Tuesday, March 21, 2023
முகப்புவாழ்க்கைஅனுபவம்கணவனுக்கு எழுத முடியாத கடிதம்.....

கணவனுக்கு எழுத முடியாத கடிதம்…..

-

உழைக்கும் மகளிர் தின சிறப்புப் பதிவு – 1

வினவு முன் குறிப்பு:

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் உழைக்கும் மகளிர் தினத்திற்காக பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் பங்களிப்புடன் வினவுக்கு வரும் கட்டுரைகளை வெளியிடுகிறோம். இந்த முதல் கட்டுரை எழுதிய வாசகி அவரது மன உணர்வுகளை, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை, ஆழவும், அகலமுமாய் அழுத்திக் கொண்டிருக்கும் மனக்குமுறல்களை இங்கே பதிவு செய்கிறார். இந்தக் கடிதம் அவரது கணவரை நோக்கி எழுதப்பட்டாலும், அப்படி அவரது கணவனிடம் பேச முடியாது என்பதுதான் யதார்த்தம். குடும்பப் பிரச்சினைகள் என்று பொதுப்புத்தியில் டி.வி சீரியல் வழியாக பதிந்திருக்கும் ஜோடனைகளை கலைத்துவிட்டு மனைவி என்ற சுமையாகிப் போன வேலையோடு வாழும் பெண்ணின் மனதை இந்தக் கடிதம் கொந்தளிப்போடு ஒரு சித்திரமாக உணரவைக்கிறது. ஆண் என்ற அதிகாரத்தில் வாழும் ஆண்டைகளும், பெண் என்ற அடிமை நிலையை ஏற்றுக் கொண்ட பெண்களும் என்ற சமூக யதார்த்தத்தில் இந்தக் கடிதம் துயரத்துடன் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. இனிக் கடிதத்தை படியுங்கள்…..

_______________________________________________

ந்தக் கடிதத்தை நான் யாருக்காக எழுதுகிறேன். எனக்காகவா? இல்லை என் மனதில் உள்ளதை இந்தக் கடிதம் மூலம் உனக்கு தெரியப்படுத்தவா? இதனால் எனக்கு ஏதாவது தீர்வு கிடைக்கும் என்ற நப்பாசையா? இல்லை..எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை…என் மன உணர்வுகளை உன்னால் புரிந்து கொள்ள முடியாமல் போன மன அழுத்தத்திலிருந்து விடுபடவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

என் அம்மாவை கருவியாகக் கொண்டு இந்த உலகத்தில் எட்டிப் பார்த்த என்னை “அடடா! மூக்கும் முழியும் எப்படி இருக்கு பாரு? உன்னை எந்த மவராசன் வந்து கொத்திக்கொண்டு போகப்போறானோ?” என்று யாரோ சில பெண்கள் கேட்டு வைத்து எனக்கும், உனக்குமான (நிர்) பந்தத்தை அப்போதே ஏற்படுத்தி விட்டார்கள் என்று அம்மா சொன்னார். என்னைப் போல் நீ பிறந்த போதும், “நீ சிங்கக்குட்டிடா! எத்தனை பேரை ‘அடக்கி’, ‘ஆள’ப்பிறந்திருக்கிறாயோ?” என்று உனது ஆணாதிக்கத்தை எத்தனை பேர் தலை தூக்கி நிறுத்தி வைத்தார்களோ? தெரியவில்லை…ஆனால் நீ உன் கோபத்தை ‘அடக்கி’, ஒரு பெண்ணின் மனதை ‘ஆளப்’ பிறந்திருக்கிறாய் என்று யாராவது உனக்கு தெளிவாக சொல்லிக் கொடுத்திருக்கலாம்.

எத்தனையோ கனவுகளுடன் சுற்றித் திரிந்த என்னை, “அத்தனை கனவுகளையும் உன் கணவனின் காலடியில் போட்டுவிடு. அவன் தான் உன் கனவுகளுக்கு உரம் போடுபவன்” என்ற மந்திரங்களையெல்லாம் ஓதி என்னை உன் கையில் பிடித்துக் கொடுத்தார்களே….அவர்களுக்குத் தெரியுமா? நான் சுமக்கப்போவது உன் கனவுகளை மட்டும் தான் என்று.

பிறந்து வீட்டில் சொகுசாக வளர்ந்த என்னை, ‘நீதான் எனக்கு’ என்று முடிவான பிறகு அத்தனை ஆயக்கலைகளையும் கற்றுக்கொள்ள தயார்படுத்தினார்களே..இல்லாவிட்டால் நான் நல்ல மருமகளாக இருக்க முடியாது என்று சொல்லி அனுப்பினார்களே…பிறந்த வீட்டுப்பிரிவையும், உன் அருகாமையில் கிடைக்கும் வெட்கத்தையும், புது வீட்டு சொந்தங்களை பற்றித் தெரியாத தயக்கத்தையும் சுமந்து கொண்டு வந்த எனக்கு, உன் வார்த்தை அன்பு, அம்பாக மாறி என் மனதை குத்திக்கிழிக்கப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

திருமணத்துக்கு முன்பு நீ பேசும்போதெல்லாம், “இந்த திருமணம் நின்று விட்டால் உன்னை எங்காவது கடத்திக்கொண்டு கூட போய்விடுவேன்..நீ இல்லாத வாழ்க்கை எனக்கொரு வாழ்க்கையா?” என்று அன்பை பொழிந்தாயே…அப்போது என் முட்டாள் மனதுக்குத் தெரியவில்லை, திருமணமான ஒரே வாரத்தில் நீ உன் சுயரூபத்தை காட்டப்போகிறாய் என்று.

திருமணமானவுடன் மேலே படிக்கலாம் என்ற கனவுடன் இருந்த என்னை, “முதலில் புருஷனுக்கு தேவையானதை செய், அவனுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று தெரிந்து வைத்துக்கொள். அப்புறம் உன் சமத்து..உன் அப்பாவை பணம் அனுப்ப சொல்லி மேலே படித்துக்கொள்” என்று மாமியாருக்கே உள்ள அக்கறையைக் காட்டிய போது அசந்துதான் போனேன். அதெப்படி இந்த எலும்பில்லாத நாக்குக்கு சக்கரையைத் தடவவும், விஷத்தைக் கக்கவும் முடிகிறது? ஆச்சரியம்தான்!

சமையல் வேலையை நான் தெரிந்து வைத்திருக்கிறேனா என்பதை, வந்த முதல் நாளே டெஸ்ட் செய்து பார்த்த போது பயந்து நடுங்கித்தான் போனேன், இன்னும் எதற்கெல்லாம் டெஸ்ட் வைப்பார்களோ என்று. ‘அப்பாடா! ஒரு வழியாக சமாளித்தோமே’ என்று நானாக ஆசுவாசப்படுத்திக் கொண்ட வேளையில், மாமியார் இன்னொரு மருமகளான உன் அண்ணியைப் பார்த்து,  “நீ இப்படி சமைப்பாயா?” என்று கேட்டு வைத்து தொலைக்க, அவள் அதற்கு மேல் என்னுடன் ஒட்டாமல் என்னை விட்டு தள்ளியே இருந்துவிட்டாள். அதற்கும் மேல் அவளுக்கு என் மேல் என்ன வன்மமோ? புகுந்த வீட்டுக்குள் இப்படி ஒரு அரசியல் இருக்கும் என்பதை புதிதாக வந்த நான் எப்படி அறிவேன்?

இரண்டு மருமகள்கள் சேர்ந்தால் நம்மை ஆட்டிப்படைத்து விடுவார்கள் என்ற பயமோ என்னமோ, இருவரையும் ஆரம்பத்திலேயே பிரித்து வைக்கும் சூட்சுமம் உன் அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது. உன் அண்ணியை என் கூடப்பிறந்த அக்காவைப் போல் நினைத்தேனே..ஆனால் அவள், என் கணவனான உனக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் எனக்கும் கொடுக்க மறந்தாள்?

உறவுகளுக்குள்ளேயே கணவனையும், மனைவியையும் வேறு வேறு இடத்தில் வைக்க, புகுந்த வீட்டு உறவுகளால் மட்டும் தான் முடிகிறது. நானும் உனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஏன் உன் உறவினர்களுக்கு புரிய வைக்க நீ முயற்சிக்கவில்லை? அவர்கள் அடித்துக்கொண்டால் என்ன? நாம் தப்பித்தோமே என்ற  எல்லா ஆண்களின் மனோபாவம் தான் உனக்கும். ‘ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்’ என்று சொல்வதைப் போல இரண்டு பெண்கள் அடித்துக் கொண்டால் ஆண்களுக்குத்தான் கொண்டாட்டம் என்பது ஏன் இந்தப் பெண்களுக்கு புரிவதில்லை? இப்படி புரியாமல் இருப்பதுதானே ஆண்களின் பலம்.

திருமணமான ஒரு வாரத்திலேயே சீர், செனத்திகளை வாங்குவதற்காக என் அப்பா, அம்மாவுடன் அடித்துக்கொட்டுகிற மழையில் ஒவ்வொரு கடையாக ஏறி, இறங்கினோமே..அப்போது டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் எல்லாம் இந்த இந்த அளவுகளில் வேண்டும் என்று நீ என் காதில் கிசுகிசுத்துக்கொண்டு வந்த போதெல்லாம் அது விளையாட்டு என்றுதானே நினைத்தேன். சமையல் பாத்திரங்கள், டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவிடி ப்ளேயர், கட்டில், பீரோ என்று அத்தனை பொருட்களும் அப்பா போட்டு வைத்திருந்த பட்ஜெட்டுக்குள் அடங்கிப்போனதில் உனக்கு என்ன வருத்தம் இருந்ததோ? அதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. கடைசியாக ஸ்பீக்க்கர் மட்டும் வாங்க முடியாமல் போனதால் உனக்கு என் வீட்டார் மேல் எந்தளவுக்கு கோபம் இருந்ததோ?

உன்னிடம் அன்பை மட்டுமே எதிர்பார்த்து வந்த எனக்கு, சீர் பொருட்களில் ஏதோ ஒன்று குறைந்ததை பெரிய கெளரவப் பிரச்சினையாக நீ ஆக்கிய போதும், அதையே திரும்ப திரும்ப சொல்லிக்காட்டிய போதும் அதிர்ச்சியில் உறைந்துதான் போனேன். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. தொண்டையிலும்  ஏதோ கசந்தது. முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் என்னவோ? என் வாழ்க்கையை வியாபாரமாக்கிய அப்பா, அம்மாவின் மேல் கோபம் வந்தது.

