Saturday, December 7, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!

ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!

-

சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்ட வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார்.

புதுக்கோட்டை மீனவர் வீரபாண்டியன், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்துநாட்களுக்குள் அடுத்த கொலை!

வேதாரண்யம், புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன்(45), ஜெயக்குமார்(28), இவரது தம்பி செந்தில்(25) ஆகியோர் சனி காலையில் சேது சமுத்திர திட்டப்பணி நடந்த இடமருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர் படகை சுற்றி வளைத்து மூன்று மீனவர்களையும் கடலில் குதித்து நீந்துமாறு மிரட்டினர். மற்ற இருவரும் உடன் குதிக்க, சுனாமியால் கை ஊனமடைந்திருந்த ஜெயக்குமார் மட்டும் குதிக்க இயலவில்லை. அவரது கழுத்தை ஒரு கயிற்றில் கட்டி மறு முனையை பிடித்துக் கொண்டு படகைச் சுற்றி வந்த கடற்படையினர் அவர் செத்து விழுந்ததும் சென்றுவிட்டனர்.

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்ற இரு மீனவர்களும் படகு திரும்பினர். பின்னர் ஜெயக்குமாரது உடலை எடுத்துக் கொண்டு அதிர்ச்சியுடனும், அவலத்துடனும் கரை திரும்பினர். கொல்லப்பட்ட ஜெயக்குமாருக்கு மூன்று ஆண்டுகள் முன்தான் திருமணம் நடந்து, இரு பெண்குழந்தைகள் உள்ளது. ஆத்திரம் தீராத மீனவர்களும், பிற மக்களும் ஜெயக்குமாரின் உடலை கிடத்தி சிலமணிநேரம் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பிறகு வழக்கம் போல பண உதவி, ஆறுதல், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுதல் என்ற சடங்குகளெல்லாம் நடந்து விட்டன.

ஜெயக்குமாரின் குடும்பத்தினர்

நூற்றுக் கணக்கில் தமிழக மீனவர்கள் இப்படி சிங்கள கடற்படையால் கொல்லப்படுவது குறித்து அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் இது மற்றுமொரு சம்பவமாகத்தான் கடந்து செல்லப்படுகிறது. இந்த உலகில் எதை வேண்டுமானாலும் நிறுத்தி விடலாம் என்றாலும், தமிழக மீனவர்கள் கேட்பார் கேள்வியின்றி சிங்கள கடற்படையால் கொல்லப்படுவதை மட்டும் எவராலும் நிறுத்த முடியாது என்று ஆகிவிட்டது.

கருணாநிதி வழக்கம் போல அதிர்ச்சியை தெரிவித்துவிட்டார். மற்றபடி அவர் எழுதும் கடிதம், தந்தி குறித்து கோபாலபுரத்து தெரு நாய்களே கிண்டல் செய்யும் நிலையில் புதிதாக ஒன்றும் இல்லை. ஆனாலும் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் இத்தகைய கெட்ட பெயர் வாங்கினால் வாக்குகள் சிதறுமே என்ற சுயநலத்தை வைத்துக்கூட இந்த படுகொலைகளை நிறுத்த இயலவில்லை என்றால் என்ன சொல்ல?

இப்போதெல்லாம் ஆளும் கட்சிகள் எந்த பிரச்சினை வந்தாலும் கவலைப்படுவதில்லை. திமிராக எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுக்கிறார்கள். விலை வாசி உயர்வா – மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்துவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலா – அதனால்தான் செல்பேசி கட்டணங்கள் குறைவு. டாஸ்மாக் விற்பனை உயர்வா – அதனால்தான் நலத்திட்டங்கள் நடக்கின்றன. பெட்ரோல் விலை உயர்வா – உலகம் முழுவதும் உயர்ந்திருக்கிறது… என்று எல்லாவற்றுக்கும் கூச்சநாச்சமின்றி பேட்டி கொடுக்கிறார்கள். அதன்படி மீனவர் கொலையைக்கூட அவர்கள் மாரடைப்பு வந்து செத்துவிட்டார்கள் என்றுகூடச் சொல்லலாம்.

ஜெயலலிதாவும் சூடாக கண்டனம் தெரிவத்தோடு, கருணாநிதியின் கடித போரைக் கிண்டலடித்துவிட்டு கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அவர் கேட்பதற்கு முன்னரே கருணாநிதி அரசு அந்த பணத்தை அறிவித்ததோடு வழங்கியும் விட்டது. ஆரம்பத்தில் அந்த மீனவர் குடும்பம் அதை வாங்காமல் எதிர்ப்புக் காண்பித்திருக்கிறது. பின்னர் அதை மாற்றி வாங்க வைத்திருக்கிறார்கள். இதறத்கு பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் மெனக்கெட்டிருக்கிறார்கள். இந்த மெனக்கெடலை சிங்கள கடற்படையை தண்டிப்பதற்கு மட்டும் யாரும் காண்பிக்கவில்லை.

ராமதாஸ் விரைவில் தி.மு.க கூட்டணியில் சேர இருப்பதால் அடக்கமாக கச்சத்தீவை திரும்பப் பெறவேண்டுமென்றும், இலங்கை அரசை கண்டித்தும் ஒரு அறிக்கை விட்டுள்ளார். வைகோ சமீபத்தில்தான் மன்மோகன் சிங்கை சந்தித்து அவர் ரொம்ப நல்லவர் என்றும் அவரிடம் தமிழக மக்களின் கோரிக்கைகளை வைத்திருப்பதாகவும் சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் அடுத்த படுகொலை. இதை மத்திய அரசு உடனே நிறுத்தாவிட்டால் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்படலாம் என்றும் கூறியிருக்கிறார். அவரே போயஸ்தோட்டத்தில் ஒரு சாதாவாக வலம் வரும் போது யார் எங்கு அசாதாரணத்தை எற்படுத்துவது?

ஸ்பெக்ட்ரம் ஊழல், மந்திரி சபை மாற்றம், தேர்தல் கூட்டணி முதலான அதி முக்கிய விசயங்களை கருணாநிதியிடம் பேசவந்த பிரணாப் முகர்ஜி அதையெல்லாம் பேசிவிட்டு வெளியே வந்த பின்னர் மீனவருக்காக ஒரு மெல்லிய அதிர்ச்சியை வெளியிட்டார். அதன்படி மீனவர்கள் தப்பு செய்திருந்தால் கைது செய்யவேண்டுமே அன்றி கொல்லக்கூடாதாம். ஆமாம். நமது மீனவர்கள் நடுக்கடலில் கள்ளச் சாராயம் காய்ச்சி, கஞ்சா பயிரிட்டு தொழில் நடத்துகிறார்கள், இதற்காகத்தான் சிங்கள கடற்படை நமது மீனவர்களை கொல்கிறது போலும்.

ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் இந்த கொலையை ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. ஆனால் தலைப்பில் இலங்கை கடற்படை செய்ததாக இல்லை. உள்ளேயும் அது ஊகமாக வருகிறது. அதற்கு மேல் இலங்கை கப்பற்படை அதிகாரி இதை மறுத்தது தனிச் செய்தியாக வந்திருக்கிறது. அதன்படி இந்த செய்தி தமிழகத்தை தாண்டி வேறு எங்கும் ஒரு விசயமே இல்லை.

இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் அதன் வாசகர்கள் இந்த படுகொலையை கடத்தல்காரர்களும், விடுதலைப்புலிகளும் செய்து இந்திய இலங்கை நட்பை முறிப்பதற்கு முயன்றிருக்கலாம் என்று தைரியமாக எழுதுகிறார்கள். இன்னும் ஐந்து இலட்சத்திற்கு ஆசைப்பட்டு கூட இந்தகொலை நடந்திருக்கலாம் என்று கூட சொல்வார்கள். அப்படி சொல்வர்கள் எவரும் வேதாரண்யமோ, ராமேஸ்வரமோ வரப்போவதில்லை. காஷ்மீர் பிரச்சினைக்காக இந்திய அரசை ஆதரித்து பேசுபவர்கள் எவரும் ஸ்ரீநகர் போகப் போவதில்லை போல.

மேற்கு நாடுகளில் ஒரு விபத்தில் ஓரிருவர் இறந்தாலே அது உலகச் செய்தியாக பேசப்படும். நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாம் நாடுகளில் நூற்றுக்கணக்கில் இறந்தாலும் அது கொசுக்கடி செய்தி போல பார்க்கப்படும். இந்த நிலைமையை இன்று நாம் இந்தியாவிலும் பார்க்கிறோம். தமிழகத்தை தாண்டி குறிப்பாக வட இந்தியாவில், ஊடகங்களில் இது குறித்த எந்த அதிர்ச்சியும் இல்லை. மத்திய அரசு, அதன் வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும் கூட இதற்காக தூதரிடம் அறிக்கை கேட்பது, சம்பிரதாயமான கண்டனம் என்று ரெடிமேடு விசயங்கள்தான் நடக்கின்றன. சோனியா-மன்மோகன் அரசு காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக ஒரு பூலோக சொர்க்கத்தையே டெல்லியில் அளித்து காக்கிறார்கள். ஆனால் இங்கே இலங்கை அகதி மக்கள் வதைமுகாமில் அடைபட்டிருப்பதோடு, தமிழக மீனவர்களும் கொல்லப்படுகிறார்கள். எனில் நமது மக்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.

ஒரு அமெரிக்கன் ஒரு விபச்சார வழக்கில் உசிலம்பட்டியில் சிக்கினால் கூட அடுத்த கணம் அவனது தூதரகம் ஓடி வந்து உதவி செய்யும். ஆனால் ஒரு இந்தியக் குடிமகன், அவனது தொழில் செய்யும் இடத்தில் அண்டை நாட்டு கடற்படையால் கொல்லப்படுகிறான். இதற்கு முன் நூற்றுக்கணக்கில் அப்படி கொல்லப்பட்டும் எந்த நாதியும் இல்லை. பிறகு ஏன் இதற்கு இந்தியா என்று பெயர் வைத்து தேசபக்தி, தேசியக் கொடி, என்று உருகுகிறார்கள்?

விடுதலைப்புலிகளின் அழிவுக்கு முன்னர் எப்படியோ அப்படித்தான் இப்போதும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கிறது. தமிழக மீனவர்கள் இப்படி மாதத்திற்கொரு முறையோ இல்லை வாரத்திற்கொரு முறையோ கொல்வதன் மூலம் எதிர்காலத்தில் ஈழத்தில் போராளிகளுக்கு ஒரு துரும்பும் உதவ கூடாது என்பதற்காக இது நடக்கலாம். அதன்படி மறைமுகமாக இந்திய அரசும் இதை கண்டுகொள்ளாமல் இருக்கலாம்.

