் எனும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரியை பலரும் அறிந்திருப்பார்கள். நேர்மையான அதிகாரி என்ற பெயரெடுத்த உமாசங்கர் இப்போதுதான் தனது நேர்மைக்குரிய சோதனையை தன்னந்தனியாக சந்தித்து வருகிறார்.

மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் மதுரை தினகரன் ஊழியர் எரிப்பு பிரச்சினையை ஒட்டி விரிசல் ஏற்பட்ட போது உருவானது அரசு கேபிள் டி.வி. இதன் நிர்வாக இயக்குநராக உமா சங்கர் நியமிக்கப்பட்டார். கேபிள் வலைப் பின்னலில் மாறன்களது சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் ஏகபோகத்தை உடைப்பதுதான் இதன் நோக்கம். கலைஞர் டி.வியும் அப்படித்தான் அவதரித்தது.

இந்தப் பின்னணியில் உமாசங்கர் முழுவீச்சில் அரசு கேபிள் டி.வியை உருவாக்க முனைந்தார். பிறகு சுமங்கலி நிறுவனத்தை அரசுடமையாக்க வேண்டுமென்றும், இதற்கு எதிராக எல்லா முறைகேடுகளையும் வைத்து அரசு கேபிள் டி.வியை முடக்க நினைக்கும் மத்திய அமைச்சர் (அநேகமாக தயாநிதி மாறன்) ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் பரிந்துரைத்தார்.

சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் மீது கேபிள் ஆபரேட்டர்களுக்கும், மற்ற தமிழக சேனல்களுக்கும் மிகுந்த வெறுப்புணர்வு இருக்குமளவு அவர்களது ஏகபோகம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதனாலேயே கேபிள் டி.வி விநியோகஸ்தர்கள் அரசு நிறுவனத்தில் சேருவதற்கு ஆர்வம் காட்டினர். இதையே முன்னர் ஜெயலலிதா உருவாக்க முனைந்த போது கூட்டணி மத்திய அரசின் தயவில் கருணாநிதி குடும்பம் முறியடித்ததும் குறிப்பிடத்தக்கது.

பிறகு மாறன் சகோதரர்களும், கருணாநிதி குடும்பத்தாரும் சேர்ந்து விட்டனர். அரசு கேபிள் டி.வி அதோகதியாய் மரணிக்க விடப்பட்டது. மாறிய கேபிள் விநியோகஸ்தர்கள் நட்டாற்றில் விடப்பட்டனர். உமாசங்கரும் மாறன்களது கடும் கோபத்திற்கு ஆளானார். பிறகு என்ன?

உமாசங்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டார் என்று தமிழக அரசால் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு ஆளானார். அவர் மீது நடவடிக்கையும், விசாரணையும் ஏவிவிடப்பட்டது. தற்போது இதற்கு எதிராக உமாசங்கர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருக்கிறார். அதில்தான் அரசு கேபிள் டி.விக்காக தான் பரிந்துரைத்த விடயங்களுக்காக பழிவாங்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பதிலளித்திருக்கும் தமிழக அரசு அவர் மீதான அந்தக் குற்றச்சாட்டிற்கு முதல் நிலை ஆதாரங்கள் உள்ளதால் விசாரணையிலிருந்து அவருக்கு விலக்களிக்க முடியாது என்று கூறியிருக்கிறது. இதன் மீது நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்று இப்போது தெரியவில்லை.

ஆனால் கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்காக உமாசங்கர் பலிகடாவாக்கப் பட்டிருக்கிறார் என்பதில் மட்டும் சந்தேகமில்லை. இப்போது தன் மீதான குற்றச்சாட்டை அவர் மட்டுமே எதிர்கொண்டுவருகிறார். சக அதிகாரி இப்படி பலிகடாவாக்கப்பட்டது குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் வாயைத் திறக்கவில்லை. பத்திரிகைகளில் தங்கம், ஜென்டில்மென் என்று கவர் ஸ்டோரி வருவதற்கு ஆசைப்படும் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எவரும் இவை போன்ற உண்மையான அதிகார-அரசியல் ஆதிக்கம் மிரட்டல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை.

உமாசங்கருக்கு நடந்தது நாளை நமக்கும் நடக்கும் என்பதே அவர்களது நிலையாக இருக்கும். இது உண்மையென்றால் கருணாநிதியின் குடும்ப ஆட்சியையும், ஊழல் முறைகேடுகளையும் யாரும் கனவில் கூட எதிர்க்க முடியாது என்ற சூழல் வரும். ஊடகங்களும் கருணாநிதி ஜால்ராவாக மாறிவிட்ட நிலையில் இத்தகைய அதிகாரிகள் தமது அதிகாரி-வர்க்க மேட்டிமைத்தனத்தை உதறிவிட்டு மக்கள் அரங்கில் நின்று கொண்டு போராடவேண்டும். இன்னும் வெளிவராத உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டும். கருணாநிதியின் காட்டுதர்பாரை மக்கள் ஆதரவுடன் வீழ்த்துவதற்கு இத்தகைய முன்முயற்சிகள் வேண்டும்.

உமாசங்கர் முன்வருவாரா?

__________________________________________________________

 

சந்தா