அத்தனை கசப்புகளையும் மென்று முழுங்கிவிட்டு, வாழ்க்கை இப்படியும் இருக்கும் என்ற யதார்த்தை உணர்ந்து, ஆசையாக உன்னிடம் “என்னங்க..நான் ஒண்ணு கேட்கட்டுமா?” என்று ஆரம்பித்தால், “என்ன வேணும்னாலும் கேளு..ஆனா நகை வேணும்னு மட்டும் கேட்டிராத..அதுக்கெல்லாம் உங்க அப்பா இருக்காரு..உங்க அப்பா அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாதும்மா” சட்டென்று முகத்திலடித்தாற்போல் பேசிய பேச்சுக்கள் ரொம்ப நேரம் காதை விட்டு நீங்க மறுத்தது. அப்போதும் அவன் அன்பாக இல்லாவிட்டால் என்ன? நான் அதைவிட அன்பை அள்ளித்தருவேன் என்று நானே எனக்கு செய்து கொண்ட சமாதானம் தான் இன்னும் என் வாழ்க்கையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறதோ…

பாஷை தெரியாத ஊரில் புது மனைவியாக வந்த என்னை தனியாக வீட்டிலேயே விட்டுவிட்டு ஏற்கனவே நீ இருந்த உன் அண்ணன் வீடே கதி என்று போய்விட்டாய். நீ அங்குதான் இருக்கிறாய் என்பது கூட தெரியாமல் உனக்காக ஆசை ஆசையாக சமைப்பதும், உனக்காக நான் காத்துக்கொண்டே இருந்ததும், உனக்காகவே பூ வைத்து, பொட்டு வைத்து சே! வீட்டைச் சுற்றிப்பார்க்கும் போது வீடும் மட்டுமல்ல…என் மனதும் வெறுமையாக இருந்தது. எனக்குப் பிடிக்கவே பிடிக்காத தனிமை! உனக்கு அதுதான் சந்தோஷம் என்று தெரிந்திருந்தால் நானும் உன்னுடய சந்தோஷங்களில் ஒரு தோழியாக பங்கெடுத்திருப்பேன். ஆனால் அதற்கும் நீ இடம் கொடுக்காமல் போனது எப்படி? நாம் இருவர் மட்டுமே பேசிக்கொள்ளும் வார்த்தைகள் எல்லாம் உனக்கு அண்ணியாக வாய்த்தவளுக்கு எப்படி தெரிந்தது?

ஏன் இதையெல்லாம் போய் அடுத்தவரிடம் சொல்கிறீர்கள் என்று கேட்டால் “நீ இப்போது வந்தவள், அவர்கள் என் கூடவே இருப்பவர்கள்” என்று நீ சொன்னபோது, பழைய உறவுகளை மறக்காமல் இருக்கும் ஆணாக பெருமைப்படுவேனா இல்லை என் மனதைப் புரிந்துகொள்ளாத கணவன் என்று வருத்தப்படுவேனா…. அண்ணியாக வாக்கப்பட்டவளோ, ஏதோ ஒரு நாள் என் முன்னால் அவளை மட்டம் தட்டிப் பேசிய மாமியாரை கேள்வி கேட்க தைரியமில்லாமல், என் மேல் கோபம்கொண்டு ஏன் தள்ளி வைத்தாள்? அதையும் நான் உனக்கு புரிய வைக்க முயற்சி செய்தால் அதைக் காதில் வாங்காத ஒரு அலட்சியம் எனக்கு கண்ணீராக முட்டிக்கொண்டு வந்ததை நீ அறிவாயா?

என்றோ வீசிய என் முற்போக்கு சிந்தனைகள், வார்த்தைகள் எல்லாம் இன்று இந்த தனிமையில் சுக்கு நூறாய் உடைந்து போனது யாருக்குத் தெரியப்போகிறது? தன் மனைவியின் கண்களில் காதலைத் தேடும் கணவன், அதே கண்களில் அவள் மனதையும் தேடாமல் இருப்பது எப்படி என்றுதான் எனக்கு இன்னும் விளங்கவில்லை.

திருமணமான பிறகும் குடியும், கும்மாளமுமாக பொழுதைக் கழிப்பதில் உனக்கு என்ன சந்தோஷமோ? உன்னை சுற்றியிருக்கும் சுவாரஸ்யங்களைத் தொலைத்து விட்டு எதில் தேடுகிறாய் உன் சந்தோஷத்தை? குடியும், புகையும் மட்டுமே வாழ்க்கையின் முதல் சந்தோஷம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் உன்னைப்பற்றி ஏன் உன் பெற்றோர்கள் முழுதாக அறியவில்லை? திருமணத்திற்குப் பிறகு மகன் செய்யும் சின்ன சின்னத் தவறுகளை பெற்றோர்கள் கண்டும், காணாமல் இருக்கிறார்களா அல்லது இருப்பது போல் நடிக்கிறார்களா? இன்னும் எனக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை.

உன் உடல்நிலையை மனதில் கொண்டு, உன் பெற்றோர் சொன்னாலாவது நீ திருந்தலாம் என்ற நம்பிக்கையில் அவர்களிடம் சொன்னால், அதற்கும் அவர்கள், “ஆண் பிள்ளை அப்படித்தான் இருப்பான். உனக்கு என் மகனை மயக்கத் தெரியவில்லை” என்று சம்மட்டியால் அடித்தது போல் சொன்னதில் நன்றாகவே அடையாளம் தெரிந்து கொண்டேன் சுயநலவாதிகளை.

சமயத்திற்கு தகுந்தாற்போல் பெண்களை சாடுவதில் இந்த சமூகத்திற்குத்தான் எத்தனை ஆசை!வேலைக்குப் போகும் பெண்ணா? “உனக்கு சம்பாதிக்கும் திமிர்” என்பதும், அதிகம் பேசினால் “வாயாடி”, அமைதியாக இருந்தால் “ஊமைக்கொட்டான் மாதிரி இருந்துக்கிட்டு…” என்று பட்டம் கொடுப்பதும், கணவனை சொல்பேச்சுக் கேட்க வைத்தால், “மயக்கி விட்டாள்” என்று சொல்வதும், அதே கணவன் மனைவி சொல்வதை கேட்காமல் இருந்தால், “மயக்கத் தெரியவில்லை” என்பதும் அப்பப்பா! போதுமடா சாமி! ஒரு பெண் படித்து பட்டம் பெறுகிறாளோ, இல்லையோ இந்த சமூகம் அவள் கேட்காமலேயே அத்தனை பட்டத்தையும் கொடுத்து விடுகிறது அதுவும் பெண்களாலேயே. வெளியுலகில் சாதிப்பதைத்தான் இத்தனை நாள் சாதனை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை…குடும்ப உறவுகளுடன் போராடுவதும் பெண்களுக்கு மிகப்பெரிய சாதனைதான்.

திருமணத்திற்கு பிறகு வரும் ஒவ்வொரு பண்டிகையும் தலை தீபாவளி, தலைப்பொங்கல் என்ற பெயரில் வசூல் வேட்டையை நடத்தும் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை. தலைப்பொங்கல் வந்தபோது, “உன் அப்பாவை ஒரு ஐயாயிரம் பணம் அனுப்பச்சொல்” என்று வாய் கூசாமல் உன் அம்மா கேட்டபோது, அவர்களுக்கு இல்லவே இல்லாத வெட்கத்தால் வெட்கித் தலைகுனிந்தேன். இதற்கு மேலும் நான் வாயைத் திறக்காமல் இருக்க வேண்டும் என்று எப்படி நீ எதிர்பார்த்தாய்? எந்த மருமகளும் இவர்களை எதிர்த்து பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டா வருகிறாள்? எவ்வளவு கொடுத்தாலும் தீரவே தீராத இந்த வரதட்சணை ஆசை எந்தப் பெண்ணுக்கும் அருவெறுப்பைத் தராதா?

எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மறுக்காத உன் கைகள் ஏன் என் பிறந்த வீட்டுக்கு செய்ய வேண்டுமென்றால் மட்டும் பின்வாங்குகிறது? உன் அப்பா, அம்மாவையும் மிஞ்சிய ஆண்பிள்ளையாக உன்னைப் பார்க்கும் போது எந்த பெண்தான் ஆவேசப்படாமல் இருப்பாள். இன்னும் எனக்குத் தேவையான விஷயங்களை என் அப்பாவிடம் உரிமையாக கேட்பதுபோல் உன்னிடம் கேட்க முடிவதில்லை. இந்த விரிசல் ஏன் என்பதை யோசிக்கக்கூட உனக்கு அவகாசம் இல்லை? நம்மைத் தொல்லைப்படுத்தாமல் இருக்கும்வரை நமக்கு லாபம் என்ற சுயநலமான மனம்.

குழந்தை பிறந்தால் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நினைப்பில் உன் கருவை ஆசையாக நான் சுமந்தபோது எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியான மாற்றத்தை உன்னால் மட்டும் ஏன் உணர முடியாமல் போனது? கருவை சுமந்த நேரத்தில் கூட ஆறுதலான ஒரு பேச்சோ, அரவணைப்போ இல்லாத ஜடமாய் எப்படி நீ மாறிப்போனாய்? குழந்தை பெற்றுத் திரும்பிய உடனேயே, என் அன்பை கொஞ்சம் கொஞ்சமாக உணர வைத்துக்கொண்டிருந்த தருணத்தில் உன் அஜாக்கிரதையால் வேலையை இழந்து வந்தாய். அப்போதும் உன் மேல் முன்னைவிட அன்பாகத்தானே இருந்தேன்…

பிள்ளை வந்த நேரம் அப்பன் வேலை போச்சு என்று உன் வீட்டார் என் மனதைக் காயப்படுத்திய போதும் உனக்கு ஆதரவாக இருந்த அந்த தருணத்தை உன்னால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா? உன் கல் நெஞ்சைக் கரைக்கும் கருவியாகவே மாறிப்போன நம் குழந்தையுடன் வேலையில்லாத உன்னையும் சேர்த்து தேற்றினேனே..அதில் உனக்கு தெரியவில்லையா என்னுடைய எதிர்பார்ப்பில்லாத அன்பு.

பிரச்சினை கொடுத்த இந்த இடத்தில் நாம் இருக்க வேண்டாம் என்று வேலையுடன் வேறு இடத்தில் வந்தவுடனாவது நீ மாறிவிடுவாய் என்று நினைத்தேனே…எதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கும் உனக்கு தண்ணியடிப்பதிலும், தம்மடிப்பதிலும் மட்டும் எப்படி ஒரு ஆர்வத்தைக் கொண்டுவர முடிந்தது? வாழ்க்கையே அதைச் சுற்றித்தான் இருக்கிறது என்று நீயாக எழுப்பியிருக்கும் கோட்டையை உடைக்க முடியாமல், அதிலேயே மாட்டிக்கொண்ட என் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தாயா?

