Tuesday, September 10, 2024

மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!

-

தொடர் மழையை காரணமாகச் சொல்லி வெங்காயம், தக்காளி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு முருங்கைக்காயின் விலை பதினைந்து ரூபாய். முந்தானை முடிச்சு படமா ஓடுகிறது இந்த விலை விற்பதற்கு? சந்தையில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். சந்தையை ஒரு சுற்று சற்றிவிட்டு அப்பாடா என ஒரு பெருமூச்சுவிட்டபடி என்னிடம் வந்தார்.

“என்ன பை காலியா இருக்கு. எதுவும் வாங்கலியா?” என்றேன்.

“வெலயக் கேட்டா பயமா இருக்கு. நான் ஏதோ அப்பிடி இப்பிடி எதையாவது வாங்கிக்கிட்டு போயிடுவேன். ஆனா சாதாரண ஜனங்க,  அதுவும் மாசம் மூவாயிரம்,  நாலாயிரம் சம்பாதிக்கிறவங்க என்ன செய்வாங்க பாவம்?” என்றார்.

கை நிறைய சம்பளம் வாங்குபவரையே மிரள வைத்திருக்கிறது இந்த விலைவாசி உயர்வு.

விலைவாசி உயர்வு, உயிர்வாழும் உரிமையைப் பறித்துவருகிறது. இதே நிலை நீடித்தால், ஒன்று பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும் அல்லது ஊட்டச்சத்துக் குறைவால் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆட்படுவதும், தொடர் மரணமும் அன்றாட நிகழ்வாகிவிடும்.

மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!

தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரசித்திப் பெற்ற மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாயாம். சென்ற வாரம் மல்லி என்றால் இந்த வாரம் கனகாம்பரம். கனகாம்பரமும் ஒரு கிலோ ஆயிரம் ரூபாயாம்.

சமீபத்திய தொடர் மழை காரணமாகவும், கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாகவும் விளைச்சல் வெகுவாகக் குறைந்துவிட்டதாம். நூறு கிலோ கிடைத்த ஒரு ஏக்கரில் இப்போது ஒரு கிலோதான் கிடைக்கிறதாம்.

விளைச்சல் குறைந்துவிட்டதே என விவசாயிகள் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. நம்பி மல்லியைப் பயிர் செய்துவிட்டார்கள். விளைச்சல் இல்லை என்றால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.

பூ பயிரிடும் விவசாயிகள் மட்டுமல்ல இத்தொழிலையே நம்பி வாழும் பூக்களைக் கொய்வோர்,  பூக்களைக் கொள்முதல் செய்வோர்,  பூக்களை மொத்தமாக வாங்கி உதிரியாக விற்பனை செய்வோர், பூக்களைக் கோர்த்து முழம்போட்டு விற்பனை செய்வோர் என ஒரு பெரும் கூட்டமே பூக்களின் விலை உயர்வால் பாதிக்கப்படுவர்.

விளைச்சல் குறைவாலும், விலை உயர்வாலும் நுகர்வோருக்கு பாதிப்பில்லாமலா? பூக்களின் விலை உயர்வைக் கண்டு அங்கலாய்த்தாலும், கொத்துக் கொத்தாகக் கொண்டையில் பூச்சூடிக்கொள்ளும் மகளிர் பூச்சூடாமல் நிறுத்திக் கொள்வார்களா? இன்று மல்லி முழம் ஐம்பது ரூபாய். ஐம்பது  ரூபாய் என்ன, நூறு ரூபாயானாலும் பெண்ணுக்கு அழகு பூச்சூடுவதுதானே! விடுவார்களா என்ன? பெண்களைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித்தானே நமது மகளிர் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் காலையிலும், வீட்டோடு இருக்கும் பெண்கள் மாலையிலும் பூச்சூடிக்கொள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். கொண்டையில் சூடியப் பூக்கள் வாடி வதங்கி இறுதியில் குப்பைக்குத்தான் செல்கின்றன. யாருக்காகப் பெண்கள் கொண்டையில் பூக்களை சுமக்கிறார்கள்?

கோயிலுக்கோ அல்லது திருமணத்திற்கோ பூச்சூடாமல் சென்றுவிட்டால் இச்சமூகம் சும்மா விடுவதில்லை. சமூகத்திற்குப் பயந்தே பெரும்பாலான பெண்கள் பூச்சூடிக்கொள்கிறார்கள். பெண்களைப் போகப் பொருளாக மாற்றுகின்ற வேலையைத்தான் பூக்கள் செய்கின்றன. பிறருக்காகத்தான் அதாவது ஆண்களை கவருவதற்காகத்தான் நாம் பூச்சூடுகிறோம் என்பதை அறியாமலேயே பெண்கள் இதை ஒரு பண்பாடாகக் கருதி செய்து வருகிறார்கள். இன்று நடுத்தர மற்றும் மேட்டுக்குடிப் பெண்களிடம் வளர்ந்து வரும் குட்டைக்கூந்தல் கலாச்சாரம் பூக்களை சற்றே ஓரம் கட்டி வருவது ஒருவித முன்னேற்றம்தான்.

நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு ஆகிய விசேட நாட்கள் என்றால் பூக்களுக்கு ஏக கிராக்கிதான்.

ஆட்டோக்களிலும், லாரிகளிலும், பேருந்துகளிலும், அலுவலகங்களிலும், வீட்டுப் பூசை அறைகளிலும், கோயில்களிலும் உறையும் கடவுள் சிலைகளுக்கும், படங்களுக்கும் பூ அபிஷேகம் செய்து, பூ மாலைகள் சூடுவதை கிலோ ஆயிரம் ரூபாய் என்பதற்காக பக்தர்கள் நிறுத்தவா போகிறார்கள்? அறியாமையும் இயலாமையும் குடி கொண்டிருக்கும் நம் மக்களிடம் இதை எதிர்பார்க்க முடியாதுதான்.

எவ்வளவுதான் விலை ஏறினாலும் சந்தனக்கூடுகளிலும், பூச்சொறிதல்களிலும், பாடைகளிலும், மணமேடைகளிலும், தலைவர்களுக்காக வைக்கப்படும் அலங்கார வளைவுகளிலும்-மலர்ப்பாதைகளிலும்-வரவேற்பு மேடைகளிலும் கொட்டப்படும் பூக்கள் குறையவா போகிறது?

பிறந்த நாள் பொக்கேக்கள், பிரபல தலைவர்களின் சிலைகளுக்கும்-இறந்தவர்களின் உடலுக்கும்  மலர் மாலை-மலரஞ்சலி என மலர்களின் பயன்பாடோ விரிந்து செல்கிறது.

மேற்கண்டவைகள் அவசியமான அடிப்படைத் தேவைகள் இல்லை என்றாலும், மக்களிடையே நிலவும் அறியாமையின் காரணமாகவும் அற்ப பந்தாவுக்காகவும்தானே பூக்கள் இவ்வாறு கொட்டப்படுகின்றன.

நமது மண் வளமும், நீர் வளமும் நம் சொந்தங்களின் உழைப்பும் இது போன்ற அவசியமற்ற, அர்த்தமற்ற தேவைகளுக்காக வீணடிக்கப்பட வேண்டுமா?  மருந்துகளுக்காவும் உணவுக்காவும் பயன்படும் மலர்களை மட்டும் பயிர் செய்வது அவசியமானது. மற்ற தேவைகளுக்காக மலர்களை உற்பத்தி செய்வது அர்த்தமற்றது; அவசியமற்றது.

இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்படும் காலத்திலிருந்து நமது விவசாயம் என்பது சுதேசித் தேவையை விடுத்து பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக மாற்றப்பட்டும் அந்த விதத்தில் அழிக்கப்பட்டும் வருகிறது. சுயதேவைக்காக இருந்த உணவுப் பயிர்களின் இடத்தில் பணப்பயிர்கள் ஆக்கிரமித்துவிட்டன. அதுவும் கூட விவசாயிகளை வாழவைப்பதாக இல்லை. பூக்களின் விலை உயர்வின் பின்னே உள்ள காரணம் இதுதான். மேலும் அழகு, நுகர்வு என்ற பெயரில் பூக்களை வைத்து மிகப்பெரிய நுகர்பொருள் சந்தை உருவாக்கப்பட்டிருக்கிறது.

அர்த்தமற்ற முறையில் இயற்கை வளமும், மனித வளமும் விரயமாக்கப்படுவதற்கு பூக்கள் ஒரு எடுப்பான உதாரணம். இந்தப் பொருளாதாப் பின்னணியோடு பெண்களை அழகு சாதனமாகவும், துய்த்தெறியும் பொருளாகவும் பார்க்கும் பண்பாட்டு காரணமும் இணைந்திருக்கிறது. அந்த வகையில் பூக்களின் மாய உலகிலிருந்து பெண்கள் வெளியேற வேண்டும்.

____________________

– ஊரான்
____________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய் ! | வினவு!…

    கொண்டையில் சூடியப் பூக்கள் வாடி வதங்கி இறுதியில் குப்பைக்குத்தான் செல்கின்றன. யாருக்காகப் பெண்கள் கொண்டையில் பூக்களை சுமக்கிறார்கள்?…

  2. கட்டுரை ஆசிரியரே வினவு என்ற பெயரில் வினவுபவர்களே

    சாரிடி ஸ்டார்ட்ஸ் அட் ஹோம் என்பார்கள்

    அது போல் முதலில் உங்கள் தாய்மார்களுக்கோ/தமக்கைகளுக்கோ/மனைவிமார்களுக்கோ/புதல்விகளுக்கோ பூ வாங்குவதை நிறுத்த சொல்லுங்கள்.

    விவசாயிகள் பற்றி சொல்கிறீர்களே பரம்பரை பரம்பரையாக வெறும் பூ சாகுபடி செய்யும் விவசாயி என்ன செய்வான் ஐயா

    உங்கள் எண்ணம் இந்து பெண்கள் மற்றும் தான் பூ சூடுகிறார்கள் என்று. கண் திறந்து பாரும் ஐயா இஸ்லாமிய/புரட்டஸ்டண்ட்/பொளத்த மத பெண்களும் பூ சூடுகிறார்கள்.

    வீணாய் போன திக சார்ந்த பெண்கள் மட்டும் தான் பூ சூடுவதில்லை ஆனால் பெரியார் சிலை சமாதி இங்கே அதை உபயோகிக்கிறார்கள் ஐயா

    ஆகையால் முதலில் உங்கள் வீட்டில் இருந்து உங்கள் அலோசனைகளை செயல் படுத்துங்கள் பின் அதை பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம்

    • மஞ்ச மாஆஆக்கான்!
      இங்க சொல்றது எல்லா மதத்து பெண்கலயும்தான். இந்து பெண்கள்தான் அதிகமான ஆணிய அடக்கு முறையில் இருக்கிறார்கள் என்பதும், பூ அவர்களின் உடல் மீதான பாலியல் பார்வைக்கும் அடக்கு முறைக்கும் பூ இந்து மதத்தால் புனித படுத்த பட்ட பொருள் என்பதும், நீங்கள் எவளவு சத்தம் போட்டு மறைக்க விரும்பினாலும், நன்கு உணர பட்ட ஒன்று. எப்பதான் உங்களுக்கு அறிவு வரும்??

      • ஐயா மேதாவியே

        அப்ப தர்காவுக்கு நீர் போகும் போது உம்ம கண் குருடாயிடுமா அங்கன் போய் பாரும் ஓய் அவா தான் மல்லிப்பூவை பெரிய போர்வை மாதிரி தெச்சு சமாதி மேல போடுவா.

        ஆணாதிக்கம் இந்துக்களிடம் அதிகம் என்கிறீரே நீவீர் மூணு முறை தலாக் சொல்லி பெண்ணை கழட்டிவிடலாம் என்பதை ஆணாதிக்கம் இல்லை என்கிறீரா அல்லது ஷாரியத் சட்டம் சரி என்கிறீரா

        சரியாக விளக்கவும் மெத்த படித்த மேதா (ஆவியே)

  3. பெண்களுக்கு தேவையான எழுத்து பொருள் கொண்ட கட்டுரை. சரியான பார்வையில் உள்ளது.

    எப்பொழுதாவது பூ வைப்பேன். இனி பூ வைக்க கூடாது என்ற முடிவுக்கு
    வ்ந்து விட்டேன்.

    நன்றி

    • சரி இனி பூ வைக்கவேண்டாம். அப்போது இதுநாள் வரை பூ வியாபாரம் செய்தவர்கள் பூ பயிரிட்டவர்கள் கொய்பவர்கள் தரகர்கள் இவர்களுக்கு என்ன மாற்றுவழியை கட்டுரை சொல்கிறது ? அட ! இது ஒரு சர்க்கிள் ஆப் லைப் ! விலைவாசியை எப்படி கட்டுப்பாட்டில் வைப்பது என்ற விஷயத்தை பேசாமல் வெற்று புலம்பலான ஒரு கட்டுரை ? சரக்கில்லையா ? இல்லை மண்டபத்தில் எழுதியதா ?

  4. உண்மைதான் எல்லார் வீட்டிலும் காலி இடங்கள் இருக்கிறது அங்கே ரோஜா மல்லிகை, செம்பருத்தி போன்ற செடிகளை வைத்து பயிரிடலாம் உபயோகமில்லாத செடிகொடிகளை செலவழித்து வளர்ப்பதில் என்ன பயன். முருங்கை, வாழை மரம் வளர்க்கலாமே இந்த பெண்களுக்கு பணத்தின் அருமை தெரிவதில்லை காசு கொடுத்து வாங்கினால் தான் அவர்களுக்கு திருப்தி சோம்பரிகள்

  5. flowrs atlast are getting spoiled . why then ladies to keep it??
    whatever we eat also ultimately comes out as waste only. can we say why then to eat?
    commodification of women is wrong. like males are attractive in peacock women are attractive in humans . this is nature.sometimes certain things add to the beauty of nature. that should not be confused with commodification of women.
    s seshan

  6. வினவு எழுதும் சில கட்டுரைகள் தமது எதிர்பை தெரிவிப்பதர்க்காகவே எழுதுவதாக உள்ளது.

    நண்பர் செந்தழல் ரவி எழுதியது நூற்றுக்கு நூறு உண்மை நன் அதை வழி மொழிகிறேன்

  7. இக்கட்டுரை இன்னும் விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இக்கட்டுரையின் பார்வை வினவின் சீரியசான மற்ற விவாதங்களையும், பார்வைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ‘நக்கீரர்’ போன்ற முத்திரையை வாசிப்பவர்களுக்கு ஏற்படுத்தும் வாய்ப்பே அதிகம் (பூ வைச்சாலும் தப்பா? என்கிற ரீதியில்).

    பெண்கள் ஏன் பூச்சூடுகிறார்கள் ? இதை கலாச்சார ரீதியாகவும் பார்க்கவேண்டும். இதில் ஆணடிமைத்தனம் என்பது எங்கே வருகிறது ? பெண்ணும் ஆணும் தோற்ற அளவிலும் ஒருவரை ஒருவர் ஈர்க்க நினைப்பது என்பது இயற்கை. இதன் காரணமாகவே பூச்சூடல் என்பது நிகழ்கிறதேயன்றி ஆணுக்கு பெண் தான் அடிமை என்பதால் அல்ல. ஆண்கள் மீசை வளர்ப்பது, கட்டுமஸ்தாக தோற்றமளிக்க நினைப்பது, ஸ்டைலாக சிகரெட் குடிப்பது என்பது போன்ற விஷயங்களை பெண்களைக் கவருவதற்காகவே பெரும்பாலும் செய்கிறார்கள். (சிகரெட்டுகளே உலகில் தடை செய்யப்பட்டாலும் வேறு ஒன்றை புதிதாக கண்டுபிடிப்பார்கள் பெண்களைக் கவர. இது இயல்பான விஷயம்.) இக்காலத்தில் சமூகத்தில் போட்டி போட்டு வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் பெண்கள் ஆண்களை தங்களது புதிய அடையாளங்களோடு ஈர்க்க விளைகிறார்கள் (உதாரணம். கார்ப்பரேட்டில் உயர்ந்திருக்கும் பெண் தனது அந்தஸ்து, மதிப்பு, கோட் அணிந்த உடை, ஜீன்ஸ், ஸ்டைல், ஹீல்ஸ், ஹேர் கலரிங்… சிறிது மென்மையடைந்திருக்கும் இக்கால ஆண்கள் குர்தா, கனிவான பேச்சு, வசீகரமான சிரிப்பு, முரட்டுத்தனம் குறைந்த பாலிஷான இயல்பு, மோட்டார் பைக்…). ஒரு கம்யூனிஸ்ட் தோழரோ, தோழியோ தனது எதிர்பாலினத்தவரை கவர வெறும் நல்ல குணாதிசயங்கள் மட்டுமே போதும் என்று பேசுவது அவர்களின் உடலியல் வெளிப்பாடுகளை அங்கீகரிக்காத தன்மையை நோக்கி இட்டுச்செல்லும்.

    உடல் ரீதியான வெளிப்பாடுகள் வெறுக்கத்தக்கதல்ல. அதற்காக எல்லா பெண்களும் பூச்சூடுங்கள் என்றும் யாரும் நிர்ப்பந்திப்பதில்லை. உடலியல் வெளிப்பாடுகளே பெரிது என்று நுகர்வியல் கலாச்சாரம் சொல்வதையும் நாம் ஆதரிக்க முடியாது. இன்று பூ சூடுவது நடுத்தரவர்க்கத்திலிருந்து மேல் தட்டு வர்க்கம் வரை உள்ளது. கீழ்த்தட்டு மக்களிடம் இது இல்லாததன் காரணம் பொருளாதார காரணங்களே தவிர (சாப்பாட்டுக்கே அன்றாடம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் பூவுக்கு எங்கே போவது?) அவர்கள் பூச்சூடுவதை விரும்பாதது அல்ல. பூக்கள் ‘அழகியல்’ என்கிற எல்லைக்குள் வருபவை. அவை மாய வலைகள் அல்ல. நமது உளவெளிப்பாடுகளின் அடையாளங்களாகப் பயன்படும் எண்ணற்ற பொருட்களில் ஒன்று. அடையாளங்கள் அவற்றின் நன்மை, தீமைகள் பற்றி பெரும் விவாதங்கள் எப்போதும் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அடையாளங்கள் தவிர்க்கமுடியாதவை என்கிற யதார்த்தமும் அதில் வருகிறது.

    இது நமது கலாச்சாரத்தின் வெளிப்பாடு. சங்க இலக்கியங்களில் பூக்களால் அலங்கரித்தல் காதல் என்பதன் வெளிப்பாடாய் அமைந்ததாலேயே அது பெண்ணடிமைத்தனம் என்று யோசிப்பது சரியா என்று எனக்குத் தெரியவில்லை. இன்றைய நுகர்வு உலகில் நவநாகரிக பெண்கள் பூச்சூடுவதில்லை. ஆனால் மார்பின் திண்மை, அளவு, வடிவம் தெரிய உடை உடுத்துவது எதற்காக என்று நினைக்கிறீர்கள் ? ஆண்களை ஈர்க்கும் அடிப்படை எண்ணத்தின் வெளிப்பாடுதானே ? இப்படி உடை உடுத்துவது மட்டும் பெண் விடுதலை என்பதில் நிறைய பேர் ஒன்று பட்டு நிற்பது ஏன் ? உடலின் பாகத்தை மிகவும் வெளிப்படையாகக் காட்டி ஈர்ப்பது காம உந்துதல் என்றும், பூவைத்து ஈர்ப்பது அவ்வளவாக வெளிப்படையில்லாத, காதல் என்று புனைந்து கூறப்படும் காமம் என்றும் வைத்துக் கொண்டால் எதை நீங்கள் ஆதரிப்பீர்கள்?

    நுகர்வுக் கலாச்சாரத்தின் குறியீடாக பூ வைப்பதை நீங்கள் பார்த்தால் அதில் நான் உங்களுடன் உடன்படுவேன். ஆனாலும் கூட தினந்தோறும் பெண்கள் தலையில் பூச்சூடுவதில்லை என்பதைப் பாருங்கள். பண்டிகைகள், விஷேசங்கள் அல்லது ஏதாவது தனிப்பட்ட நிகழ்வுகள், சமூக நிகழ்வுகளிலேயே பூவின் உபயோகம் நிகழ்கிறது. பூ என்பது மென்மை, நல்ல நிகழ்வு அல்லது ஒருவரை முக்கியப்படுத்துவது (மரணத்தில்) என்று பல விதமானவற்றைக் குறிக்கும் ஒரு அடையாளமாகப் பயன்படுகிறது. பூ இல்லாவிட்டால் அது போல வேறு ஒரு பொருள் பயன்படுத்தப்படும் என்பது தான் யதார்த்தமே தவிர பூ உபயோகிப்பது வெறும் பந்தாவினால் அல்ல(அரசியல்வாதிகளுக்கு மட்டும் நீங்கள் கூறும் ‘பந்தா’ சரியாகப் பொருந்தும்).

    மல்லிகைப் பூவிற்கு மருத்துவப் பண்புகளே இல்லையா என்ன? குடற்புழுக்கள், வயிற்றுப்புண், நரம்புத்தளர்ச்சி, கண் சதை வளர்ச்சி, சிறுநீரக கற்கள் போன்ற பலவகையான நோய்களுக்கான தீர்வுதரும் தன்மை உள்ளது. தலையில் வைக்க மட்டுமே பெரும்பாலும் பயன்படுவதாக நாம் கருதுவது எவ்வளவு தூரம் உண்மை ? நிஜ அளவீடுகள் தெரிந்து கொள்ள வழியில்லை.

    விவசாயிகளை கண்டுகொள்ளாத அரசு பூ பயிரிடும் விவசாயிகளை மட்டும் தனியாகக் கண்டுகொள்ளவா செய்கிறது. எனவே அதையும் இதையும் சேர்த்துப் பேசி பூ விவசாயிகளை ஏதோ பாவப்பட்ட பொருளை விளைவித்ததாகக் கருதும்படி செய்யவேண்டாம். நெல்லின் தேவை எவ்வளவோ அவ்வளவு விவசாயிகள் நெல்லைப் பயிரிட்டாகவேண்டிய சமூக நிர்ப்பந்தம் ஏற்படும் (போலியான சந்தையின் நிர்ப்பந்தத்தை இதில் சேர்க்கவேண்டாம்). அதே போல் தான் பூவிற்கும். பணப்பயிர்களை விளைவிக்கும் நிர்ப்பந்தம் விவசாயிகளுக்கு ஏற்பட்டது புதிய பொருளாதாரத்தால் தான். மல்லிகைப் பூக்களை விளைவிக்க அவர்கள் எல்லோரும் தாவியதால் அல்ல என்று தான் கருதுகிறேன். உண்மை நிலவரம் உங்களுக்குத் தெரிந்தால் இன்னும் தெளிவாகக் கூறியிருந்திருக்கலாம்.

  8. கட்டுரையாளர் மலர் விவசாயிகளுக்கு தீர்வு சொல்லமல விட்டிருக்கிறார்? மருந்துகளுக்கும் உணவுக்கும் தேவையான மலர்களை பயிரிட வேண்டும் என்றுதானே கூறியிருக்கிறார். இதை உங்கள் வீட்டிலிருந்து தொடங்குங்கள் என ஒரு மேதாவி எழுதுகிறார். அதை நிச்சயம் எமது தோழர்கள் ஏற்கனவே செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் மூடநம்பிக்கையில் கை வைத்துவிட்டால் முட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள், விபச்சாரத்தை ஒழித்தால் விபச்சாரிகள் வாழ்விழந்து விடுவார்கள் எனவே விபச்சாரத்தை வளர்ப்போம். மதுவை ஒழித்தால் அதன் உற்பத்தியாளர் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே மதுவை வளர்ப்போம். இதுதான் நமது செந்தழலின் மற்றும் அவருக்கு ஜே போட்டுள்ள நண்பரின் சித்தந்தமா. கொள்கை என்று வந்தால் சமூக பொது நலத்தைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    பாவல்

  9. நேற்று தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு 25 டன் பூக்கள் மற்றும் பழங்களால் அபிஷேகமாம்.

    மல்லி ஒரு கிலோ 1000 ரூபாய், கனகாம்பரம் ஒரு கிலோ 1500 ரூபாய். 25 டன்களில் எத்தனை டன்கள் பூக்கள் என்று தெரியவில்லை. தோராயமாக 10 டன் என்றாலும் கிலோ 1000 ரூபாய் மேனிக்கு கணக்குப் போட்டால் 10x1000x1000= 1 00 00 000 ரூபாய். அதாவது ஒரு கோடி ரூபாய். மீதி 15 டன் பழங்களுக்கு கிலோ 75 ருபாய் மேனிக்கு கணக்குப் போட்டால் 15x1000x75= 11 25 000 ரூபாய். அதாவது சுமார் 12 லட்சம் ரூபாய். இது மிகை மதிப்பீடு என்று யாராவது கருதினால் சரியான மதிப்பீட்டில் போட்டுப்பாருங்கள் பல லட்சங்களைத் தாண்டடும்.

    ஒரு பக்கம் பட்டினிச் சாவுகள். இன்னொரு பக்கம் அற்ப மகிழ்ச்சிக்காக டன் கணக்கில் பழங்களும் பூக்களும் கொட்டப்படுகிறது. இது அசவசியம்தானா? இப்படிக் கொட்டிப் பாழாக்கவா நம் விவசாயி பாடுபட வேண்டும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க