Tuesday, December 3, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !!

இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !!

-

குமரன்-பத்மநாபன்-ஜெகத்-கஸ்பர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டுக்கான முன்னாள் பொறுப்பாளரும் தற்போது சிங்கள இனவெறி அரசின் தடுப்புக் காவலில் உள்ளவருமான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் “டெய்லி மிரர்” நாளேட்டுக்கு அண்மையில் அளித்துள்ள நேர்காணலில், இறுதிக் கட்ட ஈழப் போரின் போது இந்தியா போர் நிறுத்தத்துக்கு முயன்றதாகவும், அதனை வைகோவும் நெடுமாறனும் சீர்குலைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்குப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் மூலமாக தான் முயற்சி செய்ததாகவும், இதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியும் கிறித்துவப் பாதிரியான ஜெகத் கஸ்பாரும் உதவியதாகவும், அவர்கள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இது குறித்துப் பேசி ஒரு திட்டம் தயாரித்ததாகவும், இதை ஏற்கக் கூடாது என்று புலிகளிடம் வலியுறுத்தி வைகோவும் நெடுமாறனும் இதற்குத் தடையாக இருந்ததால்தான் போர் நிறுத்தம் வராமல் போனது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் அது தி.மு.க. மற்றும் காங்கிரசு கட்சிகளுக்கு நல்ல பெயராகி தேர்தலில் சாதகமான நிலையைத் தோற்றுவித்துவிடும் என்று கருதி புலிகளின் முடிவை வைகோ மாற்றியதாகவும், தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையும் போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலையை எடுக்க முடியும் என்று வைகோ புலிகளிடம் கூறியதாகவும் கே.பி. குறிப்பிடுகிறார்.

பாதிரியார் ஜெகத் கஸ்பாரும் 2009 ஜனவரி இறுதியில் இந்திய அரசு போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டது உண்மைதான் என்கிறார். இந்திய அரசின் சார்பில், புலிகளின் தலைவரான பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய – பிரபாகரனின் சார்பில் பேசும் தகுதியுடைய நடேசனோடு தொடர்பு கோரப்பட்டதாகவும், ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான விருப்பம் (Intention to Lay Down Arms) மட்டுமே அப்போது விதிக்கப்பட்ட நிபந்தனை என்றும் அவர் கூறுகிறார். இதை புலித் தலைமையிடம் தெரிவித்த கஸ்பாரிடமே, நீங்களே ஒரு மாதிரி வரைவு (draft) தயாரித்து டில்லிக்காரர்களுக்குச் சம்மதமா என்று கேட்டுச் சொல்லுமாறு புலித் தலைமை கூறியதாம். அதன்படி ப.சிதம்பரத்தின் ஏற்பாட்டின்படி கஸ்பார் ஒரு வரைவு தயாரித்தாராம். இந்த வரைவினை இருதரப்பும் ஏற்றுக் கொண்ட பிறகு, புது டில்லி உயர் அதிகாரி ஒருவரோடு நடேசன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினாராம். பின்னர் அது முறிந்துவிட்டதாம். போர் நிறுத்தத்திற்கான அந்த வாய்ப்பு ஏன் தவறவிடப்பட்டது என்ற காரணத்தை நடேசன் சொல்லவில்லை என்கிறார் கஸ்பார்.

ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவுற்ற பிறகு, களத்தில் நின்ற பலருடன் விவாதித்த போது கஸ்பாருக்குப் பல உண்மைகள் தெரிய வந்ததாம். ” காங்கிரசு மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளையும் தங்கள் கூட்டணிதான் வெல்லப் போகிறது, கொந்தளிக்கும் தமிழக மக்கள் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்றெல்லாம் புலிகளை எச்சரித்து, “ஈழ விடுதலைப் போராட்டத்தை எப்பாடுபட்டேனும் காப்பாற்றியிருக்க வேண்டிய ஒரு வாழ்வா-சாவா கட்டத்தில் தங்கள் அரசியல் கணக்கு வட்டத்திற்குள் போராட்டத்தை வளைத்து, போராட்டத்தின் கட்டளைக் கட்டமைப்பு (Command Structure) அழிக்கப்பட காரணமாக இருந்துள்ளார்கள்” என்று வைகோவையும் நெடுமாறனையும் குற்றம் சாட்டுகிறார், கஸ்பார்.

ஈழத்தில் இனப்படுகொலை நடந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இவர்கள் இப்படிக் கூறுவதில் ஏதாவது உண்மையிருக்கிறதா? சிங்களப் பேரினவாத ராஜபக்சே அரசுக்குப் பல்வேறு உதவிகளும் செய்து போரை வழிநடத்திய இந்தியா, போர் நிறுத்த முயற்சி செய்ததாகக் கூறுவதை நம்பத்தான் முடியுமா? இது பற்றி இந்திய அரசோ, ராஜபக்சே அரசோ வாய்திறக்காத நிலையில், இந்திய உளவுத்துறைக்கு அப்பாற்பட்டு கே.பி.யும் கஸ்பாரும் போர்நிறுத்தத் திட்டத்தைத் தயாரித்ததாகக் கூறும் கோமாளித்தனத்தை ஏற்கத்தான் முடியுமா?

மேற்கத்திய நாடுகள் போர்நிறுத்தம் வேண்டுமென்று இலங்கை அரசை வலியுறுத்தியபோதிலும், தமிழகத்தில் போர் நிறுத்தம் கோரி போராட்டங்கள் தொடர்ந்த போதிலும், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் நாம் தலையிட முடியாது, போர் நிறுத்தத்தைக் கோரவும் முடியாது என்றுதான் இந்திய ஆட்சியாளர்கள் கூறிவந்தனர். அதேசமயம், இந்திய இராணுவ மற்றும் இந்திய உளவுப்படையான “ரா” வின் அதிகாரிகள் முள்ளிவாய்க்காலில் நிறுத்தப்பட்டிருந்தனர். தேர்தலையொட்டி தனது உண்ணாவிரத நாடகத்தின் விளைவாக போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று கருணாநிதி ஆரவாரம் செய்தார். கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை மட்டுமே நிறுத்தியிருக்கிறோம், இது போர் நிறுத்தம் அல்ல என்று இலங்கை அரசு அழுத்தம் திருத்தமாக அறிவித்தது.  அதுவும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும்வரைதான் நீடித்தது. அதன் பிறகு, இந்தியாவின் வழிகாட்டுதலின்படி முழுவீச்சில் இறுதித் தாக்குதலை சிங்கள பாசிச அரசு கட்டவிழ்த்துவிட்டு உலகின் மிகக் கொடியதொரு இனப்படுகொலையை அரங்கேற்றியது.

அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியோ பிரதமர் மன்மோகன் சிங்கோ போர் நிறுத்தத்தைப் பற்றிப் பேச மறுத்துவிட்ட நிலையில், இவற்றுக்குத் தொடர்பே இல்லாத நிதியமைச்சரான ப.சிதம்பரம் வழிகாட்டுதலில் போர் நிறுத்தத் திட்டம் தயாரிக்கப்பட்டதாக கஸ்பார் கூறுவது அண்டப்புளுகு அன்றி வேறன்ன? கோயபல்ஸ் பாணியில் திரும்பத் திரும்ப இந்தப் பொயைச் சொல்வதன் மூலம் காங்கிரசு மற்றும் கருணாநிதி மீது ஈழ மற்றும் தமிழக மக்கள் கொண்டுள்ள கோபத்தையும் வெறுப்பையும் திசைதிருப்புவதே இந்த கீழ்த்தரமான முயற்சியின் நோக்கம். இந்திய அரசு போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறுவதன் மூலம், கருணாநிதியைப் பாதுகாப்பது மட்டுமல்ல; இலங்கை அரசு போர் நிறுத்தத்துக்கு தயாராக இருந்ததைப் போலவும், புலிகள் போர் நிறுத்தத்துக்கு சம்மதித்துச் சரணடைந்திருந்தால், முள்ளிவாய்க்கால் படுகொலையைத் தவிர்த்திருக்க இயலும் என்பதைப் போலவும் ஒரு புதுக்கதையைக் கிளப்புவதன் மூலம் ஈழத்தமிழர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கு ஆதரவு தேடும் கீழ்த்தரமான முயற்சியும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.

வைகோ, நெடுமாறன், சீமான் முதலானோர் தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று புலிகளுக்கு நம்பிக்கையூட்டியவர்கள்தான். இந்தியாவின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்கு பதிலாக, சீனாவின் கூட்டாளியான ராஜபக்சே கும்பலை நம்பி ஏமாறக் கூடாது என்று உபதேசித்து இந்திய அரசை இன்னமும் தாஜா செய்பவர்கள்தான். இருப்பினும், இனப் படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட கொலைகார ராஜபக்சே கும்பலைப் போர்க் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்றும், ஈழப் படுகொலைக்கு இந்தியாவும் காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர்களைத் தனிமைப்படுத்தும் நோக்கத்திலேயே இந்தப் போர் நிறுத்தக் கதை அவிழ்த்து விடப்படுகிறது. இந்தக் கதையை இன்று இந்திய அரசோ, இலங்கை அரசோ கூறும் பட்சத்தில் அதை நம்புவதற்கு ஆளிருக்காது. அதன் பொருட்டுத்தான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கே.பி.யை ஊடகங்களின் முன் கொண்டுவந்து நிறுத்தி, இப்படி ஒரு பொய்யை உலகுக்குச் சொல்ல வைத்திருக்கிறது, இலங்கை அரசு.

ஈழப்போரின் போதே சிங்கள பாசிச அரசுக்கு ஆதரவாகத் தமிழக ஊடகவியலாளர்களை விலைபேசி இலங்கை அரசின் மீது நல்லெண்ணத்தைப் பரப்பும் வேலையை அப்போது சென்னையில் இலங்கையின் துணைத் தூதராகப் பணியாற்றிய அம்சா மூலமாக ராஜபக்சே கும்பல் நடத்தி வந்தது. போருக்குப் பின்னர் “இந்து” நாளேட்டின் ஆசிரியரான ராம் மற்றும் பிறரைக் கொண்டு நிவாரணப் பணிகள் சிறப்பாக நடப்பதாகக் காட்டி, ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்களை மறைக்கும் முயற்சிகள் நடந்தன. பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயமும், சினிமா நடிகர்களின் சுற்றுப்பயணமும் அரங்கேற்றப்பட்டன. அடுத்த ஆண்டு ஜனவரியில் அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்ததுவதென்றும் இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

இது, இந்திய-இலங்கை அரசுகள் இணைந்து தொடுக்கத் தொடங்கியிருக்கும் உளவியல் யுத்தம். இந்திய மேலாதிக்கத்தால் கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம், இத்தகைய வதந்திகளைப் பரப்புவதற்குத் தோதான பலவகையான சக்திகளை ஈழத் தமிழ்ச் சமூகத்தில் தோற்றுவித்திருக்கிறது. இவர்களின் மூலம் துயரத்தில் வீழ்ந்திருக்கும் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் பரப்பி, அவர்களை அரசியல் ரீதியாகவும் சரணடைய வைப்பதே ராஜபக்சே அரசின் நோக்கம்.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

 

  1. இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !!…

    காங்கிரசு, கருணாநிதி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை திசைதிருப்புவதே இதன் நோக்கம். ஈழத்தமிழர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கு ஆதரவு தேடும் கீழ்தரமான முயற்சியும் இதில் உள்ளடங்கியிருக்கிறது….

  2. கட்டுரையின் வரிகள் உண்மைகளை அப்படியே வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.

    இறுதிப் போரின் காலகட்டத்தில் மத்திய அரசின் தரப்பின் போர் நிறுத்தத்திற்கான எந்த சமிக்சையும் இல்லை.மாநில அரசோ மத்திய அரசின் முடிவே எங்கள் வேதம் என ஓதி விட்டது.

    கடந்து போனவைகளை விலாவாரியாக ஈழமக்களின் வாழ்க்கையில் அக்கறை கொண்ட அத்தனை பேரும் சொல்லி முடித்தாகி விட்டது.

    இப்போதைக்கான முக்கிய பிரச்சினை நிலத்திலும் ,புலத்திலும் பிரிந்து நின்று குரல் எழுப்புவதே எதிர்கால நம்பிக்கைகளை சீர்குலைப்பதோடு ராஜபக்சேக்களின் சூழ்ச்சிகளுக்கு இலகுவாயும் அமைகிறது.அதன் வெளிப்பாடு நாடு கடந்த தமீழீழம் வரை வெளிப்படுகிறது.

  3. இலங்கைப் போர் நாடாளுமன்றத் தேர்தலின் முக்கிய விஷயமாகக் கருதப்பட்ட நிலையில், மக்கள் ஆதரவைப் பெற பல நாடகங்களை அரங்கேற்றிய இவர்கள் அமைதி முயற்சியை இரகசியமாக வைத்திருந்தார்களா? எப்படி இது மாதிரியெல்லாம் இவர்களால் கதை சொல்ல முடிகிறது. மக்களை முட்டாள்கள் என நினைத்துவிட்டனரா இவர்கள்?

    இவர்களது நோக்கம் நிறைவடைவதைத் தடுத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றிருக்கும் புதிய ஜனநாயகம் மற்றும் வினவுக்கு நன்றி‌

  4. தமிழினப் படுகொலையில் சோனியா, பிரனாப், மன்மோகன், சிதம்பரம், கருணாநிதி போன்ற அதிகார வர்க்கம் மட்டும் பங்கு பெற வில்லை.

    ஈழ தாய் என அழைக்கப்பட்ட ஜெயலலிதாவும் சிங்கள பேரினவாதத்தின் பங்காளிதான்.

    டிசம்பர் 2008 போர் என்றால் மக்கள் சாவது சகஜம் என சொன்ன ஜெயலலிதா, சிங்கள உளவாளி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் பேச்சை கேட்டு ஈழ தாய் ஆனது எப்படி?

    மே 2009 18ஆம் தேதி புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டதாக சொல்லி, தமிழர்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என ராஜபக்சேக்களிடம் உரிமையுடன் கேட்ட ஜெயலலிதா அதோடு அவரது பாணியில் இலங்கை தமிழர்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்து விட்டாரா?

    இப்போது பல காரணங்களுக்காக மைனாரிட்டி திமுக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தும் ஜெயலலிதாவிற்கு ஈழ தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் ஒரு காரணமாக தெரியாமல் போனது ஏனோ?

    தமிழர்களை கொன்றொழித்த போர் குற்றவாளிகளில் சோனியா, ராகுல், மன்மோகன், பிரனாப், சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன், ஏ.கே.அந்தோனி, இந்து ராம், ப.சிதம்பரம் என இந்த கூட்டமும் சேரும்… இந்த கூட்டத்திற்கு துணை போன கருணாநிதிக்கும் போர் குற்றங்களில் பங்குண்டு…

    இன்னொரு பக்கம் சிங்கள கொலைகாரர்களுக்கு உதவி செய்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜெயலலிதா, சோ போன்றவர்களும் போர் குற்றவாளிகளே…

    எல்லா போர் குற்றவாளிகளையும் நேர்மையாக அம்பலப்படுத்துவோம்…

  5. இப்போதைக்கான முக்கிய பிரச்சினை நிலத்திலும் ,புலத்திலும் பிரிந்து நின்று குரல் எழுப்புவதே எதிர்கால நம்பிக்கைகளை சீர்குலைப்பதோடு ராஜபக்சேக்களின் சூழ்ச்சிகளுக்கு இலகுவாயும் அமைகிறது.அதன் வெளிப்பாடு நாடு கடந்த தமீழீழம் வரை வெளிப்படுகிறது.

  6. இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையில் மிகவும் பின் தங்கி உள்ளார்கள், இந்திய தமிழர்களை ( அவங்களை கணகுல சேர்க்க வேணாம், அது தனிக் கதை) விடவும் இலங்கை தமிழர்கள் மத்தியில் பிளவுகள் அதிகம் இர்ப்பதை கனடாவில் பார்க்க கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக இங்கு வாழும் பல தமிழ் குடும்பங்கள் சொந்த நாட்டைப் பற்றிய கவலை குன்றி இருப்பதை பார்த்துருக்கேன். அப்படி அக்கறையானவர்களும் எந்த வித நடவடிக்கைகளும் எடுத்ததாக நான் அறியவில்லை. தமிழர் இல்லாவிட்டாலும் தமிழ் நாட்டில் வாழ்ந்ததால் எனக்கிருக்கும் கொஞ்சம் அக்கறையில் தான் இதை எழுதுகிறேன்.

  7. ஈழத்தின் உண்மையான நிலை என்ன, எம்மக்களுக்கு எப்போது விடிவு கிடைக்கும், யாரால் இதற்க்கு சரியான பதில் தர முடியும், தமிழ்நாட்டு தமிழன் எவனுக்கும் சொரனையே கிடையாதா, என்னையும் சேர்த்துதான், என்ன செய்வது மனதிற்குள் குமுருவதைவிட

  8. //ஈழத் தமிழ்ச் சமூகத்தில் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் பரப்பி, ….//

    ம்ஹீம்…..இனிமேல் புதிதாக எந்த குழப்பமும் அவநம்பிக்கையும் ஈழத்தமிழ் சமூகத்துக்கு உருவாகப்போவதில்லை. அது செயற்கையாக, இப்படி ஏதாவது கோமாளித்தனமாக உருவாக்காப்பட்டாலேயன்றி!!!! ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் முகமூடியை கிழிக்கவேண்டிய முக்கிய பங்கு “தமிழ்நாட்டு தமிழர்களுக்கு” நிச்சயமாக உண்டு.

    எப்போதும் ஈழத்தமிழனையே குறைசொல்லிக்கொண்டிருக்காமல் தமிழ்நாட்டு தமிழர்களும் எங்களுக்காக இனிமேல் என்ன செய்யலாம் என்று ஆக்கபூர்வமாக யோசித்தால் சந்தோசப்படுவோம்.

    ஈழத்தமிழனுக்காக ஓர் ஊர்வலம் என்றால் கூட உங்களில் எத்தனை பேர் பங்களிப்பீர்கள்? அதை உங்கள் மண்ணில் ஜனநாயக உரிமைகளின் அடிப்படையில் நடத்துவதற்கு கூட உங்களுக்கு முடியுமா? யோசியுங்கள்!!!! எங்களுக்கான விலங்குகள் கண்ணுக்கு தெரிகிறது. உங்களுக்கு பூட்டப்பட்ட விலங்குகள் கண்ணுக்கு தெரியவில்லை, அவ்வளவுதான்.

    பி.கு: என் பின்னூட்டத்தைப் பார்த்து பொங்குறவங்க தாரளாமா பொங்கலாம்.

  9. ஒரு சின்ன திருத்தம், (அது பதிவிற்கு /புனைவிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்த போவதில்லை என்ற போதும்) .

    பாதுகாப்பு துறை அமைச்சராக ( ராணுவ) எப்போதும் இருந்தவர்+இருப்பவர், அந்தோணி அவர்களே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க