உன்னைத் திருத்த‌ நான் எடுத்த முயற்சிகளை எல்லாம் தோற்கடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அதிலிருந்து தப்பிக்கவும் நீயாகவே ஒரு வழியைத் தேடிக்கண்டுபிடித்தாயே….கையில் கைக்குழந்தையுடன் பின்னிரவு வரை வீட்டில் தனியாக அழுது கொண்டிருந்ததை பொறுக்காத என் அப்பா, “உங்கள் மகனிடம் எடுத்து சொல்லுங்கள்” என்று வேதனையுடன் சொன்னதை நீயும், உன் பெற்றோர்களும் இவர்கள் யார் நம்மை கேள்வி கேட்க என்ற ஈகோவுடன் என்னை வார்த்தைகளால் குத்திக் கிழித்தபோது இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று தான் நினைத்தேன்.

உன் தவறுகளிலிருந்து நீ தப்பித்துக் கொள்வதற்காகவும், உன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற ஆணாதிக்கத்தாலும், “உங்களைப் பற்றி தவறாக பேசுகிறாள். அதனால் தான் நான் இப்படி லேட்டாக வருகிறேன்” என்று உன் பெற்றோர்களிடம் என்னைப் பற்றி தவறாகக் கூறி என் தலையில் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாயே….இந்த சாதுர்யம் யாருக்கு வரும்? இதற்கு மேலும் உன்னைத் திருத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வருமா? தப்பித்துக்கொள்ள இப்படி ஒரு வழி இருக்கும் என்று ஏன் என் முட்டாள் மனதுக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும் தொல்லையாக நினைத்து பிறந்த வீட்டிலேயே விட்டுவிட்டு வருவதும், அதிலிருந்து மீண்டு நானாகவே வெளியில் வருவதும் யாருக்காக என்று பல நேரம் புரியாமல் குழம்பித் தவிக்கிறேன்.

என் வாழ்க்கை எதை நோக்கிப் பயணிக்கிறது என்று நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு பைத்தியக்கார ஆஸ்பத்திரியே நினைவுக்கு வருகிறது. அந்த நினைப்பில் குழந்தை முகம் தெரியும்போது நானாகவே விழித்துக் கொள்கிறேன். அவள் முகத்தில் இருக்கும் மழலைச் சிரிப்பை கவனிக்கும்போது வாழ்க்கையை கொஞ்சம் பிடித்துக்கொள்கிறேன்.

டி.வியில் வரும் பெண்கள், வீதியில் வரும் பெண்கள் அனைவரையும் பாகுபாடில்லாமல் அலட்சியப் பார்வை வீசும் உனக்கு என் வீட்டுப்பிரச்சினையை எள்ளி நகையாடவும், அந்தப் பிரச்சினையில் குளிர்காய்வதற்கும் சொல்லியா தர வேண்டும்? பெரியவர்களின் குழப்பங்களுக்கெல்லாம் பலிகடா ஆக்கப்படுவது வீட்டிற்கு வரும் மருமகள் தானா? இன்னும் எத்தனை வருடங்கள் இப்படியே ஓடும் என்று நினைக்கும் போது மன அழுத்தம் அதிகமாகிறது. இந்தப் பெண்களுக்குத்தான் இன்னும் எத்தனை எத்தனைப் பிரச்சினைகள்?

வீட்டிற்குள் என்னை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பதும், வெளியில் கொஞ்சம் பெருமையாக பேசுவதும் என்ற உன் இரண்டுபட்ட மனநிலை என்னைப் பல நேரம் ஆச்சரியப்பட வைக்கிறது. காலையில் இருந்து இரவு வரை எதற்காகவாவது கத்திக் கொண்டே இருப்பதும், இரவானால் இரண்டு அன்பான வார்த்தைகளை உதிப்பதும் ஏன் எனக்கு இத்தனை நாள் உறைக்கவில்லை? என் பிறந்த வீட்டுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் ஆறுதல் சொல்வது போல் அதை மேலும் கிளறி விடுவது என்ன ஒரு தந்திரம்? அதிலும் நிறைய குளிர்காய்ந்து விட்டு ஒன்றும் தெரியாத குழந்தை இமேஜை கொண்டு வந்துவிடுகிறாயே..அந்த சைக்கோத்தனம் என்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?

எனக்கு வரதட்சணையாகத் தந்த நகைகளை என் வீட்டு விசேஷங்களுக்கு கூட போடவிடாமல் வம்பிழுத்த போது, என் பெற்றோர்கள் உன் அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டு அத்தனையும் பிடுங்கிக்கொண்டு வந்தார்கள். இந்தப் பெரியவர்களின் பிரச்சினையில் நீ ஏன் என்னை மட்டும் இன்னும் காயப்படுத்திக் கொண்டேயிருக்கிறாய்? நான் உன்னிடம் எதிர்பார்த்தது அன்பை மட்டும் தான், ஆனால் அந்த அன்பையும் பெறுவதற்கு, அத்தனை இடிகளை வாங்கியும்,  இன்னும் உன்னிடமிருந்து முழுதாக கிடைக்காமல் தவிக்கிறேனே….அத்தனையும் பொறுத்துக் கொண்டாலும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கூட உன் அன்பைக் காட்டத் தெரியாமல் இருப்பது எனக்கு ஆத்திரத்தைக் கொடுக்கிறது. அந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் என் உடல் பலத்தையும் இழக்கிறேன்.

நீ உன் பிறந்த வீட்டுக்குப் போ என்று விளையாட்டாக சொன்னாலும் மனம் பதைபதைக்கிறது. பிரச்சினையால் என்னையே தாங்கிக் கொண்டே இருப்பதால் என் கூடப் பிறந்தவர்களுக்கும் பெற்றோர்கள் மீது கோபம். திருமணத்திற்கு முன்னால் பிறந்த வீடாவது இருந்தது. ஆனால் புகுந்த வீடு கைவிட்டால் பிறந்த வீடும் நிரந்தரமில்லை. இது பெண்களுக்கே விதிக்கப்பட்ட சாபக்கேடோ!

ரோட்டில் போகும்போது ஆயிரம் பெண்களை நீ ரசித்தாலும் நான் இந்த நடிகனைப் பிடிக்கும் என்று சொன்னால் போதும். உன் தலையில் என்னென்ன கற்பனைகள் ஓடுமோ? பெண் மனசு ஆழம் என்று யார் எழுதி வைத்தார்கள், கணவன் எதை மனதில் வைத்து எதை வெளிப்படுத்துகிறான் என்று புரியாமல் இன்னும் எத்தனைப் பெண்கள் என்னைப்போல் இருக்கிறார்களோ? உன் தாழ்வு மனப்பான்மையால் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை இழந்து விட்டு, அதை வெளிக்காட்டினால் இந்த உலகம் ஏசும் என்பதால் அந்தப் பழியையும் என்னையே தாங்கிக்கொள்ள சொல்வது நியாயமா?

எனக்கு பொறாமை வரவேண்டும் என்பதற்காக நீ காட்டும் சீண்டல்களால் எனக்கு பயமில்லை. உன் மனதையும் அப்படி ஒருத்தி கரைத்து விட்டால் அதைவிட சந்தோஷம் எனக்கு வேறெதுவுமில்லை. அப்படியாவது ஒரு பெண்ணின் மனதை நீ அறிந்து வந்தால் சரிதான்!

உனக்குத் தெரியுமா? உன்னை என் கணவனாக பார்க்காமல் என்னைப்போல் நீயும் ஒரு உயிர் என்று நினைப்பதால்தான் இன்னும் உனக்கு சேவை செய்யமுடிகிறது. உன்னைப் பெற்றவர்களை மாமனார், மாமியார் என்று நினைக்காமல் வயதான அப்பா, அம்மா என்று நினைப்பதால் தான் உறவுகளைத் தாண்டிய மனிதாபிமானத்துடன் அவர்களை தாங்கிக்கொள்ள முடிகிறது. இதையெல்லாம் என்று நீ உணரப்போகிறாயோ?

உன் வாழ்க்கையில் பிடிப்பு வர ஒரு வேலையைத் தேடிக்கொள் என்று அனைவரும் சொல்லும்போது, “எதை வேண்டுமானாலும் செய்” என்று அப்போதைய நல்லபிள்ளையாக சொல்லிவிட்டு, அதற்கு மேல் எதையும் யோசிக்க விடாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை விஷயங்களையும் விஷ ஊசி போல் ஏற்றிவிடுவது எனக்கு இப்போது புரியாமல் இல்லை. உன்னை விட்டு மொத்தமாக வெளியில் வந்தால் தான் எனக்கான பிடிப்பை நான் தேடிக்கொள்ள முடியும் என்பதை நான் எப்படி மற்றவர்களுக்கு சொல்வேன்? இன்னும் நான் வேலைக்குப் போனால் உன் ஈகோவால் இன்னும் என்னென்ன பிரச்சினைகளை எனக்குள் திணிப்பாய் என்று நினைக்கும்போது இந்த நிம்மதியே போதும் என்று என் மனம் ஆறுதல் அடைகிறது.

நான் இல்லாத வாழ்க்கையிலும் உன்னை சீண்ட யாருமிருக்க மாட்டார்கள் என்று நினைக்கும் போது திரும்பவும் உன்னையே நினைத்துக் கவலைப்படுகிறேன். “என்னையே எனக்குப் பிடிக்கவில்லை” என்று சிகரெட்டை ஊதித்தள்ளும் போது உன்னைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். ஆனால் அதை நான் எப்போது சொன்னேன் என்பது போல உன் ஈகோவால் என்னைத் தட்டிக்கழிக்கும்போது சே! என்ன மனிதன் இவன்? என்று எரிச்சலடைகிறேன்.

நான் உனக்கு அன்பான மனைவிதான்
உன் சுதந்திரத்தில் நான் தலையிடாமல் இருக்கும் வரை;

நான் உனக்கு அன்பான மனைவிதான்
உனக்கு மட்டுமே நான் வேலைக்காரியாக இருக்கும் வரை;

நான் உனக்கு அன்பான மனைவிதான்
உன் குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை

நான் உனக்கு அன்பான மனைவிதான்
நம் குழந்தையை நானே வளர்க்கும் வரை

நான் உனக்கு அன்பான மனைவிதான்
என் விருப்பங்களை உன் மேல் திணிக்காத வரை

நான் உனக்கு அன்பான மனைவிதான்
உனக்காகவே வாழும் வரை!

மேலே படிக்கப்போகிறேன்..வாழ்க்கையை ரசித்து வாழப்போகிறேன்..என்ற கனவுகளுடன் வந்த நான் எனக்கான வாழ்க்கையை சரி செய்துகொள்ளவே நேரத்தை வீணடித்திருக்கிறேன். அடுத்த குழந்தையும் சீக்கிரம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று யாராவது சொல்லும்போதெல்லாம் வெறும் குழந்தையை சுமக்கும் பொருளாக மட்டுமே நான் இருப்பது அருவெறுப்பைத் தருகிறது. இந்த நிலையில் இன்னும் எத்தனைப் பெண்கள் இருக்கிறார்களோ?

இந்த உருப்படாத வாழ்க்கை எதற்கு உபயோகப்பட்டதோ இல்லையோ பலவித குணங்களுடன் உள்ள மனிதர்களைப் படிக்கவும், அதுவே என் எழுத்துக்களாக உருமாறவும் உதவியிருக்கிறது. ஓடும் வரை ஓடட்டும் இந்த பற்றற்ற வாழ்க்கை..மனதில் உள்ள போராட்டத்தை அன்பான மனிதர்களின் நகைச்சுவையான பேச்சுக்களால் மறக்கிறேன். குழந்தையின் எதிர்காலத்தில் என் அழுகையை அடக்கிக்கொள்கிறேன். அவளின் வளர்ச்சியில் என் சந்தோஷத்தை தேடிக்கொண்டே இருக்கிறேன்.

இப்படிக்கு
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

__________________________________________

வினவு பின்குறிப்பு:

துயரமான யதார்த்தம், மீள முடியாத குடும்பம் என்ற இந்த பிரச்சினையிலிருந்து இவருக்கு மீள என்ன வழி? படிப்போ, இல்லை வேலைக்கு போவதோ முதலான கிரமமான வழிமுறைகள் மட்டுமே இதை தீர்த்துவிடுமா, தெரியவில்லை. குடும்பம் என்ற கூட்டிற்குள் நின்று மட்டும் ஒரு பெண் சமூக ரீதியாக விதிக்கப்பட்டிருக்கும் தளையை அறுத்துவிடவோ, அதை புரிந்து கொள்வதோ சிரமம் என்று தோன்றுகிறது. சமூக ரீதியான அனுபவம், சமூக மாற்றத்திற்கான முனைப்பு என்று பெரிய கோடு போட்டுக் கொண்டால்தான் குடும்பம் போடும் சின்னதான ஆனால் துயரமான கோட்டை அழிக்க முடியும். சமூக மாற்றத்திற்கான வேலைகளில் புடம்போடப்படும் பெண்கள்தான் தங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையும் அது விதித்திருக்கும் கீழான இழிவுகளையும் புரிந்து கொள்வதோடு அவற்றை இரக்கமின்றி எதிர்த்து வெல்ல முடியும் என்பது எங்கள் அனுபவம். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

 

 

 

 

 

 

 

 

 

 1. வேரின்றி மரமில்லை :

  முன்னோரிரவில் உள்வாங்கி
  முன்னூற்றாம்நாள் வெளித் தள்ள
  அன்றோரிரவில் அம் மனையாள்
  ஆர்ப்பரித்து வலித் துடித்தாள்.

  காலால் உதை யுதைத்தும்,
  தலைகீழாய்ப் புரண்டு வந்தும்,
  தண்ணீர்க் குட முடைத்தும்,
  தரை வீழ்ந்ததோர் குழவி.

  ஏக்கமுற ‘மகள்’ என்ற செவிலி.
  எதிர்பார்ப்பில் காத்திருந்த சுற்றம்.
  மகளா வென முணுமுணுத்து
  மருகி நின்ற பெற்றோர்.

  சாம்பல் நிறம்பூசி – சிறு மகள்
  செவ் விரல்களை மடக்கி
  குருதிக் கறையோடே
  குறுகிப் படுத்திருந்தாள்.

  சிறு செவ்வாய்த் திறந்து,
  சென்னிறக் கையசைத்து,
  கீச்சுக் குரலெடுத்து – முதன்முறை
  கேவி அவள் அழுதாள்.

  முலைப்பா லுண்ணும் போது
  தாயின் முகம் பார்க்கில்,
  மூச்சுக் காற்றில் முகங்கருக
  முகத்தை மூடிக்கொண்டாள்.

  ‘நீயுமா பெண்ணானாய்,
  நான் பெற்ற மகவே – தெரியுமா?
  காய்க்கும் மரங்க ளிங்கே
  கால்தூசிக்குச் சமானம்’

  ‘நீயேன் மகளானாய், இங்கே
  நான் பெற்ற மகவே – புரியுமா?
  கிளைகளுக்கிருக்கும் மதிப்பு
  கீழிருக்கும் வேருக்கில்லை’

  மூச்சுக் காற்றில் முகந்திணற,
  முனகும் வார்த்தை நெஞ்சு சுட,
  கையறு நிலையிலேயே – அவள்
  கண்ணயர்ந்து போனாள்.

  ‘மகள்’ எனும் குற்றத்தால்
  சுற்றத்தால் கிள்ளப்பட்டு,
  தூக்கத்திலும் கேவியழுதே,
  திரும்பவும் கண்ணயர்ந்தாள்.

  ***

  ‘அம்பாரத்து ஆனைப் பொம்மை,
  அழகான கரடிப் பொம்மை’
  கேட்டு ஏங்கிய மகளுக்கு
  கிடைத்ததோ ஒரு கிலுகிலுப்பை.

  தெருவிலோடி விளையாடித்
  திரிந்த ‘மகன்’ கூட்டம், அங்கே.
  புறக்கடைத் தனிமையிலே சுதந்திரமாய்
  புலம்பி விளையாடும் மகள் – இங்கே.

  ***

  ‘ஈன்றோர் கடமையிது; உலக மரபுமிது;
  இனி ‘மகன்’ என்போன் கல்வி கற்க;
  பிறிதொரு வீடுபோகும் பெண் நீ – இனி
  பெருக்கிப் பழகு; கோலமிடக் கல்.’

  ‘சிறுமியெனில் சிந்தனை எதற்கு?
  சிறு மதங்களில் முடங்கிப் போ;
  முசுலீமில் முக்காடைத் துவங்கு;
  முகங்கவிழ் – இந்துவெனில்.’

  ‘கன்னியெனில் பேச்சைக் குறை.
  காதல் வந்தால் கட்டுப் படுத்து.
  காதல் சொன்னால் கட்டுப்படு.
  காதலனின் திராவகத்தை கவனம் கொள்.’

  ‘ஆணின் அடிமையென்றுன்னை
  அடையாளப் படுத்திக் காட்டு;
  புன்னகை களைந்து, தாலி அணி;
  புது மெட்டியணி அல்லது மோதிரமிடு.’

  ***

  ‘காலையெழுந்து ஏவல் செய் – பின்
  காற்றைப் பிடித்து பணிக்குப் போ.
  மணாளன் வருமுன் வீடுதிரும்பி
  மல்லிகை சூடிக் காத்திரு.’

  ‘காமுற்றால் மட்டும் காமுறு.
  கணவனின் பிள்ளை வரம் வாங்கு.
  ‘மகன்’ வேண்டி விதை விதைத்த
  மணாளனின் கனவையே காண்.’

  *** *** *** *** *** *** ***

  ஆனால் ஈன்றது மகளென்றால்…
  ஈன்றது மகளென்றால்…
  மகளென்றால்…

  ஆனால் ஈன்றது மகளென்றால்
  ஆர்ப்பரித்து அறற்றாதே.
  பட்டதெல்லம் போதும்; இனி
  பாய்ந்திடப் பழகு.

  ‘மகளா’ என்று ஏக்கமுறும்
  மண்ணாங்கட்டிகளை ஏசு.
  முணுமுணுக்கும் சுற்றத்துக்கு
  முறந்துடைப்பம் காட்டு.

  தன்மானங்கலந்து முலைப்பாலூட்டு;
  தன்னம்பிக்கை வெறியேற்று.
  எல்லோர் செவியிலும் விழும்படி இந்த
  இரகசியத்தை மகளுக்குச் சொல்:

  “என் புத்தம் புது மகளே –
  நீ இன்றிலிருந்து…

  விளையாடி மகிழ்.
  பாடம் படித்து –
  சுயமாய்ச் சிந்தி.
  அடிமை வெறு.
  அடங்க மறு.
  அத்து மீறு.
  சாதி சிதை.
  மத மிகழ்.
  தெய்வத்தை நிந்தி.
  தாலி மறு.
  காதல் செய்.
  பெண்ணியம் போற்று.
  பெரியார் பேண்.
  பொது நலம் பேசு.
  அரசியல் பழகு.
  அறிவியல் அறி.
  உழைத்தபின் உண்;
  அதையும் பகிர்ந்துண்
  எனத் தத்துவம் பேசு.

  என்றுமே இடித்துரை –
  வேரின்றி மரமில்லை என்று!
  யாம் இனி யாருக்கும்
  அடிமையில்லை என்று!!”

  – புதிய பாமரன்…

  • Very nice article.. I understand that author’s feelings.. As a woman I too facing some of the same problems.. Kudumba arasiyal kodumainga.. 🙁

   @@@@@@

   Pamaran’s poem superb. I save it and show to my daughter and will teach the same. 🙂

  • உலகத்தில் சிறந்த கவிதை இதுவாக தான் இருக்க வேண்டும்.
   ஒரு பெண்ணாக இருந்து மனைவியாக மாறி தாயாக இருக்கும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.
   எளிமையான வார்த்தைகள்….
   எல்லாமே உண்மைகள்…..

 2. வினவின் கருத்துகள் உண்மை.ஒரு பெண் படித்து முடித்து,வேலைக்கு செல்வதால் மட்டும் அவள் படும் துன்பங்கள் நீங்குகிறதா என்ன?……எத்தனையோ பெண்கள் வேலைக்கு சென்றாலும் வீட்டில் புருஷனிடம் சம்பளபளப் பணம் அனைத்தையும் கொடுத்துவிட்டு அடிமையாகத்தான் இறுக்கிறார்கள்.எப்போது பெண்களுக்கு சமூக புரிதல்,அதற்கான ஈடுபாடு ,சமூக மாற்றத்திற்கான முனைப்பு வருகிறதோ அப்போது தான் அவள் படும் துன்பங்களில் இருந்து மீள்கிறாள்….

