ஆடுகளம்: மண்ணை விடுத்து சினிமாப் புனைவில் ஆடும் களம்!

70
29

வினவில் திரைவிமரிசனம் எழுதி நாளாயிற்றே, ஆடுகளத்தை எழுதலாமே” என்று தோழர் ஒருவர் கேட்டார். சற்றே காத்திரமான கதைகளை கொண்ட படங்களை எழுதவேண்டுமென்றால் அத்தகைய வாய்ப்புகள் அதிகமில்லை. வாய்ப்புகள் இல்லை என்பதற்காக திரை விமரிசனங்கள் எழுதாமலும் இருக்க கூடாது. அரசியல், சமூக கண்ணோட்டத்தை கூட சினிமா வழியாக சொன்னால் நமது மக்கள் கொஞ்சம் பரிசீலிப்பார்களில்லையா? ஆக துணிந்து ஆடுகளம் சென்றோம்.

வெளியே தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது “இந்த படத்தை பாக்காதீங்க, கதையே இல்லை” என்று ஒரு ஆட்டோ ஓட்டுநர் அவரது நண்பரிடம் எச்சரித்துக் கொண்டிருந்தார். அதுவேறு வயிற்றில் பீதியைக் கிளப்பியது. வளாகத்தில் விஜயின் காவலன் படத்திற்குத்தான் கூட்டம் கொஞ்சம் அதிகம். ஆடுகளத்திற்கு அந்த அளவுக்கில்லை. சன் டி.வியின் ஏகபோகம் உருவாக்கியிருக்கும் சதுரங்க ஆட்டத்தில், விஜய் போன்ற நட்சத்திரங்கள் தாமே உருவாக்கியிருந்த இமேஜை துறக்க முடியாமல் அதனாலேயே சிக்கிக் கொண்டிருக்கும் கதையை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

சமீப காலமாக கிராமங்களை மையமாக வைத்து நிறைய படங்கள் வருகின்றன. யதார்த்தத்தில் கிராமப்புறங்கள், விவசாயத்தை அரசு திட்டமிட்டு புறக்கணித்து வரும் நிலையில் தமிழ் சினிமா மட்டும் நாட்டுப்புறங்களின் மேல் அளவிலா காதல் கொண்டிருக்கும் மர்மமென்ன?

சிலம்பு வாத்தியாரைப் போல சேவல்களை பழக்கி சண்டைப் போட்டிக்கு விடும் பேட்டைக்காரனாக கவிஞர் வ.ஜ.ச.ஜெயபாலன். அவரிடம் சேவல்களை பழக்கும் சீடர்களாய் தனுஷும், கிஷோரும். கிஷோர் மதுவறை நடத்தும் வசதியானவர். தனுஷ் அப்படியில்லை. வெறுமனே எடுபிடியாக வருகிறார். ஏதாவது ஒரு போட்டியிலாவது பேட்டைக்காரனை வெல்ல வேண்டும் என்ற இலட்சிய வெறியோடு வரும் இன்ஸ்பெக்டராக ரத்தினம்.

இடையில் ஆங்கிலோ இந்தியப் பெண் தப்சியோடு தனுஷின் காதல். அப்புறம் முழு வீச்சாக நடக்கும் பிரம்மாண்டமான சேவல் சண்டை போட்டி. போட்டியில் குருவின் மதிப்பீட்டை பொய்யாக்கி, அவரது உத்திரவை மறுத்து  தனுஷின் சேவல் வெற்றி பெறுகிறது. சீடனின் வெற்றியை சீரணிக்க முடியாமல் பிறகு அவனையே பழி தீர்க்க முயலும் பேட்டைக்காரன். கிஷோர், தனுஷ் இருவரையும் மோதவிட்டு, காதலியை பிரித்து, அதற்காக இளம் வயது மனைவியை விரட்டி, எல்லாம் செய்கிறார் ஜெயபாலன். இறுதியில் அவர் மனம் திருந்தியோ இல்லை இன்னும் தனுஷை பழிவாங்க வேண்டுமென்றோ தற்கொலை செய்ய, அந்த பழியுடன் தனுஷ் காதலியோடு ஊரைவிட்டு போகிறார்.

