மராட்டிய மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பையாலால் போட்மாங்கே குடும்பத்தினர் 2006ஆம் ஆண்டு, செப்டம்பர் மாத இறுதியில் சாதி இந்துக்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தை வாசகர்கள் மறந்திருக்க முடியாது.
கயர்லாஞ்சி கிராமத்தில் போட்மாங்கே குடும்பத்தினருக்கு வறண்டு போன ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் தங்களுக்குத் தேவைப்படும் வசதியோடு ஒரு வீடு கட்டிக் கொள்ள பையாலால் விரும்பினார். ஒரு தாழ்த்தப்பட்டவன் கல் வைத்த வீடு கட்டுவதை விரும்பாத அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி வெறியர்கள், பையாலால் குடும்பத்தின் நியாயமான விருப்பத்தை வன்மத்துடன் எதிர்த்து வந்தனர். மேலும், பையாலாலுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்து இரண்டு ஏக்கர் நிலத்தைக் கிராமத்தின் பொதுப் பாதைக்குத் தேவை என வஞ்சகமாகப் பறித்துக் கொண்டனர்.
அபகரிக்கப்பட்ட அந்த நிலம், பையாலாலின் நிலத்தையொட்டியுள்ள ‘பிற்படுத்தப்பட்ட’ சாதியைச் சேர்ந்த அக்கிராமத் தலைவரின் நிலத்திற்குள் டிராக்டர்கள், வண்டிகள் சென்று வருவதற்கான பாதையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சட்ட விரோதமான நில ஆக்கிரமிப்பை பையாலாலின் மனைவி சுரேகா எதிர்த்து வந்தார்.
கயர்லாஞ்சிக்கு அருகில் அமைந்துள்ள துசாலா கிராமத்தில் வசிக்கும் சுரேகாவின் ஒன்றுவிட்ட சகோதரர்களான சித்தார்தும், ராஜேந்திராவும், அந்த இரண்டு ஏக்கர் நிலத்தை சுரேகாவிற்குப் பெற்றுத் தரும் நோக்கத்தோடு, கயர்லாஞ்சியைச் சேர்ந்த ஆதிக்க சாதி பிரமுகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்கச் சாதி வெறியர்கள் பிரச்சினையைத் திசைதிருப்பும் நோக்கில், சுரேகாவுக்கும் அவருக்காகப் பரிந்து பேசிய சித்தார்த்துக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும்; சுரேகா கள்ளச் சாராய வியாபாரி என்றும் கதை கட்டினர்.
கயர்லாஞ்சிக்கு 03.09.2006 அன்று நியாயம் கேட்க வந்த சித்தார்தை, ஆதிக்க சாதி வெறியர்கள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் துரத்தியடித்துத் தாக்கினர். சாதிவெறியோடு நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 29.09.2006 அன்று 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மகாதி தாலுகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அன்றே (29.09.2006) பிணையிலும் விடுவிக்கப்பட்டனர். இதற்குப் பழிவாங்கும் நோக்கத்தோடுதான் கயர்லாஞ்சி வன்கொடுமை தாக்குதல் நடந்தது.
விடுவிக்கப்பட்ட 12 பேரும் தம் உறவினர்கள் சுமார் 40 பேருடன் சித்தார்தைத் தேடி துசாலாவுக்குச் சென்றனர். இவர்கள் வரும் செய்தியைக் கேட்ட சித்தார்த்தும் ராஜேந்திராவும் ஓடி ஒளிந்து கொண்டனர். அவர்கள் இருவரையும் காணாத கூட்டம் அடுத்து கயர்லாஞ்சி நோக்கிச் சென்றது. அக்கூட்டத்துடன் கயர்லாஞ்சியைச் சேர்ந்த ஆதிக்க சாதி இந்துக்களும் சேர்ந்து கொண்டு பையாலாலின் குடிசையை நோக்கிப் பயங்கர ஆயுதங்களுடன் சென்றனர். குடிசைக்குள் பையாலாலின் மனைவியும் குழந்தைகளும் மட்டுமே இருந்தனர்.
