privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!

ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!

-

சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்ட வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார்.

புதுக்கோட்டை மீனவர் வீரபாண்டியன், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்துநாட்களுக்குள் அடுத்த கொலை!

வேதாரண்யம், புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன்(45), ஜெயக்குமார்(28), இவரது தம்பி செந்தில்(25) ஆகியோர் சனி காலையில் சேது சமுத்திர திட்டப்பணி நடந்த இடமருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர் படகை சுற்றி வளைத்து மூன்று மீனவர்களையும் கடலில் குதித்து நீந்துமாறு மிரட்டினர். மற்ற இருவரும் உடன் குதிக்க, சுனாமியால் கை ஊனமடைந்திருந்த ஜெயக்குமார் மட்டும் குதிக்க இயலவில்லை. அவரது கழுத்தை ஒரு கயிற்றில் கட்டி மறு முனையை பிடித்துக் கொண்டு படகைச் சுற்றி வந்த கடற்படையினர் அவர் செத்து விழுந்ததும் சென்றுவிட்டனர்.

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்ற இரு மீனவர்களும் படகு திரும்பினர். பின்னர் ஜெயக்குமாரது உடலை எடுத்துக் கொண்டு அதிர்ச்சியுடனும், அவலத்துடனும் கரை திரும்பினர். கொல்லப்பட்ட ஜெயக்குமாருக்கு மூன்று ஆண்டுகள் முன்தான் திருமணம் நடந்து, இரு பெண்குழந்தைகள் உள்ளது. ஆத்திரம் தீராத மீனவர்களும், பிற மக்களும் ஜெயக்குமாரின் உடலை கிடத்தி சிலமணிநேரம் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பிறகு வழக்கம் போல பண உதவி, ஆறுதல், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுதல் என்ற சடங்குகளெல்லாம் நடந்து விட்டன.

ஜெயக்குமாரின் குடும்பத்தினர்

நூற்றுக் கணக்கில் தமிழக மீனவர்கள் இப்படி சிங்கள கடற்படையால் கொல்லப்படுவது குறித்து அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் இது மற்றுமொரு சம்பவமாகத்தான் கடந்து செல்லப்படுகிறது. இந்த உலகில் எதை வேண்டுமானாலும் நிறுத்தி விடலாம் என்றாலும், தமிழக மீனவர்கள் கேட்பார் கேள்வியின்றி சிங்கள கடற்படையால் கொல்லப்படுவதை மட்டும் எவராலும் நிறுத்த முடியாது என்று ஆகிவிட்டது.

கருணாநிதி வழக்கம் போல அதிர்ச்சியை தெரிவித்துவிட்டார். மற்றபடி அவர் எழுதும் கடிதம், தந்தி குறித்து கோபாலபுரத்து தெரு நாய்களே கிண்டல் செய்யும் நிலையில் புதிதாக ஒன்றும் இல்லை. ஆனாலும் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் இத்தகைய கெட்ட பெயர் வாங்கினால் வாக்குகள் சிதறுமே என்ற சுயநலத்தை வைத்துக்கூட இந்த படுகொலைகளை நிறுத்த இயலவில்லை என்றால் என்ன சொல்ல?

இப்போதெல்லாம் ஆளும் கட்சிகள் எந்த பிரச்சினை வந்தாலும் கவலைப்படுவதில்லை. திமிராக எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுக்கிறார்கள். விலை வாசி உயர்வா – மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்துவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலா – அதனால்தான் செல்பேசி கட்டணங்கள் குறைவு. டாஸ்மாக் விற்பனை உயர்வா – அதனால்தான் நலத்திட்டங்கள் நடக்கின்றன. பெட்ரோல் விலை உயர்வா – உலகம் முழுவதும் உயர்ந்திருக்கிறது… என்று எல்லாவற்றுக்கும் கூச்சநாச்சமின்றி பேட்டி கொடுக்கிறார்கள். அதன்படி மீனவர் கொலையைக்கூட அவர்கள் மாரடைப்பு வந்து செத்துவிட்டார்கள் என்றுகூடச் சொல்லலாம்.

ஜெயலலிதாவும் சூடாக கண்டனம் தெரிவத்தோடு, கருணாநிதியின் கடித போரைக் கிண்டலடித்துவிட்டு கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அவர் கேட்பதற்கு முன்னரே கருணாநிதி அரசு அந்த பணத்தை அறிவித்ததோடு வழங்கியும் விட்டது. ஆரம்பத்தில் அந்த மீனவர் குடும்பம் அதை வாங்காமல் எதிர்ப்புக் காண்பித்திருக்கிறது. பின்னர் அதை மாற்றி வாங்க வைத்திருக்கிறார்கள். இதறத்கு பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் மெனக்கெட்டிருக்கிறார்கள். இந்த மெனக்கெடலை சிங்கள கடற்படையை தண்டிப்பதற்கு மட்டும் யாரும் காண்பிக்கவில்லை.

ராமதாஸ் விரைவில் தி.மு.க கூட்டணியில் சேர இருப்பதால் அடக்கமாக கச்சத்தீவை திரும்பப் பெறவேண்டுமென்றும், இலங்கை அரசை கண்டித்தும் ஒரு அறிக்கை விட்டுள்ளார். வைகோ சமீபத்தில்தான் மன்மோகன் சிங்கை சந்தித்து அவர் ரொம்ப நல்லவர் என்றும் அவரிடம் தமிழக மக்களின் கோரிக்கைகளை வைத்திருப்பதாகவும் சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் அடுத்த படுகொலை. இதை மத்திய அரசு உடனே நிறுத்தாவிட்டால் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்படலாம் என்றும் கூறியிருக்கிறார். அவரே போயஸ்தோட்டத்தில் ஒரு சாதாவாக வலம் வரும் போது யார் எங்கு அசாதாரணத்தை எற்படுத்துவது?

ஸ்பெக்ட்ரம் ஊழல், மந்திரி சபை மாற்றம், தேர்தல் கூட்டணி முதலான அதி முக்கிய விசயங்களை கருணாநிதியிடம் பேசவந்த பிரணாப் முகர்ஜி அதையெல்லாம் பேசிவிட்டு வெளியே வந்த பின்னர் மீனவருக்காக ஒரு மெல்லிய அதிர்ச்சியை வெளியிட்டார். அதன்படி மீனவர்கள் தப்பு செய்திருந்தால் கைது செய்யவேண்டுமே அன்றி கொல்லக்கூடாதாம். ஆமாம். நமது மீனவர்கள் நடுக்கடலில் கள்ளச் சாராயம் காய்ச்சி, கஞ்சா பயிரிட்டு தொழில் நடத்துகிறார்கள், இதற்காகத்தான் சிங்கள கடற்படை நமது மீனவர்களை கொல்கிறது போலும்.

ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் இந்த கொலையை ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. ஆனால் தலைப்பில் இலங்கை கடற்படை செய்ததாக இல்லை. உள்ளேயும் அது ஊகமாக வருகிறது. அதற்கு மேல் இலங்கை கப்பற்படை அதிகாரி இதை மறுத்தது தனிச் செய்தியாக வந்திருக்கிறது. அதன்படி இந்த செய்தி தமிழகத்தை தாண்டி வேறு எங்கும் ஒரு விசயமே இல்லை.

இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் அதன் வாசகர்கள் இந்த படுகொலையை கடத்தல்காரர்களும், விடுதலைப்புலிகளும் செய்து இந்திய இலங்கை நட்பை முறிப்பதற்கு முயன்றிருக்கலாம் என்று தைரியமாக எழுதுகிறார்கள். இன்னும் ஐந்து இலட்சத்திற்கு ஆசைப்பட்டு கூட இந்தகொலை நடந்திருக்கலாம் என்று கூட சொல்வார்கள். அப்படி சொல்வர்கள் எவரும் வேதாரண்யமோ, ராமேஸ்வரமோ வரப்போவதில்லை. காஷ்மீர் பிரச்சினைக்காக இந்திய அரசை ஆதரித்து பேசுபவர்கள் எவரும் ஸ்ரீநகர் போகப் போவதில்லை போல.

மேற்கு நாடுகளில் ஒரு விபத்தில் ஓரிருவர் இறந்தாலே அது உலகச் செய்தியாக பேசப்படும். நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாம் நாடுகளில் நூற்றுக்கணக்கில் இறந்தாலும் அது கொசுக்கடி செய்தி போல பார்க்கப்படும். இந்த நிலைமையை இன்று நாம் இந்தியாவிலும் பார்க்கிறோம். தமிழகத்தை தாண்டி குறிப்பாக வட இந்தியாவில், ஊடகங்களில் இது குறித்த எந்த அதிர்ச்சியும் இல்லை. மத்திய அரசு, அதன் வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும் கூட இதற்காக தூதரிடம் அறிக்கை கேட்பது, சம்பிரதாயமான கண்டனம் என்று ரெடிமேடு விசயங்கள்தான் நடக்கின்றன. சோனியா-மன்மோகன் அரசு காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக ஒரு பூலோக சொர்க்கத்தையே டெல்லியில் அளித்து காக்கிறார்கள். ஆனால் இங்கே இலங்கை அகதி மக்கள் வதைமுகாமில் அடைபட்டிருப்பதோடு, தமிழக மீனவர்களும் கொல்லப்படுகிறார்கள். எனில் நமது மக்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.

