Saturday, July 20, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு !

சுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு !

-

சுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு

அலைக்கற்றை ஊழலின் தொகை கற்பனைக்கு எட்டாததாகவும் பிரம்மாண்டமானதாகவும் இருப்பதே, அந்த ஊழல் மக்கள் மத்தியில் பெரும் முக்கியத்துவம் பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ஆனால், தொலைபேசித் துறையில் கிடைக்கின்ற வருவாயின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும், இந்தத் துறையின் போர்த்தந்திர ரீதியான முக்கியத்துவம்தான் ஏகாதிபத்தியங்கள் இதன் மீது தங்கள் கவனத்தைக் குவிப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

தாராளமயக் கொள்கைகளில் தலையாயது நிதித்துறை தாராளமயம். உலகெங்கிலும் உள்ள பங்குச்சந்தைகள் மற்றும் நாணயச்சந்தைகள் உள்ளிட்ட நிதிச்சந்தையை ஒன்றிணைப்பதற்கும், ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் சூதாட்டத் தேவைக்கு ஏற்ப, பல இலட்சம் கோடி டாலர் பணம் அன்றாடம் உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு மின்னலைக் காட்டிலும் வேகமாகப் பாய்வதற்கும் அடிப்படையாக இருப்பது தகவல் தொழில்நுட்பத்துறை. நிதிச்சந்தையில் மட்டுமின்றி பல்வேறு சேவைத்துறைகளிலும், உற்பத்தித் துறையிலும் உலகமயமாக்கத்தை அமல்படுத்துவதற்கும்; உற்பத்தி, உழைப்புப் பிரிவினை, சந்தை ஆகியவற்றை உலகளவில் ஒன்றிணைப்பதற்கும் அடிப்படையாக இருப்பது தகவல் தொழில்நுட்பத் துறை.

எனவேதான் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளில், தொலைபேசி மற்றும் தகவல் தொடர்புத் துறையை தனியார்மயமாக்குவதற்கு ஏகாதிபத்தியங்களும் ஆளும் வர்க்கங்களும் முதன்மை முக்கியத்துவம் அளித்தன என்பதுடன், மிகப்பெரும் அளவு இலாபத்தைத் தரக்கூடியதாகவும் இருப்பதால் இந்தத் துறை முதலாளி வர்க்கத்தைக் கவர்ந்திழுத்தது.

கடந்த 15 ஆண்டுகளாக உள்நாட்டு – வெளிநாட்டுப் பெரு முதலாளிகளின் கொள்ளைக்கும் சூறையாடலுக்குமான களமாகவும் தொலைத் தொடர்புத் துறை இருந்து வந்துள்ளது.

காட் ஒப்பந்தத்தின்படி, தொலைத் தொடர்புத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் நுழைந்து சூறையாடுவதற்கேற்ப தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. அரசுத்துறையாக இருந்த தொலைத் தொடர்புத் துறையை அரசின் முழுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்ததுடன், டெல்லி மற்றும் மும்பை நகரங்களின் சேவைக்கென எம்.டி.என்.எல். உருவாக்கப்பட்டது. தொலைபேசித்துறை என்ற அரசுத்துறை, பி.எஸ்.என்.எல் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனமாக்கப்பட்டது.

நாடெங்கும் பூமிக்கடியில் செயற்கைஇழைக் கம்பி வடங்களை அமைப்பது போன்ற அடிக்கட்டுமானப் பணிகளைச் செய்வதற்குப் பகிரங்க ஏலத்தை நடத்தி, 1995-இல் இத்துறையில் தனியார்மயத்தைத் துவக்கி வைத்தது ராவ் அரசு. ரூ. 85,000 கோடியை ஏலத் தொகையாகக் குறிப்பிட்ட ஹிந்துஸ்தான் ஃப்யூச்சரிஸ்டிக் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு உரிமம் அளித்தார், தொலைபேசித்துறை அமைச்சர் சுக்ராம். உரிமத் தொகையைக்கூடச் செலுத்த முடியாத அந்நிறுவனத்துக்காக ஏல விதிகளைத் திருத்தினார். மற்றவர்களைக் காட்டிலும் மிக அதிகமாக ஏலத்தொகையைக் குறிப்பிட்டு, 9 மாநிலங்களுக்கான அடிக்கட்டுமான பணிகளை ஏலமெடுத்த இந்நிறுவனம், வருவாய் வரக்கூடிய டில்லி உள்ளிட்ட 3 மாநிலங்களைத் தவிர, பிற மாநிலங்களின் கட்டுமானப் பணியிலிருந்து விலகிக் கொண்டது. இதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 20,000 கோடி ரூபாய்.

இந்நிறுவனத்தின் மூலம் அமைச்சர் சுக்ராம் ரூ.1,500 கோடிகளைச் சுருட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 1995 – இல் அவரது வீடுகளிலிருந்து கத்தைகத்தையாக ரூ.3.62 கோடிப் பணத்தை மையப் புலனாவுத் துறையினர் வாரிச் சென்றதுடன் வழக்கும் தொடுத்தனர். 2009-இல் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, சுக்ராமுக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.

அடுத்த பத்தாண்டுகளில் ரூ.9,45,000 கோடி வருவாய் தந்திருக்கக் கூடிய பல்வேறு தொலைத்தொடர்பு சேவைப் பிரிவுகள் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் வெறும் ரூ.1,15,000 கோடிக்கு அடிமாட்டு விலையில் விற்கப்பட்டதையும், அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமத் தொகை பாக்கியைக்கூடச் செலுத்தாத இத்தனியார் நிறுவனங்களின் நிலுவைத் தொகை ரூ.8000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதையும் அப்போதைய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை சுட்டிக் காட்டியது.

தனியார்மயக் கொள்கையின் கீழ் அரசுத்துறை நிறுவனங்களைக் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் விழுங்க வகை செய்வது மட்டுமின்றி, தொலைபேசி, மின்சாரம் போன்ற அரசுத்துறைகளை படிப்படியாக ஒழித்துக்கட்டுவதற்கான ஏற்பாட்டை எல்லா துறைகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதும், உலக வர்த்தகக் கழகத்தின் விதியாகும். இதன்படி ‘ஏற்கெனவே அரசு ஏகபோகமாக இருந்துவந்த தொலைபேசித் துறை, வலிமையான உள்கட்டுமானத்தையும் மூலதன பலத்தையும் பெற்றிருப்பதால், புதிதாக இத்துறையில் நுழைந்துள்ள தனியார் முதலாளிகள் அதனுடன் போட்டி போட இயலாது என்றும், எனவே கட்டண விகிதத்தையும் ஒதுக்கீடுகளையும் முறைப்படுத்திக் கொடுத்துச் சமமான ஆடுகளத்தை உத்திரவாதம் செய்யவேண்டுமென்றும்’ கூறிக்கொண்டு தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்-TRAI) ஏற்படுத்தப்பட்டது.

கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட இந்த அமைப்பு 1997-இல் தேவ கவுடா ஆட்சியில் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட நாள் முதல் அரசுத் தொலைபேசித் துறையின் கால்களை உடைத்து முடமாக்குவதே இதன் பணியாக இருந்தது. மொபைல் தொலைபேசிச் சேவை தொடங்கப்பட்ட ஆரம்ப நாட்களில் ஒரு நிமிடத்துக்கு 15 ரூபாய், 16 ரூபாய் எனக்கட்டணம் வசூலித்து கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையிட்டுக் கொண்டிருந்தபோதே, சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தின் மூலம் மலிவான கட்டணத்தில் கைபேசி சேவையை வழங்கும் தொழில்நுட்பத்தை பி.எஸ்.என்.எல். பெற்றிருந்தது.

