privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்உயிர்மைக்காரன் காடுகளை அழிக்கிறது தெரியுமாடே!

உயிர்மைக்காரன் காடுகளை அழிக்கிறது தெரியுமாடே!

-

நமக்கும் இந்த சிறுபத்திரிகைகாரவுகளுக்கும் எப்பவும் ஒத்துக்கிடாது பாத்துக்கிடுங்க! முன்னயாவது அப்பக்கைப்ப கொஞ்சமோ, நஞ்சமோ ஒருபாடு கிசுகிசு வெட்டுக இல்லாம வரும். ஊட்டி தளைய சிங்கம் மேட்டரு, குத்தாலத்துல அண்ணாச்சி விக்ரமாதித்யன் தண்ணியப் போட்டு பண்ணுண அலம்பல், ஜெயமோகன் யாரை அடிச்சாக, சாரு யாருகிட்ட அடிவாங்குனாகன்னு ஒரே ஜாலி ஜம்பர்தான். இவுகதான் சாகவரம் பெத்த இலக்கியம்னு எதை எதையோ சொல்லி பீலா விடுவாக. நம்மளக்க கேட்டா இவுகளோட கிசுகிசுதாதன் சாகாவரம் படைச்ச இலக்கயம்னு அந்த மகர நெடுங்குழைக்காதன் சத்தியமா சொல்லுவேன்.

ம்..ம்.. அதெல்லாம் ஒரு காலம். இப்ப பாத்தீகன்னா எல்லா கிசுகிசு சங்கதிகளையும் நெட்டுல சட்டுப்புட்டுனு எழுதி தள்ளுராகளா, அதுவும் பதிவுலகத்துல கீ போர்ட வச்சே டான்சாடுற நம்ம மொக்கைத் தம்பிமாரு இதுமாதிரியான நியூசெல்லாம் தினமும் ஊர் பூரா போன்ல கூப்ட்டு பத்த வச்சர்ராக. அதுல இருந்தே சிறு பத்திரிகைகள வாங்குறுத நிறுத்தி தொலைச்சாச்சு. பிறவு ஒவ்வொண்ணையும் 30 ரூபா, 50 ரூபா வாங்குறது தெண்டமுல்லா?

நேத்தைக்குத்தான் நம்ம கூட்டுக்காரவுக அவுகளும் என்னாட்டம் இலக்கியவியாதி சகவாசம் வச்சிருந்தவுகதான், இந்த மாசத்து உயிர்மைய கொடுத்தாக. என்னன்னு கொஞ்சம் மேஞ்சு பாத்தா, அடங்கொப்புறானே, என்னத்தைச் சொல்ல……!!!

ஆமா நைனா ஒவ்வொரு தபா நீ உயிர்மை வாங்கிக்கீறீயா, அதுல இன்னா ருக்கும்? அட்டையில மல்டி கலர் மாடுலேஷன். அதான்பா கருத்து கந்தசாமி டிசைன்! குற்றம், தேகம், வதை, இரவுன்னு என்னன்னமோ ராவா அட்ச்சு விடுவான். அப்பாலிகா தலையங்கம் பாத்தா மன்ஸ்ய புத்ரன் அண்ணாத்தே என்னமோ பயங்கரமா பொலிட்டிக்ஸ் பட்சவரு மேறி அவுத்து விடுவாறு, அப்பாலிக்கா நம்ம சாரு நைனா டப்பாகஞ்சிய சீம சாராய பாட்டில் ஊத்தி அட்ச மப்புல ஆறேழு பக்கத்துல சினிமா குனிமான்னு வாந்தி எடுப்பாரு, கொஞ்சம் அந்தாண்ட போனீன்னா இசை, அப்பால ஈரான் சினிமான்னு உடுப்பி அவியலாட்டம் உள்ள தள்ள ரொம்ப இம்சையா ருக்கும். புச்சா இன்னா பாத்தேன்னு கேக்குறீயளா…

மூணாவது பக்கதுல பாத்தீங்கன்னா உயர்மையில இருந்து இந்த வருசம் அறுபது நூலுங்க வருதாம், ஆறுக்கும் மேற்பட்ட வெளியீட்டு விழான்னு கன ஜோரா இருக்குங்க. என்னமோ போங்க, நம்ம கவி அம்பி மனுஷ்ய புத்திரனோட கம்பெனி இம்புட்டு பெருசா வளர்ந்து வருசத்துக்கு அறுபது புக்கு போடுறது சாதாரணமில்லிங்கோ; அப்படீன்னு தப்பா முடிவு செய்ஞ்சிராதீங்க சாமியோவ், கொஞ்சம் முழுசா படிச்சுபுட்டு ஒங்க கருத்த சொல்லுங்க.

