Thursday, December 1, 2022
முகப்புசெய்திபூவரசியின் கொலையும், ‘தற்கொலையும்’ !!

பூவரசியின் கொலையும், ‘தற்கொலையும்’ !!

-

நான்கு வயது குழந்தையை கொலை செய்த பூவரசியின் வாழ்க்கையில் இருக்கும் சகல அம்சங்களும் ஊடகங்களால் பரபரப்பாக விற்கப்பட்டு விட்டன. பூவரசி வந்தடைந்த முடிவிற்கு அவர் மட்டுமா, வேறு யாரும், எதுவும் காரணமாயிருக்க முடியுமா என்ற ஆய்வின் தேவையை, கொலை தோற்றுவித்திருக்கும் பெரும் அனுதாபம் ஒரே அடியில் தூக்கிப் போட்டுவிட்டது. என்ன சொன்னாலும் யாருக்கும் ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தும் சிறுவன் ஆதித்யாவின் கொலையை ஒரு இளம்பெண் இரக்கமற்று எதனால் செய்திருப்பார்?

கள்ளக்காதல் என்று ஒரே வார்த்தையில் ஊடகங்கள் முடித்துக் கொண்டன. அதற்கு தோதாக வெளியிடப்பட்ட செய்திகளை கண்ணும் காதும் வைத்து மக்கள் அலசுகிறார்கள். சித்தியின் கொடுமை, கள்ளக்காதலியின் ஆத்திரம், இதற்கு முன்னரே வேறு ஒருவனைக் காதலித்திருக்கிறாள், காமாந்தகி, பழிவாங்கினாள் என்று பல வகைகளில் பூவரசி பரிசீலிக்கப்படுகிறார்.

வாழ்க்கை முழுவதும் வெறுப்புடன் தொடரப் போகும் அந்த குற்ற உணர்வின் அச்சுறுத்தலிலேயே பூவரசி இனி காலம் முழுவதும் பிதற்றப் போகிறார். தண்டனைகளோ, சிறைவாசமோ இந்த உளவியல் தண்டனையிலிருந்து விடுதலையை அளித்து விடாது. ஆத்திரத்தின் பின்விளைவுகள் இத்தனை அகோரமாய் இருக்குமென்று அவருக்கு போலீசில் பிடிபட்டதற்கு முன்னரே தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதனால்தான் நாகப்பட்டினத்தில் பெட்டியை வைத்துவிட்டு சென்னை தேவாலயத்தில் பாவமன்னிப்பு கேட்பதற்கு சென்றிருக்கிறார். ஆனால் அத்தனை சுலபத்தில் மன்னிக்கக் கூடிய பாவமா அது?

ஆதித்யாவின் தாய் ஆனந்தலட்சுமிக்கு குழந்தையை இத்தகைய கொடூரமாக இழந்த சோகம் ஒருபுறமிருக்க,  மணவாழ்க்கைக்கு வெளியே கணவன் வைத்திருந்த காதல்தான் தனது பிள்ளையை மட்டுமல்ல தனது இல்லறத்தையும் சேர்த்து பிடுங்கியிருக்கும் என்ற கசப்பை அத்தனை சுலபத்தில் மறந்துவிடமுடியுமா என்ன? வேறுவழியின்றி அந்த கணவனுடன்தான் வாழமுடியும் என்றிருந்தாலும் விரிசல் விரிசல்தானே? ஆதலால் ஆனந்த இலட்சுமிக்கும் இனி நிம்மதி கைக்கெட்டும் தூரத்தில் இல்லை. பிள்ளை வலியும், மணவலியும் அவரை நெடுங்காலம் துரத்தும்.

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் இரண்டு விதமாக ஊருக்கொன்று, மனதுக்கொன்று என்று வாழ்ந்த ஜெயக்குமாரும் இனி சனியன் விட்டது என்று சகஜநிலைக்குத் திரும்ப முடியுமா? பிள்ளையைப் பறிகொடுத்த சோகத்தை விட அதற்கு காரணம் நான்தான் என்ற குற்ற உணர்விலிருந்து அவர் விடுதலை அடைய முடியுமா? சட்டத்தின்படியும், சந்தர்ப்பசூழலின் படியும் அவருக்கு தண்டனை ஏதும் கிடைக்காது என்றாலும் மனதை அழுத்தும் பாரம் பெரும் தண்டனை இல்லையா?

சிறையிலும் மனமுடைந்து காணப்படும் பூவரசியை சக பெண் கைதிகள் தாக்கியதாகவெல்லாம் தினசரிகள் செய்து வெளியிட்டு சூட்டை தணிக்காமல் பார்த்துக் கொள்கின்றன. ஆனால் இந்த சூட்டின் இதத்தை இப்போது ருசிப்பவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அதன் சூட்டை அறியாதவர்களா என்ன? நல்ல உறவிலும், கள்ள உறவிலும் மாறி மாறி விதிகளுக்கு உட்பட்டு ஆடிவரும் சமூகம் தானும் இந்த ஆட்டத்தில் உண்டு என்பதை அறியாமல் ஆதித்யாவின் மேல் கொண்ட மனிதாபிமானம் என்ற நிழலில் கிசுகிசு அரிப்பை தேடி நிறைவு செய்கிறது.

ஆனந்தலட்சுமியை மணப்பதற்கு முன்னர் ஜெயராமனும், பூவரசியும் காதலித்திருக்கிறார்கள். பூவரசியும் கருக் கொண்டு இரண்டு முறை காதலனது வேண்டுகோள்படி கலைத்திருக்கிறார். காத்திருக்கிறார். ஆனாலும் அந்தக் காதலன் கைவிட்டுவிட்டார். கைவிட்டவரை கயவன் என்று ஒதுக்காமல் அவரிடமே காதலை வலிந்து பெறவேண்டிய அவசியமென்ன?

இதில் பூவரசிக்கு முன்னமே ஒரு காதலன் இருந்து அவர் ஏமாற்றியதாக புகார் கொடுத்து வழக்கு நடந்திருப்பதாக தினசரிகள் சொல்கின்றன. ஏன் ஒரு பெண் தற்போதைய வாழ்வுக்கு முன்னர் யாரையும் காதலித்திருக்க கூடாதா என்ன? அந்தக் காதலன் கைவிட்டுவிட்டான் என்பதால் அவனைத் தண்டிக்க சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்திருப்பது ஒழுக்கக்கேடா என்ன?

ஒருத்திக்கு ஒருவன்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒருவனுக்கு எத்தனை ஒருத்தி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த சமூக நியதியை வைத்தே பூவரசியின் ஒழுக்கத்தை வாசிப்பு மனங்கள் மதிப்பிடுகின்றன. அதனால் ஜெயராமனை தண்டிக்க முடியாமல் ஒரு அழகான குழந்தையை பதட்டமில்லாமல் கொன்று அப்புறப்படுத்தியது கூட அந்த ஒழுக்கக்கேட்டின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகின்றது.

ஜெயராமனை தப்பானவர் என்று தெரிந்தும் பூவரசி ஏன் விடாது காதலித்து வந்தார்? அவர் மேலாளர் பொறுப்பில் பெரும் ஊதியம் வாங்குகிறவர் என்பதாலா? அப்படிப் பார்த்தால் பூவரசியும் நல்ல மதிப்பெண்களோடு, உயர் படிப்பில், வசதியான வேலை பார்த்து வந்தவர்தான். தனது வளமான எதிர்காலம் என்ற கனவோடு கூட அவர் ஜெயராமனை துண்டித்துவிடக்கூடாது என்று நினைத்திருக்கலாம். இந்த பாதுகாப்பு பிரச்சினை பூவரசியுடையது மட்டுமா இல்லை எல்லாப் பெண்களுக்கும் உரியதா?

காதல், பாலுறவு, திருமணம் முதலானவற்றில் ஏமாறும் போது சமூக ரீதியாக பாதிப்படைவது பெண்தான். ஆணைப் பொறுத்தவரை அது அந்த அளவுக்கு பாதிப்படைவதாக இல்லை. மைனாராக சுற்றிய ஒரு ஆண் எந்த கூச்சநாச்சமும் இல்லாமல் ஊரார் மெச்ச ஒரு திருமணம் செய்து கொள்ள முடியும். ஒரு பெண் ஒரு காதலில் தோல்வியடைந்தாலே அது விபச்சாரமென்று சமூகம் சான்றிதழ் கொடுத்து விடும். ஆகவேதான் பெண்ணைப் பாதுகாக்கும் வண்ணம் சட்டங்களும், திருமண ஒப்பந்தங்களும் தேவைப்படுகின்றன.

