Tuesday, December 10, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஸ்பெக்ட்ரம் ஊழல்: தலைமைச் செயலகமா தரகர்களின் தொழுவமா?

ஸ்பெக்ட்ரம் ஊழல்: தலைமைச் செயலகமா தரகர்களின் தொழுவமா?

-

சென்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழரின் சுதந்திரத் தாயகக் கனவுகளுக்கு ஒரு இரத்தமயமான முடிவு எழுதப்பட்டிருந்தது. உலகெங்கிலுமிருந்த தமிழரின் இதயம் வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் கோபாலபுரத்திலும் சி.ஐ.டி காலனியிலும் இருந்த சிலருக்கும் இதயம் துடித்துக் கொண்டிருந்தது – அது வேதனையால் அல்ல; எதிர்பார்ப்பினால்.

தமது உறவுகளின் நிலையறிய உலகெங்கும் இருந்த புலம்பெயர்த் தமிழர்கள்  தொலைபேசிகளின் அருகிலேயே தவிப்போடு அமர்ந்திருந்த நேரத்தில்  கருணாநிதி குடும்பத்தினரும் ஆவலோடு தொலைபேசிகளின் அருகே அமர்ந்திருந்தனர் நீரா ராடியாவின் குரலைக் கேட்க.

விண்ணுயர நிமிர்ந்து நிற்கும் புதுதில்லி சவுத் பிளாக்கை முட்டுக் கொடுத்து தாங்கி நிற்பவர்கள் தரகர்களே!

தில்லி தெற்கு பிளாக்கின் அழுக்கேறிய அரசாங்கக் கட்டிடங்களில் செயல்படும் பல்வேறு அமைச்சக அலுவலகங்களும், தேசத்தின் விதியை சில பச்சைக் கையெழுத்துகளிலேயே மாற்றிவிடும் வல்லமை கொண்ட முக்கியமான அரசு அலுவலகங்களும்  செங்கல், சிமென்ட்டால் கட்டப்பட்டதோ என்னவோ – அவைகளின் கட்டுமானத்தில் மிக முக்கியமான ஒரு அங்கம் – தரகர்கள். தரகர்கள் இன்றி இந்த அலுவலகங்களில் ஒரு தூசி துரும்பு கூட அசைந்து விடாது.

இவ்வலுவலகங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகளை விட அரசு நடைமுறைகள், விதிகள், தொடர்புடைய சட்டங்கள், அரசு உத்தரவுகள் மற்றும் இவற்றினூடே உள்ள சகல சந்து பொந்துகளும் இந்தத் தரகர்களுக்கே அத்துப்படி. கற்பனையான ஒரு வாதத்துக்கு இந்தத் தரகர்கள் ஒரு நாள் ‘டிங்’ என்று மறைந்து காணாமால் போய் விடுகிறார்கள் என்று  வைத்துக் கொண்டால், பல அதிகாரிகளுக்கு தங்கள் வேலை என்னவென்பதைக் கற்றுக்கொள்ளவே சில மாதங்கள் பிடிக்கலாம். இந்தியாவின் இன்றைய ஜனநாயகமும் அமைச்சர்களை வெறும் ரப்பர் ஸ்டாம்புகளாக வைத்திருப்பதால் – தேசமே சில மாதங்களுக்குத் தடுமாறும் நிலை கூட ஏற்பட்டால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

“தரகர்” என்றவுடன் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் காணும் நபர்களையொத்த ஒரு தோற்றத்தை நீங்கள் கற்பனை செய்துகொள்ளத் தேவையில்லை; சவுத் பிளாக் தரகர்கள் அழகான சூட்டுக் கோட்டுகளில் கழுத்தில் டையுடன் நேர்த்தியான மேக்கப்புகளில் காணப்படுவார்கள். இவர்களுக்கான ஒரு கௌரவமான பெயர் தான் – “லாபியிஸ்ட்”. இப்படி அரசாங்க மற்றும் அதிகார மட்டங்களில் தனியார் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் தரகு வேலை செய்து தரும் சில நிறுவனங்களை நடத்தும் ஒரு தரகர் தான் நீரா ராடியா.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஒட்டி வெளியான நீரா ராடியாவின் உரையாடற் பதிவுகளை ஒட்டி சகல ஊடகங்களிலும் வெளியாகும் செய்திகளில் ஏதோ இந்தியாவின் ஒரே தரகர் நீரா ராடியா என்பது போல் தோன்றும் படிக்கு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், எதார்த்தம் அதுவல்ல. தில்லியிலுள்ள ஒரு மத்திய அரசு அலுவலகத்திலிருந்து – இங்கே  உசிலம்பட்டியிலிருக்கும் பஞ்சாயத்து ஆபீஸ் வரையில் சகல மட்டங்களிலும் தரகர்களால் இந்தியா நிரப்பப்பட்டுள்ளது. சில சிறப்பான தரகர்களுக்கு வெளியே சொல்லிக் கொள்ள கவுரவமான வேறு பெயர்கள் இருக்கலாம் – உதாரணமாக பத்திரிகையாளர்கள் எனும் போர்வையில் துக்ளக் சோ, இந்து ராம், அரசியல்வாதியாக சு.சுவாமி, இறந்து போன பிரமோத் மகாஜன், முலாயம் கட்சியிலிருந்த அமர்சிங், மக்கள் தொடர்பு ஆலோசகராக (PR consultant) நீரா ராடியா.