ஒரு அமெரிக்கன் ஒரு விபச்சார வழக்கில் உசிலம்பட்டியில் சிக்கினால் கூட அடுத்த கணம் அவனது தூதரகம் ஓடி வந்து உதவி செய்யும். ஆனால் ஒரு இந்தியக் குடிமகன், அவனது தொழில் செய்யும் இடத்தில் அண்டை நாட்டு கடற்படையால் கொல்லப்படுகிறான். இதற்கு முன் நூற்றுக்கணக்கில் அப்படி கொல்லப்பட்டும் எந்த நாதியும் இல்லை. பிறகு ஏன் இதற்கு இந்தியா என்று பெயர் வைத்து தேசபக்தி, தேசியக் கொடி, என்று உருகுகிறார்கள்?

விடுதலைப்புலிகளின் அழிவுக்கு முன்னர் எப்படியோ அப்படித்தான் இப்போதும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கிறது. தமிழக மீனவர்கள் இப்படி மாதத்திற்கொரு முறையோ இல்லை வாரத்திற்கொரு முறையோ கொல்வதன் மூலம் எதிர்காலத்தில் ஈழத்தில் போராளிகளுக்கு ஒரு துரும்பும் உதவ கூடாது என்பதற்காக இது நடக்கலாம். அதன்படி மறைமுகமாக இந்திய அரசும் இதை கண்டுகொள்ளாமல் இருக்கலாம்.

ஈழத்தில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கி நிழலில் மக்கள் வாழவேண்டும் என்ற நிலை உருவானது போல தமிழக கடற்கரையில் சிங்கள கடற்படைக்கு கட்டுப்பட்டுதான் மீனவர்கள் வாழவோ சாகவோ வேண்டும் என்ற நிலையும் உருவாகிவிட்டது. ஏற்கனவே மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் போது சிங்கள கடற்படை வந்து மீன்களை பிடுங்குவது, வலையை நாசம் செய்வது, அடித்து துரத்துவது என்று செய்து வரும் வதைகள் பெரிய அளவுக்கு செய்தியாவதில்லை. எப்போதாவது நடந்தால்தானே அது செய்தி.

சொந்த நாட்டு மக்களை காப்பாற்றும் அருகதையை இந்த அரசுகள் என்றோ இழந்துவிட்டன. தமிழகத்தின் நிலை அசாதாரணமாகிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கும் வைகோ, ஜெயலலிதா போன்ற பெரிய கட்சியினர் அந்த அசாதாரண நிலையை தமது போராட்டங்கள் மூலம் ஏன் உருவாக்க வில்லை? அவர்களும் கூட மத்திய அரசு, வெளியுறவுக் கொள்கை என்று வரும்போது இந்திய அரசின் மனம் கோணாமல்தானே பேச முடியும்? இல்லையெனில் சீமானை பிடித்து தேசதுரோகத்தில் உள்ளே போட்டதுபோல புரட்சித் தலைவியையும் போடலாம்.

இந்திய அரசு வழங்கும் வாழ்வை விட அதை எதிர்ப்பதால் வரும் இழப்பு அதிகம் என்பதால் தமிழக ஓட்டுக்கட்சிகள் எதுவும் மீனவர்களுக்காக மத்திய அரசை பணிய வைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதில்லை. இதுதான் இந்திய அரசின் ஆசிர்வாதத்தோடு இயங்கும் சிங்கள இனவெறி அரசின் பலம்.

எனில் என்னதான் தீர்வு?

மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் போர்க்குணமிக்க போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெறவேண்டும். இது கெஞ்சியோ அல்லது மனுக்கொடுத்தோ அல்ல. மத்திய அரசின் பணிகள் இங்கே நடைபெறாமல் இருக்கும் வண்ணம் மக்கள் போராட்டம் தடை போடவேண்டும். அப்போதுதான் தமிழகத்தை தாண்டி இருக்கும் இந்திய மனநிலையில் ஒரு அதிர்ச்சியை கொண்டுவரமுடியும். நமது மீனவர்களின் கொலைக்கான நடவடிக்கையையும் ஆணையிட்டு செய்ய முடியும். ஆனால் அப்படி ஒரு போராட்டம் எழக்கூடாது என்பதற்கே எல்லா கட்சிகளும் தீவிரமாக வேலை செய்யும். அந்த கட்சிகளின் செல்வாக்கில் இருக்கும் மக்களை மீட்காமல் மத்திய அரசை பணியவைக்கும் போராட்டம் நமது விருப்பமாக இருந்தாலும் நடைமுறையில் வருவது கடினம்.

அதுவரை  தமிழக மீனவர்களது  மரணம் ஒரு சிலரின் சுரணையையாவது எழுப்பும். எழுப்புவோம்.

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கச்சத்தீவு : அனாதைகளாய் தமிழக மீனவர்கள்! – சிறப்புக் கட்டுரை!