privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்!

காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்!

-

காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்!“பல்வேறு குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்டிருக்கும் காவி பயங்கரவாதம் நமது நாட்டில் புதிதாகத் தலை தூக்கியுள்ளது” என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூறினார். இந்து பயங்கரவாத அமைப்பினர் உடனே துள்ளிக் குதிக்கத் தொடங்கினர். அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டனர். நாடாளுமன்ற மேலவையை ஒருநாள் இயங்கவிடாமல் முடக்கினர்.

காங்கிரசுக் கட்சியின் இளைய தலைவரான ராகுல் காந்தி அண்மையில், “ஆர்.எஸ்.எஸ்., சிமி இரண்டு அமைப்புகளுமே அடிப்படைவாதக் கொள்கைகளைக் கொண்டவை. சிமி தடை செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்படவில்லை. அவ்வளவுதான் வித்தியாசம்”என்று பேட்டி அளித்தார். பா.ஜ.க. கட்சியோ, “வரலாறு தெரியாமல் பேசாதே” எனக் கூச்சல் போட்டு ராகுலுக்கு சில நூல்களையும் அனுப்பி வைத்தது.

அயோத்தி தீர்ப்பு வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன், “ராமர் கோவில் கட்டுவது என்பது பெரும்பாலான இந்துக்களின் உணர்வு” என அத்வானி குறிப்பிட்டதற்கு காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, “பழைய காயத்தை அத்வானி கிளற வேண்டாம்” எனச் சீறினார். அயோத்தி தீர்ப்பு வெளிவந்தவுடன் ப.சிதம்பரம், “மசூதி இடிக்கப்பட்டதைத் தீர்ப்பு நியாயப்படுத்தவில்லை. என்னைப் பொருத்தவரையில் அந்த குற்றச்செயல் அப்படியேதான் இருக்கிறது” எனக் ‘கடுமையாக’ப் பேசினார்.

இவ்வாறு ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராகச் சீறுவதாக ப.சிதம்பரமும், ராகுல் காந்தியும் தீவிரமாக நடிக்கிறார்களே, அவர்களின் கட்சிதான் இந்த நாட்டில் இந்து மதவெறிப் பாசிசம் உருவாகி வளர்வதற்கு அடிக்கொள்ளியாக இருந்து வருகிறது. காந்தி படுகொலையில் இருந்து குஜராத் இனப்படுகொலை வரை இந்துமதவெறியைச் சீராட்டி வளர்த்தும் இருக்கிறது.

“ராமராஜ்ஜியம் அமைப்போம்”, “பசுவதை தடுப்போம்”, “கிறித்துவ மதமாற்றத்தை எதிர்ப்போம்”, “வர்ணாசிரம தர்மம் காப்போம்” போன்ற ஆர்.எஸ்.எஸ்.-க்கு நெருக்கமான கொள்கைகள்தான் காந்திக்கும் நெருக்கமானதாக இருந்தன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபையைச் சேர்ந்த மத வெறியர்கள் காங்கிரசிலும் உறுப்பினராவது, காந்தி காலத்தில் முரண்பாடானதாக இருந்ததில்லை. பாபர் மசூதி இடிப்புக்குத் துணை நின்ற காங்கிரசின் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவே அப்போதைய காக்கி டவுசர்வாலாதான். முசுலீம் மதவாத தேசியத்தை வளர்த்தது முசுலீம் லீக் என்றால், இந்து தேசியத்தை வளர்த்தது காங்கிரசு.

காந்தி படுகொலையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கத் துணைநின்றவர், காங்கிரசின் துணைப்பிரதமர் பட்டேல். 1947 -இல் சோமநாதபுரம் கோவிலைப் புதுப்பிக்கும் அரசியலைக் கையில் எடுத்தவர்களும் காங்கிரசின் வல்லபாய் பட்டேலும், குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்தும்தான். இக்கோவிலில் இருந்துதான் 1990 -&இல் அத்வானி ரதயாத்திரை தொடங்கினார்.