பெண்களைப் பொறுத்தவரை நவீன சீர்கேடுகள் எல்லாவற்றையும் தாண்டி காதல் என்பதன் இருப்பை பாதுகாப்பான வாழ்வுக்காக மட்டும் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அதற்காக காதலில் கூட சமரசம் செய்துகொள்கிறார்கள். தன்னை காதலித்து கைவிட்ட பிறகும் ஜெயராமனை கைவிடுவதற்கு பூவரசி தயாரக இல்லை. எப்படியாவது அவருடன் வாழ்வில் செட்டிலாக வேண்டுமென்பது அவரது விருப்பம் பெண் என்ற பாதுகாப்பற்ற நிலையில் வந்திருக்க வேண்டும்.

ஒரு நிலையில் அதுவும் கைகூடாது என்ற பிறகு அவரை தண்டிக்க வேண்டும் என்று பூவரசி யோசித்திருக்கலாம். அந்த தண்டனையை சட்டபூர்வமாகவோ, ஜனநாயகப் பூர்வமாகவோ செய்யாமல் பயங்கரமான வழிமுறையை அவர் ஏன் தேர்வு செய்தார்? அவருடைய முதல் காதல் துரோகத்தை அப்படி சட்டபூர்வமாக தண்டிப்பதற்கு முயன்றும் பயனில்லை என்ற எதார்த்தம் ஒன்று இருக்கிறது.

இன்றைய சமூகத்தில் பெண்கள் தமது எதிர்ப்பை காட்டுவது என்பது அவர்களது அடிமைத்தனத்தோடு தொடர்புடையதாகவே இருக்கிறது. பலவீனமான பாலினம் என்ற முறையில் சமூகம் விதித்திருக்கும் கட்டுக்களை தகர்த்துவிட்டு சுதந்திரமாக எதையும் யோசிக்கும் நிலையில் அவர்கள் இல்லை. அவர்களது நிலை அடிமைத்தனம் என்பதால், அடிமைகள் ஜனநாயக போராட்டம் நடத்துவது நடக்காது என்பதும் அதனுள்ளே உறைந்திருக்கிறது.

அதனாலேயே உணர்ச்சிவசப்பட்ட நிலையில், பரவசமான முடிவுகளை பெண்கள் எடுப்பதை பார்க்கிறோம். அழுவது, ஆராசனை, அவமானப்படுத்துவது, என்ற போராட்ட முறைகள் ஆண்களை விட பெண்களே அதிகம் செய்கிறார்கள். இந்த சமூகத்தில் தன்னை ஏமாற்றிய கயவனை எப்படியும் தண்டிக்க முடியாது, தன் கருவைக் கூட கலைப்பதற்கு காரணமான அவனது குடும்ப வாழ்க்கையை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற விபரீதமான முடிவு இப்படித்தான் வந்திருக்க வேண்டும்.

ஆதலால் இந்த சமூக அமைப்புதான் பூவரசியை இந்த நிலைக்கு தள்ளியதா? எனில் அது பூவரசியின் கொடூரமான நடவடிக்கையை நியாயப்படுத்திவிடாது. அவருக்கு பல தெரிவுகள் கண்முன்னால் இருந்திருக்கின்றன. ஆனால் அதிலெல்லாம் நம்பிக்கை வைக்கும் வண்ணம் சமூகம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

முக்கியமாக அவர் காதலைப் பற்றிக் கொண்டிருக்கும் பழமைவாதக் கருத்துதான் குறிப்பாக விமரிசிக்கப்படவேண்டியது. காதலித்து, கருவும் கொடுத்துவிட்டு பின்னர் வேண்டாம் என்று ஓடும் ஒரு ஓடுகாலியை ஏன் அவர் வெறுக்க வில்லை? இந்தக் கயவனையா காதலித்தோம் என்று அவனை தலைமுழுகுவதை விட்டுவிட்டு ஏன் உறவைத் தொடர வேண்டும்? பூவரசியின் படிப்பு, வேலைக்கு இன்னொரு நல்ல வாழ்வைத் தேடியிருக்கலாமே?

இரண்டாவது மனைவியாக இருந்தாலும் கூட பரவாயில்லை என்று ஒரு படித்த பெண் முடிவெடுப்பது அத்தனை சரியாகப் படவில்லையே? ஒருவனை நினைத்துவிட்டோம், ஆயுள் முழுவதும் அவன் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் அவனுடன்தான் வாழ்வேன் எனும் கற்புக்கரசி அடிமைத்தனம் இன்னும் செல்வாக்கோடு நிலவுகிறது. அதனால்தான் ஜெயராமன் போன்றவர்கள் ஒன்றுக்கு இரண்டாய் மண உறவை அமைத்துக்கொண்டு பதட்டமில்லாமல் வாழமுடிகிறது.