முதல்ல பாத்தீகன்னா சுஜாதா நேர்காணல்னு ஒரு புத்தகம். அதுல கட்டிங் லைனா “ அவரது பரந்துபட்ட பன்முகத் தன்மை கொண்ட அக்கறைகளுக்கும் ஆளுமைக்கும் இன்னொரு சாட்சியம்” பளிச்சுனு போட்ருக்காக. ஏம்வே சங்க கால பெண்களை பேசிகிட்டு அப்படியே நைசா பாரிஸ் ஒயினைப் பத்தி பேசுனா அது பன்பட்டர்ஜாம் அக்கறையா? நல்லாருக்கு நைனா உங்க இலக்கணம்.

இந்த ஸ்ரீரங்கத்து பாப்பார ஐயங்காரு ஏதோ கம்யூட்டர பத்தி எழுதினாரு, கூடவே கதங்களயும் எழுதினாருங்கறதெல்லாம் இருக்கட்டும். அவரு ஏன் ஒரு லிபரல் பாயை பிடிச்சு தன்னோட புக் ரைட்ச கொடுத்துட்டு போகணும்? மத்யமர் கதைங்கள்ள இட ஒதுக்கீட்டை கேலி பண்ணி, பிராமண சங்கத்துல விருது வாங்கி, சங்க பரிவாரத்து ஜீக்களுக்கு நமஸ்காரம் போட்ட கையோட சலாம் அலைக்கும் பாய்னு புக் போட விட்டுருக்காருன்னா, அதுதாம்டே பார்ப்பன நரித்தந்திரம். சரி இதுக்காக நம்ம ம.புத்திரனை பாய்னு நினைச்சுக்காதீக. அவுக பாய் இல்ல பிசினஸ்மேன்.

இல்லேன்னா சுஜாதாவோட புக்குங்கள போட்டு, நைசா லைப்பரரிக்கு தள்ளி ஒரு பதிப்பக சாம்ராஜ்ஜியத்தையே உண்டாக்கிட்டாருல்லா, அதுதாம்டே பிசினஸ் தந்திரம். சரி இந்த பாய் எப்படி லைப்ரரி ஆர்டரு பிடிக்குராறு, எவனுக்காவது தெரியுமாடே?

போலே போக்கத்த மூதிகளா, இதுல என்ன இரகசியம் வேண்டிக் கிடக்கு? அப்படியே அந்த அறுபது நூலு நாயன்மாரு பட்டியலப்பாருடே…..

பதிவுலகத்துல இருக்குற சாதா, ஸ்பெசல் சாதான்னு எல்லா பயபுள்ளைகளும் தமிழச்சி தங்கபாண்டியன சாரு புக் பங்ஷன்னுல ஜொள்ளுவிட்டதை எழுதியிருக்கானுகல்லா, அந்த அம்மாதான் இந்த லைப்ரரி ஆர்டர் தேவதை…. எப்புடி?

“பாம்படம்” கரிசல்பூமியின் நினைவுப் பதிவுகள்னு ஒரு புத்தக விளம்பரம். நம்ம தேவதையம்மா எழுதினது. என்ன எழுதியிருப்பாக? “பாம்படமாம் பாம்படம், விருது நகரு பாம்படம், தங்கம் தென்னரசு பாட்டியோட பாம்படம், லைப்ரரி ஆர்டருக்கான பாம்படம்,” இதுதாம்டே விசயம். அடுத்து பாத்தா லைப்ரரி ஆர்டர் தேவதையப்பத்தி மத்த பயபுள்ளக ஆகோ ஓகோன்னு எழுதுன ஐஸ் பேக்டரியவே ஒரு புக்கா போட்டுரக்கானுக, “தமிழச்சியின் பதிப்புலகம் – சில மதிப்பீடுகள்” என்னாமா யோசிக்கிறானுக,,, டெரரால இருக்கு…. அது சரிடே பதிவுலகத்துல இருக்குற ஒரிஜினல் தமிழச்சி இவுகதான்னு குழிம்பிக்கிடாதீங்கடே, நம்ம அக்கா பாரீசுல இருக்காக அவுக வேற…

சரிதானுங்க, லைப்ரரி ஆர்டரோட அடுத்த குல்சா வி.ஐ.பி யாருன்னு தெரியுமாங்கோ? அவருதான் நம்ம வி.சிறுத்தைகளோட எம்.எல்.ஏ இரவிக்குமார். அடிக்கடி கருணாநிதி ஐயாவோட பக்கத்துல நின்னு “இந்தப்பூனையும் பிசா சாப்பிடுமா”ங்குற கதியில போஸ் கொடுப்பாருங்க. அவிகளுக்கென்ன, இப்பதான் ரியல் எஸ்டேட், பஞ்சாயத்துன்னு லைஃப்புல நல்லா செட்டிலாகிட்டாருங்கண்ணா. தமிழ்நாட்டுல இருக்குற இலக்கியவியாதிங்க எல்லாம் கவர்ன்மெண்டு காரியங்கள சாதிக்கணும்னா நம்ம எம்.எல்.ஏவைத்தான் தொடர்பு கொள்றாங்களாம்… அந்த படிக்கு ஐயாவோட நாலு புக்கு ரிலீசாகுதாங்க…

அண்டை அயல் உலகம்“னு ஒரு புத்தகம். இது ஜூனியர் விகடன்ல வந்ததுன்னு நினைக்கிறேனுங்க. அத பாத்தீங்கன்னா ஃபுல்லா நம்ம இந்திய அரசு வெளிநாட்டுக் கொள்கை என்னவோ அதயே ஏகப்பட்ட விவரங்களோட -அல்லாம் நெட்டுல சுட்டதுதாங்க – அடிச்சு விடுவாறு. இன்னைக்கு தமிழ்நாட்டுல பஞ்சாயத்து பண்றவங்க நாளைக்கு நீரா ராடியா அக்கா மாதிரி உலகத்துக்கே பண்ணனுங்குறதுக்கான டிரெயினிங்னு வச்சுக்கங்க. ஆக நம்ம எம்.எல்.ஏ புக்க போட்டுக்கிட்டா அவரு விட்டையோட மத்த விட்டைங்களையும் லைப்ரரிக்கு தள்ளிரலாங்குறதுதான் ஹமீது பாயோட திட்டம். புரிஞ்சுதுங்களா?

ஒரு காலத்துல இவுங்க எல்லாம் ஒரு கூரூப்பாத்தான் அலைஞ்சாங்க. எம்.எல்.ஏ அண்ணன் சேரிப்புயல் கட்சியில சேர்ரதற்கு முன்னாடி காலச்சுவடு அக்ரகாரத்துல நெய் பொங்கல் சாப்பிட்டுகிட்டு இருந்தாக. இப்போ ஒரு சம்மர்சால்ட் போட்டு கலைஞர் ஐயா வூட்டுக் டிகிரி காஃபி குடிக்கிறாங்கன்னா இந்த வளர்ச்சியை உயிர்மை பயன்படுத்தற மாதிரி காலச்சுவடு பயன்படுத்த முடியலைங்க.. அது தனிக்கதை…

இப்ப இந்த அறுபது நூலு நாயன்மாருங்கள்ள சிலர மட்டும் பாப்போம்..

இதுல முத நாயன்மாரு நம்ம சாரு மாமா.. மாமுவோட ஏழு புக்ஸ் இந்த வருடம் ரீலீசாம். இதுல 95 பர்சண்டேஜ் இந்த ஆண்டுல எழுதிக்கீறாராம். என்னா நைனா இது என்ன கட்டிங் மேட்டரா, பர்சண்டேஜ் கணக்கு கொடுத்துகினு…

இதுல முத நூலு தேகம்னு ஏதோ வதை நூலாம். சில பேரு அத சதை நூலுன்னு வியாக்கியானம் கொடுக்குறான். ஓசியில படிச்ச நம்ம தோஸ்த்துகிட்ட கேட்டா அல்லாம் குல்சா மேட்டராம். என்னபா இது அநியாயமா கீது? குண்டியடிச்சான், குஞ்ச ஆட்டுனான், நாக்க போட்டான்னு எழுதுனா அது உலக இலக்கியமா? நெட்டுல மூணு எக்ச போட்டா குல்சா மேட்டரெல்லாம் ஜல்சாவா கொட்டிகினு இருக்கும். இத ஒரு நாவலுன்னு போட்டு பங்ஷன் நடத்தி அதை நாப்பத்திநாலு வெட்டி பாய்ஸ் விமர்சனும்னு போட்டு… படுத்துராங்கப்பா….

செக்ஸ்னா அது ஐஞ்சு நிமிசத்து மேட்டரு, வந்தமா, முடிச்சமான்னு போறதுக்கே ஜனத்துக்கு டைம் இல்ல, அதப்போயி இந்த நைனா 26மணிநேரமும் பேசிக்கினு, எழுதிக்கினு, போய் ஒரு நல்ல டாக்டரப்பாருயா வெண்ணை!

அடுத்த புக்க பாத்தா அது நித்யானந்தாவோட அல்சா மேட்டரு.. இந்த சாமியத்தான் நம்ம நைனா ஒரு காலத்துல கும்பிட்டுகினு, அதயும் போட்டோ புடிச்சு போட்டு பி.ஆர்.ஓ வேல பாத்துகினு இருந்தாரு. அப்பாலிக்கா ரஞ்சிதா சீன் வந்துச்சா, உடனே நைனா நல்ல புள்ளயாட்டம் கூட்டத்தோட கூட்டமா குன்சா தர்ம அடி போட்டு எஸ்ஸாயிட்டாரு. நாஸ்டாவுல உப்ப போட்டு தின்னா இந்த நைனா இப்பிடி செய்யுமா?

சாமி அருள் வாக்கு சொன்னதையும் பிசினஸ் பன்றான், சாமி சரசமாடிச்சுன்னா அதயும் பிசினஸ் பன்றான், நைனா இது உனக்கே அசிங்கமா இல்ல? எபெட்டிஷ்னா என்னான்னு அல்லாருக்கும் டியூஷன் எடுக்குறிரீயே இதுதான்பா டிரிபிள் எக்ஸ் ஃபெட்டிஷ். இதெல்லாம் நைனாவோட குத்தமில்லப்பா. நைனாவுக்கு கூச்ச நாச்சமில்லாம சில குல்சா மொக்கைஸ் செம்பு தூக்குறான் பாரு, அவன பிடிச்சு கேக்கணும்.

கனவுகளின் நடனம்” இது நைனாவோட சினிமா புக்காம். நைனா சினிமாவப்பத்தி எழுதலேன்னு எந்த குயந்தை அழுதுச்சு? இந்த டிஜிட்டல் குப்பைங்கள புக்கா போடுறான்னா என்னா தைரியம்? இதுபோக நைனா எழுதுன அஜால் குஜால் இலக்கிய கிசுகிசுங்க எல்லாம் மூணு புக்சா வந்துருச்சாம். கனிமொழி வந்து காமராஜ் ஹால்ல பேசியாச்சா, இத வச்சே ஹமீது பாய் அல்லா புக்கையும் லைப்பரரிக்கு தள்ளிருவாரு…இனி இன்டருநெட்டுல பாக்க முடியாதவனெல்லாம் நைனா புக்க லைப்ரரியில படிச்சு பரலோகம் போவப் போறான். சாவுங்கப்பா…

ஸ்பெக்ட்ரல் ஊழல்ல லம்பா அடிச்சா கையோட கனி அக்கா காமராசர் ஹால்ல நைனா சாருவோட நட்ப பத்தி பேசுதுன்னா, என்னாத்தச் சொல்ல? அன்னிக்கு அங்கன சம்சா, காஃபிய முழுங்குன ஒரு பயலுக்கும் அக்காவோட ஊழல் கதக்கு ஒரு ஞாயத்தை கேக்கணும்னு தோணலையே?

அப்பால பாத்தா நம்ம எஸ்.ராவோட “துயில்” நாவல். இதுக்கு கட்டிங் லைனா என்னா கொடுத்துகிறான்னா, ” மனித உடல் என்னும் மகத்தான பிரபஞ்சத்தில் நிகழும் எண்ணற்ற விசித்திரங்களைப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல்”……

ஏம் வே எஸ்.ரா? இது உமக்கே ரொம்ப ஓவரா இல்லையா வே? மனித உடல்ல என்ன எழுவு விசித்தரத்த கண்டீரு? கக்கா, ஒன்னுக்கு, சளி, எலும்பு, தோலு, இதுதாம்வே எல்லாத்துக்கும் இருக்கு? இதுல ஆம்பளயாளுகன்னா விந்து, பொம்பள ஆளுகன்னா மென்சஸ்னு இதுல என்ன எழவுயா பிரபஞ்ச ரகசியம் இருக்கு? நீரு ஆ.விகடனுல தொடர் எழுனங்கறதுக்காக வீட்டுக்கு விருந்தினர் வந்தா சிரிக்கணும், தேத்தண்ணி கொடுக்கணும்னு காலனாவுக்கு தேறாததையெல்லாம் எழுதினீரு. அந்த கணக்கே இன்னும் முடியலேன்னா பாத்தா அதுக்குள்ள ஒரு நாவல எழுதிட்டீரு. நீரு எழுதுன வசனத்தையெல்லாம் பாலா குப்பைன்னு தூக்கி எறியிதாருன்னு சொல்லுதாக, உண்மையாவே?

எழுத்துங்குறது ஒரு புள்ளத்தாச்சி வலியோட பிரசவம் பாத்து குழந்தைய தர்ரது மாதிரி. அதை பிளாஸ்டிக் பொம்மை மாதிரி தயாரிச்சா அதுல என்னவே விசித்திர வெங்காயம் இருக்கும்?

சரி அடுத்த மேட்டர பாப்போம்.

இந்த அறுபது நூலு நாயன்மாருல்ல இந்த வாட்டி மாஸ்டர் பீஸ் என்ன தெரியுமா? ரசிகமணி டி.கே.சி கடிதங்கள்னு ஒரு புத்தகம். 944 பக்கமாம். 600 ரூபாய் விலையாம். முன்னாடி பதிஞ்சா 450 ரூபாயாம். இதுல அண்ணாச்சி மத்த தம்பிமார் 24 பேருக்கு எழுதின கடுதாசிங்க தொகுத்திருக்காங்களாம். இதுக்கு கட்டிங் மேட்டரா கரிசல் காட்டு செக்ஸ் தாத்தா கி.ரா எழுதுன முன்னுரையில இருந்து போட்டுருக்காக…..

” அவருடைய ஒரு கடிதத்தின் முடிப்பு இப்படி இருக்கும்….” ” என்னுடன் இருந்த நண்பர்களும் எல்லாருமாக நேற்றுப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். தங்கள் அண்ணியும் குற்றாலமும் ஆழ்வார்குறிச்சிக்குப் போயிருக்கிறார்கள். தங்கம் தென்காசி. ஆகவே நான் இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று சிவமே என்றிருக்கிறேன். பலராமும் துணைக்கு இருக்கிறார். அருவிச் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. மற்றபடி நிசப்தம். மணி காலை 3.3.0″

இதுமாதிரி 944 பக்கத்திலும் இருக்குதுன்னா அட கொலைகாரப் பாவிகளா, இந்த கருமாந்திரத்தை புக்கா போடுறதுக்கு எத்தனை ரீம் மேப்லித்தோ பேப்பர், அந்த பேப்பரை தயாரிக்கிறதுக்கு எத்தனை மரத்தை வெட்டி அழிச்சாங்களோ! உயிர்மை பதிப்பகம் காடுகள அழிக்குதுன்னு இப்பவாச்சும் விளங்குதா ஆக்கங்கெட்ட மூதிகளா?

டி.கே.சிக்கு ஏதோ அரசு குமாஸ்தா வேலைக்கு இன்டர்வியூ வந்துதாம். அன்னிக்கு காலையில அண்ணாச்சி கிளம்பும்போது குறுக்க பூனை ஏதோ வந்துச்சுன்னு கேன்சல் பண்ணிட்டராம். அவரு பெரிய ஜமீன்ங்கிறதுன்னால மாளிகை வீடு, தாமிரபரணி சோறு, அவியல்னு உபச்சாரம் பலமா இருக்கும். தமிழ்நாட்டு இலக்கியவியாதிகளை கூப்புட்டு தங்க வச்சு பேசி அழுகு பாத்தே இந்த மனுசன் காலத்தை ஓட்டியருக்காரு. அந்த பூனை மட்டும் அன்னிக்கு வரலேன்னா இந்த 900 பக்கம், ஏகப்பட்ட மரங்க எல்லாத்தையும் காப்பாத்தியிருக்கலாம்.

எங்கூருக்காரகுன்னு பாத்தா மானத்த கப்பலேத்துராரே? ஏலேய் காலையில மூணு மணிக்கும் நிசப்தமாத்தாம்டே இருக்கும், அருவின்னா சத்தம் இருக்காதாடே…இதையெல்லாம் ஒரு பெருசு கடிதம் எழுதி அதப்போய் புக்கா போடுறான்னா இந்த பாய்க்கு என்னா தைரியம்? இனி இந்த எழவும் லைப்ரரி ஆர்டருங்குற பேருல மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு தமிழ்நாடு முழுக்க போகப்போவுது..

இதுல உங்களுக்கு ஒரு எக்ஸ்குளூசிவ் மேட்டரு ஒன்னு சொல்லுதேன், யாருகிட்டேயும் சொல்லாதீங்க.. இந்த டி.கே.சி பேரன்ங்கள்ள ஒருத்தன் நம்ம கூட்டுக்காரனோட ஆபிசிலதான் வேல பாக்கனாம். அதுல என்ன விசேசம்னா அந்த பயபுள்ளைக்கு தமிழே படிக்க தெரியாதாம்… ஆக தமிழுக்கு தொண்டு ஆத்துன பெரிசு பரம்பரைக்கே தமிழ் தெரியாத போது அந்த பெருசு அப்பம் சாப்பிட்டு குசு விட்ட கதையெல்லாம் புத்தகமா நாம படிக்கணும்னா, ஒண்ணு மட்டும் சொல்லுதேன், இந்த தமிழ்நாடு நாசமா போகட்டும்லே…

இந்த புக்ஃபேருக்கு வாசல்லேயே காத்துக்கிடந்து எந்த பயபுள்ளையாவது இந்த புக்க வாங்கிட்டு வந்தீகன்னா புடிச்சு கடிச்சு வக்கப்போறேன், அம்புட்டு கொலைவெறியில இருக்கேன்…..

