அரசு போக்குவரத்துக் கழகங்களில் தொழிற்சங்கங்களுக்கிடையேயான பிரதிநிதித்துவ அங்கீகாரத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் ஆளும் தி.மு.க வின் தொழிற்சங்கமான தொமுச 73,450 வாக்குகள் பெற்று (57% )வெற்றி பெற்றிருக்கிறது.
சட்டமன்ற இடைத்தேர்தலுக்கிணையாக பணம், (டாஸ்மாக்)சரக்கு, பிரியாணி, பிளக்ஸ் பேனர்கள் பல லட்ச ரூபாய் செலவு, ஆளும் அதிகார வர்க்க மிரட்டல் என எல்லா அம்சங்களும் இந்த தேர்தலில் இருந்தது. ஆனால் இந்த தேர்தலின் மூலம் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட குணாம்சம் ஓரங்கட்டப்பட்டு, பணத்தின் மூலம், அல்லது ஆளும் ஓட்டுக்கட்சி அரசியல் தலைமையின் மூலம் எதையும் சாதித்து விடலாம் என்கிற எண்ணம் தொழிலாளர்கள் மத்தியில் பரவி பார்த்தீனிய செடியாய் வேர்விட்டிருப்பதுதான் மிகப் பெரிய அபாயம்.மேலும் இது புதிய பொருளாதார கொள்கையின் விளைவுதான் என்பதையும் இந்த கட்டுரை வழியாக அலச விழைகிறேன்.
கடந்த 1998ஆம் ஆண்டிற்கு முன்பு வரை போக்குவரத்துக் கழகங்களில் அனைத்து விதமான பேச்சுவார்த்தைகளுக்கும் திமுகவின் தொமுச, அதிமுக-வின் அண்ணா தொ.ச.பேரவை, காங்கிரசின் ஐஎன்டியுசி, எச்எம்எஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஐடியுசி ஆகிய 6 தொழிற்சங்கத்தினர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்கிற நிலை இருந்தது.
இதில் அந்தந்த காலத்திலான ஆளும் கட்சியாக இருக்கிற கட்சியின் சங்கமும், ஐஎன்டியுசி மற்றும் எச்எம்எஸ் ஆகிய சங்கங்களும் அனைத்துவிதமான ஒப்பந்தங்களிலும் கையொப்பமிட்டுள்ளன. ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருந்தால் கையொப்பமிடுவது, இல்லாவிட்டால் ஒப்பமிடாமல் குறை சொல்லி ஒரு புத்தகம் போட்டு தொழிலாளியிடம் விற்றுவிட்டு அதோடு ஒதுங்கிக் கொள்வது என்கிற நிலையை இரண்டு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களும் செய்து வந்தன.
இந்நிலையில் 1998இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்துக் கழகங்களில் செயல்பட்டு வந்த ஓட்டுக்கட்சி சார்பில்லாத பணியாளார்கள் சம்மேளனம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கின் காரணமாக ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடத்தி சங்க அங்கீகாரம் என்பது முடிவு செய்யப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது. இதில் பல்வேறு உதிரி சங்கங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு அவற்றை விசாரித்த உயா்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு (தலைமை நீதிபதி மற்றும் ஒரு மூத்த நீதிபதி ஆகியோர்) நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அனைத்து சங்கங்களையும் கருத்து கேட்டபின் 10 சதவீத வாக்குகள் பெறும் சங்கம் அதன் சார்பாக ஒரு பிரதிநிதியை பேச்சு வார்த்தைக்கு அனுப்பலாம் என உத்திரவிட்டது.
அதன் அடிப்படையில் டிசம்பர் 1998ல் நடைபெற்ற தேர்தலில் அன்றைய ஆளும் கட்சி தொழிற்சங்கம் (2 பிரதிநிதிகள்)- அண்ணா தொழிற்சங்கம் 2ம் இடம் (2 பிரதிநிதிகள்)- பணியாளர்கள் சம்மேளனம் 17 சதவீதம் (1 பிரதிநிதி), சிஐடியு 14 சதம் (1 பிரதிநிதி) என்ற வகையில் தேர்வு பெற்றது. மற்ற ஐஎன்டியுசி, எச்எம்எஸ், மதிமுக சங்கம் என அனைத்தும் 3 சதவீதத்திற்கு கீழான வாக்குகளையே பெற்றன.
இந்த நடைமுறைக்குப் பிறகு 2001இல் ஆட்சிக்கு வந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்களின் போனஸ் பேச்சு வார்த்தையின் போது உடன்பாடு ஏற்படாமல் துவங்கிய வேலைநிறுத்தத்தின் போது எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் கொண்டுவரப்பட்டு அதன் தொழிலாளர்கள் 17 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு நூற்றுக் கணக்கானோர் பல நாட்கள் தற்காலிக வேலை நீக்கத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அரசு ஊழியர்கள் ஒன்றேகால் லட்சம் பேர் ஒரேநாளில் டிஸ்மிஸ், என்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
பொதுவாக வங்கிப் பணியாகட்டும், அரசு ஊழியா் பணியாகட்டும், அரசு போக்குவரத்துக்கழக பணி, மின்வாரிய பணியாளா்கள் பணி, சிவில் சப்ளை தொழிலாளர்கள் பணி எவற்றிலும் அவரவர் சார்ந்த துறை பிரச்சனைக்கு போராடும் போது அவர்கள் மட்டுமே போராடுகிறார்கள். போராடும் மற்ற பிரிவினருக்காக எப்போதும் போராடுவதில்லை. மேலும் தங்களது போராட்டத்தின் நியாயத்தை பொது மக்களிடம் விளக்கி அவர்களது ஆதரவையும் திரட்டுவதில்லை.
இவைகளே போக்குவரத்து மற்றும் அரசு ஊழியர்களின் போராட்ட நடவடிக்கைகள் மக்களின் ஆதரவைப்பெறாமல் தனித்து விடப்பட்டதற்கு காரணமாக அமைந்தன. கடந்த ஆட்சியின் போது நெடுஞ்சாலைத்துறையில் அன்றாடம் தார்ச்சாலை அமைக்கும் பணியில் இருந்த சாலைப்பணியாளர்கள் நூற்றுக் கணக்கானோர் இனி தேவையில்லை என மொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டு தெருவில் விடப்பட்டனர். அவர்களின் மீது நீதிமன்றங்களும் பெரிய அளவில் கருணை காண்பிக்கவில்லை. அதே போல் அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தில் 1.25 லட்சம் பேர் பணிநீக்கத்தின் போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்றைய நீதிபதி (இன்று “மாமா நீதிபதிகள்” என சமீபத்திய முக்கிய வார, மற்றும் ஆங்கில நாளிதழ்களில் நீதித்துறையில் புரையோடியிருக்கும் ஊழலைப்பற்றி எழுதியிருந்த ஊடகங்களில் வருணிக்கப்பட்ட) திரு சுபாஷன் ரெட்டி வேலைநீக்கம் சரிதான் என தீா்ப்பளித்தார்.
பின்னர் வேலை நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் போன்ற பெருச்சாளி வழக்கறிஞா்கள் ஆஜரானதிலோ என்னமோ வேலைநிறுத்தத்தின் நியாயத்தைக் குறித்தோ, தொழிற்தாவாச் சட்டத்தில் வேலை நிறுத்த உரிமை கொடுக்கப் பட்டிருப்பதையோ சுட்டிக்காண்பித்து வாதாடாமல் இந்த முறை மன்னித்து வேலை கொடுக்க உத்திரவிடுங்கள் என்ற வகையில்தான் வாதங்கள் அமைந்தன. உச்சநீதிமன்றம் வேலை கொடுக்க உத்திரவிட்டதுடன் வேலை நிறுத்தம் செய்ய உரிமையில்லை என்ற தீர்ப்பை வழங்கியது.
இந்த நிலையில்தான் அமைப்பு சார்ந்த தொழிலில் இருக்கும் பணியாளர்கள் போராட்டப் பாதையைப் பற்றி பயம் கொள்ளத் துவங்கியதுடன், அனுசரித்துப் போவதன் மூலமும், ஆளும் கட்சி முதல்வருக்கு பாராட்டு விழாக்கள் எடுப்பதன் மூலமும் காரியங்கள் சாதித்துக் கொள்ளலாம் என்கிற பாதையை தேர்வு செய்யத் துவங்கினர். புதிய பொருளாதாரக் கொள்கையினால் தொழிலாளர்கள் அமைப்பாக திரளக் கூடாது என்பதற்காக புதிய பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்கங்களே அமைக்கக் கூடாது என மாநில அரசுகளுடன் முதலாளிவர்க்கம் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்வது ஒருபுறம்.
