privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கோவைத் தொழிலாளி வர்க்கத்திடையே ஒரு புத்தெழுச்சி!

கோவைத் தொழிலாளி வர்க்கத்திடையே ஒரு புத்தெழுச்சி!

-

கோவை என்.டி.சி தொழிற்சங்கத் தேர்தல்: பு.ஜ.தொ.மு மாபெரும் வெற்றி!

கோவை என்.டி.சி தொழிற்சங்கத் தேர்தல்: பு..தொ.மு மாபெரும் வெற்றி!

தமிழகத்திலுள்ள என்.டி.சி. எனப்படும் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான 7 ஆலைகளிலும் டிசம்பர் 18ம் தேதியன்று தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக நடைபெற்ற தேர்தலில், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) பெருவெற்றி பெற்றிருக்கிறது.

மொத்த வாக்குகளில் முதலிடத்தை தொ.மு.ச வும் (2 பிரதிநிதிகள்) இரண்டாமிடத்தை பு.ஜ.தொ.மு வும், (ஒரு பிரதிநிதி)  மூன்றாமிடத்தை சி.ஐ.டி.யு வும் (ஒரு பிரதிநிதி), நான்காம் இடத்தை ஐ.என்.டி.யு.சி யும் (ஒரு பிரதிநிதி) பெற்றிருக்கின்றன.

1974 இல் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் ஆலைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த 36 ஆண்டுகளில் தேர்தல் என்ற ஒன்றை என்.டி.சி மில் தொழிலாளிகள் கண்டதில்லை. தேர்தலை நடத்தவேண்டும் என்பதற்காக கோவையில் இருந்த எந்த கட்சியின் தொழிற்சங்கமும் போராடியதில்லை. தேர்தலே நடக்காமல் இருப்பது நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் வசதியானதாகவே இருந்தது. தொழிலாளர்களின் அங்கீகாரத்தைப் பெறாமலேயே,. அவர்களுக்கு பதில் சொல்லும் தேவை இல்லாமலேயே, அவர்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் பெற்றிருந்தனர். நிர்வாகமும் தேர்தலே இல்லாமல் இவர்களையெல்லாம் பிரதிநிதிகளாக அங்கீகரித்திருந்தது.

தொழிலாளி வர்க்கத்தின் மீது சதித்தனமாகத் திணிக்கப்பட்டிருந்த இந்தக் கட்டைப் பஞ்சாயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், தேர்தலை நடத்த வைப்பதற்கும் பு.ஜ.தொ.மு தொடர்ந்து போராடியது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தேர்தல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தியது.

தேர்தல் நடத்தப்பட்டால் பு.ஜ.தொ.மு வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தினாலும், 36 ஆண்டுகளாக வழக்கத்தில் இல்லாத ஜனநாயக உரிமையை தொழிலாளி வர்க்கத்துக்கு வழங்கினால் நேரக்கூடிய அபாயம் குறித்த கவலையினாலும் உறக்கம் இழந்த தொழிற்சங்கத் தலைமைகள், ஒரு கூட்டுக் கமிட்டி அமைத்து தேர்தலுக்கு இடைக்காலத் தடையாணை வாங்க அரும்பாடு பட்டனர். இன்று தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றிருக்கும் சங்கங்கள்தான் தேர்தலை முடக்குவதற்கு மும்முரமாக வேலை செய்தன. சட்டத்தில் சந்து கண்டுபிடித்து தேர்தலை தடுப்பதற்கு இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் முறியடித்த பின்னர்தான் இந்த தேர்தல் நடைபெற்றிருக்கிறது.

எனவே, நடந்து முடிந்த தேர்தலில் பு.ஜ.தொ.மு பெற்ற வெற்றியினைக் காட்டிலும், இந்தத் தேர்தலை நடத்த வைத்ததுதான் பு.ஜ.தொ.மு வின் முதன்மையான வெற்றி.

தேர்தலை நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு நிர்வாகம் பணிய நேர்ந்த போதிலும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்று சண்டித்தனம் செய்தது. ஆண்டுக்கணக்கில் தற்காலிகத் தொழிலாளர்களாக வைக்கப்பட்டிருக்கும் சுமார் 1600 தொழிலாளர்களின் வாக்குரிமையை மறுக்க முடியாது என்றும் 240 நாட்கள் வேலை செய்த எல்லாத் தொழிலாளிகளுக்கும் நிரந்தரத் தொழிலாளிகளுக்குரிய உரிமைகள் உண்டு என்றும் போராடி, சுமார் 600 தற்காலிகத் தொழிலாளிகளுக்கு வாக்குரிமை பெற்றுத் தந்தது பு.ஜ.தொ.மு.

மீதமுள்ள சுமார் 1000 தற்காலிகத் தொழிலாளிகளுக்கு வாக்குரிமையை மறுப்பதன் மூலம் தேர்தலைத் தள்ளிப்போட சதி செய்தது நிர்வாகம். இந்தச் சதியைப் புரிந்து கொண்டதனால், தேர்தலை நடத்த வைத்து, 1000 தொழிலாளிகளின் வாக்குரிமை குறித்த பிரச்சினைக்கு அதன் பின் போராடுவது என்று முடிவு செய்தது பு.ஜ.தொ.மு. தற்காலிகத் தொழிலாளிகள் என்று வரையறுக்கப்பட்ட சுமார் 600 தொழிலாளிகளுக்கு வாக்குரிமையைப் பெற்றதன் மூலம், அவர்களுடைய பணி நிரந்தரத்துக்கான உரிமைக்கு கால் கோள் இடப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் பு.ஜ.தொ.மு ஈட்டிய இரண்டாவது வெற்றி இது.

மூன்றாவது வெற்றிதான் பு.ஜ.தொ.முவின் தேர்தல் வெற்றி. இந்த வெற்றியும் எளிதில் அடையப்பட்டதல்ல. தேர்தல் நடைபெற்ற 7 மில்களில் ஒரு மில்லில் மட்டுமே கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் இயங்கி வருகிறது. அதனுடைய செயல்பாடு ஏற்படுத்திய தாக்கம்தான் எல்லா மில்களிலும் உள்ள தொழிலாளர்களை பு.ஜ.தொ.மு வை நோக்கி ஈர்த்திருக்கிறது.

பல என்.டி.சி ஆலைகள் நட்டம் என்று பொய்க்கணக்கு காட்டி மூடப்பட்டும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டும், இருக்கின்ற மில்களில் 20 ஆண்டுகளாக ஊதிய உயர்வு ஒப்பந்தமே இல்லாமல் கிடப்பில் போடப்பட்டும், எதுவும் செய்ய இயலாமல், 36 ஆண்டுகளாக தொழிற்சங்கத் தேர்தல் கூட இல்லாமல், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர்களைத் தனது பிரச்சாரத்தின் மூலம் தட்டி எழுப்பியது பு.ஜ.தொ.மு. வெறுமனே எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரங்கள் அல்ல இவை.

தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் எவை, அவை மறுக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன, இன்றைய ஜவுளித்துறை நெருக்கடியின் ஊற்றுமூலம் எது என்று தொழிலாளர்களுக்கு விளங்க வைத்தன இப்பிரச்சாரங்கள். எண்ணற்ற ஆலை வாயிற்கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், துண்டறிக்கைகள்… அனைத்துப் பிரச்சார செலவுகளுக்கும் நிதி கொடுத்து ஆதரித்தவர்கள் தொழிலாளர்கள். தொழிலாளர்களிடம் பு.ஜ.தொ.மு பெற்றது கொள்கை ரீதியான ஆதரவு.

இத்தேர்தலில் தற்போது 2 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தி.மு.கவின் தொ.மு.ச, தனது கொள்கையான “பிரியாணியையும் பாட்டிலையும்” வைத்து சுமார் 10 இலட்ச ரூபாய் செலவு செய்து பிரச்சாரம் செய்தது. ஒரு ஓட்டுக்கு அவர்கள் செய்த செலவு சுமார் 1600 ரூபாய்.

பிரியாணியையும், பாட்டிலையும், சாதியையும் காட்டி, அந்த ஒரு நாளில் மயக்கத்திலாழ்த்தி தொழிலாளிகளின் ஓட்டை அவர்கள் அபகரித்திருக்கலாம். ஆன்ல் தொழிலாளி வர்க்கத்தின் நம்பிக்கையை அவ்வாறு அபகரிக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் யாரோ, போராடக் கற்றுக் கொடுப்பவர்கள் யாரோ அவர்கள் மட்டும்தான் தொழிலாளியின் நம்பிக்கையைப் பெற முடியும்.

பிரியாணிப் பொட்டலக்காரர்களுக்கு இந்த உண்மை தெரியாததல்ல. அது தெரிந்ததனால்தான் முடிந்த வரையில் தேர்தலே நடக்காமல் அவர்கள் தடுக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை. “அவர்கள் தீவிரவாதிகள்” என்று முத்திரை குத்தி அச்சுறுத்திப் பார்த்தார்கள்; தொழிலாளிகளுக்கு தங்களது எதிர்காலத்தைக் குறித்த அச்சத்தைக் காட்டிலும் பெரிய அச்சத்தை இந்த தீவிரவாதப் பூச்சாண்டி ஏற்படுத்திவிடவில்லை. “அவர்களுக்கு எம்.எல்.ஏ, எம்.பி இல்லாததால் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தி கோரிக்கைகளைப் பெற இயலாது” என்று சொல்லிப்பார்த்தார்கள்; “எம்.எல்.ஏ இல்லை” என்ற உண்மை, தொழிலாளிகள் மத்தியில் பு.ஜ.தொ.மு வின் செல்வாக்கை அதிகரிப்பதற்கே பயன்பட்டது.

கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (பு.ஜ.தொ.மு) வெற்றியும் பெற்று விட்டது. “இந்த வெற்றி கோவையில் உள்ள தனியார் பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தோற்றுவித்திருக்கிறது என்றும் தங்கள் மில்லில் சங்கம் தொடங்க வருமாறு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன” என்றும் கூறுகிறார், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் செயலர், தோழர் விளவை இராமசாமி.

கோவை நகரின் பஞ்சாலை முதலாளிகளிடம் இந்த வெற்றி என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்? ரங்கவிலாஸ், ஸ்டேன்ஸ் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தையும், சின்னியம்பாளையம் தியாகிகளின் போர்க்குணத்தையும் அவர்களுக்கு நினைவு படுத்தியிருக்குமோ? அல்லது, பிரட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியில் நடைபெற்ற போராட்டங்கள் என்பதால் அவை பழங்கதைகள் என்று முதலாளிகள் இறுமாந்திருப்பார்களா?

காலனியாதிக்கம், இன்று புதிய வடிவில் மறுகாலனியாக்கமாகத் திரும்பியிருக்கும்போது, தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாறு மட்டும் திரும்பாதா என்ன? திரும்ப வைப்போம்!

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்