முற்பாதியில் தனுஷின் காதல். பிற்பாதியில் ஜெயபாலனது துரோகம். இரண்டு உணர்ச்சிகளும் ரசிகர்களுக்கு பழக்கப்பட்டவை. முன்னது இதயத்திற்கு தாலாட்ட, பின்னது வயிற்றில் பதைபதைப்பை உருவாக்கும். அந்த பலத்தில் இந்த இரு உணர்ச்சிகளையும் சேவற் சண்டை பின்னணிக் களத்தில் துணிந்து  கதையாக்கியிருக்கிறார் இயக்குநர். இது போதாதா? கிராமம், முதன்முறையாக சேவற் சண்டை களம் என்று அறிஞர் பெருமக்கள் பாராட்டுகிறார்கள்.

முதலில் காதல். இது கதையோடு பொருத்தமின்றி திணிக்கப்பட்ட காதல் என்று சிலருக்குத் தோணலாம். எந்தக் கதையில் காதல் இயல்பாக வந்திருக்கிறது? ஆஸ்திரேலியா போக வாய்ப்பிருக்கும் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண், சேவற் சண்டைக்காக ஊரைச் சுற்றும் ஒரு லுங்கி கட்டிய இளைஞனை காதலிக்கும் அபத்தம் இருக்கட்டும். அதிலும் தனுஷ் வம்படியாகத்தான் அந்த பெண்ணைக் காதலிக்கிறார். அதற்காக வலிந்து சுற்றுகிறார். அவரைத்தான் காதலித்தாக வேண்டுமென்ற நிலையில் அந்தப் பெண் வேறு வழியின்றி காதலிக்கிறாள்.

அந்த வகையில் தமிழ் சினிமா காதலின் ஜனநாயகத்தைக் கூட இன்னும் கற்றுத் தரவில்லை. மட்டுமல்ல, அந்த இடத்தில் ஆணாதிக்க சர்வாதிகாரத்தையே இளைஞர்களின் ஆளுமைப் பண்பாகவும் உணர்த்துகிறது. படியாத மாட்டை படிய வைப்பது போல அந்த பெண்ணை படியவைக்கும் தனுஷின் முயற்சிகளில் தங்களது ஆளுமைகளை உணர்கிறார்கள், கைதட்டும் இரசிகர்கள். காதல் என்பது இருபாலாரின் சமத்துவத்தையும், அதன் பால் வரும் விருப்பத் தெரிவையும் கொள்ளாமல் இருந்தால் அது காதலா, இல்லை பெண்டாளும் ‘கொலை’யா?

ஏழை இளைஞன் தனது வீரத்தால் பணக்கார வீட்டுப் பெண்ணை காதலிப்பது எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே தொடர்கிறது. பரிசாரர்கள் புடை சூழ வாழும் அந்த பெரிய இடத்து மங்கைகள் பின்னர் காதலனுக்காக குடிசையில் மூக்கு சிந்தி அடுப்பூதும் தியாகத்தை ஏற்கிறார்கள். யதார்த்தத்தில் இது சாத்தியமா? படத்தில் டேபிள் மேனர்சோடு விருந்துண்ணும் நாகரீகம் உள்ள அந்த பெண் ஒரு நாள் தனுஷோடு சுற்றிவிட்டு, பிய்த்துப் போட்ட புரோட்டாவை சாப்பிட்டுவிட்டு, கை கழுவிய பின் உடையில் துடைக்கும் தனுஷைப் போலவை துடைக்கிறாள். இயக்குநரின் மெய்சிலிர்க்க வைக்கும் ‘டச்’!

இது போல பல படங்களில் பார்த்திருக்கிறோம். மாளிகையிலிருந்து இறங்கும் பெண்கள் குடிசைகளில் ஒன்றி வாழ்வதையும், ஐந்து நட்சத்திர விடுதிகளில் உண்ணும் வழக்கமுள்ளவர்கள், கையேந்தி பவன்களில் இரசித்து சாப்பிடும் அழகையும் சகித்திருக்கிறோம். இது சாத்தியமே இல்லை என்பதை அறிந்தும் நமது இரசிகர்கள் ஏன் இரசிக்கிறார்கள்? இது யதார்த்தமே இல்லை என்று தெரிந்தும் இயக்குநர்கள் தொடர்ந்து இப்படி ஏன் படுத்துகிறார்கள்?

வெள்ளையும் சொள்ளையுமாக உள்ள அழகு பெண்களை துய்க்க விரும்புவதாக, ஏழைகளை இப்படித்தான் இழிவு படுத்த வேண்டுமா? அப்படி ஒரு விருப்பமிருந்தால் அது விமரிசனத்திற்குரியதா இல்லை போற்றுதலுக்குரியதா? நுகர்வுக் கலாச்சாரம் வழங்கியிருக்கும் வாழ்க்கையை நிறைவேற்ற ஓடியும் வாடியும் வரும் பெண்கள் இப்படி தங்களது நிலையிலிருந்து அதை துறந்து விட்டு சாமியார் போல வருவார்களா என்ன? புறாக்கள் சூழ, தோட்டமே பூத்திருக்க, தளைய தளைய கட்டிய பட்டுச் சேலையுடன், இத்தாலி பாணி நவநாகரீக கிச்சனில் லியோ காபி போட்டு, லேப்டாப்பில் கணவனுடன் மகிழ்ந்திருக்கும் அந்த பெண், தெருவில் குப்பை அள்ளும் இளைஞனைப் பார்த்து காதலிக்கிறாள் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?

காதலைக் கூட யதார்த்தமாக, அந்தெந்த வர்க்கங்களின் வாழ்க்கை பிரச்சினைகளோடு காட்டினால் குடி முழுகிவிடுமா என்ன?

அடுத்தது கிராமம்.

கிராமமென்றால் வெள்ளேந்தியான மனிதர்கள், மீசையை உருவும் வில்லன்கள் என்ற ஃபார்முலாவை ஆடுகளத்தின் இயக்குநர் வெற்றி மாறனும் மீறவில்லை. சமீப காலமாக நிறைய படங்கள் கிராமத்து வாழ்க்கையை மையமாக வைத்து வருகின்றன. இந்த போக்கில் நாம் இன்றைய கிராமங்களை மட்டுமல்ல, நேற்றைய கிராமங்களையும் உண்மையாக பார்க்க இயலாது என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்?

தனுஷின் தந்தை இறந்துவிட, அவரது தாய் ரேஷன் கடைக்கு சென்று, பையனுக்கு ஆக்கிப் போட்டு, அவன் கோபத்தில் ஏறியும் பொருட்களை கண்டு புலம்புவதை நிறுத்தி இறுதியில் இறந்தே போகிறாள். சேவல் வாத்தியாரோடு ஊரைச்சுற்றி வரும் தனுஷ், காதலிக்கிறார், நண்பனுடன் குடிக்கிறார், சேவலை பாசத்துடன் வளர்க்கிறார். உழைக்கும் பெண்களது காசில் குடித்துவிட்டு ஊரைச் சுற்றும் ஆண்கள்தான் தமிழக கிராமத்து யதார்த்தம்.

அந்த யதார்த்தத்தை சுட்டிக்காட்டும் அந்த விதவை பெண்ணை அரட்டி மிரட்டுகிறார் தனுஷ். அவரது மிரட்டலைப் பார்த்து கைதட்டுகிறார்கள் இரசிகர்கள். விமரிசனத்திற்குரியது இங்கே பாராட்டப்படுகிறது என்றால் என்ன பொருள்? அந்தப் பிரச்சினை படத்தின் மையப் பொருளிலேயே இருக்கிறது. சேவற்சண்டை என்ற பொழுது போக்கு ஓரிரு பத்தாண்டுகளுக்கு முன்னர் பிரபலமாக இருந்திருக்கலாம். குறுகிய வாழ்க்கையைக் கொண்டிருக்கும் கிராமத்தில் இத்தகைய சேவல் வளர்ப்பு, புறா வளர்ப்பு, மாடு வளர்ப்பு, ஜல்லிக் கட்டு போன்றவை வீராப்பு, கௌரவத்தின் அடையாளமாக கூட இருக்கலாம்.

“சேவற் சண்டை போட்டி என்பது கஞ்சி குடிக்கும் உயிர்ப்பிரச்சினை அல்லை, அது மானப்பிரச்சினை” என்று தனுஷ் வசனம் பேசுகிறார். இரசிகர்களும் அதை தமது பிரச்சினையாக ஏற்கிறார்கள். பாரம்பரிய விவசாயத்தை பறித்தெடுத்துவிட்டு, விவசாயத்தை அடிமைகளின் தொழிலாக மாற்றிவரும் மான்சாண்டோ காலத்தில் எது மானப்பிரச்சினை? விளைபொருளுக்கு விலை இல்லாமல் கமிஷன் மண்டி வணிகர்களிடமும், அம்பானியிடமும் அடிபணிந்து நிற்கையில் போகாத மானம் சேவலுக்காக போகிறது என்றால்?

எனில் அத்தகைய அர்த்தமற்ற மானம் இங்கே இடித்துரைக்கப்படவேண்டும். மாறாக அது ஒரு மகாபாரதப் போராக மாபெரும் கௌரவப்பிரச்சினையாக காட்டுகிறார், இயக்குநர். சமூக உறவுகளோடு நெருக்கமாக வாழும் கிராம சமூகத்தில், முழு வாழ்க்கையும் அங்கேயே பிறந்து மரிக்க வேண்டுமென்ற குறுகிய வட்டத்தில் இத்தகைய சேவல் சண்டைகள் கூட வாழ்வா, சாவா பிரச்சினையாக இருக்கலாம், தவறில்லை. ஆனால் அது அந்த குறுகிய உலகின் மீதான யதார்த்தமான விமரிசனப் பார்வையாக பார்வையாளனுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

சான்றாக, கிராமங்களில் வாழும் சாதி ஆதிக்கமே இத்தகைய சேவல், மாடு பிடி சண்டைகளின் அடிநாதமாக இருக்கிறது. தேவர் வீட்டு சேவலை, பள்ளர் வீட்டு சேவல் வென்று விட்டது என்றால் வரும் சண்டைதான் அந்த குறுகிய உலகின் அற்பத்தனத்தை விரிந்த அளவில் காட்டும். ஆள் போட்டு வளர்க்கும் கவுண்டரின் மாட்டை, ஒரு அருந்ததி இளைஞர் அடக்கிவிட்டார் என்றால்தான் அங்கே கதையே எழும். அதன்றி இங்கே மானம் ஏது? சாதியின்றி எடுக்கப்படும் ஒரு படம் எங்கனம் கிராமப் படமாக இருக்க முடியும்? ஆதிக்க சாதி பெண்ணை ஒரு தலித் மணந்துவிட்டால் ஏற்படும் பதட்டங்கள்தான் சேவல் சண்டையிலும் இருக்க முடியும். அப்படி இருந்திருந்தால் இந்த படம் உண்மையிலேயே சமகால வாழ்க்கையை நெருங்கிச் சென்றிருக்க முடியும். அத்தகைய தைரியமில்லாததால் இயக்குநர் இதை துரோகத்தின் கதையாக எடுத்திருக்கிறார்.

சாதி ஆதிக்கம் கோலேச்சும் கிராமங்களில் ஜனநாயகம் இல்லை. அங்கே நிலவுவது நிலவுடைமை வர்க்கங்களின் கட்டைப்பஞ்சாயத்துதான். ஒடுக்கப்பட்ட சாதிகளின் உரிமை மறுப்பிலேயே நீதி நியாயம் என்பது நாட்டுப்புறங்களில் பேசப்படும். அதிலும் விவசாயத்தை மையமாக கொள்ளாமல் வெறுமனே சேவல் வளர்ப்பு என்று இருக்கும் போது அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் என்ன நீதி இருக்க முடியும்? கிராமத்து லும்பன்களான இவர்களிடம் சேவற் சண்டைகளில் கிடைக்கும் பணம், புகழ்தான் முக்கியமென்றால் அதற்காக இவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். அதில் நீதி, நியாயம் என்று ஒரு கதை செய்வது பொருத்தமாக இல்லையே?

சாதி மற்றும் நிலவுடைமை ஆதிக்கம் கோலேச்சும் கிராமங்களில் மூத்தோர் சொல் தட்டக்கூடாது என்பது ஒரு வகையில் ஜனநாயக மறுப்புதான். அந்த ஜனநாயக மறுப்பின் அற்பத்தனத்தை காட்டவேண்டுமென்றால் அது விரிந்த சமூக யதார்த்தத்தில்தான் சாத்தியம். சேவற் சண்டை வாத்தியாரது கோணத்தில் அதைக் காட்டும்போது அது ஏதோ ஒரு வில்லனது நடவடிக்கையாக சுருங்கி விடுகிறது. ஏனெனில் தந்தை, பண்ணையார், கணவன், அண்ணன், ஆதிக்க சாதி என்று எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் அந்த மூத்தோர் அதிகாரத்தால் பல்வேறு வகைகளில் மக்கள் துன்பப்படுகிறார்கள். அதற்கு கிராமத்தின் மையமான பொருளாதார வாழ்விலிருக்கும் பாத்திரமே பொருத்தமாக இருக்கும்.

சேவற்சண்டை தொடர்பாக போலீசு, அரசியல் கட்சிகள், சாதி, ஊர் கௌரவம், என்று சமூகம் தழுவிய பின்னணியோடு இந்த கதை இருந்திருந்தாலும் இதன் பரிமாணம் விரிந்திருக்கும். அதற்கு மாறாக நாயகன்,காதல், வில்லன் என்று எளிமைப்படுத்தப் பட்ட சுருங்கிய இடத்திலேயே கதை சுற்றுவதால் பார்வையாளன் இதில் எதையும் புதிதாகப் பெறப்போவதில்லை.

இது வெற்றிமாறனுக்கு மட்டும் நேர்ந்த விபத்தல்ல. தமிழ் சினிமாவின் எல்லா இயக்குநர்களும் கதை என்றாலே அதை சில உணர்ச்சிகள், பாத்திரங்களின் வழியாக மிக மிக எளிமைபடுத்தியே உருவாக்குகிறார்கள். ஆனால் இத்தகைய கதைகள் கேரளாவில் எடுக்கப்பட்டிருந்தால் (80.90களில்) அது சம கால கேரளத்தின் வாழ்வோடு வண்ணமயமாகவும், விரிந்த அளவில் வாழ்க்கையை உணர்த்துவதாகவும் இருந்திருக்கும். சங்க இலக்கியங்களிலிருந்தெல்லாம் சேவற் சண்டைகளை ‘ஆய்வு’ செய்து சேகரித்திருக்கும் இயக்குநர் சமகால கிராம வாழ்வு குறித்து எதையும் பார்த்த மாதிரி தெரியவில்லையே?

எனினும் இந்தப்படத்தின் பாத்திரங்களும், கதை அமைப்பும், காதலை தவிர்த்துவிட்டு பார்த்தால் அழுத்தமாகவும், இயல்பாகவும் படைக்கப்பட்டிருப்பதாக சிலருக்குத் தோன்றலாம். அதற்கு காரணம் நட்பு, துரோகம், அவலம், கையறுநிலை முதலான உணர்ச்சிகளை சமூக யதார்த்தத்தில் பட்டை தீட்டப்படாத சினிமா புனைவு மூலம் நாம் ஒரு இரசனையாக பயன்றிருக்கிறோம். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் நமது வாழ்க்கையில் கூட இத்தகைய பிரச்சினைகளே ஆழமான முக்கியத்துவமின்றி நெடுங்காலம் மனதை ஆக்கிரமித்திருக்கும் வண்ணம் வாழ்கிறோம். அற்ப விசயங்களுக்காக ஆழமான மன பாதிப்பு அடைவது உண்மையென்றாலும் அதுவே வாழ்க்கையின் ஆழம் ஆகிவிடாது இல்லையா? அதனால்தான் இந்த படம் பாத்திரங்களின் சித்திரப்பில் கொண்டிருக்கும் ‘ஆழத்தை’  சமூக வாழ்க்கையில் கொள்ள வேண்டிய ஆழமாகா பயணிக்கவில்லை. நாமும் தெரிந்த உணர்ச்சிகள், அறிந்த அனுபவங்கள் என்று அதிலேயே நின்றுவிடுகிறோம்.

கிராம வாழ்க்கையில் இருந்து கொண்டு கதை சொல்வது வேறு. ஒரு கதைக்காக கிராமத்தை பின்னணியாகக் கொள்வது வேறு. அந்த வகையில் இந்தப் படம் தொப்பிக்காக தலையை வெட்டுகிறது. நல்ல நடிப்பு, ஒளிப்பதிவு, அசலான கிராமக் காட்சிகள் எல்லாம் இருந்தும் இது வழக்கமான ஃபார்முலா கதைகளை பார்த்த எரிச்சலையே தருகிறது.

இதுதான் உண்மையான கிராமத்தை காட்டுவதாக நம்புபவர்கள், உண்மையான கிராமத்தை காட்டினால் என்ன சொல்வார்களோ தெரியவில்லை. நகரத்தின் வாழ்வை அனுபவித்துக் கொண்டே, அதை ஒரு போதும் விட்டுக்கொடுக்க விரும்பாதவர்கள் எப்போதாவது கிராம வாழ்வு குறித்து ஏங்குவது போல பேசுவார்கள். அத்தகைய அக்மார்க் நகரத்து மனிதர்களுக்கு இந்த சினிமா கிராமம் நிச்சயம் பிடிக்கும்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சந்தா