பெரும்பாலான வட மாநிலங்களில் தற்போது நடைமுறையில் உள்ள “பசுவதைத் தடைச் சட்டம்”, காங்கிரசு அந்தந்த மாநிலங்களில் ஆட்சியில் இருந்தபோதுதான் நிறைவேற்றப்பட்டன. குஜராத், உ.பி., பீகார் மாநிலங்களில் நடந்த மதக் கலவரங்களில் இளைஞர் காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ்.ஸூம் கைகோர்த்துக் கொண்டு முசுலீம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கும்; மீரட், கான்பூர், தில்லி நிஜாமுதீன் ஆகிய இடங்களில் 80-களில் நடத்தப்பட்ட முஸ்லிம் படுகொலைகளில் காங்கிரசின் சேவாதளம் ஆற்றிய பங்குகள் பற்றியும் எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. நெருக்கடி காலத்தில் சஞ்ச காந்தி முசுலீம் மக்களைக் குடும்பக் கட்டுப்பாடு செய்யக் கட்டாயப்படுத்தியதும், துருக்மான் கேட் பகுதியில் இருந்து ஏழை முசுலீம்களை அடித்து விரட்டியதும் என்றென்றும் மறக்க முடியாதவை.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபொழுது, இந்துக்களை தாஜா பண்ணுவதற்காக பாபர் மசூதி வளாகத்தினுள் திருட்டுத்தனமாக வைக்கப்பட்டிருந்த ராமர் சிலையை வழிபட அனுமதிக்கும் வண்ணம் பூட்டப்பட்டுக் கிடந்த அந்த மசூதி வளாகத்தை இந்துக்களுக் குத் திறந்துவிட்டார். இதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் ராமஜென்ம பூமியை முன்வைத்து இந்து மதவெறிப் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்துவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார், அவர். அதன் தொடர்ச்சியாக வட இந்தியாவெங்கும் பதற்றமும், படுகொலைகளும் பற்றிப் படர்ந்தன. 1990-இல் ரத யாத்திரை நடத்திய அத்வானி பீகாரில் கைதானதைத் தொடர்ந்து வி.பி.சிங்கின் அரசுக்கு பா.ஜ.க. ஆதரவை விலக்கிக்கொண்டபொழுது, பா.ஜ.க.-வோடு காங்கிரசும் கைகோர்த்துக் கொண்டது.

காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்

1992-இல் மசூதி இடிப்பின்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசு, ஒரு இலட்சம் துணை இராணுவத்தினரை மசூதிக்கு அருகில் நிறுத்தி வைத்து மசூதி முற்றிலுமாகத் தகர்க்கப்படுவதற்குப் ‘பாதுகாப்பு’ கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் ஆகிய இந்து மதவெறி அமைப்புகளைத் தடை செய்வது போலப் போக்குக் காட்டி விட்டு, ஆறே மாதங்களில் தடையை விலக்கியது

மசூதி இடிப்பைத் தொடர்ந்து மும்பை நகரத்தில் சிவசேனா, பா.ஜ.க. கும்பல் ஒரு பயங்கர கலவரத்தை நடத்தி நூற்றுக்கணக்கான முசுலீம்களின் உயிரைப் பறித்தபொழுது, காங்கிரசுதான் அம்மாநிலத்தில் அதிகாரத்தில் இருந்தது. அக்கலவரம் நடந்தபொழுது அதனைத் தடுக்காத காங்கிரசு, பின்னர் அதனை விசாரிக்க சிறீகிருஷ்ணா கமிசனை நியமித்தது. அக்கமிஷன் பால் தாக்கரே முதல் போலீஸ் கமிஷனர் ஆர்.டி.தியாகி வரை பலரைக் குற்றஞ்சாட்டி இருந்தது. கலவரத்தின் பின் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. – சிவசேனா கும்பல் அக்கமிசனின் அறிக்கையை முடக்கி வைத்தது.

“கிருஷ்ணா கமிசன் அறிக்கையை நிறைவேற்றுவோம்” என வாக்குறுதி அளித்து தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரசு கூட்டணி பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களின் முதுகில்தான் குத்தியது. பால் தாக்கரே உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்யாததோடு, கிருஷ்ணா கமிசனால் குற்றஞ்சாட்டப்பட்ட பல போலீசு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்து கௌரவித்தது, காங்கிரசு.