‘ஜனநாயகப்பூர்வமாகத்’ தேர்ந்தெடுக்கப்படுவதாக சொல்லிக் கொள்ளப்படும் இந்த சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சிகளில் மெய்யாகவே ஜனநாயகம் என்பது இருந்திருந்தால் கூட்டணிக் கட்சியோடு பதவிப் பங்கீடு தொடர்பாகப் பேச செயற்குழு மூலமோ கட்சியின் உயர் நிலைக் குழு மூலமோ ஒரு கமிட்டியோ குழுவோ அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கோ  பெரும்பாலும் கட்சிகள் ஜனநாயகத்தின் வாசம் கூட இல்லாத குடும்ப கார்ப்பரேட்டுகளாகவே இருப்பதால் அவர்கள் நீரா போன்ற தரகர்களின் கால்களில் விழ வேண்டியிருக்கிறது.

நீரா ராடியாக்கள் சுயம்புவாகக் கிளர்ந்து எழுந்து வந்த மேனகைகளும் அல்ல; ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் விசுவாமித்திரர்களும் அல்ல. இந்த ஜனநாயகமற்ற அரசியல் அமைப்பு முறையின் தவிர்க்கவியலாத தேவை தான் தரகர்கள். இருளின் போர்வையினுள் இயங்கும் தன்மை கொண்ட தரகு வேலைகளில் இனி நீராவால் செய்ய முடியாது – அதனால் இனிமேல் தரகர்களே இல்லாமல் போய் விடுவார்கள் என்று சொல்வதற்கில்லை. அப்போதும் இருந்தார்கள்; இப்போதும் இருக்கிறார்கள்; இனி எப்போதும் இருப்பார்கள் – இந்தப் போலி ஜனநாயகத்தை வீழ்த்தும் வரை இருப்பார்கள்.

நீராவும் தி.மு.க கார்ப்பரேஷனின் பங்குதாரர்களான கருணாநிதி குடும்ப உறுப்பினர்களும் பேசிக் கொண்ட உரையாடல் பதிவுகள் வெளியானதைத் தொடர்ந்து ஆங்கில இணைய ஊடகங்களில் – குறிப்பாக இவ்விவகாரத்தில் மாட்டிக் கொள்ளாத  பத்திரிகைகளிலும், தமிழ் இணையங்களிலும் ஒரு பரபரப்புக் கிளம்பியது. அதிலும் குறிப்பாக இதில் தி.மு.க சம்பந்தப்பட்டிருப்பதாலும், தி.மு.க குடும்பத்தினரின் உள்வட்ட குழிபறிப்புகளும், குழுச்சண்டைகளும் வெளிச்சத்திற்கு வந்திருப்பது இவர்களுக்கு போனசாகக் கிடைத்த ஒரு கிளுகிளுப்பு அம்சம்.

தி.மு.க இன்று (திராவிட) வாசம் போன காலி பெருங்காய டப்பாவாக இருந்தாலும், அதன் பெயரில் ஒட்டிக் கொண்டிருக்கும் ‘திராவிட’ எனும் வார்த்தை கிளப்பும் கடுப்பும் கணிசமான அளவுக்கு இவ்விவகாரம் பற்றி ஒரு சிலர் தொடர்ச்சியாக எழுத பேச காரணம். அரசியலில் தரகர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் இவர்களில் பலர், முந்தைய காலங்களில் அ.தி.மு.கவுக்கு தரகனாகச் செயல்பட்டு வந்த சோ மற்றும் ஆ.நடராசன் போன்றோரின் இடையீடுகளை விமர்சித்திராதவர்கள் – இப்போதும் விமர்சிக்க மறுப்பவர்கள்.

இவர்கள் இந்த விவகாரத்தின் அரசியல் உள்ளடக்கத்தை உருவியெறிந்து விட்டு அதன் கிசு கிசு அம்சத்தை மட்டுமே திரும்பத் திரும்ப பேசி /எழுதி வருகிறார்கள்.  இதைப் பற்றி தொடர்ச்சியாக எழுதும் தமிழ் பத்திரிகைகளில் ஜூனியர் விகடனின் உட்சபட்ச எதிர்பார்ப்பே அ.தி.மு.க – காங்கிரசு கூட்டணி பற்றியது தான். நக்கீரனுக்கு தி.மு.க – காங்கிரசு கூட்டணி. கூட்டணிக் கிசு கிசு பற்றி எழுதுவதற்கு  இடையிடையே மானே தேனே போட்டுக் கொள்வது போலத் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி எழுதுகிறார்கள்.

