privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விஅலாவுதீன் – ஒரு அற்புத விளக்கு !

அலாவுதீன் – ஒரு அற்புத விளக்கு !

-

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் ஜமாத்தாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் மணமகன் அலாவுதீன், மணமகள் ஷபனா ஆஸ்மி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற  சீர்திருத்த திருமணம் குறித்த செய்தியை புதிய ஜனநாயகம் இதழ் வெளியிட்டிருந்தது. அதனை வினவு தளத்தில் பிரசுரித்திருந்தோம். அச்செய்தியில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விவரப்பிழை குறித்து புதிய ஜனநாயகம் இதழுக்கும் தெரிவித்து விட்டோம்.

அப்பகுதியின் ஜமாத்தை சேர்ந்தவர்களும், ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட அப்பகுதி முஸ்லிம் மக்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்றும் மேற்கூறிய செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. “கிடையவே கிடையாது” என்று இதற்கும் சில பேர் மூச்சைக் கொடுத்து வாதாடினார்கள்.

கடைசியாக, தன்னுடைய திருமணம் மிகப்பெரிய விவாதப் பொருளாக  மாறியிருப்பதைக் கேள்விப்பட்ட மணமகன் அலாவுதீன், வினவு தளத்தில் தனது விளக்கத்தை அளித்தார். அது அவரது விளக்கமல்ல, வினவு செட்டப் செய்து போட்டது என்று அவதூறு புலனாய்வு செய்து கண்டுபிடித்து சில இசுலாமிய தளங்களில் கட்டுரைகள் எழுதினார்கள்.

விவகாரம் அதோடும் முடியவில்லை என்று தெரிகிறது. நேரில் வந்து ஆஜராகி விளக்கமளிக்குமாறு மணமேல்குடி ஜமாத்திலிருந்து தனக்கு தாக்கீது வந்திருப்பதாக அலாவுதீன் எங்களிடம் தெரிவித்தார். வளைகுடாவில் இருக்கும் ஷபனா ஆஸ்மியின் தந்தை அப்பாஸ் தவ்ஹீத் ஜமாத்தில் உறுப்பினர். நான் உறுப்பினர் இல்லை என்று அறிக்கை விடும்படி அவரையும் நிர்ப்பந்திக்கிறார்களாம். இந்த திருமணத்துக்கு சென்று கலந்து கொண்ட தவ்ஹீத் ஜமாத்தின் பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இவை குறித்தெல்லாம் நாங்கள் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சில நாட்களில் எல்லாவற்றுக்கும் முடிவு தெரியத்தான் போகிறது.

இவர்களுடைய அணுகுமுறையைக் கண்டு ஒருபுறம் கோபம் வருகிறது. இன்னொரு புறம் இசுலாமிய மக்களின் நிலைமையை நினைக்கும்போது வருத்தமாகவும் இருக்கிறது. தவ்ஹீத் ஜமாத்தோ, த.மு.மு.கவோ அல்லது பிற இசுலாமிய அமைப்புகளோ திமுக, அதிமுக யாரோடு வேண்டுமானாலும் கூட்டு சேருவார்கள். அவர்களுக்கு ஓட்டுப் போடச்சொல்லி இசுலாமிய மக்களை பத்தி விடுவார்கள். அவர்களோடு ரம்ஜான் கஞ்சி குடிப்பார்கள். அதிலெல்லாம் இவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர்கள் நேரடி இந்துமதவெறிக் கட்சியான பாஜகவுடனும், மறைமுக இந்துமதவாதக் கட்சியான காங்கிரசுடனும் கூட்டு சேர்ந்தவர்கள் என்பதும் இவர்களுக்கு பிரச்சினை இல்லை.

அவ்வளவு ஏன், தற்போதைய அலகாபாத் தீர்ப்பை கண்டித்து எந்தக் கட்சியும் பேசவில்லையே அதுபற்றி கேட்பதற்கும்  இவர்களுக்குத் துப்பில்லை. யாராவது ஒரு அலாவுதீன் கம்யூனிச அடையாளத்தோடு திருமணம் செய்து கொண்டால் அதுதான் இவர்களுக்கு பிரச்சினை. உடனே விசாரணை, ஒழுங்கு நடவடிக்கை எல்லாம் தூள் பறக்கிறது.

வரதட்சிணை வாங்கிய இசுலாமியர்கள், வட்டிக்கு விடும் இசுலாமியர்கள், லாட்டரி சீட்டு விற்றே ஜனாப் ஆன ஹாருண்கள், ஏழை முஸ்லிம்களை வளைகுடாவுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தும் முஸ்லீம் பெருமக்கள், ரஜினி கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் கலீல்ஜி போன்ற தலைவர்கள்… இவர்களையெல்லாம் தவ்ஹீத் ஜமாத் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். “நான் ஒரு கம்யூனிஸ்டு” என்று வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளும் அலாவுதீன்தான் இவர்களுக்குப் பிரச்சினை.

இந்தப் பிரச்சினையும், இன்று இந்த விவாதம் நடைபெறும் சூழலும் எங்களுக்கு 1980களை நினைவு படுத்துகிறது. அன்று குற்றவியல் நடைமுறைச்சட்டப்படி ஜீவனாம்சம் கோரிய ஷாபானு என்ற அப்பாவி வயோதிக முஸ்லிம் பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சி செய்தார்கள் இசுலாமிய அடிப்படைவாதிகள். உடனே பல்டியடித்த ராஜீவ் காந்தி ஷரியத் கோர்ட்டை கொண்டு வந்தார். அதனை சரிக்கட்டும் விதத்தில் இந்து அடிப்படைவாதிகளை தாஜா செய்வதற்காக 1986 இல் பாபர் மசூதியில் வைக்கப்பட்ட ராமன் சிலையை வழிபாட்டுக்குத் திறந்து விட்டார். விளைவு – நாடு முழுவதும் நாம் கண்டு வரும் இந்து வெறியின் கோரதாண்டவம்.

இன்று, அலகாபாத் நீதிமன்றம் அப்பட்டமான ஒரு கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்பை கொடுத்திருக்கிறது. அதனை எதிர்த்துக் கண்டிப்பதற்கு, இப்தார் விருந்து வைத்த எந்த ஓட்டுக் கட்சிக்கும் துப்பில்லை. அந்தக் கட்சிகளில் இருக்கும் இசுலாமியர்கள் எல்லாம் வெளியேறவேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் அறிவிக்குமா? அவர்களையெல்லாம் எந்த ஜமாத்தாவது விசாரிக்குமா? அலாவுதீன் மீது விசாரணை நடத்தப்போகிறார்களாம். இந்தக் கேலிக்கூத்தை என்னவென்பது?

இந்து மதவெறிக்கு எதிராக சமரசமின்றி குரல் கொடுக்கும் ம.க.இ.க வும் வினவு தளமும்தான் இவர்களுக்கு எதிரிகள். கேட்டால் “இந்து மதவெறியையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இசுலாமிய மக்கள் உங்களை நம்பி இல்லை” என்று ஜம்பமாக பதில் சொல்வார்கள். தங்களுடைய உரிமையைப் பாதுகாப்பது இசுலாமிய அமைப்புகளா, மதச்சார்பற்ற அமைப்புகளா என்று குஜராத் முஸ்லிம் மக்களிடம் அல்லவா கேட்கவேண்டும்? பெஸ்ட் பேக்கரி வழக்கு உள்ளிட்ட குஜராத் படுகொலை வழக்குளை உலகறியச் செய்த தீஸ்தா சேதல்வாத், ஒரு இறை நம்பிக்கையற்ற காஃபிர். மோடியை எதிர்த்து நிற்கும் பல மனித உரிமை ஆர்வலர்களும் கூட இறைநம்பிக்கையற்ற காஃபிர்கள்தான்.

இசுலாத்தை ஏற்றுக் கொள்ளாத, ஆனால் இசுலாமிய மக்களின் மீது பரிவும், அக்கறையும் கொண்ட எங்களைப் போன்ற காஃபிர்களுடன் ஒரு முஸ்லிம் என்ன விதமான உறவைப் பேண வேண்டும்? “இத்தகைய காஃபிர்களை நம்முடைய காரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்வது ஹராம் இல்லை. ஆனால் அந்த நச்சுப் பாம்புகளோடு நெருக்கமான சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத் போன்றோரின் கருத்து.

ஆனால் அது அப்படி இருப்பதில்லை. பேய் என்றும் பிசாசென்றும் சாத்தானென்றும் கம்யூனிஸ்டுகளைப் பற்றிய சித்திரத்தை தவ்ஹீத் ஜமாத்தார் உருவாக்கினாலும், எங்களுடன் நேரடியாகப் பழகும் சாதாரண முஸ்லிம் மக்கள் கம்யூனிஸ்டுகளின் நேர்மை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றால் கவரப்படுகிறார்கள். கல்வி வள்ளல்களின் நன்கொடைக் கொள்ளைக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி நாங்கள் போராடும்போது அதில் முஸ்லிம் மாணவர்களும் இருக்கிறார்கள்; தொழிற்சங்கத்தில் முஸ்லிம் தொழிலாளர்களும் இருக்கிறார்கள்; இவர்களுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தவ்ஹீத் ஜமாத்திடம் விடை இல்லை.

இவற்றுக்கு நியாயமான, அறிவுக்கு உகந்த தீர்வுகளைச் சொல்லும் கம்யூனிசக் கொள்கைகளின் பால் ஒரு இசுலாமியர் ஈர்க்கப்படுவதில் என்ன தவறு? அப்படி ஈர்க்கப்பட்ட பல முஸ்லிம் இளைஞர்களில் ஒருவர் தான் அலாவுதீன். நேற்று இந்துவாக, கிறித்தவனாக, ஆதிக்க சாதியாக, திமுக காரனாக, அதிமுக காரனாக, ஆர்.எஸ்.எஸ் காரனாக இருந்தவர்களெல்லாம்தான் கம்யூனிஸ்டுகளாக மாறியிருக்கிறார்கள். யாரும் காஃபிராகவே வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. பிறப்பால் இந்து உண்டு, முஸ்லிம் உண்டு, கிறித்தவன் உண்டு. ஆனால் பிறப்பால் யாரும் கம்யூனிஸ்டு இல்லை. கம்யூனிஸ்டுக்கு மகனாகப் பிறந்தாலும், அவனுக்கு கம்யூனிசத்தின் மீது பற்று இருந்தால் மட்டும்தான் கம்யூனிஸ்டாக வளர்வதற்கு முயற்சிக்கிறான்.

அலாவுதீனையே எடுத்துக் கொள்வோமே. அவர் குடிகாரரோ, பெண் பித்தரோ, சூதாடியோ, வட்டிக்கு விடுபவரோ இல்லை. வரதட்சிணையும் வாங்கவில்லை. அவர் செய்த ஒரே குற்றம் இசுலாமிய முறைப்படி திருமணம் செய்யாததுதான். “இசுலாமுக்கு எதிராக எதையாவது செய்தே தீருவது” என்று முடிவு செய்து அதற்காக தனது திருமணத்தை அவர் இப்படி நடத்தவில்லை. இதுதான் அறிவுக்கு உகந்தது, நாகரிகமானது என்று கருதுவதனால் சுயமரியாதை திருமணம் செய்திருக்கிறார்.

உருவ வழிபாட்டை எதிர்க்கும் இசுலாமை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக பகத்சிங், மார்க்ஸ், லெனின் போன்றோரின் படத்தை அவர் மேடையில் வைக்கவில்லை. அவர்கள் மனித குலத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் என்பதனால் மேடையில் வைத்தார். இன்னும் திப்பு சுல்தான், ஹசரத் மகல், இஷ்பகுல்லா கான் போன்றோரின் படங்களைக் கூட வைப்போம். அவர்கள் இசுலாமியர்கள் என்பதற்காக அல்ல, விடுதலைப்போரின் முன்னோடிகள் என்பதனால். பிறப்பால் இந்துக்களான எங்களது தோழர்கள் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு ஹசரத் என்றும் திப்பு என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஒருவேளை இப்படிப்பட்ட இசுலாமியப் பெயர்களை வைப்பதற்கு நாங்கள் தவ்ஹீத் ஜமாத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டுமோ?

அவ்வளவு ஏன், 1920களில் தென்னிந்தியாவுக்கு கம்யூனிசத்தை அறிமுகப்படுத்தியவரே பிறப்பால் முஸ்லீமான தோழர் அமீர் ஹைதர் கான் என்பவர்தான். அவர் போட்ட விதையில் முளைத்த சாத்தான்கள்தான் நாங்களெல்லாம். ஒருவேளை அன்று தவ்ஹீத் ஜமாத் இருந்திருந்தால், அவருடைய கதி என்ன, நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது!

புத்தனோ, கிறிஸ்துவோ, நபிகள் நாயகமோ அவரவர் காலத்தில் மனிதகுலம் எதிர்கொண்ட கேள்விகளுக்கு அவர்கள் சிந்தித்து விடையளித்தார்கள். அதற்குப் பின்னர் உலகில் தோன்றிய சிந்தனையாளர்கள் ஏராளம். இந்த மரபுகளின் நேர்மறையான அம்சங்கள் அனைத்தையும் வரித்துக் கொண்டு இன்றைய உலகத்தின் கேள்விகளுக்கு விடையளிப்பதுதான் கம்யூனிசம். ஏசுவிடமும், நபிகள் நாயகத்திடமும், புத்தனிடமும் அக்காலத்து மக்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். அவற்றுக்கெல்லாம் அவர்கள் சளைக்காமல் விடையளித்தார்கள். அதன் காரணமாகத்தான் அவர்கள் முன்னோடிகளாகவும், ஞானிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். சொல்வதைச் செய். கேள்வி கேட்காதே என்பது அவர்கள் கொள்கையாக இருந்திருந்தால் நமக்கு பைபிளோ, குர் ஆனோ கிடைத்திருக்காது. குண்டாந்தடி மட்டும்தான் கிடைத்திருக்கும். கேள்வி கேட்டு விடை தேடியவர்களின் வாரிசுகள் கம்யூனிஸ்டுகள். குண்டாந்தடிகளின் வாரிசுகள் மதவாதிகள்.

“எக்கேடு கெட்டும் போ. கண்ணுக்கு மறைவாக, ஊரை விட்டு ஓடிப்போய் எங்கேயாவது திருமணம் செய்து கொள்” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத்தாரின் கோரிக்கை. அலாவுதீன் அப்படி ஓடி, ஒளிந்து செய்யவில்லை. தனது சொந்த ஊரில் முஸ்லிம் மக்கள் மத்தியில், அவர்கள் அங்கீகாரத்துடன் செய்திருக்கிறார். “இசுலாத்துக்கு விரோதமான காஃபிர்கள் ஒன்றுகூடி சிவப்புக் கொடி ஏற்றி ஒரு திருமணத்தை நடத்த, நம்மாளுக அதை தட்டிக் கேட்க துப்பில்லைன்னாலும், கலந்து கொண்டு, வாழ்த்தி, பிரியாணியும் சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறார்களே, இப்படியே போனால் இசுலாத்தின் எதிர்காலம் என்ன?” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத் காரர்களின் கவலை.

தங்களுடைய கொள்கையின் மீது தவ்ஹீத் ஜமாத்தினருக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், “சுயமரியாதை திருமணம் ஏன் தவறு, இசுலாமிய திருமணம் எப்படி சரியானது” என்று மணமேல்குடியில் கூட்டம் போட்டு முஸ்லிம் மக்களுக்கு அவர்கள் விளக்கியிருக்க வேண்டும். “ஐந்து வேளை தொழுது, ரம்ஜானுக்கு நோன்பிருக்கும் உண்மையான முஸ்லிம்களாகிய நீங்கள் காஃபிர்கள் நடத்திய இந்த திருமணத்திற்கு எப்படி போனீர்கள்?” என்று அந்த மக்களிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அந்த மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறியிருக்க வேண்டும். தனது கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்கள், “ஊர்விலக்கம், ஜமாத் விசாரணை” என்று கோழைத்தனமாக எதற்கு குண்டாந்தடி எடுக்க வேண்டும்?

இசுலாமியர்களின் எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். இசுலாத்தின் எதிர்காலத்தைப் பற்றி தவ்ஹீத்துக்கு கவலை. சுயமரியாதை உள்ளவனை சும்மா விட்டால், தங்களுடைய கோட்டையில் விரிசல் விழுந்து விடும் என்பது அவர்கள் பிரச்சினை. திமுகவுக்கும், அதிமுகவுக்கும், காங்கிரசுக்கும் முஸ்லிம் மக்களின் சுயமரியாதையை பேரம் பேசலாம். அதில் தவ்ஹீத்துக்கு ஆட்சேபம் இல்லை. யாருடன் கூட்டணி வைக்கலாம், வைக்கக் கூடாது என்று குர் ஆனிலோ, ஹதீஸிலோ எதுவும் சொல்லப்படவில்லையே. எப்படி திருமணம் செய்யவேண்டும் என்பது பற்றித்தானே இசுலாமில் வழிகாட்டுதல் இருக்கிறது!

வீடு பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்டவன் கதையை கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது பார்க்கிறோம். முஸ்லிம்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தும் ஒரு பாசிசத் தீர்ப்பு வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டிருக்கிறது. “இதனை எதிர்த்துப் போராடும் ஒரு அமைப்பில் அலாவுதீன் என்ற நம் பையன் இருக்கிறானே” என்பது பற்றி ஒரு முஸ்லிம் மகிழ்ச்சி கொள்ளவேண்டுமா, அல்லது அவனை ஜமாத்தில் நிறுத்தி ஊர்விலக்கம் செய்யவேண்டுமா?

சாதிப்பஞ்சாயத்துகள், மதப்பஞ்சாயத்துகள் பலவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம். தவ்ஹீத் ஜமாத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுபவர்கள் நாங்கள் அல்ல. முஸ்லிம் மக்கள்தான். இசுலாம் என்றாலே தலிபான்தான் என்ற முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு, தங்களது நடவடிக்கை மூலம் வலு சேர்க்கிறது தவ்ஹீத் ஜமாத்.

இந்துக்கள் எல்லோருக்கும் நான்தான் அத்தாரிட்டி என்று ஆர்.எஸ்.எஸ் கூறுவதற்கும், முஸ்லிம்கள் எல்லோருக்கும் நாங்கள்தான் அத்தாரிட்டி என்று தவ்கீத் ஜமாத் கூறுவதற்கும் ஒரே ஒரு வேறுபாடுதான் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் என்பது பெரும்பான்மை மதம் சார்ந்த மதவெறி அமைப்பு. ஒருவேளை தவ்ஹீத் ஜமாத் இங்கே ஆட்சியில் இருந்தால், அலாவுதீனை கல்லால் அடித்துக் கொல்வதா, தூக்கில் தொங்கவிடுவதா என்பது குறித்துதான் ஆன்லைன் பிஜே யில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்.

அந்த வகையில் தவ்ஹீத் ஜமாத்தை இசுலாமிய மக்களுக்கு அடையாளம் காட்டிய அலாவுதீன் – ஒரு அற்புத விளக்குதான்!

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்