privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்!

வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்!

-

வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!
வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், கடந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று பத்தாவது ஆண்டைக் கடந்துவிட்டது.

பத்தாண்டுகளுக்கு முன்பு, மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு அருகேயுள்ள மாலோம் என்ற புறநகர்ப் பகுதியில் அசாம் துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 34 பேர் படுகாயமுற்றனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் சாலையோரத்தில் பேருந்துக்காகக் காத்து நின்ற அப்பாவிகள்.

மாலோம் படுகொலை என்று அழைக்கப்படும் இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சிப்பாய்களுள் ஒருவன்கூட இதுநாள்வரை தண்டிக்கப்படவில்லை.  இன்னும் சொல்லப்போனால், இந்தப் படுகொலை நீதிமன்ற விசாரணையைக்கூட இன்னும் எட்டவில்லை.  ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான் அச்சிப்பாய்கள் விசாரிக்கப்படுவதையும் தண்டிக்கப்படுவதையும் தடுத்து, அவர்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பை வழங்கி வருகிறது.

ஐரோம் ஷர்மிளா, மாலோம் படுகொலை நடந்து முடிந்த மூன்றாவது நாளே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.  அவரின் போராட்ட உறுதியையும், அவரது போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் கண்டு அரண்டு போன மணிப்பூர் மாநில அரசு, ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது.  அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்து அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது. அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறை, கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய பின் கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறைகூடத்  தனது வீட்டிற்குச் செல்லவில்லை.  மணிப்பூர் மாநில அரசு அவரை விடுதலை செய்யும்பொழுதெல்லாம் – அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ் அவரை ஓராண்டு மட்டுமே சிறையில் அடைத்துவைக்க முடியும் – அவர் தனது போராட்டத்தை ஆதரித்து வரும் மேரா பாபி என்ற மகளிர் அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார்.  உடனே, மணிப்பூர் மாநில அரசு அவரை மீண்டும் கைது செய்து மருத்துவமனையில் அடைத்துவிடும்.

அவர் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான திட உணவையும் உட்கொள்ள மறுத்து வருவதால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து வந்தாலும், அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவது பற்றி ஆராய கமிட்டி அமைக்கிறோம்; எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு மாநில அரசு நடத்திய பேரத்தையெல்லாம் ஐரோம் ஷர்மிளா ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை.  அவரைப் பொருத்தவரை, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே வீட்டிற்குச் சென்று வயது முதிர்ந்த தனது தாயாரின் மடியில் தலை சாப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மியான்மர் இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூ கி-யைப் பதினைந்து ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்ததற்கும் இந்தியக் ‘குடியரசு’ ஐரோம் ஷர்மிளாவைப் பத்தாண்டுகளாக மருத்துவமனை என்ற கிளைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது.

போராளிகளின் மனவுறுதியையும் கொள்கைப் பற்றுறுதியையும் அடக்குமுறைகளின் மூலம் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார்.  வெல்லட்டும் அவரது போராட்டம்!  வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!!

_____________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
_____________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:


  1. வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம் ! | வினவு!…

    போராளிகளை அடக்குமுறையால் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார். வெல்லட்டும் அவரது போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!!…

    • சென்ற மாதம் நான்காம் தேதி அவர் உண்ணாவிரதம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனது. கண்டிப்பாக மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு உள்ளது..

  2. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி கொலைகார இந்திய அரசிடம் முறையிட்டு போராளி ஐரோம் சர்மிளா கடந்த 10 வருங்களாக செய்து வரும் மகத்தான பங்களிப்பின் சில அம்சங்களை அதாவது அவரின் உயர்ந்த நோக்கம், அதில் பற்றுதி அதை அடைவதற்கான அவரின் மன உறுதி ஆகியவை போற்றக்கூடிய அனைவராலும் கற்றுக்கொள்ளக்கூடியது என்பதை ஏற்றுக்கொள்வதில் அச்சட்டத்தை எதிர்க்கும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருந்துவிட முடியாது. ஆனால் “வெல்லட்டும் ஐரோம் சர்மிளாவின் போராட்டம்” என்ற இக்கட்டுரையின் தலைப்பு எதை வலியுறுத்துகிறது? அவரின் போராட்ட வழிமுறையை ஆதரிக்கிறது. ஒரு பயங்கரவாத அரசிடம் அதுவும் ஒரு தனி நபர் அதுவும் தன்னை வருத்திக் கொண்டு ஈடுபடும் நடவடிக்கையால் அந்த அரசு இறங்கிவந்துவிடுமா? இந்த வழிமுறையின் மூலம் அரசை பணியவைத்துவிட மடியுமா? முடியாது என்பதுதான் என் கருத்து. சர்மிளாவின் இக்கோரிக்கை அரசியல் போராட்டத்தால் வெல்லட்டும் என்ற கோணத்தில் சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். வினவுத் தோழர்களிடமிருந்து இது குறித்து கருத்தை எதிர்பார்க்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க