குடிசைக்குள் புகுந்த ஆதிக்க சாதிவெறியர்கள், அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்தி, கையோடு கொண்டு வந்திருந்த ஆயுதங்களால் அவர்களைக் கொடூரமாகத் தாக்கினர். அதோடு அந்த நால்வரையும் தெருத்தெருவாக இழுத்துச் சென்றனர். ஊர்ப் பொது இடத்திற்குக் கொண்டு வந்து பையாலாலின் மனைவியையும், மகளையும் கூட்டத்திலிருந்த எல்லா ஆண்களும் மாறிமாறிப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். சூழ்ந்து நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்களுள் ஒருவரும் இந்த வன்செயலைக் கண்டிக்கவுமில்லை, தடுக்கவும் முற்படவில்லை.
பிறகு, ஒரு கொடூரமான செயல் அரங்கேறியது. தாயையும் தங்கையையும் புணருமாறு பையாலாலின் மகன்கள் சுதிருக்கும் ரோஷனுக்கும் கட்டளையிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே அவர்களின் ஆண்குறிகளைக் கத்தியால் வெட்டினர். பிறகு அவர்களை அரைகுறை உயிரோடு வானத்துக்கும் பூமிக்குமாகத் தூக்கியெறிந்து பந்தாடினர். அவர்களது உயிர் பிரியும்வரை இந்த “விளையாட்டு’ நடந்தது.
குற்றுயிராய்க் கிடந்த இரு பெண்களின் குறிகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடியில் பொருத்தப்படும் கம்புகளைச் சொருகினர். சிலர் நன்கு கூர்மையாகச் சீவப்பட்ட மூங்கில் குச்சிகளை அடித்துச் சொருகினர். அதிக இரத்தப் போக்கினாலும் தாங்க முடியாத இச்சித்திரவதைகளினாலும் உயிரிழந்த அப்பெண்களது உடல்களைத் தெருவில் வீசிவிட்டுச் சென்றனர்.
மிகவும் வக்கிரமான முறையிலும், கொடூரமான முறையிலும் நடத்தப்பட்ட இவ்வன்கொடுமைத் தாக்குதல் சம்பவம், அதன் முழு பரிமாணத்தோடு வெளியே தெரிவதற்குக்கூடப் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. குறிப்பாக, மகாராஷ்டிர போலீசும், மருத்துவர்கள் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் – இந்த அதிகாரிகளுள் பலர் “தலித்’கள் என்பதுதான் வெட்கக்கேடு – இவ்வன்கொடுமையை மூடிமறைத்துவிடுவதிலும், பூசி மெழுகுவதிலும் குறியாக இருந்து செயல்பட்டனர். அதிகாரி தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும்கூட, அவரும் சாதிய சமூகம் விதித்திருக்கும் மன ஓட்டத்தின்படிதான் செயல்படுவார் என்பதையே கயர்லாஞ்சி எடுத்துரைக்கிறது.
இச்சம்பவம் நடந்த அன்றிரவே பையாலால், சித்தார்த்தை அழைத்துக்கொண்டு போய் அண்டால்கவான் போலீசு நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அன்றிரவு 11.00 மணிக்கு கயர்லாஞ்சி கிராமத்திற்குச் சென்று விசாரித்தனர். அத்தகைய சம்பவம் எதுவும் அங்கே நிகழவில்லை என சாதி இந்துக்கள் அனைவரும் ஒரே குரலில் சொன்னதையே போலீசார் தேவ வாக்காக எடுத்துக் கொண்டு திரும்பிவிட்டனர். கயர்லாஞ்சியில் வசிக்கும் பிற தாழ்த்தப்பட்ட குடும்பங்களிடமோ, கோண்டு பழங்குடியினர் மத்தியிலோ விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் போலீசுக்குக் கிஞ்சித்தும் இருக்கவில்லை.
