privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்பினாயக் சென்னை விடுதலை செய்! சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது!!

பினாயக் சென்னை விடுதலை செய்! சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது!!

-

மனித உரிமைப் போராளி மரு. பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை!
விடுதலை கோரி சென்னையில் சாலை மறியல் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர்
90 பேர் கைது

பினாயக்சென்னை விடுதலை செய் சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது

மருத்துவர் பினாயக் சென்னுடைய விடுதலையைக் கோரி சாலை மறியல் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உட்பட 90 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய துணைத் தலைவரும், சத்தீஸ்கர் மாநிலத்தின் பொதுச் செயலருமாகிய மருத்துவர் பினாயக் சென்னுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

06.01.2011 வியாழனன்று முற்பகல் 10.30 மணியளவில் சென்னை உயர்நீதி மன்றம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு தமிழகம் தழுவிய அளவில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய தினம் சென்னை மாநகரில் ஒட்டப்பட்டிருந்த மறியல் போராட்டச் சுவரொட்டிகளை  தேடித்தேடி காவல்துறை கிழித்து கிழிப்பு போராட்டம் நடத்தியது. ம.உ.பா. மைய சென்னை வழக்கறிஞர்கள் கிழிப்பு வீரர்களைக் கையும் களவுமாகப் பிடித்து கடுமையாக எச்சரித்த பின்னரே அப்பணியைக் கைவிட்டனர். மறியல் அன்று காலை முதலே சென்னை உயர்நீதி மன்ற வளாகம் முன்பு ஏராளமான போலீசு படை குவிக்கப்பட்டிருந்தது. உயர் அதிகாரிகளுக்கும் பஞ்சமில்லை. பிப்ரவரி 19 உயர்நீதி மன்ற வழக்கறிஞர் போராட்டம், கருணாநிதிக்கு ம.உ.பா. மைய வழக்கறிஞர்கள் கருப்புக் கொடி காட்டியது போன்ற கடந்த கால அனுபவங்கள் காவல் துறையினரை அங்கே குவித்து விட்டது போலும்.

பினாயக்சென்னை விடுதலை செய் சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது
மரு. பினாயக் சென்னை நிபந்தனையின்றி விடுதலை செய்! ஆயுள் தண்டனையை ரத்து செய்! என்ற மைய முழக்கத்துடன் மறியல் போராட்டம் தொடங்கியது.

பழங்குடி மக்களுக்கு மருத்துவம் செய்த
பினாயக் சென் தேசத் துரோகியாம்,
அவருக்கு ஆயுள் தண்டனையாம்,
போபாலில் 25000 பேரைக் கொன்ற
கார்பைடு முதலாளிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை,
உடனே ஜாமீனாம்.
என்னடா ஜனநாயகம், வெங்காய ஜனநாயகம்,
அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி, சட்ட விரோத சல்வாஜுடும், போலி என்கவுண்டர் சாம்ராஜ்யம்

என்று பாசிஸப் பேயாட்டமாடும் மத்திய, மாநில அரசுகளை அம்பலப்படுத்திய முழக்கங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பினாயக்சென்னை விடுதலை செய் சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது

ம.உ.பா மையத்தைச் சேர்ந்தவர்களோடு மேலும் சுமார் 50 பேர் இணையவே மறியல் போர் வலுத்தது. போலீசுக்கு இது மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்துக் கொள்ளுங்கள், கைது செய்யவில்லை என்று போலீசு பவ்யமாகக் கேட்டுக்கொண்டது. மறியல் தொடரும், கைது செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்து பிராட்வே நாற்சந்தியை நோக்கி ஊர்வலம் சென்றது.

‘மருத்துவர் பினாயக்சென் ஒரு ஜனநாயகவாதி. அவர் அரசு பயங்கரவாதத்தைப் போலவே மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தையும் கண்டித்தார். எனினும், அரசு பயங்கரவாதத்தின் அத்துமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு மருத்துவ உதவியும் அளித்தார். சிறைக் கைதிகளுக்கு அரசின் அனுமதியோடு தொடர்ந்த சிகிச்சை அளித்து வந்தார். நாராயண் சன்யால் என்ற மாவோயிஸ்ட் தலைவர் சர்க்கரை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கைதியாக சிறையிலிருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்ததைப் பொறுக்காத சத்தீஸ்கர் அரசு, மாவோயிஸ்டுகளுக்கு உதவி செய்தார் என்ற பொய்யான குற்றச் சாட்டின் கீழ் சத்தீஸ்கர் மக்கள் சிறப்பு பாதுகாப்புச் சட்டம் என்ற ஆள்தூக்கிச் சட்டத்தின் கீழ் தேசத்துரோக (124A) வழக்குப் போட்டு பினாயக் சென்ஐ கைது செய்தது. இவ்வழக்கில் உச்சநீதி மன்றம் 2 ஆண்டுகள் கழித்து அவருக்கு பிணை வழங்கியது. பிணையில் வெளியே வந்த அவருக்கு உடனடியாக ராய்ப்பூர் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

பினாயக்சென்னை விடுதலை செய் சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது

இந்த பாராளுமன்றம், அரசியல் சட்டம் மற்றும் இந்த ஜனநாயகத்தை நம்புகின்ற ஒரு நல்லவருக்கே இந்தக் கதியென்றால் இது மனித உரிமை மீறல்களை எதிர்த்துப் போராடுகின்றவர்களுக்கு விடப்படும் ஒரு எச்சரிக்கையே‘ என்று ம.உ.பா. மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.ராஜு உரையாற்றினார். சென்னை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சுரேசு, மதுரை மாவட்டச் செயலாளர் லயனல் அந்தோணி ராஜ், துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சி நாதன் ஆகியோர் உரையாற்றினர். ஒரு மணிநேர மறியல் போராட்டத்திற்கு பின் காவல்துறை அனைவரையும் கைது செய்தது. 29 வழக்கறிஞர்கள் (3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட) 90 பேர் கைது செய்யப்பட்டனர். பினாயக் சென் மீதான அநீதியான தண்டனையை எதிர்த்து, அவரது விடுதலையைக் கோரி மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான பிரச்சாரம் மற்றும் போராட்டங்களை ம.உ.பா மையம் நடத்தி வருகிறது.

____________________________________________________________

– தகவல், புகைப்படங்கள்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: