Wednesday, December 4, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்இந்தியாபெல்லாரி ரெட்டி சகோதரர்கள்: சுரங்கத் தொழில் மாஃபியாகள்!

பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்: சுரங்கத் தொழில் மாஃபியாகள்!

-

பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் - சுஷ்மா சுவராஜ்
பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் – சுஷ்மா சுவராஜ்

இந்தியாவின் மத்திய-கிழக்கு மாநிலங்களில் நடத்தி வரும் போரான காட்டு வேட்டையின் (Operation Greenhunt) அவசியம், நோக்கம் குறித்து, சோனியா – மன்மோகன் சிங் கும்பலின் ஊதுகுழலான சிதம்பரம் சோல்லி வருவதை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பாருங்கள். “நாட்டின் பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் அப்பிரதேசத்தை முன்னேற்றவும் அங்கு வளர்ச்சித் திட்டங்களை அமலாக்கத் தடையாகவும் உள்ள மாவோயிச நக்சல்பாரிகளை ஒழித்துக் கட்ட வேண்டும்” என்கிறார் சிதம்பரம்.

“என்னென்ன வளர்ச்சித் திட்டங்கள்? யார் யாருக்கான வளர்ச்சித் திட்டங்கள்?” என்று கேட்கிறார்கள், முற்போக்குப் பொருளாதார நிபுணர்கள், நாட்டுப்பற்றுடைய அறிவியல்-சுற்றுச்சூழல் அறிஞர்கள், உண்மையான மனித உரிமைப் போராளிகள், ஜனநாயக அறிவுஜீவிகள், நியாயமான பத்திரிக்கை – வானொளி செய்தியாளர்கள்.

ஒவ்வொரு நாளும் நிறையவே சண்டப்பிரசண்டம் செய்யும் சிதம்பரம் இந்தக் கேள்விகளுக்கு ஒருபோதும் பதில் சோல்வதில்லை. ஆனால், அவற்றுக்கான பதில்களை, நடைமுறை எடுத்துக்காட்டு மூலம் கர்நாடகா – ஆந்திரா எல்லையில் செய்து காட்டி வருகிறார்கள், இப்போது நாடு முழுவதும் பிரபலமாக அறியப்பட்டுவரும் “பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்.”

யார் இந்த ரெட்டி சகோதரர்கள்? வெங்காய விளைச்சலில் பிரபலமான பெல்லாரி மாவட்டத்தின் தலைநகர் பெல்லாரி நகரின் போலீசு நிலையத் தலைமைக் காவலர் கெங்கா ரெட்டியின் மூன்று மகன்கள்தாம் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி. அவர்கள் வளர்ந்த போலீசுக் காலனியில் கற்றுக் கொண்ட இரண்டு பாடங்கள்: அதிகாரத்தைப் பிடிப்பதற்கு மிக முக்கிய கருவியாகிய பணம் பாதாளம் வரை பாயும்; சட்டத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, அதை ஓய்வின்றி அலைக்கழியச் செய்து விட்டு நீ உன் வேலையைப் பார்; இந்த இரண்டு பாடங்களையும் வைத்து சிட்பண்டு, ஓட்டல், வாரப்பத்திரிகை ஆகிய தொழில்களை நடத்தி, எல்லாவற்றையும் விட முக்கியமாக இரும்புக் கனிமச் சுரங்கத் தொழிலில் வெறித்தனமாக இறங்கி, பணத்தைக் குவிப்பதற்காக பல சட்டவிரோத – மோசடி வேலைகளில் ஈடுபட்டு, ஒரு பத்தாண்டுக்குள் கர்நாடகா மாநில அரசியலிலும், பொருளாதாரத்திலும் அசைக்க முடியாத பெரும் புள்ளிகளாகி விட்டார்கள்.

பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் மூத்தவர் கருணாகர ரெட்டி, கர்நாடகா மாநில வருவாத் துறை அமைச்சர். அடுத்தவர் ஜனார்த்தன ரெட்டி – மூவரில் வில்லத்தனமான நாயகன், மாநில சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர். மூன்றாமவர், கர்நாடகா மாநில பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவராக உள்ள சோமசேகர ரெட்டி. மாநில மருத்துவ அமைச்சர் பி.சீறீராமுலு – இவர்களின் உடன்பிறவா சகோதரர். கர்நாடகாவின் கடந்த மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்கு வேண்டி “ஆப்பரேசன் கமல்” (தாமரை நடவடிக்கை) என்ற பெயரில் பணபலமும் ஆள்பலமும் கொடுத்து, பா.ஜ.க.வெற்றியின் சூத்திரதாரர்களாக இருந்தவர்கள் இந்த ரெட்டி சகோதரர்கள்தாம்.

எப்போதும் பல கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ரெட்டி சகோதரர்களின் சட்டைப் பையில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, பெல்லாரி மாவட்ட நிர்வாகத்தில் சில அதிகாரிகளை முதலமைச்சர் எடியூரப்பா மாற்றம் செய்ய முயன்றபோது, 40 எம்.எல்.ஏ.களை ஐதராபாத்துக்குக் கடத்திக் கொண்டு போனார்கள், ரெட்டி சகோதரர்கள். எடியூரப்பா ஆட்சியைக் கவிழ்த்துவிட்டுத் தமது விசுவாசியை முதலமைச்சராக்கி விடப் போவதாக மிரட்டினர். சுஷ்மா, அத்வானி போன்ற பா.ஜ.க. தலைவர்கள் பேரம் பேசி எடியூரப்பாவை அடக்கி வைத்தனர். பல் பிடுங்கப்பட்ட எடியூரப்பா தன் நிலைக்காக தொலைக்காட்சியிலேயே பகிரங்கமாக கதறி அழுது விட்டார்.

பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் கர்நாடக அரசியலில் மட்டுமல்ல, ஆந்திராவிலும், பா.ஜ.க. தலைவர்களைவிட காங்கிரசின் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் நெருக்கமானவர்கள். ராஜசேகர ரெட்டியின் மருமகனுடன் இரும்புக் கனிமச் சுரங்கத் தொழிலில் நெருங்கிய கூட்டு வைத்திருப்பவர்கள். சோனியாவுக்கு எதிராக சுஷ்மாவை நிறுத்தி பிரதமராக்க முயன்ற ரெட்டி சகோரர்கள், இப்போதும் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியை ஆந்திர முதல்வராக்குவதற்குப் பணத்தை வாரி இறைக்கிறார்கள்.

ரெட்டி சகோதரர்களின் துரித வளர்ச்சி!

இரும்புக் கனிமச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு, அரசு அனுமதியுடன் இரும்புக் கனிமத்தை வெட்டியெடுத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும், இலாபம் சம்பாதிப்பதும், அதேபோல அரசியலில் ஈடுபட்டு அமைச்சர்களாவதும் செல்வாக்குப் பெறுவதும் குற்றமா? இதைத்தானே ரெட்டி சகோதரர்கள் செய்தார்கள் என்று பா.ஜ.க. வாதிடுகிறது. “அப்பாவி”கள் பலரும் அவ்வாறே எண்ணலாம்.

ஆனால், “2003-2004-ஆம் ஆண்டு விவரப்படி பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் வருமான வரி செலுத்தவேண்டிய அளவுக்குக்கூட வருமானம் இல்லாதவர்கள். அதன்பிறகு அவர்கள் 50,000 கோடி ரூபா மதிப்புடைய சோத்துக்களைக் குவித்துள்ளார்கள். இந்த செல்வத்தை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்?” என்று கேட்கும் கர்நாடகா மேலவை உறுப்பினர் கொண்டையா, அரசு சோத்துக்களைப் பயன்படுத்தி சோத்துச் சேர்த்த குற்றத்துக்காக, ஜனார்த்தன மற்றும் கருணாகர ரெட்டி சகோதரர்கள் மற்றும் அவர்களின் உடன்பிறவா சகோதரர் சிறீராமுலு ஆகியோரின் பதவிகளைப் பறிக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் மூலம் தேர்தல் ஆணையாளரிடம் மனுக் கொடுத்துள்ளார்.

ரெட்டி சகோதரர்களின் சட்டவிரோதச் செயல்கள் குறித்து மத்திய புலனாவு பிரிவின் விசாரணைக்குப் பரிந்துரைக்கப் போவதாக மாநில ஆளுநர் மிரட்டியிருக்கிறார். “காங்கிரசின் எடுபிடியாகச் செயல்படும் சி.பி.ஐ. விசாரிக்கக் கூடாது, மாநில லோகாயுதா விசாரணை நடத்தும்” என்று மாநில பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது. மாநில ஊழல் அதிகார முறைகேடுகளை தனிச் சிறப்பாக விசாரிப்பதற்காக உள்ள சிறப்பு ஆணையம் லோகாயுதா. தற்போது அப்பதவியில் உள்ள சந்தோஷ் ஹெக்டே, ரெட்டி சகோதரர்களின் ஊழல்-அதிகார முறைகேடுகளுக்கு எதிராகத் தாம் எடுத்த நடவடிக்கைகளுக்கு மாறாக மாநில அரசு செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, கடந்த ஜூனில் பதவி விலகல் கடிதம் கொடுத்தார். இதனால் மாநில ஆட்சியாளர்களின் குட்டு வெளிப்பட்டுப் போனதால் பதறிப்போன பா.ஜ.க. தலைமை அத்வானி மூலம் ஹெக்டேயை அணுகியது. “மாநில அரசின் தவறுகள் திருத்தப்படும், லோகாயுதாவுக்குக் கூடுதல் அதிகாரம் தரப்படும்” என்ற வாக்குறுதி கொடுக்கவே, ஹெக்டே பதவி விலகலை நிறுத்தி வைத்துள்ளார்.

ஆனால், “தனது கட்சிக்காரர்களுக்கு எதிராக காங்கிரசின் சதி” என்ற தயார்நிலை பதிலை பா.ஜ.க. எல்லாவற்றுக்கும் தீர்வாக வைத்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதல், குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான இசுலாமியர் படுகொலைகள் ஆகியவற்றிலிருந்து குற்றவாளிகளைத் தப்புவிப்பதில் அக்கட்சி எவ்வளவு அக்கறை கொண்டுள்ளதோ, அதேபோல பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் விவகாரத்திலும் கடமைப்பட்டுள்ளது. ரெட்டி சகோதரர்களின் பணபலத்தைக் கொண்டு நடத்தப்பட்ட “தாமரை நடவடிக்கை”யால் தான் பா.ஜ.க. கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தது. அக்கட்சி ஆட்சியில் நீடிப்பதும் வீழ்வதும் ரெட்டி சகோதரர்களின் கை அசைவில் இருக்கிறது.

ரெட்டி சகோதரர்களின் ஊழல்-அதிகார முறைகேடுகள் அத்வானி – சுஷ்மா முதல் அனைவருக்கும் தெரியும். பெல்லாரியில் இருந்து 71 இலட்சம் டன்கள், அதாவது 60,000 கோடி ரூபா மதிப்புடைய இரும்பு, கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. இதை கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவே மாநில சட்டப்பேரவையில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு இன்னமும் தனக்கு மேல் பொறுப்பில் இருப்பவர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள் ரெட்டி சகோதரர்கள். ஆறு ஆண்டுகளில் இவ்வளவு பெரிய இமாலய சாதனையை அவர்களால் எப்படிச் சாதிக்க முடிந்தது?

இரும்புக் கனிமச் சுரங்கங்களா?
தங்கக் கனிமச் சுரங்கங்களா?

வட கர்நாடகாவின் ஆந்திர எல்லையில் உள்ள பின்தங்கிய சிறிய மாவட்டம் பெல்லாரி. அதன் பாதிக்கும் மேலான பகுதிகள் இரும்புக் கனிமச் சுரங்கங்களைக் கொண்டது. 2008-ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி நூறு கோடி டன்கள் இரும்புக் கனிமங்கள் அங்கே கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பூமிக்கடியில் சுரங்கங்கள் வெட்டி, தோண்டி எடுக்க வேண்டிய சிரமம் கூட கிடையாது. பூமியின் மேல் பரப்பில் திறந்தவெளி “சுரங்கம்” வெட்டினால் போதும் என்கிறவாறு சிறு சிறு குன்றுகளாகக் குவிந்து கிடக்கின்றன. அதில் 60 சதவீதமானவை இரும்பு மாவைப் போன்ற உயர் ரகத்தைச் சேர்ந்தவை. சீனாவில் 2008-ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கான கட்டுமானத் தேவைகளின் காரணமாக எஃகு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்தது. பெல்லாரி உயர்ரக இரும்புக் கனிமத்தில் 65% இரும்பு உலோகம் கிடைப்பதால் சீனத்தில் கூடுதலான விலையும் கிடைத்தது.

இப்போதைய கணக்கின்படி, ஒரு டன்னுக்கு இரும்புக் கனிமத்துக்கு வெறும் 27 ரூபா மட்டும் அரசுக்குச் செலுத்திவிட்டு, ஒரு டன் இரும்பை 7000 ரூபாக்கு விற்று நாள் ஒன்றுக்கு 20 கோடி ரூபா வீதம் பெல்லாரி சகோதரர்கள் குவித்தார்கள். இந்திய அரசின் சுரங்கம் மற்றும் கனிமத் துறையின் கணக்கின்படி, சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு பெல்லாரி இரும்புக் கனிம வளத்தை 30 ஆண்டுகளில் வெட்டி எடுக்கவேண்டும். ஆனால், ஆறே ஆண்டுகளில் எல்லாவற்றையும் சூறையாடிவிடும் வேகத்தில் ரெட்டி சகோதரர்கள் அக்கனிமத்தை வெட்டியெடுத்து நாடு கடத்தி வருகிறார்கள். இவர்களின் இலாபவெறியில் பெல்லாரியில் இரும்புக் கனிமக் குன்றுகள் கரைந்து போகின்றன. ரெட்டி சகோதரர்களிடம் பணக் குன்றுகள் உயர்ந்து கொண்டே போகின்றன.

இதைப் பார்த்து, இரும்புக் கனிமங்கள் எங்கே கிடைக்கின்றன, எப்படி, எங்கே ஏற்றுமதி செய்வது என்று கூட அறியாத திடீர் பணக்காரக் கொள்ளைக் கூட்டம் குத்தகை கேட்டு அரசிடம் சாரிசாரியாகப் படையெடுத்தது. பெல்லாரி மாவட்டத்தின் ஹோஸ்பட் அல்லது சந்தூர் வட்டத்தின் ஏதாவது வரைபடத்தையும் ஒரு கிராமத்தின் பெயரையும் கொடுத்து, ஏதாவது ஒரு எல்லையைக் குறிப்பிட்டு குத்தகைக்கு அரசிடம் விண்ணப்பித்தார்கள். அதைச் சோதித்தறியும் தகுதியுடைய அதிகாரிகள் மத்திய, மாநில அரசிடம் கிடையாது. இலஞ்சம் வாங்கிக் கொண்டு மானாவாரியாக குத்தகை உரிமம் கொடுத்தார்கள். இப்படி ஒரு குறுகிய காலத்தில் 158 குத்தகை உரிமைகள் வழங்கப்பட்டு விட்டன.
தடைகளைத் தகர்த்தது

ரெட்டி சகோதரர்களின் ஆதிக்கக் கொடி

கனிமங்கள் வைத்துள்ள முதலாளிகள் யாராவது சில தொழிலாளர்களை வைத்துக் கொண்டு ‘மானாங்கானி’யாக கனிமங்களை வெட்டி, விருப்பப்படி லாரியில், கப்பலில் ஏற்றிக் கொண்டு போ விற்றுவிட முடியாது. அப்படிச் செய்தால் நாட்டுவளம் அராஜகமாகச் சூறையாடப்பட்டு சுற்றுச்சூழல் கேடுகள் விளையும் என்பதால், பல ஆண்டுகளுக்கு முன்பே சுரங்கங்கள் வெட்டுவதற்கும் தொழில் நடத்துவதற்கும் சில கட்டுப்பாடுகளும், வரம்பீடுகளும், விதிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. சுரங்க நிர்வாகிகளுக்கான சான்றிதழ் பெற்ற அதிகாரிகளின் மேற்பார்வையில் கனிமம் வெட்டி எடுக்கப்பட வேண்டும். வெடிபொருட்களைப் பயன்படுத்துவதாலும், பணியாற்றுபவர்களின் சுவாசம் பாதிக்கப்படுவதும் விபத்துக்கான வாப்புகள் அதிகமாக உள்ளதாலும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு சுரங்கத்திலும் குறிப்பிட்ட அளவுதான் (மண் சரிவும் விபத்தும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக ஆறு மீட்டர் ஆழம் வரைதான்) வெட்டியெடுக்க வேண்டும். ஒரு சுரங்கத்துக்கும் மற்றதுக்கும் குறிப்பிட்ட இடைவெளி விடவேண்டும். வனங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் காடு சாராத நடவடிக்கைகளில் ஈடுபடவும் கூடாது. வெட்டியெடுக்கப்படும் கனிமத்தை ஒதுக்கப்பட்ட குத்தகைப் பகுதிக்கு வெளியேயோ, ஏற்றுமதிக்காக துறைமுகங்களிலோ இருப்பு வைக்கும்போது அரசு புறம்போக்கு இடங்களில் குவித்து வைக்கக் கூடாது. லாரிகளில் குறிப்பிட்ட அளவுக்குத்தான் கனிமச் சுமையேற்றலாம். அதையும் தார்பா போட்டு மூடித்தான் கொண்டு செல்ல வேண்டும்.

இத்தனையையும் மேற்பார்வையிட்டு, சோதித்தறிந்து, அமலாக்க வேண்டிய பொறுப்புடையது மைய அதிகார அமைப்புக்குழு (சி.ஈ.சி). ஆனால், அதற்கென்று உள்ளூரில் அதிகாரிகள் கிடையாது. கனிம மற்றும் தாதுப் பொருட்கள் துறை, வனத்துறை, போக்குவரத்துத் துறை, மத்திய வருவா மற்றும் தீர்வுத்துறை, துறைமுகத்துறை மற்றும் போலீசு ஆகிய அரசுத் துறைகளின் அதிகாரிகளைக் கொண்டுதான் அப்பணிகள் செயல்படுத்தப்பட வேண்டிய நிலையே உள்ளது. அரசுத்துறை அதிகாரிகளைத்தான் மிகவும் எளிதாகவும் மலிவாகவும் விலைக்கு வாங்கிவிட முடியும். இந்த உண்மையை அறியாத சுரங்க முதலாளிகளே கிடையாது. அதிலும் குறிப்பாக பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் ஆள்பலம் – குண்டர்படை, பணபலம், அதிகாரபலம்மிக்கவர்கள். அவர்கள் தமது நரித்தனமான மூளையைப் பயன்படுத்தி கர்நாடகாவின் கனிம வளங்களைச் சூறையாடுவதில் வேறு எவரும் எட்டமுடியாத உச்சத்துக்கு போவிட்டார்கள். விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், வரம்புகள், சட்டவிதிகள் எல்லாவற்றையும் தகர்த்து, பல பத்தாயிரம் கோடி ரூபா மதிப்புடைய இரும்புக் கனிமத்தை ஒரு சில ஆண்டுகளில் கடத்தி விற்றுள்ளார்கள், பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்.

இத்தனைக்கும் ரெட்டி சகோதரர்களுக்கு பெல்லாரியில் இரும்புக் கனிமம் எடுப்பதற்கு ஒரு துண்டு நிலம் கூட குத்தகை உரிமை கிடையாது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் ஆசியோடு “ஓபுலாபுரம் சுரங்கக் கம்பெனி”யை ரெட்டி சகோதரர்கள் தொடங்கியது ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில்தான். அனந்தபுரத்தில் சுமார் 107 ஹெக்டேர் நிலத்தை அவர்கள் குத்தகைக்கு எடுத்திருந்தாலும், அங்குள்ள இரும்புக் கனிமம் ஏற்றுமதி செய்யுமளவுக்கு தரமானதில்லை. பெல்லாரி இரும்புக் கனிமத்துக்கு சீனத்தில் பெரும் கிராக்கி இருப்பதைக் கண்டு கொண்டு அவர்கள் தம் பார்வையை அங்கு திருப்பியபோது, அவர்கள் கால் வைப்பதற்கு கூட பெல்லாரியில் இடம் கிடையாது. ஒருமுறை குத்தகைக்கு விடப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு அதை இரத்து செய்ய முடியாது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிப்பதற்காக வரும்போதுதான் ரத்து செய்யலாம். இவ்வாறு பெல்லாரியில் மட்டும் 100 குத்தகைகளும், அருகிலுள்ள சித்திர துர்க்கா மற்றும் தும்கூர் மாவட்டங்களில் 60 குத்தகைகளும் ஏற்கெனவே தரப்பட்டிருந்தன.

பெல்லாரியில் குத்தகை எடுப்பதற்கு இன்னமும் 20 ஆண்டுகளுக்கு ரெட்டி சகோதரர்கள் காத்திருக்க வேண்டும். என்ன செய்வது? பணத்தை வீசி எறிந்தால் ரெட்டி சகோதரர்களுக்குச் சேவை செய்ய ஒரு சதிகார வழக்கறிஞர்கள் கூட்டம் ஆந்திராவில் காத்திருந்தது. அவர்கள் ஆலோசனை கொடுத்தார்கள். பெல்லாரியில் ஏற்கெனவே குத்தகை எடுத்துவிட்டு, இரும்புக் கனிமத்தை வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான இயந்திர மற்றும் போக்குவரத்து வசதியில்லாதவர்கள் பலர் இருந்தனர். குத்தகைக்கு எடுத்து இரண்டு ஆண்டுகளில் வேலை தொடங்காவிட்டால் குத்தகை இரத்து செய்யப்படும். அப்படிப்பட்டவர்களைப் பிடித்து கொஞ்சம் பணம் கொடுத்து அவர்களின் பெயரில் உள்ள உரிமத்தைப் பயன்படுத்திக் கொள்வது; குத்தகைதாரர்களுக்கிடையேயான தகராறுகளைப் பயன்படுத்தியும், பணியாத குத்தகைதாரர்களை குண்டர்படையை வைத்து தாக்கியும் மிரட்டியும் வெளியேற்றிவிட்டு சுரங்கங்களை ஆக்கிரமித்துக் கொள்வது; போலி உரிமத்தைக் காட்டியும் இலஞ்சம் கொடுத்தும், அண்டை ஆந்திராவின் அனந்தபுரத்து சுரங்கங்களில் வெட்டியெடுக்கப்பட்ட இரும்புக் கனிமம் என்று கணக்குக் காட்டியும் துறைமுகங்களுக்குக் கடத்திக் கொண்டு போ ஏற்றுமதி செய்துவிடுவது – இவைதான் சதிகார வழக்கறிஞர்களின் ஆலோசனை. இனி என்ன! களத்தில் குதித்த ரெட்டி சகோதரர்களின் ஆதிக்கக் கொடி ஏற்றப்பட்டது!

ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் சாதனை!

“குருவி” திரைப்படத்தில் காட்டப்படும் கடப்பா ரெட்டிகளின் கனிம சுரங்கத் தொழில் கொடூரத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமானது பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் கொடூரம். அந்தப் படத்தில் காட்டப்படுவதைவிடப் பிரம்மாண்டமான பல ஏக்கர் நிலத்தில் ரெட்டி சகோதரர்கள் நவீன மாளிகையை அரண்மனையைப் போல கட்டிவருகிறார்கள். அரை கி.மீட்டருக்கு நீண்ட நெடிய மதில் சுவர்களைக் கொண்ட பாதையில் கண்காணிப்பு காமிராக்களைக் கடந்துதான் அந்த மாளிகையை அடைய முடியும். ஒரு ஏக்கர் பரப்பில் 60-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட புதுக்கட்டிடம் எழுப்பப்படுகிறது. குண்டு துளைக்க முடியாத பாதுகாப்பு அறைகள், இரவுப் பார்வை உடைய அவர்களது ஹெலிகாப்டர்கள் இறங்கக் கூடிய மேடை, நீச்சல் குளம், நவீன உடற்பயிற்சிக் கூடம், சாரிசாரியான கார்களில் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்புப் படையினர் என சினிமாவை விஞ்சுகிறது அந்த மாளிகை. அந்த மாளிகையை ஒட்டி, அதைபோலவே எல்லா வசதிகளும் நிரப்பிய மற்றொரு மாளிகை அவர்களின் நெருங்கிய சகாவும் கர்நாடகா மருத்துவ அமைச்சருமான சீறீராமுலுவுக்கும் உள்ளது.

இவ்வளவு பணத்தையும் சோத்துக்களையும் ஒரு குறுகிய காலத்தில் ரெட்டி சகோதரர்களால் எப்படிக் குவிக்க முடிந்தது?. பெல்லாரியில் உள்ள 68 கனிம வயல் குத்தகைகாரர்களின் 48 பேர்களுடன் மேல் குத்தகை ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். பணியாத குத்தகைதாரர்களின் கனிம வயல்கள் மீது குண்டர் படையை ஏவி ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.

பெல்லாரியில் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட இரும்புக் கனிமத்தை காட்டுவழியே லாரிகளில் கடத்திக் கொண்டு வந்து இந்த ஏ.ஜி.கே.சுரங்கப் பகுதியில் குவித்து வைத்து விடுவார்கள். பிறகு, இக்கனிமம் முழுவதும் ஆந்திராவில் வெட்டியெடுக்கப்பட்டதாகக் கணக்குக் காட்டுவார்கள். கர்நாடகாவில் கள்ளத்தனமாக இரும்புக் கனிமத்தை வெட்டியெடுப்பதற்காக ஆந்திரா-கர்நாடகாவின் எல்லையையே அராஜகமாக மாற்றி அமைத்துக் கொண்டார்கள். எல்லைக் கற்களை அவ்வப்போது ரெட்டியின் ஆட்களே பிடுங்கி நட்டுக் கொள்வார்கள். ஆண்டுக்கு 2,3 முறை இப்படி நடக்கும். யாராவது புகார் கொடுத்து மேற்பார்வையிட அதிகாரிகள் வந்தால் இலஞ்சம் கொடுத்து அனுப்பி விடுவார்கள். ஒருபாறைக் கோயிலின் அருகே ஆந்திரா-கர்நாடகா மாநில எல்லையைக் குறிக்கும் கல்வெட்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே செய்துக்கப்பட்டிருந்தது. கோவிலோடு அதை வெடிவைத்துத் தகர்த்து வீசிவிட்டார்கள். அதன்மூலம் ஆந்திராவின் எல்லையை கர்நாடகாவுக்குள் தள்ளிப் போட்டுக் கொண்டு இரும்புக் கனிமத்தை வெட்டி எடுத்துக் கொண்டார்கள். சட்டவிரோதமாகக் காடுகளை அழித்து, இரும்புக் கனிமத்தை வெட்டியெடுத்ததோடு, அவற்றைச் சேர்த்து வைக்கவும் கடத்திச் செல்ல பாதை அமைக்கவும் காடுகளை அழித்தார்கள்.

வெட்டியெடுக்கப்பட்ட கனிமத்தை அருகிலுள்ள துறைமுகங்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு ஒவ்வொரு லாரிக்கும் கனிம மற்றும் தாதுப் பொருட்கள் துறை மற்றும் வனத்துறை ஆகியவற்றின் “பர்மிட்கள்” வேண்டும். ஒவ்வொரு லாரியும் குறிப்பிட்ட அளவுதான் சுமை ஏற்றிச் சேல்ல வேண்டும். இவற்றைச் சோதித்தறிவதற்கு வழியில் பல சோதனைச் சாவடிகள் உள்ளன. ஆனால், ஸ்வத்திக் அல்லது வேறு சின்னம் பொறித்த அட்டைகளை சோதனைச் சாவடிகளில் விசிறிக் காட்டிவிட்டு அந்த லாரிகள் பறக்கின்றன. துறைமுகத்தில் ஏற்றுமதியின் போதும் சோதித்தறியப்படும். ஆனால், போலி “பர்மிட்”டுக்களை தயாரித்தும், இவை எல்லாவற்றையும் மீறி இலஞ்சம் கொடுத்தும் மிரட்டியும் ஏமாற்றியும் இரும்புக் கனிமத்தைக் கடத்திக் கொண்டு போனார்கள்.

துரிதப் பணம் சம்பாதிப்பதற்காக ஒவ்வொரு லாரியிலும் ஒன்றரை அல்லது இரண்டு மடங்கு மிகை சுமை ஏற்றினார்கள். 10,000 லாரிகள் ஓட்டப்பட்டன. ஒவ்வொன்றும் நாளுக்கு 600 கி.மீ. தூரத்துக்குப் போ வந்தன. இவ்வளவு லாரிகளையும் ஓட்டுவதற்கு ஓட்டுநர்கள் கிடைக்காததால், கிளீனர்களே ஓட்டி பல விபத்துகள் நடந்தன. இவ்வளவு சுமை வாகனங்களைத் தாங்க முடியாத சாலைகள் நாசமாகின. தார்ப்பா போட்டு மூடி எடுத்துச் செல்லாததால் (அப்படிச் செய்ய கூடுதல் செலவும் தாமதமும் ஆகும்) வழியெல்லாம் இரும்புக் கனிமத் துகள் பறந்து, எங்கும் செம்மண் புழுதியாகி சுற்றுச் சூழல் நாசமாகின.

ஒருமுறை கர்நாடகா ஊழல் தடுப்பு லோகாயுதா அதிகாரிகள் சோதனையிட்டபோது எந்த லாரிக்கும் உரிம  ஆவணங்கள் “பர்மிட்டுகள்” கிடையாது. இரண்டு கோணிப் பைகள் நிறைய போலி ஆவணங்கள் பிடிபட்டன. 200 கோடி ரூபா மதிப்புடைய இரும்புக் கனிமங்கள் கைப்பற்றப்பட்டு துறைமுகத்தில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டது. அவற்றை ஒரே வாரத்தில் திருடி விற்று விட்டுக் காணவில்லை என்று அறிவித்து விட்டார்கள். சோதனையிட்ட அதிகாரிகள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். சி.பி.ஐ. ரெய்டு வருகிறது என்று அறிந்து, பெல்லாரி அருகே உள்ள தனது சுரங்கக் கம்பெனி அலுவலக ஆவணங்களை இரவோடு இரவாக அள்ளிக் கொண்டுபோன ரெட்டி சகோதரர்கள், அந்த அலுவலகத்தையே இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார்கள்.

இப்போது 5,6 ஆண்டுகளில் 60,000 கோடி ரூபா மதிப்புடைய 71 இலட்சம் டன்கள் இரும்புக் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாக ஒப்புக் கொள்ளும் மாநில, மத்திய அரசுகளும் ஆளும் கட்சிகளும் முறையே மாநில லோகாயுதா விசாரிப்பதா, சி.பி.ஐ. விசாரிப்பதா என்று இலாவணிக் கச்சேரி நடத்துகிறார்கள். கொஞ்சநாள் இது நடக்கும், பிறகு எவ்வித பாதிப்புமில்லாமல் பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் தமது “ராஜ்ஜியத்தைத்” தொடர்வார்கள். ஏனெனில் ஆந்திராவில் காங்கிரசும், கர்நாடகாவில் பா.ஜ.க.வும் அவர்களின் சட்டைப் பைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.

சிதம்பரம் கூறுவதைப் போல அரசாங்கத்தின் சட்டத்திற்குச் சவாலா விளங்கும் காரணத்திற்காக காட்டு வேட்டை நடத்துவது என்றால் முதலில் ரெட்டி சகோதரர்களுக்கெதிராக நடத்த வேண்டும். ஆனால், கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் ரெட்டி சகோதரர்கள் என்ன செய்கிறார்களோ அதை மத்திய-கிழக்கு இந்திய காடுகளில் டாடா, எஸ்ஸார், வேதாந்தா, போஸ்கோ போன்ற உள்நாட்டு-வெளிநாட்டு ஏகபோக, பன்னாட்டு, தரகு முதலாளிகள் நடத்துவதற்கு வசதியாக பழங்குடி மக்கள் மற்றும் மாவோயிச நக்சல்பாரிகளை அகற்ற வேண்டியுள்ளது. அதற்காக ஏவிவிடப்பட்டுள்ளதுதான் சோனியா – மன்மோகன் – சிதம்பரம் நடத்தும் காட்டுவேட்டை.

_____________________________________

புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2010
_____________________________________

  1. பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்: சுரங்கத் தொழில் மாஃபியாகள்…

    வெறும் ஆறே ஆண்டுகளில் 60,000 கோடி ரூபாய் மதிப்புடைய 71 இலட்சம் டன்கள் இரும்புக் கனிமங்களைக் கடத்திக் கொள்ளையடித்திருக்கிறார்கள் இந்த பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க