  உன் சங்கிலியை உடைத்து எறி தோழி……..

  //உறவுகளுக்குள்ளேயே கணவனையும், மனைவியையும் வேறு வேறு இடத்தில் வைக்க, புகுந்த வீட்டு உறவுகளால் மட்டும் தான் முடிகிறது. நானும் உனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஏன் உன் உறவினர்களுக்கு புரிய வைக்க நீ முயற்சிக்கவில்லை? அவர்கள் அடித்துக்கொண்டால் என்ன? நாம் தப்பித்தோமே என்ற எல்லா ஆண்களின் மனோபாவம் தான் உனக்கும். ‘ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்’ என்று சொல்வதைப் போல இரண்டு பெண்கள் அடித்துக் கொண்டால் ஆண்களுக்குத்தான் கொண்டாட்டம் என்பது ஏன் இந்தப் பெண்களுக்கு புரிவதில்லை? இப்படி புரியாமல் இருப்பதுதானே ஆண்களின் பலம்.//

  மிகவும் அற்தமுள்ள வரிகள்…..

 3. ஒரு தந்தையாக இந்த கடிதத்தை படிக்கும்போது மனம் பாரமாகின்றது. எத்தனை செல்லமாக வளர்த்த கிளிகளை பிடித்து யாரோ ஒரு தெரியாத மனிதருக்கு தாரை வார்த்து அவர்கள் படும் கஷ்டங்களை படித்து ஒவ்வொரு தந்தையும் தினம் தினம் செத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் தனது தந்தை தன் தாயாரை வைத்திருப்பது போல் தனக்கும் ஒருவர் கண‌வராக வாய்க்க வேண்டும் என்றே எண்ணுகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டம்… நேர்மாறாகப் போய்விடுகிறது. அவர்களது ஆசைகள் நிராசைகளாகிவிடுகின்றன. குழந்தை பிறந்தபின்னர் ஏதோ அந்தக்குழந்தையின் சிரிப்பினில்… பின் அவர்களது கல்விக்காக…. பின் அவ‌ர்களது வாழ்க்கைக்காக என்றே அவர்கள் வாழ்நாள் கழிந்து விடுகிறது. அதிலும் மிகவும் புத்திசாலிப்பெண்களுக்கோ சொல்லவே வேண்டாம்…. தாழ்வு மனப்பான்மையால் கணவர்கள் சொல்லால் குத்து விடுவதைப்பார்க்க முடிகிறது….

  எனக்கும் ஒரு மிக அறிவுள்ள திருமண வயதில் பெண்மகள் இருக்கிறாள்… எனக்கு தினம் தினம் வயிற்றில் புளியைக்கரைத்தது போல இருந்து கொண்டே உள்ள‌து… எனக்கே இப்படி…. எனது மகள் மனநிலை எப்படி உள்ளதோ… என் எதிரில் தைரியசாலியாய் பேசிக்கொண்டிருப்பவளின் மனதில் என்ன எண்ண ஓட்டம் உள்ளது என்பதே தெரியவில்லை.

  எப்படியும் இந்தக்கடிதத்தை படிக்கும் பெண் பிள்ளைகள் உள்ள ஒவ்வொரு தந்தையும் கண்ணீர் வடிப்பார்கள் என்பது மட்டும் உறுதி…

 4. அன்பார்ந்த தோழி

  தங்களது பதிவைப் படிக்கும் எந்த ஆணும், ஒரு கணமேனும் தனது துணைவியை எப்படி நடத்துகிறோம் என சிந்திப்பான் என நம்புகிறேன். தங்களது எழுத்தாற்றல் வளர வாழ்த்துகிறேன். தங்கள் கணவரைக் குறித்தும், தங்களது புகுந்த வீடு குறித்தும் தங்களுக்குள் ஆழ்ந்து படிந்திருக்கிற பிம்பங்களின் கைதியாக என்றென்றும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம் எனவும் வேண்டுகிறேன்.

  தோழர் வினவு கூறுவது போல, “சமூக ரீதியான அனுபவம், சமூக மாற்றத்திற்கான முனைப்பு என்று பெரிய கோடு போட்டுக் கொண்டால்தான் குடும்பம் போடும் சின்னதான ஆனால் துயரமான கோட்டை அழிக்க முடியும்.” அதே வேளையில் அதற்கான படிகளில் ஒன்றுதான் படிப்பதும், வேலைக்கு செல்வதும்.

  பொருளாதாரரீதியாக உங்கள் கணவரை சார்ந்திருப்பதுதான், மிகவும் அடிப்படையான பிரச்சினை. இது ஒரு வழமையான தீர்வு எனக் கருத வேண்டாம். நீங்கள் வேலைக்கு செல்வதும், அதற்கான படிப்பை முடிப்பதும் போராட்டத்தில் ஒரு புதிய கட்டமாகவே இருக்கும். அத்தகைய தங்களது கடும் முயற்சிகளால் விளைந்த புதிய கட்டங்களின் மூலமே இந்த குடும்ப வன்முறையை நீங்கள் முறியடிக்க முடியும்.

 5. “என்னங்க..நான் ஒண்ணு கேட்கட்டுமா?” என்று ஆரம்பித்தால், “என்ன வேணும்னாலும் கேளு..ஆனா நகை வேணும்னு மட்டும் கேட்டிராத..//
  இதில் என்ன தப்பு நீ அன்பை மட்டுமே கேட்க வேண்டும் அல்லவா….

  • ஆமா … சரியா சொன்னபா ..

   அது சரி .. நீயும் பொண்ணு பாக்கும் போது பொண்ணையும் ’அன்பை’யும் தான கேக்கனும் ..

   அத விட்டுபுட்டு என்ன — வரதட்சனை கேக்குற ?..

 6. கடிதம் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. இவ்வளவு திறமைகளையும் உண்மையான அன்பையும் வைத்துக் கொண்டுள்ள ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கவலைகள் என்று நினைக்க…

  நம்மைச் சுற்றிலும் இது போன்ற எத்தனையோ கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

  கணவனை விட்டு முற்றிலும் விலகாவிட்டாலும், சற்றுத் துணிவுடன் நடக்கத் தொடங்கினாலே உறவினர்கள் குட்டிக் கொண்டே இருப்பதைக் குறைப்பதைப் பார்த்திருக்கிறேன்…

 7. இவங்க எழுதுறத பார்த்தாலே புல்லரிக்குது. ஆனா நடந்துக்குறது வேற மாதிரி.
  பெண்கள் சமுதாயம் பெண்கள் சமுதாயம்ன்னு முழங்குற பெண்கள் யாருமே அவங்க பிள்ளைகள் திருமணதிற்கு
  அன்பளிப்பு கொடுக்குறது இல்லையா – இல்லை
  வாங்குறது இல்லையா ?
  அதிலும் படித்த பெண்கள் பண்ற அழிச்சாட்டியம் இருக்கே.. இப்போதெல்லாம் வரப்போகும் கணவன் எந்த அளவுக்கு ‘வொர்த்’ உள்ளவன் என்று பார்த்த பின்னரே கல்யாணம் செய்து கொள்கின்றனர். இது விபச்சாரத்தை விட மோசம்

  • தாலி கட்டப் போற மாட்டுக்கு அறிவு வேணாமா ?.. வரதட்சணை வாங்குறோமே … இது தப்பாச்சேனு ?..

   விபச்சாரிங்கிற வார்த்தைக்கு ஆண்பால் கிடையாதுன்ங்குற தைரியத்துல தான இவ்ளோ பேசுற .. பேசு ராசா …பேசு …

   • வரதச்சினை வாங்காத மாடுங்க இப்ப ரொம்பவே ஜாஸ்தி 35 வயசுக்குள்ள வீடு கார் வேலைன்னு செட்டில் ஆன பிறகுதான் கல்யாணமே என்று இருக்கும் ஆண்கள் வரதட்சினை கேட்பான் என்றா எதிர்பார்கிறீர்கள் – அப்படி கேட்காமல் போனாலும் அன்பளிப்பு கொடுக்காமல் விட்டு விடுவார்களா இல்லை இந்த பையனுக்கு எதோ குறை என்று தான் இட்டுக்கட்டி பேசாமல் விட்டுவிடுவார்களா இந்த குடும்ப பெண்கள் ??இவர்களின் இந்த நிலைக்கு இவர்களே காரணம்

 8. இது ஒரு பெண்ணின் கடிதம் மட்டுமல்ல 50% க்கு மேல் இப்படியான பெண்கள் இருக்கக்கூடும்,..

  புரியும்வரை , திருத்த முடியும் என நம்பிக்கையுள்ளவரை மட்டுமே தொடரலாம்..

  ஆனால் கண்டிப்பாக வெல்ல முடியும் … துணிவோடு போராடணும்..

  ஆண்கள் பலர் ( கவனிக்க எல்லாருமல்ல சண்டைக்கு வராதீக 🙂 ) கெஞ்சினா மிஞ்சுவாங்க..

  எப்ப மிஞ்ச ஆரம்பிச்சுட்டோமோ அப்ப கெஞ்சுவாங்க.. அவமானப்பட்டுக்கொண்டு அடங்கிப்போகவே வேண்டியதில்லை.. பிழைப்புக்கு ஒரு வழி தேடிக்கொண்டு கெளரவமாக பிரியலாம்.. ஆனா பிரிவு என்றதும் குற்றம் சாட்டிவிட்டு , சண்டைபோட்டுவிட்டுத்தான் பிரியணும் என்ற அவசியமில்லை.. மிகுந்த நட்போடும் , மரியாதையோடும் பிரிய முற்படலாம்..

  அது ஒரு பெண்ணின் கம்பீரம், தன்னம்பிக்கை , அதீத சக்தி என்னைப்பொறுத்தவரையில்…

  இது பிரிந்தாலும் மனந்திரும்பி வர செய்யும் ஆண்களை..

  ஆக மிஞ்சுவதும் , மிஞ்சாமல் இருக்கச்செய்வதும் ஆண்கள் கையில்தான் இருக்கு என்ற சூட்சமத்தை புரிஞ்சுக்கணும்…

  பொதுவா நான் வாழ்க்கையில் கற்றது எந்த உறவையுமே அதிகமாக உயிருக்குயிராய் நம்புவதெல்லாம் கூடாது.. Everything will be taken for granted & in course of time will lead to loose one’s self respect…

  பெற்றோரோ, துணையோ, நாமே தவமிருந்து பெற்ற பிள்ளைகளோ , எல்லாரையுமே ஒரு எல்கைக்குள் வைக்கப்பழகிடணும்.. அது எல்லாருக்குமே நல்லது , சுதந்திரமான மரியாதைக்குமுறியது.