சரி இந்த பெருசு புத்தகத்துக்கு முன்னுரை எழுதுன கரிசல் செக்ஸ் தாத்தா கி.ரா இருக்காருல்ல… அவருக்கு மத்த இலக்கியவியாதிமாரு எழுதுன கடிதங்களையும் புக்கா கொண்டு வாராகளாம்… அடுத்து என்ன சாரு மாமாவுக்கு, மாமா சாரு எழுதிய நேஹா கடிதங்களா இல்ல டோண்டு இராகவன் கேள்வி பதிலா… நல்லா இருங்கடே !!!

அடுத்து பாத்தீகன்னா நம்ம ஃபீரிலேன்சு பத்திரிகையாளர் மணாவோட புக்காம். என்னண்டு பாத்தா… “கமல்ஹாசன்: நம்காலத்து நாயகன்” ண்டு தலைப்பு போட்டுருக்கான். கமலஹாசன் நாயகனில்ல, வில்லன்னு எந்த கபோதி சொன்னான்? இதுல கமலைப் பத்தி பிரபல ஆளுமைங் எழுதுன பதிவுகளும் போட்டாவும் வருதாம்.

திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை பிரஸ்ஸூங்களுக்கு போனா தெருவுக்கு ஒரு ரஜனி ரசிகன், கமல் ரசிகன், விஜய் ரசிகன், அஜித் ரசிகன்னு பிரிண்டாகுறதை பாக்கலாம். அதுல இல்லாத பதிவா, போட்டாவா…ஏம்டே இப்படி ஊரை ஏமாத்துரீக….நம்ம பாய் ஏற்கனவே “உன்னைப் போல ஒருவனில்” ஒரு பாட்டு எழுதுனத வச்சு கமலை ஒரு ஏகாந்த யோகியாக சித்தரிச்சு பரவசமான பார்ட்டி. அதுக்கு நன்றிக்கடன்தாம்டே இந்த புக்கு….

இதுக்கு அடுத்தாப்ல நம்ம தத்துவ அறிஞர் யமுனா ராஜேந்திரனோட மூணு புக்கு போட்டுருக்காக.. இதுல புரட்சி, உலக சினிமா, ஆவணப்படம்னு டைட்டிலெல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா அண்ணாத்தே எது எழுதுனாலும் காசியில ஆரம்பிச்சு கன்யாகுமாரி வரை இழுத்து இழுத்து பேசியே கொல்வாரே… முன்ன ஒரு தடவை உயிர்மையில பிழை திருத்தும் வேலை செய்யுற ஒரு நண்பரைப் பாத்தேன்.. அப்பதான் அவரு சொன்னாரு, “யமுனா ராஜேந்திரன் கட்டுரைகளை திருத்தி எழுதுற துக்கத்துக்குகூட மனுஷ்ய புத்திரன் சம்பளம் போறவே போறாது”ன்னு.. இந்த வாட்டி இந்த மூணுபுக்குக்கும் யாரோட லங்கோடு கிழிஞ்சதோ தெரியல..அவுகளுக்கு நம்ம அனுதாபங்களையாவது தெரிவிச்சுக்கிடுவோம்.

தமிழக மேலவை” ங்குற தலைப்புல கே.எஸ்.இராதாகிருஷ்ணன் புக்கு வருதாம். இது சத்தியாம லைப்புர்ரி ஆர்டருக்கான புத்தகம். அண்ணாத்தேயும் தி.மு.கவுல முக்கிய தலைங்குறதால பாய் இவர வச்சு வருசத்துக்கு ஐஞ்சு புக்காவது போடுவாறு. இனி “புதிய சட்ட மன்றம் கட்டிய கதை, மு.கவின் மாமல்லபுர விஜயம், அழகிரியின் டெல்லி வாசம்னு” புது புது புக்குங்க வரும். இதுகளையெல்லாம் வாசிக்கிறதுக்கு தமிழ்நாடு எத்தனை கொடுத்து வச்சுருக்கணும்!!!

வா.மு.கோமுங்கறவரோட இரண்டு நாவலும், ஒரு சிறுகதையும் வருதாம். இவரு யாருன்னு விசாரிச்சா நம்ம நைனா சாருவே இவர தன்னோட சீடன்னு அறிவிச்சிருக்கராம்ல. அப்படின்னா இவரும் ஜல்சா மேட்டரு ரைட்டரா, காலம் ரொம்ப கெட்டுப் போச்சு, வேற என்னத்தைச் சொல்ல?