ஆண்களின் பொறுக்கித்தனம் பெண்களால் ஒன்றும் செய்யமுடியாது என்ற யதார்த்தத்திலிருந்து பலமடைகிறது. பெண்களின் பலவீனம் அவர்களது அடிமைத்தனத்திலிருந்து விபரீத முடிவுகளுக்கு கொண்டு செல்கிறது. இறுதியாகப் பார்க்குமிடத்து இன்னும் சமூகவாழ்வில் ஜனநாயகத்தின் வாசனையை அறியாமல் சாதி, மதம், இனம், பால் என பலவகை அடிமைத்தனங்களோடு வாழும் நமது நாட்டைப் பொறுத்தவரை இன்னும் இந்த விபத்துக்கள் அதிகம் நடக்கும் என்றுதான் தோன்றுகிறது.

ஒருதாரா மணஉறவில் பரஸ்பரம் நம்பிக்கை என்பதே அந்த உறவை நீடித்திருக்க வைக்கும். நம்பிக்கை குலைவு ஏற்படும் போது படக்கென்று உடனே விவாகரத்து, கைவிடுதல் பொன்ற முடிவுகளை இந்தியப் பெண்கள் அத்தனை சுலபத்தில் எடுத்து விட முடியாது. ஆண்களைப் பொருத்தவரை பிரச்சினை ஏதுமில்லை என்றால் மண வாழ்க்கைக்கு வெளியே உறவு வைத்துக் கொள்ளத் தயார். அதே கள்ள உறவை பெண்கள் நிகழ்ச்சிப் போக்காக சரியாகச் சொன்னால் மணவாழ்க்கையில் கிடைக்காத அன்புக்காக , இன்பத்திற்காக நாடுகிறார்கள். அந்த முடிவை ஒரு ஆண் எடுப்பதற்கும், ஒரு பெண் எடுப்பதற்கும் பாரிய வேறுபாடு உண்டு.

எனினும் கள்ள உறவு என்பது எப்படிப் பார்த்தாலும் நியாயப்படுத்த முடியாது. இது பழமைவாதம் அல்ல. பெண்களின் பாதுகாப்பற்ற நிலை காரணமாக சமூகம் வைத்திருக்கும் ஒரு ஒழுக்க விதி. இந்த ஒழுக்கத்தை மற்றவர்கள் அறியாத வகையில் மீறலாம் என்றே கள்ள உறவுகள் இயங்குகின்றன. ஆனால் அது என்று தெரியவருகிறதோ அன்று கள்ள உறவு மட்டுமல்ல, எல்லா உறவுகளும் சீர்குலைந்து போகின்றன.

காதலில்லை என்பதற்காக விவாகரத்து வெளிப்படையாக நடக்கும் போது மட்டுமே இந்தப் பிரச்சினைகளை நாம் ஓரளவுக்கு கடந்து செல்ல முடியும். ஆனால் காதலை தவிர்த்து விட்டு மற்ற காரணங்களுக்காக மட்டும் அதிகம் விவாகரத்து நடக்கின்றது. காதலின் பொருட்டு மண முறிவு என்பது எப்போது சாத்தியமாகிறதோ அப்போதுதான் கள்ள உறவுகள் முடிவுக்கு வரும். வேறு வகையில் சொன்னால் பெண்கள் சமூக சுதந்திரத்தை முற்றாக அடையும் போது கள்ள உறவுகளுக்கான தேவை இருக்காது.

எனவே பூவரசி செய்த இந்தக் கொடுமையான நடவடிக்கை என்பது அவரோடு முடிந்து விடக்கூடிய ஒன்றல்ல. நான்கு வயது குழந்தையை நினைத்துப் பார்க்க முடியாத அளவில் கொலை செய்த அவரது நடவடிக்கைக்குப் பின்னர் நமது சமூகத்தின் யதார்த்தத்தை சற்றே நினைத்துப் பார்க்க வேண்டிய கடமையில் நாம் உள்ளோம். இல்லையேல் இந்த சம்பவம் மறந்து விடக்கூடிய மற்றுமொரு கிசுகிசு செய்தியாய் அழிந்து விடும். புதிய செய்திகளுக்காக மனம் காத்திருக்கும்.

_______________________________________________________________________