 9. wonderful article – conveys the true facts of our society.

  திருமணத்திற்கு பிறகு வரும் ஒவ்வொரு பண்டிகையும் வசூல் வேட்டையை நடத்தும் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

  சமையல் வேலையை நான் தெரிந்து வைத்திருக்கிறேனா என்பதை, வந்த முதல் நாளே டெஸ்ட் செய்து பார்த்த போது பயந்து நடுங்கித்தான் போனேன், இன்னும் எதற்கெல்லாம் டெஸ்ட் வைப்பார்களோ என்று.

  எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மறுக்காத உன் கைகள் ஏன் என் பிறந்த வீட்டுக்கு செய்ய வேண்டுமென்றால் மட்டும் பின்வாங்குகிறது?

  நீ உன் பிறந்த வீட்டுக்குப் போ என்று விளையாட்டாக சொன்னாலும் மனம் பதைபதைக்கிறது. பிரச்சினையால் என்னையே தாங்கிக் கொண்டே இருப்பதால் என் கூடப் பிறந்தவர்களுக்கும் பெற்றோர்கள் மீது கோபம். திருமணத்திற்கு முன்னால் பிறந்த வீடாவது இருந்தது. ஆனால் புகுந்த வீடு கைவிட்டால் பிறந்த வீடும் நிரந்தரமில்லை. இது பெண்களுக்கே விதிக்கப்பட்ட சாபக்கேடோ!

  It will be better if all the mens begin to think.

 10. பெண்களுக்கு நசுக்கப் படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் பழைய காலம். (வேண்டுமானால் ஒரு sila கிராமங்களில் அப்படி நடக்கலாம்) பெண்கள் இப்போது அனைத்து இடத்திலும் வேலை செய்யவில்லையா. ஆண்களுக்கு கிடைக்கவேண்டிய வேலைகளில் பெண்கள் பங்கேற்க்கவில்லையா, வேலை கிடைக்காத விரக்த்தியில் இன்னும் திருமணமே செய்து கொள்ளாத ஆண்களைப்பற்றி இவர்களுக்கு தெரியாதா.
  மாப்பிள்ளை சந்தையில் டாக்டர் / இஞ்சினியர் (இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் மாறும்) / வாத்தியார் / அரசாங்க உத்தியோகத்தில் மூளை மழுங்கிப்போய் ஒரே வேலையை செய்து கொண்டிருக்கும் நபர் – இவர்கள் மட்டும் தான் திருமண தகுதி பெற்றவர்களா. இவ்வளவுக்கும் இந்த கண்டிஷன்களை போடுவது பெண்களே தான். பெண்கள் இன்னமும் அடைத்து கிடக்கிறார்கள் என்பதெல்லாம் சும்மா அனுதாபம் தேடிக்கொள்வதற்கு / இன்ன பிற சலுகைகளை எதிர்பார்பதர்க்கு அவ்வளவுதான். இவ்வளவு ஏன், பெண்களுக்கு சாதகமாக எவ்வளவு சட்டங்கள் உள்ளன…
  மற்றபடி இந்தியாவில் (ஏட்டில் இருக்கிறதோ இல்லையோ வீட்டிலும் ஆணின் மனதிலும்) பெண் எப்போதோ முழு சுதந்திரம் அடைந்துவிட்டாள் என்ன ஒரு சிலர் அதை பற்றி தெரியாமல் இருக்கின்றனர் – அதை வைத்து வேறு சிலர் பிழைப்பு நடத்துகின்றனர்.

 11. எல்லா க‌ண‌வ‌ர்க‌ளுக்கும் த‌ன் ம‌னைவியை பிடிக்கும், ஆனால் த‌ன் ம‌னைவிக்கு என்ன‌ பிடிக்கும் என‌ அறிய‌த்தான் பெரும்பான்மையான‌ க‌ண்வர்க‌ள் விரும்புவ‌தில்லை.

  ச‌மூக‌ த‌ள‌ங்க‌ளில் போராடும் பெண்கள் தான் வின‌வு கூறும் பின்குறிப்பு ப‌ற்றிய‌ என‌து க‌ருத்தைக் கூற‌ வேண்டும் என்ப‌து என் க‌ருத்து. ஏனென்றால் அவ‌ர்க‌ளுக்கு தான் அவ‌ர்க‌ள் எதிர்கொள்ளும் இட‌ர்பாடுக‌ள் தெரியும். வெளியில் இருந்து பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு இக்கரைக்கு அக்கரை ப‌ச்சையாகத் தெரியக்கூடும்.

  உழைக்கும் மகளிர் நாள் அன்று ஒரு யதார்த்தக் கட்டுரையை படிக்கத் தந்த வினவிற்கு அதை எழுதிய தோழிக்கும் என் நன்றிகள். இந்நாளில் நம்முள் உள்ள ஆணாதிக்க சிந்தனைகளை அகற்றுவோம் என குறிப்பாக நம்மைப் போன்ற ஆண்கள் உறுதியேற்க வேண்டும். அதுவே உழைக்கும் மகளிர் நாள் வேண்டுவது என நான் எண்ணுகிறேன்.

 12. போடான்க்..பல குடும்பத்துல பொம்பளைங்ககிட்ட மாட்டிகினு முழிக்கிராணுவ ஆம்பிளைங்க.அதா சொல்ல மாட்டிய?ஒங்க ரச்சிஆவுல ஸ்டாலின் பதவி ஏற்காம ஒரு பெண் கிட்ட ஆட்சிய ஏன் குடக்கல?பெரியார் திராவிட கழகத்தின் தலைவரா மணியம்மைய ஏன் அறிவிக்கலா?ஏன்னா இதெல்லாம் சும்மா ஊற ஏமாத்துறது./பொய் காட்டுகுலேயே கெட..அதான் ஒனக்கு நிதர்சனம் தெரியலடா.

  • நிதர்சன சக்கரவர்த்தியே .. ஆர். எஸ்.எஸ். கொழுந்தே …

   உன்னோட அப்பாவை மட்டும் பாத்துட்டு இந்த மாதிரி பொத்தாம் பொதுவா சொல்லக்கூடாது தம்பி …

 13. Tamil actresses Sneha , Hansika Motwani , Shriya, Neethu Chandra, Anushka and Iliana urged to give equal oppurtunity to women in India . In their Womens Day interviews they pointed out various inequalities facing by women. – பத்தினிகளும் மற்றும் கலாச்சார காவலர்களும் ?? இத பத்தி வாய் கிழிய பேசுறாங்க (வேற எது கிழியனுமாம்).. இவ்ளோ சுதந்திரம் கொடுக்குரப்பவே இப்படி.. இன்னும் விட்டா… ஆண்களே ஜாக்கிரதை உங்களை காப்பாற்ற யாரும் கிடையாது

 14. வின‌வு கூறும் பின்குறிப்பு ப‌ற்றிய‌ என‌து க‌ருத்து,
  1. துயரமான யதார்த்தம், மீள முடியாத குடும்பம் என்ற இந்த பிரச்சினையிலிருந்து இவருக்கு மீள வழி இருந்தாலும் அது நடைமுறையில் மிகவும் கடினம், குடும்பம் என்ற கூட்டை விட்டு வெளியேறுவது தான் அது. இந்த முடிவு அவரையும் அவரை சுற்றியிருப்பவர்களையும் முக்கியமாக அவர் மகளையும் மிகவும் பாதிக்கும். குடும்பத்தில் இருந்து கொண்டு இந்த பிரச்சினையிலிருந்து இவருக்கு மீள வழி இல்லை, பிரச்சினைகளை குறைக்க மற்றும் பிரச்சனைகளுடனே அற்பணிப்புடன் வாழ மட்டுமே வழி உள்ளது. ஆக்கபூர்வமாக அவரால் செய்ய முடியக்கூடியது தன் பெண்ணை நன்றாக தைரியத்துடன், நல்ல கல்வியுடன், பொது அறிவுடன், பெருந்தன்மையாகவும் வளர்ப்பது ஒன்றை தான்.
  2. //குடும்பம் என்ற கூட்டிற்குள் நின்று மட்டும் ஒரு பெண் சமூக ரீதியாக விதிக்கப்பட்டிருக்கும் தளையை அறுத்துவிடவோ, அதை புரிந்து கொள்வதோ சிரமம் என்று தோன்றுகிறது.// சிரமம் மட்டுமில்லை, முடியாததும் கூட. நான் இன்று பொது அறிவிலும், இலக்கியத்திலும், இசையிலும்,விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தாத அதிக பெண்களை பார்க்கின்றேன், மென் துறையில் நல்ல சம்பளத்துடன் இருந்தாலும் கூட. வீட்டை கட்டியாள்வதுடன் வேறு சிலவற்றில் கவனம் செலுத்துவது அதிக பலனை தரும், கணவன் கொஞ்சுவதும், அவன் மதிப்பதும், அவன் தறுவதும் மட்டுமே இங்கு இன்பம் இல்லை இதை இந்த பதிவரும் அனைத்து பெண்களும் உணர வேண்டும், தனக்கென பொழுதுபோக்கும், தனக்கென ஆர்வங்களும் இருக்கும் போது, கணவனைப் பற்றி யோசிக்ககூட நேரம் உங்களுக்கு கிடைக்காது. அவரை அவர் குடும்பத்தை நீங்கள் பெரிதாக அவர் தருவதை அங்கீகாரமாக பார்க்காதீர்கள், உங்கள் இன்பம் உங்களுக்குள் தான் உள்ளது. நகையை போடவிடவில்லை, உங்கள் வீட்டாரை மதிக்கவில்லை, உங்களை மதிப்பதில்லை, அவர்கள் இப்படித்தான் என்று தெரிந்த பின்பும் ஏன் இவற்றை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள், உங்கள் கணவர் வீட்டார் இதை செய்யாததால் உங்கள் மதிப்போ, உங்கள் வீட்டார் மதிப்போ குறைந்து விடப்போவதில்லை. நீங்கள் இதற்கெல்லாம் குறைபட்டுக்கொள்வதும், துன்பப்படுவதும், அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மட்டுமே அமையும், அவற்றை பயன்படுத்தி உங்களை துன்புறுத்த.

  3.// சமூக ரீதியான அனுபவம், சமூக மாற்றத்திற்கான முனைப்பு என்று பெரிய கோடு போட்டுக் கொண்டால்தான் குடும்பம் போடும் சின்னதான ஆனால் துயரமான கோட்டை அழிக்க முடியும்.//சமூக மாற்றத்திற்கான முனைப்பு என்று வினவு எழுதியிருப்பது மிகவும் முக்கியமான ஒன்று, எத்தனைப்பெண்கள் ஆக்கபூர்வமாக பெண்ணியத்தை அனுகுகின்றார்கள் தெரியவில்லை, ஆக்கபூர்வமன ஒன்று என்றால் அது தன்னைச்சுற்றியுள்ள பெண்களுக்கு உதவுவதும், தைரியமாக பிரச்சனைகளை எதிர்கொள்வதும் தான். பெண்கள் தன்னைப்பற்றிய மதிப்பைப்பற்றிய எண்ணத்திலிருந்து முதலில் வெளி வரவேண்டும்.

  சாதியை, கலாச்சாரத்தை, மதத்தை மட்டுமே தன் மதிப்பாக பார்ப்பவர்களை விட, தான் இருக்கும் வசதியை, தன் உழைப்பில்லாமல் கிடத்த வசதியை, சில சமயங்கள் அழகை மட்டும் மதிப்பாக பார்ப்பவர்களை கண்டால் இரக்கமே மிஞ்சுகிறது. மனப்பான்மையையும், அறிவையும், பொது அறிவையும், கலையையும், ரசனையையும், இரக்கத்தையும், பெருந்தன்மையையும், நல்ல பழக்கங்களையும், உண்மையையும், நேர்மையையும் தன் மதிப்பாக பெண்கள் கொள்ள வேண்டும். இவற்றை அன்றாட வாழ்வில் கடைபிடிப்பதை தனக்கான மதிப்பாக பெண்கள் கொண்டால், சமூகத்திற்கு தானாகவே பெண்களை மதிக்க பிடிக்கும். இல்லையென்றல் இந்த ஆண் கட்டமைத்த சமூகம் பெண்களை அவர்கள் கட்டமைத்த ஒரு தவறான மதிப்பில் ஆழ்த்தி, அதற்கான வெகுமதியோடு நம்மை முட்டாளாக வைத்திருக்கும். அதுவே ஆண் கட்டமைத்த சமுதாயத்துன் முக்கிய தூண்.

  இந்த சமூகத்திடம் சொல்ல முற்படுவத
  1.விசமிகள் கூறுகின்ற பெண்ணியம் பற்றிய தவறான புரிதலுள்ள, தவறான கண்ணோட்டமுள்ள, தவறான மனப்பான்மையுள்ள குறைந்தபட்ச பெண்களால் அதிகபட்ச பெண்களின் உரிமை மற்றும் சுதந்திரம் மறுக்கப்படுவதை, அவர்களின் மீது பிரயோகிக்கப்படும் ஆதிக்கத்தை மறுக்க முடியாது.
  2.பெண்களே நீங்கள் தான் பெண்களுக்கு எதிரிகள், உங்கள் மனப்பான்மையையை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களின் ஆழ்ந்த எண்ணங்களால், ஆழ்ந்த அறிவால் ஆணாதிக்கத்தை உங்கள் ஜீனிலிருந்தே விளக்கமுடியும். ஆனால் உங்களின் தயக்கத்தால், போலியான மதிப்பிகளால், காரணமில்லாத அடமை மயக்கத்தால் நீங்கள் அதிலிருந்து விடுபட விரும்பவில்லை.இந்த மனப்பான்மையை களைய வேண்டும்

  பெரிய மறுமொழியாக தொடர்வதால் இத்துடன் முடிக்கின்றேன்.

 15. நீரா ராடியாவை பார்த்துமா நீங்க வளர்துடிங்க என்பதை நம்பள அது ஒரு புறம் இருக்கட்டும் உங்களை போன்ற பெண்களை வளரவிட்டால் நாடு முழுதும் எய்ட்ஸ் பரவுமே தாய்மார்களே இப்படி பேசும் பெரும்பாலான பெண்களின் நடத்தையை பாருங்கள் கீழ்த்தரமாகவே இருக்கும் நம் ஜே உட்பட பெண்களுக்கு அழகே அமைதி அடக்கம் அன்பு இதை பேனினாலே உலகம் சொர்க்கமாய் இருக்கும் பொது வாழ்க்கை பெண்களுக்கு நல்லது அல்ல குடுபத்தை பார்த்தாலே தங்களின் பிள்ளைகளை அரசனாக்க முடியும் பெண்கள் உருவாக்குபவர்களாக இருப்பதே சிறப்பு

 16. இன்று, பெரும்பாலான வீடுகளில், பெண்களின் ஆட்சியே! சுமார் 70 சத வீடுகளில், பெண்ணின் எண்ணப்படியே குடும்பங்கள் இயங்குகின்றன!( சதக் கணக்கு எப்படி என்று கேட்போர், தம்மைச் சுற்றியுள்ள குடும்பங்களைப் பார்க்கவும்!).

  பிறந்த வீட்டின் ஆதரவு இல்லாத பெண்கள்,கொடுமைக்கு ஆளாவது அதிகம்! சம்பாதிக்க முடியாதவர்களும், படிப்பு/உடல் குறைவானவர்களும், துணைகளால் துன்புறுகின்றனர்!

 17. In my personal experience I tried a lot to find a girl without any condition on dowry and caste, but most of the girl looked only on my salary part and caste(I am son of intercaste parent) and rejected, some rejected me for my profession since i am a hardware engineer. So its not only fault on guys, even we try to do something nobody is there to help us. So its not you can always blame guys for everything. I tried around 25 girls indirect and uncountable in matrimonial sites.

 18. சில யோக்கிய சீலர்கள் பெண்கள் ஒடுக்கப்படுவதெல்லாம் அந்தக்காலமாக்கும் என்று நீட்டி முழக்குகிறார்கள். இதே வாய்கள்தான் சாதியெல்லாம் இப்ப யார் சார் பாக்குறா? –என்றும். சார் இப்பல்லாம் நாடு ரொம்ப முன்னேறிடுச்சி சார். முன்ன மாதிரியெல்லாம் இல்ல. என்றும் வியாக்கியானம் பேசும் வாய்கள். தவறு செய்பவர்களை விட இது போன்று நடந்து கொண்டிருக்கும் தவறுகளின் மேல் நின்று கொண்டு இல்லவே இல்லை என்று வாதிடும் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
  அதிலும் நடப்பதை அப்படியே தலைகீழாகத் திருப்பிப் போட்டு – “இப்பல்லாம் நாங்க தாங்க சம்சாரத்துகிட்ட பயந்திட்டிருக்கோம்; ஆண்கள் எல்லாம் ரொம்பப் பாவம் சார்” என்று வாதிடும் இவர்கள் போன்றவர்களை நாம் நிறையச் சந்தித்திருப்போம் – இவர்கள் ஆபத்தானவர்களிலேயே மிகவும் நயவஞ்சகமானவர்கள். வீட்டில் தினம் தினம் மனைவியின் உழைப்பை ஓசியில் சுரண்டிக் கொண்டு, மனைவியின் வீட்டிலிருந்து வேண்டுமட்டும் வழிப்பறி செய்து கொண்டு, சுமைக் கழுதையின் முன்னே காட்டும் காரட் போல, அவ்வப்போது மனைவியிடம் பயப்படுவது போல் நடிப்பவர்கள் இவர்கள்.
  மனைவியை முன்னே வைத்துக் கொண்டே பிறர் முன் “எங்க வீட்ல மதுரை ஆட்சி சார்” என்று நீட்டி முழக்கும் இது போன்ற புழுக்களை நீங்கள் நேரில் எங்காவது கண்டால் அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து ” நீ இந்தப் பெண்ணை மனம் முடிக்கும் போது மாமியார் வீட்டில் கறந்த கணக்கை எடுத்து வை முதலில்” என்று கேளுங்கள்.
  இதில் பெரும்பாலான சமயங்களில் இது போன்ற ஸ்டேட்மென்ட்டுகள் சம்பந்தப்பட்ட பெண்மணியை சங்கடத்திற்குள்ளாக்கி, மூன்றாம் நபரிடையே “ஏதேது இந்தப் பொம்பிள்ளை வீட்டில் அந்தாளைப் போட்டு அடக்கி வச்சிருக்கும் போலிருக்கே…. சரியான பஜாரியா இருப்பா போலிருக்கே” என்பது போன்ற கெட்டெண்ணத்தையும் கூட உண்டாக்கி விடும்.
  ஒரு சமூகத்தின் அங்கமாய் இருக்கும் குடும்பத்தில் உழைக்கும் பெண்களின் உழைப்பு மட்டும் கணக்கில் வராமலே போய் விடுகிறது. வேலைக்குப் போகும் பெண்களாய் இருந்தால் பணியிடங்களில் நடக்கும் உழைப்புச் சுரண்டலோடு குடும்பத்திலும் சுரண்டல்.

  – To be Contd….

 19. இது போல் கடிதம் அவள விகடனிலும் வரும்.தீர்வுகள் பல சொல்லலாம்.எது சரி என்பதை அவரவர்தான் தீர்மானிக்க முடியும்.
  இதே போல் ஒரு கடிதத்தினை அந்தப் பெண் தன் பெற்றோருக்கும்/உடன் பிறந்தோருக்கும் எழுதலாம்.தீர யோசித்தால் விடைகள் கிடைக்கலாம். படிப்பது,வேலைக்குப் போவது தன்னம்பிக்கையையும்,பொருளாதார சுதந்திரத்தையும் தரலாம்.

