Thursday, February 2, 2023
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மவுனமோகன் சிங் என்கிற கல்லுளிமங்கன் !

மவுனமோகன் சிங் என்கிற கல்லுளிமங்கன் !

-

மன்மோகன்சிங் என்கிற கல்லுளிமங்கன்

“பிரதமர் நாற்காலியின் கவுரவத்தை குலைத்து விடாதீர்கள்” என்று எதிர்க்கட்சிகளை எச்சரித்திருக்கிறார் அன்னை சோனியா.

நாற்காலி என்ற அஃறிணைப் பொருளுக்கு  கவுரவம் ஏது என்று நீங்கள் குழம்ப வேண்டாம்.

“வி வாண்ட் ஜே.பி.சி” “வி வாண்ட் ஜே.பி.சி” என்று கடந்த பல நாட்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அலைகடலாகக் குமுறிக் கொந்தளிப்பதையும்,  ஆழ்கடலின் அமைதியும் புன்னகை மாறாத முகமும் கொண்ட அவைத்தலைவர் மீரா குமார், அமைதி அமைதி என்று 4 முறையும், இருக்கைக்கு செல்லுமாறு 2 முறையும் மென்மையாக கையசைத்து விட்டு, பிறகு அவையை ஒத்தி வைப்பதாக கூறி ஒரு முறை கைகூப்பி வணக்கம் சொல்வதுடன் படம் முடிவதை அன்றாடம் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அரங்கம் நிறைந்த காட்சியாகத் தொடங்கி, மெல்ல மெல்ல கூட்டம் குறைந்து, .. நேற்றோடு படம் தூக்கப்பட்டுவிட்டது.

நடந்து முடிந்த இந்தக் களேபரத்தை ஆடாமல் அசையாமல், அலட்டிக் கொள்ளாமல் எதிர்கொண்டவை நாடாளுமன்றத்தில் இருந்த இரண்டு பொருட்கள் மட்டுமே. முதலாவது நாடாளுமன்ற நாற்காலி. இரண்டாவது மன்மோகன்சிங்.

எனவே, “நாற்காலியின் கவுரவத்தை குலைத்து விடாதீர்கள்” என்று அன்னை இரு பொருள்படவே கூறியிருக்க வேண்டும். பிரதமரை இழிவு படுத்துவது நமது நோக்கமல்ல. தனது கூற்றை சோனியாவே தெளிவு படுத்தியிருக்கிறார். ”Ms.Gandhi complimented the Prime minister on ‘his wise leadership’, on his ‘remaining calm amidst the storm” என்று சோனியா சொன்னதாக எழுதியிருக்கிறது இந்து பத்திரிகை. “பிரதமருடைய இந்த முயற்சி யில் காங்கிரசு கட்சி அவருக்குப் பின்னால் உறுதியாக நிற்கும்” என்றும் அன்னை சோனியா அறிவித்திருக்கிறார்.

இன்று நாம் காணும் நாடாளுமன்றக் காட்சிகளைப் போன்ற காட்சிகளை முன்னர் தமிழக சட்டமன்றத்திலும் நாம் கண்டிருக்கிறோம். ஊழல் வழக்குகளின் காரணமாக அன்னை ஜெயலலிதாவால் அமர முடியாத முதல்வர் நாற்காலியில், ஒரு ஓரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஒண்டிக் கொண்டிருந்தபோது தமிழக சட்டமன்றத்திலும் இதுதான் நடந்தது.

முதல்வர் நாற்காலியாக இருந்தாலென்ன, பிரதமர் நாற்காலியாக இருந்தாலென்ன, அஃறிணைப்பொருட்கள் என்ற வகையில் அவையிரண்டும் சமமே. அதே நேரத்தில் அவற்றில் அமர்ந்திருந்த மன்மோகன் சிங்கும் பன்னீரும் சமம் என்று கூறிவிடமுடியாது.

பன்னீர் அமைச்சராவதற்கு முன் டீக்கடை முதலாளி. மன்மோகன் சிங்கோ உலக வங்கி அதிகாரி. பன்னீருக்கு விவரம் பத்தாது என்பதால் பேசுவதில்லை. மன்மோகன் சிங் ரொம்ப விவரமறிந்தவர் என்பதால் பேசுவதில்லை. மவுனமாக இருப்பதனால் முட்டாளும் அறிவாளியும் சமமாகி விட முடியாதில்லையா? அதனால்தான் ‘அறிவார்ந்த தலைமை’ என்று அன்னை சோனியா அழுத்திக் கூறியிருக்கிறார்.