எனினும், தனியார் முதலாளிகளின் கொள்ளையை ஊக்குவிக்கும் பொருட்டு, கைபேசி சேவையில் பி.எஸ்.என்.எல். நுழையக்கூடாது என்று ட்ராய் அமைப்பின் மூலம் தடுத்து நிறுத்தினார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துப் போராடிய பின்னரே கைபேசி சேவையில் பி.எஸ்.என்.எல். அனுமதிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் நுகர்வோரிடமிருந்து தனியார் முதலாளிகள் அடித்த கொள்ளை பல்லாயிரம் கோடிகள் ஆகும்.

இது போதாதென்று உரிமக் கட்டணங்கள் மிக அதிகமென்றும், தாங்கள் மூலதனத்தைத் திரும்பப் பெறப்போவதாகவும் மிரட்டின அமெரிக்க தொலைபேசி நிறுவனங்கள். உடனே, தேவகவுடா ஆட்சியில் (1996-98) தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த பேனி பிரசாத் வர்மா (காங்.), முன்பணமே வாங்காமல் பல நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமங்களை வழங்கினார். பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் ஒவ்வொரு நிர்ப்பந்தத்துக்கும் ஏற்ப அவர்களுக்குச் சலுகைகள் வாரி வழங்கப்பட்டன.

பின்னர் பா.ஜ.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த அருண்ஷோரி, அரசுத்துறை நிறுவனங்களைக் கரப்பான் பூச்சிகள் என்று வெறுப்பைக் கக்கியது மட்டுமின்றி, பி.எஸ்.என்.எல்.-இன் பங்குகளை விற்றபோது அவற்றின் உண்மை மதிப்பை வேண்டுமென்றே குறைத்துக் காட்டினார். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், புதிய தொலைத் தொடர்புக் கொள்கை அறிவிக்கப்பட்டபோது, இக்கொள்கையால் அரசுக்கு அடுத்த பத்தாண்டுகளில் ரூ.50,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணக்குத் தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டியது. இருப்பினும், இந்தக் கொள்கைகூட மேலும் தளர்த்தப்பட்டது. குறிப்பிட்ட தொகையை உரிமக் கட்டணமாகச் செலுத்துவதாகக் கூறிப் பல்வேறு மாநிலங்களில் கைபேசி சேவையைத் தொடங்கிய தனியார் நிறுவனங்கள், தாங்கள் எதிர்பார்த்த அளவு வருவாய் வரவில்லை என்று கூறி ஒப்புக்கொண்ட உரிமக் கட்டணத்தை செலுத்த மறுத்தனர். உடனே, தமக்கு எவ்வளவு வருவாய் வருகிறதோ, அதில் குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும் என்று தனியார் முதலாளிகளுக்கு சலுகை வழங்கி, பல்லாயிரம் கோடி கொள்ளைக்கு கால்கோள் இட்டது பா.ஜ.க. அரசு. அப்போது தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர், ராம்விலாஸ் பஸ்வான்.

அதன் பின் அமைச்சரான பிரமோத் மகஜன், ரூ.100 வருவாய் ஈட்டினால் ரூ.2 செலுத்தினால் போதும் என வருவாய்ப் பகிர்வை 2 சதவீதமாகக் குறைத்தார். கைபேசி சேவைகளில், ஜி.எஸ்.எம். தொழில்நுட்பச் சேவைக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு இருந்ததால், ஏற்கெனவே சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் இயங்கிவந்த நிறுவனங்கள் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்துக்கு மாறிக்கொள்ள முயற்சித்தன. ஆனால், விதிப்படி இப்புதிய சேவைக்குப் புதிய உரிமம் பெற வேண்டும். இருப்பினும், சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் இயங்கி வந்த ரிலையன்ஸ் நிறுவனம், ஜி.எஸ்.எம். தொழில் நுட்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்குச் சட்டவிரோதமாக தொழில் நடத்த அரசு தாராள அனுமதி அளித்தது. தொலைத்தொடர்புத் துறை தாவாவுக்கான தீர்ப்பாயம் இது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்த பின்னர், மிக அற்பமாக ரூ.485 கோடி மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது. பின்னர், சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தைக் கொண்ட நிறுவனங்கள் கொல்லைப்புறமாக ஜி.எஸ்.எம். செல்போன் சேவையை வழங்க 2001-ஆம் ஆண்டில் தாராள அனுமதி வழங்கப்பட்டது. ரிலையன்சின் ஆதாயத்துக்காகவே அமைச்சர் பிரமோத் மகஜனால் இந்தக் கொள்கை கொண்டுவரப்பட்டது.

வெளிநாடுகளுக்கான தொலைத் தொடர்புச் சேவையை அளித்து வந்த  வி.எஸ்.என்.எல். எனும்  இலாபமிக்க அரசுத்துறை நிறுவனத்திடம் ஏறத்தாழ ரூ.3,000 கோடி உபரி இருந்த போதிலும், இந்நிறுவனத்தின் 25 சதவீதப் பங்குகள் அடிமாட்டு விலையில் ரூ.1439 கோடிகளுக்கு டாடாவுக்கு விற்கப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகக் கட்டுப்பாடு, அதன் 25 சதவீதப் பங்குகளை வாங்கும் தனியார் முதலாளிகளுக்கே தரப்படும் என்று பா.ஜ.க அரசு ‘கொள்கை’ முடிவு எடுத்திருந்ததால், டாடாவின் பிடியில் வி.எஸ்.என்.எல். சிக்கிக் கொண்டது. நிர்வாகம் தன் கைக்கு வந்த மறு கணமே, அந்நிறுவனத்தின் கையிருப்பி லிருந்து ரூ.1200 கோடிகளை எடுத்து, பங்குச்சந்தையில் கவிழ்ந்து கிடந்த டாடா டெலிசர்வீசஸ் என்ற தனது நிறுவனத்தின் பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்கும் மோசடியைப் பகிரங்கமாக செய்தார், டாடா.

இந்த முறைகேடுகள் அனைத்தும் தொலைத்தொடர்புத் துறையில் நடந்துள்ள கொள்ளைக்கு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இவையன்றி, நேரடியான கிரிமினல் நடவடிக்கைகளிலும் கார்ப்பரேட் கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். வாடிக்கையாளர்களை மோசடி செய்வது, கேட்டால் அச்சுறுத்துவது, பி.எஸ்.என்.எல்.-இன் தொலைத் தொடர்பு இணைப்புகளையும் நிலத்தடி கம்பித் தடங்களையும் சேதப்படுத்துவது, இதை எதிர்க்கும் அரசுத்துறை ஊழியர்களைத் தாக்குவது – என ரிலையன்ஸ், ஏர்டெல் நிறுவனங்களின் குண்டர்கள் எண்ணற்ற அட்டூழியங்களில் ஈடுபட்ட போதிலும், இக்கிரிமினல் நிறுவனங்களின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாகக் காட்டும் கிரிமினல் வேலையைச் செய்து வந்த திருட்டு கால் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தைக் கையும் களவுமாக ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்தனர் வாடிக்கையாளர்கள். பொருளாதார மோசடியாக மட்டுமின்றி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது உள்ளிட்ட பாரிய கிரிமினல் குற்றப் பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய இந்தக் குற்றத்துக்கு, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1600 கோடி என்று மதிப்பிடப்பட்டது. இந்தத் தொகையைக் கூட முழுமையாக வாங்காமல் 600 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டது அரசு. அம்பானியுடன் இந்தக் கட்டப் பஞ்சாயத்தைப் பேசி முடித்தவர், இத்துறையின் அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 15 ஆண்டுகளில் இத்துறையில் நடைபெற்றுள்ள கொள்ளைகளுக்குக் கணக்கு வழக்கில்லை. உயர் தொழில்நுட்பத் துறையாக இருப்பதால் இதில் நடைபெறும் கொள்ளைகளை வல்லுநர்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்ற நிலையையும் முதலாளிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனினும், அரசுத் தொலைபேசித் துறையின் தொழிற்சங்கங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வலது, இடது போலி கம்யூனிஸ்டுகள் இத்தகைய கொள்ளைகளுக்கு எதிராக ஊழியர்களைத் திரட்டி போராடியதோ, மக்கள் மத்தியில் கொண்டு சென்றதோ இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இவர்கள் வெளியிலிருந்த ஆதரவு கொடுத்த காலத்தில்தான் தற்போதைய அலைக்கற்றை ஊழல் உள்ளிட்ட அனைத்தும் நடந்துள்ளன. எனினும், தற்போது கணக்குத் தணிக்கை அறிக்கை வெளிவந்ததை ஒட்டி இப்பிரச்சினை பெரிதானவுடன், “நாங்கதான் பிரதமருக்கு இதுபற்றி முதலில் கடிதம் எழுதினோம்” என்று வெட்கங்கெட்டுப்போ, கருணாநிதி பாணியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அரசுத்துறையான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவற்றை நிர்வகிக்கத் தலைமை இயக்குனர் பதவிக்குத் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த இயக்குனர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘திருடன் கையில் பெட்டிச் சாவியைக் கொடுப்பது’ என்பது கொள்கை முடிவாகவே எடுக்கப்படுவதால், இனி கார்ப்பரேட் திருடர்கள் அரசு சொத்தைக் ‘களவாட’ வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு ஆ.ராசா போன்ற அமைச்சர்களின் தயவும் அவர்களுக்குத் தேவைப்படாது என்பதால், ‘ஊழல்’ குறித்த பேச்சும் இனி எழாது என்று நம்புவோமாக!

__________________________________________________________

– பாலன், புதிய ஜனநாயகம், ஜனவரி – 2011

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. சுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு !…

    தொலைபேசித் துறையில் கிடைக்கின்ற வருவாயின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும், இந்தத் துறையின் முக்கியத்துவம்தான் இதன் மீது ஏகாதிபத்தியங்கள் கவனத்தைக் குவிப்பதற்குக் காரணமாக இருக்கிறது….

  2. தெளிவான பார்வை. புரிந்தவர்கள் பாக்யவான்கள். புரியாதவர்கள் கோடிகளுக்குப் பின்னால் பூஜ்யங்களை எண்ணத் தெரியாமல் தெருக்கோடியில் இருந்து செய்தி தாள்களில் படித்து விட்டு நகர்பவர்கள்.

  3. தவறு! புரியாதவர்களே பாக்கியவான்கள்.புரிந்துகொண்டு நாம் ஒன்றையும் கிழித்துவிட போவதில்லை.
    மாறாக நிம்மதி இழந்து புலம்புவதே மிச்சமாக இருக்கும்.

  4. ராஜீவ் கொண்டு வந்த தொலை பேசி புரட்சி … இந்த அளவுக்கு லஞ்சம் வரும் என்று அவர் கூட நினைத்திருக்க மாட்டார்…. ஆனால் இந்த துறை இவ்வளவு தொழில் நுட்பத்தில் முன்னேறியதில் அவர் நண்பர் சாம் பெதூர்தா போன்ற வல்லுனர்களின் பங்களிப்பும் உண்டு

  5. ஒரு சாதாரண குடிமகன் எப்படியெல்லாம் ஏமாற்ற்றபடுகிறான் என்பதை தெரிந்துகொள்ளவாவது உதவும்..

  6. நாம்… நமக்காகவாவது… நம்மை சுற்றிநடக்கும் அரசியலை உற்றுநோக்கவேண்டியத்தின் அவசியத்தை உணர்த்துவதாகவும் இருந்தது..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க