புரட்சிகர அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் கயர்லாஞ்சியில் நடத்திய நேரடி விசாரணை; அவ்வமைப்புகள், ஆதிக்க சாதிவெறி பிடித்த குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரி நடத்திய போராட்டங்கள்; அப்போராட்டத்தை ஒடுக்க போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நடந்த ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனின் மரணம்; போராட்டத்தை முன்னின்று நடத்திய முன்னனியாளர்கள் பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டது; நக்சல்பாரிகள்தான் இப்போராட்டத்தைத் தூண்டிவிடுவதாகக் கூறி, இந்த அடக்குமுறையை நியாயப்படுத்திய மகாராஷ்டிர அரசின் திமிர் — இவற்றையெல்லாம் தாண்டிதான் கயர்லாஞ்சி வன்கொடுமை தாக்குதல் சம்பவம் வெளியுலகுக்குத் தெரிந்தது.
அதிகார வர்க்கம் விசாரணை நிலையிலேயே இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்கு எல்லா உள்ளடி வேலைகளையும் செய்தது. போட்மாங்கேயின் மனைவி, மகள், இரு மகன்கள் ஆகிய நால்வரின் சடலங்கள் உருக்குலைந்து போயிருந்ததால், ‘உரிய விதி’களின்படி பிரேதப் பரிசோதனை செய்ய இயலவில்லை என் மருத்துவர் குழு அறிவித்தது. கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் யோனிக் குழாய்களையும் கருப்பைகளையும் சோதித்ததில் பெண்கள் இருவரும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறியது.
தேசிய மனித உரிமை ஆணையமும் பல்வேறு ஜனநாயக இயக்கங்களும் கொடுத்த தொடர் நெருக்கடிகளின் காரணமாக, அந்த நான்கு பேரின் சடலங்களையும் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது. ஆனால், “காலம் கடந்துவிட்ட’தால் இந்தச் சோதனையால் புதிதாக எந்தப் பயனும் கிடைக்கவில்லை என அரசு அறிவித்தது. போலீசார் தமது ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாயினரா என்பதை உறுதிபடுத்தும் நோக்கில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டனர்.
கயர்லாஞ்சி கிராமத்தில் வாழும் ‘பிற்படுத்தப்பட்ட’ சாதியைச் சேர்ந்த பெரும்பாலான குடும்பங்களுக்கு இந்த வன்கொடுமை தாக்குதல் சம்பவத்தில் நேரடித் தொடர்பிருந்தாலும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மையப் புலனாய்வுத் துறை 46 பேரிடம் மட்டுமே விசாரணையை மேற்கொண்டது. அவர்களுள் 35 பேர் விசாரணை நிலையிலேயே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்; 11 பேர் மீது மட்டுமே கொலை, சதி மற்றும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த பண்டாரா மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட பதினொரு பேரில் எட்டு பேரைக் குற்றவாளிகள் என்று அறிவித்திருக்கிறது. இந்த எட்டு பேரில் ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது; மீதி மூன்று பேர் குற்றமிழைத்ததற்குச் சாட்சிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரில், பையாலாலிடமிருந்து இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரித்துக்கொண்ட கயர்லாஞ்சி கிராமத் தலைவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. விடுவிக்கப்பட்ட மூவருமே ஓட்டுக்கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் எனத் தீர்ப்பின் பின் சுட்டிக் காட்டியுள்ளார், பையாலால்.
எனினும், தண்டிக்கப்பட்ட எட்டு பேரில் ஒருவர்கூட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளெனத் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. முகேஷ் புஸம், சுரேஷ் கான்தாதே என்ற இருவரும், “பையாலாலின் மனைவி சுரேகாவையும், அவரது மகள் பிரியங்காவையும் சாதி பெயரைச் சொல்லிக் கேவலமாகத் திட்டியதைக் கேட்டதாக” நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருந்தனர். ஆனால், விசாரணை நீதிமன்றம் அவ்விருவரின் சாட்சியத்தை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.
இதன் மூலம் இந்தக் கொலைகள் சாதிய வெறியினால் நடந்தது என்பது மறுக்கப்பட்டு, ஏதோ தனிப்பட்ட சொத்துத் தகராறில் நடந்த கொலை; முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழி வாங்குவதற்காக நடைபெற்றுள்ள கொலை எனக் குறிப்பிட்டு, உரிய நீதி கிடைப்பதை மறுத்துவிட்டது. மேலும், குற்றவாளிகள் இக்கொலைகளைச் செய்வதற்கு எவ்விதச் சதித் திட்டமும் தீட்டவில்லை எனத் தீர்ப்பு அளித்திருப்பதன் மூலம், இவ்வக்கிரமான படுகொலைகள் ஏதோ உணர்ச்சி வேகத்தில் நடந்துவிட்ட அசாம்பாவிதம் போலப் பூசி மெழுகியிருக்கிறார் நீதிபதி எஸ்.எஸ். தாஸ்.
சிவ்லால் பராடே மகராஜ் என்பவர்தான், போட்மாங்கேயின் மகளான பிரியங்காவின் உடல் தன் நிலத்துக்கு அருகில் ஓடும் கால்வாயில் மிதப்பதாக போலீசாரிடம் தகவல் கொடுத்தார். சடலத்தின் பெண் குறிக்குள் கூரிய கம்பு சொருகப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். பிரியங்காவின் பிரேதத்தையும்கூடப் பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தன் பெயரை வெளியிட விரும்பாத ஒரு போலீசுகாரர் கூறியிருந்தார். ஆனால், விசாரணை நீதிமன்றமோ சுரேகாவும், பிரியங்காவும் பாலியல் பலாத்காரப்படுத்தப்படவில்லை என்பதோடு, அவர்கள் மானபங்கப்படுத்தப்பட்டதற்குக்கூட ஆதாரமில்லை எனக் கூறிவிட்டது.
இராசஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி என்ற ‘கீழ்சாதி’ப் பெண்ணை ஆதிக்கசாதி இந்துக்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், “கீழ்சாதிப் பெண்ணை உயர் சாதியினர் தொட்டிருக்கக்கூட மாட்டார்கள்” எனக் கூறியது. கயர்லாஞ்சி வழக்கில் இராசஸ்தான் நீதிமன்றத்தின் அந்த ஆதிக்க சாதித் திமிரை, ”ஆதாரமில்லை” என்ற வார்த்தைகளில் கக்கியிருக்கிறார், நீதிபதி தாஸ். இது மட்டுமின்றி, நீதிபதி தாஸ் இத்தீர்ப்பை எழுதும் போது கண்ணீர் விட்டதாகக் கூறப்படுகிறது. அது, ஆதிக்க சாதியைச் சேர்ந்த குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் வழிந்த கண்ணீர். இந்திய நீதிமன்றங்களிடம் தீண்டாமை மனோபாவம் எத்தனை தூரம் வேர்விட்டுப் பரவியிருக்கிறது என்பதற்கு தாஸின் கண்ணீரே சாட்சி.
மாண்புமிகு நீதிபதிகளும், புனிதமானதாகக் கூறப்படும் இந்திய நீதிமன்றங்களும் வன்கொடுமை வழக்குகளில் ஆதிக்க சாதியினருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்குவதொன்றும் புதிய விசயம் கிடையாது. இக்குற்றச்சாட்டுக்கு மேலும் ஆதாரம் வேண்டும் என்று ‘நடுநிலையாளர்கள்’ விரும்பினால், மேலவளவு வழக்கிலும், திண்ணியம் வழக்கிலும் நீதிமன்றங்கள் அளித்திருக்கும் தீர்ப்பைப் புரட்டிப் பார்த்துக் கொள்ளட்டும்.
இதே பண்டாரா மாவட்டத்திலுள்ள சுரேவாடா கிராமத்தில் அமைந்திருக்கும் அரசுப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் தலைமை ஆசிரியையாக இருந்தார் என்ற காரணத்திற்காக, அவர் மாறுதல் செய்யப்பட்டவுடன் பொறுப்பேற்றுக் கொண்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆசிரியர், அப்பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது ”கோமியத்தை”த் தெளித்துப் ‘புனித’ப்படுத்தியுள்ளார். இவ்வழக்கை விசாரித்த பண்டாரா மாவட்ட சிறப்பு நீதிமன்றம், ”மாணவர்கள் மீது தெளிக்கப்பட்டது பசு மூத்திரம்தான் என்பதற்கு ஆதாரமில்லை; எனவே, இவ்வழக்கு வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வராது” எனக் குறிப்பிட்டு, வழக்கையே தள்ளுபடி செய்துவிட்டார்.
”மகாராஷ்டிராவில் குற்றங்கள் 2007” என்ற தலைப்பில் மகாராஷ்டிர மாநிலப் புலனாய்வுப் போலீசார் தயாரித்துள்ள அறிக்கையில், ”வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில், 2 சதவீதத்துக்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதாக”க் குறிப்பிட்டுள்ளது. ‘தேசிய’ அளவில் எடுத்துக் கொண்டாலும் இதில் எவ்வித மாற்றமும் இருக்கப் போவதில்லை. உண்மை இப்படியிருக்க, பார்ப்பன சத்திரிய சாதியினரும், ‘பிற்படுத்தப்பட்ட’ சாதியைச் சேர்ந்தவர்களும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு, ”தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், அதனால் அச்சட்டத்தை அடியோடு நீக்க வேண்டும்” என்று கோரி வருகிறார்கள். அதிகார வர்க்கமும் நீதிமன்றங்களும் வழக்குப் பதிவதிலும், விசாரணை நடத்துவதிலும், தீர்ப்பு வழங்குவதிலும் இச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதன் மூலம், சாதி இந்துக்களின் அக்கோரிக்கையை மறைமுகமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதற்கு கயர்லாஞ்சி, மேலவளவு, திண்ணியம், சுரேவாடா வழக்குகளில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகளே சாட்சியங்களாக உள்ளன.
____________________________________________
வினவு குறிப்பு: 2008 ஆம் ஆண்டு இறுதியில் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரை இது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் மீது செசன்ஸ் நீதிமன்றம் (பந்தாரா அமர்வு நீதிமன்றம்) அளித்த தீர்ப்பைத்தான் மேலே கட்டுரையில் பார்த்தீர்கள். இதை எதிர்த்து அந்த குற்றவாளிகள் நாக்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதன்படி தூக்கு தண்டனை பெற்ற ஆறு பேருக்கும், ஆயுள் தண்டனை பெற்ற இரண்டு பேருக்கும் அத்தண்டனைகள் ரத்து செய்யப்பட்டு, 25 வருடங்கள் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது. இது பையாலால் போட்மாங்கேவுக்கும், தலித் – மனித உரிமை – புரட்சிகர அமைப்புகளுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
அரசுத் தரப்பு வேண்டுமென்றே ஆதிக்க சாதி குற்றவாளிகளை காப்பாற்றும் வண்ணம் இந்த வழக்கில் செயல்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றம் இப்படி தீர்ப்பு வழங்குவதற்கு தோதாகத்தான் முந்தைய நீதிமன்ற தீர்ப்பு அமைந்திருந்தன. அதைத்தான் புதிய ஜனநாயகம் அன்றே குறிப்பிட்டிருந்தது.
போபாலுக்கே நீதி வழங்கப்படாத பொழுது ஒரு அப்பாவி தலித்துக்கு மட்டும் நீதி வழங்கப்படுமா என்ன? மிகக் கொடூரமான முறையில் போட்மாங்கே குடும்பத்தினரை கொன்ற ஆதிக்க சாதியினர் இனி மற்ற ஊர்களில் இதை வைத்தே சட்டப்பூர்வமாகவே எல்லா கொடுமைகளையும் செய்யலாம் என்ற திமிரை பெறுவர்.
ஆம். இந்தியாவில் தலித்துகளுக்கு சட்டப்படி எந்த நீதியும் கிடைக்காது. எனில் அந்த சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு நமக்கான நீதியையே நாமே பெறுவது ஒன்றுதான் வழி!
_____________________________________________________
கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் !! | வினவு!…
போபாலுக்கு வழங்கப்படாத நீதி ஒரு தலித்துக்கு மட்டும் வழங்கப்படுமா என்ன? ஆதிக்க சாதியினர் இனி சட்டப்பூர்வமாகவே எல்லா வன்கொடுமைகளையும் செய்யலாம் என்ற திமிரை பெறுவர்….
மிகுந்த வெட்கக்கேடான விஷயம்!
அய்யோ! கயர்லாஞ்சி என்ற பேரைக் கேட்டவுடனேயே உடல் நடுங்குகிறது…
ஆறு பேருக்குத் தூக்கு என்பதே குறைந்தபட்சத் தண்டனை. அதற்குக் கண்ணீர் விட்ட நீதிபதி முகத்திலேயே அப்போது காறித்துப்ப வேண்டும் போலிருந்தது.