”நம்முடைய அரசாங்கத்திடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை, நாம் பயப்படுவதற்கும் எதுவும் இல்லை” என்றிருக்கிறார் சோனியா. உண்மைதானே. தேசிய நெடுஞ்சாலைகளின் கப்பிக்கல் முதல் கான்கிரீட் தூண்கள் வரை அனைத்திலும் கமல்நாத்துக்கு கழிவுத்தொகை 15 சதவீதம் என்பது வெளிவந்து விட்டது. முகேஷ் அம்பானிக்கு கொடுக்கப்பட்ட 91,000 கோடி வரிச்சலுகை ரகசியம் வெளிவந்து விட்டது.  ராஜா மட்டுமல்ல, கமல்நாத், ஆனந்த் சர்மா, பிரபுல் படேல் முதலான அமைச்சர்கள் யார் யாருடைய சிபாரிசின் பேரில் பதவியைப் பெற்றார்கள் என்பது ராடியா டேப்பில் வெளிவந்துவிட்டது. மற்ற அமைச்சர் பெருமக்களின் நியமனம் குறித்த ரகசியங்கள் பாக்கி உள்ள டேப்புகள் ஒலிபரப்பாகும்போது தெரியவரக் கூடும்.

அமைச்சர்களை நியமிப்பவர் பிரதமர். டேப்புகளில் பேசியிருக்கும் பிரமுகர்கள் எல்லோரும் “மேலிடத்தில் பேசிவிட்டேன்” என்று சொல்லும்போது, பிரதமரிடம் பேசிவிட்டதாகத்தான் அதற்கு நாம் பொருள் கொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியாக ராஜாவை நியமிக்க பிரதமரிடம் சிபாரிசு செய்த டாடா மாட்டிக் கொண்டு விட்டார். சிபாரிசை அமல்படுத்திய மன்மோகன் மவுனம் சாதிக்கிறார். லாபியிங் செய்த ராடியா மீது விசாரணை. விசாரணையை நடத்துவது லாபியிங்குக்கு இடம் கொடுத்து மடமும் கொடுத்த மன்மோகன் சிங் அரசு. இந்தக் கேலிக்கூத்தை எங்கே போய் சொல்ல?

எந்த மந்திரிக்கு எந்த கார்ப்பரேட் சிபாரிசு என்று இப்போது தெரிந்து விட்டது. பிரதம மந்திரியாக மன்மோகன் சிங்கை நியமிக்க யார் யாருக்கு சிபாரிசு செய்திருப்பார்கள்? மேற்படி உண்மை ராடியா டேப்பில் வருமா என்று சொல்ல முடியாது. அது ஒருவேளை விக்கி லீக்ஸில் வெளிவரக்கூடும். ஏனென்றால், பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை சிபாரிசு செய்தவர்கள் உலக வங்கியும், அமெரிக்க முதலாளிகளுமாயிற்றே.

அந்த ரகசியம் வெளியில் வந்துவிட்டாலும் மன்மோகன் சிங் பேசமாட்டார். அன்னை சோனியா சொல்லியிருப்பது போல காங்கிரசு கட்சியும் அதற்கெல்லாம் பயந்து விடாது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அத்தனை கட்சிகளின் அம்மணப் படங்களும்தான் ராடியா டேப்பில் ஓடுகின்றன. யாரைப் பார்த்து யாரும் கூச்சப்படுவதற்கோ தலை குனிவதற்கோ என்ன இருக்கிறது? “இன்று நீ நாளை நான்” என்று டவுசர் கழட்டப்பட்டவர்களும், கழட்டப்பட இருப்பவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து புரிந்துணர்வுடன் புன்னகை பூத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான். பயப்படுவதற்கு வேறெதுவும் இல்லை.

இந்த இரைச்சல்கள் கூச்சல்களெல்லாம் சிறுபிள்ளைத் தனமானவை என்பதை மன்மோகன்சிங் அறிவார். அதனால்தான் நாடாளுமன்ற அமளி துமளிகளைக் கண்டு அவர் அதிரவில்லை. மவுனமாகப் புன்னகை பூக்கிறார். இது முற்றும் உணர்ந்தவரின் மவுனம். அறிவார்ந்த மவுனம்.