நீரா ராடியா எனும் தரகர் திமுக தலைமையோடு பேசினார் என்பதைப் பெரிதாக எழுதும் முதலாளித்துவ ஊடகங்கள், அவர் யாருக்காகப் பேசினார், எதற்காகப் பேசினார், அந்தப் பேச்சினால் விளைந்த பலன்கள் என்ன, அவைகளின் பௌதீக மதிப்பு என்னவென்பதைப் பற்றி போகிற போக்கில் குறிப்பிட்டு விடுகின்றன. 1.76 லட்சம் கோடிகளையும் ஆ.ராசாவும் கருணாநிதியும் பங்கிட்டுக் கொண்டுவிட்டதைப் போன்றதொரு தோற்றம் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறது.

வடநாட்டு அரசியல்வாதிகளையோ பார்ப்பனியத்தையோ விமர்சித்து மறுமொழி எழுதினால் கடுமையாக மட்டுறுத்தும் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் இணையதளத்தில் வந்துள்ள ஒரு மறுமொழியைக் கவனியுங்கள் –

How Tamil Nadu looting India :- 1. A Raja – Telecom Scam 2. Chief Justice of India – balakrishnan 3. Law minister – Verappa Moily 2. Nira Radia – Spectrum Scam 3. Chandrasekhran – Subhiksha Scam 4. Ramlinga – Satyam Fraud 5. Ramchandran – LIC Scam 6. Chidambram – Rise of Maosim 7. Srinivsan – IPL corruption 8. Jairam Ramesh – Vedanta and Posco scams 9. Mining Scam _- Reddy All above people are from Madras . Followers of fake brahmans like ravans , mahisasura , surpanakha ,hirnakashaypa and narkasura.

http://expressbuzz.com/opinion/op-ed/sonia-gandhi-and-the-hidden-trail/233507.html

மேற்கண்ட கட்டுரையின் தலைப்பு – சோனியா காந்தியும் ரகசிய பிண்ணனியும்! தமிழர்களை இழிவுபடுத்தும் இந்த மறுமொழி இந்த நிமிடம் வரை பாரம்பரியமிக்க ‘தேசிய’ நாளேட்டின் இணையதளத்தில்  மட்டுறுத்தப்படாமல் இருக்கிறது. யாரோ ஒரு முகம் தெரியாத அனாமதேயம் எழுதிய கருத்துக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அல்ல – அது எதிர்க்கப்படாமலும், நீக்கப்படாமலும் இருக்கும் தடித்தனத்தின் பின் இருப்பது என்னவோ அது தான் ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி எழுதும் ஆங்கில ஊடகங்கள் பெரும்பாலானவற்றுக்கு உள்ள ஆர்வம்.

நீரா ராடியாவின் நிறுவனங்களில் தரகு வேலைகளை செய்யப் பணிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகளில் பெரும்பாலானோர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்; அமைச்சகங்களின் துறைச் செயலாளர்களாகப் பணியாற்றியவர்கள். காங்கிரசு மட்டுமின்றி பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்திலும் செல்வாக்கான பதவிகளில் இருந்தவர்கள்.

அரசுப் பொதுத்துறைகளை தனியாருக்குத் தாரைவார்ப்பதற்காகவே பாரதிய ஜனதா ஆட்சிக்காலத்தில் ஒரு அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டிருந்தது அத்துறையின் தலைமைச் செயலராக இருந்தவர் ப்ரதீப் பாய்ஜால் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி. பின்னர் அருண் ஷோரி தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது ட்ராய் செகரெட்ரியாக நியமிக்கப்பட்டவர். அதற்கு முன்பு BPL போன்ற கம்பெனிகள் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை விலை கொடுத்து வாங்கியது போல் அல்லாமல், வில் போனுக்கு (WLL – Wireless in Local Loop) வாங்கிய உரிமத்திலேயே செல்பேசி சேவை அளிப்பதற்கான அனுமதியை டாடாவுக்கும் ரிலையன்சுக்கும் அளித்த ‘கொள்கை(ளை)’ முடிவை அருண் ஷோரி எடுப்பதற்கு காரணகர்த்தாவாய் இருந்தவர். இதே ப்ரதீப் பாய்ஜால் தான் தனது ஓய்விற்குப் பின் நீரா ராடியாவுடன் கூட்டாக நுவோஸிஸ் நிறுவனத்தை ஆரம்பித்து அதே டாடாவுக்கும் ரிலையன்சுக்கும் தரகு வேலை பார்க்க ஆரம்பித்தார்.

பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவரான வாஜ்பாயின் நெருங்கிய உறவினரான ரஞ்சன் பட்டாச்சார்யா நீராவுக்குத் தேவையான காரியங்களை காங்கிரசிடம் சாதித்துக் கொடுக்க குலாம் நபி ஆசாத்துடன் தொடர்பில் இருந்துள்ளார்.

அரசின் பல்வேறு மட்டங்களில் வலுவான வலைப்பின்னல் கொண்ட நீராவைப் போன்று எண்ணிறந்த தரகர்களே அசையும் அரசு இயந்திரத்தின் போல்ட்டு நட்டுகளாய் உள்ளனர். ஆனால் எவருமே, நீரா ராடியாக்களுக்கான தேவை ஏன் வந்தது என்றோ, இந்தியாவில் இருப்பது ஒரே நீரா ராடியா தானா என்பதைப் பற்றியோ, இது போன்ற நீரா ராடியாக்களால் யாருக்கு லாபம் என்றோ கேள்விகளை எழுப்பவில்லை.

இருக்கும் இயற்கை வளங்களோ குறைவு – போட்டியோ அதிகம். அரசுக்கு வளங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வரம்புக்குட்பட்டது – அந்த வரம்பும் இவர்களே விரும்பி கையெழுத்திட்ட காட் ஒப்பந்தத்தின் விளைவு தான்.  இந்நிலையில் தரகு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் கடுமையான கழுத்தறுப்புப் போட்டிகளில் குறுக்குவழியில் சென்றாக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளுகிறது.

இது ஒரு பக்கமென்றால், உட்கட்சி ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்ட ஓட்டுக் கட்சித் தலைமைகளுக்கு யாருக்குப் பதவி என்பதை பிற எம்.பிக்களோ அல்லது இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட கட்சிக்காரர்களுக்கோ தெரிவிக்காமல் பின்வாசல் வழியே தனது குடும்பத்தினரை அமைச்சரவையில் நுழைத்து வைக்கவேண்டும் என்கிற முனைப்பு. இதில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் தராசின் ஒரே தட்டில் தான் அமர்ந்துள்ளனர். இந்த இடைவெளியைத் தான் நீரா ராடியாக்கள் நிரப்புகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், உலகமயதாசர்கள் பொதுவாக தனியார்மயத்தை உயர்த்திப் பிடிக்க அரசாங்க அதிகார மட்டங்களில் இருக்கும் இது போன்ற தரகர்களைக் குறைசொல்லி, எல்லா பொதுத்துறைகளும் தனியார்மயமாக்கப் பட்டு முதலாளிகளிடம் தாரை வார்க்கப்பட்டு விட்டால் இடைத்தரகர்களே ஒழிந்து போவார்கள் என்றும் அதற்கான தேவை இல்லாமல் போய் விடும் என்றும் சொன்னார்கள். இன்றோ எதார்த்தத்தில் தரகர்கள் செழித்துக் கொழிக்க வைத்திருப்பதே தனியார் முதலாளிகள் தான்.

ஐந்து கண்டங்களையும் ஆதிக்கம் செய்யும் முதலாளித்துவத்தின் நாடி நரம்புகளாசய் தரகர்கள்!

சென்ற ஆண்டின் முதல் காலாண்டு இறுதி வரையில் மட்டுமே ரிலையன்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் பார்பௌர் கிரிஃபித் & ரோஜர்ஸ் (Barbour Griffith & Rogers) எனும் அமெரிக்க நிறுவனத்திற்கு 1,90,000 டாலர்களைக் கொடுத்துள்ளது. இது எதற்கு என்று நினைக்கிறீர்கள்? ஈரானோடு பெட்ரோலிய வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களோடு அமெரிக்கா வர்த்தகத்தை முறித்துக் கொள்ளவும் அப்படி அமெரிக்காவில் தொழில் அலகுகளைக் கொண்டுள்ள நிறுவனங்களிடம் பெனால்டி விதிக்கவும் வகை செய்யும் மசோதா ஒன்றைக் கொண்டு வர அப்போது அமெரிக்க செனேட் முயற்சித்துக் கொண்டிருந்தது. செனேட் உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து அதிலிருந்து ரிலையன்ஸுக்கு விலக்குப் பெறவே இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் H1-B விசாக்களைப் பெறுவதற்கான விதிமுறைகளை கடினமாக்குவதைத் தாமதப்படுத்த நாஸ்காம் (National Association of Software Companies) எனும் இந்திய மென்பொருள் நிறுவனங்களின் முதலாளிகள் சங்கமும் அமெரிக்காவிலிருக்கும் அதிகாரவர்க்கத் தரகர்களுக்கு கோடிக்கணக்கில் வாரி வழங்கியுள்ளனர். தனியார்மயம் அமல் படுத்தப்படும் முன் இருந்த அரசுகளை “லைசென்சு ராஜ்” என்றும் அப்போது தொழில் தொடங்க நிறைய தடைகள் இருந்தது என்றும் இடைத்தரகர்கள் தேவைப்பட்டனர் என்றும் இதற்போது அப்படியான தடைகளோ தரகர்களோ இல்லாததால் சிரமமின்றி தொழில் தொடங்க முடிகிறது என்றும் சொல்லிக் கொள்ளும் இவர்கள், தமது லாப நலனுக்கு என்று வரும் போது சென்று நிற்பது அதே தரகர்களிடம் தான்.

நிரா ராடியா ரத்தன் டாடாவுடன் பேசியதைப் பதிவு செய்யப்பட்டதிலிருந்து வெறு சில உண்மைகளும் அம்பலமாகிறது. அதாவது, அனில் அம்பானிக்கு உள்நாட்டில் நிறைய கடன் என்றும் அவருக்குத் தற்போது உள்நாட்டிலிருந்து பணத்தைத் திரட்டுவது மிகவும் கடினம் என்றும் ராடியா டாடாவிடம் சொல்கிறார். அதற்கு டாடா, அது பற்றிய செய்திகள் ஏன் பத்திரிகைகளில் வெளியாவதில்லை என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் ராடியா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தினர், தமது நிறுவனங்களின் பெயருக்கு பங்கம் ஏற்படுத்தும் செய்திகள் ஏதும் பத்திரிகைகளில் வெளியாவதைத் தடுத்து நிறுத்துவதை உத்திரவாதப்படுத்திக் கொள்ள ஒரு தரகர்படையே வைத்திருப்பதாகவும், அவர்கள் பத்திரிகைகளுக்கு அளிக்கும் விளம்பரங்களை  வைத்து அப்படியான செய்திகள் வரவிடாமல் செய்து விடுகிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்.

இப்படி தமக்குச் சாதகமான “செய்திகளை” வரவழைத்தும் தேவைப்படாத “செய்திகளைத்” தடுத்து நிறுத்தியுமே தமது நிறுவனத்தின் பெயரை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். அதன் அடிப்படையில் இருந்தே கம்பெனிகளின் பங்கு மதிப்புகள் முதலீட்டாளர்களிடையே நிர்ணயம் ஆகிறது. இதற்கு வேறு பல காரணிகள் இருப்பினும், பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளுக்கான மதிப்பை அதன் மேல் நிலவும் “நல்லெண்ணமே” பெருமளவில் தீர்மானிக்கிறது. அந்த நல்லெண்ணம் என்பது இப்படிப்பட்ட தரகர்களாலேயே “உற்பத்தி” செய்யப்படுகிறது. தனியார்மயத்தை ஆதரித்து இணையதளங்களிலும் வலைப்பூக்களிலும் தொண்டைகிழியப் பேசிக் கொண்டிருக்கும் இணையத் தவளைகள் அப்பிராணித்தனமாய் நம்பிக் கொண்டிருப்பது போல் இவர்கள் எவரும் “Free & Fair” கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை.

பன்றியுடன் படுத்துப் புரண்டால் சந்தன வாசமா வீசும்? பன்னாட்டு முதலாளிகளோடும் உள்நாட்டு தரகு முதலாளிகளோடும் புழங்கி, அவர்கள் நலனுக்காகன கையாளாக செயல்படும் இந்திய அரசு முதலாளித்துவத்தின் சகல கசடுகளையும் வரித்துக் கொண்டுள்ளது. அமெரிக்க செனட் உறுப்பினர்களை வளைத்து தமக்குச் சாதகமான கொள்கைகளை வகுக்க, இந்திய அரசும் தரகர்களையே சார்ந்துள்ளது. இங்கே அரசின் நலன் என்பதை உள்ளூர் தரகு முதலாளிகளின் நலன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலாண்டும் பார்பௌர் கிரிஃப்பித் & ரோஜர்ஸ் எனும் தரகு நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணத்தை வாரி விட்டுக்கொண்டுள்ளனர். இதில் யார் தரகர்களுக்கு அதிக பணம் கொடுப்பது என்பதில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் கடும் போட்டி நிலவுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள் முதலாளித்துவ ஊடக வட்டாரங்களில்.

குவாத்ரோச்சி எனும் பெயரை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். 84ஆம் ஆண்டு இந்தியாவிற்கு 30 கிலோ மீட்டர் ரேன்ஜ் கொண்ட ஹவிட்ஸர் வகை மோர்ட்டார் பீரங்கிகள் தேவைப்பட்ட போது ப்ரென்ச் தேசத்தின் சோஃப்மா வகை பீரங்கிகள் தான் முதலில் சோதனைகளின் அடிப்படையில் தேர்வானது. சோஃப்மா 29.2 கிலோ மீட்டர் வரை குண்டுகள் எரியும் திறன் கொண்டதாகவும் போஃபர்ஸ் பீரங்கியோ 21.5 கிலோ மீட்டர்கள் வரை தான் குண்டுகளை எரிய முடிந்தது என்றும் சோதனைகளில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் இராணுவ அதிகாரிகள் முதலில் போஃபர்ஸை நிராகரிக்கிறார்கள். இடையில் புகும் குவாத்ரோச்சி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியாவுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி

போஃபர்ஸை தேர்வு பெற வைக்கிறார். இதற்காக அவர் ஏ.ஈ சர்வீஸஸ் எனும் டுபாக்கூர் கம்பெனி ஒன்றையும் வைத்திருந்திருக்கிறார். அதே போன்று அதிகார மட்டத்திலும் அரசியல் மட்டத்திலும் தரகு வேலை செய்யும் நிறுவனங்களைத் தான் இப்போது ராடியாவும் நடத்தி வருகிறார்.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில், சுதீர் சவுத்ரி மற்றும் சுரேஷ் நந்தா எனும் இரண்டு இடைத்தரகர்கள் இசுரேல் இந்திய இராணுவத்திற்கு விற்றுள்ள ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள யுத்த தளவாடங்கள் சம்பந்தமான பரிவர்த்தனைகளில் கமிஷனாக மட்டுமே நூற்றுக்கணக்கான கோடிகளை அடித்துள்ளது அம்பலமானது. சுதீர் சவுத்ரி மேல் சி.பி.ஐ விசாரணை செய்யத் துவங்கியவுடன் அவர் பாதுகாப்பாக லண்டனில் சென்று மறைந்து கொண்டார். இசுரேலின் முக்கிய ஆயுத தயாரிப்பு நிறுவனங்களிடம் பெருமளவில் தரகுக்கூலி பெற்றிருந்த சுதீர், அதிலொரு பகுதியை இந்திய இராணுவத்தின் உயரதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுத்து ஒப்பந்தங்களை இசுரேல் நிறுவனங்களுக்கு சாதகமாக முடித்துக் கொடுத்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க, 2001ஆம் ஆண்டே ஆயுத கொள்முதலில் இடைத்தரகர்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் விதிகளை இந்தியா தளர்த்தி விட்டது. இப்போது இந்தியா லட்சக்கணக்கான கோடிகளைக் கொட்டி கொள்முதல் செய்யும் ஆயுதங்களை ஏஜெண்டுகள் மூலமாகவே பன்னாட்டு ஆயுத வியாபாரிகள் விற்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு மட்டுமல்ல; அரசிடம் இருந்து தரகுக் கூலியும் கிடைக்கிறது. இப்படி தரகர்கள் மூலமாக சர்வதேச ஆயுத வியாபாரிகளிடம் இருந்து அள்ளி வந்திருக்கும் கழுதை விட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டு தான் “நானும் ஒரு பேட்டை ரவுடி தான்” என்று துள்ளுகிறது இந்தியா.

முதலாளித்துவம் என்பதே அழுகுணி ஆட்டமாக இருப்பதால், அவர்களுக்கிடையிலான நாய்ச்சண்டைகளில் சட்டம், அதிகார வர்க்கம் போன்றவைகளை வளைக்க இடைத்தரகர்கள் தேவைப்படுகிறார்கள். ஆக, ராடியாக்களின் தேவையென்பது முதலாளித்துவத்தின் இயல்பு. முதலாளித்துவத்தின் சகல கசடுகளையும் அப்படியே வரித்துக் கொண்டிருக்கும் ஓட்டுப் பொறுக்கி ஆளும் வர்க்கக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக உள்கட்சி ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டதால், திரைமறைவு காய் நகர்த்தல்களைச் செய்ய தரகர்கள் தேவைப் படுகிறார்கள்.

மொத்தத்தில் தரகுத்தனம் என்பதன் விளைநிலமாக இருப்பதே இந்தப் போலி ஜனநாயக அமைப்பு முறை தான். மக்களின் பங்கேற்பு என்பது எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி என்கிற தேர்வு மட்டும் தான். கொலைகாரனுக்கும் கற்பழிப்பாளனுக்கும் இடையில் யார் நல்லவன் என்று தேர்ந்தெடுப்பதற்கான ‘உரிமையை’ ஜனநாயகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இந்தப் போலி ஜனநாயகத்தின் அழிவும், உண்மையான ஜனநாயாகப் புரட்சியுமே இழிந்த இந்த நிலைக்கு ஒரே மாற்று.

__________________

– தமிழரசன்
__________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. ஸ்பெக்ட்ரம் ஊழல் : தலைமைச் செயலகமா தரகர்களின் தொழுவமா ?…

    ஆர்.டி.ஓ அலுவலகங்களின் கரைவேட்டி தரகர்கள் அல்ல, அழகான சூட்டுக்கோட்டுகளில், கச்சிதமான மேக்கப்புடன் பவனி வரும் இவர்கள் லாபியிஸ்ட்டுகள் என ‘கௌரவமாக’ அழைக்கப்படுபவர்கள்…

    • இது என்ன விதத்தில் ‘குட் ஆர்டிகில்’ ? சோவித் யுனியனிடம் ஆயுதங்கள் வாங்கியபோது எங்கிருந்தது இந்த தரகர்கள் பற்றிய அறவுணர்ச்சி? அல்லது இன்றைய மாவோயிச தீவிரவாதிகள் தரகர்கள் இல்லாமலே ஆயுதங்கள் வாங்கி விடுகின்றானா? எல்லா வியாபாரத்துக்கும் தரகர்கள் தேவையே. தனி மனிதன் வீடு வாங்குவது முதல் நாடு பொருட்கள் பெறுவது வரை — தரகர்களின் உண்மையான பணி சரியான தகவலைத் தருவதே.

      சொந்தக் கைக்காசை போட்டு உழைத்து வியாபாரம் செய்து விற்பனைக்கு அலைந்தால் தரகர்களின் அருமை புரியும். எப்பவுமே உண்டியல் குலுக்கி அடுத்தவன் பிச்சை சோற்றில் வாழும் போலி பொதுவுடைமை வாதிகளே, உங்களுக்கு கண்டிப்பாய் புரியாது.

      • ரிலையன்ஸ் ப்ரஷை நியாயப்படுத்தும் போது வில்லனாகும் “இடைத்தரகர்” – நீராவை நியாயப்படுத்தும் போது ஹீரோவாகி விடுகிறார்.

        வாட் எ ஜோக், வாட் எ ஜோக்?

        உண்மையில், கமிஷன் மண்டி வியாபாரியையும், வீட்டுத் தரகரையும் நீரா ராடியாவையும் குவாத்ரோச்சியையும் ஒரே தட்டில் வைப்பது முந்தையவர்களை அவமதிப்பதாகும். இவர்கள் பொருட்களை கைமாற்றி விடுவதில் காசு பார்க்கிறார்கள் – அவர்கள் தேச நலனைக் கைமாற்றி விடுதில் ஆதாயம் பார்க்கிறார்கள்.

        • (பதிலளிக்க தாமதமாகிவிட்டது…மன்னிக்கவும்)

          தரகர்களின் ‘லெவல்’ பார்த்துதான் உங்கள் கோபமா ? அந்த லெவல் என்னவென்று கொஞ்சம் தெளிவாக சொல்வீர்களா ? உங்களால் முடியாது. ஏனென்றால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு லெவல் மீது கோபம் இருக்கும் (எனக்கு தெரிந்த ஒரு கம்யூனிஸ்ட் தோழர் சொன்னார் – ௫ 5 லட்சம் மேல் விலையுள்ள எல்லா சொத்துகளையும் அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று – அதென்னடா குறிப்பா அந்த நம்பர் என்றால், அவர் வீட்டின் விலை ஐந்து லட்சமாம் !!)

          தரகர்கள் சில நேரங்களில் இன்றியமையாத தேவை, சில நேரங்களில் இல்லை. விற்பவரும் வாங்குபவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருந்தால் வியாபாரம் தானாகவே நடக்கும். (அதற்கு தான் விளம்பரங்கள் உதவுகின்றன). தெரியாத பொழுதில் தரகர்கள் தேவை. உங்களை சுற்றி பாருங்கள் – இந்த விடயத்தை நன்கு புரிந்தவர்களே வியாபாரத்தில் வெற்றி பெற்றிருப்பார்கள்.

          நீரா ராடியாவோ கறிகாய் ஏஜென்ட் குப்பனோ , தரகர்/சேல்ஸ்மென் யாராக இருந்தாலும் வாங்கும் நபருக்கே முழு உரிமை. வியாபாரத்தில் ஈடுபடுவது அரசாங்கம் என்றால் நாட்டு நலன் கெடாமல் பார்த்து கொள்வது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின், எம்.பீ.க்களின் கடமை. அங்கே போய் சத்தம் போடுங்கள், இங்கே கத்த வேண்டாம்.

  2. ///இழிவுபடுத்தும் இந்த மறுமொழி இந்த நிமிடம் வரை பாரம்பரியமிக்க ‘தேசிய’ நாளேட்டின் இணையதளத்தில் மட்டுறுத்தப்படாமல் இருக்கிறது.////
    உஙள் கட்டுரை உஙள் சிந்தனையை சந்தேகபட வைக்கிறது யாரொ ஒரு ஆள் மேற்படி உளருகிறான் உடனெ அதை எடுத்து போட்டு அய்யோ கிய்யோ முறையோ என்று கத்துவது உங்கள் சிந்தனை ஒரு அள்வுக்கு மேல் போகமுடியது என்று காட்டுகிறது

    • சரியாக சொன்னீர்கள் நாகராஜ்.

      எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பின்னூட்டமிட்ட அரைலூஸுகளை பெரிதாக பொருட்படுத்தி கட்டுரையாளர் எழுதியது ஒருபுரமிருக்க, அந்த அரைலூஸு குறிப்பிட்ட “மதராஸிகள்” எல்லோரும் (அ. ராசா, நீதிபதி பாலகிருஷ்ணன், சத்யம் ராமலிங்க ராஜு, சுபிக்ஷா சந்திரசேகர், ரெட்டி சகோதரர்கள்) ரொம்ப யோக்கியமானவர்களா?

  3. Ram Kameswaran;R Nagaraj;rammy;ஒரு தமிழ் வலதுசாரி,வகையறக்களின் கோபத்தைக் கிளறியிருப்பதே இக்கட்டுரையின் வெற்றி.அவர்கள் கோபப்பட்டுத்தான் தீர வேண்டும்.ஏனென்றால் இவர்கள் அனில் அம்பானியின் பத்திரிக்கைத் தரகர்கள் போல தனியார் மய ஊழல் பொறுக்கிகளின் இணையதளத் தரகர்கள்.கட்டுரையின் மையப் பொருள் குறித்து விவாதிக்கத் துப்பில்லை இவர்களுக்கு.இக்கட்டுரையி்ல் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் அம்பானி,டாடா,அருண்சோரி,அத்வானி,சோ,இந்துராம்………….வகையறக்கள் யோக்கியர்களா?ராஜா அலுவலகத்தில் சோதனை நடத்தும் சிபிஜ ஏன் டாடா,அம்பானி அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை?ஏன் ஊழல் அலைக்கற்றை ஒதுக்கீட்டினை மத்திய அரசு ரத்து செய்யவில்லை? நேர்மை இரு்ந்தால் பதில் சொல்லுங்கள்! அடுத்தவர் சோற்றில் வாழும் கிரிமினல்கள்,அவர்களின் மூன்றாந்தர இணையதளத் தரகர்கள் யார் என்பது புரியும்!

  4. ///இழிவுபடுத்தும் இந்த மறுமொழி இந்த நிமிடம் வரை பாரம்பரியமிக்க ‘தேசிய’ நாளேட்டின் இணையதளத்தில் மட்டுறுத்தப்படாமல் இருக்கிறது.////
    //உஙள் கட்டுரை உஙள் சிந்தனையை சந்தேகபட வைக்கிறது யாரொ ஒரு ஆள் மேற்படி உளருகிறான் உடனெ அதை எடுத்து போட்டு அய்யோ கிய்யோ முறையோ என்று கத்துவது உங்கள் சிந்தனை ஒரு அள்வுக்கு மேல் போகமுடியது என்று காட்டுகிறது // ………………என்ன செய்வது கட்டுரையாளர் இந்து மதத்தில் இருப்பார் போலத் தெரிகிறது…..இந்து மதம்தான் பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் சிந்திப்பதைத் தடுக்கிறதே.சூத்திரன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொல்கிறதே!சிந்தனை ஒரு அள்வுக்கு மேல் போக கட்டுரையாளர் பகுத்தறிவுவாதியாக மாற முயற்சிக்கலாம்.

  5. //எல்லா வியாபாரத்துக்கும் தரகர்கள் தேவையே. தனி மனிதன் வீடு வாங்குவது முதல் நாடு பொருட்கள் பெறுவது வரை — தரகர்களின் உண்மையான பணி சரியான தகவலைத் தருவதே.////தரகர்கள் சில நேரங்களில் இன்றியமையாத தேவை//அச்சச்சோ……… தமிழ் வலதுசாரிக்குத் தெரிந்த இந்த உண்மை விவசாயிகளுக்குத் தெரியாமல்தான் 2,16,000 பேர் தற்கொலை செய்து கொண்டார்களோ? அல்லது விவசாயத்தை வியாபாரமாகச் செய்யத் தெரியவில்லையா?2,16,000 பேர் தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணம்? அவர்கள் உழைக்கவில்லையா? அல்லது அவர்கள் உழைப்பை ,இரத்தத்தை தரகுக் கிரிமினல் பொறுக்கிகள், தனியார் மய ஊழல் கொள்ளையின் நாயகர்கள் உறிஞ்சியாதாலா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க