ஈழத்தில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கி நிழலில் மக்கள் வாழவேண்டும் என்ற நிலை உருவானது போல தமிழக கடற்கரையில் சிங்கள கடற்படைக்கு கட்டுப்பட்டுதான் மீனவர்கள் வாழவோ சாகவோ வேண்டும் என்ற நிலையும் உருவாகிவிட்டது. ஏற்கனவே மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் போது சிங்கள கடற்படை வந்து மீன்களை பிடுங்குவது, வலையை நாசம் செய்வது, அடித்து துரத்துவது என்று செய்து வரும் வதைகள் பெரிய அளவுக்கு செய்தியாவதில்லை. எப்போதாவது நடந்தால்தானே அது செய்தி.

சொந்த நாட்டு மக்களை காப்பாற்றும் அருகதையை இந்த அரசுகள் என்றோ இழந்துவிட்டன. தமிழகத்தின் நிலை அசாதாரணமாகிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கும் வைகோ, ஜெயலலிதா போன்ற பெரிய கட்சியினர் அந்த அசாதாரண நிலையை தமது போராட்டங்கள் மூலம் ஏன் உருவாக்க வில்லை? அவர்களும் கூட மத்திய அரசு, வெளியுறவுக் கொள்கை என்று வரும்போது இந்திய அரசின் மனம் கோணாமல்தானே பேச முடியும்? இல்லையெனில் சீமானை பிடித்து தேசதுரோகத்தில் உள்ளே போட்டதுபோல புரட்சித் தலைவியையும் போடலாம்.

இந்திய அரசு வழங்கும் வாழ்வை விட அதை எதிர்ப்பதால் வரும் இழப்பு அதிகம் என்பதால் தமிழக ஓட்டுக்கட்சிகள் எதுவும் மீனவர்களுக்காக மத்திய அரசை பணிய வைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதில்லை. இதுதான் இந்திய அரசின் ஆசிர்வாதத்தோடு இயங்கும் சிங்கள இனவெறி அரசின் பலம்.

எனில் என்னதான் தீர்வு?

மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் போர்க்குணமிக்க போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெறவேண்டும். இது கெஞ்சியோ அல்லது மனுக்கொடுத்தோ அல்ல. மத்திய அரசின் பணிகள் இங்கே நடைபெறாமல் இருக்கும் வண்ணம் மக்கள் போராட்டம் தடை போடவேண்டும். அப்போதுதான் தமிழகத்தை தாண்டி இருக்கும் இந்திய மனநிலையில் ஒரு அதிர்ச்சியை கொண்டுவரமுடியும். நமது மீனவர்களின் கொலைக்கான நடவடிக்கையையும் ஆணையிட்டு செய்ய முடியும். ஆனால் அப்படி ஒரு போராட்டம் எழக்கூடாது என்பதற்கே எல்லா கட்சிகளும் தீவிரமாக வேலை செய்யும். அந்த கட்சிகளின் செல்வாக்கில் இருக்கும் மக்களை மீட்காமல் மத்திய அரசை பணியவைக்கும் போராட்டம் நமது விருப்பமாக இருந்தாலும் நடைமுறையில் வருவது கடினம்.

அதுவரை  தமிழக மீனவர்களது  மரணம் ஒரு சிலரின் சுரணையையாவது எழுப்பும். எழுப்புவோம்.

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கச்சத்தீவு : அனாதைகளாய் தமிழக மீனவர்கள்! – சிறப்புக் கட்டுரை!

 

  1. ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி! | வினவு!…

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர் படகை சுற்றி வளைத்து மூன்று மீனவர்களையும் கடலில் குதித்து நீந்துமாறு மிரட்டினர். மற்ற இருவரும் உடன் குதிக்க, சுனாமியால் கை ஊனமடைந்திருந்த ஜெயக்குமார் மட்டும் குதிக்க இயலவில்லை…

  2. வினவு பொய் சொல்ராரு. இண்டு வாசிச்சி பாருங்க. இந்த மீனவர் வாட்டர் பிஸ்டலை எடுத்து ஸ்ரீலங்கா நேவிய சுட்டிருக்காரு. எல்டிடிஈ கொடுத்த துப்பாக்கியாம். சுப்பிரமணியசுவாமி சொல்லிருக்காரு. நெக்ஸ்ட் இயர் கிழக்குல இது பத்தி ஒரு சூப்பர் த்ரில்லர் பொத்தகம் முகில் எழுதுறாரு. கட்டாயம் வாங்கி வாசிங்க மக்காள். நெஜமா என்ன நடந்துதின்னு தெரிஞ்சிடும்.
    வினவு டபாய்குறாங்கோ. நம்பாதீங்கோ

  3. […] This post was mentioned on Twitter by வினவு, Gobi Chinnadurai. Gobi Chinnadurai said: RT @vinavu: https://www.vinavu.com/2011/01/24/jayakumar-lankan-navy-killing/ ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி! […]