இதற்கு முன் எத்தனை ராடியா டேப்பை அவர் பார்த்திருக்கிறார்?

1994 இல் நாட்டுக்கும், நாடாளுமன்றத்துக்கும் தெரியாமலேயே காட் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவைத்தார் மன்மோகன் சிங். அன்றைக்கும் நாடாளுமன்றம் சலசலக்கத்தான் செய்தது. அறிவாளி மன்மோகன் சிங் அசைந்து கொடுக்கவில்லை.

2005 இல் அமெரிக்காவுக்கு கிளம்பிய மன்மோகனிடம், “ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகப் போகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்கள் இடதுசாரிகள். “இல்லவே இல்லை” என்று சாதித்தார் மன்மோகன். வாஷிங்டனிலிருந்து வெளிவந்த பிரணாப்-ரம்ஸ்ஃபீல்டு, மன்மோகன்-புஷ் கூட்டறிக்கைகள் இந்தப் பொய்யை அம்பலமாக்கின. இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்கள் இறுதியாக்கப்பட்டிருந்தன.

பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தின் மீதான நாடாளுமன்ற விவாதம் வந்தது. “ஹைட் சட்டமா, நான் கேள்விப்பட்டதே இல்லையே” என்றார் பிரதமர். அமெரிக்க செனட் உறுப்பினர்கள் குட்டை உடைத்தனர். நாடாளுமன்றத்தில் கூச்சல். அன்றும் மவுனமாய் இருந்தே சாதித்தார் மன்மோகன்சிங்.

இன்று ஐயப்பன் பஜனையைப் போல அரசியல் முச்சந்திகள் தோறும் அலறுகிறது ராடியா டேப். அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ராடியாவுடன் தொடர்பு கொண்டிருந்த பிரபலங்கள் அனைவரும் “டேப்பில் என்னுடைய குரலை மட்டும் அழித்து விடு இறைவா” என்று மனதுக்குள் மன்றாடுகின்றனர். கோட்டு சூட்டு போட்ட கார்ப்பரேட் கனவான்கள் ” நீ 50,000 கோடி, நீ 10,000 கோடி” என்று ரோட்டில் கட்டி உருளுகின்றனர். அரசியல் வாதிகளை டிவியில் உரித்தெடுக்கும் ஊடக நட்சத்திரங்களெல்லாம் உளறுகின்றனர். ஊரே அமர்க்களப்படுகிறது.

உத்தமர் மன்மோகன்சிங் மட்டும் மவுனம் சாதிக்கிறார். இந்த மவுனத்தின் பொருள்தான் என்ன? இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று. வாய் திறந்து பேசினால் அந்த வார்த்தைக்கு ஒரு அர்த்தம்தான். மவுனமோ இரவைப் போன்றது. அதற்கு ஆயிரம் அர்த்தங்கள். பல்லாயிரம் பொழிப்புரைகள்.

“நடப்பது எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் மவுனமாக இருக்கிறார்.”

“அவர் ஊழல் என்ற சொல்லைக்கூட உச்சரித்து அறியாத உத்தமர். தன்னைச் சுற்றி இத்தனை ஊழலா என்ற அதிர்ச்சியில் ஊமையாகிவிட்டார்.”

“பதவியே வேண்டாம். என்னை விட்டு விடுங்கள் என்று சோனியாவிடம் விக்கி விக்கி அழுதும் பயனில்லாததால் விக்கித்து நிற்கிறார்.”

–   மன்மோகனின் மவுனத்துக்குத்தான் எத்தனை விளக்கங்கள்!

மற்றவர்களையெல்லாம் விடுங்கள். “பிரதமரைப் பேசச் சொல்” என்று சுப்ரீம் கோர்ட்டில் பெட்டிசனே போட்டார் ஒரு ஆசாமி. அந்த சு.சாமியே சொல்கிறார்: பிரதமர் நல்லவர்.

நல்லவருக்கு அடையாளம்தான் என்ன?

அடிஅடின்னு அடிச்சாலும், டமாரம் வச்சி அடிச்சாலும் கல்லுளி மங்கனாட்டம் கம்முன்னு இருக்காரே, அதிலேர்ந்தே தெரியல, அவரு ரெம்ப ..நல்லவரு.

ஓ. பன்னீரை விட, வடிவேலுவை விட,  ரெம்ப….ரெம்ப  நல்லவரு!

______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: