privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்டிவி சீரியல் கொடுமைகளில் பெண்கள் - தீபா

டிவி சீரியல் கொடுமைகளில் பெண்கள் – தீபா

-

உழைக்கும் மகளிர்தின சிறப்புப் பதிவு – 4

டிவி சீரியல்கள், அதுவும் மெகா சீரியல்களின் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.இந்தியாவில் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒரு பத்தாண்டு காலத்தில் விளம்பரதாரர் வழங்கும் நிகழ்ச்சிகளாக தினமும் அரைமணி நேரம் ஏதாவது ஒரு நாடகம் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்தி தூர்தர்ஷனில் ஓரளவுக்குத் தரமான தொடர் நாடகங்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தன. தொடர்ந்து சென்னைத் தொலைக்காட்சியிலும் பதின்மூன்று வாரங்கள் வருமாறு சில நாடகங்கள் வந்தன. இவற்றினால் பெரிய அளவுக்கு நல்லவை அல்ல என்றாலும் கெட்டவையாகவும் இல்லை. மேலும் சினிமாவில் இடமில்லாத இலக்கியங்களுக்கும் சமூக அக்கறையுள்ள நிகழ்ச்சிகளுக்கும் தொலைக்காட்சியில் இடமிருக்கும் எனறு ஒரு நம்பிக்கை இருந்தது. எல்லாம் அடியோடு மாறிப் போனது சாட்டிலைட் டிவிக்களின் படையெடுப்பில்.

சாட்டிலைட் டி.வி. வந்தது முதல் ஸ்டார் டிவி போன்ற ஆங்கில சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட “போல்ட் அண்ட் பியுட்டிஃபுல்”, “சண்டா பார்பரா” “டைனாஸ்டி” போன்ற பல வருடங்களுக்கும் மேலாக ஓடிய அந்தத் தொடர்கள் தான் நம் தயாரிப்பாளர்களுக்கு பேராசை வரக் காரணமாக இருந்த முன்னோடிகள். சில வாரங்களுக்காக மட்டுமே கதை தேடி தயாரித்துச் சொற்பக் காசுபார்த்து வேறொரு தயாரிப்பாளருக்கு ”ஸ்லாட்டை” ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? மொத்தமாக ‘ஸ்லாட்’ புக் பண்ணி வைத்துக் கொண்டு கதை பண்ணிக் கொண்டே போகலாமே? அந்த மேல்நாட்டு சீரியல்களை நான் பார்த்ததில்லை. அதனால் அவை பற்றிய விமர்சனம் கூற நான் ஆளில்லை. ஆனால் அவை நமக்கு விளைவித்த கேடுகள் நமது மெகா சீரியல்கள்.

இவர்களின் முக்கிய டார்கெட்டுகள் கணவனையும் குழந்தைகளையும் அனுப்பிவிட்டு வீட்டில் தனிமையைக் கொல்லப் போராடும் பெண்கள் தான். அதனால் இந்த சீரியல்களில் நாயகிகளுக்குத் தான் முக்கியத்துவம். முக்கியத்துவம் என்று இங்கே குறிப்பிடுவது நிச்சயம் பாத்திரப்படைப்பின் மேன்மைக்காக‌ அல்ல.

இந்தக் கட்டுரை எழுதுவதற்காக சமீபத்தில் தவிர்க்கமுடியாமல், சில சீரியல்களைப் பார்க்க நேர்ந்தது. ஆஹா, என்ன அழகுக் காவியங்கள் அவை! எந்தவித லாஜிக்கும் இல்லாமல், நம்பவே முடியாத திடுக்திடுக் அல்லது மொக்கையான சம்பவங்கள் சேர்த்து புனையப்பட்ட கதைகள். கதையில் வரும் பாத்திரங்கள் மீது மட்டுமல்ல பார்க்கும் பெண்கள் மீதும் எவ்வளவு அலட்சியமான மதிப்பீடு இருந்தால் இப்படிப் பட்ட குப்பைகளை கூவிக் கூவி விளம்பரம் செய்து ஒளிபரப்புவார்கள் என்று தோன்றுகிறது. எந்தக் கழிசடையைக் காண்பித்தாலும் பார்ப்பார்க‌ள் என்கிற மனோபாவம் தான் இதற்குக் காரணம் என்று நினைக்கும் போது ஆத்திரமே வருகிறது. ஆம், நான் பார்த்தவரை அப்படித் தான் இருக்கின்றன இந்தச் சீரியல்கள்.

பிரபலமான சீரியல் ஒன்றில் வரும் நிகழ்ச்சி: மனைவி விபத்தொன்றில் தாயாகும் தன்மையை இழக்கிறாள். அதனால் கணவனுக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயல்கிறாளாம். அவள் கணவன், “யார் வந்தாலும் நீ தான் எனக்கு முக்கியம். அடுத்து வர்றவளுக்கு இரண்டாம் இடம் தான்” என்கிறானாம். அவள் புல்லரித்துப் போகிறாள். நமக்கோ டிவியை உடைத்து விடலாம் போல கை அரிக்கிறது.

ஆண்கள் பலமணம் புரிவது காலங்காலமாக‌ நடப்பது தானே? இதில் என்ன புதுமையைக் கண்டுவிட்டார்கள்?

தன்னிடம் குறை என்று தெரிந்தும் அதை மறைத்து மனைவியின் வாழ்வை நிர்மூலமாக்க்கும் ஆண்கள் இன்றளவும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? தந்தையாக இயலாத ஒரு கணவன் தன் மனைவியை மறுமணம் செய்து கொள்ளத் தூண்டுமாறு ஏன் காண்பிக்கக் கூடாது?

இன்னொரு சீரியல். வாடகைத் தாய்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறை, பிரச்னைகள் ஆகியவை குறித்தும் உண்மையான அக்கறையுடன் இவர்கள் ஒரு சீன் கூட எடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் எடுக்கலாமா? ஒரு கன்னிப் பெண் வாடகைத் தாயாகிறாளாம்! அவளுக்கும் குழந்தை வளரப் போகும் தாய்க்கும் இடையில் பிரச்னைகள் மூட்டிவிட ஒரு வில்லி. இவள் நாயகியை ஜெயிலுக்கு அனுப்புவாளாம்; பொய்யாகக் கொலைக் குற்றம் சுமத்துவாளாம், நிறைய பணம் சம்பாதித்து ஒரு கம்பெனியை நிர்வகிப்பாளாம், சகலகலாவில்லி!

இன்னொரு சீரியல். படிக்காத, வீட்டுவேலைகள் ஒழுங்காகப் பொறுப்பாகப் பார்க்கும், அன்பும் பொறுமையுமே உருவான பெண் தான் நாயகி. (வேறு மாதிரி எப்படி இருக்க முடியும்?) வேலைக்குப் போகும் அவளது அண்ணி அவளுக்குக் கேடு விளைவிக்கும் வில்லி! வேலைக்குப் போவதாகச் சொல்லிக் கொண்டு அவள் தன் நாத்தனாருக்குப் பிரச்னைகள் உண்டாக்கும் வேலைகளில் ஈடுபடுகிறாள். (வேலைக்குப் போகும் மருமகளா, எச்சரிக்கை!)

இன்னொரு அவியல், சாரி சீரியல்… இதில் பள்ள்யில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண் தன் முறைமாமனைக் கல்யாணம் செய்து கொள்வதே தன் லட்சியம் என்று திரிகிறாள். அதே மாமனைத் தீவிரமாகக் காதலிப்பது, நன்கு படித்துச் சொந்தக் காலில் நிற்கும் ஒரு ஆஃபிஸர் பெண்மணி. என்ன பேராசையடா இந்த ஆண்களுக்கு?!

பொதுவாகவே சீரியல் நாயகிகள் இழுத்துக்கட்டிய பின்னல் அல்லது கொண்டை மற்றும் எட்டுமுழப் புடவைகளில் வருகிறார்கள். பெரும்பாலான வில்லிகள்  குட்டை முடி வைத்திருக்கிறார்கள், சிலர் ஜீன்ஸ் அணிந்திருக்கிறார்கள். இதுவும் ஒரு விஷமத்தனமான ஸ்டீரியோடைப். எல்லா சீரியல்களிலும் நாயகிகள் மைபூசிய கண்களுடன் குடம் குடமாக அழுகிறார்கள். வில்லிகள் லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு சிரிக்கிறார்கள்.

இதையெல்லாம் யார் பார்க்கச் சொல்கிறார்கள்? சானலை மாற்றிக் கொண்டு போக வேண்டியது தானே என்று சொல்பவர்கள் எத்தனை பேர் வீட்டில் தினம் இரண்டு சீரியலாவது பார்க்காத பெண்கள் இருக்கிறார்கள்? பல வீடுகளில் ஆண்களும் அல்லவா போட்டி போட்டுக் கொண்டு பார்க்கிறார்கள்.

ஆண்களைக் கவர்வதற்கென மாமியார் நாத்தனார், மருமகள்கள் வில்லிகள் பழிவாங்கல்கள் போதாதென்று இப்போதெல்லாம் கொலை, கற்பழிப்பு போன்ற மசாலா ஐட்டங்களையும் சேர்த்துக் கனஜோராக நமது வரவேற்பறையில் பரிமாறுகிறார்கள்.

“என்ன, ஊர்ல நாட்ல நடக்காததையா காமிக்கிறாங்க? இதெல்லாம் பாத்துத் தான் ஊர் உலகத்துல இப்படி எல்லாம் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கணும்” என்றும் ‘விஷய ஞானத்துடன்’ பேசுபவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

உண்மையில் சமூகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏழைகளுக்கும் நடக்கும் எத்தனையோ கொடுமைகளை இதே ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. அதை விடுத்து இல்லாத அபத்தங்களைப் புனைந்து காண்பித்து நம்மைப் பதைபதைப்புடன் பார்க்க வைக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? அறியாமையை மூலதனமாக்கி லாபம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல் அதை உரம் போட்டு வளர்ப்பதிலும் இந்தச் சீரியல்களுக்குப் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது தான் நிதர்சனம்.

ஒரு பெண் சொல்கிறார். “நான் இந்தச் சீரியல்களையெல்லாம் கதைக்காகப் பார்ப்பதே இல்லை. அதில் வரும் பெண்கள் அணிந்திருக்கும் புடவைகள் நகைகள் இதிலிருந்து லேட்டஸ்ட் ஃபாஷன் என்னவென்று தெரிந்து கொள்ளத்தான் பார்க்கிறேன்” என்று. இது வேறயா?

எது எப்படியோ, சீரியல் பார்க்கும் பழக்கமுடைய, நம் அன்புக்குரிய நான்கு பெண்களையாவது இம்மடமையை விட்டொழிக்க‌த் துணை புரிவோம் என்று இந்த மகளிர் தினத்தில் உறுதி எடுத்துக் கொள்வோமா?

உழைக்கும் மகளிர் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

___________________________________________

தீபா
___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

  1. டிவி சீரியல் கொடுமைகளில் பெண்கள் – தீபா – உழைக்கும் மகளிர்தின சிறப்புப் பதிவு – 4 | வினவு!…

    சீரியல் கதாப்பாத்திரங்கள் மீது மட்டுமல்ல பார்க்கும் பெண்கள் மீதும் எவ்வளவு அலட்சியமான மதிப்பீடு இருந்தால் இப்படிப் பட்ட குப்பைகளை கூவிக் கூவி விளம்பரம் செய்து ஒளிபரப்புவார்கள்…

  2. Deepa – Good one.

    வினவு கட்டுரைக்காக சீரியல் பார்த்து கள ஆராய்ச்சி செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

  3. நன்றாக எழுதியுள்ளீர்கள்.

    இல்லத்தரசிகளோடு சேர்ந்து இந்தக்குப்பைகளைப் பார்க்கும் குழந்தைகளின் மனதில் இந்த stereotypes எல்லாம் சிறு வயதிலிருந்தே வலுவாக்கப்படுவதும் சகிக்கமுடிவதில்லை. ஒரு civilized society இல் ஏற்றுக்கொள்ளப் படக் கூடாத‌ ப‌ல செயல்களைச் சாதார‌ண‌மாக்குவ‌தும் மிக‌ப் பிழையான‌ விட‌ய‌ம்.
    என்னைப்பொறுத்தவரையில் இவையெல்லாம் நிச்சயமாகத் தடை செய்யப்படவேண்டியவை.

  4. சீரியல் எவ்வளவு அபத்தமாக இருப்பதற்கு தயாரிப்பர்ளகள் 50% காரணம் என்றால் 50% பார்வையாளர்களும் தான் குறிப்பாக நீங்கள் சொல்லும் அந்த இல்லத்தரசிகள் தான் காரணம்.

    சீரியல் எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் பார்பதால் தான் போடுகிறார்கள். அதே டீவியில் ஹிஸ்டரி சேனல் என்று ஒன்று வந்தது… மிக சிறந்த தகவல் நிறைந்த சேனல் , ஆனால் மக்களிடம் வரவேற்பு இல்லை.இப்போதும் டிஸ்கவரி, நேசணல் ஜியாகிரபி போன்றவை தமிழிலும் வருகின்றது.. நிங்கள் சொல்லும் இல்லத்தரசிகள் பார்ப்பர்களா? பார்த்தால் பணம் முக்கியம் என நினைக்கும் தாரிப்பளர்கள் இப்படிபட்ட தகவல் நிறைந்த தொடர்களை தயரிப்பர்கள்..

    டிமாண்ட் சப்ளை தியரிப்படி பார்த்தால் இந்த அபத்தத்க்கு 100% காரணமும் பார்வையாளர்கள், இல்லத்தரசிகள் தான்.

  5. நம்ம ஊர் அரசியலும் சரி , ஊடகமும் சரி , மக்களை மூட்டாளாக வைத்திருப்பதிலேயே போட்டி போடுகின்றது,.,.

    அதோடு கொஞ்சம் பகுத்தறிவோடும் , விபரத்தோடும் பேசுபவர்களை சமூக விரோதியாக பார்க்க சொல்லித்தரவும் மறப்பதில்லை..

    நல்லதொரு பகிர்வு, விளக்கமாக..

  6. கட்டுரையாளார்.சீரியல்பெயர்.டிவிபெயர் சொல்லாமல் மூடூமந்திரமாக பொதுவாக சொல்கிறார்.மற்ற நாளேடுகள் மாதிரி. .பெயரைச்சொன்னால் என்னவாம்.ஊரெல்லாம் சாரயக்கடையை திறந்து வச்சுபிட்டு குடிகுடியைகெடுக்கும்.குடிஉடல்நலத்தைக்கெடுக்கும்.மாதிரியில்லஇருக்கு,100க்கு10சதம்தான்.நல்லவிசயம்.இருந்தாலும் டிவி பார்க்காம இருக்கமுடியுங்களா?.செய்தி,சினிமா தவிர மற்றநேரங்களில் சீரியல்தாணுங்க.அதுக்காக டிவிய உடைக்கமுடியுங்களா?அப்படியே உடைச்சா.ரெண்டாவது தடவையா இலவசடிவி தருவாங்களா? தி.க. காரங்ககூட பொய்செய்தியாசொன்ன துார்தர்சன் டிவி உடைப்பு போராடத்திலகூட ரிப்பேரான டிவியதானுங்க உடைசாங்க.அப்போ இம்புட்டு டிவி கம்பெனி இல்லிங்கோ!

  7. சார்,நீங்க இந்த சீரியல் பாக்கல யா. ஒரு பொண்ணுக்கு மூணு புருசன்,அதே சீரியல்ல வேற ஒருத்தி புருசன விரும்புற பொண்ணு,அதே பொண்ணு அம்மாவையே விஷம் வச்சி கொல்லுது.பத்தாததுக்கு புருசன் பொண்டாட்டி நைட்டுல என்ன பண்றாங்கனு எட்டிபக்குது.இது போதாதுன்னு இன்னுமொருபொண்ணு கல்யனம்பன்னாமலையே,கற்பம்;போதுமடாசாமி.

  8. தீபா இந்த கட்டுரைக்கு பெண்கள் எத்தனை பேர்கள் மறுமொழி இடப் போகிறார்கள் என்பதை ஆவலுடன் கவனிக்கும் நோக்கத்தில் தொடர்கின்றேன்.

  9. பெண்கள் மட்டுமே சீரியல்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள் என்பது தவறான கணிப்பு. ஆண்களும் முக்கியமாக வேலையில் இருந்து ஒய்வு பெற்று விட்ட வயதான ஆண்களும் முக்கிய பொழுது போக்குக்கு சீரியல்களையே நம்பி இருக்கிறார்கள்.
    பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தொ.கா. அதிலும் சீரியல்கள் மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால் ஓன்று அதீத தியாகியாவோ, அதீத வில்லியாகவோ, ஒருவரை அண்டிப் பிழைப்பவராகவோ பெண்கள் சித்தரிக்கப் படுகிறார்கள். அதீத தியாகிகளை விட அதீத வில்லிகளுக்கு TRP rating அதிகம் கிடைக்கிறது என்பது கதைகளின் போக்கில் இருந்து நன்றாகவே தெரிகிறது.

  10. இது போன்ற சீரியல்களை ஒழிக்க இயக்கம் ஒன்று தொடங்களாம் என்று நினைக்கிறேன்.

  11. பெண்கள்தான் சீரியல் பார்க்கிறார்கள் என்பதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ”பெண்களுக்காக” என்று குறிவைத்து ஒளிபரப்பப்படுகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம், சினிமாக்களில் தாலி செண்டிமெண்ட்/அம்மா செண்டிமெண்ட் என்பார்களே அதுபோல. மற்றபடி, சீரியல் ஓடினால் வயது வித்தியாசம் பால் வித்தியாசங்கள் இன்றி அனைவருமே ஒன்றிப்போகிறார்கள்.

    இந்த சீரியல்களைத் தொடர்ந்து பார்த்ததில்லையென்றாலும் அவ்வப்போது ஒன்றிரண்டு எபிசோடுகள் பார்த்திருக்கிறேன். பார்த்தவரையில், கள்ளத்தொடர்பும், பழிவாங்கலும் (தங்கமோ எதுவோ ஒன்றில் மாடு ஒன்றை வைத்து ரம்யாகிருஷ்ணனை முட்ட வைக்க திட்டம் தீட்டுவார்கள்!) அதற்கு திட்டம் தீட்டுவது மட்டுமே எல்லா குடும்பத்திலும் நடக்கும் பிரச்சினைகள்….அனைவரும் எப்படி ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, பில்லி சூனியம் வைப்பது, கொலை செய்வது என்பது பற்றியே யோசித்துக்கொண்டிருப்பார்கள். குழந்தைகள் அதீதமாக பேசும். மொத்தத்தில் எதுவும் இயல்பான குடும்பத்தை/பிரச்சினைகளை பிரதிபலிக்காது.

  12. டிவி சீரியலில் முக்கியமான விடயம் குடும்ப ஜோதிடரோ அல்லது ஒரு புதிய ஜோதிடர் ஜோசியம் சொல்வார் அதனை அத்தனை பேரும் உண்மை என நம்புவார்கள். ஜோச்யத்தின் படி எல்லாம் நடக்கும்.
    15 வருடங்களுக்கு முன் சன் T .V யில் கதை நேரம் என்ற அற்புதமான நாடகங்கள் ஒளிபரப்பானது. சிறிது காலத்தின் பின் அது நிறுத்தப்பட்டு விட்டது

    சீரியல் இயக்குனர்களான திருச்செல்வம் மற்றும் திருமுருகன் ஆகிய திருட்டு நாய்களை அடித்து துரத்த வேண்டும்

  13. பெண்களை சுய மரியாதை அற்றவர்கள், தன்மானம் இல்லாதவர்கள்,பச்சாதாபதிற்கு ஏங்குபவர்கள், பணத்திற்காக தனக்கு இழைத்ததாக கூறப்படும் கொடுமைகளை சமாதனம் செய்து ஏற்பவர்கள் என சித்தரிக்கபடுகிறார்கள். இந்த பெண்களை காட்டி பாலியல் சுகம் மறுக்கப்பட்ட அல்லது கிடைக்காத வயதான பெண் மற்றும் ஆண்களால் (alfamale ) சுய ஆதாயம் அடைகிறார்கள். இவ்வாறு சித்தரிக்கபடுவதை எந்த பெண்ணிய அமைப்புக்களோ, குடும்ப அமைப்பை தனது ஆட்சி போட்டியாக கருதும் கம்முனி அமைப்புகளோ, வெளி நாட்டு பணம் பின்னல் அலையும் பெண்ணிய வாதிகளோ கண்டனம் கூட தெரிவிப்பதில்லை .

    வியாபார நோக்கில் செயல்படும் சினிமா மற்றும் ஊடககங்களை மட்டும் குறை சொல்வது ஏற்க இயலாத கருத்தாகும்.

  14. ‘ஒரு பிரபல செல்போன் கம்பெனியில் பணியாற்றிய ஒரு பெண் தொழிலாளி தலையில் அடிபட்டு இறந்தார்’ என்கிற தினத்தந்தியின் நோக்கியா இருட்டடிப்புச் செய்தி போல, சீரியல் பெயரைக் குறிப்பிடாமலும், எந்த டிவி என்பதைக் குறிப்பிடாமலும் (குறைந்த பட்சம் நூறு இடத்திலாவது சன் டிவி என்று வந்திருக்கவேண்டும்) கட்டுரையாளர் கவனத்துடன் செயல்பட்டிருக்கிறார். இது, வினவு தளம் என்பதை மறந்துவிட்டார் போல! கவலைக்குறியது.

    • அடக் கஷ்டமே! கவனமும் அல்ல, அச்சமும் அல்ல. அந்த சீரியல்களுக்குத் தேவையற்ற விளம்பரமும் முக்கியத்துவமும் கொடுத்து விடுவது போலாகுமோ என்று தான் தவிர்த்தேன்.
      இப்போது சொல்கிறேன்:
      அனைத்தும் சன் தொலைக்காட்சியில் வந்த சித்திரங்கள் தாம்.

      1. திருமதி. செல்வம்
      2. அத்திப் பூக்கள்
      3. திருமதி. செல்வம்
      4. நாதஸ்வரம்

      இன்னும் முந்தானை முடிச்சு, மாதவி, பொண்டாட்டி தேவை, தங்கம், தென்றல், செல்லமே என்று நிறைய வருகின்றன. எல்லாம் ஒரே குட்டையில் ஊறியவை தான். பெரிதாக வேறுபாடு தெரியவில்லை.

  15. Raj TV யின் பித்தலாட்டம்

    TV சீரியல் மக்களை முட்டாள்களாக ஆக்குகின்றது என்றால் போட்டி என்ற பெயரில் நடக்கும் பித்தலாட்டங்களால் மக்களின் பணம் சுரண்டபடுகின்றது, அதற்கு ஒரு உதாரணம் Raj TV ல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5,30 PM ஒளிபரப்பு ஆகும் சினிமா கொண்டாட்டம் நிகழ்ச்சியும், தினமும் இரவு 10,30 PM ஒளிபரப்பு ஆகும் சினிமா தெரியுமா என்ற நிகழ்ச்சியும் தான், இதில் சினிமா பிரபலங்களின் பாதி முகத்தை காட்டி அவர் யார் என்று சொல்லி பரிசாக பல ஆயிரங்களை பெற்று கொள்ளுங்கள் என்று கூவிகொண்டே இருப்பார்கள், இதில் என்ன மோசடி என்று நீங்கள் கேட்கலாம், நீங்கள் அழைக்கும் ஒவ்வொரு அழைபிற்க்கும் ஒரு நிமிடதிற்கு 10 ரூபாய் இது நீங்கள் அழைக்க ஆரம்பித்த உடன் கட்டணம் கழிக்க ஆரம்பித்து விடும், உங்கள் call waiting ல் இருந்தாலும் அல்லது engaged ல் இருந்தாலும் கட்டணம் செலுத்தியாகவேண்டும், நீங்கள் எப்போது அழைத்தாலும் engaged தான் அப்படியென்றால் யாரோ பேசிக்கொண்டு இருகின்றர்கள் என்றுதானே அர்த்தம ஆனால் TV ல் ஒரு நேயர் கட பேசிக்கொண்டு இருக்கமாட்டர்கள் நிகழ்ச்சி நடத்தும் நபர்தான் உங்களை கூவி கூவி பேசி நம்மை அழைக்க சொல்லுவார், நீங்கள் பலநாள் முயற்சி செய்து லைன் கிடைத்து பேச முயன்றால் பேச மாட்டர்கள் வேண்டும் என்றே இணைப்பை துண்டித்து விட்டு tower இல்லை network இல்லை என்று உங்களை பேச விட மாட்டர்கள், இவர்கள் காட்டும் படத்தை ஆறு வயது குழந்தை கூட சொல்லி விடும் ஆனால் இணைப்பு கிடைத்து பேசும் நபர் எப்போதும் தவறான விடையை சொல்லுவார் காரணம் அந்த நபர்கள் எல்லோரும் நிகழ்ச்சி நடத்துபவர்களால் set up செய்யபட்ட ஆட்கள திரையில் கமல் இருந்தால் MGR என்பார்கள் சினேகா இருந்தால் KR, விஜயா என்பார்கள் பரிசு தொகை 40.000 லிருந்து 10000 வரை உங்களுக்கு லைன் கொடுக்க மாட்டர்கள் பரிசு 3000 என்று அறிவித்து அப்பாவி நேயர் ஒருவருக்கு லைன் கிடைக்கும் அதற்குள் அந்த நேயர் பல ஆயிரங்களை இழந்து இருப்பார், இது போல் பல நேயர்கள் பணத்தை இழந்தது ஏராளம், கடைசியாக கொடுக்கும் பரிசு உண்மையாக நேயர்களுக்கு போகின்றதா அல்லது இவர்களே எடுத்து கொள்ளுகின்றார்கள என்பது சந்தேகம், காரணம் பரிசுபெற்றவர் எந்த ஊர் என்ன பெயர் என்ற அறிவிப்பும் கிடையாது மேலும் இந்த மோசடி பற்றி அறிய கீழ கண்ட web sit கு செல்லுங்கள் http://www.consumercomplaints.in/complaints/cinema-theriyuma-program-c442513.html

  16. தன்னிடம் குறை என்று தெரிந்தும் அதை மறைத்து மனைவியின் வாழ்வை நிர்மூலமாக்க்கும் ஆண்கள் இன்றளவும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? தந்தையாக இயலாத ஒரு கணவன் தன் மனைவியை மறுமணம் செய்து கொள்ளத் தூண்டுமாறு ஏன் காண்பிக்கக் கூடாது?

  17. பொதுவாகவே எனக்கு இந்திய ஊடகங்கள் பற்றி நிறையவே விமர்சனம் உண்டு. அதிலும், இந்த தமிழ்நாட்டில் இருந்து வரும் தொடர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. ஒரு முறை வில்லவன் வினவு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் இந்திய குற்றவியல் சட்டத்தில் என்னவெல்லாம் குற்றங்களாக கணிக்கப்படுகிறதோ அந்த வழி முறையெல்லாம் இந்த சீரியல்களில் தாராளமாக செயல்வடிவம் கொடுக்கப்படுகிறது என்பது போல். அவர் எழுதியதன் சரியான வரிவடிவம் இதுவல்ல. ஆனால், இந்தக் கருத்து தான் பிரதிபலிக்கப்பட்டது.

    இது வியாபார உலகம். வியாபாரிகள் தங்களுக்கு எது லாபம் என்றுதான் பார்ப்பார்கள். எந்தவொரு message ஐயும் மக்களுக்கு சொல்லவேண்டும் என்கிற அக்கறை அதை தயாரிப்பவர்களுக்கு கிடையாது. விறு, விறுப்பு, அடுத்தவர் பிரச்சனைகளில் ஓர் சுவாரஸ்யம், பிறர்மனை நோக்குதல்…. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், இப்படியான மனோபாவம் வளர்த்தெடுக்கப்பட்டாலே யாரும் நாட்டில் நடக்கும் ஊழல் பற்றி, விலைவாசி உயர்வு, மற்றைய பிரச்சனைகள் பற்றி கேள்வி கேட்கமாட்டார்கள் என்பது இந்த நிகழ்ச்சிகளை விற்பவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இந்த மெஹா சீரியல்கள் பார்ப்பவர்கள் “நாகரிக கோமாளிகள்” என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

  18. வசைகள்,ஹீரோ,வில்லன்,மிகைப்படுத்தல்- இவை டி.வி.சீரியல்களுக்கும்,வினவின் இடுகைகளுக்கும் பொதுவானவை.

    டி.வி.சீரியலை பார்பது வினவின் இடுகைகளைப் படிப்பதை விட மோசமானது அல்ல.அது மடமை என்றால் வினவின் இடுகைகள்,புதிய ஜனநாயகத்தில் எழுதப்படுவது எல்லாம் உண்மை என்று நம்புவதும் மடமைதான்.
    ‘எது எப்படியோ, சீரியல் பார்க்கும் பழக்கமுடைய, நம் அன்புக்குரிய நான்கு பெண்களையாவது இம்மடமையை விட்டொழிக்க‌த் துணை புரிவோம் என்று இந்த மகளிர் தினத்தில் உறுதி எடுத்துக் கொள்வோமா?’
    சீரியல் பார்ப்பதே மடமை என்று எப்படி சொல்ல முடியும்.அடுத்தவர் செயல் மடமையாக உங்களுக்குத் தோன்றலாம்,வினவில் நீங்கள் எழுதுவது மடமை என்று இன்னொருத்தருக்குத் தோன்றலாம். டி.வி.சீரியல் பார்க்காதீர்கள் என்று சொல்வதை விட அதில் போய் அதிக நேரம் செலவழிக்காதீர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். நாலும் தெரியணும் அதற்காக வினவையும் படிக்கலாம்,டி.வி.சீரியலையும் பார்க்கலாம், பெமினாவையும் படிக்கலாம்.பெரியாரையும் படிக்க வேண்டும், பெருமாள் கோயிலில் உபயன்யாசத்தையும் கேட்க வேண்டும்.

  19. ” காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு “- நம் வீட்டுக்குழந்தையை விட பக்கத்துக்கு குழந்தை அழகாக இருந்தால், பக்கத்து வீட்டு குழந்தையையா கொஞ்சுகிறோம்? முதல் கட்டமாக நமது பெரியதிரை/சின்ன திரை, அண்டை மாநில கவர்ச்சிக்கு கொடுக்கும் பேராதவருக்கு முடிவுகட்ட திரைப்பட தயாரிப்பளர்களையும்/ நமது முதல்வர் அவர்களையும் ஆவன செய்ய நடவடிக்கை எடுக்கவும். பூனைக்கு நீங்கள் தான் முதலில் மணிகட்ட வேண்டும். குழப்பம் நீடித்தால் யாரும் காப்பாத்த முடியாது. எரிவதைப்பிடுங்கினால் கொதிப்பது நின்றுவிடும் என்பது தங்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரியாதது அல்ல.

Leave a Reply to Vinoth பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க