  4. இப்போது நாம் போராடவில்லையெனில், மீண்டும், மீண்டும் பலிகள் தொடரும் என்பது உறுதி. மத்திய அரசிலிருந்து எவனாவது மீனவர்கள் சார்பாக அறிக்கை கொடுத்தால் உடனே நமது மீனவர்களை கொல்கிறார்கள். இதை சிங்களன், இந்திய அரசை வம்பிக்கிழுக்கும் செயலாக ஆங்கிலப்பத்திரிக்கை படிக்கும் தறுதலைகள் ஏன் எழுதவில்லை. ஒவ்வொரு கட்சியிலும் இருக்காங்க மீனவர் அணி, என்னாத்த சாதிக்கன்னு தெரியலை. திமுக மீனவர் அணிச் செயலால‌ர் பெர்னார்டு, ராயபுரம் மதிவாணன் எல்லாம் சென்னை மீனவர்களுக்காக மட்டும் பேசுவார்களா? இல்ல திமுக உறுப்பினர் அட்டை வச்சிருக்கிற மீனவர்களுக்காக மட்டும் பேசுவாய்ங்களோ?.

  5. ஒரு அமெரிக்கன் ஒரு விபச்சார வழக்கில் உசிலம்பட்டியில் சிக்கினால் கூட அடுத்த கணம் அவனது தூதரகம் ஓடி வந்து உதவி செய்யும். ஆனால் ஒரு இந்தியக் குடிமகன், அவனது தொழில் செய்யும் இடத்தில் அண்டை நாட்டு கடற்படையால் கொல்லப்படுகிறான். இதற்கு முன் நூற்றுக்கணக்கில் அப்படி கொல்லப்பட்டும் எந்த நாதியும் இல்லை. பிறகு ஏன் இதற்கு இந்தியா என்று பெயர் வைத்து தேசபக்தி, தேசியக் கொடி, என்று உருகுகிறார்கள்?

  6. அட என்னங்க வினவு! இன்னும் ரெண்டு நாள்ல கொடியேத்தி கும்பிடுபோட்ற நாள் வருது. இப்போ போய் இந்த கட்டுரைய வெளியிட்டுட்டீங்க. தேசபக்தர்களுக்கு உறுத்தி மிட்டாய் வியாபாரம் கெடப்போகுது…

  7. //ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் இந்த கொலையை ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. ஆனால் தலைப்பில் இலங்கை கடற்படை செய்ததாக இல்லை. உள்ளேயும் அது ஊகமாக வருகிறது. அதற்கு மேல் இலங்கை கப்பற்படை அதிகாரி இதை மறுத்தது தனிச் செய்தியாக வந்திருக்கிறது. அதன்படி இந்த செய்தி தமிழகத்தை தாண்டி வேறு எங்கும் ஒரு விசயமே இல்லை.//

    Hindustan times: 2nd TN fisherman killed by SL navy
    The Times of India Another Tamil Nadu fisherman brutally killed by Lankan Navy
    INDIA TODAY: SL navy kills another TN fisherman
    Daily News & Analysis (Mumbai): Another Tamil Nadu fisherman killed in attack by Lankan Navy
    Deccan Herald (Karnadaka) : Another fisherman killed attack attack by Lankan Navy
    The Tribune (Chandigarh): Another TN fisherman killed by Lankan navy
    kaumudi (Kerela): Indian fisherman brutally killed by Lankan Navy
    The Asian Age (Delhi):India furious as Lanka Navy kills another fisherman
    The Statesman: (Kolkata):Lankans kill another fisherman

    • The Hindu: India condemns killing of fisherman; Sri Lanka denies involvement
      The Hindu: Fisherman strangled off Kodiakarai ஹிண்டுவை மட்டும் நைசாக மறந்து விட்டீர்களே,
      மற்ற தினசரிகள் இதை வெளியிட்டாலும் அது தலைப்பு செய்தியாகவோ இல்லை முக்கிய செய்தியாகவோ எங்கும் வரவில்லை. மேலும் இலங்கை கடற்படை மறுப்பு செய்தியும் உடனே வெளிவந்திருக்கிறது. இந்துவைப்பார்த்து விட்டு எல்லா ஆங்கில ஊடகங்களும் இப்படித்தான் என்று எழுதியது தவறு. ஆனால் இதெல்லாம் தமிழகத்தை தாண்டி ஒரு விசயமே இல்லை என்பதில் மாற்று இல்லை.

      • இந்து வின் நிலைப்பாடு தெரிந்த கதைதான் என்ற போதிலும், Fisherman strangled off Kodiakarai இந்த செய்தியில் இலங்கை கடற்படைதான் குற்றம் செய்தாக சொல்லியுள்ளார்கள். மேலும் தமிழ்நாட்டில் மட்டும் இது பெரிய விடமாக்கும்? அப்படி இருந்தால் ஏன் 200 பேர் இது வரை செத்திருக்க போகிறார்கள்?

    • நந்தன் இந்து நியூசு பார்க்கலையா?
      Fisherman strangled off Kodiakarai இன்னு மொட்டையா தேய்ச்சிருக்கானுங்களே

    • //Hindustan times: 2nd TN fisherman killed by SL navy
      The Times of India Another Tamil Nadu fisherman brutally killed by Lankan Navy
      INDIA TODAY: SL navy kills another TN fisherman
      Daily News & Analysis (Mumbai): Another Tamil Nadu fisherman killed in attack by Lankan Navy
      The Tribune (Chandigarh): Another TN fisherman killed by Lankan navy//

      ஒரு உண்மையை பாருங்கள், இந்த எல்லா தலைப்புகளும் சொல்வது என்னவென்றல்.
      //TN Fisherman is killed//
      1. It gives time saving for their readers, basically they need not worry about some fisherman killed somewhere. its their duty to put some message as tomorrow someone should not say that they are ignoring Tamils.
      2. whoever is killed is not related to India. he just belong to Tamil Nadu. India is a developed nation, fisherman can not be part of India.