ரோஹிண்டன் மிஸ்த்ரி என்ற நாவலாசிரியர், இருபது ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனாவின் இனவெறி அரசியலை விமர்சித்து எழுதிய “சச் எ லாங் ஜர்னி” (Such AS Long Journey) என்ற ஆங்கில நாவல் மும்ப பல்கலைக்கழகத்தின் இளங்கலை ஆங்கில பட்டப்படிப்புக்கான பாடத் திட்டத்தில் இருந்து வந்தது. தற்பொழுது அப்பல்கலைக்கழகத்தில் படித்து வரும் பால் தாக்கரேயின் பேரன் ஆதித்யா தாக்கரே அந்நாவலைப் பாடத்திட்டத்தில் இருந்து விலக்கக் கோரி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியவுடனேயே, அந்நூலைப் பாடத்திட்டத்திலிருந்து விலக்கிக்கொண்டு சிவசேனாவிடம் அடிபணிந்தது, காங்கிரசு.

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரித்துப் பேசியதற்காக எழுத்தாளர் அருந்ததிராய் மீது தேசத் துரோக வழக்குப் போடத் தயாராகும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைக் கக்கி வரும் நரேந்திர மோடி, பிரவீண் தொகாடியா போன்றோர் மீது ஒரு பெட்டி கேஸைப் போடக்கூடத் துணிந்ததில்லை. இது மட்டுமா, சோராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜஹன் ஆகியோரைப் போலி மோதலில் நரேந்திர மோடி அரசு கொன்றதில் காங்கிரசிற்கும் கணிசமான பங்குண்டு.

இவ்வாறு இந்து தேசியவெறிக்கு அடிக்கொள்ளியாக இருந்தும், இந்து மதவெறிப் பயங்கரவாதிகளைத் தப்பவைத்தும், காவி பயங்கரவாதத்தின் பங்காளியாகவும் விளங்கும் காங்கிரசின் முசுலீம் விரோத அரசியலை 50 ஆண்டுகளாகப் பார்த்துவரும் முசுலீம் வாக்காளர்கள் காங்கிரசு, பா.ஜ.க. அல்லாத பிராந்தியக் கட்சிகளின் வாக்காளர்களாக மாறிப்போ விட்ட சூழலில் அவர்களை எப்படியாவது தாஜா செய்து, பீகார், உ.பி. போன்ற மாநிலங்களில் மறுபடியும் வேரூன்றுவதற்காகத்தான் சிதம்பரமும், ராகுலும் இப்போது ஆர். எஸ்.எஸ்., பா.ஜ.க.-வுக்கு எதிராகச் சவடால் அடிக்கின்றனர்.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

  1. காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு : காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல் !…

    அருந்ததிராய் மீது செடிஷன் வழக்கு போடத் தயாராகும் ப.சிதம்பரம், முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைக் கக்கி வரும் மோடி, தொகாடியா போன்றோர் மீது ஒரு பெட்டி கேஸைப் போடக்கூடத் துணிந்ததில்லை…

  2. இந்து மதவெறிப் பாசிச நாணயத்தின் இரு பக்கங்கள் இந்த காங்கிரசும் பா.ஜ.காவும். எதிரியை இனம் கண்டு அழித்துவிடலாம் ஆனால் மத்தியில் காங்கிரசும்,மாநிலத்தில் தி.மு.காவும் செய்யும் நரித்தன அரசியலை மக்கள் புரிந்து கொள்ளது சிரமம்தான். இந்த கயவர்களின் முகமுடித்திரையை கிழித்து அதை மக்களிடம் அம்பலபடுத்தி புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களை அணிசேர்ப்பது நமது கடமை.

  3. இதில் இன்னும் கொடுமை மத வெறியை விதைக்கிறார்களே ஒழிய, இந்து மதத்தில் இருந்த எத்தனையோ நல்ல விஷயங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். இந்துக் கோவில்களில் பாலியல் பன்முகத்தன்மை தொடர்பிலான சிற்பங்களை (ஒரு காலத்தில் இந்து மதத்தில் பன்முகத்தன்மை இருந்தமைக்கான சான்றுகளை) காந்தியும் நேருவும் திட்டமிட்டு அழித்தார்கள் என நண்பர் ஒருவர் கூறித் தெரிந்துகொண்டேன்.

  4. மதம் தான் அரசியலின் முதலீடாக இருக்கிறது. ஓட்டுப் பொறுக்கி கட்சிகளுக்கு அதுதான் சோறு போடுகிறது. கபட நாடகமாடும் காங்கிரசுக்கு மக்கள் தான் புத்தி புகட்ட வேண்டும்.

Leave a Reply to Indli.com பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க