அதிலும் இப்படிப் பட்ட மோசடியா? தாங்க முடியாத அதிர்ச்சி இது.
இந்த அநீதியை எதிர்த்துப் போராடியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் ப்ரியங்காக்களும் சுரேகாக்களும் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள்.
சிறப்பான கட்டுரை . தீபாவின் கோபத்தை நானும் உணர்கிறேன்
[…] This post was mentioned on Twitter by Deepa and ஏழர, Kirubakaran S. Kirubakaran S said: கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் !! http://bit.ly/asvxzk […]
//நீதிமன்றம், “கீழ்சாதிப் பெண்ணை உயர் சாதியினர் தொட்டிருக்கக்கூட மாட்டார்கள்” எனக் கூறியது.// என்ன கொடுமை 🙁
கயாலாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4624:2008-12-14-16-55-40&catid=68:2008
கருணையினால் அல்ல…
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1246:2008-05-06-20-33-25&catid=35:2006
கயர்வாஞ்சி தாழ்த்தப்பட்டோர் படுகொலை : சாதிவெறியர்களின் வக்கிரம்-கொடூரம்!
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1241:2008-05-06-20-20-30&catid=35:2006
சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்… அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1103:2008-05-01-09-40-10&catid=36:2007
//நீதிமன்றம், “கீழ்சாதிப் பெண்ணை உயர் சாதியினர் தொட்டிருக்கக்கூட மாட்டார்கள்” எனக் கூறியது.//
அடப்பாவிகளா!
காலம் காலமா தாழ்ந்தபட்ட மக்களுக்கு இப்படிபட்ட அநீதியை மட்டுமே வழங்கி கொண்டிருக்கும் அரசியலைப்பு நமக்கு தேவை தானா?
இந்து உள்ளிட்ட எந்த நாளிதழும் இந்த செய்தியை உடனே வெளியிடவில்லை. பல நாட்களுக்குப் பிறகு சிறிய கட்டம்கட்டி போட்டிருந்தார்கள்.
மனுதர்மம் போல தான் சட்டமே இந்தியாவில் இருக்கிறது என்று நினைக்கிறேன் வினவு . மிகவும் வெட்கப்பட வேண்டிய விடயம் .
//நீதிமன்றம், “கீழ்சாதிப் பெண்ணை உயர் சாதியினர் தொட்டிருக்கக்கூட மாட்டார்கள்” எனக் கூறியது.//
நடந்த வன்கொடுமையை விட கேவலம் இது தான். அம்மக்களை இதை விட கேவலமாக யாரும் அசிங்கப்படுத்த முடியாது!
’கயர்லாஞ்சி’ இந்த பெயரை இப்போது தான் கேள்விப்படுவதாக பாவ்லா காட்டும் சில புத்ஸாலிகள், சொல்லும் ஓரே ஒப்பாரி ‘ இப்ப எல்லாம் யாரு சார் சாதி பாக்குறா’
குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல, தீர்ப்பெழுதியவர்களும் கூண்டில் நிற்கும் ’இறுதிதீர்ப்பு நாள்’ விரைவில் வரும்! அன்று மக்கள் தீர்ப்பெழுதுவார்கள்…
///இந்த அநீதியை எதிர்த்துப் போராடியே ஆக வேண்டும்////
போராடுவோர் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர்ந்து, அவர்களை தூக்கிலிடுவோம்! சத்திய மேவ ஜெயதே!!!
போராடுவோர் மீது போலீஸ்/துணை ராணுவத்தை ஏவி தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொல்லுவோம்! ஜெய் ஹிந்த்!!!
என்னது போராடுராங்களா? இதுக்கு பாகிஸ்தான் சதி தான் காரணம். அவங்கள எல்லாம் என்கவுண்டர்ல சுடனும். பொது அமைதிய குலைக்கிறானுங்க, வளர்ச்சிய சீர் குலைக்குறானுங்க. இவங்களுக்கு இதே வேலையாப்போச்சு..
அவ்வ்வ்வ்வ்…
பாரத் ஆத்தாக்கீ ஜெ! (ச் சீ, ஜெ இல்லைப்பா.. ) ஜே!!!
கயர்லாஞ்சி வழக்கில் வழங்கப்பட்டுள்ள அநீதி இதுபோன்றவற்றைச் சகித்துக்கொண்டிருப்போருக்குக் கொடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு செருப்படி.
மேலும், முந்தையை தீர்ப்பு ஒன்றில் //நீதிமன்றம், “கீழ்சாதிப் பெண்ணை உயர் சாதியினர் தொட்டிருக்கக்கூட மாட்டார்கள்” எனக் கூறியது.// பற்றி, ”நடந்த வன்கொடுமையை விட கேவலம் இது தான். அம்மக்களை இதை விட கேவலமாக யாரும் அசிங்கப்படுத்த முடியாது!” என்று சரியான புரிதலை வெளிப்படுத்தியுள்ளார்.அக்காகி.
25 ஆண்டுகள் முன்பு பாலக்காட்டு நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னது, “தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டுப் பெண்களுடன் தகாத உறவுகொள்ள, அவள் வீட்டுக்காரன் வெளியே போயிருக்கும்போது நுழையும் ’அக்கிரகாரத்து மனுஷன்’, அக் குடிசை வாயிலில் தண்ணீர் செம்பை – கமண்டலம்- வைத்து விட்டு நுழைவான். அப்பெண்ணும் தனது மறுப்பை சொல்ல முடியாது, அவள் கணவனும் திரும்பி வந்தாலும் உள்ளே நுழைய முடியாது. இதுதான் நண்பரது தந்தையார் காலம் வரையிலும் கூட நிலவிய ஒழுக்கம். தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகளின் முகச்சாடையை வைத்து, இன்னார் கொடுக்கு என்று கேலி பேசுவார்கள் அக்கிரகாரத்துக்காரர்கள்” என்று சொன்னார்.
உடல் தூண்டுதலுக்கே பிறர் அறிய சாதிபாராது ஒழுகும்போது, ஆதிக்க வெறியை வெளிப்படுத்த அவ்வாறு செய்யமாட்டான் என்று கொடுக்கப்படும் நீதி கண்ணைக் கட்டிக்கொண்டு, சாட்சி எனும் கட்டைக்காலில் நின்றுகொண்டு கொடுக்கப்படும் அப்பிராணி ‘நீதி’ அல்ல. கண்ணை அகலத் திறந்துகொண்டு அடித்துச் சொல்லும் அதிகாரத் திமிர்.
Caste discrimination — U.K. Dalits win the argument, nearly
There’s a palpable mood of optimism among Britain’s 2,00,000-strong Dalit community as it waits for the Government to take a decision on its long-standing campaign for caste discrimination to be recognised as racism. The buzz is that, barring a last-minute hiccup, Britain could soon become the first European, indeed Western, country to declare caste prejudice unlawful under its race laws — a move which will not please New Delhi which has consistently opposed caste being clubbed with race.
Britain’s new Equality Act already empowers the Government to declare “caste to be an aspect of race” without seeking fresh parliamentary approval.
……
….
..
http://www.thehindu.com/opinion/op-ed/article611931.ece
அந்தக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்திருக்கிறது. ”இந்திய வரலாற்றில் தலித்துகளுக்கெதிரான வன்கொடுமையில் இப்போதுதான் முதன்முதலாக மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது”
ஆனால் காலச் சுவடு இணையத்தில் மட்டும் கீழ்க்காணும் பதிவைச் செய்திருந்தார்கள்.
//”ஒவ்வொரு தலித்தும் ‘மனித உரிமையைக் காக்கப் போராடும், ஒரு போராளியே’ என்பதை நிரூபிக்கும் வகையில் வருணாசிரம தர்மத்தாலும் சாதியமைப்பாலும் மன நோயாளிகளாக மாற்றப்பட்ட கயர்லாஞ்சிக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த மரண தண்டனை ரத்துசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்துவதை தலித்துகள் மனித உரிமைகளுக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.//
#:( – வார்த்தைகளின் விசம்
Pls try to make these kind of articles be available in English too.