      இது சாதி, மதம் என்று புளுதுபோய், நாறிப்போய் நதேரியை போல் வாழும் நமக்கு புரியாது.

  8. ந‌ல்ல‌ க‌ட்டுரை அவ‌ர்க‌ள் என்ன‌ செய்தாலும் இங்கு த‌ட்டிக் கேட்க‌ ஆள் இல்லைன்னு ந‌ல்லா தெரிஞ்சு போச்சு. அதான் தொட‌ர்ந்து இப்ப‌டி செய்றானுங்க‌.

  9. இது சீன கடற்படையின் அட்டூழியம். இலங்கை கடற்படைக்கு தொடர்பு இல்லை என்று ஒரு செய்தி வரும் பாருங்கள்.

  10. பன்னாட்டு மீன் பிடிக்கும் நிறுவனங்களுக்கு இந்திய கடரை தாரைவர்து கொடுக்க முடிவெடுத்துள்ளது. இந்திய அரசாங்கம் இதற்கு இடையயூரக இருக்கும் தமிழக மீனவர்களை கொலை செய்ய இலங்கை கடற் படையல் கொலை செய்யப்படுகிறது.

  11. சிங்கள் மீன்வரைக் கொன்று மிதக்க விடுங்கள். இந்திய அரசு எதாவது நம்மிடம் சொல்லட்டுமே !!! சொன்ன அன்றைக்கே இன்னும் சில சிங்கள் மீனவரைக் கொல்லுங்கள். அப்போது தான் தெரியும் மரணத்தின் வலி…………………… .. அனைத்து மீனவர்களும் தற்காப்புக்கு ஆயுதங்கள் கொண்டு செல்வது நல்லது. தற்காப்புக்கு கொலை செய்வது தவறில்லை என சட்டம் சொல்ல்கிறது அல்லவா? பிறகென்ன?

    • இக்பால் செல்வன்,

      இலங்கை இந்திய அரசுகளின் திமிருக்கு அப்பாவி சிங்கள மீனவர்கள் என்ன செய்வார்கள்? மேலும் தமிழக மீனவர்களின் கொலை சிங்கள மீனவரின் நலனுக்காக நடக்கவில்லை. மீனவர்கள் என்ற முறையில் இருவரும் வாழ்க்கையில் பெரிய வேறுபாடு இல்லை. இந்திய, இலங்கை அரசுகளின் நலன் என்பது இரண்டையும் ஆதிக்கம் செய்யும் முதலாளிகளின் நலனோடு இணைந்தது. அதனாலேயே இலங்களை அரசின் அடாவடித்தனங்களுக்கு இந்திய அரசு மறைமுக ஆதரவை தருகிறது. இவர்களுக்கு வலிக்க வேண்டுமானால் நாம் இந்திய அரசின் அதிகாரம் தமிழ்நாட்டில் கேள்விக்குள்ளாக்கபடுகிறது என்ற நிலையை உணரவைக்க வேண்டும். முக்கியமா இந்திய முதலாளிகளுக்கு தமிழகத்தில் தொழில் நடத்த மக்கள் எதிர்ப்பு என்று காட்டினால்தான் இந்திய அரசுக்கு வலிக்கும். அதை விடுத்து நீங்கள் சாதாரண மக்களை வில்லன்களாக மாற்றுவது சரியா?

    • //சிங்கள் மீன்வரைக் கொன்று மிதக்க விடுங்கள். இந்திய அரசு எதாவது நம்மிடம் சொல்லட்டுமே !!! //

      எதிரி சிங்கள மீனவன் அல்ல. இதவிட சுலபமான வழி இலங்கைத் தூதரகத்தை அடித்து நொறுக்குவது. இக்பால் செல்வன் இந்த திட்டத்தையும் பரிசீலிகக் வேண்டும்.

    • ஏன் நம் மீனவர்கள் கள்ள துப்பாக்கி கொண்டு சென்று சுடும் சிங்களன் ஒருவனை கொல்லக்கூடாது? (அதற்கு நம் போலீஸும் அரசும் சப்போர்ட் செய்யவேண்டும்). அப்படியாவது இது international பிரச்சினையாக மாறட்டுமே? இந்திய அரசாங்கத்துக்கு காது கேட்கவில்லையென்றால் இது போன்று ‘வெடி’ வைத்து தான் புரியவைக்கவேண்டும்.

      ஒரு மீனவனுக்கு ஒரு சிங்கள ராணுவ வீரனை(!) கொல்லவேண்டும். சிங்கள மீனவனை கொல்வது சரியாக படலை…

      • சரி தான் ! உணர்ச்சிக் கடுப்பினால் தவறிய வார்த்தைகளுக்கு மன்னிக்கவும். அப்பாவி சிங்கள் மீனவர் என்ன செய்வார்கள், இருப்பினும் தற்காப்புக்காக இந்திய தமிழ் மீனவர்கள் ஆயுதம் தாங்கி செல்வது சரியே ! அவர்களை அடிக்க வருபவர் யாராயினும் அவர்களை சுடுவதும் சரியே ! அது சிங்கள் இராணுவமாக இருக்கட்டும், இந்திய அரசின் கூலிப்படையாக இருக்கட்டும், சிங்கள் அரசின் ஏவலில் வரும் எந்த நாய்களாக இருக்கட்டும் தற்காப்புக்காக ஆயுதம் எடுப்பதில் தவறில்லை…………. தமிழ்நாட்டு மக்களுக்கு மீன் கொடுக்கும் போது நன்றாக உப்பைப் போட்டு கொடுக்கச் சொல்ல வேண்டும். என்ன பண்ணினாலும் சொரணையே வரமாட்டேங்குது . செத்தவன் ஒரு மலையாளியாக இருந்தால் இன்று இந்தியாவின் நிலைமையே வேறாக அல்லவா இருந்திருக்கும். சொரணைக் கெட்டவன் தமிழன், சோற்றில் உப்பைப் போட்டு சாப்பிட வேண்டும்…………… !!! இல்லாவிட்டால் கொஞ்சம் மலையாளக் கரையோரம் போய்விட்டு வரவேண்டுகிறேன்……..

    • சபாஷ் , இந்த எண்ணம் உனக்குள் வந்திருக்கு பார்.
      இது தான் புரட்சியின் நல வித்து. புரட்ச்சியாளனின் ஆரம்ப எண்ணக்கருவே இதுதான்.
      தமிழினத்துக்காக யாருமே பேசவர மாட்டான். கதிரையைக் கட்டி ஆள்பவர்களைக் கல்லறைக்குள்
      அனுப்பிவிட்டு, நாம் தமிழர் என்று எழுந்து அடிப்போம். அடிக்கு அடிதான் மருந்து. தனித்
      தமிழ் நாடு கேட்பார்கள் என்று பயந்து தானே தனிப்பெருந் தலைவனின் தமிழீழப் போராட்டம்
      தன்னைத் தடுத்து நிறுத்தினார்கள். மடயர்களுக்குப் புரிய வைப்போம். அடிப்போம், அடிப்போம்.
      ஒன்றுபட்டு அடிப்போம். தமிழர்களின் தனிப்பெரும் ராச்சியத்தை நிறுவும் வரை அடிப்போம்.

    • எவ்வளவு எளிமையான விளக்கம்!!:
      “தனித் தமிழ் நாடு கேட்பார்கள் என்று பயந்து தானே தனிப்பெருந் தலைவனின் தமிழீழப் போராட்டம் தன்னைத் தடுத்து நிறுத்தினார்கள். மடயர்களுக்குப் புரிய வைப்போம். அடிப்போம், அடிப்போம்.
      ஒன்றுபட்டு அடிப்போம். தமிழர்களின் தனிப்பெரும் ராச்சியத்தை நிறுவும் வரை அடிப்போம்.” – Kathiravan

      புலிகள் யார் யாரை எல்லம் அடித்துத் தமிழ் மக்களின் போராட்டத்தையே தற்கொலைப் பாதையில் கொந்து சென்றார்கள்!

      என்றவது தமிழ்த் தேசியவதிகளுக்கு நண்பன் யார் எதிரி யார் என்று தெரிந்துள்ளதா. யரையாவது இன அடிப்படையில் திட்டித் தீர்ப்பது தான் அவர்களுக்கு விளங்குவது.

      ஈழத் தமிழர் கொடுத்துள்ள பெரிய விலைக்குப் பிறகும் இவர்கள் எதையும் படித்ததாகத் தெரியவில்லை.

  12. //மேற்கு நாடுகளில் ஒரு விபத்தில் ஓரிருவர் இறந்தாலே அது உலகச் செய்தியாக பேசப்படும். நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாம் நாடுகளில் நூற்றுக்கணக்கில் இறந்தாலும் அது கொசுக்கடி செய்தி போல பார்க்கப்படும்.//

    இதுக்கு எதுக்கு மேற்கு நாட்டுக்கெல்லாம் போகனும்? ஆஸ்திரேலியாவில் கொல்லப்படும் மேட்டுகுடி ‘இந்தி’யனுக்காக ‘இந்தி’யப் பத்திரிகைகளும், அரசும் என்ன ஆட்டம் போட்டனர்?

    ஆஸ்திரேலிய அரசு பதறித் துடித்து நடவடிக்கை எடுத்தப் பிறகுதானே விட்டார்கள்?

    ஜனவரி 26யை புறக்கணிக்கக் கோரி அன்று கருப்புக் கொடி அணியச் சொல்லி அனைவரையும் கோரலாம்.

  13. கொல்லப்பட்டது தமிழ் மீனவர் என்பதை சொல்லும் நாதாரிகள் அவர் இந்தியன் இல்லை என்பதை ஒத்து கொண்டு விட்டார்கள்….

    ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் சில ஹிந்திய போதையை குடித்த அப்துல் கலாம், கருணாநிதி, க.அன்பழகன் போன்ற நாதாரிகள் இந்தியா… இந்தியா என உளறி கொண்டே இருக்கிறார்கள்…

    குடியரசு தினம் குடிகாரர்களுக்கு என ஒரு பிள்ளை சாதாரணமாக சொன்னது உண்மை போலவே தெரிகிறது…

    தமிழ் நாட்டில் இருக்கும் இந்திய போதையை குடித்த நாதாரிகள்… போதையில் இந்தியா… இந்தியா என கொண்டாடுகிறார்களோ?

    • அது சரிங்கண்ண , இந்திய இறையாண்மை இந்திய இறையாண்மை என்று சில கேண கூலிகள் கூப்பாடு போடுகிறார்களே ! அப்படினா எனங்கன்ன ?

      • இந்தியாவின் இறைவன் என்பவன் யார்?

        ராமன், கிருஷ்ணன், ஹனுமன், ஐயப்பன், திருப்பதி வெங்கன், ஸ்ரீரங்கம் ரங்கன், மதுரை கள்ளழகன், காஞ்சி வரதன், நாகை சௌவுந்தன், தில்லை ஒண்டு குடி கோயிந்தன், தி.கேணி பார்த்தன், குடந்தை பிராடுகள் ச.பாணி(சக்கரபாணி), சா.பாணி(சாரங்கபாணி), திருக்கோட்டியூர் மாதவன் இவர்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்கு ஏவள் பணியாட்கள்…

        இந்த அத்துனை கடவுள்களும் பார்ப்பனர்களுக்கு கட்டுப்படும் போது… இந்திய இறையாண்மை என்பது பார்ப்பனர்களுக்கு கட்டுப்பட்டது.

        யாராவது பார்ப்பனீயத்தை எதிர்த்தால்… அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது…

        அப்புறம் இறைவனுக்கு நிகரான மோசடி கும்பல் உண்டு… அது அம்பானி, பிர்லா, டாடா, மிட்டல், இண்டியா சிமெண்ட் ஸ்ரீனு, டால்மியா… நாராயண மூர்த்தி, இந்துஜா, அமெரிக்க முதலாளிகள் இவர்களின் ஏவல் பணியாட்கள்… மன்மோகன், பிரனாப், சிதம்பரம், அத்வானி, சுசுமா, ஜேட்லி, சோரி, கமல்நாத், கபல்சபல், தயாநிதி…

        இந்த பண முதலைகளான மோசடி கும்பலை எதிர்த்தாலும்… அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது…

        இந்திய இறையாண்மையை பார்ப்பனீயமும், பண முதலைகளும்… மொத்த விலைக்கு வாங்கி வத்துள்ளனர்… அதனால் இறைவனும், இறையாண்மையும் மக்களுக்கானது அல்ல… மக்கள் விரோதிகளான பார்ப்பனீயத்திற்கும்… பண முதலைகளுக்கும் சொந்தமானது…

  14. இதற்கு முன்பு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட சமயங்களில் நம் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கை பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கிறார்கள். அதனால்தான் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்று பசப்பி வந்த இந்திய ஆளும் கும்பல் இப்போது இந்திய எல்லைக்குள்ளேயே கொல்லப்படுவதையும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.உண்மையில் கச்ச தீவை தாரை வார்த்த ஒப்பந்தத்திலேயே தமிழக மீனவர்கள் கச்ச தீவை தாண்டி இலங்கை கடற்பகுதியிலும் மீன்பிடிக்க பாரம்பரிய அடிப்படையில் உரிமை உடையவர்கள் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.ஆனால் மீனவர்களை பேராசைக்காரர்களாக சித்தரிக்கும் மோசடியை இந்திய கடற்படையும் ஆளும் கும்பலும் தொடர்ந்து செய்து வருகின்றன.

    இதற்கு பின்னரும் இந்திய அரசு நம் மீனவர்களை காப்பாற்றும் என எதிர்பார்ப்பது நரியின் நாட்டாமையில் ஆடுகளுக்கு நீதி கிடைக்கும் என நம்புவதற்கு ஒப்பாகும். தங்களை தற்காத்து கொள்ள தமிழக மீனவர்கள் ஆயுதம் தாங்கியே கடலாட செல்ல வேண்டும்.கள்ள துப்பாக்கியல்ல.உரிமையோடு எடுத்து செல்ல வேண்டும்.அவர்களுக்கு ஆயுதம் ஏந்தி மீன்பிடிக்க செல்லும் உரிமையும் ஆயுதங்களும் வழங்க கோரி மைய மாநில அரசுகளை வலியுறுத்தி அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ் மக்கள் போராட வேண்டிய தருணமிது.

  15. வழக்கமான ஒன்றுதான்…!

    ‘இங்குள்ள இலங்கைத் தூதரகத்தை
    இந்த விவகாரத்தில் கவனமாக இருக்குமாறு
    அல்லது கருணைகூர்ந்து
    பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்’ –
    ப்ரணாப் அறிக்கை விடுவார்.
    வழக்கமான ஒன்றுதான்…!

    மன்மோகனுக்கு கருணா நிதியிடமிருந்து
    லெட்டர் ஏவுகணைகளும்,
    ‘தந்தித்’ தடவல்களும்
    பறந்து போகும்.
    வழக்கமான ஒன்றுதான்…!

    சிதம்பரத்தின் அன்ன நடை
    இந்த நிகழ்வுகளில்
    நிதானத்தைக் கடைப்பிடிக்கும்.
    வழக்கமான ஒன்றுதான்…!

    தினத்தந்தியில்
    ‘குடிகாரன் அம்மிக்கல்லால்
    மனைவியைக் கொன்றான்’
    என்கிற வாக்கில் இந்த செய்தியிருக்கும்.
    வழக்கமான ஒன்றுதான்…!

    இந்த புஷ்பவனத்து மீனவன்
    நடுக்கடலில் தூக்கிலிடப்பட்டும்
    எங்கோ ஒரு நகரத்து மேடையில்
    நோட்டுக்குப் பாட்டுப்பாடும்
    புஷ்பவனம் குப்புசாமியின்
    டப்பாங்குத்துப் பாட்டு
    பாடப்பட்டுக்கொண்டேதான் இருக்கும்.
    வழக்கமான ஒன்றுதான்…!

    எல்லாம் அறிந்தும்
    சுரணையற்றுத் திரியும்
    தமிழ்ப் பரம்பரை.
    வழக்கமான ஒன்றுதான்…!

  16. //ஒரு அமெரிக்கன் ஒரு விபச்சார வழக்கில் உசிலம்பட்டியில் சிக்கினால் கூட அடுத்த கணம் அவனது தூதரகம் ஓடி வந்து உதவி செய்யும். ஆனால் ஒரு இந்தியக் குடிமகன், அவனது தொழில் செய்யும் இடத்தில் அண்டை நாட்டு கடற்படையால் கொல்லப்படுகிறான். இதற்கு முன் நூற்றுக்கணக்கில் அப்படி கொல்லப்பட்டும் எந்த நாதியும் இல்லை. பிறகு ஏன் இதற்கு இந்தியா என்று பெயர் வைத்து தேசபக்தி, தேசியக் கொடி, என்று உருகுகிறார்கள்?

    //
    சவுக்கடி…

  17. ஆளுக்கொரு கருத்து எதுவும் நடைமுறைக்கு சாத்தியமாகது.அண்டா,குண்டா ஆள்துாக்கி சட்டத்தால் முடங்கி கிடக்கும் நிலைதான் ஏற்படும்.மீனவர் போராட்டமும் ஆறுதலாக இல்லை. வினவு சொல்ற தீர்வு தான் எதிர்காலத்தில் சாத்தியமாகும்.மற்றபடி எதுவும் மயிர்பிளக்கும் விவாதம்தான். மத்திய ,மாநிலஅரசை நிர்ப்பந்திக்கும் போர்க்குணமிக்க போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெறவேண்டும். இது கெஞ்சியோ அல்லது மனுக்கொடுத்தோ அல்ல. மத்திய அரசின் பணிகள் இங்கே நடைபெறாமல் இருக்கும் வண்ணம் மக்கள் போராட்டம் தடை போடவேண்டும். அப்போதுதான் தமிழகத்தை தாண்டி இருக்கும் இந்திய மனநிலையில் ஒரு அதிர்ச்சியை கொண்டுவரமுடியும்

  18. நம்ம தமிழினத் தலைவர், தன்னோட கட்சிக்காரங்க பதவி பிரச்சினைன்னா மட்டும் டெல்லிக்கு நேரில போயி பேசுவாரு. இதுவே மக்கள் பிரச்சினைன்னா கடிதம் எழுதுனாவே போதும். அவங்களும் சும்மா ஒரு கண்டனம் மட்டும் தெரிவிச்சுவாங்க.

    பாகிஸ்தானில் வாழும் சீக்கியனுக்கு ஏதாவது பிரச்சினைனாலே நேரடியாக கண்டனம் தெரிவுக்கும் மன்மோகன் சிங், இங்கே இந்திய மீனவன் கொல்லப்படும்போது கூட எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதிலேயே தெரியவில்லையா இவர்களின் அக்கறை.

    நிச்சயமாக ஒரு பெரும் போராட்டம் மூலம் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்த தவறியது நம் தவறே…

  19. மீனவர்கள் படுகொலை மட்டுமல்ல வேறெந்தப் பகுதி உழைக்கும் மக்கள் கொல்லப்பட்டாலும் பாதிக்கப்பட்டாலும் ஆளும் கட்சியோ எதிர்க் கட்சியோ எதுவும் செய்யாது. இவர்கள் கட்சி நடத்துவதே சுயநலத்திற்காக. ஆளும் கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தவதற்கே காசு கொடுத்து ஆட்களைக்கூட்டி வரும் இவர்கள் எப்படி மீனவர்களுக்காகப் போராடுவார்கள்? காசு வாங்கிக்கொண்டு போராட்டத்திற்கு வரும் தொண்டர்கள் எப்படி மீனவர்களுக்காக குரல் கொடுப்பார்கள்? இத்தகைய பிழைப்புவாதக் கட்சிகளும் பிழைப்புவாதிகளுக்குப் பின்னால் மக்களும் இருக்கும் வரை நாம் நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கப் போவதில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுகிற நாமெல்லாம் முதலில் ஒன்று சேர வேண்டும். பிழைப்புவாதக் கட்சிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து நம்பின்னே கொண்டு வரவேண்டும். அப்பொழுது வேண்டுமானால் நமது விருப்பப்படி போராட்டம் நடத்த முடியும். மத்திய அரசை நிர்ப்பந்திக்க முடியும். முதலில் அதற்காக முயற்சிப்போம்.

  20. இவ்விடுகையின் பின்னூட்டங்களில் பலரும் வலியுறுத்தியது போல தமிழக மீனவர்களுக்கு இலவசமாக சுடுதிறன் ஆயுதங்களும்,ஆயுதம் ஏந்தும் உரிமமும் வழங்குமாறு மைய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் மனுதாக்கல் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்குமாறு அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க