  “சமூக ரீதியான அனுபவம், சமூக மாற்றத்திற்கான முனைப்பு என்று பெரிய கோடு போட்டுக் கொண்டால்தான் குடும்பம் போடும் சின்னதான ஆனால் துயரமான கோட்டை அழிக்க முடியும்.”
  இது எளிய தீர்வல்ல.ஏனெனில் தன்னுடைய பிரச்சினைகளை தீர்க்க முயன்று வெற்றி பெறுவதுதான் முதலில் செய்ய முடியும்.
  அதை விடுத்து சமூக மாற்றம் அது இது என்று இக்கடிதம் எழுதிய
  பெண் புரட்சி செய்கிறேன் என்று இடதுசாரி அரசியலில் குதிப்பதை விட முதலில் தன் பிரச்சினைகளை சரியாக கையாண்டால் நல்லது.
  அதை செய்தவருக்கு இடதுசாரி பெண்ணியம் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு சிலர் இந்திரா நூயியை வெற்றிகரமான உதாரணமாக கொள்ளலாம்.வினவைப் பொறுத்தவரை அவர் முதலாளித்துவ கைகூலியாக, ஒடுக்கும் பெண்ணாக இருக்கலாம். பல பெண்கள் அப்படி வெற்றி பெற்ற பெண்கள் போல் சாதிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.
  இந்திரா நூயியும் பல சவால்களை சந்தித்தவர்தான். மத்தியதர வர்க்கத்தில் பிறந்து கல்வி,உழைப்பு,திறனால் இன்று அந்நிலைக்கு உயர்ந்திருக்கிறார். வினவு போன்ற இடதுசாரி தளங்கள் அவரை நிராகரித்தாலும் அவள் விகடன் போன்ற பத்திரிகைகள் அவரைக் கொண்டாடும். வினவு போன்ற இடதுசாரி தளங்கள் இந்திரா நூயி, அப்துல் கலாம்,சச்சின் டெண்டுல்கரை எதிர்மறையாக, மோசமான உதாரணங்களாக கருதும். இன்றைய இந்தியாவில் இளைஞர், இளைஞிகளுக்கு அவர்கள் ஆதர்சமாக இருப்பதுதான் உண்மை. எனவே இக்கடிதம் எழுதிய பெண்ணிற்கு நூயி போன்றோர் வென்றிருப்பது தனிப்பட்ட முறையில் உத்வேகத்தினை, நம்பிக்கையை தரலாம், வினவின் அரசியல் ஏற்புடையதற்ற ஒன்றாகவும் இருக்கலாம்.

  இன்னொன்றையும் நினைவு கொள்ளுங்கள்.இன்று படிப்பும்,வேலையும் பெண்களுக்கு இருக்கும் போது மாற்றங்கள் வருகின்றன.அதனால் எல்லாப் பெண்களும் பயன் பெறுவதில்லை என்றாலும் வரவேற்கத்தக்க மாற்றங்கள் இருக்கின்றன. சமூக மாற்றம்/முன்னேற்றம் என்பது ஒரு புரட்சியால் வருகின்ற ஒன்று என்று புரிந்து கொண்டால் செயல்திட்டம் அதையொட்டி அமையும்.
  அவ்வாறன்றி பாரிய மாற்றங்கள் பல காரணிகளால் வரும், திடீரென
  வர வேண்டியதில்லை என்று புரிந்து கொண்டால் செயல் திட்டம் அதையொட்டி அமையும். இன்று ஐ.டி துறையில் பெண்கள் அதிக அளவில் இருக்க பல காரணிகள் உள்ளன.ஆனால் உலகமயமாக்கல்
  இல்லாவிடில் இது சாத்தியமில்லை.பெண்களுக்கும் பொறியியல் கல்வி கிடைக்க வேலைவாய்ப்புகள் பெருகியதும் ஒரு காரணி. அதை சாத்தியமாக்கியது உலகமாக்கல், இன்போஸிஸ், விப்ரோ போன்ற கம்பெனிகள்.உங்கள் ஆதரவாளர்கள் பலருக்கும் இது உண்மை என்று தெரியும்.

 20. தனது மனைவியை நேரடி வன்முறை மூலம் அடக்கி ஒடுக்கிச் சுரண்டும் பத்தாம்பசலிகள் ஒருபக்கம் என்றால், சுதந்திரம் கொடுப்பது போலக் கொடுத்தும், தானே மனைவிக்கு அடங்கி நடப்பது போல நடித்தும், அந்தப் பெண்ணைத் தான் ஒடுக்கப்படுவதும் சுரண்டப்படுவதும் பற்றிய அறிவே இல்லாமல் சுரண்டுவது இன்னொரு வகை – அது தான் இந்த மதுரை ஆட்சி வகை.
  விழிப்புணர்வடையாத சில பெண்களும், இது ஏதோ தமக்குக் கிடைத்த சுதந்திரம் என்றே நினைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். புருஷனைத் தாம் மயக்கிக் கைக்குள் போட்டு வைத்திருக்கிறோம் என்று பெருமையாக நினைத்துக் கொள்ளும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். இதற்கு வேறெங்குமே உதாரணத்திற்குச் செல்லத் தேவையில்லை. என் சொந்த அம்மாவே பல ஆண்டுகளாக இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார் – காலம் கடந்து போன பின் தான் ஓரளவுக்காவது தெளிவடைந்தார்.
  உண்மையான சுதந்திரத்தின் வாசத்தை உணராமல் தமக்குக் கிடைத்து இருப்பது தான் சுதந்திரம் என்றே பல ஆண்டுகளாக நம்பவைக்கப்பட்டிருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். (அப்பா வகையறாவில்) ஒரு பொருளாதார சிக்கல் என்று வந்த போது அத்தனை ஆண்டுகளாகத் தனக்கே தனக்கென்று தன் கணவன் (அப்பா) கொடுத்திருந்ததெல்லாம் தன் அனுமதியே இல்லாமல் காணாமல் போனதோடு தனது சொந்த நகையும் கூட கேட்காமல் கொள்ளாமல் ஈட்டுக்க்குப் போன போது தான் அம்மாவுக்குக் கண் திறந்தது.
  உண்மையான பொருளாதார விடுதலையும் தற்சார்பும் இல்லாமல் வீட்டுக்காரன் பிறத்தியார் முன் ‘எங்க வீட்ல மதுரை ஆட்சி சார்’ என்று சொன்னதைக் கேட்டு ஆனந்திருந்தவருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு சண்டையை முன்னிட்டு ‘போடி வெளியே’ என்று அப்பா கூவிய போது (அப்போது நான் ஏழாவது படிக்கிறேன் என்று நினைவு) தான் இன்னொரு உண்மை உறைத்தது. அது இந்தக் குடும்பத்தில் நாயாய் உழைத்து, அப்பாவின் தொழிலில் காலை நாலு மணியில் இருந்து இரவு பத்து மணி வரை கூடமாட நின்று ஓயாமல் ஓடியாடி உழைத்தும் இந்த ஆள் மனசு கோணிவிட்டால் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டுமென்பது. அந்த உழைப்பை அவர் வெளியே சம்பளத்துக்குச் செலுத்தியிருந்தால் சொந்தமாக வீடு நிலம் கூட வாங்கியிருக்க முடியும். அத்தனை உழைப்பையும் கொடுத்து விட்டு மிஞ்சியதெல்லாம் ‘மதுரை ஆட்சி’ மட்டும் தான்.
  – to be contd..

 21. மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்ட கடிதம். வாசித்தபின் சிலநிமிடங்கள் செயலற்று அமர்ந்திருந்தேன். இதுபோல எத்தனை பெண்களின் வாழ்க்கை வெறுமையாகவும், தனிமையாகவும் கழிந்திருக்கிறது. இதிலிருப்பவை, ஒரு பெண்ணின் மனஉணர்வுகள் மட்டுமில்லை, மருமகள்களின் ஒட்டுமொத்த மனநிலையை பிரதிபலித்தது போலிருந்தது. ஒன்றுமில்லாத விஷயத்தையெல்லாம் பெரிதாக்கி பெண்ணாதிக்கம் என்று பேசும் கனவான்களுக்கு இக்கடிதம் உறைக்குமா? வினவு சொல்வது போல, சமூகத்திற்கான ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுத்திக்கொள்வது பிரச்சினைகளை எதிர்நோக்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும்.

 22. பகிர்தல் வருத்ததை குறைத்திருக்கும் என நம்புகிரேன்…. என்னால் என் வருங்கால மனைவிக்கு இந்த நிலை கண்டிபாக ஏற்படாது……

 23. i had this kind of talk with my girl friend. next year i’m going to marry her but i’ll never make a situation like this for her.
  thank for this story.
  u may thought i didn’t identified myself to this blog but giving comments. becasue i felt guilty myself and i’ll solve this in future life by make my wife happy.

  • வாழ்த்துக்கள் நண்பா..

   நீங்கள் உங்களைப் பற்றிய விபரங்களைக் கொடுத்திருந்தால் உங்களைப் போன்ற மனநிலையில் இருக்கும் பிற வாசகர்களுக்கும் ஒரு நல்ல தூன்டுதலாக இருந்திருக்கும்..

   எவ்வாறாயினும் உங்கள் முடிவு பாராட்டத்தக்கதே

 24. உன்னை என் கணவனாக பார்க்காமல் என்னைப்போல் நீயும் ஒரு உயிர் என்று நினைப்பதால்தான் இன்னும் உனக்கு சேவை செய்யமுடிகிறது. உன்னைப் பெற்றவர்களை மாமனார், மாமியார் என்று நினைக்காமல் வயதான அப்பா, அம்மா என்று நினைப்பதால் தான் உறவுகளைத் தாண்டிய மனிதாபிமானத்துடன் அவர்களை தாங்கிக்கொள்ள முடிகிறது. இதையெல்லாம் என்று நீ உணரப்போகிறாயோ?…..ITHUVUM
  அற்தமுள்ள வரிகள்

 25. இது மாதிரியான துயர நிலையுடைய ஏராளமான பெண்களின் குரலாக எதிரொலிக்கிறது இந்தக் கடிதம். மனதை கனக்கச் செய்யுது.
  (எதிர்க் கருத்திடும் நண்பர்களே..!ஆண்களைக் கொடுமைப் படுத்தும் பெண்ணின் கடிதம் இல்லையே இது? )

 26. இப்படி ஒரு அன்பே இல்லாத கணவனுடன் இந்தளவு அன்பு பொங்கும் மனைவி வாழ வேண்டிய அவசியம் என்ன? விட்டுத் தொலைத்துவிட்டு சுயமாக வாழ முடியாதா? ஏன் இன்னும் அவரையே பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்? எப்பவோ நடந்ததை எல்லாம் இன்னும் நினைவு வைத்துக் கொண்டு இங்கு வெளிப் படுத்தி இருக்கிறீர்களே..

  கூட்டுக் குடும்பங்களில் இப்படியான பிற மனிதர்களின் நெருக்கடிகள் தொல்லைகள் அதிகம். முடிந்தால் இருவரும் வெளியே வாருங்கள். இல்லையென்றால் ஒட்டுமொத்தமாக குடிமுழுகி விடுங்கள்.

  கார்கி அண்ணாச்சிக்கு கல்யாணம் ஆயிட்டதா?

   • கார்க்கி
    அதுக்கு கேட்கல. எனக்கு ப்ரோக்கர் வேலை செய்ய நேரமும் இல்ல. திருமண பந்தத்தில் ஒரு பெண்ணுடன் இணைந்து வாழ்ந்த அனுபவம் பற்றி மட்டுமே அந்தக் கேள்வி.