அப்பறும் பழமொழி, கிராமம், விளையாட்டு, சாப்பாடு ன்னு வெரைட்டியான நூல்கள். ஒரு காலத்துல இதுங்களயெல்லாம் மணிமேகலைப் பிரசுரத்துலதான் பாப்போம்.. இப்ப உயிர்மையிலும் பாக்கலாம்.

வெள்ளைப் பல்லி விவகாரம்” என்ற தலைப்பில் லஷ்மி மணிவண்ணனின் சிறுகதை தொகுப்பு வருதாம். இந்த அண்ணன் யார்? ஒரு  காலத்துல மனுஷ்ய புத்திரன், கண்ணனோட காலச்சுவடு ஆசிரியர் குழுவுல இருந்தவர். தன்னோட வாழ்க்கையை மனுஷ்ய புத்திரன் பாழாக்கிட்டாருன்னு சொன்னவரு. இப்ப பாழாக்குனவரு புண்ணியத்துல புக்க கொண்டு வராறு.. இவனுங்க ஏன் அடிச்சுக்குறான், எப்படி சேந்துக்குறான்ன்னு ஏதாச்சும் புரியுதாடே?

விமலாதித்த மாமல்லன் கதைகள்” இது ஒரு சிறுகதை புக்காம். இவரும் கூட பிளாகுலயும், பஸ்சுலயும், டவிட்டர்லயும் என்னெல்லாமோ எழுதிப் பாக்குறாரு, ஒன்னும் களை கட்ட மாட்டேங்குது. இவரு மாமா சாருவை  திட்டிகிடந்த்தை பாத்து பீதியான நம்ம மொக்கைத் தம்பிமாறுங்க ஜெயமோகனுக்கு எதிரா பாய இவருக்கு கொம்பையும் சீவி மச்சி சாருன்னு பட்டத்தையும் வச்சி அவர்கையில ஒரு குச்சி ஐச கொடுத்திட்டாகளாம்… சரி இருக்கட்டும். மச்சி சாரு 83ல போட்ட புக்கே இன்னும் விக்காம இருக்காம். அதையே பதிவுலகத்துல ஃபிரியாக கொடுக்குறதுக்கு மச்சி சாரு ததிங்கிணத்தோம் போடுறாரு.. இந்த இலட்சணத்துல இவரு கதைங்க அல்லாம் ஒரே தொகுப்பா வருதுன்னா என்னா அர்த்தம்?

அதுல காமடி என்னன்னா இந்த மச்சி சாருவோட வாழ்க்கை இலட்சியம் ஜனாதிபதி கையால விருது வாங்குறதாம். சனாதிபதி கையில விருது வாங்குறது இருக்கட்டும். உயிர்மையில நூல் வெளியீட்டு விழா லிஸ்ட்ல பாத்தீகன்னா, சாரு, எஸ்.ரா, ரவிக்குமார், தமிழச்சி, மனுஷ்ய புத்திரன் மெயின் சாமிகளுக்கெல்லாம் தனித்தனி விழா. ஆனா நம்ம மச்சி சாரு புக்கெல்லாம் 12 புக் வெளியீட்டு விழாவுல கூட்டத்தோட கூட்டமா கலந்து பொச்சு… லோக்கல்லயே தனிக்கவனிப்பு இல்லேங்குற பட்சுத்துல இவரு தன்னை இன்டர்நேஷ்னல் பிகரா நினைச்சு கனவு காணுராரே, நமக்கே ரொம்ப கஸ்டாமா கீது…. காட் பிளஸ் அமெரிக்கா அண்டு மச்சி சார்!@!

புரியாட்டி இன்னொரு உதராணத்த பாப்போம். சேலம் சிவராஜ் வைத்தியர் கிழமைக்கு ஒரு ஊர்னு விஜயம் செய்வாரு. இதுல பெரிய சிட்டிங்களுக்கெல்லாம் முழு நாள ஒதுக்குவாறு. சில்லறை நகரங்களையெல்லாம் ஒரே நாளில் நாலைந்துன்னு பாப்பாரு, இப்ப நம்ம மச்சி சாரோட கதையும் அதுதான், இதுக்கும் மேல புரியலேன்னா சிட்டுக்குருவி லேகியம் வாங்கி விழுங்குலே…..

அடுத்து பத்து கவிதை தொகுப்பு, எப்பவும் வர்றதுதானேன்னு நெனக்காதீக இதுல நம்ம பதிவுலக அம்பிமாறு எழுதுனதும் இருக்காம். வெள்ளிக்கிழமை மாலை கொசு, கழுதை மட்டமும் கழுவாத புட்டமும், பீக்கடல் அப்படீன்னு பதிவமாருங்க டிஜிட்டல்ல கிறுக்கியதை எடுத்து மூணு புத்தகமா போட்டா ஒரு முப்பது பதிவுல விளம்பரம் இனாமா தேத்தலாம். அப்புறம் என்ன புரவலருக்கு புரவலர், விளம்பரத்துக்கு விளம்பரம், வியாபாரத்துக்கு வியாபாரம்… கூட்டிகழிச்சு பாருலே இந்த மார்கெடிங் கணக்கு சரியா வரும்… இதுதாம்லே மனுஷ்ய புத்திரன் ‘டச்‘சு

ஆமா, இதெல்லாம் வரும்போது ”எட்டு லார்ஜ் குடித்தது தப்பில்லை. அடுத்து குடித்த பியர்தான் பிரச்சனை” ன்னு நம்ம எலக்கிய குருஜி சுந்தரின் பஸ்மொழிகளெல்லாம் ஏன் வரலையின்னு கேட்கப்பிடாது. பதிவுலகம் ரத்த பூமி, பதிவர் மேட்டர்லாம் டச் பண்ணா அப்புறம் ரணகளம் ஆகும், ரத்த ஆறு ஓடும் .. பீ கேர்புல். என்னத்தாம்லே சொல்லிகிட்டேன்…

அடுத்து நம்ம ஹீரோவ பத்தி பாப்போம் அதாம்லே அம்பி பாய் மனுஷ்ய புத்திரன். அவுகளோட 120 கவிதைகள் 300 பக்கங்களுக்கு மெகா புக்கா வருதாம்லே.. சாம்புளுக்கு ஒன்னு

இதற்குத்தானா?

பார்க்காமலே
இருந்திருக்கலாம்

பார்த்தும்
பாராத்து போல போயிருக்கலாம்

பார்க்க வந்தது
உன்னையல்ல என்று சொல்லியிருக்கலாம்

பார்த்த பின்னே
பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்

பார்த்துப் பார்த்து ஏங்கவா
இவ்வளவு தூரம் வந்தது?

…………………………………………………….

தெரியாமத்தான் கேக்கறேன் பார்த்தான், பாக்கலேன்றத பின்னிப் பின்னி எழுத்திட்டு அது கவிதைன்னா அந்த கடவுளுக்கே அடுக்குமாலே..

“கக்கா போகலாம், போகாமலும் இருக்கலாம், போனாலும் பாதகமில்லை, தண்ணியிருந்தா கழுவலாம், இல்லாட்டி துடைக்கலாம், நாறினா ஓடலாம்,” ம்னு நான் என்டர் தட்டாத ஒரு கவிதை சொன்னா ஒத்துப்பியாலே?.. பொழப்ப பாருலே போக்கத்த மூதின்னு துப்பமாட்ட?

தி.மு.க. ஆதரவு பெருந்தலைகளை கொண்டு தன்னோட நூலக ஆர்டரை நைசா வளைச்சு பிசினஸ் சாம்ராச்சியத்தை சைசா தேத்தும் ‘பாஸ்’ மனுஷ்ய புத்திரன் கொண்டுவரும் 60 புத்தகங்களோட லட்சணம் இப்படித்தாம்லே பல்ல இளிக்குது. இதுக்காக்க எத்தன மரத்தை வெட்டிச் சாச்சாகளோ இதத்தாம்லே காடு அழியுதுன்னு சொல்லுதேன். இது சுற்றுச் சூழலுக்கு கேடு இல்லையா? இயற்கை வளமும், கருத்து வளமும் இப்படி வீணாபோவதை நாம ஆதரிக்கவாலே முடியும்… எதிர்க்கனும்லே…!

டிஸ்கி 1: பணி மாற்றமா, பணி உயர்வா, விசாரணையிலிருந்து விடுதலையா, ரியல் எஸ்டேட்டா, கட்டப் பஞ்சாயத்தா, நூலக ஆணைக்கு தள்ள வேண்டுமா, எதையும் புத்தகமாக போட வேண்டுமா – உடனே உயிர்மை பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். வெறும் பதினைந்து சதவீத கழிவைக் கொடுத்து உலகத் தரமான சேவையை பெறுங்கள்…

டிஸ்கி 2: இப்படி காடுகள் அழிந்தால் வெங்காய விலை எப்படி குறையும்?

டிஸ்கி 3: வினவு தளத்தில் வெளியாகும் படைப்புகள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!

________________________

– காளமேகம் அண்ணாச்சி
________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: