privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காமெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம் !!

மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம் !!

-

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா – 6 (மெக்சிகோ, பகுதி: ஒன்று)

மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்

மெக்சிகோ நகரின் பிரபல ஆடம்பர உணவுவிடுதி. மாலை நேர உணவை சுவைத்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், எதிர்பாராத அறிவிப்பொன்றால் அதிர்ச்சி அடைகின்றனர். “இன்னும் இருபது நிமிடங்களில் இங்கே ஒரு முக்கிய நபர் வருகை தர இருக்கிறார். அவர் விருந்துண்டு விட்டு செல்லும் வரையில் யாரும் இருப்பிடத்தை விட்டு அகலக் கூடாது. உங்கள் அனைவரதும் செல்லிடத் தொலைபேசிகளும் இப்போது பறிமுதல் செய்யப்படும். வி.ஐ.பி. விடுதியை விட்டு சென்ற பின்னரே திருப்பித் தரப்படும்.” சுமார் ஒரு மணித்தியாலமாக உணவுவிடுதியின் வாடிக்கையாளர்கள் மலசல கூடத்திற்கும் செல்ல விடாமல் தடுத்து வைத்த வி.ஐ.பி., ஒரு போதைவஸ்து கடத்தல் குழுவின் தலைவன்.

மெக்சிகோவில் மாபியா கும்பல்களின் அதிகாரம், அங்கே ஒரு நிழல் அரசாங்கத்தையே நடத்துமளவு வளர்ந்துள்ளது. இந்த வருடம் (2010) கோலாகலமாக நடந்த மெக்சிகோ புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் கிரிமினல்களின் நிழல் படர்ந்திருந்தது. சில வாரங்களுக்கு முன்னர்தான் ஒரு கைவிடப்பட்ட பண்ணை வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 70 இளைஞர்களின் சடலங்கள் உலகச் செய்தியானது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும்போது, போதைவஸ்து கடத்த சம்மதிக்காத அப்பாவி வெளிநாட்டு இளைஞர்கள் அவர்கள். மாபியாக்களின் உத்தரவுக்கு அடிபணியாத போலிஸ்காரர்களையே அங்கு சர்வசாதாரணமாக கொன்று வீசுகிறார்கள். விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் உயிர் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. இதைவிட மாபியா கும்பல்கள் தமக்குள்ளே கணக்குத் தீர்க்கும் விதம் குரூரமானது. எங்கேயாவது தலை வேறு, முண்டம் வேறாக சடலம் கண்டெடுக்கப் பட்டால், அது போட்டிக் குழுக்களின் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கும்.

மெக்சிகோ அரசின் சகல துறைகளிலும் மாபியாக்களின் செல்வாக்கு பரவி இருப்பதால், அவர்களை ஒடுக்குவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. மேலும் கொலம்பியாவில் நடந்ததைப் போன்று, ஏழை மக்கள் மத்தியில் இருந்தே அடியாட்களையும், ஆதரவாளர்களையும் திரட்டும் மாபியாக்கள், அந்த மக்களின் நலனுக்காகவும் பணத்தை வாரி இறைக்கின்றனர். மெக்சிகோவில் (மாபியா) வள்ளல்களை போற்றும் இசைநிகழ்ச்சிகள் கூட நடக்கின்றன. பெட்ரோலியமும், கனிம வளங்களும் நிறைந்த செல்வம் கொழிக்கும் பூமி, மெக்சிகோ. ஆனால், அவற்றை சந்தையில் விற்பதால் கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதி, சிறுபான்மை மேட்டுக்குடியினரால் மட்டுமே அனுபவிக்கப்படுகிறது. பெரும்பான்மை மக்கள், தாராளமாக கிடைக்கும் சோளத்தைக் கூட வாங்க முடியாத ஏழைகளாக அல்லல் படுகின்றனர். உணவுக்காக பயன்படும் சோளத்தில் அமெரிக்க நிறுவனங்கள் எதனோல் எரிபொருள் தயாரிப்பதும், அந்த அத்தியாவசிய உணவுப்பொருளின் விலையேற்றத்திற்கு காரணம். மெக்சிக்கோ தேசிய உணவான தொர்த்தியா (Tortilla ), சோளத்தில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. அது பூர்வீக குடிகளின் பாரம்பரிய உணவு. அந்த மண்ணில், 8000 (எண்ணாயிரம்) வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் உணவாக சோளம் இருந்துள்ளமை, அண்மைய அகழ்வாராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. மெக்சிகோ அரசு, உள்நாட்டில் விளையும் சோளத்தை எரிபொருள் தயாரிக்க அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதே நேரம் உணவுத் தட்டுப்பாட்டை ஈடுகட்ட, அமெரிக்காவில் இருந்து சோளத்தை இறக்குமதி செய்கிறது. (இதைத் தானா உலகமயமாக்கல் என்று கூறுவார்கள்?)

“கடவுள் மெக்சிகோவை அனைத்து வளங்களும் நிறைந்த செல்வந்த பூமியாக படைத்திருந்தாராம். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த நாட்டில் வாழும் மக்கள் அயல் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்களா? என்று யாரோ கேட்டார்களாம். கவலைப்படாதே, அதனை ஈடுகட்டதான் நான் அந்த வளமான நாட்டை மெக்சிக்கர்களை கொண்டு நிரப்பினேன், என்று பதிலளித்தாராம் கடவுள்.” மெக்சிக்கர்களின் நையாண்டி கதைக்குப் பின்னே ஒரு நிரந்தர சோகம் இழையோடுகிறது. தீராத வறுமைக்கு பல காரணங்கள் உண்டு. 16ம் நூற்றாண்டில், உலகம் காணாத இனவழிப்பு செய்து செல்வத்தை கொள்ளையடித்த ஸ்பானிய காலனியாதிக்கவாதிகள், 19 ம் நூற்றாண்டில், மெக்சிகோவின் அரைவாசி நிலப்பகுதியை ஆக்கிரமித்த அமெரிக்க ஏகாதிபத்தியம், 20 நூற்றாண்டு சமூகப் புரட்சியை, பூர்ஷுவா ஆதிக்க அரசியலாக மாற்றிய PRI என்ற ஒரு கட்சி சர்வாதிகாரம்… இதைவிட கடந்த 300 வருடங்களாக நாட்டாமை செய்யும் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற கந்து வட்டிக் கடன்காரர்கள். இதனால் உலகில் வேறெந்த நாட்டிலும் ஏற்படாத விசித்திர அனுபவம் எல்லாம் மெக்சிகோவிற்கு ஏற்பட்டுள்ளது.

நமது அன்றாட உணவுப் பொருட்கள் பலவற்றின் தாயகம் மெக்சிகோ. சோளம், அவரைக்காய், தக்காளி, மிளகாய் போன்ற காய்கறி வகைகளை மெக்சிகோவை ஆக்கிரமிக்கும் நாள் வரையில் ஐரோப்பியர்கள் கண்டு, கேட்டிருக்கவில்லை. இன்று புகை பிடிப்பது ஒரு பாஷனாகி விட்டது. அமெரிக்க மால்பரோ புகைப்பவர்களுக்கு, புகையிலையின் தாயகம் மெக்சிகோ என்பது தெரியாது. இன்று சுவிஸ் சாக்லேட் வாங்குவதும், பரிசளிப்பதும் மேட்டுக்குடி கலாச்சாரமாகி விட்டது. ஆனால், சாக்லேட்டை சுவிட்சர்லாந்துக்கு அறிமுகப்படுத்தியவர்கள் மெக்சிகர்கள். சாக்லேட்டை அவர்கள் சுவை மிகுந்த சக்தி தரும் பானமாக குடித்து வந்தார்கள். ஐரோப்பியர்கள் முதன்முறையாக அஸ்டெக் சக்கரவர்த்தியின் அரண்மனையில்தான் சாக்லெட்டை சுவைத்தார்கள். பண்டைய மெக்சிக்கர்களின் மொழியில் அதன் பெயர் Xocoatl. (‘சோகோ’ என்றால் சூடு, ‘ஆடில்’ என்றால் நீர். ஐரோப்பியரின் வாயில் அது சாக்லேடாக மருவியது). அவர்கள் அதனை தேவர்கள் அருந்தும் சோமபானமாக கருதினார்கள். சக்தி தரும் பானம் என்பதால், ஆட்சியாளர்களும், படையினரும் விரும்பி அருந்தினார்கள். மேற்குறிப்பிட்ட உணவுப் பொருட்களை எல்லாம் ஐரோப்பியர்கள் பின்னர் முழு உலகுக்கும் அறிமுகப் படுத்தினார்கள். அது மட்டுமல்ல மெக்சிக்கர்களின் புகையிலைக்கும், சாக்லேட்டுக்கும் இன்று ஐரோப்பியர்கள் காப்புரிமை வைத்திருக்கிறார்கள். கூடிய விரைவில் மிளகாய்க்கும், தக்காளிக்கும் உரிமை கொண்டாடப் போகிறார்கள்.

ஐரோப்பியர்களின் காலடி படுவதற்கு முன்னரே, மெக்சிகோ மூவாயிரம் ஆண்டு கால நாகரீங்களை (ஒன்றல்ல, பல நாகரீகங்கள்) கண்டுள்ளது. ஒரு வகையில் மெக்சிகோவை பண்டைய இந்தியாவோடு ஒப்பிடலாம். பல நூறு மொழிகளைப் பேசும் பல்லினத்தவர்களின் தேசங்களைக் கொண்ட உப கண்டமாக விளங்கியது. அவ்வப்போது பல உன்னத நாகரீகங்கள் வேறு வேறு இடங்களில் தோன்றி மறைந்துள்ளன. சாம்ராஜ்ய விஸ்தரிப்புவாதிகளும், சுயாட்சி நகரங்களின் அதிபதிகளும் இடையறாத போரில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் மெக்சிகோ ஆட்சியாளர்களுக்கு பொதுவான குணாம்சம் ஒன்றிருந்தது. மதகுருக்களே மன்னர்களாக  சிம்மாசனத்தில் வீற்றிருந்தார்கள். மதவழிபாட்டு ஸ்தலமும், அரசியல் அதிகார மையமும் ஒன்றாக இருந்தது. அவர்களின் கீழே போரிடுவதை தொழிலாக கொண்ட போர்வீரர்கள். இவர்கள் எல்லோருக்கும் உணவளித்துக் கொண்டிருந்த அடித்தட்டு விவசாயக் குடிமக்கள். சரித்திரம் எப்போதும் மன்னர்களின் கதைகளையே குறித்து வைக்கின்றது. புராதன மெக்சிகோவிலும் புகழ் பூத்த ஆட்சியாளர்கள் ஆண்டார்கள், மாண்டார்கள். ஆனால், அடித்தட்டு மக்கள் என்றென்றும் அடக்கமாக கிராமங்களில் உழுதுண்டு, பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர். உழைக்கும் மக்களின் வம்சாவளி, 21ம் நூற்றாண்டு மெக்சிகோவிலும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Olmeken என்ற இனத்தவர்களே ஆதி கால மெக்சிகோ நாகரீகங்களின் முன்னோடிகள். (கி.மு. 1200  – 500) இன்றைய வெராகுரூஸ், டபாஸ்கோ மாநிலங்களில் அவர்களது ராஜ்ஜியம் பரவியிருந்தது. காடழித்து விவசாயம் செய்யும் சேனைப் பயிர்ச் செய்கையில் சிறந்து விளங்கினார்கள். வானசாஸ்திரம் கற்ற அறிஞர்கள், தானியங்களை விதைக்க ஏற்ற காலம் எதுவென்று சரியாகக் கணித்துச் சொன்னார்கள். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் உண்டு என்று கூட கணித்து வைத்திருந்தனர். அவர்களது மொழிக்கு எழுத்து வடிவம் இருந்தது. இயற்கை அழிவாலோ, அல்லது வேற்றினத்தவர்களின் படையெடுப்பு காரணமாகவோ ஒல்மேகன் நாகரீகம் வரலாற்றில் காணாமல் போனது. பிற்காலத்தில் பாராண்ட மாயா, அஸ்டெக் இனத்தவர்களும் அவர்களது அறிவுச் சொத்துகளை சுவீகரித்துக் கொண்டார்கள். மத்திய மெக்சிகோவில் தேயோட்டிஹுவகன் (Teotihuacanen ) என்ற இனத்தவர்களின் வளர்ச்சியடைந்த நாகரீகம் இருந்தது. அவர்களின் பூர்வீகமும், அழிவுக்கான காரணமும் இன்று வரை மர்மமாக உள்ளது. கி.பி. 200  – 600 வரையிலான காலப்பகுதியில் இரண்டு லட்சம் பேர் வசித்த பிரமாண்டமான கட்டிடங்களைக் கொண்ட பாழடைந்த நகரம், இன்றும் அவர்களின் நாகரிக மேன்மைக்கு சாட்சியமாக நிலைத்து நிற்கிறது. மெக்சிகோவில் இன்றைக்கும் கண்டுபிடிக்கப்படாத பல புராதன நகரங்கள் அடர்ந்த காடுகளுக்குள் மறைந்திருக்கின்றன.

அஸ்தேக்
பண்டைய அஸ்தேக் நாகரீகம்

மெக்சிகோவில் ஸ்பானிய காலனியப் படைகள் வந்திறங்கிய பொழுது, அஸ்தேக் சாம்ராஜ்யம் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. வட அமெரிக்க கண்டம் முழுவதிலும் அதி உயர் நாகரீகமடைந்த நாடாக திகழ்ந்தது. இன்றைய தலைநகரம், மெக்சிகோ நகரில்தான், Tenochtitlan என்ற அஸ்தேக் தலைநகரம் இருந்தது. அந்த தேச மக்கள் ‘மெக்சிக்கர்கள்’ என அழைக்கப்பட்டனர். மெக்சிக்கர்கள் தொலை தூரத்தில் வடக்குத் திசையில் இருந்த பூர்வீக தேசமான, Aztlan னிலிருந்து இருந்து இடம்பெயர்ந்து வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்றுண்டு. அவர்களது கடவுளான ஹுயிட்சிலோபோச்லி தெற்கில் ஒரு தேசத்தை தருவதாக வாக்களித்து இருந்தார். கற்றாழை செடி ஒன்றின் மீது பாம்பை பிடித்து வைத்திருக்கும் கருடனைக் காணும் இடத்தில் அந்த புதிய தேசத்தை நிர்மாணிக்குமாறு பணித்திருந்தார். மெக்சிக்கர்கள் நாடோடிகளாக அலைந்த நீண்ட பயணத்தின் இறுதியில் ஒரு நாள், அதாவது சரியாக 13-03-1325 அன்று அந்தக் காட்சியைக் கண்டார்கள். (பாழடைந்த அஸ்தேக் நகர இடிபாடுகளில் காணப்பட்ட குறிப்பு. தினக்காட்டி நமது காலத்திற்கேற்ப கணிக்கப்பட்டுள்ளது). இன்றைக்கும் மெக்சிகோ குடியரசின் சின்னமாக கற்றாழை மீது பாம்பைக் கொத்தும் கருடன் படம் நிலைத்து நிற்கிறது.

கொலம்பஸ் பஹாமாஸ் தீவில் வந்திறங்கிய போதிலும், மெக்சிகோ மீதான படையெடுப்பு இன்னொரு ஸ்பானிய தளபதியான கொர்தேஸ் (Cortes)  தலைமையில் இடம்பெற்றது. 12 -04 -1519ல், சுமார் ஐநூறு ஸ்பானியப் படையினர் பீரங்கிகள், துப்பாக்கிகள் சகிதம் வெராகுரூஸ் கடற்கரையில் வந்திறங்கினார்கள். மிகவும் தந்திரசாலியான கொர்தேசுக்கு விலைமதிப்பற்ற பரிசு ஒன்று கிடைத்தது. ஸ்பானியர்களுடன் ராஜதந்திர உறவை விரும்பிய குறுநில மன்னன் ஒருவன் வழங்கிய மலிஞ்சே என்ற இளவரசி, கொர்தேசின் வைப்பாட்டியானாள். விரைவில் இரண்டு மொழிகளிலும் புலமை பெற்ற இளவரசி மலிஞ்சே உதவியுடன் அயலில் இருந்த அரசுகளின் அணியை சேர்க்க முடிந்தது. அஸ்தேக் சாம்ராஜ்யம் பிற இனத்தவர்களின் நாடுகளை வென்று ஆக்கிரமித்து வந்தார்கள். அதனால் வெறுப்புற்றிருந்த குறுநில மன்னர்கள், சக்கரவர்த்தியை வீழ்த்த ஸ்பானிய படைகளுக்கு உதவினார்கள். ஸ்பானியர்கள் எதிர்காலத்தில் தம்மையும் அடக்கி ஆளப் போகிறார்கள் என்பதை, அன்று அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. சாம்ராஜ்யத் தலைநகரை நோக்கி அணிவகுத்துச் சென்ற ஸ்பானியப் படைகள் அஸ்தேக் சக்கரவர்த்தி மேக்டசூமா (Mectezuma )வை மட்டும் கொலை செய்யவில்லை. அஸ்தேக் தலைநகரத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்தார்கள். அழகிய அஸ்தேக் கட்டிடக் கலைக்கு சிறப்பு சேர்த்த பிரமாண்டமான ஆலயங்களும், மாளிகைகளும் உடைக்கபட்டு, கற்கள் பெயர்த்துச் செல்லப்பட்டன. இன்று மெக்சிகோ நகரில் பழமையான கத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்தும், அஸ்டெக் இடிபாடுகளின் மீதே கட்டி எழுப்பப்பட்டன. ஸ்பானிய ஆக்கிரமிப்புப் போர் நடந்த காலத்தில் அஸ்தேக் தலைநகரில் மட்டும் நான்கு லட்சம் குடிமக்கள் வாழ்ந்தார்கள். அன்றைய உலகம் முழுவதிலும் அந்தளவு சனநெருக்கம் உள்ள நகரங்கள் அரிதாகவே இருந்தன. புராதன தலைநகரத்தில் வாழ்ந்த லட்சக்கணக்கான குடிமக்களுக்கு என்ன நடந்தது?

Bartolome de las  Casas  என்ற பாதிரியா,ர் ஸ்பானிய காலனியப் படைகளின் ஆக்கிரமிப்புப் போரின்போது மெக்சிகோவில் இருந்துள்ளார். அவருடைய காலத்தில் வாழ்ந்த பிற பாதிரிகளைப் போலவே, ‘பாவாத்மாக்களான’ பழங்குடி செவ்விந்தியர்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் நோக்கத்தில்தான் அங்கே சென்றார். ஆனால், மெக்சிகோ சென்ற பின்னர்தான், தம்மை கிறிஸ்தவர்களாக அழைத்துக் கொள்ளும் ஸ்பானியர்கள் கொடூரமான பாவங்களை செய்வதை நேரில் கண்டார். ஸ்பானிய படையினர் கொன்று குவித்த பூர்வீக மக்களின் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. ஸ்பானியர்கள் உலகம் அதுவரை காணாத இனவழிப்பில் ஈடுபட்டதாக பார்தொலோமே குறிப்பெழுதி வைத்துள்ளார். கத்தோலிக்க பாதிரிகள், கிறிஸ்தவர்கள் அல்லாதோரை அடிமை வேலை வாங்குவதை அங்கீகரித்த காலமது. ஆனால், ‘கிறிஸ்தவர்களாக மதம் மாறிய செவ்விந்திய மக்களையும் அடிமைகளாக வேலை வாங்கப்படுவதை ஏற்க முடியாது’, என்று பர்தொலோமே பாதிரியார் வாதாடினார். இவரது கோரிக்கை ஸ்பெயின் அரசனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்றைக்கும் மெக்சிகோவில் அவர் காவிய நாயகனாக போற்றப்படுகிறார். ஒரு மாநிலத்தின் தலைநகருக்கு (San  Cristobal  de  las  Casas) அவரது பெயர் சூட்டப்பட்டது. ஆனால், அவரது தாயகமான ஸ்பெயினில், காலனியாதிக்கவாதிகள், பார்த்தலோமே ஒரு துரோகி என்று தூற்றினார்கள். அதற்கு காரணம் மெக்சிகோவில் நடந்த இனப்படுகொலைகளை, கொள்ளைகளை எல்லாம் அவர் பதிவு செய்து வைத்ததுதான். ‘அழிக்கப்பட்ட மேற்கிந்திய நாடுகளின் வரலாறு’ என்ற நூல் அன்றைய ஸ்பெயினின் எதிரிகளான ஆங்கிலேயராலும், ஒல்லாந்துக்காரராலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. (இந்த நூலின் பிரதிகள் இன்று அரிதாகவே கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் தேடித் படிக்கவும்.)

பாஞ்சோ-விய்யா-Pancho-Villa
பாஞ்சோ விய்யா

இன்றைய மெக்சிகோவின் மொழியும், கலாச்சாரமும் ஸ்பெயினிடம் இருந்து கிடைத்த சொத்துக்களாகும். நூறு மில்லியன் மக்கட்தொகையைக் கொண்ட மெக்சிகோ, உலகிலேயே அதிகமான ஸ்பானிய மொழி பேசும் மக்கள் வாழும் நாடாகும். மொத்த சனத்தொகையில் எண்பது சதவீதமானோர் ஐரோப்பியர்களுக்கும், பூர்வீக செவ்விந்தியருக்கும் இடையில் பிறந்த கலப்பினத்தவர்கள். இதனால் மெக்சிக்கர்களின் சிந்தனைப் போக்கு, அரசியல், கலாச்சாரம் போன்றவற்றில் ஐரோப்பியத்தன்மை சற்று அதிகமாகவே காணப்படுவது வழக்கம். 1910ல் வெடித்த சமூக – கலாச்சாரப் புரட்சி அதற்கு முடிவு கட்டியது. பெருநில உடமையாளர்களுக்கு எதிராக உழைக்கும் வர்க்கமும், ஐரோப்பியர் ஆதிக்கத்திற்கு எதிராக பூர்வகுடி மக்களும் எழுச்சி பெற்றனர். அதே கால கட்டத்தில்தான் ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் புரட்சிக்கு தயார் செய்து கொண்டிருந்தனர். சோவியத் புரட்சியை நேரில் கண்டு, ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ நூலை எழுதிய அமெரிக்க ஊடகவியலாளர் ஜான் ரீட், மெக்சிகோ புரட்சியையும் பதிவு செய்துள்ளார். மெக்சிகோ கூலி விவசாயிகளை ஆயுதமேந்த வைத்த காவிய நாயகன், பாஞ்சோ விய்யா(Pancho  Villa) வையும் சந்தித்துள்ளார்.

மெக்சிகோ புரட்சி, உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுத்த மத நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. அடுத்து வந்த பல தசாப்தங்களுக்கு மதகுருக்கள் வீதியில் செல்லவே அஞ்சினார்கள். நாடு முழுவதும் பல தேவாலயங்கள் பூஜை செய்ய பாதிரியார் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தன. டபாஸ்கோ மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகள் “காலை வணக்கம், கடவுள் இல்லை!” என்று முகமன் கூற வேண்டுமென்று ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். பெரும்பான்மை புரட்சியாளர்கள் கலப்பினத்தவர்களாக இருந்த போதிலும், பூர்வகுடி செவ்விந்தியரின் வம்சாவளியினராக ‘ஞானஸ்நானம்’ பெற்றனர். ஸ்பானியர்களை அந்நிய காலனிய ஆக்கிரமிப்பாளர்களாக பார்த்தனர். மெக்சிகோவை காலனிய அடிமைப்படுத்திய ஸ்பானிய தளபதி கொர்தேசின் சாம்பல், மெக்சிகோ நகர மருத்துவமனையில் ஒரு ஜாடியில் பாதுகாத்து வைக்கப் பட்டிருந்தது. புரட்சியாளர்கள் அந்த ஜாடியை அபகரித்து சாம்பலைக் கொட்டினார்கள். காலனியவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியான அஸ்தேக் சக்கரவர்த்தியின் கொலைக்கு பழி தீர்த்துக் கொள்வதற்காக அப்படி செய்தார்கள். இன்றும் கூட மெக்சிகோவில் எந்த இடத்திலும் கொர்தேசுக்கு ஒரு சிலை கூட இல்லை. (லத்தீன்) அமெரிக்கக் கண்டத்தில் இனவழிப்பு மூலம் ஐரோப்பிய காலனியாதிக்கத்தை நிறுவியவர்களை வரலாறு மன்னிக்கப் போவதில்லை. அவர்களின் வாரிசுகளே மக்கள் புரட்சி மூலம் தம் மீது விழுந்த களங்கத்தை துடைப்பார்கள். இருபதாம் நூற்றாண்டில், மெக்சிகோவின் கலாச்சாரப் புரட்சி லத்தீன் அமெரிக்க நாடுகள் எங்கும் எதிரொலித்தது.

–    தொடரும்

_______________________________

கலையரசன்
_______________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம் !! | வினவு!…

  ஐரோப்பியர்களின் காலடி படுவதற்கு முன்னரே, மெக்சிகோ மூவாயிரம் ஆண்டு கால நாகரீங்களை (ஒன்றல்ல, பல நாகரீகங்கள்) கண்டுள்ளது. ஒரு வகையில் மெக்சிகோவை பண்டைய இந்தியாவோடு ஒப்பிடலாம்….

 2. டியோடிஹாகன் நாகரீகத்தின் காலம் ஆறாம் நூற்றாண்டில் நடந்த வடக்கிருந்த வந்த நீண்ட படையெடுப்பில் நடந்திருப்பதற்கான சில தரவுகள் உள்ளது. டியோதுவாகான நாகரீகத்தின் ஆண்டு கிமு 2 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து தொடர்ந்து வந்த்து. நீங்கள் குறிப்பிட்டது போல இவர்கள் மாயர்களுக்கு காலத்தால் முந்தியவர்கள் அல்ல என நினைக்கிறேன்• கிமு 2000 முதல் அந்நாகரீகத்திற்கான சான்றுகள் உள்ளது.
  ஓவியத்தில் போர்ட்ரைட் முறையும், காலண்டரில் 18 மாதங்களை கொண்ட சந்திர வழி கணக்கிடலும் இந்தியாவை போலவே இங்கும் இருந்துள்ளது.

 3. உலக வரலாற்றில் உன்னத நாகரிகங்களுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்த மெக்சிக்கர்கள் இன்று தமது பாரம்பரிய அடையாளங்களை இழந்ததோடு மாபியாக்களின் பிடியிலும், வறுமையின் பிடியிலும் சிக்கி உழல்வதை படிக்கும்போது மனது கனமாகிறது. வரலாறு முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களை எதிர் கொண்ட அம்மக்கள் இன்றைய அவல நிலைக்கு தள்ளப்பட்டதற்கு முதன்மைக் காரணம் என்ன?

 4. மிக்க நன்றி தோழர் கலையரசன். உங்கள் அகதி வாழக்கை நூலாக வெளிவந்ததற்கு வாழ்த்துகள்

 5. ஆங்கிலேயனும்,ஐரோப்பியனும் இன அழிப்பு என்பதை ஒரு குலத்தொழிலாகவே மேற்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று இதன்மூலம் தெரிகிறது. இவர்கள் தந்த துயரத்தை இவர்களுக்கே திருப்பித்தந்த இனம் வரலாற்றில் எதாவது இருக்கிறதா?

 6. மிகவும் அருமையான கட்டுரை. பொறுமையாகவும், தெளிவாகவும் எழுதப்பட்டு இருக்கிறது.

  மெக்ஸிகோவில் தான் ஒரு ஆச்டிராய்டு விழுந்ததால் ஏற்பட்ட ஒரு பெரிய பள்ளம் இன்னமும் இருப்பதாக சொல்வார்கள்.

  இன்னும் பல அரிய தகவல்கள் அறிய ஆவல். தொடரட்டும். நன்றி.

 7. அவ்ளோ தூரம் மேசிகோ போனதா போல அப்படியா திபெத் வரலாறையும் சொன்னால் நல்லா இருக்கும்

 8. நல்ல பதிவு. இது வரை மெக்சிகோ பற்றி ஏதும் தெரியாத என்னைப்போன்ற ஏராளமானவர்களுக்கு ஏராளமான செய்திகள் தந்த கலையரசனுக்கும் வினவு தளத்திற்கும் நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க