மறுபுறம் அமைப்பு சார்ந்த பணிகளிலும், அரசு, வங்கி, காப்பீடு போன்ற துறைகளிலும் தொழிலாளர்கள் ஒன்று திரளக் கூடாது என்பதற்காக திட்டமிடப்பட்டு போடப்பட்டவைதான் இந்த எஸ்மா, டெஸ்மா சட்டங்களெல்லாம். அந்த நேரத்தில் அவற்றை கடுமையாக எதிர்த்த ஓட்டுக்கட்சிகள் பின்னர் தாம் ஆட்சிக்கு வந்தபின் அந்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய தயாராக இல்லை. ஏனேனில் இவர்களுக்கும் தொழிலாளர்கள் அமைப்பாக திரண்டு விடக்கூடாது என்பதுதான் நோக்கம்.
இத்தகைய சூழலில் அதிமுக ஆட்சிகாலத்தின் இறுதியில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை என்ற நிலை வந்த போது, சில சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதை விசாரித்த தனி நீதிபதி ஏற்கனவே தலைமை நீதிபதி மற்றும் ஒரு முதுநிலை நீதிபதி அமர்ந்த முதன்மை அமர்வு அளித்திருந்த தீா்ப்பிற்குள் செல்லாது, மைனாரிட்டி சங்கங்களின் கோரிக்கைகளையும் கேட்பதில் தவறில்லை என்கிற வகையில் ஒரு தீர்ப்பு அளித்தார். அதன் பேரில் 21 சங்கங்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு ஒப்பந்தம் என்ற பேரில் ஒரு நாடகம் நடந்து முடிந்தது.
அன்று பெரிய அங்கீகார தொழிற்சங்கம் என தன்னை அழைத்துக் கொள்ளும் திமுகவின் தொமுச பேரவைத்தலைவர் திரு செ.குப்புசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா முன்பு சென்று அமர இடம் கிடைக்காமல் (லெட்டர் பேடு சங்கங்களின் தலைவர்களெல்லாம் ஓடிச்சென்று முன்வரிசையில் அமா்ந்துவிட) கடைசி வரிசையில் அமர நேர்ந்தது. அதோடு மட்டுமல்லாமல் கோரிக்கை குறித்து செ.கு. எழுந்து பேசுகையில் “குப்புசாமி” கேள்விப்பட்டிருக்கிறேன், தற்போதுதான் நேரில் பார்க்கிறேன் என ஜெயலலிதா கேலிபேசியல்லாம் நடந்தது.
பிறகு உடனடியாக இந்த தனி நீதிபதி தீா்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என அனைத்து சங்க கூட்டத்தில் தொமுச மற்றும் சிஐடியு போன்ற சங்கங்களெல்லாம் முடிவு செய்தன. அந்த வகையில் தொமுச வின் மாதாந்திர ஏடான “உழைப்பாளி” யில் கட்டுரையும் எழுதப்பட்டது. ஆனால் சில தினங்கள் கழித்து யோசித்துப் பார்க்கையில் பல சங்கங்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டால்தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு தங்கள் ஆட்சி வரும் போது தொழிலாளர்களை ஏமாற்ற வசதியாக இருக்கும் என அந்த வழக்கு தொடுக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டனா்.
பின்னர் “பணியாளர்கள் சம்மேளனம்” என்கிற அமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை 5 ஆண்டுகளாக விசாரித்த உயா்நீதிமன்ற அமா்வு இறுதியில் ஏற்கனவே ஒரு முறை தேர்தல் நடத்தி சங்கங்கள் தேர்வு செய்தபின், பின்னர் அங்கீகாரத்திற்கு மாற்று முறை என்பது அனுமதிக்க முடியாது என்று 13/02/10 அன்று இறுதி விசாரணையில் கருத்து தெரிவித்துவிட்டு, தீா்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.
அதன்பின் 6 மாதங்களாக அந்த வழக்கு கட்டு தூசி தட்டப்படாமலேயே இருந்தது. இந்த நிலையில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை துவக்கப்பட வேண்டிய செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது. அதுவரை வழக்கு மன்றம் செல்லாத திமுகவின் தொமுச அவசர, அவசரமாக ஒரு வழக்கை தொடர்ந்து, பணியாளர்கள் சம்மேளனத்திற்கு ஆஜரான சீனியர் வழக்கறிஞரை தனது வழக்கறிஞராக வளைத்துப் போட்டு, நடைபெறும் தேர்தலில் உயர்ந்தபட்ச வாக்கு பெறும் ஒரு சங்கம் மட்டும் அங்கீகாரம் பெற்ற சங்கமாக கருத வேண்டுமென உத்திரவினை பெற்றது. அதன்பின் இந்த கட்டுரையின் முதல் பத்தியில் சொன்னது போல் சரக்கு சகிதமாக தேர்தல் நடைபெற்றது.
முன்னதாக கடந்த 3 ஆண்டுகளில் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 40000 பேர் தலைக்கு 2 முதல் 2.5 லட்சம் வரை கொடுத்து ஓட்டுனர், நடத்துனர் பணிபெற்ற பல்லாயிரக்கணக்கானவர்களின் பணி இன்னும் நிரந்தரப்படுத்தப் படாமல் தினக்கூலியாகவே பணி வாங்கப்பட்டு வருகின்றனர். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இளவரசியிடம் விளக்கம் சொல்லும் ராமதாஸ் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் ஆனால் வாய்தான் காதுவரை நீளம்” என்று வசனம் பேசும் ஒரு காட்சி வரும்.
ஆனால் இன்றைய இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக பல வருடங்கள் காத்திருந்து துன்பப்பட்டு, திரைப்படங்களில் வருவது போல் பெற்றோர்கள், உடன் பிறந்தோர்களிடம் அவமானப்பட்டு ஒரு வழியாக லட்சங்கள் கொடுத்து அரசுத்துறை வேலையைப் பெறுவதால் அங்குவந்து வாய்பேசி காரியம் சாதித்துக் கொள்வதற்கு பதில் ஆளும் அரசியல் கட்சியிடம் சேர்ந்து காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தோடு வேலையில் சேருவதால் இவர்களுக்கு வாயும் நீளவேண்டிய இடத்தில் நீளுவதில்லை. “வேலைக்கு சேர்ந்தாகிவிட்டது. நான் தினமும் பணிக்கு வந்தால் எனக்கு ஒரு பேருந்தின் பணி கொடுத்துத்தானே ஆகவேண்டும், இதில் ஆளும் கட்சி ஆதரவு எனக்கெதற்கு” என வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு கேள்வி எழலாம்.
ஆனால் எதார்த்தம் என்னவெனில் அனைத்து போக்குவரத்துக் கழக டிப்போக்களிலும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அன்றாடம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி என்பது ஆளும் கட்சியை சேர்ந்த டிராபிக் கண்காணிப்பாளர் வசம் உள்ள பணியாகும். அவர் தனி மனிதனாக வரும் நபருக்கு காலையில் வந்தால் மாலை வரை பணி ஒதுக்காமல் மதியம் ஒரு வண்டியை ஒதுக்கி பணி செய்யச் சொன்னால் அவர் காலையிலிருந்து டிப்போவில் காத்திருந்த நேரமும், அவர் மதியம் துவங்கி பணி செய்யும் நேரமும் சேரத்து 20 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். அதற்கு பதிலாக ஆளும் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து கப்பம் கட்டிவிட்டால் ரெகுலராக ஒரு தடத்தின் பணி ஒதுக்கப்படும். அன்றாடம் அவர் வீட்டிலிருந்து புறப்படுவது முதல் வீடு வந்து சேருவது வரை திட்டமிடமுடியும்.
இப்படிப்பட்ட புதிய பணியாளர்களையெல்லாம் தனித்தனியாக கூப்பிட்டு “கவனித்த” ஆளும் கட்சி சங்கம் “உனது பணி நிரந்தரம் ஆக வேண்டுமென்றால் தொமுச-விற்கு வாக்களிக்க வேண்டும். 1998ல் தேர்தல் நடைபெற்ற போது பல பணிமனைகளின் வாக்குகள் ஒரு அண்டாவில் கொட்டி கலக்கப்பட்டு எண்ணப்பட்டது. ஆனால் தற்போது டிப்போ வாரியாக வாக்கு எண்ணப்படும். நீ மாற்றிப் போட்டாயானால் உனது பணி அம்போதான்” என “கனிவாக” அறிவுரை செய்யப்பட்டது.
ஏற்கனவே வீட்டிலிருந்த தாலியையும், வயல்களையும் அடமானம் வைத்து லட்சங்கள் கொடுத்து வேலைக்கு வந்த “உடன்பிறப்புக்கள்” “ரத்தத்தின் ரத்தங்கள்” அவர்களது பார்முலாப்படி வேண்டிய பணி வேண்டுமா அதற்கொரு தொகை, விடுப்பு வேண்டுமா அதற்கொரு தொகை இலகுபணி வேண்டுமா அதற்கொரு தொகை, தற்காலிக வேலை நீக்கத்தை விலக்கிக் கொள்ள ஒரு தொகை என கொடுத்துப் பழகியதால், கடந்த 36 ஆண்டுகளில் தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற பலன்களெல்லாம் புதியவர்கள் அகராதியில் பணத்தால் சாதி்க்க முடியும் என்கிற எண்ணம் வளர்ந்திருந்த சூழலில் இந்த தேர்தல் வந்தது.
எனவே கடந்த 3 வருடங்களுக்குள் இப்படியாக வேலைக்கு சேர்ந்த 40000 புதிய பணியாளர்கள் (அடிமைகள்) மற்றும் குறிப்பிட்ட தடங்களில் பணி புரிய வேண்டும் என்பதற்காகவே ஆளும் கட்சியை சார்ந்து இருக்கும் நிரந்தரப் பணியாளர்கள் என இவர்களை கருத்தில் கொண்டே ஒரு சங்க அங்கீகாரம் என்பதில் முனைந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை வென்றதில் அதிசயப்பட ஒன்றுமில்லை.
தொழிலாளர் வர்க்கமாக ஒன்றிணைந்து போராடாமல் எதையும் பெற முடியாது என்கிற அனுபவ பாடத்தை புதிய தொழிலாளர்கள் கற்றுக் கொள்ள இன்றைக்கு உள்ள முதலாளித்துவ ஆளுமை சமுதாயத்தில் வெகு காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றே எண்ணுகிறேன்.
போக்குவரத்துக் கழகங்களில் புதிய, புதிய பேருந்துகள் நகரை வலம் வந்த போதிலும் அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக,
- அவரவர் வருங்கால வைப்பு நிதி சேமிப்பிலிருந்தான கடன் தொகை வழங்கப்படாமல் நிலுவையிலுள்ளது.
- புதிய பென்சன் திட்டம் வந்த போது வருங்கால வைப்பு நிதிச் சட்டத்திலிருந்து வெளிவந்து விட்டதால் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வ.வை.நிதிப்பணத்தையும் கொள்முதல்களுக்கு கமிசன் தரும் பார்ட்டிகளுக்கு பணம் தரும் வகையில் ரொட்டேசனுக்கு பயன்படுத்தும் அவல நிலை அனைத்து கழகங்களிலும் உள்ளது.
- சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் ஆயுள் காப்பீடு, வங்கிகளின் வீட்டு வசதி கடன், சொசைட்டி கடன், அஞ்சலக காப்பீடு, மாதாந்திர தொடர் சேமிப்பு போன்றவை அதனதன் கணக்கில் செலுத்தப்படாமல் நிலுவையிலுள்ளது
- ஓய்வு பெற்றவர்களின் பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்பு போன்றவை நிலுவையிலுள்ளது
- தவிர தினசரி புறநகர் பேருந்து என்றால் 14 மணி நேரத்திற்கும் மேல், நகரப் பேருந்து என்றால் 10 முதல் 11 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிய கட்டாயப்படுத்தப்படுகின்றனர்
- பராமரிப்பில், அலுவலகப் பிரிவில் கடந்த 12 ஆண்டுகாக நியமனம் என்பதே இல்லாமல் ஓய்வு பெற்று, இறந்து வெளிச் செல்லும் தொழிலாளர்களின் பணிச்சுமை என்பது இருக்கும் பணியாளர்களின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது
- விபத்தில் இறந்த பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு என்பது சுமார் 110 கோடி வரை நிலுவையிலுள்ளதால், அடிக்கடி பேருந்துகள் ஜப்தி என்கிற நிலை எழுகிறது.
- ஜப்தி என்கிற நிலை வரும் போது அரசு கேள்வி கேட்கிறது என்பதற்காக பேருந்தின் ஓட்டுனர் தவறின்றி எதிரே வந்த வாகனத்தின், தனியார் வாகனத்தின் தவறால் விபத்து என்றாலும் கழக ஓட்டுனர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது
இத்தனையும் இருந்து பல ஆண்டுகளாக போராட்ட களத்தில் பழகி வந்த முதுநிலை பணியாளர்கள் கூட வர்க்கமாக ஒன்றிணைந்து உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும் என பழக்கப்படுத்தப்படாமல், பல லெட்டர் பேடு சங்கங்களும் புரோக்கர்களாக பணி பார்க்க தொடங்கியதால்- காசால் சாதித்து விடலாம் என்கிற மனப்போக்கு வளர்ந்த நிலையில், ஆளும் கட்சி சங்கம் மிக அதிகமான வாக்குகளைப் பெற்று வென்றிருக்கிறது. ஊதிய ஒப்பந்தம் என்பது இரண்டாவது சுற்றுப் பேச்சு வார்த்தை துவங்கிய சில நிமிடங்களில் அமைச்சரால் படாடோபமாக அறிவிக்கப்பட்ட இன்னமும் கணக்கிடும் முறைகள் வெளியிடப்படாமல் வாக்களித்த தொழிலாளர்கள் குழம்பி நிற்கின்றனர்.
அனைத்து மாநிலங்களிலும் தொழிற்சங்கங்கள் என்பது நசுக்கப்பட வேண்டிய ஒன்று என்று முதலாளித்துவ மேலாண்மை பரவி வருகின்ற இன்றைய சூழலில் ஒரு துறை போராடினால் மற்ற துறை தொழிலாளர்கள் வேடிக்கை பார்க்காமல் துறை கடந்த ஒற்றுமையை கட்டி புதிய பொருளாதார தாக்குதலை எதிர்த்து நிற்கும் அரசியலை தொழிலாளர் வர்க்கத்திற்கு கற்றுக் கொடுக்காமல் விட்டது இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்து விட்டது.
போராடாமல் காசு கொடுத்து எதையும் சாதித்துவிடலாம் என்று இன்றைய இளைய தொழிலாளர்களிடம் வேர் விட்டுக் கொண்டிருக்கிற அபாயம் களைந்தெடுக்கப்பட வேண்டும். கட்சி சாராத தொழிற்சங்கங்கள் அந்தந்த தொழில் மையங்களில் தொழிலாளர்களுக்கு மக்களின் துன்பங்களோடு இணைந்த பொது சூழல்களை புரியவைத்து, சம்பளத்திற்காக மட்டும் போராடுவது என்ற நிலைவிடுத்து, சமூகத்திற்காகவும், மறுகாலனியாக்கத்திற்கு எதிராகவும் போராடும் அரசியலை கற்றுக் கொடுப்பதே இது போன்ற நிகழ்விலிருந்து மீண்டு வர வழியாக அமையும்.
___________________________________________________
– சித்திரகுப்தன்
___________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்
- கோவைத் தொழிலாளி வர்க்கத்திடையே ஒரு புத்தெழுச்சி!
- கோவை என்.டி.சி தேர்தல்: கைக்கூலிகளை எதிர்த்து புரட்சியாளர்களின் சமர்!
- ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி ! பொதுக்கூட்டம்!!
- பன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்!
- நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!
- அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!
- தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !!
- நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ !!
- நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!
- சத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை, ஒரு தொழிற்சங்கம் உருவான கதை
- ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!
- ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!
- இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !
- கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!
- வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை !
- உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்!!
- “சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி! உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!”
- அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !!
- கூலித்தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா?
- கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!
போக்குவரத்து தொழிற்சங்கம் : தி.மு.கவின் பிரியாணி, டாஸ்மாக், அதிகாரம் வென்றது !…
பணத்தின் மூலம், ஆளும் ஓட்டுக்கட்சி அரசியல் தலைமையின் மூலம் சாதித்து விடலாம் என்கிற எண்ணம் தொழிலாளர்கள் மத்தியில் பார்த்தீனிய செடியாய் வேர்விட்டிருப்பதுதான் மிகப் பெரிய அபாயம்…
//போராடாமல் காசு கொடுத்து எதையும் சாதித்துவிடலாம் என்று இன்றைய இளைய தொழிலாளர்களிடம் வேர் விட்டுக் கொண்டிருக்கிற அபாயம் களைந்தெடுக்கப்பட வேண்டும். கட்சி சாராத தொழிற்சங்கங்கள் அந்தந்த தொழில் மையங்களில் தொழிலாளர்களுக்கு மக்களின் துன்பங்களோடு இணைந்த பொது சூழல்களை புரியவைத்து, சம்பளத்திற்காக மட்டும் போராடுவது என்ற நிலைவிடுத்து, சமூகத்திற்காகவும், மறுகாலனியாக்கத்திற்கு எதிராகவும் போராடும் அரசியலை கற்றுக் கொடுப்பதே இது போன்ற நிகழ்விலிருந்து மீண்டு வர வழியாக அமையும்.//
‘உண்மை!’
போக்குவரத்து தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் தி.மு.க எப்படி வென்றது இப்போது புரிகிறது. கட்டுரைக்கு நன்றி தோழர் சித்திரகுப்தன்.
காசை வாங்கிகிட்டு வேலை கொடுத்து அப்பறும் மிரட்டியே தொழிற்சஞங்கத்தில தி.மு.க செயிச்சிருக்கிறது நல்லாவே புரியுது.
[…] This post was mentioned on Twitter by வினவு, karthick. karthick said: https://www.vinavu.com/2010/12/28/transport-workers-election/ [Like it? http://bit.ly/fGsAF4 ] […]
கருணாநிதி அவரின் திருவிளையாடல் இல்லாத துறையே இல்லையா ?
போராடாமல் காசு கொடுத்து எதையும் சாதித்துவிடலாம் என்று இன்றைய இளைய தொழிலாளர்களிடம் வேர் விட்டுக் கொண்டிருக்கிற அபாயம் களைந்தெடுக்கப்பட வேண்டும்
//பொதுவாக வங்கிப் பணியாகட்டும், அரசு ஊழியா் பணியாகட்டும், அரசு போக்குவரத்துக்கழக பணி, மின்வாரிய பணியாளா்கள் பணி, சிவில் சப்ளை தொழிலாளர்கள் பணி எவற்றிலும் அவரவர் சார்ந்த துறை பிரச்சனைக்கு போராடும் போது அவர்கள் மட்டுமே போராடுகிறார்கள். போராடும் மற்ற பிரிவினருக்காக எப்போதும் போராடுவதில்லை. மேலும் தங்களது போராட்டத்தின் நியாயத்தை பொது மக்களிடம் விளக்கி அவர்களது ஆதரவையும் திரட்டுவதில்லை.//
அரசு ஊழியர்களுக்கு, தாங்களெல்லாம் மக்களின் ஊழியர்கள் என்ற உண்மையை மறந்து போனதோடு மட்டுமல்லாமல், பதவி மமதை கொண்டு, மக்களை பலவழிகளில் வதைக்கும் போது, மக்களின் ஆதரவு அவர்களுக்கு எப்படி/எங்கிருந்து கிடைக்கும்?
Now iwant to clarify some of the misquoting in your website.
No 1 The Labour Progressive Federation have not approched for elect the union
through secret ballot.I thing you don’t know what happened in the Madras
High Court during 1998,2005 and 2010.If you are prepare to come to my office
i ready to give in detail.If LPF win thatbecause of some thing but if others
that is some thing else is not fair.
Even though we are the labour wing of DMK we have some principle we are not
likeother comrades.
If you are very particular to ratify the ILO convention No 87 & 98 Why you are get affraide with secred ballaot.
After elected what is the achevemnt by the elected trade uniopn LPF.If you are
ashamed to meet me,i request you go to the transport workers ask them what is the benefit of agreement signed by the LPF.To probagate lie and suppress the fact will not survive long.Try to rectify your premature deliveries.I invite you with whole heartedly to explain and to clear your mental block.